மகிழ்ச்சி FM உலக வானொலி தினம் - கவிச் செம்மல் விருது கவிதை போட்டி -

உலக வானொலி தினம் கவிதைகள்

மகிழ்ச்சி FM உலக வானொலி தினம் - கவிச் செம்மல் விருது  கவிதை போட்டி -

மகிழ்ச்சி FM உலக வானொலி தினம் - கவிச் செம்மல் விருது  கவிதை போட்டி - "காற்றின் மொழி"

001. காற்றின் மொழி 

 

கடினமான வேளையைக் கூட

காற்றின் மூலம் லேசாக மாற்றும்  கனிவு மொழி

மனச்சோர்வு ஏற்படாமல் - நம்மை

மகிழ்ச்சியுடன் சேர்க்கும் மென்மை மொழி

இதயத்தின் உன்னத உணர்வை - தன்

இன்னிசையால் நிரப்பும் இனிய மொழி

ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நிகழ்ச்சி - அது

அனைவர் நெஞ்சிலும் மகிழ்ச்சி என உணர்த்திய உன்னத மொழி

பேருந்தில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் முதல்

வீட்டில் ஓய்வெடுக்கும் முதியவர்கள் வரை

ஒருமைப்பாட்டுடன் இருக்க வைக்கும் அதிசய மொழி

வாழ்க்கையில் மேடு பள்ளம் வரும் என்பதனை

வாழ்வாதாரத்துடன் காட்டிய வாழ்வியல் மொழி

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை

அனைவருக்கும் பிடித்த மகிழ்ச்சி மொழி

எங்கள் தேவை என்னவென்று நாங்கள்

அறிந்து பதிவிறக்கம் செய்யும் முன்

நான் இருக்கிறேன் என்று கூறும் நம்பிக்கை மொழி

அன்பான வார்த்தைகள் முதல் ஆரவாரமான பாடல்கள் வரை

அனைவரிடமும் முதலில் சேர்க்கும் முதல் மொழி

உலகில் வான் உள்ள வரை

காற்றுள்ள வரைஅழியாத புகழ்கொண்ட

வானொலிநம் 'காற்றின் மொழி'

 

திருமதி.ரா..அபிராமி,

சென்னை.

 

 

002. காற்றின் மொழி

தொலைகாட்சி இல்லாத வீடுகளில் உன்னாட்சி

காற்றின் அலைவரிசையில் உன் நாதம்

பணி செய்யும் இடங்களில் கீதமாய் ஒலிப்பாய்

பணியின் சுமையை  சுகமாக்கி தருவாய்

உலகின் நடப்புகளை ஒலியாய் பாடியே

செவிகளில் தேனாய் ஒலித்து சிணுங்குவாய்

அருகிலே அமர்ந்து தோழனாக தோள்கொடுப்பாய்

எங்கு சென்றிடினும் எளிதாக வருவாய்

காற்றின் நாதமாய் எங்கும் இசைத்திடுவாய்

கவலைகளை பறக்கவிட்டு கானம்பாட வைப்பாய்

எளியோரின் வீட்டிலே எளிதாய் பாடும்

அமுத சுரபியாய் அட்சய பாத்திரமானாய்

இன்று அரிதாகி போனாலும் உன்போலில்லை

நவீன வளர்ச்சியால்  வாழ்க்கை  இனிமையாகவில்லை

எங்கள் மனதிலே நீங்கா நாதமாய்

என்றும் நீயே நிறைந்திருக்கிறாய்

 

சி. சங்கீதா கிருஷ்ணகிரி

 

003.காற்றின் மொழி

 

வானொலி ஸ்நேகிதி

வான் சிந்தும் கனமழையில் இணைந்தே சொல்லும்..

இசை மழையில் நனைந்தே செல்லும்

இதயம் ஆளும் தேனிசை தென்றலும்..

தேவாரம் பாடும் நாளெல்லாம்

மலர்ந்திடும் புன்னகையில் முகம்..

காற்றின் மொழியறிந்து காதலாய்

காதில் ஒலிக்கும் என் இனிய இசையே..

தேனமுத கானமும் தெவிட்டாத இன்பமும்

கேட்டுப் பெறுவதில்

இசையும் மனமும் இசைக்கும்..

வானொலியின் வாரிசாய் வந்தவள்

நான் வாழ்த்துக்களோடு

வாசித்துவிட்டு செல்லும்..

அலைவரிசையில் அணிவகுப்பாய்

வந்தமர்ந்தவள் நான்..

உலகங்கள் காணாத

காவியங்களையும்

ஒலிச்சித்திரமும்

ஒலி நாடாவும் கேட்டே

வளர்ந்தவள் நான்..

ஆகாச வாணியின்

செய்தியின் வாசிப்பில் அன்று உணர்த்திய

அந்த சொந்த குரலின் ஆயுசும் பெற்றிருக்கும்..

 

கவிஞர்.கவிந்தளிர்.பா.பிரபா.கோவை

 

004. காற்றின் மொழி

முதன்முதலாய் நீ   என் வீட்டில்

நுழைந்தபோது

தெருவே திருவிழாவானது.

உன் பெயர்சொல்லியே

என் வீடு விளம்பரமானது.

அதிகாலை செய்திகளுக்காய்

ஆளுக்கு ஆள் அலைபாயும்.

 அலைவரிசையின்

பாடல்களுக்கு தாவரங்களும்

தலையாட்டும். ஒலிச்சித்திரம்

கேட்டுக்கேட்டு அதை

ஊர் முழுக்கக் கதை பேசும்.

நாடகங்களின் நாட்களுக்காய்

கால்கடுக்க காதுகளெல்லாம்

தவமிருக்கும்.

மட்டைப் பந்து வருணனைக்காக

உன்னை எப்போதும் கட்டிக்கொண்டே

தூங்குவோம்.

சாயங்கால சங்கீதம் கற்க

ஜரிகை வேட்டிகள்

எங்களுக்கு ஜால்ரா தட்டி தாஜா செய்யும்.

நீ  வானிலையை வாசித்தபிறகுதான்

எங்களோடு வானம் பேச ஆரம்பித்தது.

உள்ளே யாரோ ஒளிந்துகொண்டு

ஒலி கொடுப்பதாய் உன் பின்னே பலரும்

ஊடுறுவி உளவு பார்த்தக் கதைகளுமுண்டு.

உழைப்பின் அசதியில் உறங்கும்

பலருக்கு உன் தேனிசைதான் தாலாட்டு.

அப்போதெல்லாம் ஆலய வீதிகளில்

உன் குரலே  ஆலாபனையாய் எதிரொலிக்கும்.

சினிமாக் கொட்டகைகளின் அழைப்பு மணியும்  நீ.

திருமண விழாக்களில் மங்கல வாழ்த்தும் நீ.

திரைப்பாடல்களைக் காற்றில் சுமந்து

இசை பரப்பினாய். டி.எம்.ஸ்சீர்காழி எனப் பலரை

அறிமுகப்படுத்தினாய்.

எம்.எஸ்.வி, இளையராஜா

எங்கள் இதய நரம்பினில் இசை மீட்டனர்.

காற்றில் இசையை இழை பிரித்தே

காந்தமாக  மனம் ஈத்தனர்.

எம்.ஜி.ஆர்,சிவாஜி உன்னால்

ஜனங்களின் தெய்வமானார்கள்.

ரஜினியும்  கமலும் இளைஞர்களின்

தேவையானர்கள்.

இன்று வலைதளங்களில்

வானத்தையே வளைக்கும் வசதியிருந்தாலும்

வானொலியில் காதோரம் ஒலிக்கும்

மெல்லிசைதான் என்

உயிர் தடவி உறக்கம் தரும்

மயிலிறகின் ஒத்தடமாகும்.

- நறுமுகை

 

005.காற்றின் மொழி

காற்றோடு ஓசையில் செவிக்கு இனிமையாய்

என்னோடு தினமும் உறவாட வந்தாய்

அதிகாலை வேளையிலே செய்தியாய் கவிதையாய்

சமையல் குறிப்பாய் வானிலையாய் பாடலாய்

வாசகனின் மனம் குளிர வருகிறாய்

தித்திக்கும் செங்கரும்பாய் நாளும் இனிக்கிறாய்

தென்றலின் போது தாலாட்டுப் பாடுகிறாய்

மழைக் காலத்தில் நேயர்களுக்கு விடுமுறையாய்

பள்ளிக்கு செய்தியையும் அனுப்பி வைக்கிறாய்

சுட்டிக் குழந்தைக்கும் மன மகிழ்வாய்

இதயத்தோடு இதயம் ஒன்றாய் சேருகிறாய்

பேருந்திலும் உனது பாடல் காதலாய்

காதலிக்கு உற்சாகத்தோடு வலம் வருகிறாய்

ஜன்னல் ஓரக் காற்றோடு உரசுகிறாய்

விடிய விடிய ஊரெங்கும் ஒலிக்கிறாய்

ஒலிக்கும் சத்தத்திலும் இனிமையான ஆதரவாய்

கவலைகள் எல்லாம் மறக்கும் ஊடகமாய்

தாலாட்டு பாடி நித்திரையும் தருகிறாய்

ஒற்றை வரியில் ஒரே கம்பியாய்

உனக்குள் எத்தனை எத்தனை புதுமையாய்

செவிக்கு விருந்து கொடுத்து மகிழ்கிறாய்

நீயில்லா வாழ்வு எனக்கேது வானொலியே

.செ..பாமிலா பேகம்,நாகர்கோவில்

006.காற்றின் மொழி

 

 காசிநகர் புலவர்பேசும் உரைகளை கேட்டிட

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் 

பாரதியின் வரிகளை பன்மடங்கு சேமித்து

ஆகாச வாணியை அழகாக அமைத்து

கற்பித்தலில் மகிழ்ச்சியோட தகவலும் தந்திட

சிறியோரும் பெரியோரும் சிறப்பாக மகிழ்ந்திட

 உரைச்சித்திரமும் விவரச்சித்திரமும்

உணர்வோடு கொடுத்து

 சிறுகதை நாடகமும்  சிறப்பாக அமைத்து

 தேசிய அளவில் ஒலி பரப்பிமகிழ்ந்து

 மாநில தலைநகர் மற்ற  நகரங்களில்

 ஒளிபரப்பாகும் உன்னத வழியாம் வானொலியே

 கனவை நினைவாக்கிட கவலைகளை போக்கிடவும்

 மூளை முடுக்குகளிலும் நுழைந்து சென்றிடும்

 உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஏற்றத்தாழ்வு காணாத

 எல்லோரையும் சென்றடையும் வானொலி வாழ்க

 புதுவித மகிழ்ச்சியை புதுமையாக கொடுத்திடும்

 இலக்கியமும் தமிழும்  இன்பமாக சென்றிட

இதயத்தின் சுகத்துடன் இயங்கிடும் வானொலி

காற்றின் மொழியே காதலின் சுகமே

 

இரா. வாசுகி பொன்னரசு

 கள்ளக்குறிச்சி

 

007.

காற்றின்  மொழி. .    

புவியைக்காத்திடும்.

மாயாஜால  போர்வையே.

நின்றனுக்கு  நிறமும்  உருவமும் இல்லை.

நீ இல்லாத  பகுதி என உலகில்  எதுமில்லை.

காற்றே  இல்லையெனில்.

உலகிலே  உயிர்களில்லை.

பொருள் எரிய காற்று தேவையான ஒன்றல்லவா.

ஒலி  அலைகள்  பரவிடவே

ஊடகமாம்  காற்று தேவை.

தூங்கையிலே வாங்குகிற 

மூச்சு சுழி மாறி  போனாலும் போச்சு 

காற்றடைத்த  பையை வைத்துக் கொண்டு

ஏன் இந்த பொல்லாத  ஆட்டம்  

வாழுகின்ற  வரை  பிறருக்கு

 துன்பமில்லாமல்  வாழ்வோம்

 

சு.முருகன். சுந்தரபாண்டியபுரம்.

 

008.காற்றின் மொழி

 

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத

பக்கங்களில் ஒரு பறவையின் கதையை எழுதிச் செல்கிறது .......

ஊஞ்சல் மட்டுமா ஆடுகிறது !!

என் மனமும் சேர்ந்தே அடுகிறது!!

அசைந்து அசைந்து இசைந்து போகிறது இதயமும் ஊஞ்சலாக!!

அவனோடு நாட்கள் நீளாதா என்றுஎண்ணிக்

கொண்டிருந்த போது  அவன் தந்த நினைவுகள்

 மட்டுமேநீள்கிறது!!

அலை அடிக்காத கடல்களும் உண்டு !!

உன் நினைவலைகள்  இல்லாத ஞாபகங்களும் இல்லை !!

கடல்களுக்கோ கரை உண்டு !!

உன் நினைவுகளுக்கோ தடை இல்லை !!

எப்பொழுதுமே என் மனதில் நீ அன்புத் தொல்லை !!

கனவுகளுக்கோ எல்லை இல்லை !!

காத்திருக்கிறேன் உனக்காக வந்து விடு விரைவாக.!!       

    

 .வெங்கடேஸ், சேலம்,  வனவாசி

 

009.காற்றின் மொழி

 

காலை கதிரவன் தொடங்கும் முன்னே

 காற்றின் அலை வரிசையில் கான குயிலாய்

காதின் வழியே கவி பாடி செல்லும்

வானொலியே

உன் மீது கொண்ட நேசம் பாசம் இரண்டிற்கும்

உனை வாழ்த்தி பாட வார்த்தைகள்

மனதினில் மென்மையான நினைவுகளாய்

நித்தம் நித்தம் வந்து விழுகின்றன

கொட்டுகின்ற அருவிகள் போல்

இனிய நிகழ்ச்சிகள் வானிலை அறிக்கை

உழவர் செய்திகள் ஒலிச்சித்திரம்

குடும்ப நாடகம் பாரத செய்திகள்

நேரத்திற்கு நேரம் நாள் தவறாமல்

பாமர மக்களும் அறியும் நிலையில்

உடனுக்குடன் செய்திகளை பரப்பு வாயே

உனை நேசித்தவர்கள்இப்புவியில்

அன்றும் இன்றும் ஏராளமானோர் உண்டு

காலைப் பொழுதினில் காற்றின் மொழியாய்

செவிப்புலனில் தேன் சொட்டும் ஒலியாய்

வந்து வந்து சுவையூட்டி  செல்கிறாய்

உனை கேட்காத நாளும் நாளல்ல

சிறு பருவம் முதல்  பெரும் வயது வரை

உன் மீது கொண்ட காதல் அளவற்றது

காணொளி ஊடகங்கள்  பலஇருந்தாலும்

நீதான் வீட்டின் செல்ல வானொலியாய்

காற்றின் ஒலியாய் பண்பலையாய்

காலத்துக்கும் நட்புடன் உறவாடி நிற்கிறாய்

வானொலியே வாழும் மொழியாய்

அனைவர் மனதிலும் நீங்காத ஒலியாய்

 

கே . நஜீமா ஜமான்

சவுதி அரேபியா.

 

 

010.காற்றின் மொழி

 

காலை எழுந்தவுடன் கேட்டு மகிழ்ந்த

பொங்கும் பூம்புனல்!

மதிய நேரங்களில் செவிமடுத்த மகளிர் மட்டும் நிகழ்ச்சி!

மாலையில் மலரும் மனமகிழ் கீதங்கள்!

ஏழு மணிக்கு அப்பா கேட்கும் உழவர் உலகம்!

ஒன்பது மணிக்கு மேல் இரவு கானங்கள்!

தாலாட்டித் தூங்க வைக்கும் தாயான வானொலி!

அன்றாடச் செய்திகள்

அனுதினமும் உடனுக்குடன் சொல்லும் உயரிய வானொலி!

சென்னையில் நடக்கும் கிரிக்கட் விளையாட்டு

கால்கடுக்க நின்று கேட்டு மகிழ வைத்த வானொலி!

பஞ்சாயத்து அலுவலகக் குழாயில்

சின்ன வயதில் கேட்டுக் கொண்ட வானொலி!

காற்றின் மொழி யாரறிவார்!

வானொலி கேட்டவர் மட்டுமே தானறிவார்!

 

சுத்தமல்லி முனைவர் ஹரிஹரன்

திருநெல்வேலி

 

 

011.காற்றின் மொழி

 

தேனொலி பாய்ந்தது காதினில் வானொலி யால்

அவனின்றி ஓர்அனுவும் அசையாது உலகினில்

இவனின்றி எதுவும் தெரியாது வாழ்வினில்

சிலருக்கு வாழ்க்கைத் துணையே இவன்தான்

பலருக்கு வாழ்க்கையே இவன்தான்

சுப்ரபாரதம் முதல் இனிய இரவுகள் வரை

அண்ணா முதல் அப்துல்கலாம் வரை வானொலியில் கேட்கலாம்

பாக்கெட்டிலும்  பவ்வியமாக இருப்பான்

ராக்கெட்டிலும் ரம்மியாக இருப்பான்

அரசியல் முதல் ஆன்மீகம் வரை கேட்கலாம்

நேயர் விருப்பமும் இவன் கேட்பான்

சிலரின்  துக்கத்துக்கு மருந்து இவன்தான்

பலரின் தூக்கமருந்தும் இவன்தான்

வயலும் வாழ்வும் கேட்கலாம்

தேன்கிண்ணமும் பருகலாம்

மின்சாரம் இவனுக்கு தேவையில்லை

சம்சாரமாக இவனை விரும்புவோர் பலர்

 

கவிஞர்.மு.இராஜேஷ்

ஆசிரியர்

புதுச்சேரி

 

012.காற்றின் மொழி

 

வானொலி வாழ்வில் உற்ற  நண்பனாக

வாழ்க்கையில் அழகான அனுபவங்கள் இன்றும்

உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்குமா சிறந்த தோழமையாக

உள்ளத்திற்கு இதமாக வருடித் தருவதாக

 

நிகழ்ச்சிகள் அனைத்தும் நீங்கா நினைவுகளாக

நித்தமும் நமக்கு குதூகலம் தருவதாக

குழந்தைகள் முதல் பெரியவர் வரை

குடும்பத்தோடு மகிழ்வாக கேட்டு களிப்பதாக

ஒலிசித்திரம் அப்படியே கண்முன் பார்ப்பதாக

ஒலிக்கும் விருப்ப பாடல்கள் சிறப்பே

செய்திகள் உடனுக்கு உடன் தந்து

செவிக்கு இனிமையாக நிகழ்வுகள் அற்புதமாக

விவசாயம் விஞ்ஞானம் விளையாட்டு  அனைத்தையும்

விதவிதமாக காதுகளுக்கு  இனிமை சேர்ப்பதாக

காற்றோடு கலந்து பேசும் உன்னதம்

காசினியில் தனித்துவமான அழியாப் புகழுடையது

ஆண்டுகள் போனாலும்  தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும்

ஆன்மீகம் சமையல் அலசித் தருமழகு.

தி.மீரா

ஈரோடு.

 

013.காற்றின் மொழி

 

காற்றேரி வந்துவிழும் காற்றின் மொழியில்

காதல் கொண்டு இசைந்தாடுது மனது

காந்தப்புலனமோ கைப்பேசியோ

காற்றின் மொழிக்கு இணையேது

நேற்று இன்று நாளை என

எல்லாக் காலமும் உனதானது

நேயர் விருப்பமே எப்போதும் உயர்வானது

மாற்றம் பல வந்த போதும்

மரணம் இல்லா மார்க்கண்டேயன்

பாட்டும் செய்தியும் பரப்பும் அலை

பாங்காய் மௌனம் கலைக்கும் அலை

பகலோ இரவோ ஓய்வறியா அலை

ஒலியால் உலகாளும் அலை

இறுக்கம் நிறைந்த இதயம் நுழைந்து

இசையின் சாவி கொண்டு

இதமாய் மருந்து தடவும் மருத்துவர்

இரவு நேரத் தாலாட்டில் இன்னொரு தாய்!

இந்தக் காற்றின் மொழிக்கு காலத்தால் அழிவில்லை!

 

பார்வதி பாலசுப்ரமணியம்.

அவிநாசி.

 

014.காற்றின் மொழி:-

 

எங்கிருந்தோ கேட்கிறது ஒரு குரல்

ஏழு கடலை தாண்டி,

ஏழு மலையை தாண்டி,

எழும் அந்த குரல்,

என் உடலை தொட்டு,

என் செவியை அடைந்து,

என் மனதில் பதிகிறது !!!

என்னுடன் இருக்கும் குரல்,

நான் தோற்ற போதும்,

என் தோற்றம் மாறிய போதும்!!!

நான் வென்ற போதும்,

என் வெற்று இடத்தின் போதும்!!!

வேறு யாரு உள்ளார் எனக்காக?

காலை பக்தி பாடல் முதல்,

மாலை தாலாட்டு வரை!!!

நான் வளர்ந்த ஓர் தனி உலகம்!!!

என்னிடம் பேசிய ஓர் மொழி !!!

என்னிடம் மட்டும் பேசிய அதே மொழி !!!

என் தனிமையை போக்கிய மொழி !!!

காற்றின் மொழி !!!

 

கமலி ஸ்ரீ,

ஓமலூர்,

சேலம்.

 

015.காற்றின் மொழி.

காற்றில் பண்பலையாக ஒலித்த மொழி!!!

கேள்விச் செல்வத்தைப் பெருக்கிய மொழி!!!

இதயத்தை இதமாக வருடிய மொழி!!!

தேன்கிண்ணமாக செவி குளிரச்செய்த மொழி!!!

தொடர் கதைகளை தொடராகத் தந்தமொழி!!!

சிறுகதைகளை நாடகமாக ரசிக்கவைத்த மொழி!!!

புதிய சிந்தனைகளை கேட்கவைத்த மொழி!!!

வானவில்லாக வலம் வந்த மொழி!!!

வசந்த வாசலாக சுகம்தந்த மொழி!!!

தேனினும் இனிக்கும் பாடல்கள் தந்தமொழி!!!

சிறார்களின் மழலை பேச்சைத் தந்தமொழி!!!

தன்னிகரில்லாத் தலைவர்களை பேட்டி கண்டமொழி!!!

விவசாயத்தின் மேன்மையை உணர்த்திய மொழி!!!

உலகச் செய்திகளை உடனுக்குடன் தந்தமொழி!!!

வானிலை அறிக்கைகளை தந்து எச்சரித்தமொழி!!!

தேசியகீதம் தமிழ்த்தாய் வாழ்த்து தந்தமொழி!!!  

 

-முனைவர் பீ.ரகமத்பீபி,ஆத்தூர்.

 

 

016.காற்றின் மொழி

 

ஐயிருவயதான

பருவத்தில்

செவிவாயாக நெஞ்சுகலனாக

தேன்மாந்திய தென்றல்மெட்டுகள்!

உருவமில்லாதே உயிர்வளிசுமந்து

ஊணினைஉருக்கி உள்ளொளிப்பெருக்கி

உவகைதந்த ஓசையலை!

இனியராகம்மீட்டிடும் இலங்கைத்தமிழோடு

இசைந்த இயற்கைகீதம்!

வயலும்வாழ்வுமாய் வேளாண்

செய்தியறிந்ததும்,

ஞாயிறுவிடுமுறை

நாட்களில் நாடகத்தில்

செவிதோய...அகம் மகிழ்ந்ததும்..

காட்சியில்லா மனனமாட்சியில்

நாங்கள் மெருகேறி இசைத்ததும்...

மொழிந்ததும்

இன்றுள்ள இளைய

தலைமுறையறியா...

இனிப்புச்சந்தை!கேட்டாலே கள்ளூறும்...

தென்னம்மொந்தை!அந்த

உள்ளமெலாம் தேனூறும் தெம்மாங்கு

நாட்களின் சாரலில் காற்றின் மொழியே

ககனம் வென்றது!

காட்சிமொழியாம் சின்னத்திரையைத்

தாண்டி...மனதில் சித்திரமாய் நின்றது!

 

மதிப்புறுமுனைவர் கவியருவிசக்தீ

திருமதி .சந்தானலட்சுமி

திருவாரூர்.

 

 

017.காற்றின் மொழி

 

காற்றலை மூலம் வீடுவந்து மொழி !

நுணுகிக் கேட்கும் நுட்பமான மொழி !

காலை பத்திப்பாடல் பாடும் மொழி !

ஒரு சொல் கேளீர் கூறும்மொழி !

இன்று ஒரு செய்தி கூறும்மொழி !

நல்லகாலம் பொறந்திருச்சி செப்பிடும் மொழி !

அன்றன்றைய செய்திகளை வாசிக்கும் மொழி !

தேமதுரத் தமிழோசை பரவும் மொழி !

காற்றில்கரைந்த இசைஞானியின் பாடலைக்கேட்கச்

செய்தமொழி !

பழையபுதிய பாடலை மடல்மூலம் கேட்டமொழி !

ஓரங்கநாடகங்களை  ஒருவரே வசனநடையில் வாசித்தமொழி !

உரையாடல் நாடகங்களை உணர்ச்சிப்பூர்வமாகத் தந்தமொழி !

கவிஞரின் உரைகளைத் தந்த மொழி !

உழவரறிய வேண்டிய செய்தியைத்தந்த மொழி !

வானிலை அறிக்கையை மீனவருக்குச் சொன்னமொழி !

நாளின் இறுதியாக ஜெய்ஹிந்த் சொன்னமொழி !

 

 மா.சுரேசு.

முதுகலைத் தமிழாசிரியர்,

லயன்ஸ் பதின்ம மேனிலைப்பள்ளி,

திருவில்லிபுத்தூர்

 

 

018.காற்றின் மொழி.

காற்றில் கலந்தது.

செவிக்கு இனியது.

இயற்கைக்கு தென்றலது.

மனிதனுக்கு மொழியது.

தாவரங்களுக்கு சுவாசமானது.

இறைவனுக்கு இசையது.

மழலைக்கு குறும்பது.

மக்களுக்கு மகிழ்ச்சியது.

ஆகாசவாணிக்கு மொழியது.

முகிலுக்கு கருமையது.

விவசாயிகளுக்கு பசுமையது.

இயற்கைக்கு நிழலது.

வாரங்களில் நாட்களது.

மாங்கைகளில் அழகது.

யாக்கையில் உயிரது.

மரங்களில் பசுமையது.

மொழிகளில் தமிழ் அது.

காற்றின் மொழி அது.

 

சே.ஜெய பாக்கிய லட்சுமி, காஞ்சிபுரம்.

 

 

019. காற்றின் மொழி

காற்றின் மொழியாய் காதில் ஒலிக்கும் !

காற்றின் மொழியாய் பண்ணில் பாடும்!

காற்றின் மொழியாய் இசையில் இன்பமிடும் !

காற்றின் மொழியாய் தமிழில் இனிக்கும் !

காற்றின் மொழியாய் குரலில் இசைக்கும்!

காற்றின் மொழியாய் காதில் கனியும் !

காற்றின் மொழியாய் காதலில் காணமிடும்!

காற்றின் மொழியாய் கவிதை பாடும் !

காற்றின் மொழியாய் கவிஞரை உருவாக்கும்!

காற்றின் மொழியாய் இதயத்தை இனிமையாக்கும்!

காற்றின் மொழியாய் புதுமைகளை புகுத்திடும் !

