புததாண்டு

புத்தாண்டு கதை

புததாண்டு

புத்தாண்டு
                                                               -   முனைவர் இராமகுமார்

பத்து மணி ஆச்சு! எழுந்துருடா, அம்மா குழலியின் சொல்லுக்கு அரவிந்த் எழுந்திருக்கவில்லை! 
இன்னைக்கு ஆபீஸ் லீவுதானம்மா, இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கிக்கிறேன். புரண்டு படுத்தான் அரவிந்த். 
தவமிருந்து பெற்றெடுத்தச் செல்லப் பிள்ளையை கில்டன் ஏறெடுத்துப் பார்த்தார். வழக்கம் போல அம்மாவுக்கும் பிள்ளைக்கும் மார்கழிக் காலத்துப் பனிப் போர்.
இருபது வருசத்துக்கு முன்னாடி கில்டனும் குழலியும் மெரினாவில் சந்தித்தப் போது ஏற்பட்டப் பழக்கம் காதலாகிக் கசிந்துருகும் என்று நினைத்துப் பார்த்தது கூட கிடையாது. தாம்பரத்திற்கும் வேளச்சேரிக்கும் அவ்வளவு தூரம்.
மாநகரப் பேரூந்தில் யாருக்கும் தெரியாமல், பேசாமலே பார்த்து மகிழ்ந்த காலம் இருவருக்கும் சுகமான அனுபவம் தான். வாழ்த்துகள் சொல்ல இருவரின் வாழ்க்கைக்குள் 'வாழ்த்து' இசையானது. 
கேளடி கண்மணி.. பாடல் ரிங்டோன் எங்கு கேட்டாலும் குழலியின் முகம் சற்றே திரும்பிப் பார்க்கும். கில்டனின் ரிங்டோன் அது. 
வகிடு எடுத்தத் தலையில் கனகாம்பரம் குழலிக்கு எடுப்பாக இருக்கும் என கில்டன் சொல்லும் போது குழலிக்கு வரும் வெட்கம் ‘விண்ணகத்து மழையைப் புல்லின் மேல் ‘ பார்த்தது போல் இருக்கும்.
இரண்டு பேருக்கும் 'மனங்கள்' ஒத்துப் போனாலும், 'மதங்கள்' என்னவோ இணைவதற்கு இடமளிக்கவில்லை.
ஒருவருடக் காத்திருப்பிற்குப் பலன் கிடைத்தது. காதல் திருமணம் காலத்தில் அரங்கேறியது. பெற்றோர்களின் 'வாழ்த்துகள்' இல்லாமல்... இது சாபமா ! வரமா ! இருவருக்குமே தெரியவில்லை. 
குழலியின் ஆச்சாரம் கில்டனுக்கு ஆச்சரியம். இன்று 'சுடச்சுட' மீன்குழம்பு வைக்கப் பழகி கொண்டாள் என்பது அதிசயமல்லவா!
வீட்டில் அர்ச்சனை... வாழ்க்கையில் பிரச்சினை... திருமணத்தால் முன்னிலையில் நின்றது அவமானம் என நாட்கள் நகர்ந்தன. இருவருக்கும் ஒவ்வொரு புத்தாண்டும் சந்தித்த அந்நாள் முக்கியமானதாகவே இருந்தது. 
பெரு நகரத்தில் வாடகைக்கு வீடு கிடைப்பது எவ்வளவு கஷ்டமோ, அது போல காலத்தில் மகப்பேறு... இல்லையெனில் அவப்பேறு ...
புத்தாண்டு பிறந்தது. ஐந்து வருடங்கள் கழித்துத் தான் அரவிந்த் பிறந்ததான். உலகமே கொண்டாடும் தினத்தில் பிறந்ததனாலேயே அவனுக்குச் செல்லம் அதிகம். நினைப்புப் பொழப்பைக் கெடுக்கும் என்பது யாருக்குத் தெரியும்.  
அப்பாவை விட அம்மாவை 'ஐஸ் வைப்பதில்' அவனுக்கு நிகர் அவனே தான். 
