இலக்கியங்களில் விருந்தோம்பல் பண்பு..! 020

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

இலக்கியங்களில் விருந்தோம்பல் பண்பு..! 020

இலக்கியங்களில் விருந்தோம்பல் பண்பு

 

முனைவர். வ. ஹரிஹரன், 

இணைப்பேராசியர் தமிழ்த்துறை, 

ப.மு. தேவர் கல்லூரி, 

மேலநீலிதநல்லூர் - 627 953.

மனிதனுடைய தேவைகளுள் இன்றியமையாத அம்சங்கள் மூன்று, உணவு, உடை, உறையுள். 

“வயிற்றுக்காக மனுசனிங்கே 

கயிற்றிலாடுறான் பாரு ஆடி முடிச்சு 

இறங்கி வந்தால் அப்புறமா தான் சோறு” (வாலி, ‘நல்லநேரம்’)

என்று திரையிசைப் பாடல் உழைத்துச் சம்பாதிக்கும் மனிதர்கள் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்;துள்ளது. 

ஒவ்வொரு மனிதனும் அரைசாண் வயிற்றுக்காக அன்றாடம் அரும்பாடு படுகிறான். சிலருக்கு உழைத்தால்தான் கிடைக்கிறது. சிலருக்கு உழைக்காமலேயே கிடைக்கிறது. பலவழிகளில் உணவுப் பகிர்வு நடைபெறுகிறது. ‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்’ என்று ஒரு பழமொழி நாட்டாரிடையே இன்றும் வழக்கில் உள்ளது. 

‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதற்கேற்ப உணவையும் அளவாகத்தான் உண்ண வேண்டும். ‘உணவே மருந்து’ என்று ஊடகங்களில் பேசுகிறார்கள். உணவை மருந்தாக உண்ணாவிட்டால், மருந்து மாத்திரைகளையே உணவாக உண்ணும் நிலை ஏற்படும். உணவை விருந்து உபசாரத்தின் மூலம் உண்பது தமிழர் பண்பாடு. அதற்குப் பெயர் ‘விருந்தோம்பல்’. விருந்தோம்பல் குறித்தும் உணவு உண்ணும் முறை குறித்தும் நம் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பதிவுகளை இக்கட்டுரையில் காணலாம். 

விருந்தோம்பல் :

தமிழ் இலக்கியங்கள் நண்பர்கள், உற்றார், உறவினர்கள் மட்டுமல்ல நம்மைப் பசியுடன் அணுகும் நமக்குத் தெரியாத மனிதர்களுக்கும் விருந்தோம்புதல் சிறந்த பண்பாடு என்று தம் செய்யுட்களில் வலியுறுத்தி வருகின்றன. ஐயன் வள்ளுவன் ‘விருந்தோம்பல்’ என்று ஒரு அதிகாரம் வகுத்துள்ளார். 

‘இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 

 வேளாண்மை செய்தற் பொருட்டு’ (குறள் : 81)

வாழ்க்கையில் உழைத்துச் சம்பாதித்துப் பொருள் சேர்த்து மனைவியுடன் இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் சிலரிடம் விருந்தினரை உபசரித்து உதவி செய்வதே ஆகும் என்கிறார் வள்ளுவர். தொடர்ந்து பத்து குறட்பாக்களில் விருந்தோம்பலையே எடுத்தியம்புகிறார். இவ்வாறு மேற்கொள்ளும் விருந்திற்கு யாரும் வந்து எப்பொழுதும் சாப்பிடுவார்களா?! என்றால் அது இல்லை. 

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து 

நோக்கக் குழையும் விருந்து” (குறள் : 90)

உண்மையிலேயே மலர்ந்த முகத்துடன் உபசரித்தால் மட்டுமே விருந்தினர் வந்து உங்கள் விருந்தை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். 

