நான் வரல...! 008

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதை போட்டி

நான் வரல...! 008

நான் வரல...       - சந்துரு மாணிக்கவாசகம்

வருடத்தின் அத்தனை நாட்களும், கிட்டத்தட்ட இருபது மணிநேரம் பிஸியாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் தொழிலதிபரான ரவீந்தர், பல வருடங்களுக்குப் பின்னர் தனது சொந்த ஊரான, தஞ்சைக்கு அருகிலிருக்கும் வரவுக்கோட்டை கிராமத்திற்கு குடும்பத்துடன் செல்லும் முடிவுக்கு வந்திருந்தார். அவரது மகள் கிருத்திகாவின் தொடர்ச்சியான வற்புறுத்தலே அதற்குக் காரணமாகியிருந்தது. 

ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கிருத்திகா, காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை என ஒவ்வொரு விடுமுறைக்கும் ’அப்பா அப்பா, இப்பவாச்சும் போகலாம்ப்பா’ என்றுவிட்டு ரவீந்தரின் முகத்தை ஏக்கத்தோடு பார்ப்பாள். ’இந்தா போகலாம், அந்தா போகலாம்’ என இழுத்துக் கொண்டே சென்றவர், ஒருவழியாக இந்த பொங்கல் திருநாளுக்கு நேரம் ஒதுக்கியிருந்தார். பொங்கலுக்கு இரு தினங்களுக்கு முன் கிளம்பிச் சென்றுவிட்டு, பொங்கலுக்கு மறுநாள் அங்கிருந்து கிளம்புவதாகத் திட்டம்.

பெங்களூரில் மிக வசதியான பங்களாவுடனும், அனைத்து வேலைகளையும் எந்தக் குறையுமின்றி செய்திட தேவையான அளவு பணியாட்களுடனும் வாழ்ந்து வந்த அவர்கள் பார்க்காத ஊர்கள் இல்லை, நாடுகள் இல்லை. ஆனாலும் கிருத்திகாவிற்கு அந்த வரவுக்கோட்டை கிராமம் கொடுத்த மகிழ்ச்சியையும் பூரிப்பையும் எந்தவொரு சுற்றுலா தலத்தாலும் கொடுக்க இயலவில்லை.

ரவீந்தரின் தாத்தாவும் பாட்டியும் அங்கேயே இருந்திருந்தால் கூட, அதை சாக்காக வைத்து கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பு அமைந்திருக்கும். வயதான பெற்றோரை தங்களுடனே வைத்து பார்த்துக் கொண்டிருந்த காரணத்தால் அதற்கும் வாய்ப்பில்லாமல் போயிருந்தது. 

தங்களது வீட்டையும் கிராமத்தையும் பார்க்க கிருத்திகாவின் தாத்தாவும் பாட்டியும்கூட மிகுந்த ஆவலுடனே காத்திருந்தனர். தனது மகனின் வேலைப்பளுவை கண்கூடாக பார்த்துக் கொண்டிருந்த அவர்களால், கிருத்திகாவைப் போல் கெஞ்சிக் கேட்கவோ கட்டாயப்படுத்தவோ மனமில்லாமலிருந்தது. சிலமுறை திட்டமிட்டு, நாட்களை ஒதுக்கி, கடைசி நேரத்தில் ரவீந்தரின் பணி காரணமாக பயணம் ரத்தாகி போனது. கிருத்திகா மிகுந்த சோகத்திற்குள்ளானாள். ’எப்பதான் போவோமோ’ என்ற ஏக்கம் மேலிட்டிருந்தது.

ஒரு வழியாக இப்பொழுது பயணம் உறுதியானதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள் அவள். பெங்களூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து காரில் செல்வதாகத் திட்டம் உறுதிப்படுத்தப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யத் துவங்கியிருந்தார்கள். கிருத்திகாவிற்கு விமானப் பயணம் என்றைக்குமே பிடித்ததில்லை. ரயில் பயணமே மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது. ஆனாலும் நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை ரவீந்தருக்கு. 