படிப்பில் அதிக ஆர்வம் இல்லாவிட்டாலும் விளையாட்டில் அரவிந்துக்கு ஆர்வம் மிகுதி. 
கட்டுக்கோப்பான உடலுக்கு அம்மா தான் காரணம் என நண்பர்களிடம் அவ்வப்போது மார்தட்டிக் கொள்வான். 
இருபதாம் பிறந்த நாளுக்கு அரவிந்தின் கோலத்தைப் பார்த்துக் குழலி அழுதே விட்டாள். 
                  ஏம்பா! இப்படி பண்ணிட்ட!
                  பிறந்த நாள் அதுவுமா இப்படியா! 
தலையில எழுமிச்சம்பழத்தைத் தேய்ச்சு, பசு மோரைக் கரைச்சு கொடுத்து, சவரில் தண்ணீரை த் தொறந்துவிட்டுக் குளிப்பாட்டிய போதும் அரவிந்தின் புத்தாண்டும் தணியவில்லை! பிறந்த நாள் ஆல்கஹால் உளறல் மொழி ஓயவில்லை! 
அம்மா ! பேசுங்கம்மா கெஞ்சினான். குழலி அமைதியாக இருந்தாள்.
முந்தனையைப் பிடித்து விளையாட்டுக் காண்பித்தான். 'வெடுக்கென' தட்டிவிட்டாள்.
அவன் தான் தெரியாம பண்ணிட்டான். விடும்மா கில்டன் சொன்னதும், குழலியின் பார்வையில் தீப்பொறிப் பறந்தது. 
மடியில் தலை வைத்துக் கண்ணீரால் சேலை ஈரமானதும், பத்து மாதம் சுமந்தவள் தானும் அழுது கொண்டே அரவிந்தை ஆரத்தழுவினாள். 
சத்தியம் செய்த அரவிந்திற்கு விபூதியைப் பூசி விட்டாள் குழலி.
‘இனிமேல் இதுபோல் நடந்துக்கிட்டா’ அவ்வளவு தான் அம்மா...
 'சும்மா இருக்க மாட்டேன்' குழலியின் வார்த்தையில் தாய்மையின் பரிசம் தெரிந்தது. 
அன்று முதல் இன்று வரை டிசம்பர் 31 ஆம் நாள் என்றாலே குழலிக்கு என்னவோ போல் இருக்கும். 
'காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா'... ரிங்டோன் அலறியது. 
பத்துமணி ஆகியும் எழுந்திரிக்காமல் இருந்தவன் செல்போனில் திரிஷாவின் பெயரைப் பார்த்தவுடன் எழுந்தான்.
என்னடா நாளைக்குப் பிறந்தநாள். இன்னைக்கு இந்த இயரோடோ என்டிங் .. ‘ட்ரீட்’ எதுவும் இல்லையா ! 
திரிஷாவின் கொஞ்சலுக்கு ம்ம்ம்... மட்டுமே பதிலாகச் சொன்னான் அரவிந்த்.
ஈசியார் ரோடே அமக்களப்பட்டது. ஆண்களும் பெண்களும் திருவிழாக் கோலமாய்ச் சாலையெங்கும்.. கடைகளில் வெளிச்சம் சற்று மங்கலாகவே இருந்தது.
எட்டுமணி ஆச்சு! திரிஷாவிடம் இருந்து மெசேஜ். என்ன ஆச்சு! கிளம்பிட்டியா ! அரவிந்த் எதிர் முனையில் அமைதியாக இருந்தான். 
இரண்டே வார்த்தை. இரு ... வந்திடுறேன்...
அம்மாட்ட என்ன சொல்றது. அப்பா எங்கே போறன்னு கேட்பாரே ! செஞ்ச சத்தியத்தைத் தேர்தல் வாக்குறுதி போல மறந்திட வேண்டியது தானா! அரவிந்த் மண்டைக்குள் 'பரணி யுத்தம்' நடந்தது. 
