பெண்களைப் போற்றுவோம்..! 005

புதுமைப் பெண் விருது கட்டுரை போட்டி

பெண்களைப் போற்றுவோம்..! 005

பெண்களைப் போற்றுவோம்...

 *முன்னுரை*       
       "தற்காத்துக் தற்கொண்டாற் பேனித் தகைச்சான்ற சொற்காத்து சோர்விலாள்  பெண்"- (குரலில் 56) என்னும் குரலுக்கு ஏற்ப கற்பு நெறி தவறாது தன்னைக்காத்து,தன் கணவனையும் காத்து, ஒழுக்க வழியில் உறுதியுடன் வாழ்பவளே பெண். பெண்ணை விடப் பெருமை உடையது இவ்வுலகில் எதுவுமே இல்லை என்றார் வள்ளுவர். பெண் என்பவள் உலகில் மிகச்சிறந்த படைப்பாளி. அனைத்திற்கும் மூலகாரணம் அவள் தான். பெண்களை மதித்து போற்றுவதும், பாராட்டுவதும், தமிழர்களின் தலைசிறந்த பண்பாடாகும்.

*வாழ்க்கை பயணம்*       
       அனைவருக்கும் வாழ்க்கை பொதுவானதுதான். அதில் பெண்களின் வாழ்க்கையோ உட்கார நேரம் இன்றி ஓடிக்கொண்டே இருக்கும் ஓர் உயிருள்ள இயந்திரம் எனலாம். கல்வியிலும், ஆற்றலிலும், ஆணுக்கு நிகராக பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். இதனை, ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி வையம் தழைக்கும் என்றார் பாரதியார். வாழ்க்கை காலை மாலை, இரவு பகல், இன்பம் துன்பம், என மாறிக்கொண்டே இருக்கும். வாழ்க்கையை வாழ பழகிக் கொண்டால் வாழ்க்கையும் இனிக்கும். வாழ்க்கை பயணங்களும் தொடரும்.

*கல்வியில் சிறந்தவர் பெண்கள்*                 
      அடுக்களை முதல் ஆகாய விமானம் வரை அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றி வருகிறார். பெண்கள் ஏறாத துறைகளே இல்லை எனலாம். "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்- எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்."என்றார் பாரதியார். எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு  சேர்ப்பீர் என்று அறைகூவல் விடுத்தார். 

*தன்னம்பிக்கை மிக்கவர்கள் பெண்கள்*
      பெண் என்பவள் அடிமையாய் வாழ பிறந்தவள் அல்ல. அகிலத்தை ஆள பிறந்தவள்.
தைரியமிக்கவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள். "நம்பிக்கை என்ற நார் மட்டும் உன்னிடத்தில் இருந்தால், நட்சத்திர பூக்களையும் மாலை தொடுக்கலாம். நில ஒலியிலும் நீந்தி மகிழலாம்".
வாழ்க்கை என்னும் தோட்டத்தில் வசந்த மலர் பறிக்கணும். நாம் வாழ்ந்தோம் என்னும் முத்திரையை, வரலாற்றிலே பதிக்கணும். இதனை முழு முயற்சியாக எடுத்துக் கொண்டால் விண்ணையும் மண்ணுலகத்திற்கு கொண்டு வந்து விடலாம். *நம்பிக்கையோடு செயல்படு...நாளைய உலகம் உன் கையில்...* என்பதை ஒருபோதும் மறந்து விடாதே.

 *வரலாறு படைத்திடு*   
   பெண்கள் வீட்டின் கண்கள், நாட்டின் தூண்கள், நாடு நலம்பெற, வீடு ஒளி பெற, பெண்கள் வாழ வேண்டும். 
"வாழ்வது ஒரு முறை. வாழ்த்தட்டும் தலைமுறை, என வாழ்ந்து காட்டு. வரலாற்றில் இடம் பெறுவாய்!" வாழ்ந்தவர்களின் வரலாறு வளரும் தலைமுறைக்கு வாழ்க்கை பாடமாகிறது. சோதனைகளுக்கு இடையே சாதனை படைப்பவர்கள் தான் பெண்கள்.வாழும் போதே வரலாறு படைத்திடு. எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறு ஆனவர்கள் எவரும் தனக்காக வாழ்ந்ததில்லை, என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள். 

 *வெற்றி படிக்கட்டுகள்* 
    வெற்றியின் சிகரத்தை - இலக்கை அடைய ஒருபோதும் காலம் தாழ்த்தாதே! ஒவ்வொரு வெற்றிக்கும், இலக்கு, திட்டம், செயல், முயற்சி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பொறுமை, தியாகம், அனைத்தும் வெற்றி படிக்கட்டுகளாக அமையட்டும். *"சாதனை படைப்பவர்கள் பெண்கள். சரித்திரத்தில் இடம் பெறுபவர்கள் பெண்கள்.சாகா வரம்பெற்றவர்கள் பெண்கள்"* தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். வெற்றி வானில் சிறகை விரி! வெளிச்சம் கிட்டும்! முயன்றிடு! முனைந்திடு! முன்னேற்ற பாதையில் சென்றிடு!

*பெண்மையின் சிறப்பு*
     "மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!" என்றார் கவிமணி. பெண்களை குடும்ப விளக்காக காவியம் படைத்துள்ளார் பாவேந்தர் பாரதிதாசன். பெண்மையை மதித்து போற்றுங்கள் என்றார் திரு.வி.க. பாரதியார் தொடங்கி,  தற்கால புது கவிஞர்கள் வரை பெண் இன மேம்பாட்டிற்கு குரல் கொடுத்து வருகின்றனர். பெண்மையை போற்ற, பெண்ணை உயர்வுபடுத்த அக்காலம் முதல் தற்காலம் வரை, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

*முடிவுரை*
    உலகின் ஒப்பற்ற மூலமே சக்திதான். அந்த ஆதி சக்தியே உன்னுள் உறைந்திருக்கும் பெண் தான். சக்தியின் வடிவாய் சாந்தத்தின் பிறப்பிடமாய், படைக்கும் பிரம்மாவாய் பிறந்திருப்பவள் பெண்.
 பெண்களைப் போற்றும் தினமாக ஆண்டுதோறும் மார்ச் எட்டாம் நாள் மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் பெண்களை மதித்து போற்றுவோம்.
வாழ்க வளமுடன்..! 

கவிஞர்,
 ந.மலர்கொடி.
தலைமையாசிரியர்.