மகாகவி பாரதி ..77

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

மகாகவி பாரதி ..77

மகாகவி பாரதி

ஊட்டி வளர்த்த அன்னைத் தமிழைப்
பாட்டுத் திறத்தால் பளிச்சிட வைத்தவன்
தீட்டிக் கொடுத்தத் தீஞ்சுவைக் கவியால்
நாட்டுப் பற்றை நெஞ்சில் தைத்தவன்

ஏட்டுத் தமிழை எளிய தமிழாய்க்
கேட்டுச் சுவைக்க மாற்றித் தந்தவன்
வீட்டுச் சிறையில் வாடும் பெண்களை
மீட்டுக் கொடுக்க முன்னால் வந்தவன்

பூட்டிய விலங்குடன் புலம்பும் மாந்தரைப்
பூட்டை உடைத்துப் புறப்படச் செய்தவன்
நாட்டு மக்களை நாசஞ் செய்யும்
கூட்டம் மீதினில் கவிகளை எய்தவன்

காட்டுத் தீயாய்க் கவிதை பரப்பிக்
கோட்டை துரைகளைக் கதற விட்டவன்
தீட்டெனச் சொல்லித் தீண்டாமை வளர்க்கும்
கேட்டைப் பொசுக்கக் கேள்வியால் சுட்டவன்

சூட்டில் தகிக்கும் சுதந்திரக் கனலைப்
பாட்டில் வடித்துப் பாரெலாம் விரித்தவன்
ஆட்டிப் படைத்த ஆங்கிலக் குழுவை
சாட்டை வரியால் தோலை உரித்தவன்

வாட்டி வதைக்கும் வறுமை நிலையில்
நீட்டிய கையொடு நிற்காத புலவன்
ஈட்டிய பொருளை எடுத்துக் கொடுத்து
மூட்டிய அடுப்பை அணைத்த தலைவன்.


-நாகேந்திரன், விருதுநகர்.