இறைவனின் குழந்தை அல்ல ...

இறைவனின் குழந்தை அல்ல - கட்டுரை

இறைவனின் குழந்தை அல்ல ...
கற்றலில் குறைபாடு
கற்றலில் குறைபாடு என்பது மனவளர்ச்சி குன்றியோர் அல்லது அறிவுத்திறன் குறையுடையோர் -ல்  இருந்து வேறுபட்ட மொழித் திறனுக்கான மூளை சார்ந்த  குறைபாடு ஆகும். ஒரு மொழியின் வரி /ஒலி வடிவத்தை ஒரே சீராக ஒன்றினைக்க கூடிய திறன் குறைபாடு இருப்பதே ஆகும் . இடது பக்க மூளையில் மொழி சார்ந்த பகுதியில் குறைவாக செயல்படுவதாக இருக்கலாம். இது ஒரு கண்ணுக்குத் தெரியாத குறைபாடு எனலாம். அக்கறையின்மை, சோம்பல், விளையாட்டுப்புத்தி, அறிவுக்கூர்மையின்மை என நினைக்கத் தோன்றும்.
 
கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகள் : 
1. எழுத்துக்களை வாசிக்க முடியாமல் இருப்பவர்கள், ஆனால் பார்த்து எழுதுபவர்கள்.
2. எண்களை எழுதவும் படிக்கவும் தெரியாமல் இருப்பவர்கள்
3. எழுத்துக்களை பார்க்காமல் எழுத தெரிந்தவர்கள் ஆனால் வாசிக்கத் தெரியாமல் இருப்பவர்கள்.
4. மூன்றும் தெரியாமல் இருப்பவர்கள் 
 