காற்றின் மொழியாய் புன்னகை பூக்கட்டும் !

காற்றின் மொழியாய் காணம் பாடும்!

காற்றின் மொழியாய் துன்பத்தை இன்பமாக்கும்!

காற்றின் மொழியாய் தோல்விகளை வெற்றியாக்கும்!

காற்றின் மொழியாய் வானொலியாய் வண்ணமிடும் !

காற்றின் மொழியாய் வானொலி வாழட்டும்!

காற்றின் மொழியாய் வாசகர் நெஞ்சில்!

பாயட்டும் !பாயட்டும்! பாயட்டும் !பாயட்டும் !    

 

மா .ரோஸ்லின்,

எண் ;42 ஸ்ரீராம் நகர்,

கைனுர் போஸ்ட் ,

அரக்கோணம்-631003

 

 

020.காற்றின் மொழி..

 

வானொலி காற்றாழையின் பண்பலை..

அப்பாவிற்கு மிகவும் பிடிப்பது செய்திகள் கேட்பது..

அம்மாவிற்கு சமையல் நிகழ்ச்சிகளை கேட்பது..

பாடல்கள் நித்தம் கேட்கும்போது

பட்டாம்பூச்சியாய் மனது அலைபாயும்..

தேன் கிண்ணமாய் ஒவ்வொரு வீட்டிலும் வசந்தம் வீசும்..

பண்பலை நிகழ்ச்சியில் மனது அலைபாயும்..

வானொலியில் ஒளிபரப்பப்படும்

பாடல்களை கேட்டு நாமும் பாடுவோம்..

இசைத்தட்டுகளாய் நெஞ்சில் ஒலிக்கும் கானமழை..

அருவியாய் கொட்டும் பண்பலை நிகழ்ச்சிகள்..

வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை

கேட்டு பள்ளியில் பரிசு பெற்றது..

என்றும் நீங்க மற நிறைந்து இருக்கும்

வானவில்லாய் ஒலிச்சித்திரங்கள்..

 

வானொலியில் ஒளிபரப்பப்படும்

பாடல்களை கேட்டு நம் மனது அலைபாயும்..

நம் வாயும் முணுமுணுத்து பாடல்களை இசைக்கும்..

தென்கச்சி கோ. சுவாமிநாதன்

அவர்களின் பேச்சு தித்திப்பாய் இருக்கும்..

என்றுமே அரிதான நிகழ்வுகளை

கேட்கும் உன்னதமான செவி கருவி..

தொலைக்காட்சி வருவதற்கு முன்னால்

அனைவரின் வீட்டிலும் செவிகளில் ஒலித்தது..

புதுமையான நிகழ்வுகளை உடனுக்குடன்

தெரிவிக்கும் அரிய பொக்கிஷமாய்..

பண்டிகை நாட்களில் கொட்டட்டும் இனிய இசையால்

மனித மனங்களை கட்டிப்போட்ட தருணங்கள்..

இரவு நேர பயணங்களில் ஜன்னலோரத்தில் வருகின்ற

இளம் காற்றை ரசித்து இனிமையான பாடல்களை கேட்டபோது..

மனது அலைபாய்ந்து தன்னை

அறியாமல் தூங்கிய நாட்களை எண்ணி..

ஒவ்வொரு வீட்டிலும் மறக்க முடியாத மலரும்

நினைவுகளாக வானொலி திகழ்கின்றது..

 

        கு. சாந்திகுமார்..

       சபரி கார்டன், சூலூர் ,

      கோயம்புத்தூர் மாவட்டம்.

 

 

021.காற்றின் மொழி:

 

காற்றின் மொழியை மேகங்கள் அறியும்

காற்றின் மொழியை தேகங்கள் அறியும்

 

காற்றின் மொழியை வனஙங்கள் அறியும்

காற்றின் மொழியை மூங்கில் அறியும்

காற்றின் மொழியை வாசங்கள் அறியும்

காற்றின் மொழியை காதலர் அறிவர்

காற்றின் மொழியை ஒலிஅலைகள் அறியும்

காற்றின் மொழியை ஒளிஅலையும் அறியும்

காற்றின் மொழியை பருவங்கள் அறியும்

காற்றின் மொழியை துருவங்களும் அறியும்

காற்றின் மொழியை கவிஞன் அறிவான்

காற்றின் மொழியை வானவியல் அறிஞனும் அறிவான்

காற்றின் மொழியை படகோட்டி அறிவான்

காற்றின் மொழியை பறவைகளும் அறியும்

காற்றின் மொழியை கிளைகளும் அறியும்

காற்றின் மொழியை மக்களும்  அறிவர்

காற்றின் மொழியை மாக்களும் அறிவர்.

- கவிஞர் லோ வரகுண பாண்டியன்,

 உத்தரமேரூர்

 

022. காற்றின் மொழி

 

மனம் அமைதியாக ஒருசில நொடிகள்

மனம் மௌனத்தின் அழகான மொழிகள்

காற்றில் வரும் கீதமாக

வானொலி தரும் வசந்தமாக

கேட்க கேட்க இனிக்கும்

நேரம் கடந்தும்  மனம் ரசிக்கும்

கண்களை மூடிக்கொண்டு கவிவரிகளை முணுமுணுத்துக்கொண்டு..

காற்றின் மொழி காலங்கள் தொடரும் அழகு..

 

இரா.காயத்ரி

தருமபுரி மாவட்டம்

 

 

023.காற்றின் மொழியே

வானொலியே...நீ வாழியபல்லாண்டு

கோனியம்மன் அருள்புரியும்

கொங்குமண்டலக் கோவையின்

பொன்விழா காற்றின் ஒலியே

உன்னை போற்றி வாழ்த்துகிறோம்

வாழிய....நீ

பல்லாண்டு எங்கு தேடினும்

கிடைக்கா.. என்இன்ப

வானொலியே

வங்கமுதல் அரபி வரை

பாலசிங்கமான காற்றின்ஒலியே நீ..

வாழிய பல்லாண்டு மங்கள இசை

முதலாய் மணந்தரும் நிகழ்வுகளை

தங்குதடையின்றி...

கொடுக்கின்றாய் எண்ணில்அடங்கா

அவையனைத்தும் விண்ணில்

நின்புகழ்பாடுமே...

வானொலியே உன்னில்மலரும்

வசந்தங்கள் இந்தியமண்ணில்

வளர்ந்த சொந்தங்களே

விடிகாலை துயில் எழுவது உன்னாலே

விடிந்தபின் பணி முடித்து

இரவுதுயில்வதும் பண்ணிசை யாலே

அடுக்களை முதல் அலுவலகம் வரை

நடப்பது உந்தன்...செய்தாலே

களைப்பைநீக்கும்  காரிகையே

உன்னில் கட்டிக்கரும்பானது

பண்ணிடும் வேலையே

பயன்தராவிளைவு உன்னில் இல்லை

உன்னை பயன் படுத்தாதவர்

பாரில் இல்லை ஆறுபோல்

ஓடிவரும் உன்னை வையத்துள்

பேர்சொல்லி அழைக்காத

பேரும் இல்லை உண்கலத்தோடு

ஒருமனப்படும் நன்கலவானொலி

பண்பலை வரிசையில் பல்லுயிர் ஓம்பும்

உன்அன்பலை என்சொல்ல வானொலி

சான்றோர் சிந்தனை வரிசையில்

என்னை ஆன்றோனாக்கிய...வானொலி

உன்னைப் போன்றோர் உள்ளதால்தான்

இவ்வுலகம் நன்றாய் வாழ்ந்து

கொண்டிருக்கிறது....வானொலி

பொங்கும் மங்களம் எங்கும்தங்க வாழிய..நீ

பல்லாண்டு காற்றின் ஒலியாய்

நீ உள்ளவரை.என் சுவாசம் நாளும்

மலர்ந்திருக்கும் வானமும்பூமியும்

மகிழ்ந்தோங்க வாழிய .நீ..பல்லாண்டு

என்றும் உன்நினைவில்...

கவிஞர் மீரா என்கிற மீனாட்சிசுந்தரம்

பல்லடம்.

 

024. காற்றின் மொழி

ஆனந்தத்துடன் எழுப்பும் ஆகாஷ்வாணி!

நகைச்சுவையோடு கூடிய நற்கருத்துக்கு

தென்கச்சியின் இன்று ஒரு தகவல்.

தேமதுரத் தமிழோசைக்கு இலங்கை வானொலி.

வாரம் ஒரு முறை வார்த்தை ஜாலம்

காட்டும் பீகிங் தமிழமுது.

 

நானும் இருக்கிறேன் என வாரம்

ஒரு முறை தமிழிசைத்த பிபிசி.

நேயர்களை சேப்பாக்கம்

மைதானத்திற்கே கொண்டு சென்ற

ராமமூர்த்தி, அப்துல் ஜபாரின் வாயில்

விளையாடிய கிரிக்கெட் வர்ணனை.

தேசத் தலைவர்களின் மறைவின் போது

சோகமிசைத்த காற்று நண்பன்.

நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவைக்காக

ஏங்க வைத்த வானொலி அண்ணா!

திரைச்சித்திரத்தை மனச்சித்திரத்தில்

கொண்டு வந்த ஒலிச்சித்திரம்!

மர்பி ரேடியோவும் பிலிப்ஸ் ரேடியோவும்

நம் வீட்டின் நிரந்தர விருந்தாளிகள்!

சரோஜ் நாராயண சுவாமியும்,

கிருஷ்ணசாமி ஜான்சுந்தரும்

நம் வீட்டின் நிரந்தர குரலோவியங்கள்!

நாடகங்களை மனஅரங்கில்

அரங்கேற்றிய ஞாயிற்றுக்கிழமைகள்

அன்றைய ஆகாஸ்வாணி முதல் இன்றைய

மனதின் குரல் வரை எங்களோடு பின்னிப்

பிணைந்துள்ள வானொலியே,

எங்களுக்கு என்றும் மன ஒலி!!

 

நீ.சங்கர்,

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி,

ஜாகிர் வெங்கடாபுரம்,

கிருஷ்ணகிரி.

 

 

025.காற்றின் மொழி

 

ஓரிடத்தில் பிறந்து பாரெல்லாம் பறப்பதழகு!

சீரெல்லாம் சிறப்பாக செம்மை மொழியழகு!

கதிரவன் கண்திறக்க சதிராடும் தமிழழகு!

அலைவரிசை ஆயிரமாய் அலையாடும் கடலழகு!

செவிவழித் தேன்பொழியும் குவியக் கலையழகு!

மனதை நிலைப்படுத்தும் தினத்தின் வலையழகு!

அவனியின் அன்றுநிலை கவனிக்கும் குணவழகு!

மாண்புடை மாதர்க்கு பண்புடை பொருளழகு!

இன்னிசைப் பாடல்கள் கண்மூடி மயங்கழகு!

(வி)தை ,கருத்துகள் விதைக்கும் விந்தையழகு!

விற்பனை விளம்பரங்கள் கற்பனைச் சொல்லழகு!

நயமான நகைச்சுவை நற்றமிழ் நல்லழகு!

வானிலை அறிக்கையாலே கேணியே சிலிர்ப்பழகு!

போற்றும் மனங்கோடியே காற்றின் மொழியழகே!

 

கவிஞர். ஆசிரியர்..தேவிகா

தூத்துக்குடி

 

026.காற்றின் மொழி

 

காற்றின் மொழி, கடந்தே வந்த வழி.

புவிக்கோளம் சுற்றி  மின்காந்த அலைகள்.

ஒன்றாக சேர்த்து வைக்கும் ஒலிப்பெட்டி வலைகள்.

காற்றின் மின்கீற்றுகள் பறைசாற்றும் ஊற்றுகள்.

அதிர்வலை கூறுகள் ஒலியலை மாற்றங்கள்.

 நீர்குமிழி சுழற்சிகளாய் ஒலிவேக வீச்சுகள்.

நம் வீட்டு நடுவினில் அமர்ந்தே பேசிடும்.

ஆகாய மார்க்கம். ஆகாசவாணி.

போர்கால செய்தியாய் வந்திட்ட வானொலி.

 

பண்கள் துல்லியம் பண்பலை புண்ணியம்.

சரோஜ் நாராயணஸ்வாமி. செய்திகள் நாயகன்.

ஆலாபனை பாடும் ஆலோலங்கிளி.

தாலாட்டுபாடும் தாய்ப்பாட்டு பெட்டி

மார்கோனியின் மகத்துவப்பெட்டி

ஹார்மோன்கள் துள்ளும் ஹார்மோனியப்பெட்டி.

வயலும் , வாழ்வும், வயலின் இசையும்.

புயலும், மழையும் முன்னெச்சரிக்கை சுட்டி.

மட்டைப்பந்து விளையாட்டு மகிழ்ச்சியாய் கேட்கும்.

கட்டை பெட்டியாக குறவர்கள் (வகை தூதர்)

(Brand Ambassador) தோளிலே கிடக்கும்.

ஒருப்படப்பாடல், மறு ஒலிபரப்பு பாடகர்கள் குரல்

அதிசய சிலிர்ப்பு.

காணொளி காட்சி இல்லா காலம்.

வானொலி இசை புளங்காங்கிதம்.

 

   தன. மகேஸ்வரி.

    கடலூர்.

 

027.காற்றின் மொழி

 

வான்வெளி எங்கும். ..

வசந்த காற்று. ...

குளிர்விக்கும் புற உடம்பை ....

அக மனதை குளிர்விக்கும். ..

அண்டவெளியில் அலைவரிசையாய்....

அகமெல்லாம் குளிர்விக்கும்.....

ஆனந்த ஊற்றாய்

இதயமெல்லாம் நிரப்பும்...

ஈகையாய் தரும் இன்பத்தை...

 

உறவாய் நாளும்  மேம்படுத்தும்

ஊற்றாய்  அள்ளித்தரும்  உவகையை...

ஒரே மனிதம் என்ற உறவை

ஓராயிரம் முறை ஓதும்....

ஔவையின் ஆத்திசூடியாய்....

அகிலமெல்லாம் அறவுரையும்

அன்பின் ஊற்றை....

அலைவரிசையாய் நாளும்....நம்மிடையே

ஒலிபரப்பும் ஒரு மொழி

நம் வானொலி எனும்

காற்றின் ஒலி நம்

காதில் தித்திக்கும்....

காற்றின் ஒலி ....‌

காற்றின் மொழி.....

நாளும் நம்மை மகிழ்விக்கும்

ஒரே மொழி நம்

காற்றின் மொழியே...

நாளும் போற்றுவோம்...

நம்மில் இன்ப ஒலியில் திளைப்போம்....

காற்றின் மொழியில்......

 

முனைவர் சுப்பிரமணியன்,

உதவிப்பேராசிரியர்

தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி தன்னாட்சி

பாளையங்கோட்டை

திருநெல்வேலி 2

 

028.காற்றின் மொழி

 

அடடடா மாமரக்கிளியே உன்னை

இன்னும் நா மறக்கலையே

வானொலியில் வசந்த கீதம் செவிகளுக்கு

காற்றின் நாதம் இன்ப இசை

மொழி இருவிழி மூடியே இதயத்தில்

மகிழ்ச்சியின் ஒலி தென்றல் வந்து

என்ன தொட்டு தீண்டி போனது

மேனியில் சிலு சிலு சிலிர்ப்பு

குளிர்ச்சியில் மனதில் மலர்ச்சி

மகிழ்ச்சி வானிலே வட்டமிட்ட

முகம் பொட்டு வைத்த வஞ்சியும்

குளிர் திங்களாக முழுமதியாக

முகம் காட்டிட நிலாவே வா நீ நில்லாமல் வா

காற்றின் மொழியிலே தென்னங் கீற்றின்

வழியிலே ஈரவிழி கூற்றிலே அசைந்து

நாற்று மாடிட நல்நெல் கதிரும்

நாட்டியமாடிட காற்றின் மொழி கேட்டே

சிட்டு குருவிக்கென்ன கட்டு பாடு

தென்றலே உனக்கெது சொந்த வீடு பாடு பாடு

காற்றின் மொழியிலே வழியில்

வந்ததென்ன?விரல் பட்டது என்ன?

காற்றே நீ பேசிய மொழியே

காதல் மொழியா? விரல் நுனியின்

தொடுதல் காதலனின் கரமென்று

சொன்னதும் நீதானோ? உணர்ந்திட உன்மொழி

தேன் தானோ? விழியும் மீன்

தானோ? மான் தானோ துள்ளி

ஓடிட ஏன்தானோ? காற்றேநாணத்தில் நான்

முத்தமிட்டதை கண்டு ஓடிவிடபுரிந்தது

பூங்காற்றே உன் மொழியின் ரகசியம்

கவிஞர் சொல்லரசிவீணைதேவி,

பெங்களூர்.

 

029.காற்றின் மொழி

அமுதம் சுரக்கும் அன்னை மொழி..

அறிவைப் புகட்டும் தந்தை மொழி..

தூங்கா இரவின் தாலாட்டு மொழி..

கொஞ்சிப் பேசிடும் காதல் மொழி..

தோள் கொடுக்கும் நட்பின் மொழி..

தித்திப்பூட்டும் மழலை மொழி..

மனதுள் மறைத்திடும் சோக மொழி..

பழமை மறவா நினைவின் மொழி..

தனிமை போக்கிடும் கவிதை மொழி..

புதுமை போற்றும் புரட்சி மொழி..

மூப்பிலும் துணையிருக்கும் காற்றின் மொழி..

வாழ்வோடு இணைந்துவிட்ட இயற்கை மொழி..

மூச்சுக்காற்றாய் கலந்த மொழி,

எந்த மொழி?

அதுவே நம் வானொலி...

உலக வானொலி தின நல்வாழ்த்துகள்..

 

கவிஞர் உமாவெங்கட்

நாமக்கல்

 

029.காற்றின் மொழி

காற்றின் மொழி, இசையின் மொழி,

உறவின் மொழி, வானொலி.

வானில் பறந்து, காற்றில் பயணித்து,

உலகெங்கும், மொழிகளைக் கடந்து,

இசை, செய்தி, கதை,விவாதங்கள், நாடகம்,

மனம் கவர்ந்த, பல்வேறு நிகழ்ச்சிகள்,

மக்கள் மனதில்,கொட்டிக் கிடக்கும்,

உணர்வுகளை வெளிப்படுத்தும்,

காற்றின் மொழி,வானொலி.

வறுமை, அரசியல்,சமூக பிரச்சனைகள்,

உலகின் உண்மைகள்,அனைத்திற்கும்,

ஒரு குரல்,வானொலி, அறிவு,கலாச்சாரம்,

உலகின் கண்ணோட்டம்,மக்களுக்கு வழங்கும்,

ஒரு கல்விக் கூடம், வானொலி.

மக்கள் மனதில், உறுதியான இடம்,

கொண்டுள்ள, காற்றின் மொழி, வானொலி.

 

கவிச்சிறகு திருமதி. . பிரியா,

உதவிப் பேராசிரியர்,

நிர்மலா மகளிர் கல்லூரி,

கோயம்புத்தூர்

 

031.காற்றின் மொழி

 

இசையினாலே தசையிலும் புக முடியுமே/

இன்பமான சூழலுக்கு நம்மை அழத்திடுமே/

துன்பங்களை களைந்து துடிக்கும் மொழியிலே/

தன்னிலை மறந்தே காற்றிலே மிதந்திடுவோமே/

காற்றோடு செவிதனை வருடும் தென்றலென/

தேற்ற வந்த தேனிலவுக் காதலாக/

மாற்றம் பல நிகழ்திடச்செய்திடும்/

மந்திர தந்திர ஆகாச  வாணியே/

இயற்கையும் இரசித்திடும் இன்பமான மொழி/

இயற்கைப் பேரிடர்தனைச் செப்பிடும் மொழி/

இன்பக் காதல் கடலில் ஆழ்த்தி/

இசையினை சொல்லும் குரலில் வீழ்த்திடுவரே/

அறிவியல் நுட்பங்களை அனுதினம் பறைசாற்றி/

ஆக்கபூர்வமான அறிவுதனை புத்தியில் தீட்டி/

உழவனின் உன்னத சிறப்பினைக் கூறி/

உள்ளத்திலே உறவாடும் காற்றான உயிர்மொழி/

கவிஞர் முனைவர் செ.ஆயிஷா

பல்லடம்

032. காற்றின் மொழி

 

 அகில இந்திய வானொலி தரும் பாடல்கள்//

 ஆர்வமுடன் மக்களை கேட்கத் தூண்டும்//

 இதயத்தை வருடிச் செல்லும் இனிய பாடல்கள்//

 ஈடுபாட்டுடன் கேட்கத் தூண்டும் செய்திகள்//

 உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பாடல்கள்//

 ஊக்கம் தரும் உவகை கொள்ளச் செய்யும்//

 எண்ணில் அடங்கா செய்திகளைத் தரும்//

 ஏட்டில் எழுதப்படாத பாடல்களைத் தரும்//

 ஐம்புலன்களையும் ஒன்றச் செய்யும் காற்றின் மொழி//

 ஒவ்வொருவரின் இல்லத்திலும் உள்ளத்திலும் இடம்பெறும்//

 ஓயாமல் கேட்க தூண்டும் வானொலி//

 ஔடதமாய் திகழும் அற்புத சாதனம்//

 காலை பக்தி பாடல் முதல் இரவு தாலாட்டு வரை//

 ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும்//

 என் தனிமையை போக்கியது காற்றின் மொழி//

 காதுகளுக்கு இனிமை சேர்க்கும் அற்புதம்//

 நிகழ்ச்சிகள் அனைத்தும் நீங்கா நினைவுகளாய்//

 நித்தம் நித்தம் மகிழ்ச்சி தரும் புத்தம்புது செய்திகள்//

 குடும்பத்தோடு குதூகலமாக கேட்க தூண்டும்.//

 தலைமைஆசிரியர்

 . மலர்க்கொடி பெரம்பலூர்.

 

033.காற்றின் மொழி...

வசந்த தூறலாய் எங்கள் வாசல் ஓடி வந்த

வசந்தத்தின் திறவுகோல்...

 

காற்றோடு கைகுலுக்கி

செவியோரம் இன்னிசை மெட்டுகளை

இதமாய் இசைத்திடும்  இன்பத்தின் வாகனம்...

 காலைத் தென்றலாய் களமிறங்கி

அற்புத கவிதைகளால்  அகமதை குளிரச் செய்யும்

அதிசய பிறவி...

எண்திசையும் எட்டும் செய்திகளை

அகிலமெங்கும் அலுக்காமல்

எடுத்துச் செல்லும் அதிசய ஊற்று...

குற்றாலத் தூறலாய்

இன்ப சாரலாய் புதிய கீதங்களை

புதிது புதிதாய் பூக்கச் செய்யும் பூச்செண்டு..

ஊடகங்களின் வரிசையில்

உயர்ந்தே நிற்பது வானொலி ஒன்றே...

வீடுதோறும் ஒலி வீசி வீணைதனை இதயங்களில்

ராகமென மீட்டிடும் இதயவொலி வானொலி...

தனிமைக்கு இனிமையான துணை மட்டுமல்ல

உற்ற துணையும் வானொலியே..

காற்றின் மொழியாய் இன்னிசைப்பாடி

கவி சுமந்து வந்து எங்கள் மனங்களைக்

கொள்ளைக் கொள்ளும் வானொலியே

உன்னால் வசம் இழந்து போன..,

எங்கள்..,இதயங்களை.., எப்போது கொண்டு வந்து..,

சோ்க்க போகிறாய்  நீ.., ஆவலோடு காத்திருக்கிறோம்

உன்னோடு இசைப்பயணம் தொடர்ந்திடவே...

 

தி. சசிகலா திருமால்

கீழப்பழுவூர்

அரியலூர் மாவட்டம்.

 

 

034.காற்றின் மொழி

அதிகாலை முதல் அர்த்தசாமம்வரை

ஓய்வில்லா உன் ஒலிபரப்பில்

பாய்ந்துவரும் பக்திப்பாடல்களாலும்,

பரவசமூட்டும் இசை நிகழ்ச்சிகளாலும்

உருவின்றி நீயும் உலாவந்து

உள்ளத்தைக் கவர்ந்து உயிரினில் கலந்து

ஆன்மாவை அடிமையாக்கி

பேரின்பை பெருக்குகின்றாய்...!

செய்திகளையும் சீரிய சிந்தனைகளையும்

சிறப்பாய் நாளும் செவிக்கு உணவாக்குகின்றாய்...!

உழவுக்கும் உதவுகின்றாய் !

உதவி செய்யும் எண்ணத்தை

உருவாக்க நாளும் உழைக்கின்றாய் !

பழமைகளைப் பழுதாக்காமல்

புதுமைகள் புரிவோரை - நீயும்

புகழ்வானில் ஏற்றுகின்றாய்...!

கலங்கரைவிளக்காய் வழிக்காட்டும்

கல்விச் சேவைகளும், அலங்காரமாய் விளங்கும்

அற்புத நாடகங்களும், நேர்த்தியான நேர்காணல்களும்

காற்றினிலே கலந்தனுப்பிஏற்றத்தை எழுப்புகின்றாய்...!

எல்லாவற்றுக்கும் ஏணியாய் உன் இசைத்தூரல்களை

திசையெங்கும் பரப்பி இன்பமழையில் நனையவிட்டு

இனிமை பயக்கின்றாய்...!

மணிக்கணக்காய் அன்று உன்மொழிக் கேட்டு

உலகை மறந்தாருமுண்டு மனப்பிணித் தீர்க்கும்

மகத்துவ மருந்தோ உம்மிடத்தே பலவுண்டு...!

ஊடகத்தின் உச்சமாய் நின்று

உலாவரும் உன்னதமே உன்பயணத்தில்

தமிழ்ப்பணிக்கண்டு தலைவணங்குகிறேன்

தமிழனாய் தலைநிமிர்ந்து...!

சீரும் சிறப்புமாய் செழித்தே

தொடரவேண்டும் உம் தொண்டு !

 

 கவிஞர் சங்கர்,

 கடலூர்.

 

035.காற்றின் மொழி

 கடல் தாண்டி சென்றாலும் இனிய உலகை நினைவில்

 நிறுத்தும் கால கண்ணாடி!!

 வலி மறந்து சுகம் அறிய கானத்தோடு 

தொடங்கும் பண்ணிசை பெட்டகம்!!

பசுமை நினைவுகளைபறைசாற்றும் பண்பலை!!

 பல்லுயிர்களையும் ஓர் உயிராக உறவாட வைக்கும்!!

 ஓங்காரத்தையும் ரீங்காரமாக மாற்றும்

இன்னிசை சாரல் மழை!!

அன்பின் வலியது ஆருயிரையும் போற்றியது

 வசந்தத்தை செதுக்கியது

 மலர் கொண்டு வர்ணனை செய்தது

 காலந்தோறும் நிற்கும் பண்பலை!!

 திசை மறந்த கானக்குயிலாக வசனம் ஏற்று நடிக்கும்

வசந்த மலராக வானையும் பூமியில் படர விடும் விண்மீனே!!

 காற்றை வளைத்து கரம் பிடிக்க வைக்கும்

 எந்தன் அன்பு வானொலி!!

