பெண்மையை போற்றுவோம்...! 015

புதுமைப் பெண் விருது கட்டுரைப் 3

பெண்மையை போற்றுவோம்...! 015

"மகிழ்ச்சி FM புதுமைப் பெண் விருதுக்கான மகளிர் தின கட்டுரை போட்டிக்கான கட்டுரை ...

" பெண்மையை போற்றுவோம்"...

"எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்" எனும் மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, இன்று எல்லாத் துறையிலும் புதுமை படைத்து பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். பெண்களை ஏறக்குறைய அடிமைகளை போன்று நடத்திய காலத்தில் மகாகவி பாரதியார் பெண்மையை போற்றுவதை தன் மனைவியிடமிருந்தே தொடங்கினார்.

"செல்லம்மா எனக்கு சமமாக பக்கத்தில் அமர்ந்து கொள்... உடலமைப்பில் மாறுபட்டாலும் ஆணையும் பெண்ணையும் சமமாகவே இறைசக்தி படைத்துள்ளது. எண்ணமும் உணர்வுகளும் ஒன்றே ஆகும்" எனப் பேசி அக்ரஹாரத்திலேயே அதிசயத்தை துவங்கினார். அவர் விதைத்த விதை விருட்சமாய் வளர்ந்து இன்று பெண்கள் ஆண்களுக்கு இணையாகவும், பல துறைகளிலும் அவர்களையும் தாண்டி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்."

பண்டைய காலத்தில் தாயே குடும்பத்தின் தலைவியாக, குழுக்  கூட்டத்தின் தலைவியாகஇருந்த  காலத்தில் பெண்கள் மாபெரும் யுத்தங்களை சந்தித்ததை, போரிட்டதை வென்றதை வரலாறு அழுத்தமாக கூறுகிறது.... எல்லையற்ற சக்தியும் வானத்தை இடிக்கும் வலிமையுமாக அவர்கள் இருந்திருக்கிறார்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும்.

அப்படி ஒருகாலத்தில் உயர்வாக இருந்த பெண் பின்நாட்களில் உயர்விழந்து, சமத்துவம் இழந்து பெண் கருவை அழிப்பது என்ற நிலை அதிகரித்து பெருமளவு மதிப்பும் இழந்திருக்கிறாள்.... ஆண் உயந்தவன் பெண் தாழ்ந்தவள் என்கிற கருத்து பல நூற்றாண்டு வரையிலும் தொடர்ந்தது . 
அவளை அடிமைப்படுத்தியதில் மதமும் புராணமும்
 கோட்பாடுகளும் பெரும் பங்கு வகித்தன....இது நடந்தது ஓரிரவில் அல்ல... இன்று நேற்றல்ல... பல நூறு வருடங்கள் படிப்படியாக நடந்தது... ஒருபுறம் புறச்சூழல்  மறுபுறம் புனைக்கதைகளும் அவளை அடிமைப்படுத்தின... அது இன்று வரை வெவ்வேறு வடிவத்தில் தொடர்கிறது என்பது தான் வரலாறு...பெண்கள் மீது வழிவழியாக திணிக்கப்படும் மதச்சடங்குகள் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடுத்துபவர்களாகவும் சமூகம் பெண்களை  கட்டமைத்து வைத்திருக்கிறது....

வெளியுலகம் என்பது இன்றளவும் ஆண்களுக்கானது தான்... வீட்டிலிருந்து அலுவலகம் சென்றுவர மட்டுமே அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது..... இருக்கிற இடம் தெரியாமல் இருந்து வரவேண்டும் என்றுதான் அவளுக்கு போதிக்கபட்டிருக்கிறது....

பெண் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் இன்ன காரியங்களை தான் செய்ய வேண்டும் என்பதை எழுதாத சட்டமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள்....
எந்த பெண் இவற்றையெல்லாம் எதிர்க்கிறாளோ அப்போதே அவள் சமூகதின் பார்வையில் எதிரியாகி விடுகிறாள்....


தற்போது பாரதி கண்ட புதுமைப்பெண்களாய்  தனக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி கொண்டு " நாங்கள் எவ்வகையிலும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல " என்பதை நிரூபிக்கும் வகையில் "மண் முதல் விண் வரை " சமூகத்தின் எத்துறையை எடுத்துக்கொண்டாலும் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனும் அளவிற்கு ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளதை காணலாம்...

அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை எனும் கொடிய அவலநிலை இன்னும் உலகில் நீங்கியபாடாக இல்லை... படிக்கின்ற இடங்கள், பணிபுரிகின்ற இடங்கள், பொதுஇடங்கள் வீடுகளிலும் கூட பெண்களுக்கு எதிரான வன்முறை ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன....
உடல் ரீதியாகவும், மன அளவிலும் ஆண்களிலிருந்து பெண் வேறுபட்டே காணப்படுகிறாள். சிந்தித்து செயல்படுதல், சகித்துப் பணியாற்றுதல், ஒருமுகப் படுத்தும் திறன் போன்றவற்றில் பெண்ணுக்கு சிறப்பான இடமுண்டு. ஆண் மையப் பார்வையிலிருந்து விலகி, தனக்கான உலகைச் சுயப்பார்வையோடு அணுகும் பெண்கள், தங்களுக்கான சமத்துவத்தை புதிய தேடல்களோடு அமைத்துக் கொள்கின்றனர். 

குவிந்து கிடக்கும் குமுறல்களுக்கு நடுவில் தினம் ஒரு பெண்ணின் ஒலத்தோடு சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களும் ஏற்பாடுகளும்  வருடாவருடம் நடந்துகொண்டும் தொடர்ந்துகொண்டிருக்க முன்னேற்ற பாதையில் தங்களை அம்புகளைப் போல செலுத்தி கொண்டிருக்கும் பெண்களின் முதுகின் கனம் இன்னும் கூட்டிப்போய்தான் இருக்கிறது இந்த நூற்றாண்டிலும்.....

ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் நிறைவு கொள்ளும் அரசியலை போல, ஒற்றை கருணையில் வயிறு நிரம்பும் பறவை போல சிலரின் உயரங்கள் மட்டும் ஒட்டுமொத்த பெண்ணை சிகரம் ஏற்றிவிடுவதில்லை.

கடலின் உப்பெனவும், காற்றின் இசையெனைவும் ஆனவள் பெண். குடும்பம் தழைக்க அன்பின் உரமிடுபவளும் பெண். தன்னை உருக்கி, சிறுமைப்படுத்தி, வலிகளை ஏற்று, முற்றிலுமாய் தான் சார்ந்த குடும்பத்தினை வளப்படுத்த தன்னுள் பெரும் ஏற்றவளாகவே காணப்படுகிறாள். தன் சந்தேகங்களை அடக்கி தன்னை சுற்றி இருப்போர் வாழ்ந்திருக்கவே விரும்புகிறாள் பெண்.

பெண்ணும், குடும்பம், சமூகம், பணி என்று இயங்கினாலும் அவள் தன் மீதான வன்முறையை எதிர்கொண்டபடி இருக்கிறாள் என்பதும் ஏற்கவேண்டும் என்பதும் உண்மை.

பல்துறையில் பெண்கள் தங்கள் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வண்ணம் உள்ளனர். வீட்டில் இருந்தபடியும் அவர்களுக்கான உலகைப் படைத்தும், அதன் வழியாக தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டமைக்கும் ஒவ்வொரு தாயும் பெண் சமத்துவத்தின்  ஓட்டத்தில் தங்களை இணைக்கத் துடிக்கும் பெருநதிகளே....

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார சுதந்திரம் போன்றவற்றோடு இணைந்து குடும்ப வன்முறை, பாலியல் ரீதியான ஒடுக்குமுறைகளிலிருந்தும் பெண்ணைக் காக்க வேண்டியது இன்றைய சூழலின் தேவை....
பெண்களுக்கான முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் வள வாய்ப்புகளை வழங்கி பாதுகாப்பையும் பேணிக்காப்பது ஒரு முற்போக்கான சமூகத்தின், நாட்டின் கடமையும் கூட...

"பெண்ணின் பெருமையே
மண்ணின் பெருமை"
ஆகவே பெண்ணின் பெருமையை கண்ணென போற்றுவோம்...!!!

முனைவர் அனிதா சந்திரசேகர்
பரமக்குடி.