மன்னிப்பில் மனிதம்...! 037

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

மன்னிப்பில் மனிதம்...! 037

மன்னிப்பில் மனிதம்...!

ஒரு அழகான மாலைநேரம் சில்லென்று காற்று வீசி புத்துணர்வை தந்தது. அந்த மாலை நேரத்தில் கைலாஷ் டியூஷன் செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தான்.அப்போது அவனது தந்தை அவனுக்காக வாங்கி புத்தம்புதிய அழகிய கேட்டரீஜ் பேனாவை வழங்கினார். அதை கண்டவுடன் அவனின் மகிழ்ச்சிக்கு அளவில்லை, ஏன்னென்றால் விலைகூடிய பேனாவை இது வரை அவனுக்கு வாங்கிதந்தது இல்லை அதுவும் பிடித்த வண்ணத்தில் அமைந்தது ஆனந்தத்தின்  உற்சாகம்.
உடனே தந்தையிடம் "அப்பா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அப்பா,  நான் இந்த பேனாவை டியூஷனுக்கு கொண்டு செல்ல போகிறேன் என் நண்பர்களிடம் காண்பிக்கின்றேன் அப்பா" எனக் கூறினான். அதற்கு " நீ ரொம்ப நாளாக கேட்டு கொண்டே இருந்தே அதனால் உனக்கும் அண்ணுக்கும் வாங்கி கொண்டு வந்தேன் அதை பத்திரமாக வைத்துகொள்ள வேண்டும். தொலைத்தால் வேறு எதுவும் வாங்கிதர மாட்டேன்" என திட்டவட்டமாக கூறி எச்சரிக்கை செய்தார். புதிய பேனாவை எடுத்துக்கொண்டு டியூஷனுக்கு சென்றான்.
டியூஷனுக்கு சென்றவுடன் அனைவருக்கும் காட்டி மகிழ்ந்தான். பிறகு ஆசிரியரின் அறிவுறுத்தலின் பெயரில் பாடங்களில் கவனம் செலுத்தினான். பேனாவை வைத்து எழுதுவதற்கு தயங்கும் கைலாஷ் அனைத்து வீட்டு பாடங்களையும் எழுதிஎழுதி பார்த்து ரசித்து கொண்டு இருந்தான். அப்போது அவனருகில் அமர்ந்து கொண்டு இருந்த நண்பன் ராஜாவுக்கு பேனாவின் மேல் ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது. பேனாவை தன்னுடைய தாக்க எண்ணி தருணம் பார்த்து கைலாஷ் அசந்த வேளையில் பேனாவை திருடி வைத்து கொண்டான். இதை கவனக்காத கைலாஷ் ஆசிரியையிடம் சந்தேகங்களை கேட்டு படித்து ஒப்பிவித்துக்கொண்டு இருத்தான்.
சிறிது நேரத்தில் ராஜா " மேம் இன்று அம்மா கொஞ்சம் வேகமாக வரச்சொன்னார்கள் " எனக்கூறி வீட்டுக்கு சென்று விட்டான். அதை தொடர்ந்து கைலாஷும் வீட்டுக்கு செல்லும் வேளையில் தான் பேனாவை காணாது திகைத்து சுற்றிச்சுற்றிப் பதறிக்கொண்டு தேடினான். அதை கவனித்த ஆசிரியை என்னவென்று கேட்டார் அதற்கு கைலாஷ் அழுதுக்கொண்டே " பேனாவை காணவில்லை மிஸ். இங்குதான் வைத்திருந்தேன் எப்படி காணாமல் போனது என்று தெரியவில்லை மிஸ்"  என்று மிகவும் அழுதான்.
அவனை சமாதானம் செய்த ஆசிரியை பதற்றப்படாமல் தேடு என்றார்கள். அவனும் பை மற்றும் புத்தகங்கள் என ஒன்றுவிடாமல் தேடியும் கிடைக்கவில்லை. பிறகு " மிஸ் ராஜாதான் பேனாவை எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தான்" எனக்கூறினான். அதற்கு ஆசிரியை " சரி நாளை வந்தவுடன் கேட்டு அதை அவன்  எடுத்து இருந்தால் சத்தமிட்டு உனக்கு உன் பேனாவை வாங்கித்தருகிறேன் என்றார்கள்.
" இல்லை மிஸ் பேனா இல்லாமல் போனால் அப்பா மிகவும் கோபமடைந்து என்னை திட்டுவார்கள் மிஸ். அதனால் ராஜா வீடு பக்கத்தில் தான் உள்ளது நேரிலேயே சென்று கேட்டு பார்த்தவிட்டு வருகிறேன் மிஸ்" என்றான். அதற்கு சரி என்று கூறி அனுமதி அளித்தார்.
உடனடியாக ராஜா வீட்டுக்கு சென்ற கைலாஷ் அவனது அம்மாவிடம் " ஆன்ட்டி எனது புதிய பேனாவை ராஜா எடுத்துக்கொண்டு வந்து விட்டான். அதை எனக்கு வாங்கிகொடுங்கள்" என அழுதுகொண்டே கேட்டான். ராஜாவின் அம்மாவிற்கு வந்ததே கோபம் உடனே" அப்படியென்றால் ராஜாலை திருடன் என்று கூறுகிறாயா.அவனுக்கு அப்படிப்பட்ட பழக்கம் எல்லாம் இல்லை, அப்படி நாங்கள் வளர்க்கவும் இல்லை" எனக் கோபம் கொண்டு கத்தினார். கைலாஷ் " ஆன்ட்டி நான் திருடினான் என்று சொல்லவில்லையே, எடுத்துவிட்டான் என்று தான் கூறினேன். ப்ளீஸ் ஆன்ட்டி என்னுடைய புதிய பேனாவை எனக்கு கொடுத்துவிடச் சொல்லுங்கள். எனது அப்பா அடிப்பார்கள் ஆன்ட்டி" எனக் கெஞ்சினான்.
பிறகு ராஜாவின் பென்சில் பாக்ஸை கொண்டு வந்து பார்த்துக்கொள் என்று கூறினார். அதில் பேனாவை காணவில்லை. இதை அத்தனையும் பார்த்துக்கொண்டு திருட்டு முழி முழித்து கொண்டு இருந்தான் ராஜா. கைலாஷ்" அவனது ஸ்கூல் பேக்கை கொடுங்கள், அதையும் பார்த்து விடலாம்" என்றான். மகனின் திருட்டுமுழியை கண்ட ராஜாவின் அம்மா நிலைமையை புரிந்துகொண்டு மகனை விட்டுக்கொடுக்காது கைலாஷை பார்த்து" அதுல்லாம் முடியாது. என் மகன் மற்றவர்களின் பொருளுக்கு ஆசைபடாதவன் , அதுமட்டுமல்ல நாங்கள் அவனுக்கு விதவிதமாக பேனாக்கள் வாங்கி கொடுத்து உள்ளோம். உன்னுடைய பேனாவை எடுக்க வாய்ப்பில்லை . நீ வேறெங்கேயோ தொலைத்துவிட்டு இங்கு வந்து கேட்டகிறாய். போப்பா போய் தொலைத்து இடத்தில் தேடு" என மகனை முறைத்துக்கொண்டே கைலாஷை விரட்டி விட்டார்கள்.அவனும் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதகொண்டே  வீட்டுக்கு போய் எப்படி சொல்வது என்று விழித்துக்கொண்டே தயக்கத்துடன் சென்றான்.

