நான் வியக்கும் பெண் ஆளுமைகள் 018

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

நான் வியக்கும் பெண் ஆளுமைகள் 018

நான் வியக்கும் பெண் ஆளுமைகள்

குறிப்புச் சட்டகம்:

1. முன்னுரை
2.ஜான்சிராணி
3.ஜெயலலிதா
4.மாளவிகா
5.முடிவுரை

முன்னுரை:
       மானுட குலத்தைப் படைப்பவள் பெண். மானுடம் காக்கப் பிறந்தவள் பெண்.சர்வ வல்லமை பெற்றவள் பெண்.சகல உலகத்தையும் 
ஆள்பவளும் பெண். ஆம். "பெண் என்பவள் அடக்கம் நிறைந்தவள் மட்டுமல்ல,அவள் ஆளுமை மிக்கவள்".    "பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
 எட்டும் அறிவினில் ஆணுக்கு  இங்கே பெண் இளைப்பிள்ளை காண் "என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப இன்று அனைத்துத் துறைகளிலும் ஆளுமை மிக்கவர்களாக விளங்குகின்றனர் நம் நாட்டுப் பெண்கள். அவர்களுள் ஒரு சிலரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஜான்சிராணி:
     1857 ஆம் ஆண்டு நடந்த முதல் இந்திய சுதந்திரப் போரில், இந்தியாவில் ஆங்கிலேயரின் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக கொதித்து எழுந்த மக்களின் முன்னோடியாக கருதப்படுபவர் ஜான்சி ராணி. நாட்டை ஆளும் ஒரு மன்னனுக்கு நேரடி வாரிசு இல்லையெனில், அந்த நாடு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வந்த ஆங்கிலேயர்கள்,
கணவனை இழந்து வளர்ப்புக் குழந்தையோடு இருந்த ஜான்சியின் நாட்டைக் கைப்பற்ற எண்ணினர். மேலும் 60 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக கொடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி கூறினர். ஜான்சி ராணி, அடிபணிய மறுத்து தமது படைகளோடு ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார். இறுதியில் வீர மரணத்தைத் தழுவினார். இவரது வீரத்தை எண்ணியே, அன்னியரை எதிர்க்க நேதாஜி உருவாக்கிய பெண்கள் ராணுவ படைக்கு , 'ஜான்சி ராணி படை' என பெயரிட்டார் . என்னே ஜான்சி ராணியின் ஆளுமை! இவரது ஆளுமையை வைத்து ஒரு கவிதை.


தன் சேயினை சேலையால் உடன் இணைத்து, 
வேகக் குதிரையில் பறந்தாள் வாளெடுத்து, வந்த எதிரியை வீழ்த்தினாள்
போர் தொடுத்து, 
அவள் செயலை மனதில் நீ நிறுத்து,
வன்கொடுமை நேர்ந்தால் இதை பயன்படுத்தது.
 என்ற வரிகள் பெண்களுக்கு ஆளுமை குணத்தை விதைக்கிறது.

ஜெயலலிதா:
     தமிழ்நாட்டில் ஆளுமை என்றவுடன், நம் நினைவுக்கு வருபவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தான்.'உங்களால் நான் உங்களுக்காகவே நான்' என்ற ஒற்றை வரியில் நம்மை கட்டிப்போட்டவர் தான் 
அம்மா ஜெயலலிதா அவர்கள். இவர்கள் அரசியலில் மட்டுமல்ல, வெள்ளி திரையிலும் மிகுந்த ஆளுமை மிக்கவராகவே இருந்திருக்கிறார். இவரது இவ்விரு ஆளுமைத் திறன்களையும் கவிஞர் வாலி அவர்கள் எழுதிய ஒற்றை கவிதை மூலம் சொல்லிவிடலாம். இதோ அந்த கவிதை...

