கதை கதையாம்...

கவிதை

கதை கதையாம்...

கதை கதையாம் ...

எலிகளின் தேசத்திற்குள் ஒரு நாள்
சமாதான தூதுவராய் வந்து சேர்ந்தது
ஒரு கடுவன் பூனை

உலகத்திற்கே நாகரிகத்தை கற்று கொடுத்தது
தங்களின் இனம் தான்
என்று  அங்கலாய்த்துக் கொண்டது

வேதமும்  வேதாந்தமும்
இதிகாசமும் புராணங்களும்
தங்கள் நாட்டில்
மலை போல் குவிந்திருப்பதை 
யாரும் பார்க்கலாமென்று 
மார்தட்டிக் கொண்டது

தடுக்கி விழுந்தால் தத்துவங்கள்
நிமிர்ந்து எழுந்தால் வியாக்யானங்கள்

எலிகளின் தேசம் சுபிட்சம் பெற
" கடவுளால் தேர்ந்து 
அனுப்பப்பட்டவன் நான் என்றது"

பொதுவாகவே எலிகள்
எதைச் சொன்னாலும் நம்பி விடும்
அப்பாவிகள் தான்
அதனதன்  வாழ்க்கைக்கு  ஏற்ப
இடங்களை  தேர்ந்தெடுத்து
 இருந்து கொள்ளும்

சில  வளைக்குள்ளும்
சில வயல்களிலும் 
சில வீட்டோரங்களிலும்
சில வேலியோரங்களிலும்
சில காடு கழனிகளிலும்
வசதிக்கேற்ப வசித்துக் கொள்ளும்

வெள்ளெலி 
சுண்டெலி
கருப்பெலி
பெருச்சாளி 
மூஞ்சுறு
எதுவானாலும் அவைகளுக்குள்.
 எந்த பேதமில்லை

இவைகளிடம் உள்ள ஒரே கெட்ட குணம்
என்றால 
பொதுவாக  நாம் இவைகளைப் புகழ்ந்தால்
புகழ்ச்சியில் மதிமயங்கி
 மந்தம் பிடித்து 
அப்படியே அமர்ந்து விடும் அசடுகள்

அவைகள்
மெளனச் சித்தராய் அமர்ந்திருக்கும்
கடுவன் பூனைக்கு சீடர்களானது ஒன்றும்
ஆச்சரியமில்லை

பூனையாரின் சொல்படியே
புனிதத்தை கடைபிடித்து ஒழுகின

கொடி ஏற்றச் சொல்லால்
கொடி ஏற்றும்
கை தட்டச் சொன்னால்
கை தட்டும்
விளக்கேற்றச் சொன்னால்
விளக்கேற்றும்
அணைக்கச் சொன்னால்
அணைக்கும்
இணை சேர்வதுகூட 
சொல்படி கேட்டுத்தான்

விரைவிலேயே
அவைகளுக்குள் 
வர்ணங்களை பிரித்து வைக்கிறார் பூனையார்
எலிகள் எல்லையற்ற
ஆனந்தத்தில் மிதக்கின்றன

இனக்கலப்பு தடை செய்யப்படுகிறது
தூய காதலெல்லாம்
நாடகக் காதல் ஆனது

எலிகளின் வர்ணங்களுக்கேற்ப 
தனித்தனி குடியிருப்புகள்
தனித்தனி கோயில்கள்

அசைவம் சாப்பிடாத எலியார்கள்
பூசாரியாகிறார்கள்

பூனையார்  சொல்கிறார்

"நான் உங்களை
ஆயிரம் ஆயிரமாண்டுகள்
பின்னோக்கி அழைத்துச் செல்கிறேன்
அந்த வேத காலத்திற்கே "
 என்கிறார்

ஆனந்த ஆரவாரம் அலை மோத 
உபதேசங்கள் தொடர்கின்றன

தொடர்ந்து உபதேசிக்க
தன் நாட்டிலிருந்து
ஆயிரக் கணக்கான பூனையார்களை அழைத்து வருகிறார்
வந்த பூனையார்கள்
அனைவரும் சுத்த சைவங்கள்
எலிகள் சுற்றி சுற்றி வந்தாலும்
அவைகள் நிமிர்ந்து பார்ப்பதில்லை

எலிகளுக்கு முழு நம்பிக்கை
பிறந்து விட்டது
பூனையார்கள் இப்போது
உலக நன்மைக்காக
உபதேசிக்கிறார்கள்

"தக்காளி விலை  உயர்வு
தக்காளி சாப்பிடாதே
குறைந்தது ஐந்து நாட்கள்"

வெங்காய விலை விண்ணில்
" அது போலவே வெங்காயப்
பத்தியம் போடு
குறைந்தது ஒரு வாரம்
வெங்காயமே காணாமல் போய்விடும்"

சொன்னபடியெல்லாம்  கேட்Lன  
ஆச்சார எலிகள்
தங்களினத்தில் பெண்டுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தன
கட்டுப்பாடுகளை மீறினால்
பெண்டுகளை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்துப் போகும்
ஆண் எலிகல்
ஊ..ஊ.. என்று கூச்சலிட்டபடி
உடன் செல்லும்
மற்றைய எலிகள்
அவ்வளவு ஆச்சாரம்

ஆசாரங்களை கடைபிடிக்க வில்லையென்றால்
குடி நீர் தொட்டிகளில் மலம் கலக்கின்றன

அவ்வளவு ஆச்சார சீலர்களாயின அத்தனையும்

தங்கள் உடன் இருந்த எலிகள்
ஒவ்வொன்றும் இரவில் 
காணாமல் 
போன போது
அவைகளுக்கு சந்தேகம் 
வரவேயில்லை

சில நேரம் பூனையார்கள்
எலிகளை கவ்விச் சென்றதை
கண்ட போதும்
அது கெட்ட கனவு தான் என்று
கம்மென்று இருந்தன

வாயில் வழியும்
ரத்தத்தோடு அவைகள்
வந்த போது
உதட்டுக்கு
பூனையார்கள் சிவப்புச் சாயம் 
பூசிக் கொண்டிருப்பார்களென்று
விளக்கமளித்தன.

காலம் கடந்து விட்டது
தங்களின் உறவுகள்
ஒவ்வொரு நாளும் 
 காணமல் போன போது
நாமும் காணாமல் போனால்
என்னாவதென்று 
எலிகளெல்லாம் சட்டென்று கூடி

" இது எலிகளின் தேசம்
இங்கே பூனையார்களுக்கு 
என்ன வேலை?"
இதை விடிந்ததும் 
கேட்க வேண்டுமென்று
முடிவெடுத்து
எல்லா எலிகளும்
இருளோடு கலைந்து சென்றன
ஆனால் அதன் பிறகு
அங்கே விடியவேயில்லை

- தங்கேஸ்.