கார்த்திகை தீபம்

திருக்கார்த்திகை தீபத் திருவிழா

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதத்தின்
கார்த்திகை நட்சத்திரத்தில்
#முருகன் கோயிலில்
   *குமராலய தீபம்* ,
 கார்த்திகை ரோகினி நட்சத்திரத்தில்
#விஷ்ணு ஆலயத்தில்
    *விஷ்ணுவாலய தீபம்* ,
# இந்து சமய கோவில்களில்
     முழுமதி திதி நாளில்
      *சர்வாலய தீபம்* ,
ஏற்றி இறைவனருள் பெறும் 
கார்த்திகை மாத தீப தினம்!

திருவண்ணாமலையில்
 *மகாதீபம்* விழாவாக
பத்து நாள் தொடர் நிகழ்வாக்கி,
காலை நேரம் 5 மடக்கில்,
இறைவனின் ஐந்தொழில்கள்
படைத்தல்/காத்தல்/அருளல்/
அழித்தல்/மறைத்தல் 
உணர்த்தும் அகல்விளக்கின்
ஐந்து திருமுகங்கள் ஏற்றி
திருவிழா காணும் தீபதினம்!

2668அடி உயர திருவண்ணாமலையில்
1668 ல் வெண்கல கொப்புரையிலும்,
1991 ல் பக்தர் உபயமளித்த
இரும்பு கொப்பரையிலும்,
தற்போது அனைவரும் காணும்
செம்பும் இரும்பும் கலந்த 
பெரிய கொப்பரையிலும்
தீபமேற்றும் தீபதினம்!


1000 மீட்டர் காடா துணியிட்ட,
3000 கி. நெய்யுள்ள கொப்பரையில்,
பர்வதராஜ குலம்/செம்படவர்/மீனவர்
எனப்படும் *சிவன் படையினர்*  
மலை மீதேறி தீபமேற்றும் தினம்!

திருவண்ணாமலை
தீபம் காண மலையேறி,
அலை மோதும் கூட்டத்தினரிடையே 
பஞ்சமூர்த்திகள் தீபதரிசனத்தோடு, *அர்த்தநாரீஸ்வரர் தரிசனம்*
3 நிமிடம்  தரிசித்து,
மாலை 6 மணிக்கு,
*அரோகரா* கோஷத்துடன்,
கர்ம வினை போக்கி
சாப விமோசனம் பெற,
கிரிவலம் வருவோர்
பக்தியுடன் சூழ்ந்திருக்க
ஜோதியேற்றும் வைபவ தினம்!

ஆலயத்தின் முன் 
பனையோலையால் அடைத்த சொக்கப்பனைக்கு அக்னியிட்ட
ஜோதி பிழம்பு நிகழ்வு காண,
பாலும் நீரும் மட்டும் அருந்தி
12 ஆண்டுகளாவது விரதமிருக்கும்
கார்த்திகை தீபமான சீர்மிகு தினம்!

*வீரை*  எனும் ஊரில்,
வெளியன் எனும் வேளிர் குடி அரசன்
மகன் தித்தன்,
பனி பெய்யும் மாலை பொழுதினில்,
முரசினில் திரியிட்டு 
விளக்கேற்றிக் கொண்டாடிய நிகழ்வு
*சங்க இலக்கியத்தில்* வரிகளாகி,
* கார்த்திகை மாலை விளக்கு* 
என்று பெயரான தீப தினம்!

ஸ்ரீரங்கத்து வீடுகளில்,
தனலாபம் கிட்ட 
நாயுருவி வேர் பறித்து
கூரையில் செருகும் வைபவமும்,
சக்கரத்தாழ்வார் சன்னிதியில்
சொக்கப்பனை ஏற்றுதலை
ஸ்ரீரங்கத்து அரங்கன் 
காணும் வைபவமும் நிகழும் தினம்!

"வேலின் நோக்கிய விளக்கு நிலை"
என்று * தொல்காப்பியம்* ,
"அழல் சேர்/அழல் சேர் எனில்
கார்த்திகை தீபம்" என *புறநானூறு* ,
"கற்றார் தொழும் அருணாசலம்"
என * ஸ்ரீவில்லிபுத்தூர் பாரதம்* ,
அர்ச்சுனன் தல யாத்திரை
வரிகளுமாகிப் பதிவான தீப தினம்!

"கார்த்திகை விளக்கு மணிமுடி
சுமந்து/கண்டவர் அகத்து இருள்
அனைத்தும் சாய்த்து/நின்றெழுந்து
விளக்குறும் கயிலை நாயகனே"
என * சிவப்பிரகாசர்* கூறிய தினம்!

கதளி இலையில் 
கொழுக்கட்டையுடன் சுண்டல் நிவேதனமாக்கி,
கன்னியாகுமரி மருந்துவாழ்மலை
மக்கள் /திருக்கரைமலையில்
தீபமேற்றி வழிபடும் ஜோதி தினம்!

27 தீபங்களை பூஜையறை/திண்ணை
சமையலறை/மாடம்/முற்றம்/குப்பைக்
குழி/மாட்டுப்பட்டி/கொல்லைப்புற
இடங்களில் ஏற்றி வைக்கும் தினம்!

