கண்ணதாசன் கவிதைகளில் தத்துவம்

கண்ணதாசன் கவிதை

கண்ணதாசன் கவிதைகளில் தத்துவம்

*கண்ணதாசன் கவிதைகளில் தத்துவம்*

கண்ணதாசன் தமிழகத்திற்கு கிடைத்த திருமாமணி. அவரின் தத்துவ பாடல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கோர்  தனியிடம் பெற்று  காலத்தால் அழியாத காவியம் படைத்து சிறப்புற்று அமைகிறது.

*1.இறை தத்துவம்*
டாக்டர். *தமிழண்ணல்*   கண்ணதாசனிடம் காதல் கண்ணதாசன்/ தத்துவ கண்ணதாசன் என இரு முகம் உள்ளது என்பார். 
*குமரகுருபரர்*  கடவுளை விட கவிஞன் உயர்ந்தவன் என்பார். ஏனெனில் கடவுள் படைத்த மனிதன் மறைவான் /மாள்வான். ஆனால் மனிதன் படைத்த பனுவலோ  அழியாத அமர காவியமாகும். இத்தகு சிறப்புப் பெற்றதே கண்ணதாசனின் தத்துவ பாடல்கள். இறை தத்துவப் பாடல்கள் அளித்ததில் கண்ணதாசன் ஒரு *படைப்புக் கடவுளே* .
*கவிஞர் ஷெல்லி* பெருமிதத்துடன் 
கவிஞர்கள் பாராளும் சட்டமியற்றுநர்கள்   என்று உரைப்பார் .அவ்வகையில் கவிஞர் கண்ணதாசனும் ஒரு  *சட்டமியற்றுநரே* .
"பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு, புரியாமலே இருப்பான் ஒருவன் .அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்"
என்று அழகுற இறைத் தத்துவத்தை தன் கவிதையின் மூலமாக நமக்கு உணர்த்தி இருப்பார்.
 "ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் ஆட்டுவிப்பானும் இறைவன்" என *பட்டினத்தார்* கூறியதை  உள் வாங்கி,
 "தூணிலும் உளன் /துரும்பிலும் மன் எனக் கம்பன் சொல்வதை மெய்ப்பிக்க, தெய்வம் இருக்கும் இடமாக கண்ணதாசன் கொடுத்த இறை தத்துவப் பாடலே , "தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே" .

*2.நிலையாமை தத்துவம்* 
இந்த பூமியில் எதுவும் நிலையில்லாதது என்பதை உணர்த்த 
"வந்ததை வரவில் வைப்போம் /சென்றதை செலவில் வைப்போம்"
 என்ற பாடல் மூலமாகவும் ,
"வீடு வரை உறவு /வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை/ கடைசி வரை யாரோ?"  என்ற *பாதகாணிக்கை*  படத்தின் பாடல் மூலமாகவும்,
"போனால் போகட்டும் போடா /இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?" என்று *பாலும் பழமும்*  படத்தில் வரும் பாடல் மூலமாகவும் *நிலையாமை*  தத்துவத்தை நமக்கு நினைவில் நிறுத்திக் காட்டுகிறார் கவிஞர் கண்ணதாசன்.  

*3.கடமை தத்துவம்*
"கடமையை செய் 
பலனை எதிர்பாராதே" என்று *கீதை*  சொன்ன அறிவுரையை மனதில் கொண்டு *எல்லாம் உனக்காக*  என்ற படத்தினிலே கடமை தத்துவமாக 
"கடமையை செய்வோம் 
கவலையை மறப்போம் 
கிடைப்பது கிடைக்கட்டும் 
தோழர்களே!" என்று அழகுற கூறியிருப்பார் கவிஞர் கண்ணதாசன்.

