மேலை நாடுகளில் தமிழர்களின் பண்பாடு...! 029

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

மேலை நாடுகளில் தமிழர்களின் பண்பாடு...! 029

 

மேலை நாடுகளில் தமிழர் பண்பாடு

முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா,

ஜெ. அ. மகளிர் கல்லூரி, 

பெரியகுளம், தேனி.

 

முன்னுரை

உலகில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனும் ஏதேனும் ஒரு குழுவிற்குள் தன்னை இணைத்துக் கொண்டு வாழ்கிறான்.  அவ்வாறு இணையும் நிலையில் தன்னைச் சார்ந்துள்ள சமூகத்தின் அடையாளங்களைப் பிரதிபலிக்கின்றான். பயண நூல்களும் தமிழர்களின் பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, வாழ வேண்டிய நெறிமுறைகளை எடுத்துரைக்கின்றன. இந்த ஆய்வுக் கட்டுரை பயண இலக்கியத்தில் அமையும் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை எடுத்துரைப்பதாக  அமைகிறது.

மேலைநாட்டு உணவும் தென்னிந்திய உணவும்

மேனாட்டு உணவுப் பொருட்களைக் கொண்டு, தென்னிந்திய உணவு வகைகளைச் சமைக்கும் முறை குறித்தும் பாதுகாத்துப் பயன்படுத்தும் முறை குறித்து ‘அலைகடலுக்கு அப்பால்’ எனும் நூலில் சாரதா நம்பி ஆரூரன் விளக்கியுள்ளார். முந்திரிப் பருப்பு, ஏலம், கிராம்பு, புளி, பூண்டு போன்றவை தரத்தில் உயர்ந்தவையாகவும் விலையில் குறைந்தவையாகவும் மேலைநாடுகளில் கிடைப்பதைக் குறிப்பிட்டுள்ளார். “நம் ஊரில் தயிரைக் ‘கர்ட்’ (Curd) என்கிறோம். இங்கு ‘யோகர்ட்’ (Yoghurt) என்று கூறினால் தான் புரியும்.  இந்த யோகர்டில் ‘ஸ்ட்ராபெர்ரி’ கலந்தது, வாழைப்பழம் கலந்தது போன்ற பல வகைகள் உண்டு.  அந்தந்தப் பழங்களைத் தயிரில் கலந்து சிறிது இனிப்புடன் கூடிய இந்த ‘யோகர்ட்’ மிகவும் சுவையானது.”1 

மோரை விரும்பிக் குடிப்பவர்களுக்கு, இலண்டன் சுவர்க்கம் என்கிறார். மேலை நாடுகளில் பக்குவப்படுத்தப்பட்ட தக்காளி (peeled Tomatoes) இந்தியப் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும். பாசுமதி (Basumathi) எனப்படும் பிரியாணி அரிசி, இந்திய பாசுமதி, பாகிஸ்தான் பாசுமதி, பழுப்பு நிற அரிசி (Brown rice) அமெரிக்க நீண்ட அரிசி (American long rice), மேலும், கத்தரி, முருங்கை, வாழை, பாகற்காய், மாங்காய், சுரைக்காய், வெண்டைக்காய் அனைத்தும் இந்தியக் கடைகளில் கிடைப்பதையும் ஆனால், விலை அதிகம் என்பதையும் பதிவு செய்துள்ளார். இந்தியாவில் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்கள் இலண்டனில் கிடைப்பதையும் விலை அதிகமாக உள்ளதையும் எடுத்துரைத்துள்ளார்.