”சீக்கிரம் போனா அந்த ஒரு நாளை ஊர்ல செலவு பண்ணலாம். சீக்கிரம் திரும்பி வர்றதுக்கு வசதியா இருக்கும்” என்றார் ரவீந்தர். ’ஊருக்கு செல்ல முடிவெடுத்ததே போதும். இதற்காக போராடி பிரச்சனையாக வேண்டாம்’ என எண்ணியவள், ரவீந்தரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு தலையாட்டிக்கொண்டாள்.

கிளம்பும் நாளும் வந்தது. 

அன்றைய காலை வேளை. காபியுடன் ரவீந்தரின் அருகில் வந்து நின்றாள் அவரது மனைவி உமா.

”என்னங்க.. கிருத்திகா ஊருக்கு வரலையாம்”.

“என்ன உளர்ற? ஊருக்கு போறதே அவளோட கட்டாயத்துலதானே? அவ வரலன்னா எப்புடி?” 

“நீங்களே என்ன ஏதுன்னு விசாரிங்க. நான் எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டேன். ஏன்னு சொல்ல மாட்டேங்கறா” 

“கிருத்தி எங்க?”

“உம்முனு மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டு அவ ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டா”

ரவீந்தருக்கு குழப்பமும் கோபமும் ஒன்றாக வந்தது. ’இவளுக்காக எப்பேர்ப்பட்ட மீட்டிங்கையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கிளம்பத் திட்டமிட்டிருக்கிறோம், இவள் இப்படிச் செய்கிறாளே?’ 

அவளை அழைத்துச் சென்றிருக்கும் தனது கார் டிரைவரின் எண்ணுக்கு ஃபோன் செய்து கிருத்திகாவை உடனே அழைத்து வரச் சொன்னார். 

உமா சொன்னதுபோல் உம்மென்ற முகத்துடனே மெதுவாக இறங்கி வீட்டினுள் வந்தாள் கிருத்திகா. 

“கிருத்தி.. என்னாச்சு? ஏன் ஊருக்கு வரலன்னு சொன்னே?”

அமைதியாக குனிந்தே நின்றிருந்தாள் கிருத்திகா.

“கிருத்தி.. உன்னைதான் கேக்கறேன். எவ்வளவு முக்கியமான வேலையையெல்லாம் விட்டுட்டு இந்த பிளான் பண்ணியிருக்கேன்னு தெரியுமா இல்லியாஉனக்கு? இன்னைக்கி நைட்டு எட்டு மணிக்கு ஃப்ளைட். கடைசி நேரத்துல எதுக்கு இப்புடி ஒரு முடிவு எடுத்துருக்கே?”

“இல்லப்பா. உங்க வேலை எதையும் நிறுத்த வேணாம். அதையே பாருங்க. நான் அங்க போறதைவிட இங்க இருந்தாலே சந்தோஷமா இருப்பேன்”

“கிருத்தி, தயவுசெஞ்சு கொஞ்சம் புரியறமாதிரி பேசறியா? என்னதான் பிரச்சனை உனக்கு?”

அமைதியை கலைத்தாள் கிருத்திகா.

“நான் ஊருக்கு போகணும்னு நினைச்சதே, அந்த வீட்ல தாத்தா பாட்டியோட போயி நேரத்தை செலவு பண்ணனும், அவங்களும் அங்க சந்தோஷமா இருக்கணும்னுதான். ஆனா, இன்னைக்கி காலையிலதான் அம்மா சொல்றாங்க, தாத்தாவும் பாட்டியும் வரல, அவங்க இங்கதான் இருக்கப் போறாங்கன்னு. அதான்.. அவங்களோட இங்கேயே இருந்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்”

“கிருத்தி, உண்மையிலேயே புரிஞ்சு பேசறியா, புரியாம பேசறியா நீ? அவங்க ரெண்டு பேரும் முடியாதவங்க. எதுக்கு தேவையில்லாம அவங்களை டார்ச்சர் பண்ணி வண்டியில ஏத்தி எறக்கிகிட்டு இருக்கணும்? இங்க அவங்களுக்குன்னு வேலைக்காரங்க இருக்காங்க, பத்திரமா பாத்துக்கப் போறாங்க”

“டார்ச்சரா? எதுப்பா டார்ச்சர்? அவங்களோட சொந்த ஊருக்கு போறது அவங்களுக்கு டார்ச்சரா? அதுவும் பொங்கல் அன்னைக்கி இப்புடி பெங்களூர்ல வீட்டுக்குள்ள உக்காந்துருக்கறதுதான் சந்தோஷமா இருக்குமா அவங்களுக்கு?”

மகளின் கேள்வி சுருக்கென்றது அவருக்கு.

“அவங்க ரெண்டு பேர்கிட்டேயும் சொன்னா வர்றேன்னு சொல்லுவாங்கன்னு, எங்கேயோ டூர் போறோம்னு பொய் சொல்லியிருக்கீங்க நீங்க. ஏம்ப்பா இப்புடி?”

அமைதியாகக் குனிந்துகொண்டார் ரவீந்தர்.

“அவங்க ரெண்டு பேரும் இல்லாம நான் எதுக்கு அந்த ஊருக்கு வரணும்? நீங்க ரெண்டு பேர் மட்டும் போயி, வீடு தோட்டமெல்லாம் பத்திரமா இருக்குதான்னு பாத்துட்டு வாங்க”

சத்தமாக சொல்லிவிட்டு, அழுதபடியே அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள் கிருத்திகா.

மனம் வேதனைப்பட்டது ரவீந்தருக்கு. ’சிறு குழந்தைதான் அவள். ஆனால், அவளது வார்த்தைகளில் எத்தனை உணர்வு மிகுந்த வேதனை? நமது தாய் தந்தை குறித்து நாம் யோசிக்காததையெல்லாம் அவள் யோசித்திருக்கிறாளே? அவர்களது உணர்வுப்பூர்வமான வீட்டில் நாம் மட்டும் தனித்து சந்தோஷமாய் விழாவைக் கொண்டாடுவது எப்படி சாத்தியமாகும்? அந்த பொங்கல் எப்படி இனிக்கும்?’. ரவீந்தருக்கு கண் கலங்கியது.

அரைமணி நேரம் கழித்து, அவளது அறையின் கதவைத் தட்டினார் ரவீந்தர். கதவைத் திறந்துவிட்டு, மீண்டும் படுக்கைக்கே சென்று சுருண்டு படுத்துக் கொண்டாள் கிருத்திகா.

”கிருத்தி.. நீ இல்லாம நாங்க மட்டும் எப்புடி போறது? அதனால..”

படுத்துக்கொண்டே அமைதியாய் தந்தையைப் பார்த்தாள்.

“தாத்தா பாட்டியையும் அழைச்சுட்டே போறோம்”

எங்கிருந்து அப்படியொரு உற்சாகம் வந்ததோ தெரியாது கிருத்திகாவிற்கு. படுக்கையில் துள்ளிக் குதித்தாள்.

”நிஜமாவா?”

”ஆமா.. ஃப்ளைட்டை கேன்சல் பண்ணிட்டு ட்ரெய்ன் புக் பண்ணச் சொல்லிட்டேன். வீட்லேயே இட்லி சுட்டு, மேல பொடியை தடவி பார்சல் பண்ணிகிட்டு கிளம்பறோம். ட்ரெய்ன்லேயே சாப்பிடறோம். இன்னும் ரெண்டு நாள் அதிகமா ஊர்ல இருந்துட்டுதான் திரும்பப் போறோம்”

அவளுக்குப் பிடித்த அத்தனையையும் ரவீந்தர் அடுக்கிக் கொண்டே செல்ல, மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுகொண்டிருந்தாள் கிருத்திகா. அந்த மகிழ்ச்சியை வேறெந்த வழியிலும் வெளிப்படுத்தத் தெரியாமல், தொடர்ந்து குதித்துக் கொண்டேயிருந்தவளை பூரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் ரவீந்தர். 

- சந்துரு மாணிக்கவாசகம்,

இரண்டாவது தளம், சாய் நிகேதன் அபார்ட்மெண்ட்,

212/1-B, மேல்மாநகர் மெயின் ரோடு,

மாங்காடு, சென்னை – 600122.