 என் இதயத்தாயே,           இந்தியா புகழும் சந்தியா மகளே,
   உங்கள் உள்ளம் ஒரு 'வெண்ணிற ஆடை', 
    நீங்கள் அன்புக்கு மட்டுமே 'அடிமைப்பெண்',
   உங்கள் அரசியல் ஆசான் 'ஆயிரத்தில் ஒருவன்',

  உம் வாய்மொழியே எமக்கு 'அரச கட்டளை',
  நீங்கள் வரும் வரையில் நம் நாடு 'திக்குத் தெரியாத காட்டில்', 
  நீங்கள் வந்த பிறகே புலர்ந்தது 'புதிய பூமி',
  ஏழைகள் வாழ்வில் நீங்கள் ஒரு 
'ஒளி விளக்கு',
   'நான்' என்ற எண்ணம் இல்லாதவர் நீங்கள்,
  நல்லோர்க்கு நீராகவும், தீயோர்க்கு நெருப்பாகவும் இருப்பதால், நீங்களே 'நீரும் நெருப்பும்',

  எவரும் உங்கள் நிழலில் இருக்கும் வரை,
 'ராஜா வீட்டுப் பிள்ளை',
  விலகிப் போனால், 'அனாதை ஆனந்தன்',
  உங்கள் கை, ஏந்திய கைகளுக்கெல்லாம் 'அன்னமிட்ட கை',
   அதனால் தான் உங்கள் அரசுத் தொட்டில்களுக்கு பிள்ளைகள் வருகின்றன 
'அன்பைத் தேடி'
   உங்களுக்கும் சோதனைகள் வரலாம், 'சவாலே சமாளி',
   என்றும் உங்கள் காவலில் நிற்பாள் 'ஆதிபராசக்தி'.
      இந்த கவிதையில், அம்மா அவர்கள் நடித்த படங்களின் பெயர்களை வைத்து அவர்களின் ஆளுமைகளைச் சொல்லி இருப்பார் கவிஞர் வாலி.
  'அம்மா', என அன்போடு அழைக்கப்பட்ட அம்மையார் அவர்கள், இந்த உலகை விட்டு சென்றாலும் கூட நம் இதயங்களை இன்னும் ஆட்சி செய்து கொண்டு தான் இருக்கிறார். இவரின் ஆளுமையைப் பார்த்து என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

மாளவிகா:
      CCD கபே காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த் அவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு தனக்கு இருந்த 7200 கோடி ரூபாய் கடன் சுமைக்காக தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டு இவ்வுலகை விட்டு சென்றுவிட்டார். பின் அவரது மனைவியான மாளவிகா அவர்கள், கணவனை இழந்த துக்கத்தை மனதில் ஒரு புறம் வைத்துக் கொண்டு, நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நிலையை எண்ணிப் பார்த்தார். பின் நிறுவனத்தின் சிஇஓ வாக பதவியேற்று கடன் கொடுத்தவர்களிடம் கடனை  அடைக்க கால அவகாசம் வேண்டி கடிதம் எழுதினார். நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தினார். என்ன ஒரு ஆச்சரியம்! ஒரு ஆண்டிலேயே 3100 கோடி ரூபாய் கடனை அடைத்தார். நினைக்கும் போதே உடலில் மயிர் கூச்சல் ஏற்படுகிறது. அவரது ஆளுமையை நினைக்கும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

முடிவுரை:
    "தொட்டிலை ஆட்டும் கை,
தொல்உலகை 
ஆளும்
 கை",
என்ற பாரதியாரின் வரிகளாக பெண்களின் ஆளுமை உலகில் பரவத் தொடங்கி விட்டது. பெண் என்பவள் ,"கூடிக் கலையும் காக கூட்டம் அல்ல, அவள் கூடிப் பொழியும் மேகக் கூட்டம்" என்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறது. பெண் என்பவள் ஆடவரின் கனவில் வரும், கதாபாத்திரம் மட்டுமல்ல. அகிலம் காக்க வந்த அட்சயப் பாத்திரம்.
உணர்வோம் தெளிவோம்

சு.உஷா,
திருவண்ணாமலை.