ரோமியோ ஜூலியட் களம் 2

ரோமியோ ஜூலியட் களம் 2

ரோமியோ ஜூலியட் களம் 2

உலகப் புகழ் பெற்ற  ஷேக்ஸ்பியரின் 

Romeo and Juliet Act 2, Prologue

ரோமியோ ஜுலியட் களம் 2( முன்னுரை )

 

பழைய  இச்சை மரணப் படுக்கைக்கு சென்று விட்டது

இப்போது ஒரு புத்தம்  புதிய அரும்பு 

துளிர்விட்டிருக்கிறது. அவ்விடத்தில் 

 

அன்று ரோசலினுக்காக அழுது அரற்றியவன் தான் 

இந்த  ரோமியோ

அவளில்லையென்றால் மரணத்தை அள்ளிக்கொள்வேன்

என்று சபதமெடுத்தவனும் அவன் தான்

இன்றோ ஜுலியட்டின் பேரெழிலில் மதிமயங்கி 

திளைத்துக் கிடக்கிறான்

 

ஜுலியட்டின் அழகுக்கு முன்னால் 

ரோசலின் ஒன்றுமேயில்லை 

என்று தெரிந்து விட்டது இந்த நொடியில்

 

ரோமியோ ஜுலியட்டை நேசிக்கிறான்

ஜுலியட் ரோமியோவை நேசிக்கிறான்

நேசமென்னும் பெருவெளி 

விண்ணென விரிந்து செல்கிறது.

 

என்னுயிர் காதலி 

எதிரியின் மகளாகி விட்டாளே 

என்பது மட்டுமே இப்போது 

ரோமியோவுக்குள் இருக்கும் சிறுகலக்கம் 

 

அங்கே ஜுலியட்டுக்குள்  

காதலென்னும் நோய் புகுந்து 

பசலை நோய் சேர்க்கிறது

பகலை இரவாக்குகிறது

இரவைப் பகலாக்குகிறது

ரோமியோவின் பெயரைச் சொன்னால் 

மரணம் கூட அவளுக்கு தித்திக்கிறது

 

ஜுலியட் அழகிய தேவதை!

கொடிய முள்ளில் குத்தப்பட்டிருந்த காதலின் இரையை

தன் கண்களாலேயே கவர்ந்து சென்று விட்டவள். அவள்

ஆனால் அவளுக்கு தெரியாது 

அய்யோ அவளே 

அந்தக் காதலின் 

இரையாகி விட்டாளென்று

 

அவளுக்கு காதல்

புத்தம் புதிய சிறகை தந்திருக்கிறது

ஆனால் அவளால் பறந்து சென்று 

தன் காதலனை  தரிசிக்க முடியவில்லை

 

ஏன் ?

அவனோ எதிரியின் மகன்

விழியோடு விழி நோக்கி கிடக்க 

அவள் விரும்பினாலும்

காதலின் உளக்கிடக்கையை 

கவிழ்த்து கொட்டிவிட நினைத்தாலும்

முடியவில்லையே 

 

அவனை சந்திக்க இயலவில்லை

முத்தங்கள் பரிமாறிக்கொள்ள முடியவில்லை

 

காதல் பித்து அவர்களின் சொத்தாகிப் போனபின் 

உளறல்களும் சூளுரைகளும் தானே

காதலர்களின் உற்சவங்கள்

 

ஆனால் அய்யோ ! 

இங்கே காதலர்களால் சந்தித்து கொள்ளவே

இயலவில்லையே..

 

துயரமலர் முள்ளைப் பூக்கிறது

 

காதல் என்னும் பேருணர்வு 

அவர்களுக்கு இப்போது சக்தி தருகிறது.

காலம் அவர்களுக்குள்

ஒரு உன்னத சந்திப்பை உண்டாக்கி தருகிறது.

ஆனாலும் அந்த சந்திப்பினால் விளையப் போவது என்ன?

 

தளிர் போன்ற காதலினால் மரணம் என்ற சருகை

வரைவதற்கு பெயர்  தானே  .சந்திப்பு

 

 

 

 

 

 

உலகப் புகழ் பெற்ற 

ஷேக்ஸ்பியரின் 

Romeo and Juliet Act 2,  scene 1 ரோமியோ ஜுலியட் களம் 2 காட்சி 1 

( பின்னிரவில் ஜுலியட்டை சந்திக்க ரோமியோ அவளது கோட்டையின் மதில் சுவரை தாண்டி உள்ளே குதிப்பது அவனை அவன் நண்பர்கள் தேடி வருவது அதையடுத்து ரோமியோ ஜுலியட் சந்திப்பு )

 

ரோமியோ : (  கோட்டை சுவருக்கு முன்னே நின்றபடி )  

               உன் இதயம்   இங்கே  இருக்கும் போது நீ மட்டும்   எவ்விடம் செல்வாய் உடலே ?

