ஏன்?.. எதற்கு?.. இன்சூரன்ஸ்?... பகுதி 27

ஏன்?.. எதற்கு?.. இன்சூரன்ஸ்?... பகுதி 27

ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ?
பகுதி-27

ஆண் பெண் என்று இருபாலினத்தவருக்கும் சாதாரணமாக உள்ளூர் கிளையிலேயே ஒப்புதல் தரப்பட்டு சுலபமாக முடிந்துவிடும் இந்த அளவிற்கான  இன்சூரன்ஸ் திட்டம், அவர் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கை என்பதால், கிளை அளவில் பரிசீலிக்கப்பட்ட பிறகு, அதை மண்டல அலுவலகத்தின் ஒப்புதலுக்காக  அனுப்பி வைக்கப்பட்டது. 

மண்டல அலுவலகத்திலிருந்து இன்னும் சில பிற ஆவணங்கள் கேட்கப்பட்டு, அதையும் மின்னஞ்சல் மூலமாக சமர்ப்பித்து, அதன் மீதான பரிசீலனை நடைபெற்று அதன்பிறகு அந்த படிவம் மத்திய அலுவலகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இதில் வேடிக்கை என்னவென்றால் தினமும் ஆயிரக்கணக்கில் பாலிசிக்கான கோரிக்கைகளை சுலபமாக கையாண்டு ஒப்புதல் தரப்படும் கிளை மற்றும் மண்டல அலுவலகங்களில், இப்படியான பாலிசியை கையாண்ட அனுபவம் யாருக்கும் இல்லை என்பதை வைத்தே  அரிதான ஒரு விசயத்தைத்தான் நாம் கையிலெடுத்து செய்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்து போனது. 
விசாரித்த வரையில் முகவர்களுக்கோ, அல்லது அலுவலக ஊழியர்களுக்கோ, இப்படியான பாலிசி அனுபவம் இல்லை என்பதே ஆச்சரியமான ஒரு விசயமாக இருந்தது.

அவர் பென்சன் பாலிசியில் முதலீடு செய்யும் தொகையை பெற்றுக்கொண்டு அதற்குரிய பென்சன் வழங்குவதில் எல் ஐ சி க்கு பெரிதாக எந்த ஒரு சிக்கலும் இல்லை.

ஆனால் அந்த பென்சன் தொகையை மீண்டும் எல் ஐ சி யிலேயே  தொடர் பிரிமியமாக செலுத்தும் விதத்திலும், அதன் மூலம் அவருக்கு இன்னொரு ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்க திட்டமிட்டு கொடுத்த படிவத்தின் மீதான பரிசீலனையின் போதுதான் சிக்கலே தொடங்கியது.

அவர் மூன்றாம் பாலினத்தவர் என்பதாலும், 
அவர் கேட்கும் பாலிசியில் அவருக்கு இன்சூரன்ஸ் கவரேஜ் கொடுக்க வேண்டியதிருப்பதாலும், 
அவர் செய்து கொண்டிருக்கும் தொழில், அதன் மூலம் கிடைக்கும் வருமானம், வசிப்பிடம், மேலும் அவர் பாலிசிக்கு நியமிக்கப்படும் வாரிசுதாரர் போன்ற விவரங்கள் எல்லாம் தெளிவாக தேவைப்பட்டது. 

மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேறி தனியாகவோ, அல்லது ஒரு அமைப்பாகவோ வசிப்பதால், அவர்களுக்கென்று நிரந்தரமான வசிப்பிடம், நிலையான வருமானம், மற்றும் படிவத்தில் அவரின் வாரிசுதாரர் என்று அவரால் குறிப்பிடப்படுபவர் அவரின் ரத்த சம்பந்தப்பட்ட உறவாக இருப்பதில் ஏற்படும் சந்தேகம், அது சார்ந்த  சிக்கல்கள் போன்றவையெல்லாம் தீவிரமான பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது. அதனால் அவர் கொடுத்திருக்கும் விவரங்கள் அத்தனைக்கும் முகவரின் உறுதிமொழி படிவத்தையும் தண்டி அதற்கான சான்றிதழும் தேவைப்படுகிறது.
இப்படியான சிக்கல்கள் தான் அவருக்கு பாலிசி கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியது. 

மேலும் அது கொரோனா கட்டுபாடுகள் தொடங்கிய ஆரம்ப காலகட்டம் என்பதால், இன்னும் கொஞ்சம் தாமதமானது.     
இந்த அனுபவங்கள் எல்லாம் இரண்டு மாத போராட்டங்களாக நீடித்தது அவற்றையெல்லாம் விரிவாக சொல்லுவதென்றால்  பக்கங்கள் போதாது. 