இந்த குழந்தைகளை தொடக்கப் பள்ளியில் அடையாளம் காண முடியும். முதல் வகுப்பில் குறைந்தது ஆறுமாத காலத்தில் குழந்தையின் திறன் வெளிப்படவில்லை என்றால் அவர்களை கண்காணிக்க வேண்டும்.
 ஆசிரியர் பேசும்போது பேசுவதை கவனமுடன் கேட்கிறாரா..? ஆர்வமில்லாமல் உட்கார்ந்து இருக்கிறாரா? அல்லது கவனம் வெளியில் உள்ளதா? எனவும், மனது வேறு இடத்தில் உள்ளதா...? என கவனிக்கப்பட வேண்டும்.
அநேக குழந்தைகளை கண்டுபிடித்து விட்டாலும் ஒரு கட்டத்தில் கைவிடப்பட்ட குழந்தையாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அதே வகுப்பில் வெறும் பார்வையாளர்களாக கடைசி வரிசையில் வகுப்பை நிரப்பவும் சத்துணவு வாங்கவும் எண்ணிக்கைக்காக பராமரிக்கப்படாத பொருளாக மனரீதியாகவும் செயல் அளவிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். 
தனக்கு படிக்க வரவில்லை, எழுத முடியவில்லை என தன் பிஞ்சு மனதில் ஆழப் பதிந்து விடுகிறது. அது அவர்கள் கண்கள் வழியாகவும், முகபாவனை வழியாகவும், வெளிப்படுவதை கவனிக்கலாம். வகுப்பறையில் ஆசிரியர் தன்னிடம் கேள்வி கேட்டு விடுவாரோ? என்ற எண்ணத்தில் ஒவ்வொரு கணமும் பயம் கலந்த மிரட்சியுடன் இருப்பதை கண்டுபிடுத்துவிடலாம். 
பள்ளியில் மட்டும் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் எதுவும் சொல்லாமல் கண்களால் பார்ப்பதை தவிர்த்து தலை குனிந்து உடல் சோர்ந்து நெகிழியாக தெரிவார்கள் வாயே திறக்கமாட்டார்கள். ஆனால் மற்ற நேரம் யாரும் இல்லாத வகுப்பறையில் தனக்குத்தானே துள்ளிக்குதித்து சத்தமிட்டு விளையாடி தன் ஆற்றமையை போக்கிக் கொள்கின்றனர்.
இந்த குழந்தைகள் கண்களால் பார்ப்பதை, வாயால் சொல்கிறதா, அதை தன் காதால் கேட்கிறதா, கேட்பதை தன் கையால் எழுதுகிறதா, எனவும் ஒருங்கிணைப்பில் எந்த இடத்தில் செயல்பாடு குறைந்துள்ளது. என எத்தனை ஆசிரியர்களுக்கு தெரியும்?
 கண், காது, மூக்கு, வாய், கை, போன்ற உறுப்புகளின் உணர்திறன் நன்றாக இருந்தால் மட்டுமே செயல்திறன் சரிவர வெளிப்படும். ஒரு குழந்தைக்கு கண்ணில் பாதிப்பு இருந்தால் கிட்ட பார்வை, தூரப்பார்வை, நிறமிகள் குறைபாடு அல்லது வேறு பாதிப்புகள் இருந்தாலும் ஒரு எழுத்தின் வரி வடிவத்தை,  புரிந்து கொண்டு மூளையில் பதிவு ஆவதில் தடைகள் ஏற்ப்படலாம். ஆனால் இதேபோல் பார்வையை சோதிக்காமலும் காதை சோதிக்காமலும் , பேசுவதில் ஏதேனும் குறை இருந்தால், வாயின் உட்பகுதியான  மேல் வாய், கீழ்வாய், தாடைகள், உள், வெளி தசைகளில் தொனி  இறுக்கமாகவோ அல்லது இலக்குவாகவோ அதனால் எதுவும் பாதிப்பு இருக்கிறதா என தெரியாமல் பேச்சு வரவில்லை என பொத்தாம் பொதுவாக சொல்லிவிடுவதாலும் ஏற்படும் மாற்றத்தால் அந்த குழந்தையின் ஒருங்கிணைக்கும் செயல் பாதிக்கப்படுவதால் கற்றலில் குறைபாடு ஏற்படுகிறது என சொல்லப்படலாம்.
தரவுகள் மட்டும் போதுமா?
 இன்றைய நிலையில் ஒவ்வொரு அரசு மற்றும் அரசு சாரா கிராமப்புற மற்றும் நகர ஆரம்ப மற்றும் நடுநிலைப்  பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள்   தமிழ் வழியில் பயில்வதில் 100க்கு 5-10 நபர்கள் வரை கற்றலில் குறையுள்ள மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்த பத்து பேரின் நிலைமை எட்டாம் வகுப்பு வரை எந்த இடையூறும் இல்லாமல் வருகைப்பதிவு சதவீதம் குறைவாக இருந்தாலும் தேர்ச்சி செய்து விட ஆணை உள்ளது. அதனால் ஆசிரியர்களும் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தப்பித்துக்  கொள்கின்றனர். ஆனால் உண்மையில் தன் பெயரை கூட எழுத தெரிந்தவர்களாக அடுத்த வகுப்புக்கு நகர்கிறார்கள்.
இடைநிறுத்தம் ?
 இந்த காலகட்டத்தில் தான் மாணவ மாணவிகள் வெட்கப்பட்டு தாழ்வு மனப்பாண்மையுடன்  மற்ற நண்பர்கள் தோழிகள் முன்னால் தலைகுனிவாக வாழ விருப்பமில்லாமல் தன் முடிவை மாற்றிக் கொள்கின்றனர். அதாவது வளர்  இளம் பருவத்தில் இருப்பதால்  உடம்பில் ஏற்படும் ஆண்மை /பெண்மை வளர்ச்சியின் காரணமாக, அகம் மீறும் சமூக செயல்பாட்டில், ஏதோ ஒரு வாய்ப்பில் தன் சுதந்திரத்தை அனுபவித்த மிதப்பில் பள்ளி செல்ல மனமில்லாமல் மடை மாற்றம்  அடைகின்றனர்.
 இவர்களில் உயர்நிலைப் பள்ளியில் படிப்பவர் என்றால் மாற்றுச் சான்று வாங்க தேவையில்லை. அதனால் பத்தாம் வகுப்பு வரை சென்றுவிடுகின்றனர். பொது தேர்வு என்பதால் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுவதால் சில மாணவர்களை திட்டமிட்டு வெளியேற்றுகிறது. சில மாணவர்கள் தேர்வுக்கு பயந்தும் ஆய்வக தேர்வுகள் போன்றவற்றை தவிர்த்து கடைசி ஒரு சில மாதங்களில் பள்ளியை விட்டு வெளியேறி விடுகின்றனர்
 
