பால் நதிச் சிறகுகள்...

புதுக் கவிதை

பால் நதிச் சிறகுகள்...

ஒரு பிறைநிலா என் நாட் குறிப்பை
சுற்றி முத்தமிட்டுச் சென்ற பின்
வெள்ளைக் காகிதமெங்கும் கரைபுரளும் 
பால் நதியில் துள்ளிக் குதித்தபடி
அயிரை மீன் குஞ்சுகள்

சிட்டுக் குருவிகள் ஒன்றின் மீது ஒன்றாக
சவாரி செய்தபடி பறந்தன

பாலாடைக்கட்டி போல மிதந்த நுரைகளை
இரு கைகளிலும் அள்ளி ஊதியபடி
முதல் முறை மூழ்கி எழுந்தவன்

இரண்டாம் முறை மூழ்கி எழுந்த போது
நீண்ட கூந்தலும் 
நனைந்த செழுமையுமாய் 
நீயாகியிருந்தேன்

மூன்றாம் முறையில் ஒரு தாமரையாய்
முகிழ்த்திருந்தேன்

நள்ளிரவில்  கண் விழித்த போது
என் தலையணையைச் சுற்றிலும்
ஒழுங்கற்று உதிர்ந்து கிடந்தன
சிட்டுக்குருவியின் இறகுகளும்
அயிரை மீன்களில் வெறித்த கண்களும்

                -  #தங்கேஸ்வரன்