ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ் ? பகுதி - 28

ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ் ? பகுதி - 28

ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ?* பகுதி-28

ஒரு முனிவர் தன்னுடைய அந்திம காலம் நெருங்குவதை உணர்ந்து, அதற்கு முன்பாக பூர்வ ஜென்மங்களில் தனது வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது என்பதை அறிந்து கொள்ள ஆவல் கொண்டு, தனது தவ வலிமையினால் பெற்ற ஞான திருஷ்டியின் மூலமாக ஒவ்வொரு ஜென்மமாக அவர் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதை கண்டு கொண்டே வந்தார். 

ஒரு ஜென்மத்தில் அரசனாகவும், 

ஒரு ஜென்மத்தில் அறிஞராகவும், 

ஒரு ஜென்மத்தில் தெய்வீக பசுவாகவும், ஒரு ஜென்மத்தில் கஸ்தூரி மானாகவும், இப்படி ஒவ்வொரு ஜென்மத்திலும் அவரின் வாழ்க்கை உயர்வானதாகவும்,

அர்த்தம் நிறைந்ததாகவும், அவருக்கு மிகுந்த மனநிறைவை தருவதாகவுமே அமைந்திருந்ததை கண்டு அவர் ஆனந்தம் அடைந்தார். 

தற்போதைய ஜென்மத்திலும் கூட தனது பூர்வஜென்மங்களையெல்லாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஞானம் பெற்ற ஒரு உயர் நிலையிலேயே தனது பிறப்பு அமைந்திருப்பதை நினைத்து இன்னும் பேரானந்தமும், பெருமிதமும் கொண்டார். 

இவ்வாறாக பார்த்துக் கொண்டே வந்தவருக்கு, தனது அடுத்த ஜென்மம் எப்படி இருக்க போகிறது என்பதையும் தெரிந்து கொள்ள ஆவல் வந்து, அதற்கான முயற்சியிலேயும் ஈடுபட்டார். 

அப்போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. 

அது என்னவென்றால் அவர் தனது அடுத்த ஜென்மத்தில் ஒரு பன்றியாக பிறக்கப் போவதை தனது ஞான திருஷ்டியின் மூலமாக தெரிந்து கொண்டவுடன் மிகவும் பேரதிர்சி அடைந்தார். 

ஒரு பன்றியாக பிறந்து இந்த உலகத்தில் வாழப் போகும் அந்த வாழ்க்கையை அவரால் கற்பனை செய்து பார்க்க கூட முடியவில்லை.  

உடனடியாக தனது சிஷ்யர்களில் முக்கியமானவனும், மிகவும் நம்பிக்கைக்குறியவனுமான ஒருவனை அழைத்தார். 

அவனிடம் 'சிஷ்யா நான் எனது அடுத்த பிறவியில் பன்றியாக பிறக்கப் போவதை எனது ஞான திருஷ்டியும் மூலமாக அறிந்து கொண்டேன். ஒரு பன்றியாக நான் வாழப்போகும் அந்த வாழ்க்கையை என்னால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. அதனால் இப்போது நான் உனக்கு ஒரு கட்டளையை பிறப்பிக்கிறேன், அதாவது நான் இறந்த பிறகு நீ என்னை தேடிக் கொண்டே இரு, 

நான் எங்காவது ஒரு இடத்தில் பன்றியாக பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பேன்,

நீ என்னை கண்டுபிடித்தவுடன் உடனடியாக என்னை கொன்றுவிடு. ஒருவேளை அப்போது நான் வாழ்தலில் விருப்பம் கொண்டு என்னை கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும், விட்டுவிடு என கெஞ்சினாலும் கூட, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், நீ என்னை உடனடியாக கொன்று விடு'. -என்று சத்தியம் வாங்கிக் கொண்டார். 

இந்த நிகழ்வு நடந்த கொஞ்ச நாட்களுக்கு பிறகு அந்த முனிவர் இறந்தும் போனார். 

அதன் பிறகு அவரின் அந்த சிஷ்யன், தன் குருவிற்கு தான் அளித்த வாக்கினை காப்பாற்றுவதற்காக அவரை எல்லா இடங்களிலும் தேடி அலைந்தான். 

சில வருட தேடலுக்குப் பிறகு, ஒரு நாள் அவன் பன்றியின் உருவில் இருந்த தனது குருவை கண்டுபிடித்து விட்டான். 

உடனடியாக அந்த பன்றியின் முன்பு போய் நின்று 'குருவே நான் உங்களை கண்டுபிடித்து விட்டேன், இப்போது நான் உங்களுக்கு அளித்த வாக்கின்படி உங்களை கொன்று எனது கடமையை நிறைவேற்றப்போகிறேன்' என்றான். 

