மகாகவி பாரதியார்..! 076

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

மகாகவி பாரதியார்..! 076

மகாகவி பாரதியார்


பாரதம் என்னும் காட்டில்  பற்றிய அக்கினிக் குஞ்சு/

பாரெங்கும் சுட்டெரித்தது தன் அனல் கவிகளால்/

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொட்டிய முரசவன்/

நாணும் அச்சமும் நாய்களே பூணுமென்ற கவியரசவன்/

ஞான நல்லறம் வீர சுதந்திரம் போன்ற அணிகளைப்/

பூண வேண்டும் நற்குடிப் பெண்கள் என்றான்/

சாதிகள் இல்லையெனச்  சாட்டையைச் சுழற்றி/

 நீதியை நிலை நாட்டிய நிமிர்ந்த நெஞ்சினன்/

நேர்கொண்ட பார்வைகொண்டு உயிர்த்தெழச் செய்தான்/

சீர் கொண்டதை மறந்த சிங்கமறப் பெண்களை/

அவன்பேனா மையைக் கொண்டு வரைந்த காவியங்கள்/

பெண்மையை அழகாகத் தீட்டிய ஓவியங்கள்/

மலையும் ஆறும் நதியும் குயிலும்/

 சிலையும் கலையும் உயிர் பெற்றன அவன் பாக்களால்/

மண்ணில் புதைந்து மக்கிப்போய் இருந்த வீரமும்/

மண்ணைத் துளைத்து முளைக்கத் தொடங்கின/

இந்திய நாடெனும்  எழில்மிகு வேடந்தாங்கலில்/

இளைப்பாற வந்த வெள்ளைப் புறாக்கள்/

இந்தியாவைச் சொந்தம் கொண்டாடிய போது/

இடி முழக்கக் கவியெனும் பெருவெடி வெடித்து/

விரட்டியடித்த வீரன்   எச்சூழ்ச்சியிலும் வீழாவிதையவன்/

காலம் கட்டுண்டு சென்ற கவிகளுக்கெல்லாம் மகாகவியே/

உன் மீசை முறுக்கு எம் தமிழின் செருக்கு/

தேனினும் இனிய தீந்தமிழ் உள்ள மட்டும்/

திக்கெட்டும் பரவட்டும் உன் புகழ் பாரதீ!/

ஆ. பாலம்மாள்

65 A, மேற்கு மாடத் தெரு,

புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி-  635001