பெண்மையை போற்றுவோம் 049

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்மையை போற்றுவோம் 049

பெண்மையை  போற்றுவோம்...

" விலகி வீட்டிலோர்  பொந்தில்  வளர்வதை
 வீரப் பெண்கள்  விரைவில்
 ஒழிப்பாராம்!"
 என்று என் முண்டாசு கவி பாரதி அன்று
  உரைத்தது போல
 இன்று பெண்கள் வீட்டின் பொந்தில்  இருந்து வெளியேறி பெண்கள் கால் தடம் பதிக்காத  துறைகளே இல்லை என்பதில் பெருமிதம்  கொள்வோம்.
  " ஏட்டையும் பெண்கள் தொடுவது       தீமையென்றெண்ணி
யிருந்தவர் மாய்ந்து விட்டார்"
 என்னும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப ஏட்டுக்கல்வியை  கற்பதில் இருந்து, கற்பிப்பது வரை  பெண்களே பெரும் பங்கு  வகிக்கின்றனர். பாரதி கண்ட புதுமை பெண்கள்  மண்ணுலகில் இருந்து  விண்வெளி வரை சாதனை படைத்து வருகின்றனர். பெண்கள் குட்ட  குட்ட  குனிந்து விட  கோழைகளும் அல்ல, தட்ட  தட்ட  புதைந்து விடும்  கற்களும் அல்ல,  மண்ணை முட்டி முட்டி  முளைத்து வரும்  விதைகள் போல, தானும் வளர்ந்து  மற்றவர்களும் பயனுற வாழ்ந்து அடுத்த தலைமுறையை  சீர் பட, திறம்பட உருவாக்குபவர்கள்.
 ஆக்கல் காத்தல் அழித்தல்  மூன்று தொழில்களையும்  கடவுள்களுக்கே பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இப்பூவுலகில் " ஆவதும் பெண்ணாலே,  அழிவதும் பெண்ணாலே" என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு பெண் நினைத்தால் எதையும் செய்ய முடியும், ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். பெண் என்பவள் நெருப்பு மாதிரி  வீட்டிற்கும் நாட்டிற்கும் விளக்காக வெளிச்சம் தருவதும், இல்லை காட்டுத்தீ போல் எரிவதும் உபயோகிக்கும் முறையில் தான் இருக்கிறது. பெண் என்பவள் ஆணை விட வலிமை பொருந்தியவள் ஒரு பெண்ணின் பலத்தை அவளின் பிரசவத்தில் அறியலாம் ஏனென்றால் உயிரைப் பிடுங்கும் வலியை கூட மெல்லிய தேகம் கொண்ட பெண் கூட தாங்கிக் கொள்வாள் ஆனால் பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கும் ஆண்களால் கூட அந்த வலியை தாங்கிக் கொள்ள முடியாது.உடல் வலிமையில் ஆண்களை விட பெண்கள் பல படிகள் மேல் என்பதில் சந்தேகம் இல்லை.உடல் வலிமையில் மட்டும் இல்லாமல் மன வலிமையிலும் பெண்கள் உயர்ந்தே நிற்கிறார்கள் ஒரு பெண் கருவாகி, உருவாகி,பிறந்த வீட்டில் இருக்கும் சூழ்நிலைகளையும் உறவினர்களையும்  பார்த்து வளர்ந்து பிறகு திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு செல்வது என்பது ஒரு செடி ஒரு மண்ணின்  தன்மையில் செழிப்பாக வளரும்போது 
 அதனை வேறொரு தன்மை கொண்ட மண்ணில் பிடுங்கி வைப்பது போல புகுந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் குணங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு இல்லற வாழ்க்கையை சிறப்பாகவும் பொறுமையாகவும் பிரச்சனையை சமாளித்து வெற்றிகரமாக இயக்குபவர்கள். பெண்கள் சிறந்த தலைமை பண்பு கொண்டவர்கள் வீட்டை ஆள்வதில் மட்டுமில்லை நாட்டை ஆள்வதிலும் பெண்கள் சிறந்தவர்கள் என்று பல்வேறு பெண் தலைவர்கள் நிரூபித்து காட்டி வருகின்றனர். பெண் இன்றி இவ்வுலகில் எதுவும் சாத்தியம் இல்லை தாயாக,தாரமாக,  சகோதரியாக,மகளாக ஒரு ஆணுக்கு இணையாக துணையாக நிற்பவள் பெண். ஆதலால் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் பெண்களை போற்றுவோம்! பெண்மையை போற்றுவோம்!
 அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்...


 - கனிமொழி ஜெகன்,
  சோழிங்கநல்லூர்