               இதயமில்லையோ உனக்கு ?

               உடலே உடலே உன்னை நீ திருப்பு

              சேருமிடம் சென்று சேரவேண்டும் 

               அது தானே உன் உயிரின் மையம்

( ரோமியோ சுவரின் மீது தாவி ஏறி உட்புறம் குதிக்கிறான்  அங்கே பென் வாலியாவும் மெர்குஷியாவும் அவனை தேடி அங்கே வருகிறார்கள்.)

 பென்வாலியா  : ரோமியோ நண்பா ரோமியோ 

 மெர்குஷியா   :  அவனை அழைக்காதே அவன் அதிபுத்திசாலி இந்நேரம் வீட்டில் போய  படுக்கையில் சாய்ந்திருப்பான்

பென்வாலியா  : 

அவன் இந்த வழியாக ஓடி வந்து இந்த தோட்டத்து சுவரை ஒரே தாவாக  தாவிக்குதித்ததை என் கண்களால் கண்டேன் 

மெர்குஷியா நீ அவனை அழைத்துத்தான் பாரேன்

 

மெர்குஷியா   :  

சொல்லிட்டேல்ல கவலையை விடு அவனை இங்க எப்படி வரவழைக்கிறேன் பாரு

முதல்ல   அவனை ஒரு ஆவி கூப்பிடுறது போல  கூப்பிடுறேன்  பாரு

‘’ரோமியோ ,கோமாளி , டேய் முட்டாள்  பைத்திய காரா 

உடனே ஒரு பெருமூச்சைப் போல என் முன்னாடி ஓடி வாடா.

ஒரே ஒரு வார்த்தை ஒரு ரைம் சொல்லுடா போதும் எனக்கு

நான் தான் ரோமியோன்னு சொல்லு  

காதல்ன்னு சொல்லு இல்லை மோதல்ன்னு சொல்லு

டேய் வீனஸ் தேவதைக்கு பிடித்தமான  ஒரு வார்த்தை சொல்லு

அவளுடைய அருமை மகனும் வாரிசுமான 

கண்களற்ற அந்த குபிட்டின் பட்டப்பெயரை சொல்றா

டேய் குபிட்யார் தெரியுமா ?

அவன் மன்மத அம்பை  குறி பார்த்து ஆளுங்க மேல அடிக்கிறதுல கில்லாடி. 

அப்படித்தான் அவன் மன்னன் கோவிட்டோ மேல 

அம்பை எறிஞ்சதுனால  அவன் ஒரு பிச்சைக்காரி மேல காதல்ல விழுந்துட்டான். தெரியுமா ?

டேய் ரோமியோ காது கேட்குதா  ஒன்னும் கேட்கலையா ? 

அட ஒரு சத்தம்  குடுறா இல்லை ஒரு அசைவு  

( சலிப்பாக ) அய்யோ அந்த குரங்கு செத்துப் போச்சு போல இருக்குது 

அதை மறுபடியும் காப்பத்தனும்

( கிண்டலா ) ரோசலினோட அழகிய ஒளி வீசும்  கண்களின் மீது ஆணையா அழைக்கிறேன்

அவளோட உயர்ந்த நெற்றியின் மேல ஆணையா அழைக்கிறேன்.

அவளோட சிவந்த உதடுகளின் மீது ஆணையாக , அவளுடைய அழகிய செதுக்கிய சிற்பம் போன்ற நீளமான கால்களின் மீது ஆணையாக

டேய் அவளுடைய நடுங்கும் துடைகளின் மீது ஆணையாக 

இன்னும் அவளுடைய  அந்தரங்க உறுப்புகளின் மீது ஆணையாக

நான் அழைக்கிறேன். 

நீ உன்னுடைய உண்மையான வடிவத்துல எங்க முன்னால வந்து நில்லு

பென்வாலியா  :

 நீ பேசுறது அவன் காதுல விழுந்ததுன்னா 

அவனுக்கு ரொம்ப கோபம் வரும் 

மெர்குஷியா   :  

இதெற்கெல்லாம் அவனுக்கு கோபம் வராது.  

