மாணிக்கவாசகர் கண்ட பெண்மை
பெண்களின் வழியே பக்தி
“மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே!”
எளிய பொருள்:
மாதேவனாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடும் ஒலி தெருவில் கேட்கிறது. அந்தப் பாடலைக் கேட்டவுடன், ஒரு பெண் இறைஅன்பில் உருகி, தன்னையே மறந்து பரவசத்தில் ஆழ்கிறாள்.
சுருக்கமாக:
இறைவனின் புகழைக் கேட்டவுடன், பெண்ணின் உள்ளம் பக்தியில் உருகி, அவள் தன்னையே மறக்கும் அளவுக்கு இறையன்பில் ஆழ்கிறாள்.
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகப் பாடல்களில் பெண்களின் பங்கு
திருவெம்பாவை • திருவம்மானை • திருப்பொற்சுண்ணம் • திருச்சாழல் • திருக்கோத்தும்பி • திருப்பூவல்லி • திருவுந்தியார் • திருத்தோள்நோக்கம் • திருப்பொன்னூசல்
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில், பெண்களின் உரையாடல்கள், விளையாட்டுகள், நாட்டுப்புற மரபுகள், அன்றாட வாழ்வியல் ஆகியவற்றின் வழியாக சிவபக்தி எளிமையாக வெளிப்படுத்தப்படுகிறது.
இந்த நூலில், அந்தப் பாடல்களின் அடிப்படைக் கருத்துகளை எடுத்துக்கொண்டு, அவற்றை எளிய தமிழில், இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் கவிதை வடிவில் அறிமுகப்படுத்துகிறோம்.
பெண்களின் வாழ்வியல், உரையாடல், விளையாட்டு ஆகியவற்றின் வழியே மாணிக்கவாசகர் வெளிப்படுத்திய ஆன்மீகச் சிந்தனைகளை எளிய முறையில் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதே இந்நூலின் நோக்கம்.
இந்தப் புத்தகம் உருவான தூண்டுகோல்
ஒவ்வொரு புத்தகத்திற்கும் பின்னாலும் ஒரு தூண்டுகோல் இருக்கும். இந்த நூலுக்கும் அப்படியொரு நிகழ்வே தொடக்கமாக அமைந்தது.
ரிப்போர்டர் பவர் இதழில் திருவாசகத் தென்றல் சிவகுமார் அவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அவரை நேர்காணல் செய்வதற்கு முன்பு, அவருடைய சிந்தனைகளையும், அவர் பேசப்போகும் திருவாசகத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
அப்போது எனக்குத் தெரிந்த ஜெயசீலன் சார் என்னிடம் ஒரு முக்கியமான கருத்தைச் சொன்னார்:
“ஒருவரைப் பற்றி நேர்காணல் செய்யப் போகிறீர்கள் என்றால், அவரைப் பற்றியும், அவருடைய பார்வையையும் முதலில் தெரிந்துகொள்ளுங்கள். திருவாசகத்தைப் படித்துவிட்டு அவரிடம் ஒரு கேள்வி கேட்டால், அவர் சொல்லும் பதிலையும் அந்தக் கேள்வியின் ஆழத்தையும் உங்களால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.”
அந்த வார்த்தைகள் எனக்குள் ஒரு புதிய தேடலைத் தொடங்கின.
அதன்பிறகு திருவாசகத்தைப் படிக்கத் தொடங்கினேன். அதன் மகளிர் பகுதிகள் எனது கவனத்தை ஈர்த்தன. பெண்களின் விளையாட்டுகள், உரையாடல்கள், நாட்டுப்புற வழக்கங்கள் ஆகியவற்றின் வழியாக மாணிக்கவாசகர் வெளிப்படுத்திய ஆன்மீகக் கருத்துகளைப் புரிந்துகொள்ள முயன்றேன்.
அப்போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது:
“எனக்கே இதைப் புரிந்துகொள்ள முயற்சி தேவைப்படுகிறதே... இதை எல்லோரும் எளிய தமிழில் புரிந்துகொள்ளும் வகையில் எழுதினால் எப்படி இருக்கும்?”
அந்த எண்ணமே இந்த நூலின் தொடக்கமாக அமைந்தது.
இந்த எண்ணத்தை ரிப்போர்டர் பவர் இதழின் ஆசிரியர் சுரேஷ் சார் அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். அவர்,
“பார்த்துக்கலாம்... பண்ணுங்கம்மா. தாராளமாகப் பண்ணுங்க.”
என்று ஊக்கம் அளித்தார்.
அந்த வார்த்தைகள் எனக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருந்தன. அந்த நேர்காணல் வாய்ப்பும், சுரேஷ் சாரின் ஊக்கமும் இல்லாமல் இருந்திருந்தால், இந்த நூலுக்கான எண்ணம் எனக்குள் உருவாகியிருக்காது. எனவே, இந்த முயற்சியின் முக்கியமான ஆணிவேராக அவரை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
அதன்பிறகு, இந்த நூலை வெளியிடுவது குறித்து மகிழ்ச்சி பதிப்பகத்தின் உரிமையாளர் டாக்டர் மகேந்திரன் சார் அவர்களிடம் பேசினேன். என் எண்ணத்தைப் பகிர்ந்தபோது,
“பண்ணுங்க மேடம்... நான் பண்ணித்தரேன்.”
என்று உற்சாகத்துடன் கூறினார்.
அவருடைய நம்பிக்கையும் ஆதரவும் இந்த நூல் உருவாகும் பயணத்தில் மற்றொரு முக்கியமான படியாக அமைந்தது.
இந்த நூல் எனது தனிப்பட்ட முயற்சி மட்டுமல்ல. ஒரு நேர்காணல், ஒரு நல்ல அறிவுரை, சிலரின் ஊக்கம், ஒரு வாசிப்பனுபவம் ஆகியவை ஒன்றிணைந்து உருவாக்கிய முயற்சி.
திருவாசகத்தைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கிய பயணம், அதன் மகளிர் பகுதிகளை அனைவரும் எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கமாக மாறியது.
திருவாசகத்தின் ஆழத்தை அறிய,
பெண்களின் வழியே ஒரு புதிய பயணம்...
என்றும் உங்களுடன்,
சைலஜா கணேசன்....
பாடல் 1
ஆதியும் அந்தமும் இல்லாத
அரும்பெரும் ஜோதியைப் பாடிடுவோம்...
இறைவன் புகழ் கேட்டவுடன்
இதயம் உருகிடுமே...
கண்ணீர் பெருகிடுமே,
உலக நினைவு மறந்திடுமே,
இறைவன் நினைவிலே
உள்ளம் தன்னை இழந்திடுமே...
பெண்ணின் பக்தி மலர்ந்திடும் போது,
அவள் உள்ளமே இறைவனின் ஆலயமாகிடுமே!
பாடல் 2
பரஞ்சோதியின் மீது பாசம் வைத்து
பகலிரவும் பேசுவேன் என்றாயே...
இன்று மட்டும் ஏன் தோழி
என்னைத் தனியே விட்டாயே?
இறைவன் மீது கொண்ட அன்பை
இகழ்ந்தாலும் விட்டுவிடாதே...
அவன் ஆடும் திருக்கோயில் சென்று
அன்போடு அவனைப் பாடிடுவோம்!
உள்ளத்தில் இறைவன் அன்பு இருந்தால்,
என்னாலும் வாழ்வில் ஒளி பிறக்குமே!