இதைக் கேட்டவுடன் பன்றியாக பிறப்பெடுத்திருந்த அந்த முனிவருக்கு தனது பழைய ஜென்மமும், அப்போது நடந்த விஷயங்களும் ஞாபகத்திற்கு வந்தது. உடனே தலை தெரிக்க ஓட ஆரம்பித்தார்.  

சிஷ்யனோ 'குருவே ஓடாதீர்கள் எனது கடமையை நிறைவேற்ற என்னை அனுமதியுங்கள்' என்றபடியே துரத்த ஆரம்பித்தான். 

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பன்றியாக பிறப்பெடுத்திருந்த அந்த முனிவர் ஒரு வழியாக தனது சிஷ்யனிடம் சிக்கிக் கொண்டார். 

அப்போது சிஷ்யன் 'என்ன குருவே இப்படி ஓடி என்னை சோதிக்கிறீர்கள், 

நான் உங்களுக்கு அளித்த வாக்கின்படி உங்களை கொல்வதற்காக இத்தனை ஆண்டு காலம் தேடி அலைந்து இப்போதுதான் உங்களை கண்டுபிடித்திருக்கிறேன். 

உங்களுக்கு நான் அளித்த வாக்கின்படி எனது கடமையை நிறைவேற்றுவதற்கு என்னை அனுமதிக்காமல் இப்படி ஓடி என்னை நீங்கள் சோதிப்பது நியாயமா'? என்று கேட்டான். 

அதற்கு பன்றியாக பிறப்பெடுத்திருந்த அந்த முனிவர் சொன்னார் 'அடேய் சிஷ்யா நான் அந்த ஜென்மத்தில் ஒரு தபஸ்வியாக இருந்தேன், அந்த வாழ்க்கையில் எனக்கு ஒழுக்கமும், சுத்தமும் மட்டும் தான் பிரதானமாக இருந்தது. மூன்று கால பூஜை செய்து, எந்நேரமும் இறை சிந்தனையில் மூழ்கி திளைத்து, பால் சாதம் மட்டுமே புசித்து, துளசி தீர்த்தம் மட்டுமே அருந்தி, மனிதர்கள் அற்ற வனத்தில் குடில் அமைத்து வாழ்ந்த எனக்கு, ஒரு பன்றியின் வாழ்க்கை என்பது அத்தனை அற்ப்பமாகவும், அருவருப்பாகவும் தெரிந்தது. 

ஆனால் இன்று நானே ஒரு பன்றியாகப் பிறப்பெடுத்து, குட்டிகளையும் ஈன்று, கிடைத்ததை உண்டு, எனது குட்டிகளையும் பாலூட்டி பராமரித்துக்கொண்டு, இந்த வாழ்க்கையினை நான் வாழும் போதுதான், எனக்கு அந்த வாழ்க்கையைவிட இந்த வாழ்க்கை உயர்வாக தெரிகிறதடா. அதனால் நான் இப்படியே வாழ்ந்து விட்டு போகிறேன், என்னை நீ எதுவும் செய்யாமல் விட்டுவிடு.' -என்று கெஞ்சினார். 

அதன் பிறகு அந்த சிஷ்யன் தன் குருவிற்கு அளித்த வாக்கின்படி அந்த பன்றியை கொன்றானா? இல்லையா? என்பதெல்லாம் வேறு கதை, 

ஆனால் கதையின் நீதி என்னவென்றால், உங்கள் எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை தீர்மானித்தால், வாழ்க்கை என்பது உயர்நிலை. 

ஆனால் நீங்கள் வாழும் வாழ்க்கை உங்கள் எண்ணங்களை தீர்மானித்தால், வாழ்க்கை என்பது கையறு நிலை. 

உங்கள் எண்ணத்தின் படி உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், தீர்மானிக்கவும், உங்களுக்கு மிகப்பெரிய கால அவகாசம் உண்டு. 

அந்த கால அவகாசம் என்பது கிட்டத்தட்ட இருபது, முப்பது ஆண்டுகள் ஆகும். 

அதுதான் நீங்கள் சம்பாதிக்கும் காலம். இதில் உங்களுக்கு பிடித்த மாதிரியாக உங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும், உங்களால் தீர்மானிக்க முடியும். 

ஆனால் வாழும் வாழ்க்கைக்கு ஏற்றவாறு எண்ணங்களுக்குள் உழலும் ஒரு வாழ்க்கைகுள் நீங்கள் ஆட்பட்டுக்கொண்டால் அது கையறு நிலை.

அந்த வாழ்க்கையில் உங்கள் எண்ணங்கள் அத்தனையையும், நீங்கள் வாழும் அந்த வாழ்க்கைதான் தீர்மானிக்கும்.

இருக்கவேண்டிய இடத்திலிருந்து,

உடுத்தவேண்டிய உடுப்பிலிருந்து,

உண்ண வேண்டிய உணவு வரையில் நீங்கள் ஆட்பட்டுக்கொண்ட அந்த வாழ்க்கை தான் அத்தனையையும் தீர்மானிக்கும்.