ஒருவழியாக கேட்டிருந்த ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்து அவருக்கு பாலிசியை உறுதிசெய்து, பாலிசி பாத்திரத்தையும் வாங்கி அவரிடம் கொடுப்பதற்கு அவரின் இருப்பிடம் தேடி சென்றோம். 

வரிசையாக கட்டப்பட்ட ஓட்டு வீடுகளை கொண்ட ஒரு காம்பவுண்டில், பத்துக்கு எட்டு என்ற அளவு கொண்ட ஒரு ஒற்றை அறையில் அவர் வசித்து வந்தார். 
அந்த அறையினுள் முக்கல்வாசி இடத்தை இரும்பு கட்டில் ஒன்று ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. 
அந்த கட்டிலின் மேல் முக்கால்வாசி இடத்தில் சின்ன சின்ன மூட்டைகளும், துணிகளும் ஆக்கிரமித்திருந்தன.
கட்டிலின் ஓரத்தில் அவர் படுத்து உறங்குவதற்கு மட்டும் கொஞ்சம் இடம் இருந்தது. 
கட்டிலின் மேல்புறமும் கீழ்புறமும் தண்ணீர் பிடித்து வைத்திருக்கும் குடங்களும், சின்ன தண்ணீர் பீப்பாய்களும் இடத்தை சரியாக அடைத்துக்கொண்டிருந்தன. 
ஒரு ஓரத்தில் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்றும், சில சமையல் பாத்திரங்களும் வைக்கப்பட்டிருந்தது. 
கதவை திறந்து வைத்தால் கதவு கட்டிலில் முட்டும் அளவிற்கு தான் அந்த அறையில் இட வசதி இருந்தது. 
மற்றபடி ஒரு ஒற்றை நாற்காலி போடுவதற்கு கூட அங்கு இடம் பற்றாக்குறையாக இருந்ததால், நாங்கள் நின்று கொண்டேதான் பேசிக் கொண்டிருந்தோம். 

அவர் இருந்த அந்த சூழலை பார்க்கும்போது எனக்கு எனது முதல் மகன் பிறந்த அந்த நாள் ஞாபகம் வந்தது. 
எனது மனைவி வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்காக அவள் அம்மா வீட்டில் போய் இருந்தாள். 
மருத்துவர் குறித்து கொடுத்த நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன, ஒவ்வொரு நொடியும் ஆவலோடு நகர்ந்து கொண்டிருந்தன.
மொத்தத்தில் அது ஒரு தவக்காலம் போலவே நாட்கள் நகர்ந்தது. 

ஒரு நாள் எனது மனைவியின் தங்கையிடமிருந்து அலைலைபேசி அழைப்பு 'மாமா அக்காவிற்கு பிரசவ வலி வந்துவிட்டது, நாங்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம்  நீங்கள் சீக்கிரம் வந்து விடுங்கள்'- என்பதாய். 
ஆமாம்! தவக்காலம் முடிந்து வரம் பெறும் அந்த நாள் வந்துவிட்டது. 
எந்த நொடியில் அந்த வரத்தை எனது கைகளில் எந்தப்போகிறானோ? ஆர்வம் தொற்றிக்கொண்டது. 

போன் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் கிளம்பிவிட்டேன். அடிக்கடி போன் செய்து நிலவரத்தை தெரிந்து கொண்டே பயணித்துக்கொண்டிருந்தேன். 
மனதின் வேகத்தை விட, பேருந்தின் வேகம் ஏனோ ஆயிரம் மடங்கு குறைவாகத்தான் இருந்தது.
இப்போதே அவள் அருகில் போய் உட்கார்ந்து கொள்ளும் அதிசயம் ஏதாவது நிகழ்ந்து விடாதா? மனசு ஏங்கியது.   

தூக்கம் வரவில்லை, ஜன்னலோரமும் ரசிக்கவில்லை. 
'கேட்டது கிடைக்கும் அதுவரை சிவனேனு இரு' என்று சொல்லுவார்களே அதன் பொருள் இது தானோ? 
மறைபொருள் ரகசியம் புரிந்தாற் போல இருந்தது.
இப்படியான நெருக்கடி நிலையை எதிர்கொள்ள தியானம் கற்றுக்கொள்ளலாமா? எனும் யோசனையெல்லாம் கூட அந்த நேரத்தில் உதித்தது.

