தமிழரின் தொன்மை...! 013
தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி
தமிழரின் தொன்மை
- ச.குமார். சிவகங்கை
முன்னுரை :-
கற்காலம் தொடங்கி தற்காலம் வரை உலகில் பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்திருந்தாலும் தமிழினம் தொன்மையானதும் முதன்மையானதும் ஆகும்.பல்வேறூ பழக்க வழக்கங்களை கொண்டு தனிச்சிறப்பு பெற்றதுள்ளது.
மொழியின் சிறப்பு பற்றியும் தமிழ் மக்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றியும் இக்கட்டுரை விளக்குகிறது.
பழந்தமிழகம்
கி.மு.6000 ஆண்டுகள் பழைமையான சிந்து சமவெளி நாகரீகத்தைப் பற்றியேதும் உறுதியான தகவல்கள் இல்லாவிட்டாலும் அங்குள்ள இலிங்க வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் கிடைத்துள்ளன.அச் சான்றுகளின்படி இன்றைய இந்து சமய வழிபட்டு நாகரீகம் அப்பொழுதே தோன்றியிருப்பது வெளிச்சமாகிறது. மேலும் ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் உள்ள குறியீடுகள், நமது தமிழ்நாட்டின் காவிரி கழிமுகப் பகுதியில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகளை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரியது. தற்போதைய காலக்கட்டத்திலும் கீழடி போன்ற இடங்களில் ஆய்வினை மேற்க்கொண்டு வருகிறது. பழமையை உலகிற்கு உணர்த்தும் அரிய தகவல்கள் கிடைத்துக்கொண்டு வருகிறது
திராவிட குடும்பம்
மொழிக்குடும்பத்தில் மட்டும் மொத்தம் 85 மொழிகளாம். இதில் விந்தை என்னவென்றால் ராபர்ட் கார்டுவெல் என்ற அயர்லாந்துக்காரர் இந்த திராவிட மொழிகளின் ஒப்புமையைப் பற்றி தனது ஆராய்ச்சி .நூலில் அதாவது "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலை 1856 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இவரே "திராவிட மொழி நூலின் தந்தை" எனவும் பின்னர் அழைக்கப்படுகிறார். தமிழ் மொழியின் சிறப்பை நம்மைவிட மற்றவர்களுக்குத்தான் அதிகம் தெரிந்துள்ளது என்பது கவனிக்கதக்கது.
தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்.இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். நாம்தான் இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பதில் .எல்லோருமே பெருமைபடுதலுடன் ஒற்றுமையுடனும் வாழ்ந்து பெருமை சேர்க்க வேண்டியது நம் கடமையாகும் .
ஒரு காலத்தில் நமது தமிழ்நாடு மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டது. இன்றும் சிலர் அப்படித்தான் அழைக்கின்றனர் என்பது கொடுமையானது. இதனை தமிழ் நாடு என்று மாற்றுவதற்காக 1956 ஜூலை 27 ல் உண்ணாவிரமிருந்து உயிர்துறந்தவர் தியாகி சங்கரலிங்கனார் என்பவர். .தொடர்ச்சியாக 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்த பின்னரே 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது
விருந்தோம்பல்
தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் இனமக்கள் நல்ல பண்புகள் பொருந்தியவர்கள். அவர்களின் பண்புகளில் சிறந்தது விருந்தோம்பல். சங்ககாலம் முதற்கொண்டே விருந்தினரைப் போற்றி வாழ்கிறார்கள். விருந்தினர்களைப் போற்றி வாழ்வதினாலேயே உலகம் முழுவதும், புகழுடன் வாழ்கிறார்கள் தமிழர்கள் என்கிறார் பாரதிதாசன்.
நற்றமிழர் சேர்த்த புகழ்
ஞாலத்தில் என்னவெனில்
உற்ற விருந்தை
உயிரென்று - பெற்று உவத்தல்.
(குடும்பவிளக்கு5வதுபாடல்)
தம்மை வந்து அடைந்த விருந்தினர்களுக்குத் தமிழர்கள், விருந்தோம்பலைத் தம் உயிருக்கும் மேலாகக் கருதினர். எனவே விருந்தினரைப் பேணும் பொழுது பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார்
மூவேந்தர் சிறப்பு
புலிக் கொடியும், வில் கொடியும், மீன் கொடியும் கொண்டு ஆட்சி செய்த மூவேந்தர் காலத்தில், உலகெங்கும் புகழ் பரப்பும் வகையில், செந்தமிழின் ஒலியே கேட்டது. தமிழ் நாட்டுக் கலைகளே ஒளியாய்க் கண்முன் காட்சியளித்தன. ஆனால் இன்று, பிறமொழி ஒலிகளும், பிறநாட்டுக் கலைகளுமே மலிந்து உள்ளன. இந்த நிலைமாறி மீண்டும் பழைய நிலை என்று வருமோ என்று ஏங்குகிறார் பாரதிதாசன். எனவே
ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்
ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்
புலி, வில், கயல் கொடி மூன்றினால்
புது வானம் எங்கும் எழில் மேவிடும்
அந்த வாழ்வுதான் எந்நாள் வரும்?என்று குறிப்பிடுகிறார்.
தமிழர் திருவிழா
தமிழன் தன் பெருமையை கூறுவதைக் காட்டிலும் தனது நாட்டின் பெருமையையும், அதனுடன் சேர்த்து தனது தமிழ் மொழியின் பெருமையையும் சேர்த்து சொல்லி பேரின்பம் கொள்வான்.
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்பன போன்ற வரிகள் உழவனை குறிப்பதாகும். தமிழை போற்றி பேணுவதை போன்று தனது தொழிலையும் போற்றி பேணுபவன் தமிழன் என்பதை இவை எடுத்துக்காட்டுகிறது. உழவிலும், தொழிலிலும் தமிழன் முன்னே நிற்பான்
முடிவுரை:-
தமிழரின் பழமையை பறைசாற்றும் எண்ணிடங்கா நூல்கள் தமிழ் மொழியில் பரவிக்கிடக்கின்றன.இலக்கிய வரலாற்று ச் சான்றுகளின் அடிப்படையில் உற்று நோக்கியதில் பல்வேறு தரவுகள் கிடைத்துள்ளன.முதுமக்கள் தாழி பழைய மண்பாண்ட ஓடுகள் உறைக்கிணறுகள் கிடைக்கப் பெற்ற பொருட்கள் மூலமாக அதன் கால வரையறை கணக்கிடப்படுகிறது.தமிழரின் தொன்மை பொன் எழுத்தால் பொறிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்போம்.

Comments (0)