இவர்களுக்கான மறுவாழ்வு என்ன?
 Pri-primary, praimary, secondary பயிற்சிகளில் முன்னேற்றம் இல்லாமல்  எதுவும் தெரியாத, அல்லது முழுமையாக தெரியாத, மாணவர்களாக ஒருங்கிணைந்த கல்வியில் நேரடியாக வகுப்புகளை நிறைவு செய்யும் போது அதனால் என்ன பயன் கிடைக்கும். சிறப்பு கல்வியில் தேர்ச்சியான பின்பே ஒருங்கிணைந்த கல்விக்கு உயர்த்தப்பட வேண்டும் இப்படி நடக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்லலாம்.
காரணம் வகுப்பறையில் கள எதார்த்தம் என்பது எதிர்மறையாக உள்ளது எல்லா மாணவர்களுக்கும் கிடைக்கும் பயிற்சிக்கான நேரமே இவர்களுக்கும் கிடைக்கும். அந்த நேரத்தில் நன்றாக உள் வாங்கி கொள்ளும் மாணவர்கள் ஒரு முறை அல்லது இரு முறை சொல்லும் போது புரிந்து கொள்கின்றனர். ஆனால் பின் தங்கிய மாணவர்களுக்கு அவர்கள் கற்றுக் கொள்ளும் வரை திரும்ப திரும்ப கற்றுக் கொடுக்க வேண்டும் இதற்கான நேரத்தை ஆசிரியர்கள்  எங்கிருந்து எடுப்பார்கள்.
குறிப்பிட்ட காலத்தில் ஒவ்வொரு பருவத்திலும் அந்த மாதத்தில் முடிக்க வேண்டிய பாடங்களை முடிக்கும் திறமை எல்லா ஆசிரியர்களுக்கும் உண்டு நாற்பது குழந்தைகளில் இரண்டு சிறப்பு குழந்தைகள் எனில் இருவருக்குமான சிறப்புக் கல்வி கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இருவருக்கும்  சிறப்பு ஆசிரியர் தேவை? இதற்கு யார் பொறுப்பு?
 இன்றைய நிலையில் மாநில பட்டியலில் எத்தனை சிறப்பு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்?  இரண்டு இலக்க எண்ணிக்கையில் பள்ளிகளை பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளை  பட்டியல் தயாரித்து வைத்து இருக்கிறார்கள் அவர்களில் கற்றலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையாக இதுவரை சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் அந்த குழந்தைக்கு அறிவு வளர்ச்சியில் என்ன மாற்றம் உண்டாகும்.
சிறப்பு ஆசிரியர்களின் வேலை என்ன?
 
சமக்ரா சிக்க்ஷா ஆசிரியர்கள் மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு வருகை தந்து பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் வேண்டிய தகவல்களை பெற்றுக்கொண்டு தனக்கான வருகை நோட்டில் வந்ததற்கான பதிவை உறுதி செய்துவிட்டு போவதனால் மாணவர்களுக்கு அறிவுத்திறன் உயர்ந்துவிடுமா?
 அறிவுத்திறன் குறையுடையோர், மூளை முடக்குவாதம்,செவித்திறன் குறையுடையோர் பார்வை குறையுடையோர், போன்றவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள், போன்ற அடிப்படை தேவையான உதவிகளை செய்து கொடுக்க சிறப்பு ஆசிரியர்கள் முன் வந்து செயல்படுகிறார்கள் . அரசு கொடுக்கும் சலுகைகளை பெற்றுத் தர முழு நேரமாக செயல்பட்டால் சிறப்புக் கல்வியை யார் கற்றுக் கொடுப்பது?
 ஒரு சிறப்பு ஆசிரியர் தனது துறை சார்ந்த படிப்பை பல அளவீடுகள் மூலம் திறம்பட கற்றுத் தேர்ச்சி பெற்றவர்கள். வள ஆசிரியர்களான தங்களை சரியாக பயன்படுத்தாமல் கற்ற கல்வியை விரயம் செய்து கடந்து செல்கின்றனர்.
 