அந்த வாழ்க்கை என்பது, உங்கள் உறவுகளோடு ஒண்டி குடித்தனம் நடத்தும் சிறு பாக்கியமாகவும் இருக்கலாம்.

அல்லது வீடற்று வீதியில் வாழும் சாபமாகவும் இருக்கலாம்.

அந்த வாழ்க்கையில் ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிர்பார்ப்பும், ஆசையும், மூன்று வேளை சோறு கிடைத்தாலே போதும் என்பதாய் சுருங்கியும் விடலாம்.

யாசகம் பெற்று வாழ்பவர்களில் இரண்டு விதமானவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு சாரார் பற்றற்றவர்கள்.

இன்னொரு சாரார் கைவிடப்பட்டவர்கள்.

பற்றற்று, பந்தங்களை விடுத்து, அரண்மனையை விட்டு வெளியேறி, துறவறம் பூண்டு, பிச்சை பாத்திரம் ஏந்தி, புத்தனாக ஞானம் அடைந்த சித்தார்தனை போல,

எத்தனையோ கோடாதிபதிகள் பொன் ஆசை, மண் ஆசை என்று, அத்தனையையும் விடுத்து, இல்லறம் துறந்து பிச்சை பாத்திரம் ஏந்தி, எதையோ தேடி திரிவதை எல்லா யுகத்திலும் கண்டிருக்கிறோம்.

அவர்கள் தாங்களாகவே அத்தனையையும் உதறிவிட்டு வந்தவர்கள்.

அப்படிப்பட்டவர்கள் எண்ணிக்கையில் மிக சொற்ப்பம் தான்.

இன்னொரு சாராரோ கைவிடப்பட்டவர்கள்.

திரேதா யுகம்,

துவாபர யுகம்,

கிருத யுகம், என்று கடந்துபோன எந்த யுகத்திலும் கான முடியாத இவர்களை,

இந்த கலியுகம் அதிகம் கொண்டிருப்பது, 

கூட்டு குடும்பம் எனும் அமைப்பு சிதைந்து போய், தனி மனித வாழ்தலின் போராட்டங்களையும்,

உறவுகளை பேனிக்காப்பதில் ஏற்படும் சிக்கல்களையும், உள்ளடக்கிய விசயமாக இது இருக்கிறது.

பாஷை தெரியாத ஊரில் ஐந்து வயது குழந்தையை எப்படியாவது பிழைத்துக்கொள் என்று கைவிட்டுவிட்டு வந்தால் அந்த குழந்தை நிலை என்னவாக இருக்கும்?

அப்படித்தான் இங்கே நிறைய பெற்றோர்களின் நிலை.

ஊர் தாண்டி மாநிலம் தாண்டி பாஷை தெரியாத ஊரில் கொண்டுபோய் பெறவர்களை கை விட்டுவிட்டுப்போகும் அளவிற்கு பிள்ளைகள் மனது துணிகிறார்கள்.

வாழ்க்கையின்அடிப்படையாக கடைபிடித்த தர்மத்தை கைவிட்டதாலும்,

செய்யும் செயல்கள் அத்தனைக்கும் பாவ புண்ணிய கணக்குகள் இருக்கிறது என்பதை வசதியாக மறந்துவிட்டதாலும், 

வருஷமெல்லாம் பெற்றவர்களை வைத்து பேணிக் காப்பதைவிட,

வருடத்தில் ஒருநாள் பெற்றோர்களின் போட்டோவுக்கு மாலை போட்டு பிண்டம் வைத்து படையல் போட்டு வணங்கிகொள்வது, சில பிள்ளைகளுக்கு சவுகரியமான காரியமாக தெரிகிறது.

அது அவர்களுக்கு புண்ணியத்தை தேடிக்கொடுத்துவிடும் என்றும் நம்பப்படுகிறது 

இன்று இதையெல்லாம் சட்டம் இயற்றி சரிசெய்திட வேண்டிய கட்டாயாத்தில் தான் இருக்கிறோம்.

ஆனால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலேயும் பொருளாதார முன்னேற்றமும், 

ஒவ்வொரு மனதிலும் கருணையும், அன்பும் மனமாற்றமும் ஏற்படாமல் இந்த விசயம் அத்தனை சீக்கிரம் சரிசெய்திட முடியாதது.

அதுவரை அன்றாட வாழ்க்கையோ, அதன்பிறகு

எதிர்கால வாழ்கையோ, அவரவர் தான் சரி செய்துகொள்ளும் முயற்சியினை செய்திடவேண்டும்.

"அவரவர் வாழ்க்கை

அவரவர் கைகளில்."

 -தொடரும்...

கூ. சுரேஷ்வரன்,

இன்சூரன்ஸ் ஆலோசகர்.