 இலட்சிய ஆசிரியர்

பா. நூருல்லாக்

 மதுரை

 

036.காற்றின் மொழி

காற்றில் பறந்து வந்து காதில்

ஊடுருவும் வானொலிபாடல்

காடு களனியில் வேலைசெய்யும்

பாமரமக்கள் சலிப்பின்றி பணிசெய்ய

இசை விருந்து படைக்கும் வானொலியே/

நீயின்றி எந்தவொரு மனிதனும்

பொழுதே போக்க வேறு வழியின்றி

இருந்தகாலம் ஒரு உன்னதம்/

எத்திசையில் இருந்தாலும் காற்றில் கலந்த கீதம்

காதிற்கு இனிய ரீங்காரம்/

உன்னால் உலக வரலாறு ஊர் வரலாறு

செய்திகளால் கேட்க ஆர்வமாய் இருக்கும் ஓர் காலம்/

காற்றின் மொழியைக் காதினில்கேட்க

இன்றும் என்றும் எதிர்பார்ப்போம்/

 

கவிஞர் எம்.சுந்தரசாமி,

கோவை மாவட்டம்.

 

037.காற்றின் மொழி!

 கதை கதையாய் காவியமாய்!

 கேட்டு உள்ளம் மகிழ்ந்தோமே!

 காதல் திரைப் பாடல்களை!

 எண்ணத் திரையில் ஓட்டினோமே!

 பெண்மையின் தனிமையை போக்கியதே!

உள்ளத்தோடு விளையாடும் தோழியானதே!

 சிறியோர்  முதல் பெரியோர்வரை!

சிந்தனை தூண்டிய எந்திரமே!

 மார்க்கோனி ஈந்த எந்திரமே!

 மனித (இனத்தையே) பண்படுத்திய தந்திரமே!

 ஆகாசவாணி அளித்த செய்திகளோ!

 ஆசிரியர் நடத்தும் பாடங்களோ!

 அழகிய வர்ணனை தொகுப்புகளோ!

 ஆனந்தத்தை தெளிக்கும் ஜாலங்களோ!

 காற்றில் மிதக்கும் கீதங்களோ!

 காதோடு மனதில் உறவாடுதே!

 

 எங்கள் கால பெட்டகம் தான்!

 என்றென்றும் எண்ணத்தில் அழியா?..

பொக்கிஷந்தான்!

 

பத்திரிக்கை நிருபர்

தமிழ் ஆர்வலர்

.கலைச்செல்வி

திருப்பூர்.

 

038.காற்றின்  மொழி

 

மனதுக்கு புத்துயிர் தந்த சக்தி

மனிதர்களின் இதயத்திற்கு இதமான தாலாட்டு

உந்தன் வரவலே மானுடம் சிறப்படைகிறது

உந்தன் தொழில்நுட்ப சேவைகள் மக்களுக்கு

மனஅழுத்தம் போக்கும் தன்மை கொண்டது

ஒவ்வொரு நாளும் உந்தன் வரவலே

புதிய விடியலில் புதுமை படைக்கிறது

இல்லங்களில் ஆன்மீக இசை ஒலிக்கிறது

ஒவ்வொரு நாளும் நீ தரும் தகவல்கள்

மக்களுக்கு நன்மை பயக்கும் செய்திகள்

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும்

நீ ஒலிக்கச் செய்யும் பாடல்களில்  மயங்கும்

உலகில் மக்களின் நாகரிக வளர்ச்சியில்

உந்தன் பங்கு ஈடு இணையற்றது

இசையின் ஒலியே காற்றின் மொழி

காற்றின் மொழியாக வந்தாயே  வானொலி

 

கவிஞர் கணுவாய் கிருஷ்ணமூர்த்தி

கோயம்புத்தூர் மாவட்டம்.

039.காற்றின் மொழி

அன்பின் தொகுப்பு காற்றின் மொழி

ஆசை அமுதமே காற்றின் மொழி

இசையின் ஊற்றே காற்றின் மொழி

ஈகை உவப்பே காற்றின் மொழி

உலகின் பார்வையில் காற்றின் மொழி

ஊக்கம் அளிப்பது காற்றின் மொழி

எடுப்பார் கை பிள்ளை காற்றின் மொழி

ஏகாந்தம் தருவது காற்றின் மொழி

ஐயம் நீங்கட்டும் காற்றின் மொழி

ஒப்பந்தம் செய்வது காற்றின் மொழி

ஓங்காரமாய் ஒலிப்பது காற்றின் மொழி

ஔவ்வை வழியில் காற்றின் மொழி

அழகாய் விருந்து வைத்தது காற்றின் மொழி

                                 S.உமா,

                                திருப்பூர்.

 

 

040.காற்றின் மொழி

தொலைத் தொடர்பு சாதனமாய்

இன்றியமையா இடம் பெற்றாய்

எல்லோர் இல்லங்களிலும் கட்டாயம் இருந்தாய்

இன்று எங்கோ இருக்கின்றாய் இல்லத்தில்

இன்று பேருந்து பயணத்தில் பலருக்கு உதவுகின்றாய்

செய்திகள் பல கேட்டதுண்டு

திரைப்படங்கள் பல நாள் கேட்டதுண்டு உன்னிடம்

இரவு நேரத்தை இனிமையாக்கும்

இன்னிசை கீதங்களை பல நாள் கண்டேன்

இன்றும்  தேடுகிறேன் என் ஓய்வு நேரங்களில்

காற்றின் மொழி காதுகளில் விழும்

கீதமாய் நெஞ்சம் நிறைந்திடுமே

 

மனதின் கவலைக்கு மருந்தாகுமே

இன்னிசையின் கீதம் இசையின் அற்புதமாய்

வானொலி இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது

 

முனைவர் .பாப்பு ரேவதி,

திருநெல்வேலி.

 

041.காற்றின் மொழி.

அடுக்கடுக்காய் மக்களுக்கு ஆனந்தம் கொடுத்தது,

சொடுக்கினால் பாடல் சொகுசாய் வந்தது,

எடுக்க பார்க்க எப்போதும் முடியாது,

படுத்தும் கேட்போம் பன்பலை பாடலது!

வானொலி தகவல்தான் வாசகர் நலனது,

காணொலி இல்லாது கற்கண்டாய் சுவைப்பது,

வானொலி கொண்டு வையத்து நிகழ்வினை,

தேனாய் பரப்பும் தெவிட்டாத பெட்டகம்!

கம்பி இல்லாத காற்றுக் கருவியிது,

வம்பு வளர்க்காத வயோதிகன் வானொலி,

தம்பி,தனயனாய் தாலாட்டும் மொழியால்,

கும்மி கோலாட்டம் குயிலோசை பரப்பிடும்!

நாட்டு செய்திகள் நன்றே நவிலுது,

வீட்டு குறிப்புகள் வெள்ளிடையாய் சொல்லுது,

காட்டு வளங்களை காத்தலே சிறந்தது,

நாடகம் நேர்காணல் நேயரின் விருப்பமது,

இன்றொரு தகவல் இனிமையாய் ஒலித்தது,

தென்கச்சி சாமியின் தெவிட்டாத கதைகளது,

பண்புடன் சொல்லும் பன்பலை செய்தியது,

என்றும் அழியாது எந்நாளும் நிலைத்தது!

காற்றினில் வந்திடும் கீதமே வருடுது,

உற்சாக ஊற்றாய் உழைப்பாளி சுகமது,

நற்றாய் போலவே நவின்றவள் வானொலி,

பொற்றா மரையாய் போற்றிடும் நாளிதே!

 

இர.அலமேலுரூப்சேகர், (ஆசிரியர்)

அரக்கோணம்.

இராணிப்பேட்டை மாவட்டம்.

 

042.காற்றின் மொழி

 

கரிய வண்ணம் கொண்ட குயில் ,

அழகிய பாடலை அற்புதமாகப் பாடியது,

இராக தாளம் எல்லாம் சிறப்பு,

பாராட்டுவதற்கோ யாரும் இல்லாத ஏக்கம் .

ஆகச் சிறந்த கருத்துக்களைத் தொகுத்து,

அன்பர் ஒருவர் அருமையாகப் பேசினார்,

யாரும் கரவொலி எழுப்பவில்லை என்பதால்,

கண்ணீர் சிந்தி ஒதுங்கினார் அவர் .

காற்றின் மொழி அங்கீகாரம் பெறுமா?

கடவுளின் சித்தம் யார் அறிவார்?

கதை கூறும் திறனையும் மதிக்கும்,

கலை வந்து கவலை தீர்த்தது.

புல்லாங்குழல் இசைக்கும் கலைஞரின் புகழ்,

கவிதையை வாசிக்கும் கவிஞரின் குரல்,

வானொலி என்னும் வரத்தின் மூலம்,

வானமளவு உயர்ந்து உலகோரைச் சேர்ந்ததுவே!.

 

ஜெயசித்ரா சுந்தரராஜன்,

ஸ்ரீவில்லிபுத்தூர்

 

043.காற்றின் மொழி

 

காலை வேளையில் எழுந்து என்னை

கடமை செய்திட வைத்த வரம்.

கருத்து பலசொல்லி எனது நெஞ்சில்

அறத்தை வளர்த்திட்ட அன்பு நிலம்

புதிய தகவல்கள் பல தந்து

உலகு போக்கை சொல்லிய புனிதத்தலம்

பொறுப்புடன் கல்வி ஒலிபரப்பை

விருப்புடன் தந்த விளைச்சல் களம்

இயல், இசை கூத்தின் மூலமாக

இனிய கலைகளை வளர்த்த இடம்

அரசின் திட்டத்தை ஊர் சுற்றி

அறிய வைத்ததில் அது படுசுட்டி‌.

கிரிக்கெட் வர்ணனை தருவதிலே இது

கில்லாடி  என நாம் அறிந்ததுவே.

நாடகம் ,இசை அவை ஒலிபரப்பி

நம்முள் மலர்ந்தது மணம் பரப்பி.

அரசு விழாக்களில் அதன் கவனம்

அதிகம் இருக்கும் பொறுப்பு உடனே

ஆலய விசேஷம் அனைத்திலும் அதன்

ஆட்சி நடக்கும் சிறப்பு உடனே.

உற்ற தோழனாய் எங்கள் நெஞ்சில்

உறவாடி மகிழ்ந்தது வானொலி தான்.

உயரிய நேர்மறை சிந்தனை பல

ஊட்டிய நன்றியை என்றும் மறவோம்.

கவிஞர் .ஆறுமுகம்

ஏம்பலம்,

புதுச்சேரி.

 

044.காற்றின் மொழி.

காலையில் எழுந்திட கோழி கூவும்

வானொலி எழுந்திட அழகான ஓசையெழும்

வந்தே மாதரம்  பாடலோடு தொடங்கும்

ஆகாச வாணி செய்திகள் வாசிப்பது

கணீர்  குரலில் வாசிப்பார் சரோஜினி

இதயத்தை வருடும் காலை  பாடல்

நண்பகல் இனிமையான நாடகம் கொடுத்தது

காதுக்கு வெள்ளித்திரையின்  பழைய பாடல்கள்

விவசாயிகளுக்கான வேளாண்மை கல்வி நிகழ்ச்சி

காணாமல் காதில் கேட்கும் திரைப்படம்

மாலையில் மேசையின் மேல் வானொலி

வட்டமேசை மாநாடு  கேட்கும் மக்கள்

மாணவர்களின் கல்விச்செய்தியும் கலை நிகழ்ச்சியும்

காதுகளில் மட்டுமே கேட்கும் நேர்காணல்

வானொலியில் கேட்கலாம் புயல் செய்திகள்

மீனவர்கள் பகுதியிலே வானொலி முக்கியமானது

காலையிலும் மாலையிலும் அன்றாட செய்திகள்

அன்றைய கதாநாயகன் வானொலி மட்டுமே.

பொ..மகாலட்சுமி

கோவை.

045.காற்றின்மொழி

 அலை வழி அமுத சுரபிகள்

 ஆவலாய் காவல் கொள்ளும் செவிகள்

 இசை தரும் மொழி வசமாய்

 ஈர்ப்பு விசையால் அசைந்தாடும் தொடரே

 உலகை நாளும் ஆளும்  பயணம்

 ஊதினால் போதும் வெற்றிடம் மோதும்

ஐவகை ஆற்றலில் மா மிகை நீயே

என்வசம் இயம்பு தொடர்பலை நீயே

ஏற்புடைய சீர் தடம் நீயே

ஒளி வலியால் துருவங்கள் தொடுவாய்

ஓம் எனும் ஓசை  ஒளியலை 

வானில் மிதக்கும் வானொலி நீயே

 காணம்  செவிக்கு கருத்தேர்க்கும் சிந்தை

 ஆகாச வாணி ஆனந்த கலைவாணி

 காற்றில் கலந்த ஆற்றல் பெருமை

 தொலைத்தொடர்பில் நீபிறந்த பெருமை

 அற்புத  மொழிப்பிறந்த வழித்தடம் நீ

 காற்றலையின்  ஆற்றலை அதிர்வலை கூறும்

 எம்மொழியும் முன்மொழியும் காணாத காற்று

 அலைபேசி காற்றையும் விலை பேசி

 சந்தைப்படுத்தும் விந்தையில்

முந்த முடியாது

 

 கவிதாயினி . ஜெயச்சந்திரிகா,

செங்கல்பட்டு மாவட்டம்

 

046.காற்றின் மொழி

காலையில் எழும்பும் கதிரவன் போல

வானொலியின் கூக்குரல் என்னை எழுப்பிட

வானொலி பேச்சாளர் வணக்கம் சொல்லிவிட

எனது காலை வேலைகள் தொடங்கும்..!

கையில் தேநீர் குவளையுடன் அமர

காதுகளில் செய்தித் துளிகள் பாயும்

காலைக் குளியலில் நீரில் நனைய

வானொலியின் இன்னிசையில் நானும் நனைத்தேன்..!

என் பணிக்கு செல்லும் நேரத்திலும்

பிறகு யாரும் இல்லா தனிமையிலும்

என் மனம் சோர்வடையும் வேளையிலும்

எனக்கு பக்கபலமாக இருக்கும் நண்பன்..!

மாலை வேளையில் தென்றல் தீண்டிட

என் காதுகளுக்கு காற்றின் மொழியாம்

கீதங்கள் பல பாடியும் எனது

நாளின் பயணத்தை சிறப்பாக கடத்துபவன்..!

-கார்த்திக் அரியநாதன்,

சென்னை.

 

047.காற்றின் மொழி

 

காற்றில் கலந்து வானில் மிதந்து..

கீற்றாய் வந்து  மனதில் பாயும்...

இசையாய் அசைந்து திசைகள் பரந்து...

பசையாய் ஒட்டி விசையாய்ச் சேரும்...

அலையாய் நடந்து கலைகள் பயின்று ...

வலையாய் இன்பச் சிறையில் தள்ளும்...

கடல்கள் கடந்து மடல்கள் பகர்ந்து...             

உடல்கள் பிரிந்தாலும் உள்ளங்களை இணைக்கும்...

குரல்கள் வழியே நிரல்கள் கேட்டு...

விரல்கள் அசைத்தே விருந்தும் சமைக்கும்...

காலைப் பொழுதில் சாலை எங்கும்...

வேலைக்கு ஊக்கம் தந்தே சிறக்கும்...

மாலை நேரம் ஓலை ஆகும்...

மாலையாக மணமாய் மனதை வருடும்...

காலை மதியம் இரவு எனவே...

வேளை மூன்றும் செய்திகள் பகரும்...

காற்றின் மொழியாய் வீற்றே இருக்க..

ஆற்றும் சேவை என்றும் வாழ்க...

 

கவிதாயினி பஸ்லா பர்ஸான்,

 காத்தான் குடி,

 இலங்கை.

 

 

048.காற்றின் மொழி

 

 

ஒவ்வொரு மனிதனின் கடந்துபோன காலநினைவுகள்.

ஒருநாளும் அழியாமல் நிலைத்திருக்கும் காலநினைவுகள்.

நம்மை காக்கும் பகுத்தறிவு பெட்டகம்.

நம்மை செதுக்கும் முன்னோரின் பட்டறிவு.

பாரதியும் வரிகள் பாரில் பழித்திட

கற்றல் கற்பித்தல் சிறப்பாக செயல்பட

சிறுவர்களும் பெரியவர்களும் சிறப்பாக வாழ்ந்திட

கனவை நினைவாக்கி கவலை போக்க

தித்திக்கும் இனிப்பாய் நாள்தோறும் இனித்திட

செவியில் இன்பத்தேன்  நித்தம் பாய்ச்சிட

 இயந்திர வாழ்க்கையில், நம்மை இயல்பாக

 வைக்கவும், நம்மை யாரென்று நமக்கே

 மீண்டும் அறிமுகம் செய்வதும், நாம்

 கடந்து வந்த பாதையின் நினைவுகள்.

 அப்படி காலத்தால் அழியாத நினைவுகளின்

 கவிதை தொகுப்பே "காற்றின் மொழி"

சமூக சேவகர். புலவர்..வாசுதேவன்,

நாமக்கல் மாவட்டம்.

 

049.காற்றின் மொழி!

 அலையின் மொழி இசையால்

அசைவின் மொழி உணர்வால்

உணர்வின் மொழி பசியால்

பசியின் மொழி மடலால்

மடலின் மொழி எழுத்தால்

எழுத்தின் மொழி அமைதியால்

நிம்மதியடைகிறேன்

எழுத்து.கம நிறைவால்.....!

நினைவால் நீ பேசும் மொழி

எம்மொழியோ?

கிள்ளை மொழியா?

மனதின் மொழியா?

சிரிப்பின் மொழியா?

ஆனந்தத்தின் மொழியா?

இதயத்தின் மொழியா?

 இவையெல்லாம் சேர்த்துக்

கோர்த்த உயிரின் மொழியாம் !!!

கவிதை குழவியின் மொழி

நிம்மதி பெரு நிலையில்....!!!!

 

முனைவர், எஸ்.கிரேசிராணி,

துணை முதல்வர்,

விநாயகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கீழப்பழுவூ

 

050.காற்றின் மொழி!

மலையில் மடி சாய்ந்து கொள்ளும்

செங்கதிர்களை

 காதலோடு அணைத்துக் கொள்கிறது

வெண்பனியின் தேகம் தேக்க மரங்களை

நாணம் துறந்து பின்னிக்கொள்ளும்

குறுமிளகுக் கொடிகளின் வாசத்தில்

நாள்தோறும் புதிதாய் முளைக்கிறது

சூரியன் தொடர்ச்சியான மலைகளை

அலகில் கவ்விப் பறக்கிறது அடைக்கலான்குருவி

குறிஞ்சி பாட்டிசைக்கும்

அருவிக்கு ஏற்பத் தலைவிரித்தாடும்

காட்டின் நாட்டியத்தில் அத்தனை நவினம் !!

மூங்கில் மலரின் வாசத்தை

கடத்தும் பட்டாம்பூச்சியும் நிலவொளியைக் களவாடும்

வீட்டில் பூச்சியும்

வனாந்திரத்தை இறகுகளால் போர்த்தி விளையாடுகின்றன.!!!

 முனைவர் ஜோ.ஜெயா ,

முதல்வர்

விநாயகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,          

கீழப்பழுவூர்.

 

050.காற்றின் மொழி!

 

அதிகாலையிலே நீ எழுப்பும் குயிலோசை .....

ஆர்வமாய் என்னை எழுப்பும் உன் காற்றின் ஓசை.....

இதழ்களிலே உண்மையை காட்டும் உன் அருளோசை.....

ஈடுபாட்டுடன் என்னை சிந்திக்க வைக்கும் உன் கருத்து ஓசை.....

உண்மை உறைக்கின்றாய் சப்தமாய் .....

ஊர் அறிய வைக்கின்றாய் சகாப்தங்களை .....

எத்தனை எத்தனையோ தகவல்களை உன் அகத்தே வைத்து .....

ஏன் என்னை உன் காதலிலே சிக்க வைத்தாய் .....

ஐயம் தெளிய உன் பின்னே நான் சுற்றுகிறேன் .....

ஒற்றுமை எண்ணம் உன் மனதில் அனைவரையும்

இணைக்கின்றாய் ஓரிரு இமை பொழுதில் .....

ஓங்குக நீ காட்டும் சமதர்மம் கண பொழுதில்.....

ஒளடதமாம் நீ புகட்டும் மருத்துவ சகோதரத்துவம் .....

அஃதே உன் தேன் மதுர இதய ஓசை என்னும் பக்குவம் .....

 

.புனிதா கனிமொழி

சங்கராபுரம்.

 

052.காற்றின் மொழி

வற்றாதமொழி வானொலி...!

வானொலி  ஒருநாளும் வற்றாத  ஜீவநதி ...

எப்போதும் குறைவில்லாத இனிப்பையே தரும்...

குழந்தைகளை தாலாட்டித்தூங்கவைக்கும் தொட்டில்...

விளையாட்டு போட்டிநடத்தும் ஆசிரியப் பெருந்தகை...

ஒருநாலும் குறையாது இயற்க்கை  தந்த பரிசு..

செய்திகளை உடனுக்குடன்  உடனேசொல்லும் நண்பன்...

அரசியலை அப்படியே சொல்லும்  மங்காத அழகுநிலா..

அவ்வப்போது குறையாமல் பாசம்காட்டும்  அம்மா அப்பா...

அனைவருக்கும் அழகிய குரல்தரும்  குயில்...

குறையில்லாத சிரிப்பில் குளிரவைக்கும் குழந்தை...

ஒரு நாளும் பொய்சொல்லாத உண்மை உத்தமி..

கஷ்டத்திலிருப்பவருக்கு நலம் தரும்  கடவுள்...

தாலாட்டுப் பாடும் ஒருநாளும் குறையாத  தென்றல்...

கேட்டுக்கொண்டேயிருக்கலாம் அமுத  தேன்சுவை..

முக்கனி சுவையும் வானொலியிடம் தோற்றுப் போகும்..

கேட்டுக்கொண்டேயிருந்தால் மனிதனுக்கு பசிமறக்கும்...

வானொலியை கண்களில் காண வாய்ப்பில்லை...

கேட்கலாம் ஒருநாளும் குறைவில்லாத சொர்க்க பூமி...!

 

முனைவர். வீ. உமா.

இயக்குநர்.

உடற்கல்வி துறை.

து மகளிர் கல்லூரி

நாகப்பட்டினம்

 

053.காற்றின். மொழி

 ஊனாய் உயிராய் ஆனாய் நீயே ...!

 தேனாய் இனிக்கும் தெள்ளமுதே ....!

 கானம் பலவும் தந்தாய் நீயே...

 கானக் குயிலாய் கவிதை தந்தாயே....!

 உரமாய் உறவாய் ஆனாய்   நீயே ....!

 வரமாய் வந்த வானொலியே. ...!

 கரமாய் வந்த காற்றின் மொழியே ....!

 சிரம்மேல் வைத்தேன் கனிமொழியே ...!

 

 எத்தனை எத்தனை நன்மொழிகள் ....!

 அத்தனையும் உன் அருள்மொழிகள் ...!

 பித்தனைப்போல் சுவைக்கும்  என் செவிகள் ....!

 அத்தனையும் காற்றினிலே வரும்  உன்மொழிகள் ...!

          கதிர்பாரதி

        கிருஷ்ணகிரி

 

 குறிப்பு :  ‌மேற்கண்டஇந்த. கவிதையைஇசையோடு

பாடுவதற்குஇயலும். வாய்ப்பு. உள்ளவர்கள். பாடி. மகிழலாம்.

 

054.காற்றின் மொழி

அனுதின உழைப்பாளி முதல்

அணுவை ஆய்வு செய்யும் அறிவியலாளர் வரை

இளைப்பாறிச்  செல்ல தன் கரம் கொடுக்கும்

இலகு மொழி

பூக்களைத் தொடுப்பவரும்

தம் எண்ணங்களைத் தொடுக்க,

குழந்தைகளும் , இளம் பருவத்தினரும் 

கொண்டாடும்   இன்ப மொழி....

நிமிடத் தகவல் துணுக்குகள்

அறிவுத் தேடல் அறியா வினாக்கள்

என கொண்டு கூட்டும் இலக்கிய மொழி

அவசரக் காலங்களில் அருமருந்தாய்

மன அழுத்தம் நீக்கும் நிவாரணியாய்

குடிசைகளும் கொண்டாடும்

குழந்தையாய் மகிழ்ச்சியை அள்ளித்

தெளிக்கும் அற்புத மொழி...

காலத்திற்கு ஏற்ப ஏற்றங்களுடன் பன்முக ஆளுமை,

சுவை மிகு சொற்கள் இனித்திடும் குரல்

விடுமுறை குதூகலம்

என வானொலி பேரின்ப  மொழியே....

வாழிய! வாழிய!

       - கிரேஸி மேரி.

       திருச்சிராப்பள்ளி.

 

055.காற்றின் மொழி

 

மார்க்கோனியின் மகவாய்ப்பிறந்த

காற்றின் மொழியே!

அலையாய் பிறந்து மொழியாய் வளர்ந்தாய்!

உடலின் உயிராய்க்காற்றில்  கலந்தாய்!

மானிடர் வாழ்வில் முதலிடம் பெற்றாய்!

கீதமாகி நெஞ்சில் கனிவாய்க் கலந்தாய்!

மலழைக் எல்லாம் கதைகள் சொன்னாய்

பள்ளிக் கெல்லாம் பாடம் சொன்னாய்!

மங்கையர் வாழ்வில் ஊக்கம் தந்தாய்!

மக்கள் விரும்பும் இன்னிசை தந்தாய்,!

அனுதினச் செய்தியை அழகாய்ச் தந்தாய்!

அனைவர் விருப்பும் நேயர் விருப்பம் தந்தாய்!

இயற்கைச் சூழலை எடுத்துச் சொன்னாய்!

உழவர் வாழ்வுக்கு ஊக்கம் கொடுத்தாய்!

காலத்தை கணக்கிட்டு கனிவுடன் சொன்னாய்!

காற்றின் மொழியாய் கலந்தவள் இன்று!

முகவரி தேடிக் கலங்கி நிற்கின்றாய்!

உன்னால் தானே உலகம் வளர்ந்தது!

உன்பிறந்த நாளை கொண்டாடி மகிழ்வோம்,!

 

 ஜே.குணசுந்தரி,

ஒத்தக்கால் மண்டபம்.

 

 

056.காற்றின் மொழி

 

காற்றில் பேசும் மொழிகள் ஆயிரம் இருக்க

வெட்ட வெளியில் வீட்டின் முற்றத்திலும்

பெண் பேசும் உணர்ச்சிகள்

யாரும் அறியும் முன்னே

காற்றோடு கலந்து விடுகிறது

இனிய கீதம் வானக்கதிர் அதிர்வுகளின்

ஒத்திசைவில்

முகமறியா குரலுக்கு அடிமையானவர்கள்

இங்கு ஆயிரம் உண்டு ...

அவள் தாளிதத்தின் வாசனையும்

உன் சமையல் குறிப்பும் தவழ்ந்து காற்றினூடே

ஊடுருவி வீட்டை மணம் பரப்பும்...

