குட் மார்னிங் பாட்டி...!

சிந்தனைச் சிற்பி விருது கதை போட்டி

குட் மார்னிங் பாட்டி...!

குட் மார்னிங் பாட்டி

அது ஒரு அரசுப்பள்ளி. அங்கே பத்தாம் வகுப்பு வரை உள்ளது. வகுப்பறையில் குட்மார்னிங் பாட்டி என்று அத்தனைக் குழந்தைகளும் ஒரே குரலில் சொன்னார்கள். புதிதாக வந்த டீச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன இது எல்லோரும் குட்மார்னிங் டீச்சர் அல்லது சார் அப்படின்னு தானே சொல்வார்கள். இதென்ன பக்கத்து கிளாசில் புதுசா குட்மார்னிங் பாட்டின்னு கேட்குது என்று பார்க்க வந்தார். அங்கே எழுபது வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் குழந்தைகளுடன் உட்கார்ந்து இருந்தார். டீச்சர் அங்கே பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். 

"ஏன் இந்தப் பாட்டி இங்கே உட்கார்ந்து இருக்காங்க? அவங்களும் படிக்கிறாங்களா?"

"இல்லை டீச்சர். அவங்க பேரன் பாலாக்காக கூட வந்திருக்காங்க"

"ஏன் அவனுக்கு என்னாச்சு?"

"அவனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கு. ஒரு இடத்தில் உட்கார மாட்டான். எல்லா குழந்தையும் பார்த்துகிட்டு அவனையும் கவனிக்க முடியாது. அதனால அவங்க அம்மாவோ, அப்பாவையோ வரச் சொன்னோம். அவங்க இரண்டு பேரும் வேலைக்குப் போறதால அவங்க பாட்டி கூட வரேன்னு சொன்னாங்க. நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்."

"அப்படியா நல்ல விஷயம் தான். பாட்டி உங்க பேர் என்ன? உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா கேளுங்க. என்னால முடிஞ்சா செய்றேன்"

"என்னோட பேரு அகிலா. பெரியவர்களை விட குழந்தைகள் சீக்கிரமா எல்லா விஷயங்களையும் புரிஞ்சுக்கிறாங்க. முதலில் இங்க வந்தப்ப பாத்ரூம் வந்தா கூட என் பேரனுக்குச்  சொல்லத் தெரியாது. ஒழுங்கா தண்ணி குடிக்கத் தெரியாது. இப்ப இந்த பசங்களே எல்லாத்தையும் கத்துக் கொடுத்துட்டாங்க"

"ரொம்ப சந்தோசம் பாட்டி. அப்படியே நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பாட்டு, கதை எல்லாம் சொல்லிக்கொடுங்க."

"நானும் சொல்லிக்கொடுகிறேன் மா"

கொஞ்ச நாள் கழித்து பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார்கள். அவர் பேரனும் அதிலிருந்து பள்ளிக்கும் வரவில்லை. அவன் வகுப்பு டீச்சரும், பக்கத்து வகுப்பு டீச்சரும் சேர்ந்து பாலா வீட்டுக்குச் சென்றார்கள்.

"வாங்க டீச்சர். எல்லாரும் எப்படி இருக்கீங்க? என்னால இனிமேல் ஸ்கூலுக்கு வர முடியுமான்னு தெரியல. குளிக்கும் போது வழுக்கி விழுந்ததில் காலில் நல்ல அடி. மூன்று மாதம் ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கிறார் டாக்டர்."

"அடடா நீங்க உடம்பை பார்த்துக்கோங்க. அதுக்காக பாலாவையும் ஸ்கூலுக்கு அனுப்பாம வச்சிருக்கீங்களா?"

"வேறென்ன செய்வது. அங்கே வந்தால் இவனை யார் பார்த்துப்பாங்க?"

"நாங்க தலைமையாசிரியரிடம் பேசி இதுக்கு ஒரு முடிவு சொல்றோம். வறோம் பாட்டி"

பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அங்கே யார் பாலாவைப் பாரத்துக்கொள்வது என்று யோசித்து தனியே ஒரு டீச்சர் போடலாம் என்று முடிவெடுத்தார்கள்.  இதுவரை பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட, டீ கொண்டு வந்த சுதா பாட்டி ஐயா "நான் வந்து பார்த்துக்கிறேன்" என்றார்.

"நீங்க எப்படி மா பார்த்துக்க முடியும். நாங்க தனியா டீச்சர் போடறோம்."

"நீங்க டீச்சரும் போடுங்க ஐயா. நானும் பசங்க கூடவே இருக்கேன். எனக்கும் யாரும் இல்ல. இங்கேயே இருந்துக்கிறேனே"

அரை மனதாய் எல்லோரும் சம்மதிக்க அவர் சந்தோஷமாகச் சென்றார்.

மறுநாள் பாலாவும் ஸ்கூலுக்கு வந்தான். சுதா பாட்டியும் பிள்ளைகளுடன் அமர்ந்துக் கொண்டார். பாட்டு, கதை என்று வகுப்பில் மகிழ்ச்சியான சத்தம் கேட்டது. கூடவே குட்மார்னிங் பாட்டி என்ற குரலும் சத்தமாக கேட்டது.

- ஜெயா சிங்காரவேலு, கரூர்.