தமிழர் பெருமை...! 03

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழர் பெருமை...! 03

     தமிழர் பெருமை

தமிழன்....

தமிழன் என்றோர் இனமுண்டு    தனியே அவர்க்கொரு குணமுண்டு.      

கல்தோன்றி மண்தோன்றாக்காலத்ததே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி.

அடையாளம்.
       தமிழை தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை.
     தமிழ்வளர்த்த பெரியோர் அனைவரையும் வணங்குபவர்களே தமிழர்கள் ஆவார்.
       பிறமொழிக்கலப்படமற்ற தமிழ்ப்பெயரை அடையாளமாகக் கொண்டிருப்பவன் தமிழன்.

கலாச்சாரம்.

      பெண்களாயின் தலைவாரிப்பூச்சூடி நெற்றியில் நீறும் திலகமும் முகத்தில் மஞ்சளும் கைவிரலில் மருதாணியும் கால் விரலில் மெட்டியும் காலில் கொலுசும் கைவளையும் மைவிழியும் காண்பவரைக்கையெடுக்க வைக்கும்.  ஆண்களாயின் நெற்றியில் நீறும் அரையில் வேட்டியும் கலாசாரத்தைக் கட்டிக்காக்கும்.

விருந்தோம்பல்

             தமிழனின் மிகச்சிறந்த பண்பு விருந்தோம்பல். விருந்தினர்களைப்போற்றி வாழ்வதினாலேயே உலகம் முழுதும் புகழுடன் வாழ்கிறான் தமிழன்.
    "நற்றமிழ் சேர்த்த புகழ் ஞாலத்தில் என்னவெனில்  உற்ற விருந்தை உயிரென்று பெற்று உவத்தல்"
                               (குடும்ப விளக்கு).


வீரம்.

     வீரம் என்பது துணிவான உணர்வு. தமிழரின் வீரம் மானத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்களின் வீரம் வடதிசை வணங்கிய வீரமாகும். படைத்திறத்தால் தமிழ் மன்னன் உட்பகையை அழிப்பான். புறப்பகையை ஒழிப்பான். பல் வகைப்படையையும் கையாண்டான் தமிழன்.
மூலப்படை   கூலிப்படை  
நாட்டுப்படை காட்டுப்படை என்பவை அவை.போர்க்களத்தில் முன்வைத்த காலை பின் வைத்தல் அறியாத 
வரே சுத்த வீரர். வீரத்தின் சின்னம் ஏறு தழுவுதல்.

முரசு.

தமிழ் மன்னருக்கு மூன்று முரசுகள் உண்டு.
1.நீதிமுரசு-செம்மையின் சின்னம்.
2.கொடைமுரசு-வன்மையின் சின்னம்.
3.படைமுரசு-ஆண்மையின் சின்னம்.
  புகழ் எனின் உயிரும் கொடுக்குவர். பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளார்..

காதல்

      காதல் ஒருவனைக்கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கைகொடுப்பாள்.இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையிலும் தொடேன் என்ற கூற்றாகி வாழ்வில் காதலை காப்பான் தமிழன். தமிழர்களின் காதல் அகம் சார்ந்த பொருளாகிறது. தலைவன் தலைவி என்ற பொதுச்சொல்லே காதலில் பாடுபொருளாகிறது. 

கலைகள்

       சிலம்பம், வாள்வீச்சு,
குத்துவரிசை, அடிமுறை, இவை வீரக்கலைகள்.
 நடனக்கலைகளான கரகாட்டம் ,தப்பாட்டம்,மயிலாட்டம்,ஒயிலாட்டம்,கோலாட்டம்,கும்மி,பறையாட்டம்,தேவராட்டம்,காவடியாட்டம்,     கருத்துக்கலைகளான பட்டிமன்றம், வழக்காடு மன்றம்,வில்லுப்பாட்டு தமிழனின் பெருமையை பறைசாற்றும்.

இலக்கியங்கள்

         நீதிநூல்கள், பக்தி இலக்கியங்கியங்கள்,உலாக்கள்,சிற்றிலக்கியங்கள்,இலக்கணநூல்கள், நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், தமிழ் அறிவியல்நூல்கள் தமிழரின் பெருமைக்குச்சான்று.

மருத்துவம்.

   தமிழரின் மருத்துவம் சித்த மருத்துவம். "நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல்" ---இது சித்த மருத்துவத்தின் சிறப்பு. உணவே மருந்து மருந்தே உணவு. பஞ்ச பூதங்களும் நாடிவழி வாதம்,பித்தம்,கபம்,நோய் தேர்வு செய்தல், நோய்க்குறிகளை காட்டும் முறைமை, மருத்துவத்தில் சுவைபெறும் நிலைமை நோய்நீராடல்,உண்கலம்,ஆடை, அகமருந்து, புறமருந்து ஆகிவற்றையும் தமிழன் அறிந்துள்ளான்.

ஈகை

  ஈயென இரப்பவர்க்கு இல்லையென்று கூறாமல் பசித்தவயிற்றுக்கு பால்புகட்டும் தன்மைக்கு கர்ணனும் கடையெழு வள்ளல்களும் சான்றாவர்.
  தமிழனுக்கு தன்னிகர் தரணியில் இல்லை. தமிழனாய் தலைநிமிர்வோம். தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
   வாழிய செந்தமிழ்
   வாழ்க நற்றமிழர்
   வாழ்க தமிழ்த்திரு நாடு.

- பெ.ஜோதிலட்சுமி. இடைநிலையாசிரியை. 
நகர்மன்ற கிருஷ்ணன் கோவில் தெரு நடுநிலைப்பள்ளி. ஸ்ரீவில்லிபுத்தூர்.  விருதுநகர் மாவட்டம்.626125..