ஏன்..? எதற்கு ..?இன்சூரன்ஸ்..?பகுதி 29

இன்சூரன்ஸ் கட்டுரை

ஏன்..? எதற்கு ..?இன்சூரன்ஸ்..?பகுதி 29

ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ?

பகுதி-29

ஒரு தேசத்தில் விசித்திரமான பழக்கம் ஒன்று இருந்தது.

அதாவது அந்த தேசத்தின் அரியணைக்கு யார் வேண்டுமானாலும் அரசனாக வரலாம், அப்படி வரக்கூடியவர்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இருந்தது. 

அதாவது அரசனாக அரியணை ஏறுகிறவன், ஐந்து வருடங்கள் மட்டுமே அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்திட முடியும். 

ஐந்து வருடங்கள் முடிந்தவுடன் அந்த அரசனை தேசத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு அடர்ந்த காட்டிற்குள் கொண்டு போய் விட்டு விடுவார்கள். 

இதுதான் அந்த அரியணையின் நிபந்தனை. 

 

அந்த காட்டைப் பற்றி மக்களிடையே பல்வேறு விதமான வதந்திகள் உலவின, 

'அங்கே நரமாமிசம் சாப்பிடும் மனிதர்கள் இருக்கிறார்கள், யாராவது அந்த காட்டிற்குள் சென்றால் அடித்து கொன்று தின்று விடுவார்கள்' என்றும், 

'இல்லை அங்கே கொடிய மிருகங்கள் நிறைய வாழ்கின்றன, யாராவது அந்த காட்டிற்குள் சென்றால், அந்த மிருகங்கள் அவர்களை வேட்டையாடி தின்றுவிடும்' என்றும், 

இல்லை, இல்லை அங்கே உணவு, தண்ணீர் என்று எதுவுமே கிடைக்காது, 

யாராவது அந்த காட்டிற்குள் போய் மாட்டிக்கொண்டால், பசியாலும், தாகத்தாலும் பரிதவித்தே இறந்து போவார்கள்' என்றும், இப்படி பல்வேறுவிதமான வதந்திகள் அந்தக் காட்டை பற்றி உலவியதால், 

அதற்கு பயந்து கொண்டே அந்த அரியணையில் அரசனாக அமர்வதற்கு யாரும் விரும்புவதில்லை. 

பெரும்பாலும் அந்த அரியணை அரசன் இல்லாமல் காலியாகத்தான் இருக்கும்.

ஆனாலும் தைரியமாக ஒருவன் வந்தான். அரியணையில் அரசனாக அமர்ந்து வெற்றிகரமாக ஐந்து வருடங்களை நிறைவுவும் செய்தான். அவன் அரியணை துறந்து காட்டிற்கு போகும் அந்த நாளும் வந்தது. 

மக்களுக்கோ தாங்க முடியாத துயரம்,

ஏனென்றால்... இதற்கு முன்பு அறியணைக்கு ஆசைப்பட்டு வந்து அமர்ந்த அத்தனை அரசர்களும், 

ஐந்து வருடங்கள் தானே உயிர் வாழப் போகிறோம், அதுவரையிலாவது சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு போய்விடலாமே என்று, தங்களது சுகபோகங்களை மட்டுமே பார்த்துக்கொண்டார்களே தவிர, 

நாட்டிற்காக யாரும் எதையும் செய்ததில்லை. 

ஆனால் இந்த அரசனோ, அரியணை ஏறிய முதல் நாளிலிருந்து அயராது நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டான். மக்களுக்கு தேவையான அத்தனை தேவைகளையும், நல திட்டங்களையும், ஒரு குறையும் இல்லாமல் செய்து முடித்தான். இப்படிப்பட்ட ஒரு அரசனை இழக்கப்போகிறோமே என்ற வருத்தத்தை விட, இப்படிப்பட்ட ஒரு நல்ல அரசன் அந்த காட்டிற்குள் போய் உயிரை விட போகிறானே, என்ற துக்கம் தான் மக்களுக்கு மிகபெரிய வேதனையை தந்தது. 

ஆனால் மன்னன் மிகவும் சந்தோசமாகவே இருந்தான். 