நடைமுறை வாழ்க்கையில், திருமணப் பத்திரிக்கை கொடுக்கும்போதே ‘முதல் நாளே வந்திருங்க, கல்யாணம் முடிஞ்ச மறுநாள் மறுவீட்டுச் சாப்பாடும் இருக்கு அவசியம் வந்து குடும்பத்தோட கலந்துக்குங்க’ என்று தம்பதி சமேதராய் பத்திரிகை கொடுத்து அழைப்பது மரபு. 

மணமக்களை வாழ்த்தி விட்டுச் செல்பவர்களிடம் மணமக்கள் வீட்டார் ‘இருந்து அவசியம் சாப்பிட்டு விட்டுப் போங்க’ என்றும், ‘நாளை மறுவீட்டுக்கு வந்திடுங்க’ என்றும் உபசரிப்பது வழக்கம். திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் வீட்டுத் திருமணத்தின் மறுநாள் மறுவீட்டுச் சாப்பாட்டில் சொதிக்குழம்பு, இஞ்சி துவையல், உருளைகிழங்கு சிப்ஸ் சிறப்பு. குமரி மாவட்டத்தில் பால் பாயாசம், பருப்பு பாயாசம், பழங்கள் பாயாசம், சேமியா பாயாசம், அடைபிரதமன் என்று ஐந்து வகை பாயாசங்கள் பரிமாறப்படும். 

ஈகைக் கோட்பாடு 

“தமிழர்களின் மிக உயரிய பண்புகளுள் ஒன்றான விருந்தோம்பல் என்பது ஈகைக்கோட்பாட்டின் ஒரு வெளியீடு”1 என்று அறிஞர் க.ப. அறவாணன் குறிப்பிடுகிறார்.

“…முன்பின் அறிந்தவரை வரவேற்பது ஒருவகை, அறியாதோரை வரவேற்பது பிறிதொரு முறை. இரண்டாவது வகையான விருந்தோம்பல் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகிறது என்று”2 மு.வ. திருக்குறளுக்கு விளக்கம் தரும் போது கூறுகிறார். 

பெரியபுராணத்தில் அறிமுகமில்லாத சிவனடியார் இல்லம் தேடிவந்து குழந்தையை வெட்டிக்கறி சமைத்துத் தருமாறு பெற்றோரை வேண்டுகிறார். சிறுத்தொண்டரும் அவர் துணைவியாரும் தம் குழந்தையைத் தாமே வெட்டிக் கறி சமைத்துப் படைக்கின்றனர். பிறிதோர் இடத்தில் பூம்புகாரைச் சேர்ந்த இயற்பகை நாயனார் தன் மனைவியையே விருந்தோம்பும முகமாகத் தருமாறு ஒரு சிவனடியார் வேண்டுவதாகச் செய்தி பதிவாகியுள்ளது. 

விவிலியத்தில் விருந்தோம்பல் 

வேதாகம நூலான விவிலியத்தில் விருந்தோம்பும் பண்பு பதிவாகியுள்ளது. இது ஒரு மதநூலாக மட்டுமல்ல பண்டைக்கால மக்களின் பழக்கவழக்கங்களையும் பண்பாட்டையும் பிரதிபலித்தது என்றும் கொள்ளலாம். விவிலியத்தில் முதல் நாயகன் ஏசுபிரான் இறைமகனாகத் தோன்றி மக்களுக்கு அன்பைப் போதிக்க வந்த அவதார புருசனாகக் காட்சி தருகிறார். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதே விவிலியத்தின் உட்கருத்து. விருந்து புரந்தரும் பேறு பெற்றவர்கள் ஆபிரகாமும் அவருடைய இல்லத்தரசி சாராளும்தான். இறைத்தூதர்கள் விருந்தினராக வருகிறார்கள். ஓர்நாள் நண்பகல் ஆபிரகாம் கானான் நாட்டில் ஒரு கூடாரத்தில் இருக்கின்றார். இறைத்தூதர்கள் மூவர் வருகிறார்கள். ஆபிரகாம் மனமுவந்து அவர்களை வரவேற்று மனைவி சாராளுடன் விருந்தோம்பி அனுப்பி வைக்கின்றார்.3 