உணவு குறித்த தகவல்கள்

      மேலைநாடுகளுக்கு வரும் இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் இந்திய உணவு சாலைகளைக் குறித்தும் அங்கு வழங்கப்படும் உணவுகளைக் குறித்தும் பயணப் படைப்பாளர்கள் பலரும் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். பாரிஸ் நகரில் ஓபரா ஹவுஸ்க்கு அருகே ‘நாயுடு ரெஸ்டாரண்ட்’ தமிழர் நடத்துவது. அந்த உணவுச் சாலையில் சோறு, கறி, பருப்பு, சப்பாத்தி முதலியவை கிடைக்கும் என்று ஏ.கே.செட்டியார் கூறுவதோடு, இந்தியர்களும் தமிழர்களும் இவ்வுணவுச் சாலையைப் பயன்படுத்துவதை ‘உலகம் சுற்றும் தமிழன்’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.  தனிநாயக அடிகளும் இந்திய உணவுச் சாலைகளைத் தேடிச் சென்று இந்திய மக்கள் உணவு உட்கொள்வதை ‘ஒன்றே உலகம்’ நூலில் குறிப்பிட்டுள்ளார். இலண்டனிலுள்ள, இந்தியன் ஒய்.எம்.ஸி.ஏ விடுதியில் காலையில் உப்புமா, இட்லி, ரொட்டி கிடைப்பதைக் ‘கண்டறியாதன கண்டேன்’ நூலில் கி.வா.ஜகந்நாதன் கூறியுள்ளார். 

விருந்தில் தமிழர் அனுபவங்கள்

பயணப் படைப்பாளர்கள் பலர், தாங்கள் சென்ற நாடுகளிலுள்ள மக்களும் அங்கு வாழும் தமிழர்களும் விருந்து கொடுத்து உபசரித்ததைப் பதிவு செய்துள்ளனர். ஸ்வீடனில் தமிழர் வீட்டில் விருந்துணவு உண்ட சு.சுப்பிரமணியம், எனக்கு நம் ஊரில் இருப்பதாகவே தோன்றியது என்கிறார்.  மாஸ்கோவில் ஒரு தமிழ் அன்பர், தனக்குத் தமிழர் உணவு கொடுத்து விருந்தோம்பியதை ம.பொ.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாரிஸ் மாநாட்டிற்குச் சென்ற தமிழர்களுக்கு அங்குள்ள தமிழ் மாணவர்கள் விருந்து கொடுத்து உபசரித்தது நிறைவைத் தந்தது என்கிறார். மாநாட்டில் கலந்து கொண்டோர்க்கு ‘யுனெஸ்கோ’ நிறுவனத்தின் சார்பில் தேநீர் விருந்தும் மதுபான விருந்தும் நடைபெற்றது என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. “‘நலம் புனைந்துரைத்தல் எனப்படும்’ சடங்கு நடைபெற்றது.  இது ‘டோஸ்ட்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. பானம் நிறைந்த கண்ணாடிக் கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டு ஒருவர் கோப்பையோடு மற்றவர் கோப்பையை லேசாகத்தட்டி ‘நலம் புனைந்துரைத்தல்’ சடங்கு நடத்தப்படுகிறது.”2  தமிழகத்திலிருந்து இலண்டன் வரும் பெருந்தலைவர்களுக்குத் தென்னிந்திய உணவு விடுதியில் தரமான விருந்து கொடுத்து உபசரிப்பதை ‘அலைகடலுக்கு அப்பால்’ நூல் குறிப்பிடுகிறது.

    தாய்லாந்து வாழ் தமிழர்களிடம், ‘விருந்தோம்பல்’ எனும் தமிழனின் தலையாயப் பண்பு உள்ளது என்று குரும்பூர் குப்புசாமி குறிப்பிட்டுள்ளார்.  மலேசியா சிங்கப்பூரில் பெரிய விருந்துகள் வைத்துத் தன்னைக் கவனித்துக் கொண்டதை அகிலன் எடுத்துரைத்துள்ளார். யாழ்பாணத்தில்; தான் தங்கியிருந்த வீட்டில் உள்ளோர் விருந்தோம்பலையும் உபசரிப்பையும் கல்கி எடுத்துரைக்கும் போது, “விருந்தோம்பும் குணத்தில் சிறந்த எத்தனையோ வீடுகளை நான்    பார்த்திருக்கிறேன்.  ஆனால் இந்த மாதிரி விருந்தோம்பலைப் பார்த்ததேயில்லை”3  எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழர் வாழும் பகுதிக்குச் சென்ற போது மக்களின் உபசரிப்பையும் விருந்தோம்பும் பண்பினையும் மு.வரதராசன் எடுத்துரைத்துள்ளார்.