அதிகாலை நான்கு மணி இருக்கும், போன் சினுங்கியது.
முதல் சினுங்களிலேயே எடுத்துவிட்டேன்,  மனைவியின் தங்கை தான் பேசினாள். 'மாமா தம்பி பிறந்திருக்கிறான்' என்றாள். 
'எங்கே வந்திருக்கிறீர்கள்?' -என்று கேட்டாள்.
'இருவரும் நலமாக இருக்கிறார்கள், ஒன்றும் கவலையில்லை நீங்கள் நிதானமாக வாருங்கள்' என்றாள். 
'சரிம்மா பக்கத்தில் வந்துவிட்டேன் சீக்கிரம் வந்துவிடுகிறேன்' என சொல்லிவிட்டு போனை வைத்தேன். 

என்ன செய்வதென்றே தெரியவில்லை எப்படியும் இன்னும் இரண்டு மணி நேரம் ஆகலாம், அதுவரை இத்தனை பெரிய சந்தோசத்தை சுமந்துகொண்டு இந்த சின்ன பேருந்திற்குள் எப்படி வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கப் போகிறேன் என்பதும் புரியவில்லை,??
இருக்கையை விட்டு எழுந்து பேக்கை எடுத்து திறந்தேன்,
போட்டிருந்த சட்டையை கழற்றி உள்ளே தினித்தேன்.
உள்ளே உபயோகிக்காத  இரண்டு புது பேண்ட் சட்டைகள் இருந்தன,
எனக்கு இப்போதும்  நன்றாக ஞாபகம் இருக்கிறது அது ஒரு பச்சை கலர் கட்டம் போட்ட புத்தம் புது அரை கை சட்டை. 
அதனை எடுத்து கவரை பிரித்து அணிந்துகொண்டேன்,
பேருந்தினுள் புது பேண்ட் மாற்றிக் கொள்வதற்கு  வழியில்லையே என்று கவலையில் தவித்தேன்,
என் மனைவிக்கு கொடுப்பதற்கு வாங்கி வைத்த இனிப்பு இருந்தது.
அந்த டப்பாவை பிரித்து அதிலிருந்து இனிப்புகளை எடுத்து சாப்பிட்டேன்,
இரண்டொரு துண்டுகளிலேயே திகட்டிவிடும் இனிப்பு அன்று ஏனோ தின்ன தின்ன திகட்டவே இல்லை.
அவளுக்கு கொடுப்பதற்கு வேண்டுமே என்பதற்காக டப்பாவை மூடி வைத்தேன்.

அப்போது ஒரு பட்டன் போன் வைத்திருந்தேன் அதை எடுத்து அப்பாவிற்கு தங்லீஷில்   'அப்பா தம்பி பிறந்திருக்கிறான், இருவரும் நலமாக இருக்கிறார்கள், நீங்கள் நாளை வந்துவிடுங்கள்.' என்று ஒரு குறுஞ்செய்தியை டைப் செய்து அனுப்பினேன். 

மேலும் என் அண்ணன்கள், தம்பிகள், தங்கை என்று எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் 'நம் வீட்டிற்கு இன்று அதிகாலை நான்கு மணிக்கு புதிதாக ஒருவன் நம்மோடு வாழ வந்திருக்கிறான். உங்களை கான அவன் காத்திருக்கிறான். சீக்கிரம் வாருங்கள் என்ற குறுஞ்செய்தியை அனுப்பினேன்.

அதன்பிறகு எனது நெருக்கமான தொடர்பில் இருந்த நண்பர்கள் அனைவருக்கும், 'இப்போது என்னை ஒரு ராஜாவை போல நான் உணர்கிறேன்.
ஆம்! எனக்கு ஒரு இளவரசன் பிறந்திருக்கிறான். என்ற குறுஞ்செய்தியை அனுப்பினேன்.

ஒரு வழியாக காலை ஆறு மணி அளவில் அங்கே போய் சேர்ந்தேன், இன்னும் சிறிது நேரத்தில் அவனை கானப்போகிறேன்,
அவனை தொடப்போகிறேன்,
தொட்டு தூக்கி நெஞ்சோடு அனைத்துக்கொள்ளப் போகிறேன்,
முத்தம் கொடுக்கப்போகிறேன், மடியில் வைத்துக்கொண்டு அவனோடு பேசப்போகிறேன்,
வயிற்றுக்குள் இருக்கும்போதே என் குரல் கேட்டால் சிலிர்ப்பானே...
இப்போது என் குரல் கேட்டவுடன் என்னை அடையாளம் கண்டு சிரிப்பானோ?
இப்படியான எண்ணங்களே ஒரு பரவசத்தை அளித்தது.
இந்த இரண்டு மணி நேரம் முழுவதும் அவனை தவிர வேறு எந்த விசயமுமே என்னிடம் இல்லை.
அவன், 
அவன்,
அவன் மட்டும் தான் என்  மொத்த உணர்வாக ஆக்கிரமித்திருந்தான். 

