நிபந்தனை...!

சிந்தனை சிற்பி விருது சிறுகதைப் போட்டி

நிபந்தனை...!

"வருண் இங்க வாடா என்ன மாதிரி செய் பார்ப்போம்?" என்று குதித்து காட்டினான் கார்த்தி.

வருணுக்கு வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒன்றும் பேசாமல் தன் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டே சென்றான். அதைப் பார்த்த பிரபு, "கார்த்தி நீ செய்யிறது ரொம்ப தப்பு. அவனால் நடக்க முடியாதுன்னு தெரிஞ்சும் ஏன் அவனைக் குதிக்கச் சொல்லி கேலி செய்யிற?" என்றான்.

"எல்லாம் எனக்குத் தெரியும். போடா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு" என்று அவன் முதுகில் ஒரு அடி வைத்துவிட்டு சென்றான்.

வரவர இவன் சேட்டை ரொம்ப அதிகமா போயிடுச்சு. இவனுக்கு நல்ல பாடம் எடுக்கணும். டீச்சர் சொன்னாலும் கேட்பது இல்ல என்ன செய்யிறது என்று தன் நண்பர்களுடன் கலந்து பேசினான் பிரபு.

இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த வாட்ச்மேன் தாத்தா அருகில் வந்தார். "என்ன பசங்களா விளையாட போகாம என்ன கூட்டம் போடறீங்க?"

நடந்த விஷயங்களை அவரிடம் கூறினான் பிரபு.

"அவனே புரிஞ்சிக்கிற மாதிரி ஏதாவது செய்யணும். சும்மா அறிவுரை சொன்னால் அவன் கேட்க மாட்டான்" என்றார்.

"நாளைக்கு ஒரு திட்டம் போடுவோம். அதை நாளைக்கு உங்களுக்குச் சொல்கிறேன். இப்போ போய் விளையாடுங்க" என்றார் தாத்தா.

மறுநாள் இரு குழுவினருக்கு வினாடிவினா போட்டி நடத்தி யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் மற்றவர் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் தாத்தா.

வருண், பிரபு ஒரு குழுவிலும், கார்த்தி, குமார் இன்னொரு குழுவிலும் இருந்து போட்டியிட்டனர்.

வகுப்பிலுள்ள மொத்த மாணவர்களும் மதிய உணவு வேளையில் குவிந்து விட்டனர். 

"மொத்தம் பத்து கேள்விகள். யார் அதிக விடைகள் சொல்கிறார்களோ அவர்களுக்கு ஒரு பேனாவும், புத்தகப் பரிசும் உண்டு" என்றார்.

மூன்று இதயங்கள் உள்ள உயிரினம் எது? என்ற முதல் கேள்விக்கு வருண் கை உயர்த்தினான். 

" சொல்லு வருண்?"

"ஆக்டோபஸ்"

சரியான விடை என்றவுடன் மொத்த மாணவர்களும் கைதட்டினார்கள்.

இதேபோல் மீதி 8 கேள்விக்கும் டான், டான் என்று வருண் பதில் சொன்னான். ஒரு கேள்விக்கு குமார் பதில் சொன்னான்.

பரிசு வருண், பிரபுக்கு கொடுத்தார்கள்.

இப்போது பிரபு நிபந்தனையை சொன்னான். "அதாவது கார்த்தி ஒரு வாரத்திற்குத் தினமும் ஒரு மணி நேரம் தன் காலை மடக்கித் துணியால் கட்டி ஒரு காலால் நடக்கணும்" என்றான்.

"ஜாலியா செய்வேன். இதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல" என்று சொல்லிவிட்டுச் சென்றான் கார்த்தி.

மதிய சாப்பாட்டு நேரம்
கார்த்தி தன் காலைத் துணியால் கட்டி சாப்பிட உட்கார்ந்தான். ஒரு காலால் பேலன்ஸ் செய்ய முடியாமல் கீழே விழுந்து விட்டான். குமார் வந்து தூக்கி விட்டான். இதை வருணும், பிரபுவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"பாவம் கார்த்தி அவனுக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்த?"

"உன்னைக் கிண்டல் செய்தான்ல இப்ப கஷ்டப்பட்டா தெரியும் இல்ல, அதான்."

"அதுக்காக நான் படற கஷ்டம் அவனும் படணுமா? மன்னிச்சு விடலாம். அவனும் நம்ம கூட படிக்கிற பையன் தானே..."

"இன்னைக்கு ஒரு நாள் இப்படியே இருக்கட்டும். நாளைக்குப் பார்க்கலாம்" என்றான் பிரபு.

சாப்பாட்டு நேரம் முடிய, ஒரு காலால் குதித்து வந்த கார்த்தி கல்லில் தடுமாறி விழுந்தான். விழுந்தவனை வருண் வந்து தான் தூக்கி விட்டான்.

வருணைப் பார்த்ததும் காலில் ஏற்பட்ட அடியை விட, அவன் கேலியால் அவனுக்கு எப்படி வலிச்சிருக்கும் என்று தோணி அவனிடம் மன்னிப்பு கேட்டான் கார்த்தி.

"பரவாயில்லை விடு இனி இப்படி செய்யாத."

ஒரு மணிநேரம் என்னால் ஒரு காலால் நடக்க முடியல. நீ இரண்டு காலும் இல்லாமல் எப்படி கஷ்டப்படுவ? உன்னைக் கிண்டல் செய்திருக்க கூடாது. மன்னிச்சுக்க வருண்.

நாம எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை தான். அதை எல்லோருக்கும் உதவி செஞ்சு மகிழ்ச்சியாக வாழணும் அவ்வளவுதான் என்றான் வருண்.

அதைக் கேட்ட கார்த்தி மகிழ்வுடன் தலையாட்டினான்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த வாட்ச்மேன் தாத்தாவும், பிரபுவும் சிரித்துக் கொண்டார்கள்.

ஜெயா சிங்காரவேலு ,கரூர்.