வீட்டுக்கு சென்றவுடன் என்னவென்று கூறாமல் அழுதுவதை கண்ட அவனது அம்மா தீபா பதறிப்போய் அவனை அரவணைத்து என்ன விஷயம் என்று கேட்க, அவனும் அழுகையுடன் சேர்த்து பேனா தொலைந்ததை சொன்னான். கேட்டவுடன் கோபம் வந்தாலும் அதற்கு இதுவல்ல தருணம் என நினைத்து மகனிடம்" அழாதே கைலாஷ் அழாதே வேறு பேனா வாங்கிக்கொள்ளலாம்" என சமாதானம் செய்தாள். ஆனாலும் அவன் " அப்பாவிற்கு தெரிந்தால் என்னை அடிப்பார்கள் "  என்று மிகவும் அழுதான். அதற்கு" நீ பேனாவை தொலைக்கவில்லை கண்ணா, அது திருடு போய்விட்டது எனவே அப்பா அதை புரிந்துகொள்வார்கள்" என்று கூறினார். கொஞ்சம் பயம் விலகிய கைலாஷ் அமைதியானான். அப்பா வீட்டுக்கு வந்தவுடன் என்னை மன்னித்து விடுங்கள் என விஷயத்தை கூறினான். கூறும் போதே அடித்து விடுவார்களோ என்ற பயமும் இருந்தது. ஆனால் அவனது தந்தையோ அவனிடம் " நிச்சயமாக அவன்தான் எடுத்தான் என்று உனக்கு தெரியுமா" என்றார். அவனும் ஆமாம் எனக் கூறியதும் "அவன் உனக்கு நணபனோ நண்பன் இல்லையோ  இனிமேல் அவனிடம் பேனாவை பற்றி எதுவும் கேட்காதே, அவனுக்கு நீ பரிசாக அளித்தாய் என எண்ணி அவனை மன்னித்து விடு. மன்னிப்பு என்று நல்லதா அல்லது தவறா என்பது அவரவர் செய்யும் செயலை பொருத்தது. எனவே ராஜாவின் தவறான செயலுக்கு மன்னித்து அவன் மேல் வெறுப்பை காட்டாமல் எப்போதும் போல் அவனுடன் பழகு, அதுவே நாளடைவில் அவனுடைய தவறை அவனுக்கு உணர்த்தும். அதுமட்டுமின்றி எதையும் பொறுப்பாக பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும், அப்படி வைத்துக்கொள்ளாததும் நம் தவறுதான். உனக்கு வேறு பேனா வாங்கி தருகிறேன்" என்றார். "அப்பா எனக்கு எப்பயும் போல் குறைந்த விலை பேனாவே போதும் அதை நான் பத்திரமாக வைத்துக்கொள்வேன் " என்றான்.

கைலாஷும் மறுநாள் பள்ளி முடிந்து டியூஷனுக்கு சென்று ராஜாவுடன் வழக்கம்போல பேசி பழகினான். அது அவனுக்கு மிகவும்  மனம் உறுத்தியது. அவனே கைலாஷிடம் சென்று மன்னிப்பு கேட்டு பேனாவை திருப்பி வழங்கினான். பேனாவை திரும்ப அளித்து இந்த பேனாவை எனது அன்பளிப்பாக வைத்துக்கொள் எனக்கூறி மகிழ்வுடன் வீட்டுக்கு சென்றான்

கைலாஷ் தந்தை கூறியதுபோல்  மன்னிப்பை பெறுவதும் தருவதும் அவரவர் செய்யும் செயல்களை பொருத்தே அமையும் என்பது.

மன்னிப்பில் கூட மனிதம் பிறக்கும்.

-பி.பத்ரிநாராயணன்
இராஜபாளையம்.