கற்றலில் குறையுள்ள குழந்தைகளை கண்டுபிடித்து அதை அறிவியல் பூர்வமாக அதற்கான காரணங்களை தெரிந்து கொண்டு உள்ளபடியே ஏற்றுக்கொண்டு அவர்களை கெளரவமாக வழி நடத்தும் ஆசிரியர்கள் மிகக் குறைவு, அதற்கான காரணங்களான “ஒருங்கிணைப்பு” என்னும் “செயல்” முறையாக கற்றலில் நடைபெறாத காரணத்தினால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை என்பதை முதலில் ஆசிரியர்கள் ஒரு நம்பகத் தன்மைக்கு வர வேண்டும்.
இதை ஆர்வமுள்ள ஆசிரியர்கள் கற்றுக்கொண்டு அனைவருக்கும் சமத்துவம் சமபங்கு கல்வி கிடைக்க செயல்பாட்டால் நிரூபிப்பவர்களா என்பதை காலம் தான் பதில் சொல்லும். இன்றைய காலகட்டத்தில் கடமையை செய்யும் ஆசிரியர் சிலரும், பொறுப்பை மீறும் ஆசிரியர்கள் பலரும் காலூன்றிவிட்டனர், தனக்கான பணி நிரந்தர பாதுகாப்பு உள்ளது என்ற அதிகார சுயசார்பு மனிதர்களாக தன்னை கட்டமைத்துக் கொள்கின்றனர். குழந்தைகளின் வயதுக்கு ஒப்பிட்டு தன்னை தயார்படுத்திக் கொள்ள முடியாத அல்லது விரும்பாத நபர்களால் கல்வியின் தரம் மிக மிக ஆர்வமில்லா சூழலலை உருவாக்குகிறது என்பதே கள எதார்த்தமாக உள்ளது.
 
அரசு பள்ளி என்றாலே அடித்தட்டு மக்களுக்கான இடம் எனவும் அங்கு தனது குழந்தைகள் படித்தால் எதிர்காலம் வீணாகிவிடும், நல்ல பிள்ளையாக உருவாகாது, எதிர்காலத்தில் வேலை கிடைத்து வாழத் தேவையான அறிவு கிடைக்காது, என பொது சமூகத்தின் உயர் பிரிவினரின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. காரணம் முறையான பராமரிப்பு இல்லாத கட்டிடங்கள், திறப்பு விழாவின் போது பூசப்பட்ட வண்ணமாக சுகாதாரமில்லாமல் காட்சியளித்தல், மாணவர்களின் சீருடைகளில் நேர்த்தி இன்மை, சிகை  அலங்கார வேறுபாடு, என ஒழுக்கம் இல்லாத தன்மையால் கல்வியின் தரத்தை எடை போடுகிறார்கள் பெற்றோர்கள்.
 இதையெல்லாம் செய்ய வேண்டிய பெற்றோர்கள் தன் பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்காமல் வீட்டில் செல்லமாகவும் வெளியில் மூர்க்கமான  மாணவர்களாகவும் இருப்பதை தெரிந்தும் கண்டிக்காமல்  இது தான் விதி என திருப்திபட்டுக் கொள்கின்றனர், அப்படிப்பட்ட மாணவ மாணவிகள் தான் அரசு பள்ளிகளை வேறு வழி இல்லாமல் தேர்ந்தெடுக்கின்றனர்.
 
இந்த நிலையில் உள்ளவர்களை  ஆசிரியர்கள் தன் வயப்படுத்துவது என்பது மிகவும் சவாலான செயலாக மாறிவிடுகிறது. ஆனால் விகிதாச்சார அடிப்படையில் தேவையான ஆசிரியர்கள் இருந்து சரியான திட்டமிடல் இருந்தால் தன் கடமையில் இருந்து தவறிய தற்குறிகளாக உள்ள மாணவர்களை பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான உறவில் பெற்றோரின் பங்கு அறவே இல்லாமல் போய்விட்டதாக  உயர்த்தி படிக்கும் தனியார் பள்ளிகளின்  மாயத் தோற்றத்தை பெற்றவர்கள் நடைமுறையில்  உணரத் தொடங்குவார்கள். 
தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் தன் நீண்ட அனுபவத்துக்கு பின் தான் குறைந்தபட்ச இரட்டை இலக்க எண்ணில் ஊதியத்தை எட்டிப் பிடிக்கின்றனர், அதற்கு அவர்கள் கொடுக்கும் உழைப்பு காலம் நேரம் மிக அதிகமானது. ஆனால் அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்த உடனே கௌரவமான இரட்டை இலக்கத்தில் கொடுக்கப்படும் ஊதியம் அவர்களின் வாழ்வியல் தரத்தை சில மாதங்களில் மாற்றியமைத்து விடுகிறது. பின் சமூகத்தோடு இயல்பாக வாழ்வதற்கான தேவை மாறி  மேட்டிமைதனத்துடன் அரசின் அங்கமாக முழு பாதுகாப்புடன்  மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். அதனால் இயற்கையாகவே ஏற்றத்தாழ்வு மனநிலை உருவாகிறது. அரசு சமூகம், ஆசிரியர் சமூகம், யார் அதிகாரத்திற்கு வர வேண்டும், யார் வரக்கூடாது, யார் நமக்கு சாதகமானவர்கள், என அதிகாரத்தில் அமர வைக்கும் சக்தி படைத்தவர்களாக செயல்படுகின்றனர். 
 