ஆனால் நான் ரோசலின் படுக்கையறையில் ஒரு வித்தியாசமான பூதத்தை பார்த்தேன்னு சொன்னா 

அவனுக்கு கண்டிப்பா கோபம் வரும். 

இன்னும் அது விடிய விடிய அவளை இன்பம் அனுபவிச்சதுன்னு சொன்னா 

அவனுக்கு பயங்கர கோபம் வரும் . 

ஆனால் நான்  இப்ப ஒன்னும்  தப்பா சொல்லிடலையே 

சும்மா அவன் காதலியோட பெயரைத்தானே சொன்னேன். 

அதுவும் அவனை  இருட்டுக்குள்ளயிருந்து வெளியில கொண்டு வர்றதுக்குத்தான் அப்படி சொன்னேன்

 

பென்வாலியா  : 

சரி வா போகலாம் . இப்போ  அவன் எந்த மரத்துக்குள்ள எங்க  ஒளிஞ்சிகிட்டு இருக்கிறானோ யார் கண்டது ?

இருட்டு தான் அவனுக்கு இப்போ அதிகம் பிடிக்கும். 

ஏன்னா காதலுக்கு கண்ணில்லை. 

அதனால இப்போ அவனுக்கும்  கண்ணில்லை. 

அதனால இருளோட அவன் இணைந்து உறவாடட்டும்

நாம கிளம்பலாம் வா .   

 

மெர்குஷியா   : 

 

 காதல் குருடாக இருந்தால் அதனால் இலக்கை துல்லியமாக தாக்க முடியாது.  

வேண்டுமானால் ரோமியோ ஒரு மெட்லர் மரத்திற்கு கீழ உட்கார்ந்து அவன் காதலை ஒரு மெட்லர் பழமா கற்பனை பண்ணிக்கட்டும்.

ஆனா பெண்கள் தனியா இருக்கும் போது  அந்தப் பழங்களைப் பற்றி நகைச்சுவையா என்ன பேசிக்குவாங்க தெரியுமா ? 

அது அவர்களோட பிறப்புறுப்பு மாதிரியே இருக்குன்னு சொல்லி சிரிப்பாங்க 

அடே ரோமியோ உன்னோட ரோசலின்னும் அந்தப் பழம் போலவே இருக்கனும்னு நான் ஆசைப்படறேன்.

இது எப்படி இருக்கு ? 

அவள் திறந்த ஒரு மெட்லர் கனியா இருக்கட்டும்  நீ அவளுக்குள்ள ஒரு பேரிக்காயா இறங்கிடு

பேரிக்காய் அமைப்பு எப்படி இருக்கும் தெரியும்ல ? 

அதாவது முன்பகுதி மெலிந்து அடிப்பகுதி பெருத்து 

மஞ்சள் அல்லது பச்சை நிறத்துல உள்ளுக்குள்ள வெள்ளையா ..

 

சரி சரி ரோமியோ உனக்கு இவ்வளவு பெரிய  வயலே  மெத்தை தான்  ஆனால்  இங்க படுத்தா எனக்கு சத்தியமா  தூக்கம் வராது. 

நான் என்னோட  சின்னஞ்சிறு படுக்கைக்கு போறேன். வா பென்வாலியோ நாம கிளம்பலாமா ?

 

இருவரும் மறைகிறார்கள்.

  

           

                

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உலகப் புகழ் பெற்ற 

ஷேக்ஸ்பியரின் 

Romeo and Juliet Act 2,  scene 1 ரோமியோ ஜுலியட் களம் 2 காட்சி 3

பாத்திரங்கள் பாதிரியார் பிரையர் லாரன்ஸ்   ,ரோமியோ

இடம். பாதிரியார் அவர்களின்  தேவாலயத்திற்கு முன்னால் )

  

பாதிரியார் பிரையர் லாரன்ஸ்   ( தனக்குள்ளாகவே ) 

வெளுத்த கண்களுடைய காலை 

முகம் சுளிக்கும் இரவினைப் பார்த்து புன்னகை புரிகின்றது.

கிழக்கே குழுமியிருக்கும் மேகங்கள் மீது 

தனது ஒளிக்கிரணத்தை அனுப்பி அவைகளை ஓட்டுகின்றது. 

இருளோ  சாலையை  விட்டு

தள்ளாடியபடியே நடக்கும் குடிகாரனைப் போல

நடந்து  சென்று கொண்டிருக்கிறது. 

 

நான்  நச்சுக் களைகளைம் தேன் சிந்தும் மலர்களையும் பறித்து இந்தக் கூடையை நிரப்ப வேண்டும்,

பூமியே இயற்கையின் கருவறை

அதுவே  அதன் கல்லறையும்

 

கல்லறையில் புதைப்பது தான் கருவறைக்கு திரும்புகிறது. கருப்பையிலிருந்து வளரும் சிசுக்களைப் போல தாவரங்கள் பூமிக்குள்ளிருந்து வளருகின்றன . 

 

ஆனால் அவைகள் மறையும் போது 

மறுபடியும் பூமிக்குள்ளேயே புதைக்கப்படுகின்றன.

 

எண்ணிலா தாவரங்களும் விலங்குகளும் 

பூமியின் கருப்பையிலிருந்து தோன்றியவை தான். இத்தனை குழந்தைகளும் இயற்கையின் மார்பிலிருந்தே  தனது அமுதத்தை உறிஞ்சிக்குடிக்கின்றன. 

 

ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வகையான உணவை இயற்கைத்தாய் தன் மடியில் எப்போதும் வைத்திருக்கிறாள்.   

 

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. 

ஒவ்வொரு  தாவரத்திலும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு கல்லிலும் ஒரு வகையான ஆற்றல் இருக்கிறது

நன்மையில்லாத தீமை  எதுவுமே இப்புவியில் படைக்கப்பட்டதில்லை 

ஒவ்வொன்றிலும் ஒரு நன்மை உண்டு

அது போலவே தவறாக பயன்படுத்தப்படும் நன்மை தீமையாக மாறாமல் எப்போதும் நன்மையாகவே இப்புவியில் இருப்பதில்லை

 

நன்மை தவறாக பயன்படுத்தப்படும் போது  தீமையாகிறது.

எந்த தீமையும் சில நேரம் சரியான செயல்பாட்டின் மூலம்  நன்மையாக மாற்றப்படுகிறது.

 

 ( ஒரு மலரை காட்டி ) இந்த குழந்தைப்பூவிற்குள்ளே குடியிருக்கும் நச்சுக்குள்ளும் ஒரு நல்ல மருத்துவ குணம் உள்ளது.  )

 

இந்த மூலிகையை நீங்கள் முகர்ந்து பார்த்தால் 

உங்கள் உடலையும் உள்ளத்தையும் கிளர்ச்சியூட்டும்.

இதை நீங்கள் சுவைத்துப் பார்த்தால்

உடனே உங்கள் இதயத் துடிப்பை நிறுத்தி விடும் 

இப்படி இரண்டு முரண்பாடுகள் கொண்ட அரசர்கள் 

இந்த மூலிகைக்குள் குடியிருக்கிறார்கள்.

 

இது போலவே நன்மை தீமை என்ற இரண்டு முரண்பாடுகள் கொண்ட குணங்கள்

மனிதன் மனதிலும் குடியிருக்கின்றன.  I

 

தீய சக்தி  அதிகமானால் 

அது புற்று நோயைப் போல பரவி

மனித மூச்சையும்   நிறுத்திவிடுகிறது.

மூலிகையின்  உயிரையும் பறித்து விடுகிறது.

 

சூரியன் தனது சுட்டெரிக்கும் கண்களை திறக்கப் போகிறான்.  

இரவில் ஊறிய பனித்துளிகளை குடிக்கப் போகிறான்

 

அப்போது ரோமியோ உள்ளே நுழைகிறான்.

 

 

ரோமியோ   ::  காலை வணக்கம் தந்தையே  

 

 

பிரியர் லாரன்ஸ் : ( போதகர் )

 

இந்த அதிகாலையிலேயே அழகிய காலை வணக்கம் சொல்லும் இனிய குரல் யாருடையது ? 

ஓ இளைய ரோமியோவா இது

எனது  ஆசிகள் உனதாகட்டும்

 

மகனே காலையிலேயே படுக்கையிலிருந்து 

துள்ளி எழுந்து நீ இங்கே வந்திருக்கிறாயென்றால்

உனக்குள் ஏதோ பிரச்சினை உட்கார்ந்திருக்கிறது

அது உன்னை உறங்கவே விடவில்லை 

 

ஒரு முதியவன் என்றால் அவனுக்குரிய கடமைகள்  அவனை  உறங்கவிடாது.