சங்க இலக்கியங்களில் விருந்தோம்பல் 

“சங்ககால வாழ்க்கையை நிலம் மற்றும் திணை அடிப்படையில் நோக்கினால் தமிழ்ச் சமுதாயம் முதலில் குறிஞ்சி நிலத்திலும், பிறகு முல்லை நிலத்திலும், பிறகு நெய்தல் நிலத்திலும், மருத நிலத்திலும் வாழ்ந்து வந்த முறை வெளிப்படுகிறது”4 என்று கு.மா. பாலசுப்பிரமணியம் தன் நூலில் குறிப்பிடுகிறார். 

இந்தக் கருத்து அடிப்படையில் பார்த்தாலும், சங்ககால நாகரீக வாழ்வைக் குறிஞ்சி நிலத்திலிருந்து தொடங்கிய போதிலும் முல்லை நிலக் காலக்கட்டத்தில் மனிதனுடைய வாழ்வு ஆடுமாடுகள் மேய்ப்பதிலும் இயற்கைப் பொருட்களைப் பயிரிடுவதிலும் ஆர்வங்காட்டத் தொடங்குகிறது. 

“உணவுப் பொருட்களைச் சேகரிக்கும் பருவத்திலிருந்து அவற்றை உற்பத்தி செய்யும் பருவத்திற்கு மனித சமுதாயம் நகர்ந்தபோது நிலவுடைமை தோன்றியது”5 என்பது, க.ப.அறவாணன் கூற்று.

மருதநில காலக்கட்டம் வந்த பின் விருந்தோம்பும் பண்பு சிறப்புற்றிருப்பதைக் காணமுடிகிறது. இல்லறத்தில் தலையாய கடமையாக வேளாண்மை மாந்தருக்கே உரிய ஒன்றாக விருந்தோம்பல் இருந்திருக்கிறது. 

கணவன் மனைவி ஆகியோர் இல்லறம் மேற்கொள்ளும் போது இல் ூ அறம் எனப்பகுப்பதால் ‘இல்’ என்ற பதம் இல்லத்தையும், ‘அறம்’ என்ற பதம் விருந்தோம்பலையும் குறிக்கும். 

“நான்கு வகை நிலங்களில் மனிதன் வேளாண்மையில் சிறந்து விளங்கிய இடம் மருத நிலப்பகுதியாம். இப்பகுதியில் ஆற்றுநீரைக் கொண்டு மனிதன் விவசாயம் செய்து வந்துள்ளமையால் நிலத்தில் விவசாயம் பெருகப் பொருளாதாரத்தில் உயர்ந்து விளங்கியுள்ளான். இப்பொருளாதாரத்தைத் தான் மட்டும் நுகராமல் தன்னை நாடி வந்தோருக்கும் கொடுத்து உதவியுள்ளான். இந்த இரக்க உணர்வின் காரணமாக வேளாளர் என்ற சொல், ‘ஈகையுடையார்’ என்னும் பெயரில் வழங்கிவரலாயிற்று என்றும் கூறப்படுகிறது. எனவே, விருந்தோம்பல் குணம் வேளாளர்க்கே உரிய ஒரு குணமாகவும் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது”.6 

“வேளாளரல்லாத பிறர், பிறர்க்கு உதவி செய்தல் அரிதாயிருக்கின்றது. எனவேதான் ஈகையும் விருந்தோம்பலும் வேளாளர்க்கே சிறந்தனவாக வைத்து நூல்கள் பின்னப்பட்டுள்ளன”7 என்ற அறிஞர் மறைமலையடிகள் கூற்று நோக்கத் தக்கது. இத்தகைய கருத்துக்களில் இருந்து விருந்தோம்பல் என்ற செயல் வேளாண்மையில் சிறந்து விளங்கிய மருதநில பகுதியில் செயல் வடிவம் பெற்றிருக்கலாம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய விருந்து கணவன் மனைவியரிடையே ஏற்படுகின்ற ஊடலைத் தீர்க்கிற வாயில்களுள் ஒன்றாகவும் கருதப்பட்டுள்ளது. 