பொது சமூகத்திற்காக எந்த இடத்திலும் கேள்வி கேட்கும் மனம் இல்லாதவர்களாகவும் இவர்களின் நலன்களுக்காக அரசியல் கட்சிகளின் அமைப்புகளை பயன்படுத்திக் கொண்டு அரசின் எதிரிகளாக, போராட்டவாதிகளாக, சுயநலவாதிகளாக, பணிச்சுமை என காரணம் காட்டி கல்வி துறையை மனதளவில் எதிர்க்கின்றனர். இவர்கள் மூலம் இன்றைய நிலைமை புள்ளி விவரங்கள் சேகரித்து சமர்ப்பித்தால் மட்டுமே போதும் என அரசும் நினைப்பதாக தெரிகிறது. ஏனென்றால் தினமும் ஒரு திட்டம் அதை நடைமுறைப்படுத்த இருக்கும் ஆசிரியர்களை வைத்தே செய்து முடிக்க நினைப்பது இதனால் பாதிக்கப்படுவது மாணவர்களே அவர்களுக்கான பாடத்திட்டத்தையே சரியாக முடிக்க முடியாத சூழலில் பணிகள் மேலும் மேலும் கொடுக்கப்படுவதாக ஆசிரியர்கள் பேசிக்கொள்வது பொதுமக்களுக்கு தெரிய வருகிறது. ஆனாலும் உழைப்புக்கு அதிகமான ஊதியம் வாங்குகிறார்களே அதை கொடுக்கும் அரசின் மேல் கடும் கோபம் பொது சமுதாயத்திற்கு உள்ளது என்பதே உண்மையாகவும் உள்ளது.
 
ஒரு மாணவ/மாணவிக்கு, படிப்பில் மட்டும் எழுதவும் , படிக்கவும் தெரியாதவர்கள் ,  மற்ற கலாச்சார பண்பாடு விளையாட்டு தன் வேலையை தானே செய்து கொள்ளுதல் தனித் திறமைகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்கக் கூடியவர்கள் வெளித் தோற்றத்தில் மிக வசீகரமானவர்களாகவும் இயக்கத்திலும் ஐந்து புலன்களில் எந்த குறைபாடும் இல்லாதவர்கள் எப்படி அறிவுத் திறன் குறைவு உடையவர்கள் என பொது சமூகமும் பெற்றோர்களும்  எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.
 ஆனால் அப்படிப்பட்டவர்கள் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில், தாராளமாக இருக்கிறார்கள், இவர்கள் மற்ற வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களாக மேல் வகுப்பிற்கு வருகிறார்கள். ஆனால் பொதுத் தேர்வான பத்தாம் வகுப்பில் தன் பள்ளிப்படிப்பில் முழு தேர்ச்சி பெற வேண்டும். ஆகவே மேல் அதிகாரியின் அழுத்தத்தாலும் அக்கறையாலும் சிறப்பு சலுகைகள் மூலம் பயன் என தே அ.அட்டை வாங்க முன்னெடுக்கிறார்கள், அந்த நேரத்தில் தான் பெற்றோர்களும் இப்படி ஒரு வழி முறை இருப்பதை கேள்விப்படுகிறார்கள், சில பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள், தன் பிள்ளையை ஊனமுற்றோர் என எப்படி ஏற்றுக் கொள்வது அதற்கு படிக்காமலேயே இருந்து விடட்டும் என்கிற உந்துதல் ஏற்படுகிறது. சிலர் தன் பிள்ளை படிக்க வேண்டும். இவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளது. மற்ற அரசின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு தன் பிள்ளைக்கு கிடைக்கும். என புரிந்து கொண்டு அலைந்து திரிந்து வாங்குகின்றனர். வாங்கிய பின் கூட அவர்களுக்கான சமூக தாக்குதல் இருக்கத்தான் செய்கிறது.
 