சில உள்ளங்களையும் கவரும்

யாரும் இல்லா இனிய பொழுதுகளில்

மனம் தேடும் உரையாடல்

அவள் விருப்பத்தையும் நிறைவேற்றும் ஒற்றை மனது

தேனினிக்கும் தெம்மாங்கும்,

காதல் தேடும் காவியமும்

இசைக்கும் தெய்வீகத்தின் உறைவிடம்...

அவள் தனிமையை தனக்காக அடமானம்

வைத்து உன்னிடத்தில் நிரப்பும்

குழந்தை போல் தவழும் அலை வரிசையில்

நின் மனம் திளையும்...

ஜே. கே.ருத்ரா

இராஜபாளையம்.

 

057.காற்றின் மொழி

காற்றின் மொழி..

இனிய காதல் மொழி..!

இன்புறும் கவிதை மொழி!

அறிவுறும் அதிசய மொழி!

நகைப்புறும் சிலேடை மொழி!

வழி காட்டும் வாழ்க்கை மொழி!

உணர்வூட்டும் உவகை மொழி

உயிரூட்டும் உன்னத மொழி!

தெய்வீகத்தின் தேவ மொழி!

தாய்நாட்டின் தேசிய மொழி!

தலை நிமிரச் செய்யும்

தாய் மொழி!

தேனினும் இனிய

நம் தமிழ் மொழி!

 

நாகை.எஸ்.பாலமுரளி.

பத்திரிகையாளர்.

செயலாளர்,

தமிழ்நாடு திருவள்ளூர் அறக்கட்டளை,

சென்னை.

 

058. காற்றின் மொழி

அறிவியல் வளர்ச்சியில் அரிய சாதனை

 விந்தைகளைக் கடந்து தொடரும் அதிசயம்

காற்றிலே தூதுவிட கண்டுபிடித்த அறிஞரே

கானமழையில் நனைகிறோம் உங்களால் தானே

 மார்க்கோனி என்று பெயர் பெற்றவரே

 மாற்றம் நிகழ்ந்தது உங்களால் அல்லவா

 உலகெங்கும் அறிவியல் புரட்சி ஏற்பட்டதால்

 போர்முனையில் உள்ளோருக்கும் மிக்கபயன் ஏற்பட்டதே

 உலகத்தில் எங்கோஓர் மூலையில் ஒலிபரப்ப

 வினாடியில் நம்மிடம் கொண்டு சேர்க்கிறதே

 இருபதாம் நூற்றாண்டில் முக்கிய கண்டுபிடிப்பு

 பல்வேறு துறைகளுக்கும் பயனுள்ளதாய் அமைந்ததே

 இன்றைய தொலைக்காட்சிக்கு முன்னோடியாக இருந்து

அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டதே

 கடல் கடந்தும் காற்றில் தவழ்ந்து

 கிராம மக்களின் பொழுது போக்காய்

 செய்திகளையும் பாட்டுக்களையும் கொண்டு சேர்த்து

 இன்றும் அழியாமல் சிறப்பு செய்கிறதே.

சு. நடராஜன் ,

சிவகிரி,

ஈரோடு மாவட்டம்.

 

059. காற்றின் மொழி

 

மெல்ல உரசும் செல்லக் காற்று,

காதோடு கொஞ்சும் தேன் கிண்ணம்.

காற்றுக்கும் உண்டோ மொழி?

 காற்றின் மொழி ஆகும் வானொலி.

எத்தனை எத்தனை அர்த்தமுள்ள ஒலியின் மொழி!

காலையில் பாடும் வானொலி கீதம் கேட்டு,

பின் செய்திகள் வாசிப்பது இன்னார் என்று அறிந்து,

கையில் தேனீர் கோப்பையுடன்

பக்தி பாடல்கள் செவி சாய்க்க

இது அல்லவோ காற்றின் மொழி!

 சிறுவர் நிகழ்ச்சி,இளைய பாரதம்,

நெகிழ வைக்கும் மாதர் நிகழ்ச்சி, இசை அமுதம் ,

வயலும் வாழ்வும் என்று வகை வகை ஆகும் வானொலி மொழி.

ஆயிரமாயிரம் மைல்கள் தொலைவில் உள்ளது

உள்ளபடியே நடப்பதை விவரித்து காட்டும்

வானொலிக்கு உண்டோ ஈடு?

மௌனமே மொழியானல், வானொலி மொழி

சுகமான அனுபவம் அன்றோ?

காற்றோடு காற்றாய் இழைந்து,

கருத்துக்குள் நுழைந்து

மனதை கொள்ளை கொண்ட வானொலி

புகழ் பாடாமல் மனம் ஆறுமோ?

வாழ்க வாழ்க!

வானுயர வானொலி புகழ்!!

விஜயலக்ஷ்மி கண்ணன்

சென்னை.

 

060. காற்றின் மொழி

கண்ணோடு கண் பேசும் மொழி மறந்து

மனதோடு மௌனம் பேசும் மொழி மறந்து

கண்ணோடு கவி பேசும் மொழி மறந்து

காற்றில் வரும் மொழி மறந்து

இன்று கைபேசி மட்டும் உறவு என்று

உறவுகளை மறந்த வேளையில் மீண்டும்

உறவென்று எங்கள் இல்லம் தேடி வந்தவளே

என்றும் எங்கள் மனம் மகிழ்ச்சி பெற

காற்றின் மொழியாய்

கண்ணோடு மட்டுமல்ல

காதோடு மட்டுமல்ல

மனதோடும் உன்னோடு காற்றின் மொழி

பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி

நீ பிறந்தநாளில் உன்னோடு சேர்ந்து

பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி   .....

 

சே.பூங்கொடி சேகர் திருப்பூர் பொங்கலூர்.

 

061. காற்றின் மொழி

வெட்ட வெளி வானத்திலே வட்டமிடும் பறவை போல

கலையான வானொலியே கானம் பாட வந்தாயே!

அன்பு கனிந்திடும் சொற்களைப் பேசி

உறவானது மனதில் இதமானது நினைவில்!

துன்ப நரகில் சுழலும் போதும் துண்டு துண்டாய்

 உடைந்த போதும் இன்பம் என்றொரு

உலகம் தோன்றி கேட்டதும் இன்பம்

கிடைத்ததும் இன்பம்!

ஞாலம் முழுவதும்

ஆளுகின்றான் கதிரோன்!

காற்றெல்லாம் ஆழ்கின்ற வானொலியை

என்னென்று சொல்வேன்!

 

ஜெயலட்சுமி.கே

திருவனந்தபுரம்.

 

062. காற்றின் மொழி

 

காற்றே! உன்

ஓர் இழைதான் பெண்ணோ?

கொண்டலாய், தென்றலாய்

வாடையாய், மேலைக்காற்றாய்

பலவேடம் தரித்தும் என்?

தாயின் மணம் அறியும் மழலையாய்

அதிகம்தான் பெண்சாயல் உன்னிடம்!

உன் மொழி அவள் வசனம்!

ஊமையாய் நிற்கும் மரத்திடம்

மந்திரச்சொல் நீ சொன்னது என்ன?

இல்லை, கொடுத்தது என்ன?

புது மணமகனைப் போல் தலை

கிறுகிறுத்து ஆடுகிறது!

நதியென்னும் ஆடையில்

எத்தனை உன்  விஷமத்தனம்!

வளைந்து நெளிந்து ஆடி ஓடுகிறாள்!

அத்தனையும் அழகு!

காண முடியாத உன்னை

தேடிப் பார்க்கிறேன்! பிடிக்கப் பார்க்கிறேன்!

ஓடி ஓடிப் போகிறாய்!

அலமந்து போகையில் என்

செவியருகே கிசுகிசுப்பாகப் பேசுகிறாய்!

என்ன மொழி அது? புரியவில்லை!

நிறைய நிறைய பேச ஆசை

உன்னிடம்!

இருக்கட்டும்!

என்  சுவாசத்தை நீ

புதுப்பிக்கும் ஒவ்வொரு நொடியும் நினைக்கிறேன்,

என் மூச்சுக்காற்றின் வெம்மை

காயப்படுத்திவிடக் கூடாது உன்னை!

முடியுமா? தெரியவில்லை!

முனைவர் இரா சீதா,

இணைப்பேராசிரியர்

புனித பிலோமினாள் கல்லூரி,

மைசூரு

 

063. காற்றின் மொழி

காற்றில் கலந்து வரும்  தேனமுதமொழி

காலையில் கேட்கும் நாதயின்னிசை  மொழி ."

கற்பனையில் . கொ  ண்டு  . செல்லும் பாடல் மொழி

  ஞாயிறு எனில் பாப்பாமலர்  தந்த மொழி”

 தென்கச்சியின் இன்றொரு    தகவல் தந்த மொழி "

பலரும் கேட்கும்  நல்பக்தி மனம் கவரும்மொழி "

இரவில் AS.ராஜாவின் தமிழ் தேனருகி மொழி "

தந்தனத்தோம்  என்னும் வில்லுப்பாடல்  மொழி

பாரதத்தின் பன்னிசையில்  பன்பலை மொழி "

காற்றின் வழியே காதில் ஒலிக்கும்மொழி”

கற்பனையில் மிதந்தேபறந்திட வைக்கும் மொழி”

காலமெல்லாம் மனதை  மயக்கும் காற்றின் மொழியே!

 

064. காற்றின் மொழி

பார்வை படாது பருவம் கற்றவளே..

உருவம் தெரியாது  உணர்வை தொட்டவளே...

சுவை அறியாது  சுகம் கொடுப்பவளே...

மருந்து அறியாது  நோய் தீர்ப்பவளே..

வளம் பெறாது  வனம் வளர்ப்பவளே...

களம் ஏதுமின்றி  கனவுகளை விதைப்பவளே..

இடம் அறியாது  இமைக்குள் வசிப்பவளே...

எழுத்துகள் ஏதுமின்றி எண்ணங்களை உயர்த்துபவளே..

உன் குணம் கண்டு  குளைந்தது மனித மனம்...

என் சுவாச காற்றே  பூமியெங்கும் உன் ஊற்றே...

என் இனிய காற்றின் மொழி தான் என்னவோ...?

மொழி இன்றி சரிதம் எழுதுகிறாயே.. ..!!

 

ரா. ராதிகா

இளங்கலைத் தமிழ்

புதுக்கோட்டை மாவட்டம்.

 

065. காற்றின் மொழி

வானொலி மக்களிடம் விரைவாக செய்திகளை கொண்டு சேர்ப்பதும்,

வானொலி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை கொடுப்பதும்,

வானொலி என்றாலே அன்றும் இன்றும் நேயர்களை அதிகரிப்பதும்,

வானொலி வானிலை ஆராய்ச்சி முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை கொடுப்பதும்,

வானொலி என்றாலே இனிய பாடல்களை கேட்பதும்,

வானொலி நேயர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே /

வானொலியின் தந்தை மார்க்கோனிக்கு நன்றிகள் உரித்தாகுக.

-வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்.

 

066. காற்றின் மொழி

சன்னல் கதவு திறந்து முகம் தீண்டும்

காற்று வந்து பேசும் காலை மொழிகள்

கனவுகள் கலைத்து கதை சொல்லும் வானொலி

காற்றின் மொழிதனை இதயத்துள் கடத்தும் தோழன்

கடவுளின் வாழ்த்தையும் நாட்டின் நிகழ்வுகளையும்

ஏந்தி வந்து இதமாய் மனம் வருடும்

திரைஇசைப் பாடல்களை கண்மூடி ரசிக்க வைக்கும்

 இன்னிசைக் கச்சேரிகள் தாராளமாய் தலையாட்ட லாம்

 ஒலிச்சித்திரமும் நேயர் விருப்பமும் சமையல் குறிப்பும்

 வானொலி அருகிலேயே அமர வைக்கும்

 படப்பாடல்களுக்கு திரை மறைவில் நான்ஆடியது

 இன்னும் நினைவுகளில் இனிமை கூட்டுது

 உலகின் எந்த மூலையிலிருந்தும் வேறு எந்த மூலைக்கும்

 காற்றலைகள் வழியே மொழி பேசும் வானொலி

 அறிவியலின் ஆகச்சிறந்த கொடை

 தொலைக்காட்சியின் கவர்ச்சிகளையும் தாண்டி இன்றளவும்

 மனிதம் காக்கும் மாண்புமிகு வானொலி

 வியப்புமிகு விஞ்ஞான விந்தை மனிதனுக்கு வரம்

 மனதுக்கு நெருக்கமான தோழமை காட்டும்

 வானலையில் மிதந்து வந்து வீட்டுக்குள் வரும்

 இனிய விருந்தாளி நிகழ்வுகளால் மகிழ்வூட்டும்

 விஞ்ஞானி காற்றின் மொழியாய் வீட்டுக்குள் வானொலி!!

 இரா. பானுமதி. சென்னை.

 

067. காற்றின் மொழி

தூக்கம் எழுப்பும் முதல் குரலாய்

தூங்க வைக்கும் கடைசி குரலாய்

நடுக்கத்தில் உற்ற தோழனாய்

நடு இரவின் காதலனாய்

குளியலறையில் அரசியாய்

கற்பனையின் காதலியாய்

புலம்பலில் சங்கீதமாய்

சமையறையில் ராணியாய்

தகவல்களில் தளபதியாய்

நேரம் காட்டும் கடிகாரமாய்

செய்திகளை உரைப்பதில் தோழியாய்

ஆறுதலில் தோழனாய்

அனைத்தையும் தந்த

வானொலியே காற்றின் மொழியாம்

 

முனைவர்.ரா.சுனிதா,

கௌரவ விரிவுரையாளர்,

தமிழ் துறை,

அரசு கலை அறிவியல் கல்லூரி,

கோவில்பட்டி.

 

068. காற்றின் மொழி

இந்திர மாயத்தால் விளையாத தந்திரமே

எந்திர அறிவினால் உருவான மந்திரமே

சந்திரனாய் மனதை குளிர்விக்கும் சுந்தரமே

இந்திரியங்களை இழுக்கும் வசிய யந்திரமே

கவலைகள் அனைத்தையும் மறக்கச் செய்வாய்

கல்லான நெஞ்சத்தையும் சிரிக்கச் செய்வாய்

புன்னகையை முகத்தில் மலரச் செய்வாய்

புண்ணான இதயங்களில் வாசம் செய்வாய்

ஓயாத வேலைகளுக்கு தீராத மருந்தாவாய்

மாறாத உழைப்பிற்கு சோராத விருந்தாவாய்

சாயாத முயற்சிக்கு சாகாத வரமாவாய்

வீழாத மனதிற்கு காயாத உரமாவாய்

கேட்கக் கேட்க ஈர்க்கும்  உன்ஒலி

ஈர்க்கக் ஈர்க்க எழுந்திடும் கரஒலி

எவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும் மாயஒலி

 எவருக்கும் சொந்தமாகும் நீயே வானொலி ....

 க. ராஜேஷ், சிதம்பரம், கடலூர்.

069. காற்றின்மொழி

தென்றல் காற்றே! உனக்கும் மொழியுண்டு...

என்று கருவி வடிவில் வந்த தோற்றமே!

பூங்காவில் கட்டியிருக்கும் ஒலி பெருக்கியில்

பொங்கும் கடலோசைபோல் எழும் கீதமே!

 

எங்கிருந்து வந்திங்கு குடியமர்ந்தாயென்று

எங்குமசையா விழிகளால் பார்த்தகாலமுண்டு

திருமணப்பந்தலில் உன் அரசாங்கமே!

திருமகளென மணமகள் மயங்கிய உன் நாதமே!

திருவிழாவில் உன்னால் பக்திப் பரவசமே!

இசையருவி பாட்டருவி தந்த காற்றின் கீதமே!

விசையுடனே செவி புகுந்த தேன்கிண்ணமே!

திசையெங்கும் ஒலிச்சித்திரக்கலைக்கூடமே!

இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு

இராசாவும் மயில்வாகனனும் மின்வேகத்தொகுப்பு

அப்துல் அமீதின் பாட்டுக்குப்பாட்டின் படைப்பு

அமுதகானம் சிறப்போ வெகு சிறப்பு!

மார்க்கோனி விதைத்து விருட்சமடைந்த ஆகாயவானி

மானிடர் மகிழ காற்றில்கலந்துவரும் கலைவாணி

கைபேசியும் உன் வம்சமன்றோ!

கைகொடுத்த தெய்வம் நீயன்றோ!

கலை நன்மணி

கவிஞர் அ. சை. தஸ்தகீர்

திருச்சி

 

070. காற்றின் மொழி

உதிக்கும் சூரியன் உயர்ந்தே வானில்,

பறவைகள் பறந்ததே வீசிடும் ஒளியில்

விழிகள் திறந்ததே வானொலி இசையில்

மனமும் மயங்கியதே பழைய பாடலில்

இலக்கியம் தத்துவம் இணைந்ததே எண்ணத்தில்

நன்மைகள் நாளும் கிடைத்ததே வாழ்வில்

தீமைகள் ஒழிந்ததே தீபமாய் வாழ்க்கையில்

அறிவியல் போதனை ஆழமாய் சிந்தனையில்

வளர்ந்ததே ஞானம் கேட்ட பொழுதில்

கவலைகள் குறைந்ததே நகைசுவை நாடகத்தில்

நாட்டு செய்திகள் நாள்தோறும் காலையில்

பொதுயறிவு நிறைந்ததே பொழுதுபோக்கு  நேரத்தில்

செவியும் குளிர்ந்ததே செந்தமிழ் குரலில்

காதல் கதைகள் கவர்ந்ததே உள்ளத்தில்

கவிதைகள் பிறந்ததே காகிதம்  மடலில்

புதிமை பாடல்கள் புகுந்ததே இதயத்தில்

உறக்கம் சொம்பல் மறைந்ததே உடலில்

மனிதனை இழுக்குதே மகிழ்ச்சியை தந்திட

பவித்திரா சிவலிங்கம்

மலேசியா.

 

071. காற்றின் மொழி

 காதோடு உரசும் காற்றின் மொழி

 நாற்றோடு பேசும் நல்லதொரு தாய்மொழி

 வேலையோடு என்னை தாலாட்டும் ராகமிது

 சிக்கலைத் தீர்க்கும் சிங்கார கானமிது

 இசையோடு விடியும் என்காலைப் பொழுது

 இனிதாகச் செல்லும் இதமாக எழுப்பும்

 காற்றின் ஒலியில் கதைத்திடும் நாதம்

 சிந்தையேரி நாயகித் தோற்றம் புரியும்

 துன்பத்தின் பொழுதும் தோழியாக என்னுள்

 துயரைத் துடைக்கும் அருமருந்தாய் அமுதகானம்

 நதியின் சலசலப்பு சலதரங்கம் இசைக்க

 சுதியுடன் கூடியராகம் சுகமாய் ரசிக்க

 தாளமிடும் மனது ததிங்கினத்தோம் ஆட

 காலினில் சலங்கை காலோடு கொஞ்ச

 காலமும் என்னுடன் கவிதை புனையும்

 காற்றின் மொழியின்  உனது மௌனராகம்/

 

 பாண்டிச்செல்வி கருப்பசாமி கோவை.

 

072. காற்றின் மொழி!

மகிழ்ச்சியின் மறு வடிவே வானொலி!

மலைத்தேனாய் செவிகளில் பாயும் ஓரொலி!

ஆகாசவாணியாய் பண்பலையாய் அவை ஒலிக்கும்!

ஆனந்தத்தின் அலைவரிசையாய் தினம் இனிக்கும்!

மார்க்கோனியின் மார்க்கமாய் வந்த பொக்கிசம்!

ஈர்க்கும் கேட்போரைத் தன் வசம்!

காந்த அலைகள் வானின் வழியாய்!

காற்றில் கலந்து பரவும் மொழியாய்!

உள்ளூரில் உள்ளதோ உலகச் செய்தியோ

உள்ளங்கையில் தருமே ஒரு நொடியில்!

திரையிசைப் பாடலைத் திகட்டாத தேனமுதாய்த்

தினந்தோறும் தருமே நம் மடியில்!

உழவும் உயர உத்தியும் உரைக்கும்!

வாழ்வும் மலர புத்தியும் புகட்டும்!

கல்வியும் தழைக்க கருணை காட்டும்!

மெல்லிடை மாதரின் நலனும் காக்கும்!

பணியும் கிடைக்க பணிவிடை செய்யும்!

வணிகம் வளர விளம்பரம் பரப்பும்!

பேரிடரின் போதும் பேருதவி புரியும்!

பேரின்பம் பெறவும் பெட்டகமாய்த் தெரியும்!

தித்திக்கும் முத்தமிழாய் எத்திக்கும் முழங்கும்!

திருநாளின் பொழுதாய் வானொலியால் கழியும்!

வயது நூறை எட்டும் வானொலியே!

வாழ்வினில் சாகா வரம் பெற்றிடு நீ!

 

 கவித் தென்றல் ஆதி!

அம்பத்தூர், சென்னை- 53.

 

073. காற்றின் மொழி,..

 

பேசிடும் வானவில் வண்ணங்களை சொல்லிடும்

காதின் வழி,  அலைந்தாடும்

மௌனத் தென்றல் அசைந்தாடும்

வசந்த வாசல் திறந்திடும் அதிசயம் ஒலி வானொலி

வீழ்த்தியது எங்களை

மயங்கி மயங்கி கிடக்கிறோம்

தயங்கி தயங்கி கேட்கிறோம் விருப்பங்களை ..

கிறங்கி கிறங்கி ஒளிபரப்பும்

வாஞ்சையோடு நெகிழ்வோடு

மகிழ்வோடு மனம் வாழ்த்துகின்றோம்

நாங்கள் வானொலி தின வாழ்த்துக்கள்.

செ.ச.பிரபு

நெல்லை நகரம்.

 

074. காற்றின் மொழி        

                                                                                                                                                                            

காற்றின் மொழியே... உணர்வின் அலையே...                                                                                                                                                                  

என்னோடு உறவாடும் உறவுகளில் என்றும்

உனக்கொரு தனியிடமுண்டு!                                                               

குழந்தைகளின் குதுகலமே!

காதலர்களின் காதலியே!

பெரியவர்களின் பொற்கலமே!

அழைத்தவுடன் வரும் விருந்தாளியா நீ?

என்றும்... எங்கள் மனதை

இதமாய் வருடிச்செல்லும்

இனிய உறவின் மயிலிறகு நீ!

பலரின்...ஏக்கத்திற்கும் தூக்கத்திற்கும்

மருத்துவன் நீ!                                                                     

உற்ற நண்பனாய்!

ஆருயிர் காதலியாய்!                                                                                                                                                                                          

கலங்கரை விளக்கமாய்!                              

ஆன்மீகவாதியாய்!                                          

பகுத்தறிவாளனாய்!                                           

இசை சக்கரவர்த்தியாய்!                                    

மெல்லிசை நாயகனாய்!                                     

பன்முகத்தன்மை கொண்டவனாய்!                   

அனைவரின் இதயத்தை ஆளும் ஆளுமை நீ!                                                             

மக்களின் மனதை வருடிச்செல்ல                   

எத்தனையோ ஆளுமைகள் வந்தாலும்        

உன்னைப்போல் ஓர் ஆளுமையுண்டோ?                     

உனக்கு நிகர் நீயேதான்!                                      

என்றும் நீ... என் மனதின்

நினைவலைகள் மட்டுமல்ல                              

என்னை விட்டு பிரியா நிழலைகள்!             

       முனைவர் . மதலேன்,

           கடலூர்.

 

075. காற்றில் வரும் கீதம்

 

காற்றின் அரசியாய் வீட்டினுள் புகுந்தூ

பாட்டுடன் பலதுமாய் நாட்டிற்கே கொடுத்தது..1

ஒலியலையாலே உலகையே ஆண்டு

கலைகளை தகவலை வானிலே விதைத்தது..2

இயல்,இசை,நாடகம் முத்தமிழதனையே

முழுஉலகிற்கும் ஒலியால் சுமந்தது..3

நேரடியாக நடப்பதை

எல்லாம் நேரலையாக வானில் தந்தது..4

பேரிடியாக நிகழ்ந்தவை

தன்னையும் பொக்கிசமாக

பேணியேவைத்து பக்குவமாக

மீட்கவைத்தது..5

பழம்பெரும் காவியம்பலதை

களத்தில் தருவதுபோல்

கலைஞர்களாலே காற்றில் தந்தது..6

கிராமத்தில் இருந்த கலைப் பொக்கிசங்களை

ஒலிப்பதிவாலே வானலையில் கலக்க வைத்தது..7

எல்லைகள் தாண்டி நடப்பவைதன்னை

செய்திகளாக்கி எம்மைச்  சேரவைத்தது..8

விளம்பரம் வியாபாரம் வியத்தகு

சந்தை வீம்பான பேச்சுக்கு

மேடையும்  தந்தது..9

சந்திதனிலும் பந்திதனிலும்

குந்தியிருக்கும் குடிசைகளிலும்

கோடிகள்புரளும் மாடிகள் தன்னிலும்

முந்திவந்து முழுவதும்  ஒலித்தது10

மழலைகள் மாணவர் மகிழ்ந்திடும்

காதலர் வஞ்சியர் வாலிபர்

வயோதிபர் கொஞ்சிட

காற்றினில் வந்து பஞ்சம்தொலைத்தது..11

காலமும் கனிந்தது ஒலியை

ஒதுக்கிட ஒளியும் புகுந்தது

வலியும் பிறந்தது வளமும் மழுங்கவே12

வானொலிச் சேவைகள்வாடிவதங்கின

வானொலிப்பெட்டியை தொலைக்காட்சி நிரப்பவே13

வீறுகொண்டெழுந்து விஞ்ஞானத்தை உள்வாங்கி

சந்தடியில்லாது சமூகத் தளங்களில்

சரித்திரம் படைக்குதே14

புதியன புகுதலும் பழையன

கழிதலும் விஞ்ஞானத்தின் விந்தைதானே 15

விந்தைகள் கண்டும் விந்தைகள்

செய்யும் முந்தியது முழக்கமிட்டு 16

சந்துபொந்தெல்லாம் சாகசம்காட்டி

வெந்தமனங்கட்கு வேதனைபோக்கிய

மந்திரக்கோலாம் வானொலி

தன்னை சிந்தைகுளிர வாழ்த்திடுவோமே..17

வையத்தில் நின்று நிலைத்து

நீடூழி என்று இன்று சந்தக்கவிபாடி

சிந்தையால் வாழ்த்துவோமே 18

 

'மறவன்புலோ'

செல்லம்

அம்பலவாணர்

கொழும்பு

இலங்கை.

 

076. காற்றின் மொழி

 

வயக்காட்டில்  கால்வைத்து  வான் ஒளி சுட்டெரிக்க

வடிந்து வந்த வியர்வையும் வீசிய  வளியில் காய்ந்து போக

இப்படியோர் நிலை ஏன் என துவண்டபோது

இதமாய் வந்து செவி வருடி வான் ஒளியை தன்

தேன் ஒலியால் சிறைபிடித்தாய்!

கல்லும் மண்ணும் சுமந்து  காலில் தைத்த

 ஆணியையும் கலங்காமல் எடுத்து வீசி

வேதனையை மறைக்க என் கால்கள்

 முழுமிதியை மறந்து விரல்களால் நடந்தபோது

உன்  கானம் கேட்டு எனைமறந்து 

முழுமிதியை மண்ணில் வைத்தேன்!

