தமிழர் கலைகள்...! 025

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழர் கலைகள்...! 025

தமிழர்களை பெருமைப்படுத்தும் நாட்டுப்புறக் கலைகள் ( நடனங்கள்).

தமிழர்களின் பெருமைகள் என்பது எண்ணற்ற முறைகளில் நாம் வரைமுறை படுத்தலாம். அதில் முக்கியமாக நாட்டுப்புறக் கலைகளின் பங்கு என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அந்தக்கலைகள் ஒவ்வொன்றும் தனித்தனிச் சிறப்புகளை உடையது.

 மக்களின் உணர்ச்சியின் வெளிப்பாடாக அமையும் ஆடல், பாடல் ஆகியன நாட்டுப்புறக் கலைகளாகும். இக்கலைகள் நம் கிராம மக்களின் வாழ்வுக்கும், வாழ்வாதாரத்திற்கும் உயிர்த்துடிப்பு மிக்கவை. இவை மக்களின் அழகியல் உணர்வுகளின், உறவுகளின் மையமாக விளங்கி ஐம்புலன்களையும் ஈர்த்து, கவலையைப் போக்கி நாட்டின் செல்வமாக விளங்குகின்றன.
 இக்கலைகளை, சமூகம் மற்றும் சமய சார்புக் கலைகள் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.
இதில் நாட்டுப்புற நடனங்கள் அல்லது ஆட்டங்கள் மகிழ்ச்சியின், உற்சாகத்தின், வலிமையின், ஆரோக்கியத்தின் வடிவாக அமைந்திருக்கிறது.

நாட்டுப்புறக்கலை பிரிவுகளில்  இடம்பெறும் ஆட்டங்கள் கீழ்வருவன:

* சிலம்பாட்டம்
* கரக ஆட்டம்
* கும்மியாட்டம்
* கோலாட்டம்
* பொய்க்கால் குதிரையாட்டம்
* சேவையாட்டம்
* கழியல் ஆட்டம்
* வேதாள ஆட்டம்
* பகல் வேஷம்
* வர்ணக் கோடாங்கி
* பூத ஆட்டம்
* கணியான் ஆட்டம்
* கூத்து
* கழைக் கூத்து
* தோற்பாவைக் கூத்து

* காவடியாட்டம்
* மயிலாட்டம்
* ஒயிலாட்டம்
* பின்னல் கோலாட்டம்
* தேவராட்டம்
* சக்கையாட்டம்
* சிம்ம ஆட்டம்
* பொடிக்கழி ஆட்டம்
* கரடி ஆட்டம்
* புலி ஆட்டம்
* பேய் ஆட்டம்
* வில்லுப் பாட்டு
* தெருக்கூத்து
* பாவைக் கூத்து
என்பவைகளாகும். 
இங்கு சில கலைகளின் தன்மைகளை நாம் காண்போம்.

*கரகாட்டம்* 

அழகாக பல வண்ணங்களில் சிங்காராம் செய்த செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில் வைத்துக்கொண்டு  மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழே விழாதவாறு பெண்கள் மற்றும் ஆண்கள் ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும். கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம், பூக்குடம், கும்பம், செம்பு, நீர்க்குடம் என்ற பல அர்த்தங்கள் உண்டு.
தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் “சக்திக்கரகம்” என்றும் தொழில்முறைக் கரகத்தை “ஆட்டக்கரகம்” என்றும் சொல்வர்.

 ஒயிலாட்டம்
ஒயிலாட்டம்  என்பது ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம். அழகு, அலங்காரம், சாயல், ஒய்யாரம் எனப் பல பொருள் தாங்கி நிற்கும் ஒயில் என்ற வார்த்தையே, இவ்ஆட்டத்தின் பெயராகியுள்ளது. இது முற்றிலும் ஆண்கள் சார்ந்த கலை . குறைந்தது 12பேர் கொண்ட குழுவினரின் ஆட்டம் ஆர்ப்பரிக்கும்.
தொடக்கம் முதல் இறுதிவரை கலைஞர்களின் அடவுகள் கம்பீரம் குறையாமல் இருக்கும். ஆட்டத்தின் எந்தத் தருணத்திலும் கலைஞர்களின் கழுத்துக்கு கீழே, இடுப்புக்கு மேலே உள்ள உடல்பகுதிகள் வளையக்கூடாது. ஒயிலாட்டம் ஆடும்போது காலில் கட்டிய சலங்கை "கெம்பீரிக்க வேண்டும்" என்பது நியதி.

 தப்பாட்டம் ( பறையாட்டம் )

பறை ஆட்டம் அல்லது தப்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது மற்றும் எழுச்சி மிகுந்தது. அதில் எழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது.
ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்தது.

தப்பு அல்லது பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இது தப்பாட்டம் அல்லது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு போர் இசைக்கருவியாகும். அதனால் போர்ப்பறை என்றும் அழைக்கிறார்கள்.

 *சிலம்பாட்டம்* 
சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்.
சிலம்பாட்டத்தில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.
சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்.