மனைவி குடும்ப வழி  அல்லது கணவனின் குடும்ப வழி உறவுகளோ விஷயத்தை கேள்விப்பட்டு கேள்விகளால் வறுத்து எடுத்து விடுகின்றன. இந்த போக்கை எப்படி சமாளிப்பது,  கௌரவம் என்ற கண்ணுக்குத் தெரியாத பிற்ப்போக்குத் தனத்திருக்கு   தள்ளப்படுகிறார்கள். பெண் பிள்ளையாக இருந்தால் அவர்களின் திருமண வாழ்க்கையில் ஏதேனும் தொந்தரவுகள் வரும் என ஆசிரியர்களும் இதற்கு உதவிக்கு வரும் அனைவரும் ஒதுங்குவதை பார்க்க முடிகிறது.
இன்றைய நிலையில்,
 சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு 2002இல் NGO வின் கையில் இந்த திட்டம் இருக்கும் போது பணி நியமனம் பெற்றவர்கள்  15 வருட, 12 வருட, 7 வருட அனுபவத்தில் பணியில் தொடர்பவர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கான பணி நியமன ஆணை அரசு சார்பில் கொடுக்கவில்லை என தெரிய வருகிறது. சிறப்பு கல்வி என்பது கல்வித்துறை சார்ந்த மாவட்ட மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கண்காணிப்பில் தனியாகவும், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் கட்டுப்பாட்டில் அரசு மானிய ஒப்பந்தத்தில்  பணிபுரிகின்றனர் சிறப்பு ஆசிரியர்கள். ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களை கண்காணிக்கவும் தேவைப்படும் குழந்தைகளுக்கு அரசின் சலுகைகளை பெற்றுத்தர மட்டுமே வெறும் பார்வையாளர்களாக வருகை தந்து வருகையாளர் நோட்டில் வந்ததற்கான குறிப்புகளை எழுதி விட்டு செல்கின்றனர். காரணம்  நிரந்தரமாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களாக இல்லாமல்  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாதத்தில் எத்தனை நாட்கள் செல்கிறார்கள், எத்தனை மணி நேரம் அந்த பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை செய்கிறார்கள், என்ற எந்த விவரமும் இல்லை.
 
“சர்வ சிக்க்ஷா அபியான்” “சமக்ரா சிக்க்ஷா அபியான்” என எந்த திட்டத்தின் கீழாக இருந்தாலும் அதுவும் அரசின்  ஊதியம் தானே அப்படி இருக்க பள்ளியின் தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆசிரியருக்கான தனி வருகைப் பதிவேடு ஏன் பராமரிக்கவில்லை? ஆனால் மாவட்டத்திற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் திட்ட அலுவலர் ஒன்றியத்திற்கு ஒரு கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சில அனுசரணைகளுடன் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.
 
 கற்றலில் குறைபாடு என்பது ஒன்றிய அரசின் பட்டியலில் “21” வகை குறைபாடுகளில் ஒன்று இதுவரை எத்தனை மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு உள்ளனர் என சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது? அது எத்தனை வருடத்திற்கு மட்டும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது? இவர்களை அடையாளம் காண சிறப்பு ஆசிரியர்கள் தகுதி உள்ளவர்களா? அல்லது சிறப்பு மன நல மருத்துவர்களா? ஏனென்றால் ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு வகையில் திறன் குறைந்தவர்களாக இருப்பார்கள்.
 இதை கண்டுபிடித்து அதற்கு பயிற்சி கொடுத்தால்  மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும் என நம்பலாம். இந்த வேலையை செய்ய சிறப்பு ஆசிரியர்கள் பயன்படுகிறார்களா? இல்லையேல் பயன்படுத்தப்பட வேண்டும். இதை கண்காணித்து ஆவணப்படுத்த வேண்டும். உதாரணமாக ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் திறமையில் இருப்பார், சிலர் இரண்டாம், மூன்றாம் வகுப்பு மாணவர்களின் திறனில் இருப்பார்கள். இவர்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டாய கல்வியினால் தேர்ச்சி பெற்று ஒன்பதாம் வகுப்பில் மீண்டும் அடையாளம் காணப்படுகிறார்கள். இவர்களுக்கு 9ஆம் வகுப்பு பாடத்தை நடத்துவார்களா? அல்லது 1-3 ம் வகுப்பு எண்களையும், எழுத்துக்களையும் கற்றுக் கொடுப்பார்களா? எப்படி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற வைக்க முடியும்.
 