*4.வாழ்வியல் தத்துவம்*
கருவறை முதல் கல்லறை வரையிலான வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி அழகுற வாழ்வியல் தத்துவமாக
*சித்தி*  என்ற படத்தில் ,
"இங்கே தெய்வம் பாதி 
மிருகம் பாதி மனிதன் ஆனதடா 
அதிலே உள்ளம் பாதி 
கள்ளம் பாதி
உருவம் ஆனதடா!"  என்றும், 
*லட்சுமி கல்யாணம்* படத்தில் 
"வாழும் மிருகம் 
தூங்கும் தெய்வம் 
நடுவே மனிதனடா!" என்றும்,
*பனித்திரை* படத்தில் ,
"ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் 
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்!"  என்றும் ,
*கவலை இல்லாத மனிதன்*  படத்தில், *போவதைக் கண்டு கலங்காமல் வருவதைக் கண்டு மயங்காமல் 
மெய் தளராமல்/கை நடுங்காமல் உண்மையை/பொய்யை உணர்ந்தவனே கவலையில்லாத மனிதன்!" என்றும்,
*பலே பாண்டியா* படத்தில்,
"வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில் 
ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா"  என்றும், "என்னடா துன்பம் 
அதை எட்டி உதை 
வாழ்ந்து பார் 
எப்போதும் உன்னை நம்பி!"என்றும் ,
"போற்றுபவர் போற்றட்டும்
 புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன் .
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் 
எவர் வரினும் நில்லேன்" எனும் 
வாழ்வியல் தத்துவத்தை
நமக்கு அளித்த தத்துவஞானி!

*5.உண்மை தத்துவம்*
"தெள்ளத் தெளிந்த தமிழில் 
உண்மை தெரிந்துரைப்பது கவிதை"
என்று *கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை*  சொன்னதை  நினைந்து,
"ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்!"
 என்ற பாரதியின் வார்த்தைகளை
பிரதிபலிப்பதான
 *72* தத்துவப்  பாடல்களில் முதல் பாடலே *உண்மை*  தத்துவத்தை உணர்த்தும் படியான 
"உள்ளதை சொல்வேன் 
சொன்னதை செய்வேன் 
வேறொன்றும் தெரியாது .
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது"
என்ற  தத்துவப் பாடலில்  
உண்மை/நேர்மை/சத்தியத்தை விளக்கியவர் கவிஞர் கண்ணதாசன்.

*6.பகுத்தறிவு தத்துவம்*
"பாலுக்கும் கூழுக்கும் ஏழைகள் அலைகையில் ,ஆயிரம் கோயில்கள் தேவையா?" என்று கேள்வி கேட்டு, "கொடுப்பவன் மேல் ஜாதி 
கொடுக்காதவன் கீழ் ஜாதி"
என *ஜாதி*  வர்க்கப் போராட்ட 
நிலையை எடுத்துக்கூறி,
"மனிதன் மாறிவிட்டான் 
மதத்தில் ஏறி விட்டான்!"
 என *மதம்* எதிர்ப்புக் கொள்கையைப் புலப்படுத்தி அதனுடன்
யாக்கை நிலையாமையை, 
"கூடு விட்டு ஆவி போனால் 
கூடவே வருவதென்ன?"
 என அழகாக *பகுத்தறிவு* தத்துவமாக உணர்த்தி இருப்பார் கவிஞர் கண்ணதாசன்!

*7.மழலை தத்துவம்*
மழலைகள் தமிழ் பேச செய்து வைப்பீர் என்று சொன்ன கண்ணதாசன் ,
"கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் 
நான் தந்தது 
காசும் பணமும் ஆசையும் 
இங்கே யார் தந்தது?
 நீர்நிலம் கடவுள் தந்தது
எந்தன் சொந்தம் என்ற எண்ணம் 
ஏன் வந்தது ?"
என்று மழலையிடம் கூறுவதான
தத்துவப் பாடலை நயமாக வடித்திருப்பார். 