தமிழர் திருமணம்

மேலை நாட்டில் வாழும் தமிழர்கள் மேலை நாட்டுக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டாலும், திருமண முறையை ஏற்பதில்லை. தங்களின் ஆண் குழந்தைகள் மேலை நாட்டுப் பெண்களை மணந்து கொள்வார்கள் என அஞ்சுவதையும்  பெண் குழந்தைகளின் திருமண வாழ்வு அவர்களுக்கு அச்சத்தைத் தருவதாக உள்ளதையும் சுஜாதா விஜயராகவன் தனது நூலில் பதிவு செய்துள்ளார். தமிழர்கள் மேலைநாடுகளுக்குச் சென்று கலப்புமணம் செய்து குடியுரிமை பெற்று வாழ்வதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் கலைகள்

மனித உள்ளமானது அழகுணர்ச்சி உடையது. உலக அனுபவங்களைத் தான் விரும்புவதை அழகாகப் படைத்துப் பிறர் வியக்கும் படிச் செய்வது கலையின் அடிப்படையாகும். இலங்கையில் யாழ்ப்பாண மக்களே இசைக்கு அதிகமான பணம் செலவழித்துத் தமிழகத்து இசைவல்லுநர்களைக் கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்துவதை மு.வரதராசன் எடுத்துரைத்துள்ளார்.  இந்திய தமிழக உணவுச் சாலைகளில் ‘காபரே’ நடனம் தான் காணப்படுகிறது. நமது நாட்டுக்குரிய காவடி, கரகம், புரவி, ஆட்டம், மயிலாட்டம், தெருகூத்துக்களைக் காணமுடிவதில்லை என்று ‘கிழக்கே போன கிணற்றுத் தவளை’ நூல் எடுத்துரைக்கிறது. மேலும், சீனர்களின் புகழ்பெற்ற சிங்க ஆட்டம் நம்மூர் புலியாட்டம் போன்றது. எல்லா விழாக்களிலும் இவ்வாட்டம் நடைபெறுவதையும் காண முடிகிறது.

பரதநாட்டியம்

பாரத நாட்டின் நாட்டியக் கலையே பரதநாட்டியம். தமிழகத்தில் தான் இக்கலை நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இலண்டன் தமிழருக்கு, குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு இசை மற்றும் நடனக் கலையில் ஆர்வம் அதிகம் உள்ளது. 

     நடனக் கலையில் வல்ல திருமதி ஜெயலட்சுமி இலண்டன் கில்மோர் இல்லத்தில் நடனவகுப்பு நடத்துகிறார். இலண்டன் வாழ் தமிழர்கள் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யத் தயக்கமின்றி ஆர்வத்தோடு தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். மூன்றாண்டுகள் முடிந்து அரங்கேற்றம் நடைபெறுவதையும், முறைப்படி பயின்றவர்கள் இலண்டன் வந்தால் பொருளீட்டலாம் என்றும் சாரதா நம்பி ஆரூரன் கூறியுள்ளார். சிவசங்கரி அயோவா யூனிவர்சிட்டியில் இரண்டு முறை பரதம் ஆடி பார்வையாளரை வியக்க வைத்ததைக் கூறியுள்ளார். பரதம், கர்நாடக சங்கீதம் இவைகளைப் புரியும்படிக் கூறி முத்திரைகள், ஜதிகள், முகபாவனைகளையும் எடுத்துரைத்து ஆடிக்காட்டியதை விளக்கியுள்ளார்.

வர்மக்கலை

வர்மக்கலை என்பது மருத்துவக் கலையின் ஒரு பகுதி. இக்கலை அகத்திய மாமுனிவரால் கண்டு பிடிக்கப்பட்டது. வர்மக்கலை குறித்து ஜி.ஜான் சாமுவேல் எடுத்துரைத்துள்ளார். ஜப்பானில் கிடைக்கப் பெற்ற ஓலைச்சுவடி மருத்துவம், போர்ப் பயிற்சி போன்றவற்றோடு தொடர்புடைய வர்மக் கலையைப் பற்றியதாகும். தென்குமரித் தமிழில் அமைந்த இச்சுவடியில் ஜப்பானின் கராத்தே, சோளிஞ்சோ, கெம்போ போன்ற போர்க்கலைகள் தென்குமரியின் மர்மஅடி, கேரளத்தின் களரிப்படிற்று போன்றவற்றோடு தொடர்புள்ளதாக விளக்கியுள்ளனர்.