 பாதிப்புகளுக்கு ஏற்ற மதிப்பீடு, அளவீடுகளை பயன்படுத்த வேண்டும். அதனால் ஆரம்பப் பள்ளியிலேயே கற்றலில் குறையுள்ளவர்களை கண்டறியும் scaleயை பயன்படுத்தி assessment பண்ண வேண்டும். அதில் வரும் score யை பொறுத்து முடிவு செய்து பயிற்சியை சிறப்பாசிரியர்களும் வகுப்பு ஆசிரியர்களும் இணைந்து கற்றலுக்கான உபகரணங்களைப் பயன்படுத்தி பயிற்சி கொடுக்கும் போது சில வருடங்களில் சராசரி மாணவர்களாக மாறுவார்கள் என்பதை உறுதியாக கூற முடியும். 
 
வயதுக்கு ஏற்ற நுண் அறிவுத்திறனின் அளவைப் பொறுத்து (IQ) சிறப்புக்  கல்வியின் தேவை இருப்பின் அதையே தேர்வு செய்து பயிற்சி கொடுக்க வேண்டும். அதில் முன்னேற்றம் இருந்தால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வியில் பயிற்சி கொடுக்க முடியும். காரணம் மாணவர்களுக்கு physio, occupational பயிற்சியும் தேவைப்படும் 
மாணவர்களின் நலன்கருதி மாற்றுத்திறனாளிகள் நல துறைக்கு  பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மாணவர்களின் பாதிக்கப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வது இல்லை. இந்த துறையின் மூலமாக கொடுக்கப்படும் தேசிய அடையாள அட்டை கொடுப்பதற்கு ஒரு அலுவலர் அவசியம் என்றால்? அவர்களை கண்காணிக்கும் பொறுப்பும் இருந்தாக வேண்டும் அல்லவா? ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் காலம் இது. சிகிச்சைகளும் பயிற்சிகளும் கொடுத்துக் கொண்டே இருப்பதாக இருந்தாலும் இதுவரை எத்தனை மாணவர்களுக்கு 70 சதவீதத்திற்கும் மேல் நுண்ணறிவில் முன்னேற்றம் வந்துள்ளது அவர்களுக்கு சிறப்பு கல்வியோ அல்லது ஒருங்கிணைந்த கல்வியோ இனி தேவையில்லை என்ற புள்ளி விபரம் உள்ளதா? அப்படி இருந்தால் தே.அ.அட்டை திரும்ப பெற்ற எண்ணிக்கை எவ்வளவு? பல்லாயிரகணக்கான ஆசிரியர்களின் கூட்டு உழைப்பும் பயிற்சியாளர்களின் உழைப்பும் செலவு செய்யப்படுகிறது.
 