*8.மனதின் தத்துவம்*
"படித்தால் மட்டும் போதுமா?"
 என்ற படத்தில் 
"குரங்கு மரத்திலும் இருக்கும் 
சிலபேர் மனத்திலும் இருக்கும்
 நரி வனத்திலும் இருக்கும் 
சிலபேர் கருத்திலும் இருக்கும்
 நாகம் புற்றிலும் இருக்கும் 
அதுபோல் சுற்றமும் இருக்கும்"
என்ற பாடல் மூலமாகவும்,
*சித்தி* என்ற படத்தில் 
"ஆசையிலே காக்கையடா
அலைவதிலே கழுதையடா
தந்திரத்தில் நரிகளடா 
தன்னலத்தில் புலிகளடா!"
 என்ற பாடலிலும் 
*ஆலயமணி* என்ற படத்தில் 
"பாதி மனதில் தெய்வம் இருந்து 
பார்த்துக் கொண்டதடா!
 மீதி மனதில் மிருகம் இருந்து 
ஆட்டி வைத்ததடா !"
எந்த பாடலிலும் *மனித மனதின்*  தத்துவத்தை அழகுற சித்தரித்திருப்பார்.

*9.மனோரீதியான ஆசுவாச தத்துவம்*
*சுமைதாங்கி*  படத்தில் 
மனிதனை பக்குவப்படுத்தும் விதமாக "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"என்றும் *சாக்ரடீஸ்*  சொன்ன உன்னையே நீ அறிவாய் என்பதை மனதில் வைத்து, *வேட்டைக்காரன்* படத்தில் 
"உன்னை அறிந்தால் 
நீ உன்னை அறிந்தால் 
உலகத்தில் போராடலாம்!"  என்றும், *நெஞ்சில் ஒரு ஆலயம்*  படத்தில், "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!
நடந்ததையே நினைத்திருந்தால் 
அமைதி என்றுமில்லை!"
 என்றும் மனுநீதி முறையிலே
மனதை ஆசுவாசப்படுத்தும் பரிகாரப் பாடலாக தத்துவத்தை அளித்திருப்பார்.

*10.ஜனன/மரண தத்துவம்*
"உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு இங்க கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு!" என்ற பாடலிலும் ,
"இரவல் தந்தவன் கேட்கின்றான் 
அதை இல்லையென்றால் 
அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?"
 என்ற பாடலிலும்,
"இத்தனை சிறிய மனிதனின் 
தலையில் எத்தனை சுமைகளடா?
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா?" என்ற பாடலிலும், "பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான் 
ஒரு நாளேனும் கவலையில்லாமல் 
சிரிக்க மறந்தாய் மானிடனே!" 
என்ற பாடலிலும் 
ஜனனத்தையும்/ மரணத்தையும் தொகுத்துக் கூறும் தத்துவ பாடலாக அள்ளிக் கொடுத்திருப்பார்.

*11.உறவுகளில் தத்துவம்*
"அண்ணன் என்னடா 
தம்பி என்னடா 
அவசரமான உலகத்திலே"
 என்ற பாடல் மூலமாகவும்,
" தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு" "பானையில சோறிருந்தா 
பூனைகளும் சொந்தமடா 
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லை!"
என்ற பாடல் மூலமாகவும்
உறவுகளின் தத்துவத்தை 
தெளிவாக உணர்த்தி இருப்பார்.

*12.சமத்துவ நோக்கில்  தத்துவம்*
"ராமன் என்பது கங்கை நதி 
அல்லா என்பது சிந்து நதி 
யேசு என்பது பொன்னி நதி 
நதிகள் பிறக்குமிடம் பலவாகும் 
எல்லா நதியும் கலக்குமிடம் கடலாகும்" என்ற பாடலின் மூலமாக 
சமநோக்கு தத்துவத்தை 
கவிஞர் தெளிய வைத்திருப்பார் .