குமரிமாவட்டத்தில் வர்மக்கலை மிகவும் புகழ் பெற்றதாக உள்ளது. இக்கலையைத் தெரிந்தவரை ‘ஆசான்’ என்கின்றனர். வர்மக் கலையை அடிப்படையாகக் கொண்ட இவர்களின் வைத்தியம், போர்முறை (அடிமுறை) மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. திருவிதாங்கூர் மன்னர்கள் போர்ப்பயிற்சி அளிக்க இக்கலையைப் பயன்படுத்தியதையும் இதனை இன்றும் பேணிப் பாதுகாத்து வருவதையும் சுட்டியுள்ளார். “தமிழ்நாட்டுப் பௌத்தத் துறவிகள் இக்கலைகளையும் இவை சார்ந்த சுவடிகளையும் சீனநாட்டிற்கு எடுத்துச் செல்ல, அங்கிருந்து இவை ஜப்பான் போன்ற நாடுகளைச் சென்று எட்டியிருக்கலாம்”4 எனும் வரிகள் மூலம் இக்கலையின் சிறப்பு சீனா, ஜப்பான் மற்றும் பிறநாடுகளிலும் பரவியுள்ளதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

வழிபாடு

இலண்டனில் புதிய ஆக்ஸ்போர்டு தெருவில் அமைந்துள்ள சிறுவீடே ‘ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோவில்.’ இக்கோவிலில் இராமாயண மகாபாரதச் சொற்பொழிவுகளும் கூட்டு வழிபாடுகளும் நடந்து கொண்டிருக்கும். ஆங்கிலேயரும் இவ்வழிபாட்டில் கலந்து கொள்வதாக ‘அலைகடலுக்கு அப்பால்’ நூல் இயம்புகிறது. இலண்டனிலுள்ள பிள்ளையார் கோவிலில் பூக்கள், குங்குமம், விபூதிகள், துளசித் தீர்த்தம் கிடைப்பதை ‘ஒரு பத்திரிகையாளனின் மேலைநாட்டுப் பயண அனுபவங்கள்’ நூல் எடுத்துரைக்கிறது. இலண்டன் விநாயகர் கோவிலில் பால்ஊத்தி வழிபடுவதாக ‘மண்புதிது’ நூல் மொழிகிறது. அமெரிக்காவில் கவீன்ஸ் என்னும் இடத்தில் விநாயகர் கோவில் உள்ளதை ‘ராஜேந்திர சோழ உலா’ நூல் குறிப்பிடுகிறது. சமயத் துறையில் இலங்கைச் சைவர்கள் நம்பிக்கையும் ஒழுக்கமும் நிரம்பியவர்கள். 

“இது மார்கழித் திங்கள் ஆகையால், காலையில் தேவார திருவாசக இன்னிசை கேட்கின்றதாம். வானொலியில் திருவெம்பாவை நாள்தோறும் பாடப்படுகின்றதாம்”5  என மு.வரதராசன் கூறியுள்ளார். பாங்காங்கில் சீலம் சாலையில் சிவன், முருகன், கணபதி அம்மன் சிலைகள் மதில் சுவரில் வரிசையாக உள்ளன. அங்குள்ள ‘மகாமாரியம்மன் கோவிலில்’ மலாயா தமிழர் ஒருவர் பூசாரியாக உள்ளார். அவர் பூசை செய்து, மக்களுக்குப் பிரசாதம் வழங்கினார் என்று குரும்பூர் குப்புசாமி எடுத்துரைத்துள்ளார்.