பதினென்கீழ்க்கணக்கு :

“உழவர்க்கு அழகு இங்கு உழுது ஊண் விரும்பல்” (வெற்றி வேட்கை : 7) 

நிலத்தை உழுது பயிரிட்டு அதனால் விளையும் தானியங்களைப் பிறருக்கு அளித்துத் தாமும் உண்ண விரும்புதலே உழவர்க்கு அழகு என்று வெற்றி வேட்கை எடுத்தியம்புகிறது. 

“உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்” (வெற்றி வேட்கை : 10)

உணவைத் தான் மட்டும் உண்ணாமல் விருந்தினரோடு கூடி மகிழ்ந்து உண்ணுதலே என்றும் சொல்கிறது. 

“உண்டி செய்வோர்க்கு உறுபிணி எளிது” (முதுமொழிக்காஞ்சி : 7) 

‘உண்டி’ என்று சொல்லப்படுவது மிகுதியான உணவு, ‘உறுபிணி’ என்பது அளவிடமுடியாத நோய், உணவை உண்ணும் பொழுது, அளவு அறிந்து உண்ண வேண்டும். அளவிறந்து உண்டால் அது செறியாமற் போகும். உண்போருக்கு மிகுந்த நோயை உண்டுபண்ணும். எனவே, உணவை அளவுக்கு மேல் உண்பவர்க்கு உறுபிணி வந்து சேரும் எனும் கருத்தை முதுமொழிக் காஞ்சி வலியுறுத்துகிறது. 

‘உண்பது நாழி, உடுப்பவை இரண்டே’ என்ற புறநானூற்றுப் பாடல் நக்கீரர் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் உடுத்தும் ஆடைகள் குறைந்த அளவு இரண்டேயாகும். ஒன்று அரையில் இருப்பது, மற்றொன்று உடலின்மேல் போர்த்திக் கொள்ளும் ஆடை. நல்ல ஆடைகள் உடுத்தினால் பிறரால் மதிக்கப்படுவான். அவ்வாறின்றி இரண்டு ஆடைகள் உடுத்தாமல் வறுமையோடு இருப்பவர்கள் வாழ்க்கை பிறர் மதிக்கப்படாத துன்பத்தைத் தரும் என்று இன்னா நாற்பது பின்வரும் வரிகளில் வலியுறுத்துகிறது. 

“பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னர் 

ஆர்த்த மனைவி அடங்காமை நன்கு இன்னர் 

பார்த்து இல் புடைவை உடை இன்னா, ஆங்கு இன்னர்

காப்பாற்றா வேந்தன் உலகு” (இன்னாநாற்பது : 2)  

‘வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா’ (இன்னாநாற்பது : 12)

என்ற வரியிலிருந்து விலங்குகளை வலைவிரித்துக் கொன்று உயிர்வாழ்தல் பாவச் செயல் என்பது உணர்த்தப்படுகிறது. 

‘பாத்துண்ணல் இல்லார் உழைத்துச் சென்று உணல் இன்னா” 

(இன்னாநாற்பது : 21)

தம்மிடத்துள்ள பொருள்களைப் பங்கிட்டுப் பிறருக்குக் கொடுத்துத் தாமும் உண்ணும் இயல்புடையோரிடம் சென்று அவர்தம் உணவை அவரோடு சேர்ந்து உண்ணுதல் இன்பத்தைத் தரும், இத்தகு இயல்பில்லாதவர்களிடம் சென்று உண்ணுதல் மகிழ்வை ஒருபோதும் தராது, என்ற பொருள் புலனாகிறது. 

“ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா” (மேலது : 22)

எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் உடையவராய் அவற்றைப் போற்றிக் காத்தல் சிறந்த அறமாகும். மாறாக, அவற்றிற்குத் துன்பம் செய்தலும், அவற்றைக் கொல்லுதலும் உணவாக உண்ணுதலும் பாவச் செயல்களாகும். எனவே, பிற உயிரின் உடலை உணவாக உண்டு தன் உடலை வளர்த்தல் இழிசெயலாகும். 

“வருமனை பார்த்து இருந்து ஊண் இன்னா” (மேலது : 36) 

இதன் பொருளாவது, ஒருவர் தம்முடைய வீட்டில் இருந்து தம்முடைய பொருளாகிய உணவை உண்ணுதல் இனிது. பிறருடைய இல்லத்திற்குச் சென்று அவருடைய சமய சந்தர்ப்பங்களைப் பார்த்துக் காத்திருந்து அவர் தரும் உணவு உண்பது சிறப்புடையதாகாது. எனவே, தாம் சென்ற வீட்டினரை எதிர்பார்த்திருந்து அவர் தரும் உணவை உண்ணுதலே இன்பத்தைத் தராததாகும். 

“ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே” 

(இனியவை நாற்பது : 4)

தன் உடலை வளர்ப்பதாகப் பிற உயிர்களைக் கொன்று உண்பது பாவச் செயலாகும். 

“வித்துக் குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே” (இனியவை நாற்பது : 40)

வேளாண் தொழில் செய்வோர் உழுது விளைவித்து பிற உயிர்களுக்கு உண்டி கொடுப்போராவர். இத்தகையோர் தம் ஊரில், தம் வீட்டில், தம் நிலத்தில் விளைந்த உணவை உற்றார் உறவினருடன் கூடி உண்டு வாழ்தல் இன்பம் தரும். ஆனால் எவ்வளவு வறுமை வந்த போதிலும் விதைக்கென வைத்திருக்கும் நெல்லைக் குற்றி உழவர்கள் உண்ணமாட்டார்கள். 

தொகுப்புரை 

 இவ்வாறாகத் தமிழ் இலக்கியங்களில் தமிழர்களின் தலையாய பண்பாகிய விருந்தோம்பல் பல்வேறு இலக்கியங்களின் வரிகள் மூலம் மக்கள் வாழ்வியலைப் படம்பிடிப்பதாக அமைந்துள்ளது. 

 ‘விருந்திருக்க உண்ணான் வேளாளன்’ என்ற வாக்கிற்கிணங்க ஐவகை நிலங்களில் மருத நிலப்பாடல்களில் வேளாளன் விருந்தோம்பும் திறன் செயல்வடிவம் பெறுகிறது. 

 வெற்றி வேட்கை, முதுமொழிக்காஞ்சி, இனியவை நாற்பது, இன்னா நாற்பது இன்ன பிற செய்யுட்கள் சான்றாகக் காட்டப் பெற்றுள்ளன. 

 பண்டைத்தமிழரின் பண்பாட்டு மரபான விருந்தோம்பல், உணவுப் பழக்கம் இவற்றை இனங்காணும் முயற்சி இக்கட்டுரையாகும். 

அடிக்குறிப்புகள் : 

1. க.ப. அறவாணன், தமிழ்ப்பண்பாடு, ப.11

2. மு.வரதராசன், திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் ப.372.

3. பழைய ஏற்பாடு, ஆதியாகமம் 18:1-8

4. கு.மா. பாலசுப்பிரமணியம், பண்டைத்தழிழ் சமுதாய வளர்ச்சி, ப.1

5. க.ப.அறவாணன், தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள், ப.80 

6. ஆ. ஏகாம்பரம், தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பலின் தோற்றம், ப.113.

7. மறைமலையடிகள், வேளாளர் நாகரிகம், ப.2.