 *மயிலாட்டம்* 
மயிலாட்டம் ஒரு தமிழர் நாட்டார் ஆடற் கலையாகும். இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். பொதுவாகப் பெண் சிறார்களே இந்த ஆட்டத்தை ஆடுவர்.
இந்த மயில் ஆட்டம் என்பது கரகாட்டத்தின் துணை ஆட்டம் என்று சொல்லப்படுகின்றது.
இப்படி ஆடும் இந்த மயில் ஆட்டத்தில் ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், இருபுறமும் சுற்றி ஆடுதல், தண்ணீர் குடித்துக் கொண்டே ஆறுதல், தலையை சாய்த்து ஆடுதல், இறக்கை விரித்து ஆடுதல், தாவியாடுதல் என்று இப்படி பல அசைவுகளும் இந்த ஆட்டத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
இவை அனைத்தும் இந்த மயில் ஆட்டத்தில் இடம் பெறக்கூடிய அசைவுகளாகும்.

 *காவடியாட்டம்* 
காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் இடம்பெறுகிறது.
காவடியாட்டத்துக்கான பின்னணி இசைக் கருவிகளாக நாதசுரமும், தவிலும் விளங்குகின்றன. நாதசுரத்தில் காவடிச் சிந்து இசையை வாசிக்கக் காவடியாட்டம் ஆடுவது மரபு. 

 *கும்மியாட்டம்*
கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நடனக் கலை ஆகும். பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தம் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து. இது பொதுவாக முளைப்பாரியின்போது பெண்கள் வட்டமாக நின்று கைதட்டி ஆடும் நடனம் ஆகும். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கும்மி வழக்கில் உள்ளது. குரவை என்ற கலையில் இருந்து, கும்மி பிறந்ததாகக் கூறப்படுகிறது.

 *கோலாட்டம்* 

கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் ஒரு நாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் இக் கலை நிகழ்த்தப்படுகிறது.
ஒற்றைக் கம்பால் அடித்து ஆடுவது, இரட்டை கம்பால் அடித்து ஆடுவது என கோலாட்டத்தில் இரண்டு வகைக் கலையாடல்கள் உள்ளன. கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கோலாட்டக்கும்மி என மூன்று வகையான கலையாடல்கள் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.

 *பொய்க்கால் குதிரை* 

குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாசாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் இராசா இராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு.

இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க் குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் என்பதால் பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. 

 *புலியாட்டம்*

புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். வரிப் புலி போல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசுவர். புலிமுகமுடைய முகம்மூடி, புலிக்காது, புலிவால், புலி நகங்கள் ஆகியவை அணிவர். காலில் சலங்கையும் கட்டுவர். இந்த ஆட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் ஆடப்படுகிறது.
புலி ஆட்டத்தை ஒத்து, கரடி ஆட்டம், மாடு ஆட்டம், கிளி ஆட்டம் போன்ற பிற ஆட்டங்களும் உண்டு.
இதனைப் பரணி என்னும் பெயருடன் கார்த்திகை ஒளிவிளக்குத் திருநாளுக்கு முதல்நாள் பரணிநாளில் விளையாடுவர்.
புலியின் வால் நீண்டதாகக் கட்டப்பட்டு அதனை வால்பிடிப்பவர் தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் ஓட விளையாடுதல் இதன் நாட்டுப்புற விளையாட்டு ஆகும்.
 இந்நடனங்களில் பலவற்றை நாம் இப்போது காண இயலாது. 
தற்போது கரகம், சிலம்பம், கோலாட்டம்,கும்மி,காவடி, பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், தேவராட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற ஆட்டங்களை மட்டுமே பண்டிகை, திருவிழாக்கள் மற்றும் பல நிகழ்வுகளில் நாம் காணமுடிகிறது. 
       இந்த தலைமுறை மக்களுக்கு மத்தியில் கரகம், சிலம்பம், ஒயிலாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற நடனங்கள் மட்டுமே நினைவிலும், வழக்கத்திலும் நிலைக்கின்ற கலைகளாக இருக்கின்றன.

மேலும் இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான மற்றும் உணர்வுப்பூர்வமான கலைகளை மீட்டெடுத்து நம் பாரம்பரியத்தை நிலைநாட்ட பல முயற்சிகள் நம் அரசாங்கம் எடுத்து வருகின்றன. அதிலும் தமிழர்களின் பெருமைகளை உணர்த்தும் முக்கியமாக தமிழின் வரலாற்றுச்சிறப்புகளை பறைசாற்றும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. நாமும் அரசோடு இணைந்து நம் நாட்டுப்புற கலைகளை மீட்டெடுத்து தமிழின் மற்றும் தமிழர்களின் பெருமைகளை இந்த உலகிற்கே உணர்த்துவோம். 
எங்கும் தமிழ் எதிலும் தமிழ். தமிழ் இருக்கும் இடம் எல்லாம் தமிழர்களின் பெருமைகள் பெருகும்
.
தமிழ் உயரந்தால் தமிழர்கள் உயர்வார்கள். உலகிலேயே உயர்ந்த பண்பாட்டு தமிழர்களின் பண்பாடாகும்.

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.

வாழ்க தமிழன் வளர்க தமிழ்.

நன்றிகள்.

- பி. பத்ரிநாராயணன்
இராஜபாளையம்.