பெண்மையை போற்றுவோம்..! 013

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்மையை போற்றுவோம்..! 013

பெண்மையை போற்றுவோம்! தேசத்தை காப்போம்!

முன்னுரை, 
பெண்கள் அடைபட்டு இருந்த நிலை,
பெண் கல்வியின் அவசியம்,
பெண் கல்வியின் பயன்கள்,
முடிவுரை.

முன்னுரை: 
     "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் மகளிராய் பிறத்தல் பேரரிது" என நம்பி இங்கே பல கோடி மகளிர்கள் வாழ்ந்து வருகிகின்றோம். பெண் என்பவள் ஓர் மகிழ்ச்சியின் பொக்கிஷம். உழைப்பின் உதாரணம். சங்க காலம் முதல் இக்காலம் வரை பல தடைகள் தாண்டி பெண்கள்  சாதனைகளை புரிந்து வருகின்றார்கள். குழந்தையாக, குமரியாக, மனைவியாக, தாயாக தங்களது ஒவ்வொரு நிலையிலும் பல கடமைகளை செய்து வருகின்றனர். இப்படி பல பெருமைகளை இப்பூவில் கொண்ட ஓர் இனம் பெண்கள் மட்டுமே. 
      "மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் " என்று கூறிய தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் வாக்குப்படி மாதவம் புரிந்த மங்கையராய் எங்களின் பெருமைகளை இக்கட்டுரை வாயிலாக எடுத்துரைக்க வந்து இருக்கிறேன்.
பெண்கள் அடைபட்டு இருந்த நிலை: 
சங்க காலத்தில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த பெண்கள் காலங்கள் செல்ல , செல்ல சில மத கோட்பாடுகளாலும், சடங்குகளாலும் பல நிலைகளில் அடக்கப்பட்டனர். உதாரணமாக ஆரம்ப காலத்தில் குழந்தைகளாக இருக்கும் போதே உலகம் என்றால் என்ன என்று அர்த்தம் தெரியாத நிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்டு தங்களின் எதிர்காலக்கனவுகளை தொலைத்து அடிமை வாழ்க்கை வாழ்ந்தனர். உடன்கட்டை ஏறுதல் என்ற ஓர் கொடுமையான பழக்கம் இருந்தது. 
கணவன் இறந்தவுடன் பெண்கள் அவர்களுடனே சேர்ந்து உடன் கட்டையில் எறிக்கப்பட்டார்கள். மறுமணம் மறுக்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று வீட்டிற்குள்ளேயே பெண்களை பூட்டி வைத்தனர். இந்த அடிமை நிலை மாற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.


பெண் கல்வியின் அவசியம்:
     கற்க கசடற கற்பவை கற்றபின்  
             நிற்க அதற்குத் தக,
                    என்று கல்வியின் அவசியத்தை அன்றே வள்ளுவர் கூறி உள்ளார். கல்வி என்பது பெண்களுக்கு இரு கண்கள் போன்றவை. கண்கள் இன்றி ஒரு மனிதன் வாழ்வது எவ்வளவு சிரமமோ அது போன்று தான் கல்வியறிவு இல்லாமல் ஓர் பெண் வாழ்வது.
கல்வி என்பது ஒரு பெண் தன்நம்பிக்கையுடனும், பகுத்தறிவுடனும், சுயமரியாதையுடனும், கம்பீரமாகவும் வாழ கல்வியறிவு அவசியம். பெண் கல்வி நாட்டிற்கு மிகவும் அவசியம். வீட்டில் உள்ளவர்கள் கல்வியறிவு பெற வேண்டும் எனில் பெண் கல்வி அவசியம். சமுதாயம் முன்னேற்றம் அடைய வேண்டும் எனில் பெண் கல்வி அவசியம். ஆகவே இந்த நாட்டின் தூண்களாக விளங்கும் பெண்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக கல்வி கற்றிட வேண்டும்
பெண் கல்வியின் பயன்கள்:
 ஒரு பெண் கல்வி கற்றதனால் முதல் படியாக அவளின் வாழ்க்கை நிலை மேம்பாடு அடைகின்றது. இரண்டாவதாக அந்த பெண்ணைச் சார்ந்த அவளின் குடும்பம் மேம்பாடு அடைகின்றது. குடும்பத்தை அடிப்படையாக கொண்ட சமுதாயம் ஓங்கி நிற்கின்றது. இவ்வாறாக நமது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பெண் கல்வி என்பது ஓர் இன்றியமையாத செயல் ஆகும்.பெண் கல்வி பெற்றதால், இன்றைய உலகில் அனைத்து துறைகளிலும் கால் தடம் பதித்து உள்ளனர்.விளையாட்டுத்துறையில் பி.வி.சிந்து, விண்வெளித்துறையில் கல்பனா சாவ்லா  போன்றவர்கள் முத்திரை பதித்து உள்ளனர்.
ஜான்சிராணி, வேலுநாச்சியார், இந்திராகாந்தி, ஜெயலலிதா போன்ற பெண் தலைவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்து உள்ளனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லாத் துறைகளிலும் சாதனை படைத்தது வருகின்றனர்.  
    “வெற்றுக் காகிதம் என்று எண்ணி விடாதே, உயரே பறந்தால் காகிதமும் பட்டமாகும்” என்பதைப் போல பெண்கள் தங்கள் வாழ்வில் உயர்ந்து வந்துள்ளோம்.
முடிவுரை
பெண்களின் அகராதியில் இல்லாத ஓர் வார்த்தை "முடியாது "என்ற சொல் மட்டுமே.  முடியாது என்பது முட்டாள்களுக்கு சொந்தமான வார்த்தை. ஆனால் பெண் என்பவளோ புன்னகையின் பூவாய், தன்னம்பிக்கையின் விதையாய் விடாமுயற்சியோடு செயல்படுபவள். “மாதர் தம்மை இழிவு செய்யும் எந்த ஒரு அமைப்பையும், நபரையும் கொளுத்துவோம்”என்று பாரதி முழங்கியது போல பெண்ணின் பெருமைகளை உணர்ந்து உங்கள் வீட்டில் படிக்கும் வயதில் உள்ள பெண்களை படிக்கச் செய்து நாட்டை உயர்த்துங்கள். பெண்களை தெய்வமாக போற்றவில்லை என்றாலும் சக மனிதனாக மதிப்போம். பெண்மையை போற்றுவோம்! தேசத்தை காப்போம்!

- அ. சியாமளா செல்வின்,

அன்பின் நகரம்.