தமிழர்களின் வீரம்...! 04

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழர்களின் வீரம்...! 04

தமிழர்களின் வீரம்

     உலகின் தொன்மையான இனக்குழுமங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற தமிழர்களின் வாழ்வியல் மறம் என்கின்ற வீரத்தினை முதன்மையாகக் கொண்டிருந்திருக்கிறது. மறம் என்பது ஒழுக்கவியலின் உயரிய பண்பாகவே சங்ககால பாடல்களில் படைக்கப்பட்டுள்ளது. 

சங்ககால பாடல்களில் தமிழர்களின் வீரம்:

        தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் புறத்திணையானது, மன்னனின் மறம் சார்ந்த ஒழுக்கக்கோவை நூலாகவும் காணப்படுகிறது.  தொல்காப்பியரின் புறத்திணையானது முழுக்க முழுக்க போர்,  போர்க்காரணம்,  போர்முறை,  அரசரைப் போற்றுதல்,  போர்வெற்றி எனப் போர் சார்ந்தே அமைகிறது எனலாம். இறுதியில் மட்டுமே நிலையாமைக் கருத்தை உணர்த்தும் காஞ்சி திணையையும்,  ஆண்மகன் வீரம் உணர்த்தும் பாடாண் திணையையும் உள்ளடக்கியது எனலாம்.

தமிழர்களின் வீரவிளையாட்டுகள்:

    வீரம் என்ற சொல்லை மற்ற மொழிகளுக்குத் தந்தது தமிழ் மொழியாகும்.
வீர விளையாட்டுகள், போட்டிகள், மிருகங்களை அடக்குதல் முதலியன தமிழர்களின் வாழ்க்கையில், திருமணங்கள் மற்றும் திருவிழாக் களுடன் இரண்டறக் கலந்தவை. புலியை வேட்டையாடி புலிப்பல்லுடன் கூடிய மங்கல நாணைக் கொண்டு வரும் மணமகனுக்கு மணமகளை பரிசாகத் தந்தார்கள். போர்க் களத்திலே புறமுதுகு காட்டுவது வீரனுக்கு அழகல்ல.

         மார்பிலே காயப் பட்டு இறப்பதையே பெரிதும் விரும்பினார்கள். இத்தகைய வீர மறவர்களுக்கு இணையான வீரர்களை உலகில் காண முடியாது. முதுகில் காயப்பட்டதினால் பெற்ற மகனை தாயே வெட்டிக்கொன்ற காட்சிகளை இலக்கியங்களிலே காணுகின்றோம். திராவிடர்களின் முக்கியப் போர் ஆயுதங்கள் வாள், ஈட்டி, சூலம், வில் முதலியனவாகும். ஆரியர்கள் குதிரையைப் பெரிதும் பயன்படுத்தினார்கள்.

புறநானூறு கூறும் தமிழர்களின் வீரம்:

     தமிழருடைய இனத்தில் பிறந்தாலே அது வீரக்குழந்தையாகவே கருதப்பட்டு வளர்க்கப்படுகிறது. அந்த வீரனைப் பெற்ற தாயும் வீரத்தாயாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறாள்.

“சிற்றில் நற்றூண் பற்றிஇ நின் மகன்
யாண்டு உளனோ என வினவுதி என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்  ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க் களத்தானே”  என்கிறது புறநானூறு. 

“உன் மகன் எங்கு உள்ளான்?” என்று கேட்கிறாய்.? என் மகன் எங்கு இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற என் வயிறு புலி இருந்து விட்டுப் போன கல் குகையைப் போன்றது . அத்தகைய வீரம் பொருந்திய அவனைப் போர்க்களத்தில் தான் காண முடியும். என்று தாய் தனது காவற்பெண்ணுக்கு சொல்வதாக அமைகின்றது. வலிமைமிக்க புலிக்கு தன்மகனை ஒப்பிட்டு போர்களத்தில் தான் என் மகன் இருப்பான் என்று கூறுகிறது பழந்தமிழர் வீரம்.

      புறப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக் கொண்டது புறநானூறு. அதில் பெரும்பாலான பாடல்கள் பண்டைய தமிழர்களின் வீரத்தையே பறைசாற்றுகின்றன. பண்டைய தமிழர்களின் வீரத்தை, "தொல்காப்பிய புறத்திணை இயல்" எடுத்துக் கூறுகிறது.  பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைப்பெற்றது. 

        தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை,  காலாட்படை என்ற நால்வகை படைகளும் போரில் ஈடுபட்டன.  வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு  புறத்திணை பகுதிகளிலும்  தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. 

  அறப்போர் முறைகள்:
      
        அக்கால தமிழர்களிடம் "அறப்போர் முறையே " அமைந்திருந்தது. இதனை நெட்டிமையார் புறப்பாடலால் அறியலாம்.  பசுக்களும் , பசுவை ஒத்த பார்ப்பனர்களும், பெண்களும், நோயுடையவர்களும், புதல்வரை பெறாதவர்களும் .. யாம் அம்பு விடுவதற்கு முன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்.. என வீரன் ஒருவன் கூறுவதிலிருந்து தமிழரின் அறப்போர் முறை விளங்கும். 

  "ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
   பெண்டிரும் பிணியுடையீரும்  பேணித்
   தென்புல வாழ்நர்க்கு அறுங் கடன் இறுக்கும்
    பொன் போற் புதல்வர் பெறாஅ தீரும்
    எம் அம்பு கடிவிடுமுன்  நும் அரண் சேர்மின்" 
 
           மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர் இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும்  புறநானூற்றால் அறிய முடிகின்றது. 

         தமிழர்களின் வீரத்தினை பறைசாற்றும் எத்தனையோ நிகழ்வுகள் இன்றும் நம் குருதியில் கலந்து வீரத் தமிழனாய் நம்மை வாழ்ந்திடத்தான் செய்கிறது.. போற்றுவோம் தமிழரின் வீரத்தை, பெருமை கொள்வோம் வீரத்தமிழனாய் வாழ்வதற்கு. 

- கோ.ஶ்ரீஅஹிலேஷ்
கும்பகோணம்.