பாரதி யெனும் பைந்தமிழ் பகலவன்...018

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதி யெனும் பைந்தமிழ் பகலவன்...018

பாரதியெனும் 
பைந்தமிழ் பாவலன்...

பாரதியெனும் 
பைந்தமிழ் பாவலன்...
தன் அனல் பறக்கும் கவித்திறத்தாலே 
ஆங்கிலேயனை அலறவிட்டவன்... 

சுதந்திரத்தை மட்டுமே 
மூச்சுக்காற்றாய் உண்டு
உயிர் சுமந்தவன்.. 
அடிமைத்தனமில்லா அழகிய வாழ்விற்கு
அச்சாணியாய் விளங்கியவன்.. 

தன் எழுச்சிமிகு கவிதையாலே
சாதியென்ற சாவிற்கு சவுக்கடிக் கொடுத்தவன்
எழுதுகோல் கொண்டு 
வீரம் புகட்டிய வீரத்தமிழன்... 
கவிதையெனும் வாள்சுழற்றி
வெள்ளையனை வியர்க்க வைத்த வித்தகன்... 

பெண்மையே பெரும் சக்தியென
பறைச்சாற்றியவன்... 
புதுமை பெண்களுக்கு
புத்துயிர்க் கொடுத்தவன்... 
எழுதுகோல் எனும் எழுத்தாணிக் கொண்டு
எதிரிகளின் கர்வம் அழித்தவன்... 

முத்தமிழுக்குள் மூச்சடக்கி முத்தெடுத்தவன்
பைந்தமிழால் பாக்கள் தொடுத்தவன்...
பரங்கியரின் கொட்டத்தை
பாட்டுத் தீயால் அடக்கியவன்...
மூடநம்பிக்கைகளை எரித்த
முண்டாசுக் கவிஞனவன்... 

செல்லமாக செல்லம்மாவை சீண்டி
காதலோடு கொஞ்சி மகிழ்ந்தவன்
பாடாதப் பொருள் இல்லை
எனும் அளவிற்கு
பாட்டுத் தீயாய் பரவியவனவன்.. 
அஞ்சா நெஞ்சம் உடையவன்..
விடுதலைக்கு வித்திட்ட தீர்க்கதரிசியவன்...
விடுதலை வேள்வியில் அவனிட்ட தீ
பற்றி பரவி சுட்டெரித்தது ஆங்கிலேயனை... 
மண் விடுதலைக்கு பாட்டிசைத்த பாவலன்
பெண்விடுதலைக்கு வித்திட்ட வேங்கை... 

விடுதலை விதையை விருட்சமாக வளர்த்தவன்.. 
மூடப்பழக்கங்களுக்கு
மூடுவிழா நடத்தியவன்.. 
யுகம் கடந்து வாழும் யுக கவிஞன்.. 
பா ரதம் செலுத்திய 
பாக்களின் சாரதி
எங்கள் பாரதி... 

செந்தமிழ் நாடென தமிழுக்கும் 
தமிழ்நாட்டிற்கும் மகுடத்தை 
தன் பாக்களால் சூட்டியவன்.. 
வள்ளுவர் இளங்கோ வரிசையில்
இடம் பிடித்து
வண்டமிழ் செழிக்க கவிதைகள் யாத்தவன்.. 

புதுமைக்கும் மரபுக்கும் பாலம் அமைத்தவன்... 
முறுக்கு மீசைக்காரன்
முத்தமிழின் சொந்தக்காரன்.. 
உடலால் மறைந்தாலும்
பாடல்களால் வாழ்பவன்..
மொத்தத்தில்...
எட்டயபுரத்தில் பிறந்த
எட்டாவது அதிசயமவன்... 
பாக்களின் நாயகன்
எங்கள் பாரதி என்பவனவன்.. 

சசிகலா திருமால்
கும்பகோணம்.