மன்னனின் பதற்றமில்லாத அந்த சந்தோஷ மனோநிலை, அவனை அழைத்துச் சென்று காட்டிற்குள் விடுவதற்காக படகுடன் தயாராக இருந்த அந்த படகோட்டிக்கு மிகப்பெரிய வியப்பை தந்தது. 

ஒரு வழியாக மன்னன் மக்களிடம் பிரியா விடை பெற்று படகோட்டியுடன் காட்டிற்கு பயணப்பட்டான். 

படகில் அவன் அமர்ந்திருந்த விதமே அரியணையில் அமர்ந்திருப்பதைப் போல கம்பீரமாக இருந்தது.

அவனின் சந்தோச மனோநிலையும், எதையோ சாதித்துவிட்டதாய் அவன் முகத்தில் காணப்பட்ட திருப்தியும்,   

இப்படி மன்னனின் ஒவ்வொரு நடவடிக்கையும், அந்த படகோட்டிக்கு தாங்கமுடியாத வியப்பை தந்தது. 

ஆர்வம் தாங்க முடியாமல் ஒருவழியாக மன்னனிடம் கேட்டே விட்டான். 

"மன்னா நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா"?  

மன்னன் கம்பீர தோரணையில் ," என்ன கேட்கவேண்டும் கேள்" என்றான்.  

"மன்னா நான் இதற்கு முன்பு இதேபோல சில அரசர்களை எனது படகில் ஏற்றிகொண்டு, தேசத்திற்கு அந்தப் பக்கம் இருக்கும் காட்டிற்குள் கொண்டுபோய் இறக்கிவிட்டிருக்கிறேன். அப்படி என்னோடு படகில் வந்த மன்னர்கள் அத்தனைபேரும் சாகப் போகிறோமே, என்ற பயத்தில் அழுது புலம்பி மூர்ச்சையாகி விழுந்ததையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்களோ எந்தவித பயமோ, பதட்டமோ இல்லாமல் இத்தனை மகிழ்ச்சியாக, இத்தனை கம்பீரமாக இருக்கிறீர்களே, இது எப்படி சாத்தியம்"? - என்று கேட்டான். 

அதற்கு அரசன் கம்பீரமாக சிரித்துவிட்டு பதிலளித்தான். "படகோட்டி.. சாகப்போகும் ஒருவன் எப்படி இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறான் எனும் உனது வியப்பு எனக்கு புரிகிறது.

காரணம் சொல்கிறேன் கேள்,  

நான் எப்பொழுது இந்த அரியணையில் அமர்ந்தேனோ, அப்போதே எனக்குத் தெரியும், ஐந்து வருடங்கள் கழித்து இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில் வரும் என்பது. 

அதனால் எனது அதிகாரத்தை பயன்படுத்தி சில முன்னேற்பாடுகளை செய்தேன். 

முதலில் என்னுடைய படைகளை அந்த காட்டிற்குள் அனுப்பி, அங்கு கொடிய மிருகங்கள் ஏதாவது இருந்தால் அவை அனைத்தையும் கொன்று விடுமாறு கட்டளை பிறப்பித்தேன். 

அதன் பிறகு விவசாய குடிகளை அங்கே அனுப்பி, அந்தக் காட்டை பயிர் செய்வதற்கு ஏற்றவாறு தயார்படுத்தி, 

விவசாய தொழிலை மேற்கொள்ள சொன்னேன். 

அதன் பிறகு தச்சர்களையும், அங்கே அனுப்பி, அங்கே கட்டிடங்களையும், வீடுகளையும், மிகப்பெரிய அரண்மனை ஒன்றையும் கட்டச் சொன்னேன். இப்பொழுது அங்கே ஒரு பெரிய நகரமும், ஒரு அரண்மனையும், அதில் ஓர் அரியணையும், எனக்காக காத்திருக்கிறது. 

நான் இப்போது காட்டிற்கு போகவில்லை, 

எனது நாட்டிற்கு ஒரு அரசனாக போகிறேன் என்றான் கம்பீரமாக. 

நண்பர்களே... 

இது ஒரு மன்னனின் கதை அல்ல, 

இது ஒவ்வொரு மனிதனின் கதையாகும். 

இந்த கதையில் வரும் அந்த தேசத்தின் அரியணை என்பது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை குறிப்பதாகும். 

ஐந்து வருட அதிகாரம் என்பது உங்களுடைய வருமானத்தை குறிப்பதாகும். 

அரியணையும், அதிகாரமும், இருக்கும்போதே உங்கள் எதிர்காலத்தை நீங்கள் திட்டமிடவில்லை என்றால்... 

அதாவது உங்கள் வேலையும், வருமானமும் இருக்கும்போதே உங்கள் எதிர்காலத்திற்கு நீங்கள் திட்டமிடவில்லை என்றால்.. 

ஐந்து வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் அந்த காடு. 

அதாவது உங்களது பணி ஒய்வுக்கு பிறகு வரும் அந்த வாழ்க்கை, உங்களை எப்படி பழிவாங்கும் என்பது உங்களால் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கும். 

இதில் தேசம் என்று நாம் சொல்வது உங்கள் வீட்டை குறிப்பதாகும்.  

தேசத்தின் மக்கள் என்று நாம் சொல்வது உங்கள் பிள்ளைகளை குறிப்பதாகும். 

உங்கள் எதிர்காலத்துக்காக நீங்கள் திட்டமிடும் அதே வேளையில், உங்கள் வீட்டையும் பராமரித்து, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் வளப்படுத்தும் பணியையும் செய்தாக வேண்டும்.

கால் காசாக இருந்தாலும், அதை கவர்மெண்ட் சம்பளமாக வாங்கவேண்டும் என்று சொல்லி கேட்டிருப்போம்.

அதன் பொருள் என்னவென்றால், 

பணி காலம் முழுவதும் ஊதியத்திற்கான உத்திரவாதமும்,

பணி காலத்திற்கு பிறகு, அவர் வாழும் வரையில் முழு வாழ்க்கைக்கான ஓய்வூதிய உத்திரவாதமும் அதில் கிடைக்கிறது.

அவருக்கு பிறகு, அவரை நம்பியிருந்த அவரின் இல்லற துணைக்கும், அவரின் வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும் உத்திரவாதமும் அதில் கிடைக்கிறது.

இப்போது அரசாங்க பென்சன் வாங்குபவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்,

அவர்கள் பணியில் இருந்தபோது கடைசியாக வாங்கிய சம்பளத்தைவிட, தற்போது பென்சன் அதிகமாக வாங்கிக்கொண்டிருப்பார்கள்.

அரசாங்க பணியில் ஒருவர் தனது முதல் மாத சம்பளத்தை வாங்கும்போது, அதில் அவரின் முதல் செலவே அவரின் ஓய்வு காலத்திற்கான சேமிப்பாக பிடித்தம் செய்யப்படுகிறது.

அதனுடன் அரசாங்கமும் தன் பங்கிற்கு ஒரு தொகையை சேர்த்து முதலீடு செய்து பெருக்கி அதன் மூலம் அவருக்கு உத்திரவாதமான பென்சனாக அளிக்கிறது.

அதனை அரசாங்கமே கொள்கை ரீதியாக செயல்படுத்துகிறது. காரணம் என்னவென்றால், ஒருவர் தன் பணி காலம் முழுவதும், ராஜா மாதிரியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, பணி காலத்திற்கு பிறகு அவர் அடுத்தவரை நம்பி இருக்கவேண்டிய ஆண்டியாக போய் விடக்கூடாது என்பதற்காகத்தான்.

இந்த திட்டத்தை, அரசாங்க சட்ட திட்டங்களுக்குள் வரும் சில தனியார் நிறுவனங்களிலும், 'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம்' எனும் பெயரில் சிறிய அளவில் செயல்படுத்தினாலும், பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு, அதனை கொள்கை ரீதியாக செயல்படுத்தும் சாத்தியம் இருப்பதில்லை.

அரசாங்க கொள்கை ரீதியாகவும், சட்டங்கள் ரீதியாகவும், செயல்படுத்தப்படும் ஒரு விசயம், தனி மனித விருப்பத்திற்கு விடப்படும்போது, அது செயலற்றுப்போகிறது.

அது எதிர்கால வாழ்தல் சம்மந்தமான பிரச்சினையாக இருக்கும் பட்சத்தில், அதில் சம்மந்தப்பட்ட மனிதர்களுக்கு நீண்ட கால துயரமாக முடிகிறது.

தொடரும்...

 

கூ, சுரேஷ்வரன்

       9787323994