சிங்கப் பெண்கள் ...! 010

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

சிங்கப் பெண்கள் ...! 010

பெண்மையை போற்றுவோம்...     சிங்கப்பெண்கள் ..
 முன்னுரை:-
" கருவாய் என சுமந்து உருவாய் வெளிக்கொணர்ந்து திருவாய் என ஆக்கிய அன்பின் வடிவில் தருவாய் உன் ஆசி என்றும் எனக்கே"
 எனக் கூறி இந்த கட்டுரையை என்னை ஈன்ற தாய்க்கு சமர்ப்பிக்கிறேன். 
*பெண்மையை போற்றுவோம்* என்ற தலைப்பில் சிங்கப்பெண்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
*மணி மகுடம் ஆகும் பெண்கள்:- உலகில் வாழும் உயிர்களின் சரிவிகிதமாக இறைவன் பெண் இனத்தை படைத்து தன் பங்கை செவ்வனேதான் செய்துள்ளான். அதிலும் இன்னொரு உயிரை உருவாக்கும் ஆற்றலை கூட பெண்களுக்கு தான் வரமாக கொடுத்துள்ளான். 
நீர் நிலம் என அனைத்தையும் பெண் வடிவிலேயே நாம் பார்க்கின்றோம் அப்பேர்பட்ட பெண்கள் தங்கள் வலிமையை மறந்து வலியை மறைத்து இன்னும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள். 
பேதைப் பெண்கள் ஒன்றும் போதைப் பொருள் அல்ல கோதையரை கொண்டாடி வந்திட பாதையை அவர்கள் பதித்தே நடப்பர், சாதனைகள் பல புரிந்து சாதித்துக் காட்டுவர். உண்மையில் பெண் என்னும் சக்கரம் சுழலாவது போயின் வாழ்க்கை எனும் வண்டி நகராது என்பது திண்ணம். எனவே பெண்மையை போற்றுவோம். 
முகமூடி சூட்டிய பெண்கள் :-
ஆம் நித்தம் பிழிபடும் கரும்பென தனது கனவுகள் விருப்பங்கள் தேவைகள் யாவற்றோடும் அன்றாடம் போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் பூமியில் ஏராளம், இந்த உண்மை அவர்கள் சம்பந்தப்பட்ட எத்தனை ஆண்களுக்கு தெரியும்?
"காகித மலர்கள் அல்ல பெண்கள் கசக்கி எறிந்து விட அவர்கள் சூடிக்கொள்ளும் சுகந்த மலர்கள்" ஆனால் இன்றும் சமூகத்தில் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் எத்தனையோ பெண்கள் கசக்கி தூக்கி வீசப்பட்டு கொண்டிருக்கிறார்கள். வேதகாலங்களில் பெண்கள் தான் யாவையுமாக இருந்தார்கள் தேக பலத்தில் கூட திமிராய் தான் தெரிந்தார்கள். பாரினை ஆளும் சக்தி பெற்றவர்களாக கூட இருந்தார்கள் காலப்போக்கில் அவர்களின் பலம் மறைந்து பலவீனமாக மாறிவிட்டார்கள். 
ஆம் அவர்கள் இல்லம் என்னும் இனிய சிறையில் விரும்பி மாட்டிக்கொள்ளும் விண்ணின் மகள்கள் அவர்கள் தங்கள் திறமைகளை ஆற்றல்களை பற்றி தெரிந்திருந்தும் வெளிப்படுத்தி செயல்படுத்த முடியாமல், மூடி வைத்த முத்தைப்போன்றும் குடத்தில் இட்ட விளக்காயும் இருக்கிறார்கள் அதை மாற்றிக் கொண்டு முட்டி மோதி முளைத்திடும் பேராற்றாக  பெண்கள் வெளிப்பட்டு விடியலை காண விளைய வேண்டும். 
ஆம் ஆயிரம் போராட்டங்களோடு தன் வாழ்க்கை தேரோட்டத்தை சரிவர செலுத்திக் கொண்டிருக்கும் பெண்ணே! தன் கனவு கற்பனைகளை மறைத்து தன் திறமைகளை மறைத்து தன்னை உருக்கி பிறருக்கு வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவர்த்தியின் தியாகம் போன்று விழுந்து மடிவாயா? வேண்டாம், உறங்காதே உயர்ந்திடு சிங்கமென புறப்படு புல்லும் ஆயுதம் ஆகும் தடைகளை தகர்த்து தரணியில் நடையிடு கனவு கண்டே காணாமல் போகாதே, நினைவு தன்னை உழைப்பில் வைத்திடு சோர்வை அகற்று சோர்ந்து போகாதே, பார்வை அதனை பாதையில் வைத்திடு, ஏற்றம் இறக்கம் இரண்டும் இருக்கும் மாற்றம் வேண்டின் மடிமையை அகற்றிடு விட்டில் பூச்சியாய் வீழ்ந்தே மடியாதே விடியல் தந்திடும் சூரியனாய் மாறிடு, வானமும் வழியை அமைத்துக் கொடுக்கும், வருங்காலம் உன்னை வாழ்த்திய வணங்கும். 
முடிவுரை:-
பண்ணிய தவத்தால் பெண்ணாய் பிறந்து புண்ணியம் அடைந்த சிங்க பெண்ணகளே!நாட்டை சீராக்கட்டும் உங்கள் சிறந்த கரங்களே!
வேள்வி தீயில் கருகியது போதும் கேள்விகள் இன்றி வெளி வாருங்கள். பெண்கள் கையில் வருங்காலம் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள்.  
                        நன்றி 
முனைவர் சகுந்தலா ராமலிங்கம்          உடுமலைப்பேட்டை.