அம்மா! நான் கொஞ்சம் ஈசியார் வரை போய்ட்டு வந்திடுறேன் அரவிந்த் சொன்னதும்,
என்னது இன்னைக்கா! அதெல்லாம் வேண்டாம். இன்னொரு முறை ஏதாச்சும் நடந்ததுன்னா… என்னால தாங்கிக்கவே முடியாது. நீ எங்கேயும் போக வேண்டாம் கெஞ்சினாள் குழலி. 
மாயவித்தையின் அதிபதி குழலியை 'மெஸ்மரிசம்' பண்ணினான். கில்டன் கண்டும் காணாமல் இருந்தார்.
அரவிந்த் பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது வீட்டுத் தெருவில் 'அவ்வளவு புகை'
ஒன்பது மணி ஆரவாரம் ஈசியாரைப் பட்டையைக் கிளப்பியது. அரசாங்கத்துக்கு நிதியளிக்கும் குடிமகன்கள் சாலையில் தாராளமாய்க் காட்சியளித்தனர். 
நட்சத்திர உணவு விடுதியில் புக் செய்த கேபினில் திரிஷா 'உம்மென்று' இருந்தாள். அவனுக்காக அவள் வாங்கி வைத்திருந்த 'கிஃப்ட்' பக்கத்திலே இருந்தது.
நட்பில் தொடர்ந்த பொறியியல் கல்லூரிப் பழக்கம், அரவிந்தின் கால்பந்தாட்டத்திற்கு ரசிகையாக 'விசில்' அடித்த ஞாபகம், ஒன்டே டூரில் ஒன்றாக சுற்றிய இடங்கள், யாருமே இல்லாத கேண்டீனில் கடலை போட்ட நிகழ்வுகள்... திரிஷா நினைத்துக் கொண்டு இருக்கும் போதே அரவிந்த் என்ட்ரி...
‘என்ன மேடம். நேரத்தே வந்திட்டீங்க!’ கிண்டல் செய்தான் அரவிந்த். 
‘இப்படி சொன்னா நான் எழுந்திருச்சிப் போயிடுவேன்’ சிணுங்கினாள் திரிஷா. 
இன்னைக்கு நாம மீட் பண்றதா ப்ளான் இல்லையே! என்ன தான் இந்த நாளில் வீட்டை விட்டு வெளியே போக விடமாட்டங்களே! அதுவும் உனக்குத் தெரியும்... அப்படி இருக்கும் போது ஏன் .. என்ன...
மூச்சடைக்க அரவிந்த் பெரு மூச்சு விட்டான்.  திரிஷா அழ ஆரம்பித்தாள். அரவிந்த் அருகில் வர ஆரம்பித்தான். 
நிலைமை சரியில்லை. நாளைக்கு எல்லோருக்கும் புத்தாண்டு. எனக்கு மட்டும் புத்தாண்டு இல்லை!
என்ன திரிஷா சொல்ற. ஏன் இப்படி வேண்டா வெறுப்பா பேசுற! உனக்குப் பைத்தியம் ஏதாவது பிடிச்சுப் போச்சா! அரவிந்த் பேச்சுக்குப் பதில் சொல்லாமல் இருந்தாள். 
'இன்னைக்கு நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ' திரிஷாவின் கேள்வியால் அரவிந்த் அடித்த சென்ட் வாசனை வியர்வையாய்க் கொட்டியது
என்ன கல்யாணமா...! என்ன விளையாடுறீயா! இல்லை நெஜமா தான் கேட்கிறேன் என்றாள் திரிஷா.
எனக்கே தெரியாமல் பாஸ்போர்ட். நாளை இரவு நைட் வெளிநாடு. இந்த இரவு மட்டும் தான் நான் உன்னருகில்... சிரிச்சுகிட்டே திரிஷாவின் கண்களில் மழைத்துளி. 
என்ன! அந்த அரவிந்த் கூட ஊர்ச் சுத்தினியா! திரிஷா மறுத்தும் அப்பா திரவியம் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
செல்போனில் இருந்த போட்டோவைக் காட்டி 'இது யாரு உங்க தாத்தாவா' கேட்டதும் திரிஷா கூனிக் குறுகி நின்றாள். 
