தமிழர்களின் விருந்தோம்பல்...! 05.

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழர்களின் விருந்தோம்பல்...!  05.

தமிழர்களின் விருந்தோம்பல் எனும் உயரிய மாண்பு

"உண்டி கொடுத்தோர் உயிர்  கொடுத்தோரே "...
      நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.அப்படிபட்ட உயர்ந்த மாண்பு தமிழர்களின் மாண்பு. 

உயிரினும் மேலான பண்பு:

       மக்கள் உயிர்வாழ உணவு இன்றியமையாதது. மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்றில் முதல் இடம் பிடிப்பது உணவே ஆகும். உணவின் அடிப்படைத் தேவையை நன்கு உணர்ந்த நம் முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உயிர்ச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருள்களை உண்டு வந்தனர். மேலும் தாம் உண்பதோடு மட்டுமல்லாமல் உணவில்லாமல் வறுமையில் வாடிய ஏழை-எளியவர்களுக்கும் வீட்டிற்கு வரும் புதியவர்களுக்கும் உணவினை வழங்கி அவர்கள் உண்பதைக் கண்டு மகிழ்ந்தனர்.

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
 நோக்கக் குழையும் விருந்து".

      முகத்தை மாறுபட்டு வைத்தாலே விருந்தினர் மனம் வருந்துவர் என்பதால், விருந்தினரை அன்போடு உபசரிக்க வேண்டும் என்பது தமிழர்களின் குறிக்கோளாக இருந்தது. மேலும் அவ்வாறு வரக்கூடிய விருந்தினர்களுக்கு முதலில் உணவு அளித்த பின்னரே தாம் உண்ணுதலை முறையாகக் கடைப்பிடித்தனர்.
தமிழரின் தலைசிறந்த பண்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல். 

ஆகச்சிறந்த பண்பாடு பற்றி கூறும் சங்க இலக்கியங்கள்:

“மருந்தே ஆயினும் விருந்தோடுண்”     
      என்கிறார் ஒளவையார் அதாவது நாம் உண்கின்ற உணவை புதிதாய் வருகின்றவர்களுக்கும் கொடுத்து உபசரிக்கும் பண்பு தமிழர்களுக்குரியதாகும்.

“இட்டு கெட்டவர் யாரும் இல்லை”  
    என்று கூறுவார்கள். அந்தளவிற்கு தானமும் தர்மமும் தலைகாக்கும் என்பது மரபு அதன் வாயிலாகவே ஈகை பண்பு அடுத்தவர்கும் உணவளிக்கும் உயரிய மாண்பு தமிழர் வரலாற்றில் இலக்கியங்களில் பெரிதும் பேசப்படுகிறது.

      சங்க இலக்கியங்கள் தொல்காப்பியம், திருமந்திரம், அகத்தியம், திருக்குறள்...  என பல நூல்கள் விருந்தோம்பலை பற்றி அழகாக கூறுகின்றன.  மேலும் சங்க இலக்கியங்களிலும் எட்டுத்தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் விருந்தோம்பலின் சிறப்பு தொடர்பாக அதிகம் பேசப்படுகிறது. தமிழர்களின் விருந்தோம்பல் பழக்க வழக்கத்தோடு பல அறிவியல் விடயங்களும் காணப்படுகின்றன. உலகத்தில் வேறு எந்த இடத்திலும் பார்க்க முடியாத வந்தோரை வரவேற்று உபசரித்து அனுப்பும் வழக்கம் தமிழர்களுக்குரியது. இது அடுத்தவர்களையும் அன்போடு உபசரிக்கும் சிறந்த பழக்கமாகும்.

          பசியோடும் களைப்போடும் வருபவர்களுக்கு உணவளிப்பது உயர்ந்த புண்ணியம் என்கிறது மதங்கள். மண்ணில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உணவும் உடையும் வீடும் அழிப்பது தான் உயர்ந்த அறம் என்று போதிக்கிறது “மணிமேகலை”.
வறியவர்கள்,  முதியவர்கள் ,பிறவிகுறைபாடு உடையவர்கள், அநாதையாக வீதியில் நிற்பவர்கள் , நோயுற்றவர்கள் போன்றோருக்கு உணவழித்தல் ஆக சிறந்த அறம் என்கிறது மணிமேகலை.

யாராகினும் கொடுத்து உண்:

          தமிழர்கள் புதிதாக வரும் வழிப்போக்கர்கள் அமர்ந்து இளைப்பாறி விருந்துண்டு செல்வதற்காகவே வீட்டிற்கு முன்பு திண்ணை அமைத்து வீட்டைக் கட்டியுள்ளனர். இல்லத்தில் இருக்கும் மக்கள் விருந்தினரை அன்போடு உபசரித்தனர். குறிப்பாக அக்காலத் தமிழன் வேலை செய்து சேமித்த செல்வத்தின் ஒரு பகுதியைப் பிறருக்கு உணவு அளித்தல் போன்ற செயல்களுக்குச் செலவிட்டான். அவ்வாறு செலவிடுவதற்காகவே செல்வத்தை சேர்த்தான் என்பது பெருமைக்குரியதாகும். பிறருக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே வேலை செய்து பொருள் சேமித்தவன் உலகில் தமிழன் மட்டுமே. இச்செயல் தமிழினத்தின் உயரிய பண்பைக் காட்டுகிறது. 

        தமிழகத்தின் பெரிய நகரங்களில் அக்காலத்தில் ஏழை-எளியவர்களுக்கு உணவு வழங்குவதற்காக இந்த அறச்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று சிறப்புமிக்க மதுரையில் இருந்தது. அங்கு பல வகை உணவுகள் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்டதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.   இதன் மூலம் நம் தமிழ் மக்கள் அக்காலத்தில் ஏழை-எளியோருக்கு உணவு வழங்குவதற்காகவே அன்னசத்திரங்களை ஏற்படுத்தி பிறர் பசியைப் போக்கி உள்ளனர் என்பதை அறியமுடிகிறது. 

"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நுல்விருந்து வானதவர்க்கே” 
       என்கிறது திருக்குறள். அதாவது வந்த விருந்தினர்களை அன்பாக கவனித்து அனுப்பி விட்டு வருகின்ற விருந்தினர்களுக்காக வாசலில் காத்திருந்தவர்கள் நம் முன்னோர்கள்.

      இத்தனை பெருமைகள் உடைய இனத்தில் பிறந்த நாம் பெருமைக்குரியவர்கள் எம் பண்பாடு, எம் கலாச்சாரம், எம் பழக்கவழக்கங்கள் என்றைக்கும் மங்காதவை இவற்றை நாமும் பின்பற்றி வாழ்வதே சிறப்பானதாகும்.

- கோ.ஶ்ரீஆதேஷ்
கும்பகோணம்.