மேலைநாட்டினர் விரும்பும் தமிழ்ப் பண்பாடு

சாரதா நம்பி ஆரூரன் தன்னுடன் பணிபுரிந்த மேலைநாட்டினரை ‘மெற்றாஸ் கறி ஹவுஸ்’ உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று தமிழர் உணவைப் பற்றியும் உண்ணும் முறையையும் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தமிழர் உணவு வகைகளை உண்ணும் முறை தெரியாமல் திணறியதையும் குறிப்பிட்டுள்ளார். பாரிசில் பிரெஞ்சுக்காரர் வீட்டில் இந்திய உணவை உட்கொண்டதையும் அவர்கள் இந்தியாவிற்கு வந்த போது வாங்கிய சமையல் புத்தகத்தைப் பார்த்துச் சமையல் செய்திருந்ததையும் லேனா தமிழ்வாணன் குறிப்பிட்டுள்ளார். மேலை நாட்டில் புடவைகளுக்கு மதிப்பு பெருகி வருகின்றது. குறிப்பாகப் ‘பனாரஸ்’ புடவைகளுக்கு மதிப்பு அதிகம் என்று சாரதா நம்பி ஆரூரனும், புடவைகளை மேலை நாட்டினர் விரும்புவதை லேனா தமிழ்வாணனும், சுஜாதா விஜயராகவனும் குறிப்பிட்டுள்ளனர். மேலைநாட்டு இளம் தம்பதியர்கள் இந்திய பண்பாட்டைக் கடைப்பிடிப்பதையும் பொட்டிட்டுப் பூச்சூடி மங்கலமாய்த் தோன்றுவதையும் காணலாம்.

பண்பாட்டு மாற்றங்கள்

அமெரிக்காவில் பிறந்து வளரும் தமிழர்களில் இளைய தலைமுறையினர் அமெரிக்க நடை, உடை, பாவனை, குணம் ஆகியவற்றோடு வாழ்கிறார்கள். அவர்களின் பேச்சிலும் உச்சரிப்பிலும் அமெரிக்க மக்களின் தொனியைக் காண முடிகிறது. பல வீடுகளில் தாயும் தந்தையும் தோசையும் இட்லியும் சாப்பிட, பிள்ளைகள் மேலைநாட்டு உணவை விரும்பி உண்பதைக் காணலாம் என்று சுஜாதா விஜயராகவன் மொழிந்துள்ளார். 

மேலைநாட்டில் வாழும் தமிழர்களின் பழக்கவழக்கங்கள் அனைத்தும் மேலைநாட்டுப் பாணியில் அமைவதையும் மகன் தாய் தந்தைக்கு எதிரில் அமர்ந்து புகைப்பிடிப்பதைக் கூடத் தவறாக எடுத்துக் கொள்ளாத தன்மை பெற்றோருக்கு உள்ளதையும் லேனா தமிழ்வாணன் எடுத்துரைத்துள்ளார்.

 தமிழ்நாட்டிலிருந்து மேலைநாடுகளுக்குச் சென்று பல வருடங்களாக வாழ்வோர் அங்கு வாழும் பெண்களை மணந்து அவர்களின் வாழ்வியல் முறைகளுக்கேற்ப தங்களையே மாற்றி வாழ்வதையும் காணலாம். அப்பெண்களுக்குத் தமிழர் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வலியுறுத்துவதில்லை என்பதையும் அறிய முடிகிறது. இலங்கையில் கிறித்தவ மற்றும் சைவத் தமிழர்களுக்கும் வேறுபாடு இல்லை. “ஒரே குடும்பத்தில் ஒரு பக்கம் ஏசுநாதரின் பொன் மொழி கேட்கும் மற்றொரு பக்கத்தில் மாணிக்க வாசகரின் மணிமொழி ஒலிக்கும்”6 என மக்கள் ஒன்றித்து இருப்பதை மு.வரதராசனும் எடுத்துரைத்துள்ளார்.

உலக நாடுகளில் தமிழ்மொழி

இந்தோனேசிய மொழியில் தமிழ்ச் சொற்கள் சில உள்ளன. பணத்தைத் ‘துணை’, காப்பாளரைக் ‘காவலர்’, கவியைத் ‘தோழன்’, மதிப்பை ‘நிலை’, சுங்கவரியைச் ‘சுங்கே’, கொடியைத் ‘தாலி’ என்றும் கூறுகின்றனர். இடம், வட்டில், பண்டம், கலம், கடலை, கண்டு என்னும் சொற்களும் உள்ளன. இத்தமிழ்ச் சொற்கள் சில பண்டைச் சாவகக் கவிதையிலே உள்ளன என்று தனிநாயக அடிகள் எடுத்துரைத்துள்ளார். மொரிசியஸ் மக்களிடம் பிரஞ்சு-ஆங்கிலம் கலந்த திசைமொழி ஒன்று வழங்கி வருகிறது. இதனைக் கிரையோல் என்று கூறுவர். இத்தகைய மொழி அட்லாண்டிக் தீவுகள் இருக்கும் திசை மொழியுடனும் ஒப்பிடத்தக்கது. இக்கலப்பு மொழியில் பீர்க்கங்காய், முருங்கை, கருவேப்பிலை, கொத்தமல்லி, தோழன், கேள்வி போன்ற தமிழ்ச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. 

உலக நாடுகளில் தமிழ் வழிக்கல்வி

தாய்த் தமிழைத் தமிழர்கள் தாங்கள் குடியேறிய நாடுகளிலும் பரவச் செய்துள்ளனர். தமிழ் மொழிக்கென்று கல்வி நிலையங்களும் ஆசிரியர்களும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 1716 ஆம் ஆண்டு ஐரோப்பாவின் பொது மொழியாக இருந்த இலத்தீன் மொழியில், தமிழ் இலக்கண நூல் ஒன்றினை அச்சிட்டனர். அக்காலம் முதல் கிழக்கு ஜெர்மனியில் இருக்கும் ஹல்லே எனும் பல்கலைக் கழகத்தில் தென்னிந்திய வரலாறும், மொழிப் பயிற்சியும் சிறப்புத் துறைகளாக விளங்குகின்றன என்று தனிநாயக அடிகள் குறிப்பிட்டுள்ளார்.  பாரிஸின் தொபின் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பிரிவு உள்ளது. இருபது மாணவியர் தமிழ் கற்கின்றனர். வேற்று மொழியினரான அவர்கள் தமிழ் மொழியை மிகவும் நேசிப்பதாகக் கூறியதை லேனா தமிழ்வாணன் கூறியுள்ளார்.

போலந்தின் மிகத் தொன்மையான பல்கலைக்கழகம் வார்சா. கீழ்த்திசை மொழி, இலக்கியப் பண்பாட்டு ஆய்விற்கான ஓர் உயர் ஆய்வு நிறுவனம் (Oriental Research) இப்பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நிறுவனத்தில் சமஸ்கிருதம், வங்காளம், தமிழ் ஆகிய மொழிகளை ஆய்வதற்கும் கற்றுத் தருவதற்கும் அறிஞர்கள் உள்ளனர். டாக்டர்.இராம சுந்தரம், இந்திரா பார்த்தசாரதி, தி.சு.நடராசன் ஆகியோர் இப்பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி மக்களிடையே தமிழ் உணர்வை வளர்த்துள்ளனர் என்று ஜி.ஜான் சாமுவேல் குறிப்பிட்டுள்ளார்.

முடிவுரை

பயணத்தால் தமிழர் உணவு பண்பாட்டு மாற்றத்திற்கு உட்படும் தன்மைகளைக் கண்டுணர முடிகிறது. மேலை நாட்டில் வாழும் தமிழர்கள் மேலை நாட்டுக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டாலும், திருமண முறையை ஏற்பதில்லை. தமிழர்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்குத் தங்கள் பண்பாட்டை, நாகரிகத்தைப் பரப்புவதோடு, கடல் கடந்தும் புகழ் மணம் பரப்பும் தமிழ்மொழியின் பெருமையை ஆய்ந்துணர முடிகிறது.

அடிக்குறிப்புகள்

1. சாரதா நம்பி ஆரூரன், அலைகடலுக்கு அப்பால், ப.81, கூடல் பப்ளிஷர்ஸ், மதுரை, மு.ப. 1977.

2. ம.பொ.சிவஞானம், மாஸ்கோவிலிருந்து லண்டன் வரை, ப.183, இன்பநிலையம், சென்னை, மு.ப.1972.

3. கல்கி, இலங்கைப் பிரயாணம், ப.126, சின்ன அண்ணாமலைப் பதிப்பகம், சென்னை, மு.ப.1954.

4. ஜான் சாமுவேல், குமரிமுதல் வார்சா வரை, ப.32, ஆசியாவியல் ஆய்வு நிறுவனம், சென்னை, மு.ப.1994.

5. மு. வரதராசன், யான் கண்ட இலங்கை, ப.54, பாரிநிலையம், சென்னை, நா.ப.1963. 

6. மேலது, ப.  51.