உலக தாய்மொழி தினம்

உலகத் தாய்மொழி தினம் கவிதை

உலக தாய்மொழி தினம்

*உலக தாய்மொழி தினம்*
தமிழ் எங்கள் உயிர் மூச்சு
**************************
எத்திசையும் புகழ் மணக்க இருந்த 
பெரும் தமிழணங்கே ...என்ற
பேராசிரியர். சுந்தரம் பிள்ளை தமிழ்,
திருந்திய பண்பும்/ சீர்த்த நாகரிகமும்
பொருந்திய தூய மொழி...என்று
பரிதிமாற் கலைஞர் அறிந்த தமிழ்,
சாகா கலை தந்த பித்ருமொழி...என்றே
வள்ளலார் வார்த்தைகளான தமிழ்...
எங்கள் உயிர் மூச்சானதில் பெருமிதமே!

ற,ன,ழ,எ,ஓ...சிறப்பெழுத்துக்களென
நற்றமிழ் இலக்கண நூலில்,
என்றுமுள தென்தமிழென இதிகாச
கம்பராமாயணத்தில்,
இருந்தமிழே! ..உன்னால் இருந்தேன்
என தமிழ் விடு தூதில்,
தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும்
காணோமென பாரதி வரிகளில்,
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
என்ற பாரதிதாசன் வார்த்தைதனில்
பேசப்பட்ட தமிழ் எங்கள் உயிர் மூச்சு
என பதிவு செய்வதில் இன்பமே!

ஐந்திலக்கணம் கொண்ட மொழியென
இறையனார் அகப்பொருள்நூல் புகழ,
தானொரு தமிழ் மாணவன் ஜி.யு.போப்
என கல்லறையில் எழுதச் சொன்ன,
இனிமை/எளிமை/நீர்மை தமிழென்ற
பிங்கலந்தை நிகண்டு நூல் பகன்ற
இதயத்தால் பேசப் பெற்று
இதயத்தால் உணரும் மொழியான தமிழ்
எங்கள் உயிர்மூச்சென்பதில் மகிழ்வே!
உலக தாய்மொழி தினத்தில் தமிழ்மொழியை முன்னெடுப்போம்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன்,
வாலாஜாப்பேட்டை.