அடிப்பாகம் சிருஷ்டிகர்த்தா பிரம்மன்,
தண்டுபாகம் பாற்கடல்வாச விஷ்ணு,
 நெய்/எண்ணெய் நிறையுமிடம்
முக்கண்ணன் மகேஸ்வரன்,
தத்தம் தேவியரோடு வாசம் செய்யும்
சிறப்பான திருவிளக்கினில்,
அவிர்பாகம் தரும்
பெரும் யாகத்திற்கு நிகரான,
தீபமேற்றும் பெருமைமிகு தினம்!

ஐஸ்வர்யம் பெருகிட
உச்சி/ஐந்து முகம்/தீப பாதம்/ஸ்தம்பம்
எனும் எட்டு இடங்களில் சந்தனம்
குங்குமத்தினை நிலம்/நீர்/காற்று/
ஆகாயம் /பூமி/சூரியன்/சந்திரன்/
 ஆத்மா எனும் எட்டு பொட்டுகளாக
வைத்து விளக்கேற்றும் 
உபாயம் அறிவுறுத்தும் தினம்!

விளக்கின் முக திசை
 @ கிழக்கு நோக்கி ஏற்றிட
       துன்பம் நீங்கி/நன்மதிப்பும்,
 @  மேற்கு திசை.... சகோதர ஒற்றுமை
 @  வடக்கு திசை..செல்வம் பெருகுதல்
 @  தென் திசை...கடன்/பாவம் சேர்தல்
என *திருவிளக்கேற்றும் திசை* 
பலன் கூறும் தினம்!

# பசுநெய் தீபம்..கிரகதோஷம் நீங்கும்
# வேப்பெண்ணெய்...இல்லற நலம்
# ஆமணக்கு...குலதெய்வம் அருள்
# நல்லெண்ணெய்..நவகிரக திருப்தி
# தேங்காயெண்ணெய்...மன உறுதி
# வேம்பு/இலுப்பை/நெய் மூன்றும்
கூட்டிய எண்ணெய் ..செல்வம் சேரும்.
# கடலை எண்ணெய்,
  பாமாயில்....மனக்கவலை தருமென
*தீப எண்ணெய்* பயன்பாடு
பலன் கூறும் தினம்!

வாழைத்தண்டு திரி...மழலைப்பேறு,
 .தாமரைத்தண்டு திரி..முற்பிறவி
 பாவம் தீரும்.
வெள்ளெருக்கு பட்டை திரி..ஆயுள்
 நீடித்தல்/செய்வினை நீங்குதல்
எனும் பலன்கள் கூறும் 
ஜோதி தீப தரிசன தினம்!

ஆமணக்கு விதையிலிருந்து
நெய்யெடுத்து *பௌத்த சங்கம்*
சேர்ந்தவர்கள் கார்த்திகை தீபம்
கண்ட பதிவினை  சொல்லும் தினம்!
"ஆதியும் அந்தமுமில்லா அருட்பெரும்
ஜோதி" ...என *திருவெம்பாவை* யில்
மாணிக்கவாசகர் பதிவாக்கிய தினம்!

"பரமன் அனலாய் பரந்து முன் நிற்க
அரனடி தேடி அரற்றுகின்றார்"
என்று * திருமூலர்*,
" தீப மங்கள ஜோதி நமோ நம"
என *காரைக்காலம்மையார்*
அற்புத திருவந்தாதியில்,
"நிறையும் பரிசு திருவிளக்கு
  விடியுமளவு நின்றெரிய"
என்றே * சேக்கிழார்* ,
"இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே!"
என * நாவுக்கரசரும்*  
போற்றிப் புகழ்ந்த
கார்த்திகை தீப ஜோதி தினம்!

"நெய்யிங்கில்லை
விளக்கெரிப்பீராகி நீரை
முகந்தெரித்தல் செய்யும்"...என்று
* பெரியபுராணம்* வரிகளாகிய தீபம்!

கார்த்திகை மாதத்தில் 
தன் தோஷம் நீங்க 
கார்த்திகை தீபத்தினை 
*அம்பிகை*  ஏற்றிய தினம்!
கார்த்திகை விரதமிருந்து 
தீபமேற்றிட பேரரசனாக 
*திரிசங்கு* சக்ரவர்த்தி
பதவியேற்ற ஜோதி தினம்!

திருவாரூர் ஆலயத்தில்
*நமி நந்தியடிகள்* விளக்கேற்ற
நெய் யாசகம் கேட்டு,
சமணர்கள் தரமறுக்க ,
நீரினால் விளக்கேற்றிய
பதிவமைந்த சீர்மிகு தீப தினம்!

கார்த்திகை  மாத தீப ஒளி
மானிடர் கவலைகள் தீர்க்கும்
இறையவனின் ஜோதிபிழம்பு
பக்தியை வார்த்து,
அக இருள் போக்கி/திருவருள் காட்டி
தீமைகள் விலக்கி/வேதம் உரைக்கும்!

இயற்கையோடு இணைந்து
கார்த்திகையில் தீபங்கள் ஏற்றிட,
இறைவனும் மகிழ்ந்தே
வரங்களை வாரி வழங்கிடும்
கார்த்திகை தீப தினத்தினில்
இறைவனோடு ஐக்கியமாகி
புண்ணியம் பெறுவோம்!

-முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை