மாண்புமிகு மகளிர்...!011

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

மாண்புமிகு மகளிர்...!011


மாண்புமிகு மகளிர்கள்  :

 முன்னுரை : 

 பெண் கல்வி , பெண் விடுதலை , பெண்கள் முன்னேற்றம் இப்படி எல்லாம் பேச முற்படும் போது , பெரியாரையும், பாரதியாரையும் நினைக்காமல் நாம் பேசி  விட முடியாது . 

" அச்சமில்லை அமுங்குவதில்லை நடுங்குவதில்லை நாணுதல் இல்லை 
ஏது நேரினும் இடர்பட மாட்டோம் ; 
அண்டஞ் சிதறினாலும் அஞ்சமாட்டோம் ;
கடல் பொங்கி எழுந்தாலும் 
கலங்க மாட்டோம் ; யாருக்கும்   அஞ்சோம் ; எதற்கும் அஞ்சோம் ; எங்கும் அஞ்சோம் ; எப்பொழுதும் அஞ்சோம் ; 
என்ற
 பாரதியாரின் பாடலை முன் வைத்து என்னுடைய கட்டுரையைத் தொடங்குகிறேன் . 

இந்தக் கட்டுரையை 
உள்ளுக்குள் புழுங்கி புழுங்கி தன்னுடைய திறமையெல்லாம் புதைத்துக் கொண்டு  வெளியே வர முடியாமல் , 
 ஆனால் வரத் துடிக்கும் உலகத்தில் உள்ள அத்தனை மகளிர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்...


கல்விப் போர் : 

ஜான்சிராணி அம்மையார் , வீரமங்கை வேலுநாச்சியார்,  கஸ்தூரிபாய் காந்தி,  நிவேதிதா , மேரி கியூரி இப்படி ஜெயித்த ஒரு 100 பெண்களை என்னால் கை காட்ட முடியும்..
ஆனால் உலகத்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள் .


பெண்கள் விமானம் ஓட்டுகிறார்கள் . 
அது மகிழ்ச்சியடையக் கூடியதுதான் . ஆனாலும்  எங்கோ ஒரு கிராமத்தில் ஏதோ ஒரு சிறுமி விமானத்தை அன்னார்ந்து பார்த்துக்கொண்டு  ஏங்கிக் கொண்டிருக்கிறாளே !  

கல்விக்கூடங்கள் பாலியல் கல்வியை பரப்புரை செய்தாலும் , எங்கோ ஒரு கல்விக்கூடத்தில் ஏதோ ஒரு குழந்தையின் முனகலும்  ,விம்மலும் சத்தமில்லாமல்  கேட்டுக் கொண்டுதானே  இருக்கிறது ! 

நமது பெண் குழந்தைகளுக்கு, அவர்கள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் போது ,  பெற்றோரிடம்  சொல்ல வேண்டும்  என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும் .நாம் அவர்களை ( குழந்தைகளை ) தவறாக நினைக்க மாட்டோம் என்ற எண்ணம் வரும் அளவிற்கு குழந்தைக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும் . 

பெண்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு , கல்லூரி படிப்பை மூன்று ஆண்டுகள் முடித்துவிட்டு பிறகு என்ன செய்கிறார்கள் ?

 திருமணம் முடித்துக் கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாகி கொண்டிருக்கிறார்கள்.

இதுவே போதும் என்ற மனநிலைக்கும் தள்ளப்பட்டு விடுகிறார்கள் .

 இது  சிறந்த முன்னேற்றத்திற்கான  வழி அல்ல.

ஒவ்வொரு பெண்ணும் தான் கற்ற கல்வி இந்த சமுதாயத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என என்ன வேண்டும். ஒரு நாட்டில் ஒரு பெண்,  கல்வி கற்காமல் இருந்தால்  கூட  அந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடையாக அது வந்து நிற்கும் என்பதை ஒவ்வொரு பெண்ணும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் .

 எந்த கோணத்தில் யோசித்தாலும் இது ஆணாதிக்கம் மிகுந்த உலகம் தான் . 

இத்தகைய உலகத்தில் நீ துணிச்சலோடு நிற்க வேண்டுமானால் கல்வி என்ற போரில் களமாடி  வெற்றி வாகை சூடினால் மட்டுமே சாத்தியம் .

மூடக்கட்டுகள் யாவும் தகர்ப்பராம் : 

பெண் தனியாக இரவில் நடந்து  போனால் பேய் பிடித்து விடும் என்று  இன்றும் நமது குடும்பத்தில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்  .
ஆமாம். பெண்ணை உடலாக , சதையாக மட்டும் பார்க்கும் , காம ஆண் பேய் பிடித்து விடும் என்று மறைமுகமாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.
நாம் சிலம்பம்,  கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்பு கலைகளை அறிந்து வைத்திருந்தால்     இரவு 12 மணிக்கு மேல் கூட நிமிர்ந்த நன்னடையுடன், கம்பீரமாக செல்லலாம் .
தோழிகளே !   
ஆறுக்கும் , அறுபதுற்கும் வித்தியாசம் தெரியாத சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . அதனால் தற்காப்புக் கலையை எந்த வயதிலும் கற்றுக் கொள்ளலாம் . 
புரிந்து கொள்வோம் . விழித்துக் கொள்வோம் . 

வீர சுதந்திரம் : 

அரைக்கால் டவுசரும் ,  கையிலாத மேல் சட்டையும் , இறுக்கமான ஆடைகளை  அணிந்து கொள்வதும்தான் சுதந்திரம் என நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்காக ஒரே ஒரு செய்தி தான் .
உடலைக் காட்டுவது சுதந்திரம் அல்ல ,  உடலை மறைப்பது தான் சுதந்திரம் . 
 ஆடையே ஆயுதம் போல் செய்வதுதான்  சுதந்திரம் என்பதை ஒரு நாளும் மறந்து விட வேண்டாம் . நம் சுயமரியாதைக்கு இழுக்கு வரும்படி நடந்து கொள்ளும் எவரையும் நம் பக்கத்தில் வைத்துக்கொள்ளாமல் இருப்பதே நமது சுதந்திரம் .  

பெண் விடுதலை : 

இன்று கிடைத்துவிடும் , நாளை கிடைத்துவிடும் என ஏங்கி ஏங்கியே உயிரைக் கரைத்துக் கொண்டிருக்கிறோம் .
இனி கரைத்துக் கொள்ள வேண்டாம் தோழிகளே ! விடுதலையை நாம் உருவாக்குவோம் .

 பத்தாயிரம் சம்பளம் வாங்கும்  பெண் முதல் ஒரு லட்சம் சம்பளம்  பெறும் பெண்  வரை  90 %  பேர் வீட்டு வேலைகளை அவர்களே  செய்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது . இங்கிருந்து தான் நாம் நம் விடுதலையை தொடங்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

 ஒரு வாரம் நீ பாத்திரங்களை சுத்தப்படுத்து .
ஒரு வாரம் நான் சுத்தப்படுத்துகிறேன்.

 ஒரு வாரம் நீ சமையல் செய். 
 ஒரு வாரம் நான் செய்கிறேன்  என்ற கேள்விகளை எழுப்புவதற்கு எத்தனை பெண்களுக்கு துணிச்சல் இருக்கிறது ?

இப்படியாக வேலைகளை இருவருமாக பகிர்ந்து கொள்ளும் போதுதான்  நமக்கான விடுதலை தொடங்குகிறது .

அந்த வேலை நேரம் நமக்கான ஓய்வு நேரமாகவும் , நமது சிந்தனைக்கான நேரமாகவும் அமையும் பொழுது மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறோம் . இன்னொன்று நமது கோபங்களை குடும்பத்தினரிடம் காட்டாமல் அன்பாக நடந்து கொள்வோம் .
குடும்பமும் நலம் பெறும்.

பெண்களின் சமையலறை : 

கற்கால மனிதன் நெருப்பை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால்,  எங்களுக்கு இப்படி ஒரு  சிறை வாய்த்திருக்கவே வாய்த்திருக்காது . 

என் சிந்தனையையும் என் திறமையையும் பலி கொடுத்தேன் .
அதை சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டு  கம்பீரமாக என்னை பார்த்து எள்ளி  நகையாடுகிறது என் வீட்டு சமையல் கூடம்  . இந்த இடத்தில்  அக்னி   பகவானை நான் சபிக்கிறேன் . பெண்கள்  முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சமையலறையே நீ உலகத்தை விட்டு காணாமல்  போவாயாக  !!!

நாங்கள் பழங்களையும்,  காய்கறிகளையும் மட்டுமே  உண்டு உயிர் வாழ்ந்து கொள்கிறோம் . 

போர் வீரனே ஆனாலும் , புளிக்குழம்பும் புடலங்காய் கூட்டும் சமைப்பது இழிவான செயல் அல்ல என்பதை அவருக்கு  புரிய வைக்க வேண்டும்  . 

எல்லாவற்றையும் சட்டம் இயற்றியே சாதித்து விட முடியாது .
தனிமனித முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாக்க முடியும். வீட்டில் உள்ள ஒவ்வொரு அம்மாக்களும் ,  சகோதரிகளும்,  மனைவிகளும் நினைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும் . சமையல் கூடம் பெண்களுக்கான அறை அல்ல  , ஆண்களும் வீட்டினில்  சமைக்கலாம் 
என நாம் தான் அனைத்து பணிகளிலும் ஆண்களை  இணைத்துக் கொள்ளும் முயற்சியை எடுக்க வேண்டும் . அப்பொழுதுதான் பாலின வேறுபாட்டை நம்மால் 100% நிச்சயமாக களைய முடியும் . 

ஆணும் பெண்ணும் நிகர் என உலகிற்கு உரக்கச் சொல்லுவோம் : 

அழுக்கு வேட்டியும் , கிழிந்த பணியனும் போட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு ஆணை நாம் ஒருமையில் அவ்வளவு எளிதில் பேசிவிட சாத்தியம் இல்லை . ஆனால் எவ்வளவு நேர்த்தியாக உடை அணிந்திருந்தாலும் ஒரு பெண்ணை மிக எளிதாக ஒருமையில் பேசிவிட முடிகிறது  ! 

அரசு அலுவலகங்களில், அரசு மருத்துவமனைகளில், அரசு பேருந்துகளில், பொதுவெளியில் எத்தனை ஒருமை பேச்சுகளைத் தாங்கி அதை எதிர்த்து கேட்க முடியாமல் பெண்கள்  அதனை விழுங்கி சகித்துக்  கொண்டிருக்கிறார்கள்  தெரியுமா ?

எப்படி துணிகிறான் ஒரு ஆண்   , ஒருமையில் ஒரு பெண்ணை பேசுவதற்கு? 
 எங்கிருந்து வந்தது , யார் கொடுத்தது  அவனுக்கு அவ்வளவு தைரியம் ?
ஒரு பெண்ணை ஒருமையில் பேசுகிறவன் ஆண்மையற்றவன் ஆகிறான் . 

எதிர்த்து கேள்வி கேட்கிற பெண்ணை பொசுக்கிவிடும் ஆண்கள் தானே அதிகம் நம்முடனே இருக்கிறார்கள் . 
அவர் சகோதரனாகவும்,  அப்பாவாகவும் ,  கணவனாகவும் இருப்பது தான் வேதனையின் உச்சம் .

ஏன் ,எதற்கு, எப்படி  என்ற கேள்விக் கணைகளைத் தொடுத்து  கொண்டே முன்னேற வேண்டும் .

 எந்த ஒரு விஷயத்தையும் மூன்றாவது கோணத்தில் அணுகும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

 அலுவலகத்தில் வீண் பேச்சுகளில் ஈடுபடாமல் தொழிலின் மீது பற்று கொண்டு  அலுவலகத்தின் முன்னேற்றத்திற்காக ,  உண்மையாகவும் , நேர்மையாகவும் இருக்க நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் . அது அரசு நிறுவனமாக இருந்தாலும் சரி,  தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி , நம் பங்கை திறம்பட செலுத்த வேண்டும் . 
" ஆணும் பெண்ணும் நிகர் என கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம் "  என்ற பாரதியாரின் கூற்றுக்கு இணங்க நாம் செயல்பட வேண்டும் .
ஒரு பெண் என்று கூட பாராமல் இப்படி இவ்வளவு வேலையை தலையில் கட்டுகிறீர்களே ! நான் என்ன செய்வேன் ?என்று புலம்புவதை மட்டும் ஒரு போதும்  செய்து விடாதீர்கள்  ஆண் செய்கிற அத்தனை வேலையும் என்னாலும் செய்ய முடியும் என நம்பிக்கையோடு செய்யுங்கள் . குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி , கண்ணீரை ஆயுதம் ஆக்கி ஒரு போதும் நம் பெண்ணினத்திற்கு அவப்பெயரைத் தேடித் தர முயற்சி செய்யவே செய்யாதீர்கள் . 
அது நம்மை நாமே அவமானப் படுத்தி கொள்வதற்கு சமம் . 

வெற்றிக்கு வயது தடை இல்லை : 

பிரான்சின் ப்ரோஸ் என்கிற ஒரு ஆங்கில எழுத்தாளர்  . 
சாதிக்க துடித்துக் கொண்டிருந்த இவருக்கு திடீரென  திருமணம் ஆகி விட்டது . இரண்டு குழந்தைகளும் பிறந்தது . ஆனாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் அவர் கைவிடாமல் இருந்தார் . 
சாதித்தும் காட்டினார் .

அவரிடத்தில் நீங்கள் எப்படி இரு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் சாதித்தீர்கள் என கேட்டார்கள் . குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு எனக்கு கிடைத்த 7 மணி நேரத்தை நான் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டேன் என்று அந்த எழுத்தாளர் பதிலளிக்கிறார் . மார்ட்டின்  - டென்னிஸ்  வீராங்கனை . இவரின் வயது 40 .
ஆனால் இவருடன் போட்டி போடும் இளம் டென்னிஸ் வீராங்கனைகள் கூட   இவரின் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க  முடியாமல் சற்று தடுமாறித்தான் போய்விடுவார்கள் . 
இவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்கிறார்  எப்படி நாற்பது வயதிலும் இந்த வேகத்தோடு உங்களால் செயல்பட முடிகிறது என்று ? 
மார்ட்டின் கூறிய பதில் என்ன தெரியுமா ?

  " என்னை நோக்கி  வரும் டென்னிஸ் பந்திடம்  நான் என் வயதை குறிப்பிடுவதே இல்லை " என்று கூறுகிறார் . 
நாம் ஏழு மணி நேரம் கிடைத்தால் என்ன செய்கிறோம் என யோசித்துப் பார்க்க வேண்டும் . 
இணையத்தில் மூழ்கியே வாழ்க்கை வீணடித்தவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள் . அப்படியல்லாமல் பள்ளிக்காலத்தில் இருந்த உங்களது திறமைகளை தூசி தட்டி எழுப்பி ,  ஏதாவது உங்களுக்குப் பிடித்ததை  செய்து கொண்டிருங்கள் . உங்களை நீங்களே புதுமைப்பெண்களாய் புதுப்பித்துக் கொண்டே இருங்கள் .

உங்கள் உடலும் ,  மனமும் பொலிவோடு இருக்கும் .

அழகுக்கடலில் மூழ்க வேண்டாம்  : 

நான் பிரதம மந்திரி ஆனால்  , 
முதலில் செய்கிற காரியம் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து அழகு சாதன பொருட்களுக்கும் தடை விதிப்பது தான் .

பொருள்களுக்கே தடை விதித்து விட்டால் விளம்பரங்களுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது ! 
 பெண்களை சமைப்பவளாகவும் ,  துணி துவைப்பவளாகவும் மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும் விளம்பரங்களுக்கு வேலை இல்லாமல்தான்  போய்விடும் !

இறைவன் படைப்பில் ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும் போதே பேரழகிகளாகத்தான் பிறக்கிறார்கள். 
 இந்த உண்மை புரியாதவர்கள் தான் உண்மையை மறைத்து பொய் வேஷம் போடுகிறார்கள் .

இந்த முகமூடி  இனி  நமக்கு வேண்டாம் .  இயற்கையான இறைவன் படைத்த இந்த உடலையும் ,  மனதையும் நேர்த்தியாக , அறிவு சார்ந்து  , நாட்டின் வளர்ச்சி சார்ந்து பெண்கள் முன்னேற்றம் சார்ந்து  செலுத்துங்கள் .

 கட்டுரையின் சாராம்சம் :
 
வீட்டு வேலைகளில் ஆண்களின் பங்கு இருக்க வேண்டும் . இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் கூட கல்வி கற்காமல் இருக்கக் கூடாது .
பெண்களை   மரியாதையாக நடத்த வேண்டும் .
பாலின பாகுபாட்டை பள்ளிகளில் இருந்து தொடங்கி ,  அடிப்படையில் களை எடுக்க வேண்டும் .

 பெண்ணும் ஒரு உயிர் தான் ,   உருவத்தில் வேறுபட்டு இருந்தாலும் ,  உன்னைப் போலவே அவளுக்கும் உணர்வுகள்  ஒன்றுதான் ,  என்று ஆண் பிள்ளைகளுக்கு  கற்றுத் தர வேண்டும் . பெண்களுக்கு எதிரான மூடப்பழக்கங்களை ஒழிக்க வேண்டும் . 

முடிவுரை : 
 
பெண்களுக்கு  எவ்வளவோ சுதந்திரம் இருந்தாலும் , பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் எவ்வளவு வந்தாலும் குற்றங்கள் ஏனோ கூடிக் கொண்டே தான் இருக்கிறது . 
அதை சட்டம் போட்டு தடுத்திட்டாலும் நமக்கான பங்கும் இருக்கிறது . நம் வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு தற்காப்புக்கலையை நிச்சயமாக கற்றுக் கொடுத்து விட வேண்டும் . ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளையும் மதிக்க கற்றுக் கொடுப்போம் . 
ஆண் பிள்ளையை பெற்றவர்கள் சபையில் கம்பீரமாகவும் ,  பெண் பிள்ளையைப் பெற்றவர்கள் ஒருவித குற்ற உணர்வோடு நிற்பது போலத்தான்  நிற்க வேண்டிய  தற்போதைய சூழ்நிலை உள்ளது . நாமும் அந்த குற்ற உணர்விலிருந்து விடுபட வேண்டும் . பெண் பிள்ளையைப் பெற்றவர்களும் கம்பீரமாக நிற்கலாம் என்ற மனநிலைக்கு வர வேண்டும் .

 இந்த சமூகத்தின் பார்வையும் மாற வேண்டும் . 

" மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்  "
நன்றியுடன் 
அம்பை ஆ.சுதா 
ஆய்வக நுட்பனர் .