அப்பாடா...
இதோ ஒருவழியாக அவனை பார்த்துவிட்டேன், ஒரு வெல்வெட்  துணிக்குள் அவனை சுற்றி வைத்திருந்தார்கள்.
அல்லது ஒரு ரோஜவை வெல்வெட்டிற்குள் வைத்திருந்தார்கள் என்றும் கூட சொல்லலாம்.
ஆமாம் அப்படியே ஒரு ரோஜாவின் நிரத்தை பிரதி எடுத்துக்கொண்டு வந்திருந்திருந்தான்.
அந்த உதடு, அப்பப்பா அப்படியே தோல் உரித்த ஒரு கோவைப்பழத்தின் நிரத்தை பிரதியெடுத்திருந்தது.

இவன் தானா?
பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்கள் பனித்தது, மெய்மறத்தல் என்ற ஒரு நிகழ்வு அங்கே நடந்துகொண்டிருந்தது.
அந்த நெற்றி, புருவம் கன்னம், உதடு, மார்பு, வயிறு, கை விரல்கள், கால் விரல்கள், கால் பாதம் என்று ஒவ்வொன்றாய் தடவி, தடவி சிலிர்த்தேன், 
வழுக்கிய கை வெல்வெட்டை தொட்டபோது அந்த வெல்வெட் துணி அவன் உடலினும் கொஞ்சம் கடினமான ஒரு பொருளாக தோன்றியது.

மொத்தமாக அவனை எடுத்து நெஞ்சோடு அனைத்துக் கொண்டபோது, என் மொத்த கர்வமும், எனது ஒற்றை சுயமும் உடைந்துபோய், வெறுமனே அவன் தகப்பனாக மட்டுமே மிஞ்சினேன்.

எதற்காக இதையெல்லாம் இங்கே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் குழம்பலாம். 
ஆம்! அவன் பிறந்த நாளில் நான் அடைந்த சந்தோசத்தை இங்கே நான் செல்வதற்கு காரணமே..,
என்னைபோல தானே இந்த பிள்ளையின் தகப்பனும் இந்த பிள்ளை பிறந்தபோது வானத்துக்கும், பூமிக்குமாய் குதித்து கொண்டாடியிருப்பான். 
மகிழ்ந்து,
நெகிழ்ந்து, 
பார்த்து, பார்த்து பரவசம் அடைந்து, 
மெய்மறந்து நின்று, உடல் தடவி, தடவி சிலிர்த்து, 
அள்ளி எடுத்து அனைத்தபோது உலகத்தின் ஒட்டு மொத்த சந்தோசத்தையும் அனுபவித்ததாய் கிறங்கிப்போயிருப்பான்?

வக்கில்லாதவன் கூட ஆண் பிள்ளையென்றால், வாரிசு பிறந்துவிட்டது என்று மார் தட்டிக்கொள்ளும் ஊரில்,
ஒரு பெண் வாரிசுக்கு பிறகு ஆண் வாரிசாக  பிறந்த இந்த பிள்ளையின் பிறப்பை எத்தனை ஆனந்தமாக கொண்டாடியிருப்பான்? 
எத்தனை பேரிடம் சொல்லி, சொல்லி பெருமிதம் அடைந்திருப்பான்??

ஆனால் இன்று இந்தப் பிள்ளை யாருமில்லாத அனாதையாய், கேட்பாரற்று இங்கே கிடக்கிறதே.
பதினாறு, பதினேழு வருடங்கள் வீடு, தாய், தந்தை, சொந்தம், பந்தம் என்று வாழ்ந்த பிள்ளை,
இன்று வீடு வாசலற்ற அகதியாக, விசாரிக்க நாதியற்ற ஆத்மாவாக இங்கே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறதே..

ஆனால் இந்த பிள்ளை சுதாரித்துக் கொண்டுவிட்டது,
தன் முதுமை காலத்தில் தன் நிலமை எப்படி இருக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல திட்டமிடுகிறது.

ஆனால் இங்கே எத்தனை எத்தனை பேர் தங்கள் எதிர்கால முதுமை வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை ஞானதிருஷ்டியே கிடைத்து முன்கூட்டியே அறிந்து கொண்டாலும் கூட, அதை மாற்றுவதற்கான எந்தவித திடமிடலையும் செய்து வைக்காமல் கால வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகும் துரும்பாக மாறிபோய்,
உறவுகளோடு வாழ்கிறேன் என்ற பெயரில் உறவுக்குள் உலன்று, கலைத்து, சளித்து, சாபமிட்டு, ஒரு வேளை சோற்றுக்கு காத்துக்கிடந்து,
பரிதாபமானதொரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு செத்துப்போகிறார்கள்..?

 கூ, சுரேஷ்வரன்,
இன்சூரஆலோசகர்.சகர்