*13.கட்டளை தத்துவம்*
மண்ணில் நல்ல வண்ணம் வாழ 
ஆறு கட்டளைகளை 
அதுவும் இரண்டு முறை 
தெய்வத்தின் கட்டளை ஆறு 
என வலியுறுத்தி அளித்திருப்பார்.

*கட்டளை  1* 
*ஒன்றே சொல்வார் 
ஒன்றே செய்வார் 
உள்ளத்தில் உள்ளது அமைதி!*
உள்ளுவது உள்ளம். அந்த உள்ளம் அமைதியாக இருக்க வேண்டும். இல்லையேல் அமைதி இன்றி அல்லல்படும். சொல் வேறு/செயல் வேறு என்று இருப்பின் உள்ளம் அமைதி பெறாது. செய்வதையே சொல்லவேண்டும் .சொல்வதை செய்ய வேண்டும் என்பதைத்தான் கட்டளை ஒன்றாக நமக்குத் தத்துவமாக 
கவிஞர் கண்ணதாசன் அளித்திருப்பார்.
*சொல்லுக்கு செய்கை பொன்னாகும்* என்ற வரி தனிலே சொல்லானது பொன் மதிப்பைப் பெறுகிறது. அப்படி செயல்பட இல்லையேல் அது சொற் குப்பை ஆகும் என்று அழகான தத்துவத்தை கவிஞர்  நமக்கு விளக்கி இருப்பார். 

*கட்டளை 2*
*இன்பத்தில் துன்பம் 
துன்பத்தில் இன்பம் 
இறைவன் வகுத்த நியதி!*
உலகமே இன்பம்/துன்பம் இரண்டும் சேர்ந்த கலவை .
"இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்"
என்று வள்ளுவன் கூறிய படி 
இன்பம்/துன்பம் இரண்டும் இணைந்ததே உலகம் என உணர்ந்து,
இன்பம் எண்ணி எக்களிக்கவும்,
துன்பமும் கண்டு துவளவும் மாட்டோம் என்று நினைப்பதில் இரண்டாவது கட்டளையாக நமக்கு தத்துவ கட்டளை அளித்திருப்பார் .துன்பத்தில் இன்பம் *பட்டாகும்* . இந்த வழியினிலே துன்பத்தில் இன்பம் பெற பட்டாடை போன்றதாகும் என்ற அழகான தத்துவத்தினை  கவிஞர் நமக்கு அளித்திருப்பார். 

*கட்டளை 3*
*உண்மையைச் சொல்லி 
நன்மையைச் செய்தால் 
உலகம் உன்னிடம் மயங்கும்*
இந்த உலகத்திற்கு வந்த நாம் பிறருக்காகவே வாழ்கிறோம் .
அதுவே பயன்மிக்க பொது நல வாழ்வு. இப்படி செயல்படா விட்டால் அது தன்னல சிறுமை வாழ்வு .உண்மையை உரைத்து, நன்மையைப்  புரிய உலகத்தார் நம்மைத் தாங்குவார் .அகம் மகிழ  அதனால் ஆனந்த வாழ்வு வாழ்வோம்.
*உண்மையே அன்பாகும்*
*Truth is beauty* என்ற *கீட்ஸ்* வார்த்தையை நமக்கு அழகுற மூன்.றாவது கட்டளையில் புரிய வைத்திருப்பார் 

*கட்டளை 4*
*நிலை உயரும் போது 
பணிவு கொண்டால் 
உயிர்கள் உன்னை வணங்கும்!*
கிணற்றில் போட்ட கல்லாக இல்லாமல் படிப்பால்/ பதவியால்/ பணத்தால் உயர்ந்து ஓங்குவோம். அப்போது செருக்கு அடைந்து/மனிதம் துறந்து/தலைக்கனம் கொண்டு இடையே வந்த பட்டம் பதவியால் தலை குப்புற விழுவோம். அந்நிலையில் * பெருக்கத்து வேண்டும் பணிதல்* என்பதை  மனதில் கொள்ள  வேண்டுமென உணர்த்தி,
பணிவு/அன்பு இரண்டையும் மனிதனின் இரு கண்களாக்கி 
கவிஞர் கண்ணதாசன் நமக்கு தத்துவக் கட்டளை 4 னில் அளித்திருப்பார்.