நெடுந்தூரப் பயணத்தில் நெருக்கடிக்குள் சிக்கிய

என்னை  உன் இசைமடியில் அமரச்செய்து

எண்ணுருளிகள் உருள இசைத்தேரில் செல்லச் செய்தாய்!

வீதி,மன்றம், மட மாளிகை என இசைக்காற்று

வீசச்செய்து இதமான இன்ப ஒலியால்  இதயம்

 வருடச்செய்யும் நீ ஈராயிரம் ஆண்டு

கடந்து இசை மழையைப் பொழிய வேண்டும்!

பற்பல மாறுதல்களோடு பாமழை பொழிய வேண்டும்!

 

மா.அருள்நதி  மாசிமாயன்.

 

077. காற்றின் மொழி

மார்கோனி  செய்த உன்னத படைப்பே!

வசந்த காலத்தின் அதிசய மருந்தே!

முக்காலம் உணர்த்தும்  தேன் துளியே!

இறந்த காலத்தின் ஆணி வேரே!

நிகழ் கால அளவை கண்ணாடியே!

உலக செய்திகள் காற்றில் கரையுமே!

சிறார்கள்   அறியும் எண்ண குவியலே!

இளைஞர்கள் நெஞ்சில் ஆடும் தோணி!

முதியவர்கள் மனதில் கவலை தீர்க்குமே!

படிப்பவர்கள்  கையில் பகலவன் நீயே!

படிக்காதவருக்கோ  செவி வழி ஆசான்!

கவியரசின் தத்துவமோ கீதமாய் ஒலிக்கும்!

மெல்லிசை மன்னரின்  ரீங்காரம் இசைக்கும்!

பாட்டுக் கோட்டை பாடம் சொல்வார்!

வயலும் வாழ்வும் வேளாண் செய்யும்!

ஆட்டு இடையரும் பேட்டி தருவார்!

பாரம்பரிய கலைகள் நடனம் செய்யும்!

நகைச்சுவை எங்கும் நர்த்தனம் ஆடும்!

இலக்கியம் பக்தி காற்றில் கரையும் !

காற்றின் மொழியே ! வாழிய வாழியவே!

.அமுதா ஆசிரியர்,

தொட்டியம்.

 

078. காற்றின் மொழி

 

 அலை அலையாய்  பண்பலை!

இனிய ராகம் வழங்கும் புல்லாங்குழல்!

பாமரனும் கேட்கும் இசை கச்சேரி!

அதை நாள்தோறும் வழங்கும் மேடை நம் !

பண்பலை நூறு மொழி கேட்கிறோம்

காற்றின் மொழி வழியில்!

உருவங்களை தாண்டி அழகானவர்கள் பண்பலை

வர்ணனையாளர்கள்!

அவர்தம் அழகிய குரல்களால்!

ஆயிரம் புத்தகம் தரும் அமைதி!

பண்பலை தரும் ஒரு பாடலுக்கு சமம்!

தேன் தென்றல் வழங்கும் பண்பலை

என்கிற காற்றின் மொழி!

நாம் சுவாசிக்கும் நன்மொழி!

நரேந்திரன் பார்த்திபன்

திருச்செங்கோடு

 நாமக்கல் மாவட்டம்.

 

079. காற்றின் மொழி

இல்லத்தை இனிமையாக்கியது வானொலி

செய்திகளை நம்மிடம் கொண்டு சேர்த்தது

ஒவ்வொரு நிகழ்ச்சியும் நம்மை ஈர்த்தது

காற்றலையின் இனிய அலைவரிசை அற்புதம்

எத்தனை நிகழ்ச்சிகள் அத்தனையும் அருமை

வீட்டிலிருந்தே உலக நிகழ்வுகள் செவி வழியே

உலக அறிவை ஒவ்வொரு நாளும் அறிந்திட செய்தது

கிராமங்களில் வீடுகள் தோறும் புதுமைகள் செய்தது

தொழில் நுட்ப வளர்ச்சியில் மார்க்கோனியின் கண்டுபிடிப்பு

தொழில்நுட்ப அதீத வளர்ச்சியில் உன்னை மறந்தோம்

காற்றினிலே வரும் கீதமாக ஒலித்தாய்

வாசகனின் மனம் மகிழ்விக்கச் செய்தாய்

பேருந்தில் கூட கேட்டு மகிழ்ந்தோம்

தனிமைக்கு இனிமையான வானொலியின் கீதம்

நாட்டு நடப்புகளை நாளும் தெரிந்தோம்

முத்தமிழும் முழுமையாக உன்னிடம் பெற்றோம்

படிக்காதவர் நெஞ்சிலும் என்றும் பதிந்திருந்தாய்

காற்றின் மொழியை கவனமுடன் கேட்டு அறிந்தோம்...

 

முனைவர் ஜெ. ராஜகுமாரி ,

தமிழ்த் துறைத் தலைவர் - உதவிப் பேராசிரியர்.

கிறிஸ்டோபர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

 (பெண்கள்). நாங்குநேரி

திருநெல்வேலி.

 

080. காற்றின் மொழி

பள்ளிப் பருவ நினைவு

அப்பா துணியை தைத்தார்

பாப்பா மனதை விடுமுறையில்

வானொலி தைத்தது சிறப்பாக உண்டு

மறக்காத ஒன்று ஆசான்

அறிவியல் பாடம் கண்டுபிடிப்பு

செய்தியை சிந்தையில் புகுத்தியது

அறிந்த மாலை வேளை மனை நோக்கி

 மழலை ஐயம் நீக்கி ஆராய செப்பிய

வானொலிப் பெட்டி முன் சிற்பமாய்

 நின்று நின்று சுற்றிப்பார்த்து பின்

ஒரு உருவமும் தென்படவில்லை

 சிறு திரும்பும் புலப்படவில்லை

 பெட்டியில்ஒலி ஒளி பிம்பம் பொய்

பிம்பமாக உதிர்த்தது மெய் சிலிர்த்தது

ஞாபகமே வேடிக்கை ஞாலமில்லா இம்மங்கை

இதன்பிறகு....  அம்மா பதவியோ ஆயா பொறுப்பு

கூடுதலோ அஞ்சலக முகவர் பணியேற்பு

சிறுசேமிப்பு பாதுகாப்பு என மகளிர் உரைப்பு

உழைப்பிற்கு ஆட்சியர் பரிசளிப்பு

வயலும் வாழ்வும் பேட்டிக்கு அம்மா

அழைப்பு பெரும் ஒலிபரப்பாளர்

பிச்சினிக்காடு இளங்கோ கேள்வி தொடுப்பு

இல்லம் சென்று திட்டம் விளக்கி

 உறுப்பினர் அதிகரிப்பு செய்தியே பதிலளிப்பு

என் அம்மா வானொலியில் பேசினார்                         

என் அம்மா வானொலியில் பேசினார்

ஆனந்த அலை நீண்டநாள்                              

காற்றில் அலைந்ததுசித்தத்தில் பிரதிபலிப்பு

அண்ணன் கல்வி விடுதியில் படிப்பு

நானோ.....  தனிமை பரிதவிப்பு

வேதனை துடிதுடிப்பு உறுதுணை

வானொலி இணைப்பு பண்டிகை காலங்களில்

தந்தை தொழிலுக்கு மகளாய் முதலுதவி

இரவுபகலாய் ஆடை கைவேலை சிறுஉதவி

அயர்வு உயர்வாக காதுகளில் வான் ஒலி

மின்சாரம் துண்டிப்பாயினும் கண்டிப்புடன்

பசைமின்கலத்துடன் கீத மொழிகளில்

சுறுசுறுப்பிற்கு பஞ்சமிருக்காது

காரணம் நிகழ்ச்சியில் டி. ஆர். கூறுவார்

 டி. எம். எஸ். பாடுவார் கண்ணதாசன்

 எழுதியிருப்பார் ஜானகி இசைத்திருப்பார்

வானொலி சேவைகள் எனக்கு மேலும்

தமிழ் கற்றுக் கொடுத்தது கவிதை

எழுத வைத்தது புலனம்விரித்து

 புதினம் குறித்து சலனம் முறித்து

 சங்கதிகளை  சத்தமிட்டு விவேகத்தை விதைத்தது

விருட்சமாய் விளைந்தது வாழ்வில் ஆசிரியப்பணி

பேச்சாளர் தென்கச்சி கோ. சுவாமிநாதன்

 போன்றோர் உரை சான்றோனாக்க        

  ஒருமுறை இதுதான் கீதமொழி

நாட்டின் எல்லையில் இராணுவ வீரனாய்

கணவர் தொண்டு வீட்டெல்லையில்

மனத்தோழனாய் காற்றின் மொழி

இப்போது என் பிள்ளைகளிடம்

நான் கேட்கும் வரம் எப்போதும்

உடனிருப்பு வானொலி உடனிருப்பு வானொலி....

டாக்டர். அ. ஜமீலா,

தலைமையாசிரியர்,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

மதுக்கூர் வடக்கு,

தஞ்சாவூர் - 614903.

 

081. காற்றின் மொழி..!

 காற்றின் மொழியை இனிமையாக்கும் வானொலி!

 காலத்தை வென்று நிற்கும் வானொலி!

 நேரத்தைக் கொஞ்சமும் தின்னாத வானொலி

 பொழுதைச் சுவையாக்கும் பொன்னான வானொலி!

 பாடல்களை ஒலிபரப்பும் பாங்கான வானொலி!

 அறிவை வளர்க்கும் அருமையான வானொலி!

 செய்திகளைச் சொல்லும் சிறப்பான வானொலி!

 நேர்காணலைக் கண்முன் காட்டும் வானொலி!

 தன்னம்பிக்கை வளர்க்கும் தளமே வானொலி!

 தமிழ் வளர்க்கும் தன்னிகரில்லா வானொலி!

 எங்கும் எப்போதும் ஒலிக்கும் வானொலி!

 கவலையைப் போக்கும் கருத்துமிகு வானொலி!

 சிறுவர்களை மகிழ்விக்கும் சீர்மிகு வானொலி!

 பெரியவர்கள் போற்றும் பெருமைமிகு வானொலி!

 மகளிரையும் மயக்கும் மாண்புமிகு வானொலி!

 மனிதர்களோடு பின்னிப் பிணைந்துவிட்ட வானொலி!

              - டி.என்.இமாஜான், சிங்கப்பூர்.

 

082. காற்றின் மொழி

காற்றோடு கலந்தாய் கவலைகளை போக்கினாய்!

கனவாக வந்தாய் அதிர்வலைகளை தந்தாய்!

எங்கேயோ கேட்டகுரல்

தரணியெங்கும் ஒலித்தது!

ஏழைகளின் மனங்களில்

இன்னிசை தவழ்ந்தது!

இதயங்களை இணைத்தது கற்பனைகளை வளர்த்தது!

இதழில்தேனை வடித்தது

மொழியுணர்வை ஊட்டியது!

அலைகடலாய் தவழ்ந்தது அனைவரையும் ஈர்த்தது!

ஆங்காங்கு சுழன்றது இசையை விதைத்தது!

உறவுகளை வளர்த்தது உரிமைகளை கொடுத்தது!

உயிர்களை ஒன்றாக்கியது காதலை வளர்த்தது!

பாகுபாட்டை தகர்த்தது பாமரர்களை உயர்த்தியது!

பாட்டாளிகளை உருவாக்கியது பைந்தமிழை தந்தது!

விடுதலையை பரப்பியது மக்களை ஈர்த்தது!

வேற்றுமையை களைந்தது ஒற்றுமையை கொடுத்தது!

கொஞ்சி பேசியது குழந்தையாக கெஞ்சியது!

காற்றோடு கலந்தது உயிரோடு பிணைந்தது!

 

மதிப்புறு முனைவர்,

கவிஞர் இனியன் வெ.பாலாஜி,

தமிழ்த்துறை,

டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி

மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரவாயல்,சென்னை-95.

 

083. காற்றின் மொழி

1.இல்லங்கள் தோறும் இருக்கும் வானொலியே

2.உள்ளங்களை அலங்கரிக்கும் வானொலியே

3.காற்றினில் தவழ்ந்து வரும்  வானொலியே

4.மனதை வருடும் பாடல்களைத் தரும் வானொலியே

5.சலிப்பின்றி எங்களை மகிழ்விக்கும்  வானொலியே

6.இன்பம் துன்பம் என்றில்லாமல் அனைத்தும் தரும்  வானொலியே

7.ஆன்மீகம் முதல் ஆட்டம் போடும் பாடல்கள் வரை

 மக்களை குதூகலப்படுத்தும் வானொலியே

8.ஓய்வில்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் வானொலியே

9.இரவு நேர பணியாளர்களுக்கு சுறுசுறுப்பை தரும் வானொலியே

10.எத்தனை ஊடகங்கள் வந்தாலும்

அனைவரின் மனதில் முதல் இடத்தை

பிடித்திருக்கும்  வானொலியே

11.வானிலை அறிக்கை தரும்  வானொலியே

12.எட்டு திசைகளில் இருந்தும் பாடல்களை கொண்டு வரும்  வானொலியே

13.கலங்கரை விளக்கமாக ஒலி தந்த

வானொலியே

14.மனம் கலங்கி இருக்கும் போது 'கலங்காதே மனமே '

என்ற பாடலை தந்து மனதை இலக்குவாகிய வானொலியே

15.என் வாழ்க்கையில் இணைபிரியா பயணம்

செய்யும் வானொலியே

மார்கோனி உன்னையும் மறப்பதுண்டோ

 வானொலியை மறந்துதுண்டோ

நீ வாழ்க உலகம் இருக்கும் வரை வானொலியே.

 

மதுரை ஓ.கே. சிவா

 

084. காற்றின் மொழி

வானலைகளில் மிதந்து வரும் கீதமே/

கேட்டால் துள்ளாத மனமும் துள்ளுமே.../

 

இசையெனும் அமுதை செவிக்கு தந்தாய்/

தாயைப்போல தாலாட்டி உறங்க வைத்தாய்.../

எண்ணிலடங்கா இன்பம் எல்லையின்றித் தரும்/

எட்டுத் திக்கும் ஒலித்திடும் ஏழிசைக் கீதம்.../

எண்ணங்களை வண்ணங்களாக்கும் அலைகளின் வானவில்/

செவிக்கு விருந்தளிக்கும் தேனிசைத் தென்றல்.../

மார்கோனி கண்டுபிடித்த மகத்தான கண்டுபிடிப்பு/

இல்லந்தோறும் இசை இன்பத்தின் அக்களிப்பு.../

உணர்வுகளைத் தூண்டி உள்ளத்தை இலகுவாக்கும்/

சோகங்கள் மறந்து மனதும் இன்பமாகும்.../

இன்பம் துன்பம் எது வந்தபோதும்/

வானொலி மட்டுமே துணையிருந்தால் போதும்.../

காற்றலைகளில் மிதந்து வரும் இசையருவி/

வானொலியில் ஒலித்திடும் இன்பத் தேனருவி.../

மனமகிழ்வைத் தந்திடும் வரமான வானொலியே/

இசைப்பிரியர்களின் முதல் காதலும் நீயே.../

 

மை.சத்திய பாரதி,

தூத்துக்குடி.

 

085. காற்றின் மொழி

அனைவரையும் அரவனிக்கும் தாய்,

ஆணவம் இல்லாமல் ஆர்ப்பரிக்கும் நீர் ஊற்று,

இல்லை என சொல்லாமல் கொடுத்துக்

கொண்டே இருக்கும் அமுதசுரபி,

ஈகை குணம் கொண்ட கொடை வள்ளல்,

உரிமையுடன் உலகை வளம் வரும் ஊஞ்சல் நீ,

ஊமை முதல் அனைவரையும்

சென்று அடையும் அளவிலா ஆற்றல்,

எண்ணியதை எண்ணியவாரு

சென்றடயவைக்கும் இலக்கு வாதி,

ஏழை முதல் பணக்காரர் வரை பாரபச்சம்

காட்டா நேர்முக சிந்தனையாளர்,

ஐயம் இல்லாமல் தனித்திரம் படைத்தவர் நீ,

ஒற்றுமை ஒன்றையே குறிக்கோளாய் ஓங்கி ஒலிப்பவர் நீ,

ஓதாமல் இருப்பவரையும் வீட்டிலிருந்தே

கற்க வைக்கும் உண்மை நாயகர்,

அவியமாக பயணிக்கும் ஒயிய்வு இல்லா சூரியன் நீ,

உமது பணியை பார்க்க முடியாது,

ஆனால் காது வலி வலிக்காமல் வந்து வயப்படுத்தும்

என்றன்றும் இளமை குன்றா சூரியன்!

சொ. முருகன்,

குருணி குளத்து பட்டி, கடவூர்,

கரூர் மாவட்டம்

 

086. காற்றின் மொழி

தேனொலியாய்த் தித்திக்கச் சேதி சொல்லும்!

வானொலி மொழியே எங்கும் செல்லும்!!

மின்னலையில் அதனைத் தாங்கிக் கொள்ளும்!

பொன்னொலியாய் மாறி யது நெஞ்சை அள்ளும்!!

சீராய்ச் செய்திகள் தந்திடும் சாதனம்!

ஜோராய் நிகழ்த்திடும் விஞ்ஞான சீதனம்!!

விஞ்ஞான விளைவால் விளைந்த நூதனம்!

எஞ்ஞான்றும்  ஈடற்ற அற்புத எத்தனம்!!

தொலைதூரம்,  கானகம், கடலடி, மற்றும்,

தொலைக்காட்சி இயங்காதப் பகுதிகள் முற்றும்,

தெளிவாகச் சேதிகள் சேர்க்கும் ஊடகம்!

வளிவழியே வலம் வரும் வானொலியே என்றும்!

காற்று வெளியிடை கவர்ந்து வரும் !

காற்று வழியாக விரைந்து தரும்!!

காற்றோடு காற்றாகக் கலந்து விடும்!

காற்று மொழியாகி மனதைத் தொடும்!!

வானொலி ஒலிபரப்புத் தரும் சேவை!

வானொலி நேயர்களின் நல் கூட்டுறவு!

வானொலி மூலம் தகவல்கள் பரவும்!

வானொலித் தகவல்கள் காற்று மொழியாகும்!!

காற்று வழிவரும் காற்றின் மொழி!

உற்று நீர் போல சாற்றும் இனிமையாய்!!

உலகம் புரியும்! உண்மை தெரியும்!

உன்னதம் விரியும்! காற்றின் மொழி!!

 விந்தையாய்  உலகை இணைக்கும் பாலம்!

 விஞ்ஞானிகள் போட்ட அழகிய கோலம்!!

 வானொலி இருக்கும் இடம் கோலாகலம்!

வான் வழியில்  காற்றின் மொழி குதூகலம்!!

ஆல்போல் படர்ந்து விரிந்த மொழி!

அலை போல் தொடர்ந்து ஒலிக்கும் மொழி!

வான்போல் பரந்து கலந்த மொழி!

 "வாழ்க!" உன்னதக் "காற்றின் மொழி!!"

 

கவிஞர் எஸ். ராம கிருஷ்ணன்,

சிறுமுகை.

 

087. காற்றின் மொழி..!

வானொலி தினம் தொலைக்காட்சி வர

 வானொலி குறைய காற்றினில் கீதம்

 இசைக்க காதினில் தேன் வந்து ஒலிக்க

 நாளும் இன்னிசைப் பரப்பிய

 நிகழ்வை மறக்கலியே ஆகாசவானி செய்தி

வாசிப்பாளர் சரோஜினி அன்னையின் இனிய

 குரல் மறக்குமோ?

பள்ளியில் 11 மணி வானொலி நிகழ்ச்சி

மாறியது கிரிக்கெட்  வருணனை மறந்ததா?

விவசாயிகளின் நட்புக் குரல் மாற்றியதே

நேர்முகம் கண்ட உரிமைக்குரல்

தேனமுதம் தந்த இன்னிசை மழை

என்றும் இலவசக் கல்வி நிலையமாய்

அனைவரையும் ஒன்று இணைத்த தென்றல்

மகத்தான மானிட அரிய பாரதி

கண்ட கனவு நனவாகத் துணையாய்

நின்ற தூண் என்றே எல்லை வகுக்க இயலா

மனங்களில் இருந்த கள்ளம் கபடம் இல்லா

மகிழ்ச்சி இல்லத்தில் இல்லா  நாளில் ஏக்கம்

உருவாக்கிய செம்மல் மகிழ்ச்சிக் கொடை.

திருமதி.கோ.சங்கரம்மாள்.திருவில்லிபுத்தூர்.

 

088. காற்றின் மொழி!

 

கல்லூரி காலங்களில்

    இலங்கை வானொலியில்

கள்ளூறும் கானங்களைக்

     காற்றில் கசியவைத்தாய்! 2

உள்ளார்ந்த உண்மை

    செய்திகளை வழங்கும்

வள்ளன்மை உனையன்றி

     வேறு யார்க்குண்டு?4

வலைவீசும் மனங்கவரும

     புதுமை நிகழ்ச்சிகள்

தொலைக்காட்சி இல்லாத

      துயர் தீர்த்தன. 6

மாணவர் அறிவியல்

   மலர்ந்ததே வானொலியில்!

தேனமுதாய்த் தேன் கிண்ணம்

    தெவிட்டாத தெள்ளமுதே! 8

சென்னை வானொலியின்

      திரைக்  கதையும்

இன்றுஒரு தகவல்

      இயம்பிய தென்கச்சியாரும் 10

தற்போதைய பண்பலையும்

     தரமான சேவை யன்றோ?

கற்பதற்கு கல்வியும்

    கடமையென விவசாயமும்12

சிறுவர் நிகழ்ச்சிகளும்

    சிந்தனைக்கு ஆன்மீகம்

பொறுப்புடனே  தருகின்ற

     பொக்கிஷமே  வானொலி! 14

காலநிலை செய்திகளைக்

    கவனமாக எடுத்துரைத்து

ஞாலத்தின் நலன்காக்கும்

     வானொலியே  வாழியவே! 16

 

முனைவர் கிருட்டிணதிலகா

போரூர்.

சென்னை.

 

 089. காற்றின் மொழி

 

காற்றைச் சுமந்து செல்லும் அதிர்வலையே !

பாட்டைச் சுமந்து செல்லும் பண்பலையே !

மகிழ்வைச் சுமந்து செல்லும் தூயகலையே !

 உலகின் வானொலியே உனக்கு ஏதுவிலையே !

 அதிகாலை அடிமனம் தொட்டு எழுப்புகின்றாயே !

 அடி மாலை உள் மனம் தூக்கம் தருகின்றாயே !

 நாளெல்லாம் களைப்பு தாக்காது மயக்குகின்றாயே !

வானத்தின் அசரீரீயே மனத்தின் உயிர்நீயே !

 

நோயினில் படுத்தால் மருந்தாகக் காக்கின்றாயே !

சோகத்தில் இருந்தால் நட்பாகக் கலக்குகின்றாயே !

 மகிழ்ச்சியில் கரும்பாகத் தேனாக இனிக்கின்றாயே !

மொத்தத்தில் தாயாகத் தாலாட்டிப் பாடுகின்றாயே !

 இல்லம் தேடிவந்த இன்பமே இதயவாணியே !

 இல்லாத இடமில்லை உதயமே உலகராணியே !

 கையிலே தூக்கிச் செல்லும் இதயம்நீயே !

அகிலம் எங்கும் நீங்காத இறைவித்தாயே !

 பாடலை எழுதியவர் வரகவி நல்லாசிரியர்

மா .முருகேசன் ,

தலைமை ஆசிரியர் ,

சா.இ.நா.எட்வர்ட் மேல்நிலைப்பள்ளி,

சாத்தூர் -626203

 

090. காற்றின் மொழி

 

 மூதாதையர் மொழி காற்றின் மொழி,

பரிணாமத்தின் மொழி காற்றின் மொழி,

மனித நாகரிகத்தின் மொழி காற்றின் மொழி,

மனித அறிவின் தொடக்கம் காற்றின் மொழி,

பாமரனுக்கும் அறிவை வளர்த்த மொழி,

நாடோடி குடிசையும் வசந்தமாய் மாற்றிய மொழி,

நடக்கும் பயணிக்கும் கூட வரும் நண்பன் நீ,

நான் நேசிக்கும் காற்றின் மொழி,

தெருவோரம் செல்வோரும் நின்று கேட்கும் மொழி,

தித்திக்கும் தேன் தமிழால் திகைக்க வைக்கும் நண்பன்நீ,

கண்வழி ஊடுருவி மனதிற்கு செல்வதை விட,

செவிவழி சென்று மூளையை தூண்டி சிந்திக்க செய்வது நீ,

எத்தனை தொலைக்காட்சி வளர்ச்சி வந்தாலும்,

போகும் வழி வரும் வழி களைப்பின்றி பயணிக்க நீயே தேவை,

வாழைப்பழ வண்டி காரனுக்கும் ஆட்டோ காரனுக்கும் அமுதமடி நீ,

நித்தமும் உன்னை சுமக்கும் சைக்கிள் காரருக்கு சுகமடி நீ,

தினமும் உன் ஒளி கேட்டு யோசிக்கிறேன் யாசிக்கிறேன் வாழ்க நீ,

உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.

மை .மதலை மேரிஆசிரியை,

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

நரசிம்ம நாயக்கன் பாளையம்,

கோவை- 31

 

091. காற்றின் மொழி

தவமாய் தவமிருந்து கிடைக்கா வரம் கிடைத்ததென்று உன்னருகில் தவம் கிடந்தோம்//

கருவில் சுமக்காத பிள்ளையாய் காடு கம்மாவெல்லாம் தூக்கி திரிந்தோம்//

குடும்ப உறுப்பினராய்  உருவாக்கி அடையாள அட்டையும் வாங்கிக் கொண்டோம் //

குட்டி குழந்தைகள் முதல் கொள்ளு பாட்டி வரை தூக்கி வைத்து கொண்டாடினோம்//

குருவி சுடுபவர் முதல் கோடீஸ்வரர் வரை தோளில் சுமந்து கொண்டு பெருமைப்பட்டோம் //

அப்பாவின் நினைவுகளை பாதுகாப்பது போல் உன்னையும் பொக்கிஷமாக பாதுகாத்தோம் //

உன்னால் தமிழ் மொழியை கற்றுக் கொண்டோம் கானகத்தில் வாழ்ந்தாலும்  உயிர் பிழைத்துக் கொண்டோம் //

எங்கள் நெஞ்சு கூட்டுக்குள் நினைவுகளால் நித்தம் நிற்கிறாய்

வருங்கால சந்ததிகளுக்கு உனை காட்டி புகழ் பாடி கொண்டிருக்கிறோம்.