'இன்கம்டேக்ஸ் மூளை' வேலை செய்ததால் திரவியம் திரிஷாவை நாடு கடத்திட முடிவே செய்துவிட்டார் எம்.டெக் படிப்பு என்னும் திட்டத்தில்...
மூளையின் பிள்ளை நள்ளிரவு 'கல்யாணம் பண்ணு' என்று அப்பாவின் திட்டத்திற்குக் கேன்சல் அக்ரிமென்ட் தீட்டினாள். 
வானவேடிக்கை! எங்கும் வாழ்த்து மழை. புத்தாண்டு பிறந்தது. அரவிந்த் திரிஷாவின் கழுத்தில் தாலிக் கட்டினான். 
அம்மாவின் முறைப்படி ஆச்சாரம் இல்லை! 
அப்பாவின் முறைப்படி ஆராதனையும் இல்லை. சுற்றிலும் ஆரவாரம் இருந்தது. 
அனைத்தையும் கில்டன் அரவிந்துக்குத் தெரியாமலே பார்த்துக் கொண்டு இருந்தார்.
புகையைக் கிளப்பிக் கொண்டு வந்த அரவிந்தின் பைக்கினைப் பின்தொடர்ந்து கில்டன் வந்ததை அரவிந்த் பார்த்திருக்க வாய்ப்பில்லை!
அன்று நடந்தது போல் மகனுக்கு ஏதாவது நடந்திட கூடவே என்ற பிள்ளைப் பாசத்தில் குழலிக்கே தெரியாமல் பின் தொடர்ந்து வந்தார். வந்தவருக்குப் புத்தாண்டு பரிசு அதிர்ச்சியுடன்...
ஏதும் நடக்காதவாறு அங்கிருந்து கில்டன் கிளம்பி வீடு வந்து சேரும் போது மணி இரண்டு இருக்கும்.
வாசலிலே குழலி இருவருக்காக காத்து இருந்தாள். 
என்னங்க! அவனை எங்கே? பிள்ளைப் பாசம் பிரசவ வலியாய்த் துடித்தது. 
சொல்லவா! வேண்டாமா! கில்டன் மனம் பதைபதைத்தது.
மறைத்தால் மரணத்திற்குச் சமம். அவள் மடியில் தலையை வைத்து நடந்ததைச் சொன்னான். அவளும் அவன் தலையினைக் கோதியபடியே கேட்டுக் கொண்டே வந்தாள். 
பழைய ஞாபகங்கள் இருவரையும் ஆட்கொண்டன. இதே போல் திருமணம் நமக்கும் நடந்தது. விதி வலியது. நம் பிள்ளையின் திருமணமும் வீதியில்...
விடியற்காலை ஐந்து மணிக்கு அரவிந்த் கதவினைத் திறந்தான். வாசலில் அப்பாவும் அம்மாவும்...
ஓடிப்போய் கதறி அழுதான். இறந்தவர்கள் எப்படி எழுந்து வருவார்கள். அவர்கள் அவுங்க அப்பாவையும் அம்மாவையும் மனதளவில் சாகடிக்க மதங்கள் காரணமாச்சு. இரண்டு உசுரும் போகிறதுக்குத் திரிஷா அப்பாவின் சாதி காரணமாச்சு. 
இனிமேல் அரவிந்திற்குப் பிறந்தநாள் அவனோட அப்பா அம்மாவின் இறந்த நாள்...
அவனோட திருமண நாள் புத்தாண்டு தோறும் பெற்றோரை அடக்கம் செய்த நாள். இனி வரும் புத்தாண்டு அம்மா முறைப்படி 'ஆண்டு' ; அப்பா முறைப்படி 'திருப்பலிபூசை'.

-முனைவர் இராமகுமார், உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை விவேகானந்தா கல்லூரி அகஸ்தீஸ்வரம்