அதிசய மரங்கள்

இயற்கை

அதிசய மரங்கள்

இயற்கையின் படைப்பில் அதிசயமான மரங்கள்..


பறந்த கிளியை/ஓடிய அணிலை
திரும்ப வைத்து *கலாமை* மகிழ்வித்த,
புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
எனும் *தேவாரப் பாடல்* வரியிலான,
மத்தமர் தாம் தெங்கு தனை மாறுவாரே
என்று *நீதிவெண்பாவில்* நின்ற,
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
என்றே *திருமந்திரம்* வார்த்தைகளாகி,
ராமன் ஓரம்பில் ஏழு மராமரத்தை
துளைத்து வலிமை நிரூபித்த சிறப்புகள் யாவும் *இராமாயணம்*
காதை தந்த இயற்கையின் அதிசயமான
 மரங்களாலே!

சங்கிலியாரை *சுந்தரர்* மணந்த
சுகந்மான மகிழ மரத்தடி,
*மாங்காடு அம்மன்* தவமிருந்த
மகத்துவம் நிறைந்த மாமரம் ,
திருவானைக்கால் *சக்தி* நீரால் லிங்கம்
பிரதிஷ்டை செய்த நாவல் மரத்தடி,
அஞ்ஞான வாசத்தில் *பாண்டவர்களின்*
போர்க்கருவி புகலிடமான வன்னிமரம்,
மதுக்கூரில் *ஸ்ரீகாளி* குடியிருக்கும்
ஒப்பில்லா வாழ்வு தரும் உடைமரம்,
*சிவசக்தி* சொரூபமாகி நாகம் புடைசூழ
காற்றிலுள்ள தூசு வட்டி நாகலிங்கமரம்,
*ருத்ர வழிபாடு* உணர்த்தும் இலுப்பை,
பிரம்மன்/சிவன்/*விஷ்ணு* வாசம்
செய்யும் /விநாயகன் வாச அரசமரம்,
திருஒத்தூர் கோயிலிலே பதிகத்தை
*சம்பந்தர்* பாட காய்த்து தள்ளிய பனை,
இத்தனையும் சரித்திரமானது இயற்கையின் அதிசயமான 
 மரங்கள் மகிமையே!

புத்தருக்கும்/திருமூலருக்கும் *ஞானம்* அருளிய அரச மரம்!
*நம்மாழ்வாருக்கு* ஞானப் பேரொளியான
புளியமரம்!
சுழி அளவும் துயரம் தராமல் 
நிழலோடு /நீண்ட ஆயுளையும் தரும்
விருட்சம்/தரு எனும் பெயரிலான
பிறப்பின் போது தொட்டிலாகி,
நடக்கும் போது நடைவண்டியாகி,
வாழும் போது கதவு/சன்னலுடன்
ஓலைக் குடிசையாகி,
பருவமெய்த பச்சைத் தடுக்காகி,
திருமணத்தில் அரசாணிக் 
கொம்புடன் பச்சைப் பந்தலாகி,
இறக்கும் போது பாடை/சவப்பெட்டியாகி
*மனித வாழ்வினை* அரவணைப்பதே
இயற்கை அன்னையின் வரமான  மரங்கள்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன்,
வாலாஜாப்பேட்டை..