 

சங்கரி முத்தரசு கோயம்புத்தூர் -2

 

092. காற்றின் மொழி

 தவமிருந்து மார்க்கோனி பெற்ற வானொலியே

தங்கத் தட்டாய் மிதந்து வரும்

அதிக்காலை சூரியனை போல் நிதம்

எங்களை எழுப்பி உறவாடிய தோழியே

 தினம் ஒரு குறள் தென்கச்சிளின்

காந்தர்வக் குரலும்,தமிழ் அழகும்

 தினம் ஒரு தகவல் வருமே

 அனைவரும் விரும்பும் ஒருப்பட பாடல்

கிரிக்கெட் வர்ணனையும் நேயர் விருப்பமும்

 திரைக் கதம்பமும் கிரேசியின் நாடகம்

 இசைக் கலைஞர்களின் ரம்யமான கச்சேரிகளும்

மங்கல வாத்தியங்களுடன் நாதஸ்வர இசையும்

 பக்தி பாடல்களும் தட்பவெட்ப நிலையும்

 ஸ்வரங்களுடன் ராகத்தோடு இசை கற்பித்தலும்

 குழந்தைகளுக்கான மழலையர் பூங்காவும்

சரோஜினி நாராயணசாமியின் தமிழ் செய்திகளும்

காற்றின் மொழியாய் வந்துப் பாயுமே. . .

 

இசைப்பேரரசி

லதா சங்கரன்

சென்னை

 

093. காற்றின் மொழி

 

மார்க்கோனி தந்த மகத்துவமே

மக்களுக்கு நீ தனித்துவமே

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுதல் போன்றே

காணும் வீடெல்லாம் வானொலியே 80,90களில்

காடுமேடு கழனியில் உழைத்தவர் இளைக்க

கானம் பாடும் கருங்குயிலோசை போன்றே

இளையராஜா பாடல்கள் இனிக்குமே

அத்துனை செய்திகளையும்

ஆகாசவானி வாசிப்பதும்

ஆயிரம் கவலை இருப்பினும் பண்பலை பறக்கவிடுமே

காற்றிலே கலந்த பிராணவாயு போன்றே

மக்களின் மனதில் கலந்த இசைகளை

கண்னறியா அலைகளாக காற்றிலே அனுப்புவதும் நீயே

காற்றின் மொழியாக மக்களை மகிழ்விப்பதும் நீயே..

வான்வெளியில் கொடிக்கட்டி பறக்கும் வானொலியே..

 

கு. மைலேஸ்வரன்

அந்தியூர்,

ஈரோடு.

 

094. காற்றின் மொழி

 

 காற்றலையில் தவழ்கிறாய் காதுகளில் கேட்கிறாய்

பற்றுதலோடு பாரையே பரவசம் ஊட்டுகிறாய்

கற்றுத் தராத காவிய கீதமே

சொற் சுவையோடு சொர்க்கத்தை அழைக்கின்றாய்

எத்தனை துயரிலும் ஏக்கங்கள் போக்குகிறாய்

புத்துணர்வை உள்ளத்தில் புதுமையாய் அளிக்கின்றாய்

கவலையுற்ற மனதிற்கும் கனவுகள் கொடுக்கின்றாய்

அவலையாய் அலைபவரையும் ஆசையில் கவர்கிறாய்

வலிகொண்ட மனதிற்கும் மயிலிறகாய் வருடுகிறாய்

களிப்போடு  தொட்டாலே கானத்தை இசைக்கின்றாய்

உன்னாலே இதயங்களும் உதயமாய் ஆகிறதே

துன்பங்கள் துரத்தியே துளிர்த்திடச் செய்கின்றாய்

கன்னல் மொழியோடு காதலைப் பொழிகின்றாய்

இன்னல்கள் அகற்றியே இனிப்பைத் தருகின்றாய்

உன்னால் உலகை உவகையில் மறக்கின்றோம்

மின்னல் போலாகி மிடுக்கோடு நடக்கின்றோம்

 

தமிழ்நதி கிருஷ் அபி,

இலங்கை

 

095. காற்றின் மொழி

காற்றின் மொழி வானொலியாக

வானிலிருந்து செவிகளில் இறங்கி

வானவில்லாக வாழ்வில் கலந்தது!

நேசம் நிறைந்த நண்பனாக

நல்லாசிரியனாக, தூதுவனாக

அன்றாட வாழ்வில் கலந்து சிரித்தது!

கதைகளை, இனிய கவிதைகளை

பாடல்களை, நல்ல பாடங்களை

நித்தம் நிறைத்தது நம் செவிகளில்!

செவிக்குணவிலாத போழ்து தானே

வயிற்றுக்குப் பசியென்று கூறியே

செவிக்கு இனிமை கூட்டி மகிழ்ந்தது!

எளியோருக்கு ஏற்ற அறிவுரைகள்!

முதியோருக்கு முக்காலச் செய்திகள்!

இளைஞருக்கு வேடிக்கை விளையாட்டு! 

அறிவியலின் விந்தையாம் வானொலி

வெறுமையைப் போக்கி வேதனை தீர்க்க

வானிலிருந்து குதித்த தேவன் தானோ!

 

புவனா சந்திரசேகரன்.

 

096. காற்றின் மொழி

 

செவியோரம் இன்னிசை போல் நுழைந்து!

செந்தமிழ் மொழியை நாவில் திகட்டிட!

காற்றின் மொழியாய் வலம் வந்து!

கானம் பாடும் சங்கீத மொழி!

துன்பங்கள் ஓடி இன்பங்கள் சுரந்து!

துள்ளாத மனமும் துள்ளி மகிழும்!

தரணியின் அதிசயத்தை தினந்தினம் ஊட்டி !

தனிமையில் அன்னையாய்

அரவணைக்கும் அன்னைமொழி!

 ஔடதம் போல எமக்கு துணையாய்

ஔதாரியமாய் உயிரூட்டும் உயிர் மொழி!

காதலின் முத்துக்களாய் முத்துக்குளிக்கும் மொழி!

காற்றோடு கலந்து நெஞ்சத்தில் உறவாடும்!

புதுமைகள் சுமந்து புத்துயிர் தந்து

புகழ்பாடும் எங்கள் கவிதை மொழி

இறுதிவரை துணையிருக்கும் அற்புத மொழி!

இனிமைகள் தரும் காற்றின் மொழி!

எம்.லீலா வினோதினி

அரனாயக இலங்கை

 

096. காற்றின் மொழி

 

மார்கோனியின் மர்ம பெட்டி

மனிதனின் மகத்துவ பெட்டி

மங்கல இசையுடன் மலரும் பெட்டி

மழலையாய் மாறி காற்றின் மொழியில்

மந்திரம் செய்யும் பெட்டி

ஒலி அலைகளை ஒய்யாரமாய்

ஓயாமல் ஒலிக்கச் செய்து

 ஔடளதமாய் மாறி நின்றாய் காற்றின் மொழியில்

உயரத்தில் உருவமி ல்லாமல் இருந்து

காற்றின் மொழியை ஒலி அலையாய் ஈர்த்து

உருவம் உள்ள மனிதனின் கவலையை

உருக வைத்து நீக்குகிறாய் காற்றின் மொழியாய்

இரக்கமே இல்லாமல் ஈட்டியென

இணையத்தின் வழியே காற்றின்

மொழியை உள்வாங்கி

இடியெனஉள்ளே நுழைகிறாய்

 இசையை அள்ளித் தருகிறாய்

வானொலி பெட்டிக்கு வான் வழியாய் வந்திறங்கி

வார்த்தை ஜாலம் செய்கிறாய்

 

பெ.செல்வராஜ்

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம்.

 

097. காற்றின் மொழி

காற்றோடு கலந்து என்றும் நம்மோடு ஒட்டி உறவாடும் !!

காற்றை போல் நம்மை என்றும் தொட்டுக் கொண்டே இருக்கும்!!

தொய்வு கொள்ளும் நேரமெல்லாம் நம்மை தொட்டு எழுப்பும்!!

தென்றல் காற்றுடன் சேர்ந்து நம் செவிக்கு விருந்தாகும்!!

மனக்கவலை  கொள்ளும் நேரத்தில் தீர்க்கும் நல் மருந்தாகும்!!

தாயில்லா நேரத்தில் நம்மை தாலாட்டும் தாயாகும்!!

பல மையில் தாண்டி நம்மை சந்திக்க வரும் உறவுமொழி!!

மறைந்த நினைவுகளை நிழலாய் நம் கண் முன் நிறுத்தும் மொழி!!

கனவோடு நம்மை கைகோர்த்து வசந்தம் கொள்ள வைக்கும் மொழி!!

மங்கள ஒளியை அள்ளி வீசும் காற்றின் மொழி!!

சில நேரம் இடி மழை வந்தாலும் எங்களை மறவாமல் சந்திக்கும் மொழி!!

உன் வார்த்தைகளால் எங்களை எப்பொழுதும்

மயக்கிய மகிமையின் மொழி நீ!!!

 

முனைவர்

க.எப்சிபா

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம்.

 

098. காற்றின் மொழி

உதடுகள் தாங்கிய மொழிகள் அத்தனையையும்

காற்று ஏந்தி செவிகளில் ஊற்றுகிறதே

இன்னிசை பல கேட்பது எல்லாம்

உருவமின்றி உருவாக்கிய ஊடகத்தின் வழியாகவே

இரைச்சல் சப்தத்தினை இன்னிசையாய் மாற்றுவதும்

காற்றின் மொழிகள் அனைத்தும் தானே

தனக்கென ஓர் தனி அடையாளம்

ஊடகமாக காற்றிற்கு மட்டுமே உள்ளதோ

செவிடன் என பெயர் பெற்றிருப்போம்

காற்றின் மொழி அறியாது போனால்

வானொலி சாதாரண சப்தம் இல்லையே

வானம் தெரியும் புவியெங்கும் படர்ந்து

சரிசமமான இன்னிசையாலான காற்றின் மொழியே

 

கவிதாயினி அபிதா.வி

மூணாறு,

கேரளம்

 

099. காற்றின் மொழி

வசந்த காலத்திலேயே எம்மை பயணம்

பண்ண வைக்கும் எங்களின் மாய மந்திர ஊர்தியே...

அதிகாலையின் சூரிய உதயம் போல

உன் அலைவரிசையின் வழியே வரும்

எம் மனதிற்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை

கேட்காமல் எங்கள் நாள் துவங்குவதில்லை...

கல்வி நிலையங்களில் உன் பயன், பலன் பல பல...

விவசாயிகளின் வளமையான வாழ்வுக்கு நீயும் ஒரு வழிகாட்டி...

வாகன ஓட்டுனர்களுக்கு நீ ஒரு உறுதுணை வழித்துணை...

நீ இல்லாத ஒரு தேநீர் கடையை கண்டதில்லை.

கேள்வி ஞானத்துடன் அறிவு ஞானத்தையும்

சேர்த்து உன்னால் பெறுகிறோமே வானொலியே..

நீ வாழ்க...மேலும் மேலும் வளர்க..

மகிழ்ச்சியான வசந்த காலத்திலேயே

நாங்களும் வாழ்கிறோம்.. வாழ்வோம்...

உன்னுடன் பயணிப்போம்.

 

பரிமளா ராமச்சந்திரன்.எம்.எஸ்.சி.எம்.ஃபில்

திருச்சி..

 

100. காற்றின் மொழி

 

கண்ணுக்கு விருந்தாய்க் காட்சிகள் அமைய,

காதுகளுக்கு மென்மையாய் மெல்லிசை மலர்ந்து,

கிடைத்திட்ட வாய்ப்பதனை வானொலிப் பண்பலையாய்,

கீதங்கள் இசைத்திட, காற்றின் மொழியாய்,

குதூகலிக்க மனமது மெய்மறந்து பிரமிப்பாய்,

கூடியே அனைவரும் மகிழ்ச்சி அடைதலே,

கெட்ட எண்ணங்களை, களைந்தெறிய வாய்ப்பாகுமே,

கேட்கின்ற அனைவரையும் மகிழ்ச்சியில் நிரப்புகின்றதே,

பண்பலை இல்லையெனில், பயன்பாடுகளறிய இயலாதே,

அலைவரிசைகள் ஆங்காங்கே இருந்திடவே அகிலமே,

இன்பத்தில் மூழ்கியே,  உறவுகளோடு பயணிக்க,

மார்கோனி கண்டறிந்த வானொலி வரப்பிரசாதமே,

வறுமையில் வாழ்ந்தாலும்,வானொலியே உறவாகிறதே,

காற்றின் மொழியாய் கரைந்து வரும்

எத்தனையோ நிகழ்வுகள் மனதை மயக்குகின்றதே,

இசைக்கு அடிமையாகாத உயிர்கள் உண்டோ?.

இன்பங்களின் எல்லைக்கு வேறு சாட்சியுண்டோ?

காற்றின் மொழி நூற்றாண்டுகள் கடந்தாலும்,

இமயமாய் வாழ்வை உயர்த்திப் பிடிக்கும்,

என்றும்,எப்போதும், வசந்தமாய்ப் பரிணமிக்கும்.

 

கவிஞர்.முனைவர்.

ச.மீனாட்சி,ப.ஆ.(ஆ),

தாரமங்கலம்,சேலம.

 

101. காற்றின் மொழி

 

உலகம் உயிர்கள் அண்ட சராசரங்கள்

அனைத்திலும் திறவுகோலாய்  !

வேற்றுமை இல்லாத தூய காற்றை !

தனக்கென தனிப்பாதை

இல்லாமல் திரும்பும் பாதையெல்லாம்

கண்ணுக்கு புலப்படாத  தூசிகளாய் !

ஓசையோடு ஒய்யாரமாய்

உற்சாகத்தோடு உன் வருகைக்காகவே  !

கடல் அலைகளாய் கரை தொட

வருவதும் ஆனந்தமே !

பெருங்காற்றை மூலதனமாய் பெற்ற

அலைக்கற்றை மனிதனின்

மன அமைதிக்காக முகம்

தெரியாத ஓசையை பாடல்களாய்

காற்று  வழியாக தூது  விடுவதும்

இன்னிசையே !

திக்கு  தெரியாத இடங்களில்

நடக்கும் கல்வி கலாச்சாரம்

வேளாண்மை போன்றவை

செய்திகளாய் உடனுக்குடனாய்

எங்கள் காதுகளுக்கு

அமுத கானமாய் பறைசாற்றும்

அழியாத புகழோடு ஆண்டவனின்

மறு அவதாரமாய் எங்கள் வானொலியே !!!

  கி . மு.  செல்வன்

   பர்கூர்

  கிருஷ்ணகிரி மாவட்டம்.

 

102. காற்றின் மொழி

என் மழலைப் பருவ அழுகைக்கு தாயின் வருடல் நீ!

தவழ்ந்து வரும்போது தாயின் தாலாட்டு நீ!

நடை பழகும் போது கொட்டாங்குச்சி  இசையும் நீ!

ஓட ஆரம்பிக்கும் போது ஒயிலாட்டம் பழக்கிய

சலங்கை ஒலியும் நீ!

பேசிய பொழுது தமிழ் கவிதை பாட வைத்த ஆசான் நீ!

பள்ளி பருவ வயதிலே காலையில் எழுப்பிய கதிரவன் நீ!

நாட்டின் நடப்பை செய்திகளில் செவியில் புகுத்தியதும் நீ

சிந்தனை  மேம்பட

தென்கச்சிகோ சுவாமிநாதனின் கருத்து உரைத்த காவியம் நீ!

விளையாட்டு, நாடகம், கலாச்சாரம், பண்பாடு,

கதை, கவிதை, கட்டுரை, வரலாறு, இலக்கியம்,

இதிகாசம்,இசை, பாடல் அனைத்தும் பருவகால 

வயதிலே கற்றுக் கொடுத்தது நீ!

துவண்டு விழாமல் இருக்க துணிவு கொடுத்தது நீ!

திசை திருப்பாமல் என் வாழ்க்கைக்கு

நல்ல வழிகாட்டிய வானொலியே நீ! காற்றின் மொழியாக

என்னோடு கலந்தாய் என்னுயிரே நீ!

என்றும் உன் சேவை தொடரட்டும் எங்கள் சந்ததிகளுக்கு .

வாழிய வானொலியே! வாழிய பல்லாண்டு!

 

நன்றியுடன்

கவிகலை கலைவாணி வேலுமணி

கோவில்பாளையம்

கோவை.

(தற்பொழுது அமெரிக்காவில்)

 

103. காற்றின் மொழி

 

உடலில் பிறந்து வளியில் உழன்று

உள்ளத்தை தொட்ட உருவற்ற மொழி

காணகத்தை கடந்து கண்களுக்கு மறைந்து

உணர்வை தூண்டும் உன்னத மொழி

மழலையும் மயங்கவைத்து மடிசாய்ந்து

உறங்கவைய்த்து தென்றலாய் தேனாய்

திகைத்த மொழி

இனிய கீதமாய்  இதயத்தின் சுகமாய்

மனதோடு மனமொன்ற மயக்கிய மொழி

கருத்து கரைபுரண்டு கனநேரம் நமையடைந்து

உலக நிகழ்வை உணர்த்திய  மொழி 

உழைக்கும் வர்க்கத்தை உரசி உறங்கவைத்து

புத்துணர்வு புகுத்தி பூரிக்க வைத்தமொழி

வாழ்விலும் தாழ்விலும் வசந்தம் வீசி

மனதை நெருடி மணக்கும் மொழி

மழையிலும் மலையிலும் மயங்காத காணமாய்

பாரினில் பாங்காய் பயணித்த மொழி

உயரப் பறந்து உலகத்தை அடைந்து

கானப் பறவையாய் கரைகண்ட வானொலி

இரும்பு இதயங்களை இளக்கிய தேன்மொழி

 

 கவிஞர் கலைபழனிச்சாமி

நம்பியூர்.

 

104. காற்றின் மொழி

காற்றினது குரலினையே மொழிபெயர்க்கிறாய்.

கருத்தலையால் பேசுகின்ற பேழையாகின்றாய்.

இசைச்சாரல் நனைக்கின்ற அருவியாகிறாய்.

இன்பக்கதை சொல்லும்  புதிய தாதையாகின்றாய்.

செவிவழியே புகுவதினால் அமிழ்தமாகின்றாய்.

சேர்ந்திருக்கும் நல்லதொரு தோழனாகிறாய்.

தனிமை தரும் இரவுகளில் துணையிருக்கிறாய்.

தாயைப்போல ஒலிப்பாலைத் தந்து மகிழ்கிறாய்.

எப்பொழுதும் பேசுகின்ற இறைவனாகின்றாய்.

எதிர்பார்ப்பே இல்லாத உறவுமாகின்றாய்.

அலையலையாய் சேதிகளை அள்ளி வருகிறாய்.

ஆலமரம் போல விரிந்து ஆண்டு வருகிறாய்

காற்றின் மொழி பேசிடும் என் காதுக் காதலா.

காலந்தோறும் மாறிடாது கலந்து வாழ்கிறாய்.

கவிஞர்.அ.எபநேசர் அருள் ராஜன்.

சொக்கநாதன்புத்தூர்.

விருதுநகர் மாவட்டம்.

 

105. காற்றின் மொழி..!

வானொலியே! உன்னை

உருவாக்க பல தொழில்நுட்ப வல்லுநர்கள்

தோன்றினாலும், இறுதியில் உன்னை முழுமை படுத்தியது

திரு. டெஸ்லா & திரு. மார்கோனி அவர்களுக்கு

இன்று வரை மனமார்ந்த நன்றிகள் பல சொல்ல

   -வைத்தாயோ!.

வானொலியே! அதிகாலை ராகம் எனும்

உன் உதயத்திற்கு பின்னே, 

சூரியனையும் எழுப்பி உதிக்க-வைத்தாயோ!

வானொலியே! உன் கானத்தினால் கான

குயில்களையும், சேவலையும்

அதிகாலையிலேயே போட்டிக்கு -அழைத்தாயோ!

வானொலியே!  உன் பாடல் கேட்டு ரசித்த பலரை,

இன்றும் பாடகர் வரிசையில் நிற்க -வைத்தாயோ!

வானொலியே! -துயில் எழ விருப்பமில்லா

மானிடரையும் உன் கீதத்தினால் -எழ வைத்தாயோ!

வானொலியே! -அன்று விவசாயத்துறையில்

சொன்ன அறிய பல தகவலின் உத்வேகம்

இன்று கைபேசி வரை   -வரவைத்தாயோ.

வானொலியே! -சிந்தையில் சிந்திக்க வைக்க

பல கருத்துக்கள், தகவல்கள் உன் மூலம்

மக்களுக்கு சென்றடைந்ததால்,

பல பகுத்தறிவாளர்களையும், சிந்தனையாளர்களையும்

உருவாக்கி,  சிந்தனை -பரிமாற்றமானாயோ!

வானொலியே! அன்னையின் குரலுக்கும்

எழாதவரை உன் குரலுக்கு -எழவைத்தாயோ.

வானொலியே! -உன் ஆனந்தத்தின்

அலைவரிசையில் இன்றும் மாறாத

மழைச்சாரலால் நனைய வைத்து

மகிழ்விக்கின்றாய் எங்களை -இளமையாக!

வானொலியே!  -உனை போகும் இடமெல்லாம்

அழைத்து செல்ல நீ அக்காலத்து லேப்டாப்

-ஆனாயோ!

வானொலியே! ஆகாச வானொலியின்

செய்திகள் வாசிப்பது என்று கேட்டாலே,

அக்காலை நேரம் மிக உற்சாகமாகி

பள்ளிக்குழந்தைகளும், அனைவரும்

அன்றாட பணிகளை பரபரப்பாக

ஆரம்பிக்க செய்த தருணங்களை

மறக்காமல் நினைக்க  -வைத்தாயோ!

வானொலியே! ஒரு ஊர்ல,

என்று கதை சொல்ல  ஆரம்பித்தாலே,

குழந்தைகள் முதல் பெரியவர்கள்

வரை அனைவரும் ரசித்த அய்யா,

திரு.தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின்

மூலம் மீண்டும் மீண்டும் தினசரி எங்கள்

மனதை ஒருநிலைபடுத்தி,

யார் பேசுவதை கேட்காவிட்டாலும்,

அவரின் சொற்பொழிவை மட்டும் கேட்க

வைத்ததை நினைத்தால் இன்று வரை நீ 

திகட்டாத தித்திப்பு -ஆனாயோ!

வானொலியே! -நீ அனைத்து ஊடகங்களிலும்

சென்று வந்து விடுகிறாய் காற்றைப்போல.

(டிவி,செல்ஃபோன்,லேப்டாப்,கணினி)

ஆனால், இவையனைத்தும் உன்னுள்

 ஒலியாக மட்டுமே செல்ல அனுமதிக்கிறாய்.

ஒளியாக அல்ல.

இதில், உன் தனித்துவம் தெரிகிறது.

இதனாலேயே நீ வானலாவிய ஒலி

(வான் +ஒலி =வானொலி)  -ஆகின்றாயோ!

வானொலியே!

உன் கானங்கள் காற்றிலே எப்பொழுதும்

கரைந்து கலந்து கொண்டே இருந்தாலும்,

உன் காலங்கள் மட்டும் காற்றிலே

எப்பொழுதும்  கரைந்து போகாமல் இருக்க

நீ  நீடூழிகாலம் வாழ & வளர்க வாழ்த்துக்கள்.

வானொலியே! -வாழ்த்த வயதில்லை

என்றாலும் மகிழ்ச்சியோடு,

இப்படிக்கு ,

என்றும் என்றென்றும்

அன்புடன் நான்,

வி.அருணா விஷ்ணு,

சேலம் மாவட்டம்.

 

காற்றின் மொழி.

காற்றே! தாயின் கருவறையில்  ஜனிக்கும்

போதே உயிர் கொடுத்தாய்.- பிரம்மாவாக.

காற்றே ! இறக்கும் தருவாயில் , உயிராக இருந்த

உன்னை எடுத்துக்கொண்டாய். -எமதர்மாவாக.

காற்றே! மூக்கின் வல இடது புறம்

சமமான சுவாசம் இருந்தால் நீ 120 வருடம்

எங்களுடன் பயனிப்பாய்  -மார்கண்டேயராக.

காற்றே! மொழி, பாடல் அனைத்தும் எங்களுக்கு  

உன்மூலம் வந்தடைவதால் நீ என்ன

-தகவல்பரிமாற்றமாக

காற்றே! ஒவ்வொரு நொடியும் உயிர்வாழ

மூச்சுக்காற்றாய், உயிர் காற்றாய் வந்து

போகிறாய் சலிக்காமல்.

அன்னை தந்தையின்   -அன்பாக .

காற்றே ! புல்லாங்குழலின் இசையில்

புல்லரிக்க வைக்கின்றாய் -மெய்மறந்து போக.

காற்றே! பூக்களை மலர வைக்கிறாய்.

பூத்த மலரின் நறுமணத்தை வீச செய்கிறாய்.

-எங்களுக்காக.

காற்றே!  உன் அசைவுகளினால்

உலகையே அசைய வைக்கிறாய் -வெகுவாக

காற்றே! உன் ஆனந்தத்தின் அலைவரிசையில்

வானொலி என்ற தொழில் நுட்ப கருவியின்

மூலம் உலகையே இசையென்னும்

சாரலில் நனைய வைத்து மகிழ்விக்கிறாய் 

-சிறப்பாக.

காற்றே! எல்லோரும் விரும்புவது 

உன் தென்றல் காற்றின் -சுகமாக .

காற்றே! நீ இல்லாத இடமே இல்லை,

உன்னை தவிர இங்கு யாருமில்லை.   

 -முதல்வனாக.

காற்றே! நீ கண்ணில் மறைந்திருந்து

உலகையே ஆள்கிறாய். ஆனால் ,

நாங்கள் இம் மண்ணில்  உன்னால் பெயர்,

புகழ் பெற்று உலகை ஆள்கிறோம்

மகிழ்கிறோம் பலதுறைகளில் .

-வெகுசிறப்பாக.!

காற்றே!உன்னை அழைத்து

விருது கொடுக்கலாம்

என்றால் நீயே கடவுளாகிறாய். !

   -தனித்தன்மையாக !

காற்றே! (இறப்பு)

ஓ ! அதற்கு தானா ஒவ்வொருவரிடமும்

இருந்து நீ விடைபெறுகிறாய்

விருதுபெற !

நாங்கள் உன்னிடம் வந்து உனக்கு விருது

-கொடுக்க !

காற்றே! இப்படிக்கு,

என்றும் என்றென்றும் 

அன்புடன் நான்.

வி.அருணா  விஷ்ணு,

சேலம் மாவட்டம்.

 

106. காற்றின் மொழி

காற்றிருக்கும் மொழி உண்டு-அதன் வழியே

செவிக்கும் விழி உண்டு

காற்றின் வழியே கவிதை கொண்டு

செவிக்கும் விழி தந்து

வானவில்லாய் வந்த வானொலியே!

என்றும் நீ இளமையாய் இருக்க

உன்னை கேட்கும் கருவியில் மட்டும்

மாற்றம் உண்டாகியதே!

மாற்றத்தினால் மாறாது உன் இளமை!

பேருந்தில் பயணிக்கும் போதும்

உல்லாச மகிழ்வுந்தில் பயணிக்கும் போதும்

மூன்று சக்கர தானியங்கியில் பயணித்தாலும்

நீ இல்லாமல் ஒருபோதும் நகராதே பயணம்!

சோகத்தின் கீதமாய்

மகிழ்ச்சியில் ஆரவாரமாய்

இல்லங்கள் தோறும் வந்து

இன்னிசை பாடுவதுடன்

உள்ளூர் செய்தி முதல் உலக செய்தி வரை

காற்று வழியே பேசுகிறாயே நீ!

உன்னின் தனித்துவம் என்றும் மங்காதே!

உலகம் உள்ளவரை உன் ஓசை கேட்குமே!

பலருக்கு நிம்மதியும் சிலருக்கு மகிழ்ச்சியும்...

தந்து தாலாட்டினாயே!

மார்கோனி தந்த மகாவரம் நீ!

ஆனால் இன்றோ உன்னை புகழ் பாட

அலைபேசி செயலி பயன்படுகிறதே!

ஓ... அதுவும் உன்னுடைய பேரப்பிள்ளைதானோ?!

ஆதி நீயே! உன்னை வைத்து

மீதியை உருவாக்கினர்

இருப்பினும் உன் புகழ் மாறாது! மடியாது!...

 

நட்புடன்...நாகா

சிங்கம்புணரி.

 

107. காற்றின் மொழி

விண்ணில் உலவும் கண்கள் காணா

ஒலி அலைகள் நம் செவிகளுக்கு

இசையுடன் கூடிய இனிய பாடல்களாகி

நம்மை தாலாட்டுவதோடு புத்துணர்வூட்டும் பூபாளமாகி

உலகை துயிலெழுப்பும் நவீன அலையாரமாக

கடிகாரமின்றி சமயம் அறிவித்துக் கடிவாளமிடுகிறது

நம் பணியைச் செவ்வனே செய்து

வாழ்க்கையில் வென்றிட நம்மைச் சீராக

செதுக்குகிறது  மௌனமாக இருந்து கவனிக்கச்

செய்தே நம் சிந்தை வளர்த்தச்

செம்மலாக நவயுகத்தில் மாற்றங்கள் பலக் கண்டு

பயனுள்ள மிகுதியான தகவல்களை பகிர்ந்து

நலவாழ்வுக்கு வழிவகுத்து சமுதாயம் ஏற்றம்பெற்றிட

உற்ற தோழன்(ழி)யாய் காற்றில் மொழி

பேசியே நெஞ்சில் நிறைந்தாய் வானொலியே.......

காற்றினிலே மிதந்த வந்த கீதம்

தந்த இதமோ இன்னும் வேண்டுமென்று

நினைவலைகளில் ஏங்கித் தவித்திடும் மனதுடன்.

 

முனைவர்.

ப்ரியா நாகராஜன்,

திருவனந்தபுரம்.

 

108. காற்றின் மொழி.....

 

வானொலி வசை பாடும் வண்ண ஓலி...

தனது மொழியால் மனிதர்களுக்கு

விருந்தளிக்கும் மரபு வழி....

பூவிரியும் சத்தம் முதல் புதுமையான

அறிவியல் யுத்தம் வரை நம் காதுகளுக்கு

கொண்டு செல்லும் கானல்நீரோ காற்று.....

பாமரமக்களும் பார்முழுதும் நிகழும் நிகழ்வுகளை

அறியும் வண்ணம் விததைத்து சென்றதோ நேற்று........

அழும் குழந்தை முதல் அல்லாடும் முதியவர்

வரை இன்பம் பயக்கும் ஓலி அது வானொலி........

மனிதர்களின் எண்ணத்தில் பல வரிசைகள்

தோன்றினாலும் தான் அலை வரிசையால்

ஆட்கொண்டு செல்லும் அற்புத ஓலி.........

எத்தனையோ இருப்பிடமில்லா வாசிகளுக்கு

வானொலி தான் முதன்மையான தாய்........

உறங்கவும் வைக்கிறது..

அறிவுகளுக்கு ஊற்றாகவும் நிற்கிறது.....

தாலாட்டின் தன்மை மாறாதுபோல்

பாராட்டின் பண்மையில் தவழ்கிறது காற்று......

இயற்கையின் இயல்புனையும் செயற்க்கையின்

புதுமையினையும் மனிதர்களுக்கு

புகுத்தும் மொழி வானொலி....

இலக்கிய மரபுகளையும், எதிர்கால

தரவுகளையும் தரும் மொழி அது வானொலி.....

கிழமைகள் மறந்தாலும் பழமை மாறாது மனிதர்களுக்கு....

நிலைமை நின்றுவிட்டாலும், கடமையை

காட்டிசெல்கிறது காதுகளுக்கு......

காற்று மொழியாக வானொலி

இருந்தாலும்,தமிழ் மொழி போல் மாறாது, மறையாது,

மனிதர்களின் எண்ணத்திலும் சரி

புதுமையான வண்ணத்திலும் சரி.............

வானொலியாக மட்டுமல்லாமல்

வாத்தியராகவும் இருந்து வருகிறது வரியவர்களுக்கு........

வானொலி காற்றால் பேசட்டும் காலங்கள் தாண்டியும் கவிதை பாடட்டும்............................... நன்றி...................

இப்படிக்கு..........

ஆ. பிரபாகரன்.

உதவிபேராசிரியர் தமிழ்த்துறை.

நேரு தொழில்நுட்பகல்லூரி.காளியபுரம்.

கோயம்புத்தூர்...

 

109. காற்றின் மொழி

உருவம் கொண்ட என் உறவுகள்

என்னை வெறுத்த போதும்.. உருவம் இல்லா

நீ என்னோடு உறவாடினாய்..!

செவிடனாய் இருந்த என் காதுகளுக்குள்

மென்மையாய் மலர்ந்தாய்..!

என் துன்ப நாட்களை தகர்த்து

இன்பத்தை இசையால் பொழிந்தாய்..!

என்னுடைய கடுமையான பேருந்து

பயணத்தை நீ எளிமையான பயணமாக்கினாய்..!

சத்தம் நிறைந்த இவ்வுலகில் சாதுரியமாய்

என் காதுகளுக்குள் மட்டும் நுழைந்தாய்..!

யுத்தம் வந்த போதும் என்னை அமைதிக்கு

அழைத்துச் சென்றாய்..! பெரியவர் சிறியவர்

ஜாதி மதம் என்றில்லாமல் அனைவரிடமும்

உறவாடினாய்..! உன்னை யார் என்று

அறிய பின் தொடர்ந்தேன் நீயோ காற்றில் கரைந்தாய்..!

என் காற்றின் மொழியே..!

அன்புடன்,

திரு. சு. மகேந்திரன்

(முனைவர் பட்ட ஆய்வாளர்)

சங்கரன்கோவில்.

 

110. காற்றின் மொழி

மார்க்கோனியால் கொடுத்து மாந்தர்

வியந்திடும் வானொலியே!

தொலை தூரத்தில் உள்ளோருக்கும் அருகினில்

உள்ளோருக்கும் பாகுபாடின்றி ஒலித்திடுவாயே!

அதிகாலையிலே பக்திப் பாடல்களும்

முடிந்தே ராசி பலன்களையும் இனிமையாய் உரைத்தே!

நாட்டு நடப்புகளை செய்திகளாயும்

மனம் வருந்தும் நேரந்தினிலே

மயிலிறகை வருடினாற் போல

கானங்களும் இசைத்திடுவாயே!

அவரவர் ஊரினில் நடந்திடும் நிகழ்வுகளும்

பங்குச் சந்தையிலிருந்து  பாமரர்

வாங்கிடும் பொருட்களின் சந்தை

நிலவரம் வரை நிதர்சனமாய் கூறிடுவாயே!

எல்லா தலைமுறையினருக்கும் ஏற்றாற்

போல பாடல்களும் கவிதைகளும்

அமுதமாய் இனித்திடுவாயே!

வேளாண் விருத்தியடைய பசுமை செய்திகளும்!

சமையலில் திறனடைய சமையற் குறிப்புகளும்!

அன்றைய தினமதில் நடந்திடும் முக்கிய நிகழ்வுகளையும்!

வயிறு குலுங்க சிரிக்க வைத்திட நகைச்சுவைதனையும்!

களைப்பு மறைந்து புத்துணர்ச்சி பெற்றிட

தன்னம்பிக்கை கதைகளையும்

பாடல்களையும் கனிந்தே தந்திடுவாய்!

வானொலி எனும் பெயர் பெற்றதால்

உன் புகழ் வானம் வரை உயர்ந்து நிற்கிறதே இன்றும்!

அலைபேசியும் கணினியும்

தொலைக்காட்சியும் வந்திட்டாலும்

வான் புகழ் உயர்ந்திட்ட வானொலியின்

இன்பமதே தனிதானே!

பிரியமுடன்

இரா. கோமதி

பொள்ளாச்சி.

 

111. காற்றின் மொழி!

பெட்டி பெட்டியாய் பணப் பெட்டிகள்,

அத்தனை பெட்டிகளும் பேசாமல் படுத்திருக்கும்

பிணப் பெட்டிகள்!.. ஆனால்...

உழைக்க வைக்கும் பெட்டி!

உண்ண வைக்கும் பெட்டி!

உறங்க வைக்கும் பெட்டி!

பாட வைக்கும் பெட்டி!

ஆட வைக்கும் பெட்டி!

மகிழ்ச்சி வானில் மிதக்க

வைக்கும்  பெட்டி! - அதுதான்

வர்ணஜாலம் மிக்க வானொலி பெட்டி!

காணொளியில் காண முடியாத

காட்சிகளையும், வானொலி  காண வைக்கும்!

வயிற்றுக்கு  உணவில்லாத போதும்,

செவிக்கு விருந்து வைத்து உபசரிக்கும்!

இன்ப துன்பங்களில் அரவணைக்கும்!

இசை வெள்ளத்தில் மனம்  குளிர  வைக்கும்!

'உங்கள் விருப்பம்' 'நேயர் விருப்பம்'

'தேன் கிண்ணம்'- போன்ற

இசைகளால் தன்னை அலங்கரிக்கும்!

திரையிசை பாடல்கள் பாடி

எப்போதும் குதூகலிக்கும்!

கானக் குயில்களை குஞ்சு பொரிக்கும்!

காற்றின் மொழிகளை கற்றுக் கொடுக்கும்!

வானொலிப் பெட்டி - அது

மருத்துவ முதல் உதவி பெட்டி!

   

கவிஞர்.எஸ்.வெங்கடேசன்,

     ஆசிரியர்: "சூரியச்சுடர்"

   (மாதம் இருமுறை தமிழ் இதழ்)

                         மற்றும்

   திரைப்பட இணை இயக்குனர்,

 

112. காற்றின் மொழி

மார்க்கோனி செய்த உன்னத படைப்பே 1//

அறிவியல் வளர்ச்சியில் அரிய சாதனை 2//

காற்றிலே தூதுவிட கண்டுபித்த விஞ்ஞானி 3//

காற்றலையின் இனிய அலைவரிசை அற்புதம் 4//

தொலைக்காட்சியின் கவர்ச்சிகளையும்

தாண்டி இன்றளவும் 5//

மனிதம் காக்கும் மாண்புமிகு வானொலி 6//

ஓயாத வேலைகளுக்கு தீராத காதல் 7//

கேட்க கேட்க ஈர்க்கும் உன்தகீதம் 8//

தனிமைக்கு இனிமையான வானொலி உன்தகீதம் 9//

எவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும் உந்தன்இசை 10//

வானொலி அருகிலேயே அமர வைக்கும் 11//

காதோடு உரசும் காற்றின் மொழி 12//

கடல் கடந்து காற்றில் தவழ்து 13//

கிராம மக்கள் பொழுது போக்காய் 14//

செய்திகளையும் பாட்டுக்களையும் கொண்டு சேர்ந்து 15//

இன்றும் அழியாமல் உலாவரும் உந்தன்ஒலி16//

மா.சந்திர சேகரன்

 (மதுரிதா அறக்கட்டளை நிறுவனர்)

வையக்கவுடண்பட்டி,

திருவேங்கடம் வட்டம்

தென்காசி மாவட்டம்.

 

113. காற்றின் மொழி..

நிம்மதியின் பேரரசியே..

செவிகளின் தேனூற்றே..

ஏழைகளின் சொர்க்கமே..

தாலாட்டும் தாயே..

மாணவர்களின் அறிவுச்சுடரே ..

மக்களின் சொர்க்கமே ..

தன்னம்பிக்கை தமிழே..

முக்கனியே,  நீ இல்லையேல்

நாங்கள் இல்லை.. நீ மட்டுமே

மனித குல மூச்சு..

வாழ்க உன் புகழ்...

 

மா.செந்தில்முருகன்.

ஏத்தாப்பூர்.சேலம் மாவட்டம்.

114. காற்றின் மொழி

துவண்டு நின்றபோதெல்லாம்

தோள்கொடுத்து உயர்த்தியமொழி.

எங்கள் அசைவிலும்

பேச்சின்நாவிலும் நிறைந்தமொழி.

பழங்காலத்தில் தோன்றியமொழியாம்

பழமைமாறாத மொழியாம்.

கண்ணிய மொழியாம்

காப்பியம்படைக்க வைத்த மொழியாம்.

உலக நாடுகளுக்கே முதல்மொழியாம்.

பலமொழிகளுக்கு மூலமொழியாம்.

கற்பனையில் ஆர்பறிக்கும் கவிதை மொழியாம்.

தமிழ்உறவுகளோடு ஒன்றிணைக்கும்

ஒற்றுமை மொழியாம்.

தமிழ்ச்செய்யுள் கேட்பதற்கும்

காதுகளுக்கும் இனிமைதரும்.

தமிழ்படித்தவர்கள் எவரும் வீழ்ந்தவர்கள்

கிடையாது.

தமிழின் பெருமிதத்தை காலம் பதில் சொல்லும்.

இனிதிலும் இனிது தமிழை கற்பது இனிது.

எளிதிலும் எளிது தமிழ்மொழிபடித்தல் எளிது.

வாழ்க்கையின் அனுபவத்தை

கவிபடைக்க வைக்கும்.

வீழ்வது நாம்ஆயினும்

வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

வாய்ப்பளித்தமைக்கு நன்றி!

 

இளம்சாதனையாளர்.

கவிஞர். ஜெ.கோகுல்., பி.எஸ்.சி.,எம்.சி.,

மேலபுலம்புதூர்.

 

115. காற்றின் மொழி

 

பண்பலை வரிசையிலே

பகட்டாக தவழ்ந்து வந்து

பாலகரின் நெஞ்சங்களிலும்

பண்ணாக ஒளிர்ந்து நின்று

நாதஸ்வர இசையால்

பூபாளமாக நடைப் பயின்று

நாளும் ஒரு நிகழ்ச்சியினை நயமாக நயந்து உரைத்து

ஆகாஷவாணியென அகிலத்தை கட்டிப் போட்டு

ஆகாய செய்திகளையும் அழகாக உடன் உரைத்து

மயக்கும் குரல்வளத்தால் மனங்களிலேயே உயர்ந்து நின்று

மாரியின் வரவினையே அறிக்கையாக

தாக்கல் செய்து அந்நிய

தேசலிருந்தும் அழகாக தமிழ் உரைத்து

அகில உறவுகளை அன்பு சங்கிலியால்

பிணைத்து மாறும் உலகத்திலும்

மலரும் நினைவுகளாக நின்று

மாநில செய்தியினை

மக்களுக்கு உவந்து அளித்து

தேனமதுர தமிழோசையை சிறப்பாக தான் கொடுத்து

தேவையான தகவல்தனை அன்றன்றே எமக்களித்து

தென்கச்சி சுவாமியை கதைக்களத்தில் தான் இறக்கி

தேன் கிண்ணமதில் தெவிட்டாத கானம் இசைத்து

வயலே வாழ்வேன  வாழ்வாதாரத்தின்  வகை நிறுத்தி

வயோதிகர் மனங்களிலும் வசந்தமாக தான் வீசிய

காற்றின் மொழியை காலம்காலமாக சுவாசித்தாலும்

காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் தேவகானம் இதுவே.

 

ரா.விஜயஶ்ரீ

பட்டதாரி ஆசிரியர்,

சென்னை.

 

116. காற்றின் மொழி

தென்றலாய் மிதந்து தவழ்ந்து வரும்

தேனமுதமாய் செவியோடு பேசிடும் மொழி

அதன் பெயரே வசீகரிக்கும் வானொலி

இது அந்த கால ஆண்ட்ராய்டு

தினசரி செய்திக்கென ஒரு கூட்டம்

தித்திக்கும் பாடல்கள் கேட்க தனிகூட்டம்

விவசாய செய்திகள் கேட்கும் ஆர்வத்தில்

கையில் காரும் கலப்பையுமாய் விவசாயி

விடியலில் வந்திடுவார் வானொலி கேட்க

அரசியல் செய்திகளை கேட்டு அறிந்திட

கரை வேட்டிகள் கூட்டமும் கூடும்

சமையல் குறிப்புக்கு ஏங்கிடும் கூட்டம்

மருத்துவக் குறிப்புகள் உடல்நலம்

குறித்த செய்தி அறிய ஒரு கூட்டம்

இப்படியாக இன்னும் பலப்பல சங்கதிகளை

பெட்டகமாய் வைத்திருக்கும் மாயாசாலப் பெட்டி

மார்கோனியின் மகத்துவமான கண்டுபிடிப்பு வானொலி

இன்று பல இல்லங்களில் இல்லை

சில இல்லங்களில் நினைவுப் பொருளாய்

இன்றும் இருக்கும் வானொலியைப் பாதுகாப்போம்

 

கவிஞர் முனைவர்

இரா.கோட்டீஸ்வரன்,

வாணியம்பாடி.

 

117. காற்றின் மொழி

 

ஒலிசூழ் உலகு இது ஓசையாய் ஒலியாய்

இசையென வளர்ந்த தமிழே!

தமிழ்மணம் பரப்ப தமிழ்மண்

கால்பதித்த வானொலியே!

ஒலியாய் மனிதமனங்களில் நிறைந்தாய்!

ஓசையின்றி வீட்டினுள் நுழைந்து

இன்னிசையாய் பரவினாய்!

நீக்கமற எங்கும் இறையொலி இசைத்து

இல்லமெங்கும் பக்திமொழி பகர்ந்தாய்!

அகிலம் அனைத்தையும்

அண்டம் முதலான யாவையும்

செய்தியாக்கி அறிவுமொழி பகிரும்

அறிவுப்பேழை நீ!

இன்பமாயினும் துன்பமாயினும்

அடைக்கலம் தந்திடும் தோழமையே!

நாள் முதலும் உன் கைப்பிடித்து

ஓயாது உழைக்கின்றேன்

பாட்டாளி மனமுணர்ந்து

பாட்டிசைத்த பாவலன் நீ!

மூத்தோர் சொல்லை

அன்னைத் தமிழில்

ஆன்றோர்  மொழியாய் உரைத்தாய்!

தெள்ளமுதில் இறையமுதை

ஆன்மீக மொழியாற்றினாய்!

நொடிக்கொரு முறை

காற்றின் அலைவரிசையில்

இசையாகி எந்தன் உளம்புகுந்த

காற்றின் மொழி நீ!

 

முனைவர் நா.ரேணுகா

மதுரை

 

118. காற்றின் மொழி.

 

மின்சாரம் பாயாத

பாழடைந்த கிராமத்தில்.

பாட்டி வீட்டில்மட்டும்

பாட்டுச் சத்தம்கேட்கும்.

மின்கலத்தை கடித்துநசிக்கி

பள்ளக்குழியில் போட்டு.

மூடிப்பின் காதுதிருகி

கத்தவைப்பார் தாத்தா.

காற்றலையில் மிதந்துவந்த

பண்பலையை காத்தவிசை.

கொடுத்து காதுதிருகி

சிறைப்பிடிப்பார் நன்றாக.

வானம்பாடி வானில்பாட

கானம்பாடும் வானொலியும்.

கடல்தாண்டி கண்டம்தாண்டி

நாடுகளின் நடப்பியலை.

செய்திகளாய் சொல்லிச்

செல்வாள் செவிலித்தாயாய்.

அறிவுக்குநல்ல சிந்தனைகள்

ஆள்வளர்க்க பந்தனைகள்.

அள்ளித் தருவாள்

தமிழமுதாய் அன்னைபோல்.

நாற்றுநட்டவன் வீட்டுக்கு

நாளைவரும் மழையென்று.

நாட்டுக்குவரும் புயலுகாற்று

நாடுகடக்குமா என்றும்.

ஏங்கியிருக்கும் உள்ளங்களில்

வெள்ளம்பாயுமே பள்ளங்களில்.

அறிக்கைகள் ஆவணங்கள்

ஒப்புவைப்பாய் நிறையவே.

இனிமையான இசைப்பாட்டு

இடையிடையே இடைக்காலப்பாட்டு.

புதுவருடம் புதுப்பாட்டு

புதன்கிழமை பொற்காலப்பாட்டு.

பகிர்ந்துவைப்பாய் மனதிலே

மழலை மொழியிலே.

பாணரில்லா இடைவெளியை

பண்பலைகள் நிறப்புது.

பின்புலத்தில் களைப்பும்

பறக்குது எங்கோ...

         கோ. தனுசன்.

        மட்டக்களப்பு,

         இலங்கை

 

119. காற்றின் மொழி..

 

முகடுகளில் தோன்றும் முத்தமிட துடிக்கும்..!

முற்றத்தின் தோழி முகவரியை தேடி...!

அழகின் வாசம் மலரின் மணம்...!

தென்றலின்  இளமை தேடலின் பயணம்...!

உருவம் பெற்றது வலிமை காட்டிட...!

உயரம் எல்லையை கடக்கும் வேகத்தில்..!

உள்ளம் அழகை தேடித்தேடி சுற்றும்..!

உணவுகள் புதியன கோபுர கழிவுகள்..!

நீரின் நாயகன் நிலத்தின் காதலி...!

வானத்தை அளந்தவன்  வனத்தில் நுழைந்தவன்...!

பருவங்கள் தோறும் பயணமாக வரும்..!

பாதையை மட்டும் மாறாமல் அப்படியே...!

மின்விசை காட்டும் மீளாத பணியில்...!

பள்ளத்தை மேட்டை  பிளக்கும் ஆயுதம்...!

புயலாய் தென்றலாய்  பொங்கும் சூறையாடி..!

கோபம் குறைய சாரலாய் சத்தம்...!!

 

வீரகனூர் ஆ இரவிச்சந்திரன் சேலம்.

 

120. காற்றின் மொழி

 

நித்தமும் இன்னிசைகீதம் ஒலிக்கும் பழமையானதாக

தேன் கிண்ணமாய் பழைய பாடல்

இளமை பொங்கும் காதல் மெட்டுக்கள்

இளையராஜாவின் மயக்கும் தாலாட்டு பாடல்கள்

பயணங்கள் தொலைவானாலும்

பாடல்களால் இனிமையாகும்

ஏழைகள் கையில் கிடைத்த வைரமாக

வயக்காட்டுக்கும் எடுத்து செல்லும் பொருளாக

நாட்டுநடப்புகளும் தெரிந்து கொள்ளும் கருவியாக

இரவில் கேட்டே உறங்கும் பழக்கமாக

வானொலி, பண்பலை எல்லோருக்குமே பயனாக

வயதானவர்களுக்கு வானொலி இன்றும் பொக்கிஷமாக

என்னைப் போன்றோருக்கு வானொலி நினைவலைகளாக

திகட்டாத பாடல்கள், திகட்டாத குரல்கள்

வயலும் வாழ்வும் அருமையான தொகுப்பும்

ஆல்இந்தியாரேடியோ விவேக் பாரதி, சிலோன் வானொலி

கேட்டாலே இனிக்கும், கிடைத்தது வரப்பிரசாதமாக!

 

 வி.கணேஷ் பாபு ,

 ஆரணி

 

121. காற்றின் மொழி

 

 வானொலி என்னும் நாத கீதமே

 சில காலங்களுக்கு முன்

தொலைக்காட்சி இல்லா வீடுகளிலும்

இனிய கீதமாய் ஒலி த்தவளே!

கண்களுக்குப் புலப்படாமல்

 செவிகளுக்கு இனிமை தரும்

 என் இனிய தோழியே!

 குரலுக்குக் காந்தவிசை உண்டு

 என உணர்த்திய பொன் மகளே!

 அரிய பல நினைவுகளைத்

தன்னகத்தே நிறைத்து வைத்திருப்பவளே!

 தனிமையை மறக்கச் செய்து

 தென்றலாய் வருடும் தோழியே!

 மொழி, மதம் கடந்து மனதில்

சிம்மாசனமிட்டு அமர்ந்தவளே!

 பாமர மக்களின் பொழுதை

 வசந்தமாக்கி அமுத கானமே!

 பழமையானது பழமையான போதிலும்

 புதுமையாய் ஒலிக்கும் தோழியே!

 மாற்றம் கண்டபோதும்

 ஏற்றம் கண்ட  தோழியே!

 அகம் உவகை  கொள்ளும்

உன்னை நாடும் போது தோழி  !

 நம்மை மகிழ வைக்கும் தோழியை

 என்றும் வாழ்த்துவோம்.

 தி. திலகவதி

 தர்மபுரி.

 

122. காற்றின் மொழி

காலத்தை எதிர்பார்த்து...

நேரத்தை குறித்து வைத்து...

 காற்றின் வழி மென்மையாய் வரும்...

கானங்களைக் கேட்க...

காதுகள் காத்து கிடக்கும்...

முகமறியா குரலுக்காக...

மனம் உருகி ஏங்கிக் கிடக்கும்...

இடையறாது ஒலிக்கும் இசைக்கு...

இடைவிடாது இதயம் துடிக்கும்...

விளம்பரங்களும் மனப்பாடமாய்

மனதில் மலர்ந்து மணக்கும்...

அடுத்து என்ன பாடலாக இருக்குமென்ற

ஆவலில் எண்ணங்கள் தவழும்...

இன்ப துன்ப உணர்வுகளை

இசையால் கிள்ளி விடும்....

மணித்துளி செய்திகள்

உலக நிகழ்வை அறிவித்துவிடும்...

காலம் கடந்தாலும்...

கண்கவர் தொலைக்காட்சி வந்தாலும்...

கைபேசியில் கானம் ஒலித்தாலும்...

காற்றின் மொழியான வானொலியில்...

இசை மொழி கேட்பது தனி சுகமே...

நிலவின் ஒளியைப் போல...

கடலின் அலையைப் போல...

காற்றின் மொழியைப் போல...

வானொலி பண்பலை...

ஓயாது இன்ப மழை தூவட்டும்...

            சு.சந்தியா

      திருச்செங்கோடு.

 

123. காற்றின் மொழி

தெள்ளிய இசையாய் …

திகட்டாத அமுதாய் …

முப்பொழுதும் காணமாய் …

முடிசூடா அரசனாய் …

உணர்ச்சிகளுக்கு விருந்தாய் …

உள்ள கசப்புகளுக்கு மருந்தாய் …

எப்பொழுதும் என்னுடனாய் …

நீங்காத தோழனாய் …

தனிமை நீக்கும் காவலனாய் …

உள்ளம் களவாடும் காதலனாய் ...

மனதை கொள்ளை கொள்ளும் கள்வனாய் …

என்றும் எனது முதல் காதலாய் …

என்றென்றும் என் நினைவுகளில் பசுமையாய் …

காற்றின் மொழியாய் …

இசை பிரியர்களுக்கு வரமாய் …

அன்று முதல் இன்று வரை

வானம்பாடியாய் …

வலம்புரிகின்றான் …

அனைவரது இல்லத்திலும்

அவர்களது உள்ளத்திலும் நீங்க

இடம்பெற்று

காற்றின் மொழி

 

மு.கோபிகா,

இராமநாதபுரம் மாவட்டம்,

கடலாடி.

 

124. காற்றின் மொழி

இசையை எங்கும் கொண்டு வரும்

இனிமையை மனதில் என்றும் தரும்

இலக்கிய சுவையால் ஏற்றம் பெறும்

 இரவும் கூட இதமாய் மாறும்

 உருவம் இல்லா உயிராய் உலவும்

உலகம் யாவும் ஒன்றாய் இணைக்கும்

உள்ளம் மகிழும் இசையை கொடுக்கும்

 உறக்கத்தில் கூட இனிதாய் இசைக்கும்

 ஒலியாய் வந்து இன்னிசை பாடும்

 ஒற்றுமை உணர்வை அதிகம் பெருக்கும்

 ஒருமைப்பாட்டை எங்கும் ஓங்கி வளர்க்கும்

 ஒளியாய் வாழ்வில் தீபம் ஏற்றும்

காலை மாலை கானம் பொழியும்

காலம் முழுதும் பாடல்கள் தூவும்

காற்றின் மொழியாய் வானில் பரவும்

 காவியமாய் என்றும் வானொலி நிலைக்கும்

 

 கவிஞர் இரா. சுப்பிரமணியன் புதுக்கோட்டை

 

125. காற்றின் மொழி

 

காற்றின் அலைகளில் கானம் கலக்கும்

ஆற்றும் பணியால் அகிலம் மகிழும்

போற்றும் வகையில் புன்னகை மொழியில்

ஊற்றாய் நித்தம் உள்ளக் களிப்பை

மாற்றம் கொடுத்து மகிழ்வை விதைத்து

போற்றும் வகையில் போதனை புரியும்.

இயல் இசையுடன் இன்பப் பாடல்கள்

மயக்கும் வகையில் மனதைக் கவர்ந்து

இயங்கும் வானொலி இன்னிசை பரப்பும்

துயரைக் களையும் தூய்மைச் செயல்களைத்

தயக்கம் நீக்கித் தன்பணி யாற்றும்

இயக்கம் வாழ்க இதயம் வெல்க !

மண்ணின் நிகழும் அன்றாட நிகழ்வுகள்

விண்ணில் நிலவும் வானிலை மாற்றங்கள்

எண்ணில் அடங்கா இயற்கைச் சீற்றங்களை

கண்ணும் கருத்தாய்க் கவனித்துச் சொல்லும்

புண்ணிய சேவையினைப் போற்றிப் புகழ்வோம்

கண்ணியம் காக்கும் காற்றலை போற்றுவோம்.

 

கவிஞர் க.தங்கவேலு

கிருட்டிணகிரி.

 

126. காற்றின் மொழி

 

செவிவழி நுழைந்து இதயம் கவர்ந்திடும்

புவியெலாம் காற்றின் மொழியாய்க் கலந்திடும்

தனிமைச் சிறையில் தோழியாய் அணைத்திடும்

இனிமை நிறைத்திடும் இசையாய் இசைத்திடும்

அயர்வை மறந்திட  அழகான வழிதரும்

அசதிகள் விரட்டிடும் அருமருந்தும் ஆகும்

முப்பொழுதும் நினைவினில் முழுதும் நிறைந்திடும்

எப்பொழுது கேட்டாலும் இதயம் துள்ளிடும்

பயணம் தோறும் பாடலாய்த் தொடர்ந்து

கவனம் சிதறாது காவலெனக்  காத்திடும்

துன்பங்கள் போக்கிடும் சிறந்த துணையே

இன்பங்கள் இணைத்திடும் இனிய சிநேகிதியே.

காதுகள் மயங்கிடும் காற்றின் ஒலியே!

காதலாகி மயக்கிடும் காற்றின் மொழியே!

கலிகள் நீக்கிடும் வலி நிவாரணியே!

களிப்பை பரப்பிடும் அலையே வானொலியே!

 

செவிலியசகோதரி

இர.பாக்யலட்சுமிசுந்தரம்

கோவை.

 

127. காற்றின் மொழி

 

எதிரொலியை கேட்டு அதில் வானொலியை

கண்ட விஞ்ஞானி மார்கோனி....,................

 மாமேதையின் கண்டுபிடிப்பு

பாரே கேட்கும் வலைதளமாகி

சோர்வின்றி காதுகளில் ஒளிக்குதே!

செய்யும் வேலை தடையின்றி

மெய்யென உணர்ந்து செய்து தொய்வில்லாத

பாடல்களை செவிமடுக்க நேரமும் வீணாகவில்லை

பணியும் இனிதாக இனித்தது!

காற்றின் மொழியாகி  எங்களைத்

தேற்றும் உற்சாகம் கொடுக்கும்

முற்றும் உணர்ந்த தோழனே!

 உனக்கொரு சிறப்பு தினம் அதில்

எனக்கொரு கவிதை கிடைத்தது!

 அலை அலையாக நீ தவழ்ந்து வந்து

மலை போன்ற கவலையை போக்கி

வலையாய்  என்னை மகிழ்ச்சியில் கட்டி விட்டாய்!.

 

உஷா முத்துராமன்

 மதுரை.

 

128. காற்றின் மொழி

 

பாரதியின் கனவே காலத்தின்  நினைவே

பேசாமல் சிந்தும் குழந்தை மொழியே

பேசிட  வைக்கும் எந்தன் வானொலியே

நித்தமும்  கவிபாடும் எந்தன் குயிலே

தொலைதூர தகவல் தந்திடும் உறவே

இனிமையின் குரலே இன்பத்தின்  சாரலே

மனதின் ஓசையை பாடும் குயிலேநீ

உருவம்  இல்லாத உணர்வின்  பிம்பமே

இரவிலே  தாலாட்டும் இன்னொரு  அன்னை

இயக்கம்  நிற்காத சுழலும் சூரியனே

உன்குரல் கேட்காத செவிகள் செவிகளோ

உன்னை நினைக்காத நெஞ்சம் இனிக்காதே

 

செல்வி. கவிதாயினி.

பா. ஜெயபிருந்தா

நாமக்கல் மாவட்டம்.

 

129. காற்றின் மொழி

 

செவிக்கு விருந்தான தேனமுத ‌மொழியே

உன்னால் தித்திக்கும் எந்தன் ‌விழியே

கேள்வி ஞானத்தைத் தந்திட்ட குருவே

பாரதியின் நீங்காத எதிர்கால  கனவே

உன்னைக் கேட்டாலே மனதில் ரீங்காரம்

கவிவடித்து தந்தாய் காற்றில்  ஒருகானம்

வாழ்வின்  மகிழ்வுக்குநீயேநிதம் விருந்தானாய்

வாழ்வின் வலிகளுக்கு நீயே நல்மருந்தானாய்

உலகத்தின் நிகழ்வை உனக்குள்  செதுக்கினாய்

நித்தமும் எனக்காக கலையாய் மாற்றினாய்

நீபாடும்   இராகமே தேனிசைத் தென்றலானது

நித்தமும்  மனதின் இன்ப  தீண்டாலனது

 

முனைவர் இரா. பாண்டியராஜன்

சிவகங்கை மாவட்டம்.

 

130. காற்றின் மொழி

 

ஆண்டுகள் போன அழகிய நாட்களில்

காற்றின் மொழியாம் வானொலியில் ..

கேட்டு மகிழ்ந்த.. ஒலி அலைகள்

இனிமை ..இனிமை.. ஒலியே... நீயோ!

தெய்வீக பாடல்களை விழிகள் விரியும்

முன்னே செவியில் நுழைந்து..     

விழிக்க செய்த  ஆன்மீக ஒலி!

உறவுகளை  வகைப்படுத்தி

பிறந்த நாளுக்கு  நீ சொல்லும் வாழ்த்து ஒலி !

தென்கச்சியாரின் சிரித்து சிந்திக்க

இன்று ஒரு  தகவல் ஒலி!

வார இறுதியில் வருவாய் உங்கள் விருப்பமாய்

உள்ளத்தில்இன்பமான திரை கான ஒலி!

வளரும் பிள்ளைக்கு  வகை வகையாய்

கதை சொன்ன வானொலி அண்ணாவின்

கம்பீர ஒலி! நாடகங்கள்

ஒரு பகுதியாய்  ஞாயிற்று கிழமையில் ...

கத்தி சண்டையும கர்ஜனையும் ஓங்கிய

ஆரவார ஒலி!

நித்திரை வேளையிலும்

முத்திரை பதிக்கும் நீங்கள் கேட்ட

பழைய பாடலின் மதுர ஒலி !

இப்படி… காற்றின் மொழியே... நீ!  

ஒலி கலவையாய்

என் வானொலி பெட்டியில்

வாழ்ந்த வாழும் காலங்கள் ....

வசந்தம்! வசந்தமே!!!

     

     ஆ. வெண்ணிலா

முதுகலை தமிழாசிரியர்

       இராமாபுரம்

    சென்னை 89

 

131. காற்றின் மொழி   

 இத்தாலிய விஞ்ஞானியின்  சிந்தையில்

 மலர்ந்த பூ வானொலி

 மார்க்கோனியின் படைப்பிற்கு

வடிவம் கொடுத்தவர் பலர்..

 விண்ணைத்துளைத்து ஆராய்வது

செயற்கைக்கோள்

நம் மனதை வருடி செல்வது 

செயற்கைக்கோள் வானொலி

 எவரெஸ்டை தொட்டது      

நம்ஆகாச வாணி- வானொலி           

அறிவியலின் மிகச்சிறந்த படைப்பு வானொலி       

அவரவர் இல்லங்களில் உள்ளங்களில்

இவ்வுலகை நம் கண் முன்னே காட்டிடும்.....               

நம் எண்ணங்களை வண்ணங்களாக  காட்டும்

செயற்கைக்கோள் வானொலி   ...        

இணைப்பு கம்பி இன்றி            

மக்களை இணைக்கும்   

மந்திரப் பெட்டகம் வானொலி             

செவிக்கு இனிய இசையும்                

மெய் சிலிர்க்க   கேட்டு ரசிக்க பாடல்களையும்   

நடராஜ சிவம் முதல்  அப்துல் ஹமீது வரை

விடை பெறுபவர்  வருவோரை

வரவேற்பதும் வானொலி            

பொங்கும் பூம்புனல் இசை கேட்டதும்    

புது வெள்ளம் பாடல் இசைத்ததும்     

அந்நிய மொழி அகற்றிட                    

ஒரு நிமிடம் தமிழ்

இன்பமும் துன்பமும் கலந்து இசைத்ததும்     

என் விருப்பம் ஒலித்ததும் வானொலி      

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்             

நாம் பிள்ளைகளைப்  போல     பிள்ளைகள்

தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்  ....          

அப்பம்மா அம்மம்மா என அழகு தமிழில்

பிறந்தநாள் வாழ்த்து முழங்கிய வானொலி

பிப்ரவரி13 உலக வானொலி தினம்.......   

 

க.முருகேஸ்வரி பேச்சிராஜ்,

சாத்தூர்.

 

132. காற்றின் மொழி

 

 அன்பின் ஆழத்தை அறிவித்த ஒலி!

 ஆற்றலின் பெருக்காய் ஊற்றெடுத்த ஒலி!

 இன்பத்தின் இயல்பை இனிமையாக்கிய ஒலி!

 ஈகையின் பண்பை பறைசாற்றிய ஒலி!

 உள்ளத்தின் உணர்விற்கு உயிரூ ட்டிய ஒலி!

 ஊக்கம் தந்து ஏற்றம் காட்டிய ஒலி!

 எண்ணத்தின் வலிமையை எடுத்தோதிய ஒலி!

 ஏற்றம் காண மாற்றம்  தந்திட்ட ஒலி!

 ஐயத்திற்கெல்லாம் விடைகாண வைத்த ஒலி!

 ஒற்றுமையின் பலத்தை ஓங்கி ஒலித்த ஒலி!

 ஓராயிரம் பாடல்களை இசைவித்த ஒலி!

 ஓரறிவு முதல் ஆறறிவின் செயலை விளக்கிய ஒலி!

 ஔவையின் பொன்மொழிக்கு ஒளியூட்டிய ஒலி!

 ககனத்தின் மேன்மையை உணர வைத்த ஒலி!

 அங்காடிகளில் அனைவரையும் மகிழ்வித்த ஒலி!

 சக்கரமாய் சுழன்று சாளரத்தில் புகுந்த ஒலி!

 விஞ்ஞானத்தை மெய்ஞானத்தோடு விளக்கிய ஒலி!

சிட்டாக சிறார்களை பறக்க வைத்த ஒலி!

 அண்ட பேரண்ட நிகழ்வுகளை அனுதினமும் அறிவித்த ஒலி!

 தந்திரமும் மந்திரமும் கற்றுக்கொடுத்த ஒலி!

 சொந்தபந்தத்தின் உணர்வை சொல்லிய  ஒலி!

 பம்பரமாய் சூழலும் பாட்டாளிகளை சுறுசுறுப்பாகிய ஒலி!

 மண்ணின் மாந்தர்களுக்கு சிறப்பு செய்த ஒலி!

 யாதும் ஊராய் யாவரும் கேளிராய் வலம் வந்த ஒலி!

 அரவணைத்து அன்னையின் அன்பாய் ஒலித்த ஒலி!

 உலக நியதியை எடுத்தோதிய ஒலி!

 வாடிடும் உள்ளங்களை களிப்புறச் செய்த ஒலி!

 பழமையை புதுமையோடு பேசிய ஒலி!

 கள்ளம் கபடமின்றி நம்மை மகிழ்வித்த ஒலி!

 அறத்தையும் மறத்தையும் ஈர்ப்போடு உணர்த்திய ஒலி!

 வென்றிடலாம்  வாழ்வில் என்று நம்மை வளமாக்கிய ஒலி!

 வளிவளியாய் வான் வழியாய் வலம்

வந்து ஒலியலையாய் பாய்ந்திட்ட

வானொலியே வாழ்க! வாழ்கவே!.....

 

ப.திருமொழி

திருப்பூர்.

 

133. காற்றின் மொழி

 

தேசம் தொட்டு தூரமாய் கடந்திடும்,

ஆகாய நேரம் கூட

ஆழ்ந்து கவனித்திடும்,

கதையென்ன கலையென்ன என,

ஓசைகளால் ஒளிப் பெருகி,

காதுகளை வந்து சேரும்,

காற்றின் மொழிக்கு வலை அதிகம்தான்,

உறவுகள் எங்கிருந்தாலும்,

உணர்வுகளை தொட்டுச்செல்லும்,

மகுடம் எதுவாக இருந்தாலும்

வழக்கம் அருமையாக சொல்லும்,

காற்றில் மிதந்து வந்து,

காவியமாய் கவி சொல்லும்,

இரவு பகல் இல்லை அதற்கு,

சிறியோர் முதல், பெரியோர் வரை,

கரம் கட்டி செவி சாய்க்கும் மொழிகள் அவை,

காற்றின் மொழி, வானொலி.

 

கவிஞர் சஜ்ஜாத் ஷரீப்(கபூரி),

இளங்கலை பட்டதாரி மாணவன்,

இலங்கை.

 

134. காற்றின் மொழி

 

காட்டு மூங்கில்தனில்

சுரும்பிட்ட துளை வழியே நுழைந்து கானமான

இசையேகாற்றின் மொழியே..

காதலால் இணைந்த இதயங்களின்

ஊடே வழிந்த காதலின் இசையே

காற்றின் மொழியே..

 

உறவுகளால் உடைந்த உள்ளங்களுக்கு

மருந்தாகி வந்த பல எண்ணங்களின்

வண்ணங்களே காற்றின் மொழி

'இன்று ஒரு தகவல்' எங்கள்

மனதில் என்றும்  நீங்கா தகவலான கதையே

காற்றின் மொழியே..

உழவையும் தொழிலையும்

இணைந்து உறவுகளையும்

நட்புகளையும் பிணைத்து

புலனமும் முகநூலும்

கோலோச்சாத காலத்தில்

நேசத்தையும் பாசத்தையும் கலந்து

நாதத்தையும் கீதத்தையும்

மனங்களில் எல்லாம்

பரவ செய்து உறவுகளுக்கு

உரமேற்றி உணர்வுகளுக்கு

நிறமேற்றி

பண்பலை வழியே பரவசப்படுத்திய

காற்றின் மொழியே..

எங்கள் சுவாசங்களின்

எதிரொலியாய் என்றும்

ஒலித்து கொண்டேயிரு...

 

சௌ. நிலவழகி

முதுகலை ஆசிரியை

சென்னை.

 

135. காற்றின் மொழி.

 

வைகறையில் வகை வகையாய்

வண்டினங்களின் மொழி கேட்கும் முன்னே....

காற்றில் கலந்து வாசல் வந்து கேட்கும் மொழி....!

பகல் பொழுதில் பகலவன்

தன் வெம்மொழி கூறும்பொழுது....

வேட்கை தணிக்கும் வேனிலாய்

வந்து வரமருளும் மொழி....!

அந்திமாலை வேளையில் சொந்தத்தோடு

செந்தூரம் பூசுகையில்....

சந்தமாய் வரும் மொழி....!

இரவின் மடியில் இருளே துணையாய்

மௌனமொழி பேசுகையில்...

அன்போடு தலைகோதி ஆறுதல் கூறும் மொழி....!

அன்பு கொண்ட மனங்கள் கலந்து

ஆசை மொழி பேசுகையில்.....

இன்பத் தேனாய் கள்ளம் சொல்லும் மொழி....!

இறையடி நாடி இயற்கையோடு இணைய....

இணைகரமாய் இணக்கம் கூறும் மொழி...!

சொந்தம் இழந்து சோகம் ததும்பி

மனம் வெதும்புகையில்....

சுகம் கூறி சோபம் சொல்லும் மொழி....!

தோல்வி வந்து துவழும் பொழுது....

தோள் கொடுத்து துணை நிற்கும் மொழி ...!

இசையா....பேச்சா.... கதையா... களிப்பா....

எல்லாம் உன் மொழி....

இணையே இல்லை... துணையாய் என்றும்...

தூரம் கடந்தும்... சாரமாய் உன் மொழி...!

அன்னை மடியாய் .. ஆறுதல் வடிவாய்...

ஆசை  இசையாய்... அறுந்தவப்பயனாய்....

காலங்கள் கடந்தும்... ஒலித்தாய்....

கண்டங்கள் கடந்தும்... ஒலிக்கிறாய்....

என்றும் எங்கள் எண்ணங்களில் கலந்து

ஒலித்துக் கொண்டே இருப்பாய்...

 

நீ.... காற்றில் கறைந்து....

உள்ளங்களில்  எதிரொலிக்கும்

வானொலி மொழி....!

 

இரா.சரண்யா கோபால்,

காஞ்சிபுரம்.

 

136. காற்றின் மொழி

 

காதுகளை தொட்டுஉள்ளத்தை இனிமையாக்க //

காற்றிலே பறந்து வந்தது அழகிய கானக்குயில் //

காலைக் கதிர் கண்முன்னே வரும் முன்பே //

காலைத் தென்றலாய் ஊடுருவிச் சென்றது வானொலி //

மிதந்து வரும் தென்றலென இனிமையாய் வந்தது //

இதயங்கள் இளைப்பாற இன்னிசையாய் உள்நுழைந்தது //

கனக்கும் கண்ணீருக்கும் தாலாட்டாய் மாறியது //

அன்றொரு காலத்தில் குழந்தையென என்னுடனே பயணித்தது //

இரவு வந்து தாலாட்ட வானொலி தலைகோதியது //

இனிமையிலும் இனிமையென இதமாய் இதயம் தொட்டது //

வர்ணனைகளுக்கு பஞ்சமில்லை வானொலியின் வர்ணனையாளர்க்கு //

காற்றின் மீதேறி பயணம் செய்யும் வானொலிக்கு //

ஒருபோதும் வயதாவதுமில்லை வர்ணனையும் குறைவதுமில்லை //

காலங்கள் கடந்தாலும் வானொலியின் மொழி //

இடைவெளியின்றி உலகம் முழுவதும் பயணிக்கும் //

காற்றின் மொழியினை கான கீதத்தை நாம் மறக்காதிருப்போம் //

வரும் காலங்கள் வானொலியுடன் கொஞ்சம் நேரம் செலவிடுவோம் //....

 

-அன்புத்தமிழன்

               ஊர்,தேனி.

137. காற்றின் மொழி....!

 

இன்பத்தை அளித்திடும் இனிமையான கீதம்..

இயலிசையில் இதயத்தை மயக்கும் இளந்தென்றல்..

வார்த்தைகளின் வடிவமைப்பால்

வலைத்தளமும் வசைப்பாடும்...

காதோர கம்மல்களும் கவிப்பாடி கதகளியாடும்..

கதைக் கட்டுரைகளும் கானாப் பாடல்களும்...

கலைநயத்துடன் குயிலின் குரலோடு இசைந்திடுமே..

வானொலியின் வானம்பாடியாய் உலகமெங்கும் மனக்கிறது..

பெண்களின் பங்களிப்பு பெருமைக்குரிய செய்திகளே..

வயலும் வாழ்வும் நாட்டு நடப்புகள்..

முதியவர்களின் முழுமையான பொழுதுபோக்கு  நேரமே..

அனைவரின் ஆழ்மனதையும் தொட்டு காற்று..

ஒலியோடு உருப்பெற்று உயர்ந்த  ஊடகமே..

வானிலை மாற்றங்களையும்

காலநிலைகளையும் தெளிவுபடுத்தியது

மக்களின் கருத்துக்களைப் பகிர்ந்து  கொண்டது

நேயர்களின் விருப்பங்களை

இடைவிடாது நேர்படுத்தியது..

வரலாறு எனும் சரித்திரத்தை

சாதனையாக்கி சாத்தியமாக்கியது..

 

அரு.நச்செள்ளை

சேலம்.

 

138. காற்றின் மொழி....!

 

காற்றலையால் உருவாக்கப்பட்ட

கனியமுது கவிதைமொழி

 

தலையில் குட்டினால்

பாட்டிசைக்கும் செல்லப்பிள்ளை

அன்னையின் பொழுதுபோக்கு

தந்தையின் அரசியல்ஆசான்

தனது கருமைநிறத்தால்

கட்டியீர்த்திடும் கெட்டிக்காரியவள்

செய்திகளை எடுத்தியம்பும் தகவல் களஞ்சியம்

பல்வேறான நிகழ்வுகளை

பகிர்ந்தளிக்கும் தனித்துவ நிதர்சனம்

அள்ளஅள்ள குறையா அமுதமொழி காதலி

ஒசையற்ற இரவிலும் உள்நெஞ்சில் ஊடுருவும்

இன்னிசை பாடல்களில் இதயம் லயித்துபோவதே

ஓர் அலாதிதானென்ற மனதிட்பத்தை தந்திடுவாள்

தனிமைக்கும் கவலைக்கும் மருந்தாய் மாறிவிடுவாள்

தொகுப்பாளரின் தேன்தமிழ்

பெருகிவழிந்திடும் குரலோசையிவள்

மொழித்தெரியா படங்களைக்கூட

நிழலிட்டு நிதர்சனமாக்கிடுவாள்

ஒளிஒலி கேட்டுமகிழ்ந்திட

ஓடோடிவந்த கனாகாலங்கள்

ஒருகணம்   உள்ளத்தை

வருடிச்சென்று உயிரூட்டிட

நெஞ்சத்தில் தேங்கிக்கிடக்கும்

நினைவலைகளை சற்றே…

தூசிதட்டி துளிர்விட செய்யும்  தூரிகைமகள்

பாழடைந்த அறைகளில்

தஞ்சமடைந்த வானொலியின்

வரலாறு யுகம்பல

கடந்தும் போற்றுதலுக்குரியது

 

 மதிப்புறு முனைவர். நா. பாரதி

                 கள்ளக்குறிச்சி

 

139. காற்றின் மொழி

 

பாதம் தொடும் அலையோ கடலோடு

பதமாக மனதை வருடும் அலையோ காற்றோடு

சுந்தரவனக்காட்டில் சுதந்திரமாய் சுற்றிவந்தே

சந்தனத்தின் குளிர்ச்சியை மனதிற்கு தந்தே

கட்டுப்பாடில்லா கன்றுக்குட்டியாய் துள்ளலாக்கியே

தொட்டுத் தழுவும் குளிர்காற்றாய் தேகத்தை உரசியே

மழை நேரத்து தேநீராய் சுவையேற்றி

பிழைகளுடன் பேசும் மழலையாய் மகிழ்வித்து

அறிவார்ந்த வினாக்களால் ஆச்சரியகுறியாகி

செறிவார்ந்த பேச்சில் உள் கருத்தாகி

வெயில் நேரத்து சிலிர்க்கும் சாரலாய்

மயில் தோகையின் வண்ண ஆடலாய்

மூடிய கதவினை திறக்கும் சாவியாய்

ஓடிய சிந்தனையை அடைக்கும் பூட்டாய்

காற்றோடு கலந்து மோதுமே காதோடு

நாற்றோடு சாய்ந்தாடும் தென்றலாய் காதலோடு...!!

 

கி. உமாமகேஸ்வரி விருதுநகர்

 

140.காற்றின் மொழி

"வானொலியே, காற்றலைகளின் கவிதை நீ!                        

 காற்றின் மொழியை தந்து  கற்பனையோடு எங்களை வளரவைத்தாய் நீ!

உன்னுள்ளே யாரோ அமர்ந்து பேசுகிறார் என நாம் நினைத்த காலம் பொற்காலம்!

இன்றைய குழந்தைகளுக்கு நீ ஆனாய் இறந்தகாலம்!

வைரம் போல் கருப்பு  பெட்டியாய்  மிளிர்ந்தாய் அன்று!!

அனைத்தையும் தன்னுள் கொண்ட கைப்பேசியில் கேட்கிறோம் .

உன் காற்றின் மொழி இன்று! ஓசையற்ற இரவிலும்
இணைய இணைப்பபு இல்லா நேரங்களிலும் நீ தான் என் துணை!

என் உயிருள்ள வரை மறக்க மாட்டேன் உனை!

காற்றின் அலைகளை வரிசைப்படுத்திய வானொலியே,

நான் ரசித்த அதிசயங்களில் உனக்கு தான் முதல் வரிசையே!!

எங்களுக்காக நீ பேசினாய் அன்றும்...பேசுகிறாய் இன்றும்..!

உன் புகழ் பற்றி நாம் பேசினோம் அன்றும்...

பேசுகிறோம் இன்றும்... பேசுவோம் என்றென்றும்!!

வான்புகழ் கொண்ட வானொலியே வாழ்க!!

காற்றுள்ளவரை உன் காற்றின் மொழி  வாழ்க!! வாழ்கவே!!!"

அன்புடன்,
திருமதி.ஹு.நாஸியா
(M.Sc., M.Phil., Biotechnology)
சேலம் மாவட்டம்.

 

141.