அரசு ஒரு திட்டம் உருவாக்கி அதை நடைமுறைப்படுத்த நினைத்தால் அந்தத் திட்டம் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும், அதில் பணிபுரியும்   பணியாளர்களின் கையில் உள்ளது.
 ஒரு மனிதனின் நடுமூளை வரை தகவலை கொண்டு சேர்க்கும் வலிமையை பெற்றுவிட்டாலும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாத தனிமனிதனுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் இடத்தில் அதிக நடைமுறை சிக்கல்கள் தடையாக உள்ளது . கட்டமைப்புகளை தகர்த்தெறிய இயலாத, மரபு சார்ந்த நம்பிக்கையின் பிடியில் மக்கள்  வாழ்கின்றனர். அதனால் பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்கால வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு  தடையாக பெற்றோர்களே காரணமாகவும் அமைந்து விடுகின்றனர். பின் மோசமான அனுபவத்தின் காரணமாகவும், பல்வேறு துறையின் கீழ் மற்றவர்கள் அடைந்த பயன்களை நேரில் கண்ட காரணமாகவும், மாற்றத்திற்காக காலம் கடந்து ஓடி அலைவதை பார்க்க முடிகிறது.
 இதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும். தான் பெற்ற  பிள்ளையை, எந்த தாயும், தகப்பனும், ஊனமுற்றவர் என்பதை ஏற்றுக் கொள்ள ஒத்துக் கொள்ள மாட்டார்கள். கெளரவம், சமூக மதிப்பு, அவமானம் என சொல்லலாம். அதனால் அவர்களுக்கு காது வழிச் செய்தியாகக் கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளையும், மாற்று மருத்துவத்தையும், அதுவும் உள்ளூரில் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் வெளியூரில் சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து ஏமாந்து வருகிறார்கள்.  எத்தகைய பாதிப்புகளுக்கு என்ன மருத்துவம் பார்க்க வேண்டும் என வைத்தியர்க்கும் தெரியாது, பார்க்க போகும் பெற்றோருக்கும் தெரியாது, யாருக்கோ எந்த வியாதிக்கோ பாத்தாங்கலாம் என பொதுவாக பேசியதை மனதில் வைத்துக் கொண்டு நாட்களையும், வருடத்தையும், வீணாக்கி பின் கடைசியாக ஏமாற்றத்தை உணர்ந்து முறையான பயிற்சியாளர்களின் இடத்திற்கு வருகிறார்கள் . அப்போது அந்த குழந்தையின் வயது அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்காது. எப்படி பயிற்சி கொடுத்து முன்னேற முடியும்.
 ஆகையால் விழிப்புணர்வோடு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் சிறு வயதிலேயே கண்டுணர்ந்ததை குடும்பத்தினர் அனைவரும் பேசி முறையாக பயிற்சி எடுத்துக் கொள்ள தகுதியான சிறப்பு பயிற்சியாளர்களை தேர்வு செய்து சந்தித்து அறிவியல் பூர்வமாக குழந்தையின்  நுண்ணறிவு பாதிப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பின் அந்த பெற்றோர்களை நல்ல சிறப்புப் பயிற்சி ஆசிரியராகவும், பேச்சு பயிற்சியாளராகவும், மருத்துவரின் ஆலோசனைகளை கடைப்பிடிப்பவராகவும் மாற்ற வேண்டும். இதை வாழ்வியலாக ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்களின் குழந்தைகள் மாற்றுத்திறனை வெற்றி கொண்ட மனிதர்களாக வெளி உலகத்திற்கு அடையாளமாக அறியப்படுவார்கள்  என்பதே உண்மை.
கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக அனைத்து துறைகளிலும் தனியார் அமைப்புகளின் பங்களிப்பானது தவிர்க்க முடியாத தேவையாக மாறியுள்ளது. இதை கல்வித்துறையுடன் சேர்ந்த சிறப்பாசிரியர்கள்  புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
 
தாங்கள் பணிபுரியும் ஒன்றிய அரசின் திட்டத்தில் பல ஆண்டுகளாக அரசு சாரா தொழிலாளர்களாக வைத்துக் கொண்டு கவர்ச்சிக்கான புகைப்பட கண்காட்சி நடத்துவது போல் நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு பின் தொடர்வதற்கான செயல் திட்டம் சரியாக வகுக்கப்படாமல் என்ன வேலை என தெரியாமல் பணி செய்கின்றனர். மேலும் தனியார் அமைப்புகளில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்களை அங்கீகரிக்காத மனநிலையில் பகைமை உணர்வுகளை வெளிப்படுத்துவதையும் தன் கண்காணிப்பில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களிடம் எங்கள் பேச்சை மீறி மற்ற அமைப்பினரிடம் தொடர்பில் இருந்தால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நிதி உதவிகளை கிடைக்காமல் செய்து விடுவோம் என எச்சரிக்கை விடுகின்றனர். அதனால் மற்ற அமைப்பினர் வீடு மற்றும் மையங்கள் மூலமாக கொடுக்கும் மறுவாழ்வு பயிற்சி கிடைக்கவிடாமல் சிலர் சுயநலமாக செயல்படுகின்றனர். காரணம் இவர்கள் இறைவனின் குழந்தைகள் அல்ல.
 
 
கபிலன் சசிகுமார்
சிறப்பு ஆசிரியர் (அமர் சேவா சங்கம் )
சங்கரன்கோவில்
9952533779