அது உறக்கத்தை தட்டி எழுப்பி விடும்.

 

ஆனால் ஒரு இளைஞனுக்கு தான் 

இந்தப் பிரச்சினைகள்  எதுவும் இல்லையே

நித்திரை எப்போதும் அவன் படுக்கையை சுற்றி சுற்றி  வளைய வந்து கொண்டிருக்குமே ?

 

தவிரவும் அவனுக்கு கடமைகள் தான்  என்ன ?

கவலைகள் தான்  என்ன ,? 

வேறு சுமைகள் இருக்கின்றனவா  என்ன ?

ஆனாலும் இந்த அதிகாலையிலேயே நீ எழுந்து வந்திருக்கிறாயென்றால் 

உனக்குள் ஏதோ பிரச்சினை உறுத்திக்கொண்டிருக்கிறது

என்று தான் அர்த்தம்

அது  உன்னை உறங்க விடாமல் செய்கிறது

 

அப்படியும் இல்லை என்றால் 

என் இனிய ரோமியோ நீ இரவு முழுவதும் 

தூங்கவேயில்லை

சரிதானே ?

 

 

ரோமியோ  :: 

 

நீங்கள் கடைசியாக சொன்னது முற்றிலும்            உண்மை தந்தையே

நான் உறங்கவில்லை 

ஆனால் ஓய்வெடுத்தேன் 

அது மிக மிக இனிமையான ஓய்வு

               

பிரியர் லாரன்ஸ் :  

கடவுள்  உன் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கட்டும்  

அப்படியென்றால்  நீ ரோஸலினோடு உறங்கினாயா ?

 

ரோமியோ  :: 

 

ரோஸலினோடா ? 

என் புனித தந்தையே 

நான் ரோஸலின் என்ற பெயரையும் 

அது எனக்குத் தந்த சோகத்தையும்

எப்போதோ மறந்து விட்டேன்

 

பிரியர் லாரன்ஸ் :

அருமை மகனே அப்படியானால் நீ

நேற்றிரவு எங்கே இருந்தாய் ?

 

ரோமியோ  :: 

 

நீங்கள் மறுமுறை கேட்பதற்கு முன்பாக நானே சொல்லிவிடுகிறேன் தந்தையே !

நான் என் எதிரியுடன் நேற்று 

ஒரு விருந்தில் கலந்து கொண்டேன்.

அங்கே ஒருவர் என்னை தாக்கினார் 

அவரோ என்னால் தாக்கப்பட்டார்

காயப்பட்டேன்  காயம் ஏற்படுத்தினேன்

 

ஆனால் அருட்தந்தையே

எங்களின் காயத்தை குணமாக்கும் 

புனிதமான அருமருந்து 

உங்களிடம் தான் உள்ளது.

 

இப்போது என் இதயத்தில் 

இம்மி அளவும் வெறுப்பில்லை 

ஏனென்றால் என் எதிரிக்கும் சேர்த்தே

இப்போது நான் உங்களிடம் பிரார்த்திக்கிறேன்.

 

பிரியர் லாரன்ஸ் :

 

எதையும் தெளிவாகப் பேசு மகனே

சுற்றி வளளைத்து கோரும் பாவமன்னிப்பு

உரியவருக்கு   உரிய  நேரத்தில் போய் சேராது

 

ரோமியோ  :: 

 

அப்படியென்றால் நான் நேரடியாகவே 

உண்மையை  சொல்லி விடுகிறேன்.

 

சீமான் கேபுலட்டின் மகள் மீது

நான் காதலில் விழுந்து விட்டேன்

 

ஆம் தந்தையே !

நான் அவளை காதலிக்கிறேன்

அவளும்  என்னை காதலிக்கிறாள்.

நாங்கள் ஏற்கனவே காதலால் 

ஒன்றாய் இணைந்து விட்டோம்

 

எங்கள் ஈருயிரையும் ஓரூயிராக 

புனித பந்தத்தால் நீங்கள் தான் 

இணைத்து வைக்க வேண்டும்.

 

நாங்கள் இருவரும் எங்கே எப்படி 

எவ்வாறு சந்தித்து காதல் வளர்த்தோம் என்பதை உங்களுக்கு நேரம் வரும் போது  உரைப்பேன். 