*கட்டளை 5*
*ஆசை/ கோபம்// களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்*
ஆசையால் வருவதே திருட்டு/கோபம், துன்பம் என *புத்தர்*  சொல்வார். ஆசை நிறைவேறாத போது கோபமும்,
ஆசை நிராசையான போது திருட்டும்
நிகழும்.இவ்விரண்டும் ஒன்று மற்றொன்றுக்கு அழைத்துச் செல்லும் வழுக்கு நிலம்/வழுக்குப்பாறை போன்றது. இப்படிப்பட்ட பாறையுள்ள பாதையிலே நாம் செல்லாமல் மனிதநேயத்தோடு மனிதனாக நடப்போம் என்று சொல்லி,
மிருகம் என்பது கள்ள மனம்/அதலபாதாளம் காட்டும் மனம்.பேசத் தெரிந்த மிருகமாக மனிதனை சித்தரித்து
கண்ணதாசன் ஐந்தாவது கட்டளை தத்துவம் நமக்கு அளித்திருப்பார்.

*கட்டளை 6*
*அன்பு /நன்றி /கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்!*
நான்காவது கட்டளையில் விலங்கு வாழ்வையும், ஐந்தாவது கட்டளை தத்துவத்தில் மனித வாழ்வையும், ஆறாவதுகட்டளை  தத்துவத்தில் தெய்வீக வாழ்வையும் கவிஞர் விளக்கியிருக்கி, மனித வடிவில் இருந்தாலும் அனைவராலும் தெய்வீகமாகப் போற்றும் வண்ணம் வாழ்ந்திட வேண்டும்/உயர்ந்திட வேண்டும் என்பதை  ஆறாம் கட்டளையாக கவிஞர் நமக்கு அளித்திருப்பார். 

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" இது வள்ளுவர் கூற்று.மனித உயர் விழுமியங்களான அன்பு/நன்றி/கருணை கொள்ள தெய்வமாக மனிதன் கருதப்படுவான் என்பதை உணர்த்தி இருப்பார் ஆறாவது தத்துவக் கட்டளையாக. 
*அபிராமி பட்டரும்* 
 " நல்லன எல்லாம் தரும்!"
 என்று அழகுற சொல்லியிருப்பார். 

இத்தகைய ஆறு கட்டளைகளையும் அறிந்த மனது *ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்* என்ற தத்துவத்தை 
அழகுற அளித்திருப்பார் கவிஞர் கண்ணதாசன் .

பேச்சில் /எழுத்தில் 
இலக்கியத் தரமுள்ள
 பொருள் நயம் நிறைந்த
தத்துவக் கருத்துக்களை சொல்லி 
பட்டி தொட்டியெங்கும் 
விழிப்புணர்வு ஊட்டியவர் 
கவிஞர் கண்ணதாசன் .
சிறுகூடல்பட்டி தொடங்கிய தத்துவம் சிகாகோவில் முடிந்த வாழ்க்கையாகி தமிழ் இலக்கிய வரலாற்றில் 
நீங்கா இடம் பிடித்த
ஒரு மணி மகுடமாகி 
தமிழர் மனதில் 
நீங்கா இடம் பிடித்தது .

*வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் 
வந்த துன்பம் எதுவென்றாலும் 
வாடி நின்றால் ஓடுவதில்லை 
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்* என்ற கண்ணதாசனின் 
தத்துவ வரிகளை மனதில் நிறுத்தி அமைதியான வாழ்வை 
மண்ணில் இருக்கும்வரை 
வாழ்ந்து முடிப்போம்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை.