புதுமைப்பெண்..! 016

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

புதுமைப்பெண்..! 016

புதுமைப்பெண்கள்

குறிப்பு சட்டகம்   
     
1. முன்னுரை 
2. நாகரீகப் பெண்கள்  
3. பெண் முன்னேற்றம்
4. நேர்கொண்ட பார்வை 
5. எது பெண் சுதந்திரம்
6. புதுமைப் பெண்களின் மகளிர் தினம் 
7. கிராமப்புற பெண்களின் வளர்ச்சி
8. முடிவுரை

முன்னுரை:
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்" என்னும் பாரதியின் வரிகளுக்கேற்ப ஆணாதிக்க சமூகத்தில் முடங்கிக் கிடந்த பெண்களை முன்னேற்ற பாதையில் செல்ல முனைப்போடு வித்திட்டது பாரதியின் படைப்பும் புதுமை பெண்களின் கடும் முயற்சியும் ஆகும். முதன் முதலில் புதுமைப்பெண் என்ற கற்பனை வடிவை உருவாக்கிய பெருமை பாட்டுக்கொரு புலவனாகிய முண்டாசு கவிஞன் பாரதியையே சாரும்.

நாகரீகப் பெண்கள்: இன்றைய காலகட்டங்களில் ஏதோ அரைகுறை ஆடை அணிந்து அங்கும் இங்கும் சுற்றித் திரிவதே புதுமைப் பெண்களின் சுதந்திரமாக எண்ணுவது சாபக்கேடாய் விளங்குகிறது. பெண்ணை தெய்வமாய், பூமியாய், கருணையின் வடிவமாய், அன்பின் உருவாய் வணங்கிய நம் தேசத்தில் நாகரீகம் என்னும் போர்வையில் பாரதி காணாத புதுமைப் பெண்களாய் மேலைநாட்டு மோகம் கொண்டு பல கலாச்சார சீரழிவுக்கு இன்று வித்திடுவது வருந்தத்தக்கதே ஆகும்.

பெண் முன்னேற்றம்:
இன்றைய காலகட்டங்களில் அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து சரித்திரம் புரிந்து வருகின்றனர். தன்னை சார்ந்த சமூகம், குடும்பம் சிறப்புற வாழ நல்லதொரு சிந்தனையில் நாளும் திகழ்பவளே போற்றுவதற்குரிய புதுமைப்பெண் ஆவாள்.
கல்பனா சாவ்லா போன்ற வீரமிக்க பெண்களும் சானியா மிர்சா பி.வி சிந்து போன்ற விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களும் முன்னாள் முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்களும் இன்றைய கால புதுமைப் பெண்களுக்கு உந்து சக்தியாய் திகழ்கிறார்கள்.

நேர்கொண்ட பார்வை:
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்" என்ற பாரதி கண்ட கனவு இன்று மெய்ப்பட்டுக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

எது பெண் சுதந்திரம்:
"பெண்ணுக்கு பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ" என்ற பாரதிதாசனின் பெண்ணுரிமை உணர்ச்சி வரிகள் நாட்டின் பெண் முன்னேற்றத்திற்கு வித்திட காரணமாக அமைந்தது. வாக்குரிமை, பெண் விடுதலை, சரிநிகர் சமானம் எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு என இன்றைய புதுமைப் பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.

புதுமைப் பெண்களின் மகளிர் தினம்:
பிரான்ஸ் நாட்டில் லூயிஸ் ப்ளாங்க் இரண்டாவது குடியரசை நிறுவி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி பல அரசவை ஆலோசனை குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தார். பல போராட்டங்களுக்கும் இன்னல்களுக்கும் இடையே மார்ச் 8 1848 இல் கிடைத்த இந்த மாபெரும் வெற்றியே மகளிர் தினம் அமைய அடிப்படையாக இருந்தது. இன்று பல்வேறு நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாட காரணமாகவும் அமைந்தது.

கிராமப்புற பெண்களின் வளர்ச்சி:
"கல்வியில்லா பெண்கள் கலர் நிலம் கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி" என்ற பாரதிதாசனின் வரிகளுக்கினங்க இன்று கிராமப்புற பெண்களும் கல்வி, பேச்சுரிமை, அடிப்படை உரிமைகளை பெற்று பல மகளிர் சுய உதவி குழுக்களாக இணைந்து பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகின்றனர்.

முடிவுரை:
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பெண்களின் முன்னேற்றம், பெண் கல்வி, பெண் உரிமை, வேலை வாய்ப்பு சார்ந்தே அமைந்துள்ளது. எனவே அறியாமை இருள் நீக்கி அறிவொளி ஏற்றி பாலியல் கொடுமைகள் நீங்கி பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழ வழிவகை செய்வோம். பண்பாடு மாறாத புதுமைப் பெண்களாக வாழ்ந்து காட்டுவோம்..

- முனைவர். பா. கற்பகம்
வேதியியல் துறை
புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
காளையார் கோவில் 
சிவகங்கை மாவட்டம்