 

ஆனால் இப்போது நான் உங்களை 

கெஞ்சி கேட்பதெல்லாம் 

இன்றே நீங்கள் எங்கள் திருமணத்தை

நடத்தி வைக்க வேண்டுமென்பது தான் 

 

பிரியர் லாரன்ஸ் : 

 

புனித பிரான்ஸிஸ் தந்தையே !

நம்பமுடியவில்லையே என்ன ஒரு மாற்றம்

அளவின்றி நேசித்த ரோசலினை அதற்குள் மறந்துவிட்டாயா?

 

அப்படியானால் இன்றைய இளைஞர்கள் இதயத்தினால் காதலிப்பதில்லை 

கண்களினால் மட்டும் காதலிக்கிறார்கள் அப்படித்தானே ?

 

அட மாதாவே ! இயேசுவே  ! 

ரோமியோ நீ ரோசலினுக்காக 

அவ்வளவு அழுதாயே 

அது அவ்வளவும்  நடிப்பா ?

 

ரோசலினுக்காக உன் வெளுத்த முகத்திலிருந்து

குடம் குடமாக உப்புக்கண்ணீர் 

மண்ணில் வடிந்ததே அதுவும் உண்மையில்லையா ?

 

நீ விம்மி விம்மி விட்ட பெருமூச்சுக்களின் ஈரத்தை  இன்னும் சூரியனால் கூட சுட்டெரிக்க முடியவில்லை

 

உன்னுடைய புலம்பல்கள் இன்னும்

என் வயாதான செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டேதானிருக்கின்றன

 

ஏன் இன்னும் உன் இமைகளில் 

நீ அழுத கண்ணீரின் ஈரம் படிந்துதான் இருக்கின்றது

அது இன்னும் அடித்துச் செல்லப்படவில்லை

நீ உன்னை இன்னும் மறக்கவில்லையென்றால் 

இன்னும் உன் துயரத்தையும் நீ மறந்திருக்க மாட்டாய்

 

அப்படியென்றால் நீ ரோசலினுக்காக 

இன்னும் துன்பத்தை அனுபவிப்பாய்,

அதற்குள் நீ அவளை மறந்துவிட்டாயா ?

 

அப்படியென்றால் நான் சொல்வது இதுதான்

பலவீனமான ஆண்களிடம்  

பெண்கள் ஒரு போதும் 

விசுவாசமாக இருக்கமாட்டார்கள்.

 

ரோமியோ  :: 

 

நீங்கள் தானே நான் ரோசலினை காதலித்ததற்காக அடிக்கடி என்னை திட்டினீர்கள்

 

பிரியர் லாரன்ஸ் : 

நான் உன்னை திட்டியது உன்னுடைய  பிடிவாதத்திற்குத்தான்

உண்மையான காதலுக்கு அல்லல

நான் புதைக்க சொன்னது 

கல்லறையில் அல்ல 

அதுவும் 

ஒரு காதலை புதைத்து விட்டு

இன்னொரு காதலை வளர்ப்பதற்கு 

அல்லவே அல்ல

 

ரோமியோ  :: 

தந்தையே நீங்கள் என்னை 

அதிகமாக திட்டவேண்டாம்

நான் காதலிப்பவள் இப்போது 

என்னையும் காதலிக்கிறாள் 

ஆனால் ரோசலின் அப்படி இல்லையே

 

பிரியர் லாரன்ஸ் : 

 

ஓ அப்படியோ அந்த ரோசலின் உன் காதல் உண்மையானதில்லையென்று புரிந்திருக்கிறாள்.

 

உன் காதலின் அர்த்தம் என்னவென்று 

அவளுக்கு நன்றாக புரிந்திருக்கிறது

சரி சரி நீ என்னோடு வா

ஆனாலும் நான் உதவித்தான் ஆகவேண்டும் 

 

ரோமியோ  :: 

 

அப்படியென்றால் தந்தையே

நாம்  விரைவாக செல்லலாம்

உடனடியாக 

திருமணத்தை முடித்தாக வேண்டும்

 

பிரியர் லாரன்ஸ் : 

 

புத்திசாலிகள்  எப்போதும் 

மெதுவாகத்தான் போவார்கள்

வேகமாக ஓடுபவர்கள் தான் போய் 

விரைவாக  மோதிக்கொள்வார்கள். 

 

(அவர்கள் இருவரும்  நடந்து  மறைகிறார்கள்  )

 

மூலம்                     : ஷேக்ஸ்பியர் 

மொழி பெயர்ப்பு :         :  தங்கேஸ்