அழியாத ரகசியம்

உண்மைத் தொடர்

அழியாத ரகசியம்

அழியாத ரகசியம்

(எழுத்தாளர் சைலஜா கணேசன் எழுதும் உண்மைத் தொடர் )

முன்னுரை – ஏன் இந்தக் கதை?

இந்தக் கதை வெறும் கற்பனை அல்ல; வெறும் உண்மையும் அல்ல.

இது — உண்மையும் கற்பனையும் சேர்ந்த ஒரு பயணம்.

பிறவிகள், பூர்வ ஜென்மம், கர்மம், சாபம், நீதியற்ற மரணத்தின் விளக்கம் —

இவை அனைத்தும் நாம் அடிக்கடி பேசும் சொற்களே.

“போன ஜென்மத்துல செய்த பாவம் தான் இது…”

“அவன் கர்மம் இப்படி வந்துடுச்சு…”

“சாபத்திலிருந்து தப்ப முடியாது…”

என்று எத்தனையோ முறை நாம் கேட்டிருக்கிறோம்.

ஆனால் —

இந்த வார்த்தைகள் வெறும் பயமுறுத்தும் கதைகளா?

அல்லது அதன் பின்னால் உண்மை இருக்கிறதா?

 

பழைய புராணங்களைப் படித்தாலும், இதிகாசங்களை கேட்டாலும்,

ஆன்மீக உலகை புரிந்து கொள்ள முயன்றாலும்,

இந்த கேள்விக்கு நம்மில் பலருக்கும் உறுதியான பதில் கிடைக்காது.

 

ஆனால் நான்...

ஒரு அனுபவத்தை சந்தித்த பிறகு,

ஒரு இடத்துக்குள் காலடி வைத்த பிறகு,

ஒரு கோயிலின் நிழலை உணர்ந்த பிறகு —

எனக்குள் ஏதோ மாறிவிட்டது.

அதை நான் கேள்வியாக அல்ல, உண்மையாக உணர்ந்தேன்.

வியப்பூட்டும் சம்பவங்கள்,

விளக்க முடியாத நிகழ்வுகள்,

எழுந்த நினைவுகள்,

கடந்த காலத்தின் உறங்கிய கதைகள்—

இவை அனைத்தும் என் முன் வந்து நின்றன.

 

அந்த அனுபவம்தான் இந்தக் கதையாக மாறியது.

 

பூர்வ ஜென்மம் இருக்கிறது என்ற நம்பிக்கையை நான் சொல்வதல்ல...

அதை நான் உணர்ந்து எழுதுகிறேன்.

 

இந்தக் கதை “அழியாத ரகசியம்”

ஒரு உயிரின் பயணம், ஒரு இடத்தின் சாபம்,

நீதி தேடும் ஒரு நிழல்,

உண்மையை எதிர்கொள்ளும் ஒரு பெண்

இவற்றின் 35 அத்தியாய தொடர்ச்சி.

 

இப்போது… கதை துவங்குகிறது.

 

“இந்தக் கதை உண்மையின் நிழலில் பிறந்தது.

நான் கண்டது, நான் உணர்ந்தது, நான் நம்பியது

அதற்குள் சில கற்பனையின் நிறங்கள் மட்டும்.

ஆனால் உணர்ச்சி… உண்மைதான்.”

 

அத்தியாயம் 1 : மண்ணின் மணமும் முதல் பயணமும்

கீழப்பூவாணி.

அந்தப் பெயரைச் சொன்னாலே, மனதுக்குள் ஒரு மெல்லிய தென்றல் நுழைந்து, நெஞ்சில் தங்கியிருந்த பழைய மண்வாசனைகள் விழித்தெழும். அங்கே காலையிலோ, மாலையிலோ வானத்தை நோக்கினாலோ வேறொரு உலகம் திறந்துவிடும் — சத்தம் இல்லாத அமைதி, அமைதியைக் காக்கும் இயற்கை, இயற்கையை சுமந்து நிற்கும் மண்.

காலை நேரம். பறவைகளின் சிறகு ஓசை, ஒவ்வொரு வீட்டின் மாடத்திலும் எழும் துதியோசை, தொலைவில் மனதை நனையும் கோயில் மணி, மண் பாதைகளில் மெதுவாக நடந்து செல்லும் மாடுகளின் மணி — எல்லாமே கீழப்பூவாணியின் தினசரி இசை. புல்வெளிகளில் பனி துளிகள் சூரிய ஒளியைக் கண்ணாடிபோல் பிரதிபலித்து, உயிரோடு மிளிரும் பச்சை ஓவியமாக மாறும்.

அந்தப் பசுமை நிறைந்த கிராமத்தில் அனைவராலும் மதிப்புடன் பேசப்படும் ஒரு பெயர் இருந்தது — ராமசாமி அவர் என் தாத்தா. விவசாயத்தை நெஞ்சோடு கட்டி வைத்திருந்த, தெய்வ நம்பிக்கையில் மூழ்கியவர். வேதம், ராமாயணம், பக்தி, கோவில் — அவர் உலகம் முழுவதும் அதைத்தான் சுற்றி நடந்தது. வட்டி வணிகம் செய்தார்; பல ஏக்கரில் கொண்டு விவசாயம் செய்து வந்தவர்

செல்வம் இருந்தது, மதிப்பும் இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் விட, அவரிடம் இருந்த மிகப் பெரிய செல்வம் — நம்பிக்கை. ஒரு நாள் போதையில் கூட, “இறைவன் கண்களில் எதுவும் மறையாது” என்றே சொல்லிக்கொண்டிருப்பார்.

அதே வீட்டில்… அவர் குடும்பத்தின் மூத்த பேத்தியாக பிறந்தவள்தான் — யாமினி.

யாமினியின் குழந்தைப் பருவம் மண்ணோடு கலந்து வளர்ந்த நாட்கள். மண்ணில் ஓடிக் கொண்டே விளையாடிய கால்கள், பசுமையில் படுத்து வானத்தைப் பார்த்தக் கண்கள், தாத்தாவின் மடியிலிருந்து ராமாயணக் கதைகளை கேட்ட காதுகள் — அனைத்துமே அவளின் உள்ளத்தை வடிவமைத்தவை.

இயற்கையை உணர்ந்தவள். இறையை நம்பியவள். ஆனால் மிக இளமையிலேயே மனத்துல ஆழமா ஒரு கேள்வி விதை விழுந்தது — “மனிதன் ஏன் பிறக்கிறான்? வாழ்க்கையின் உண்மை என்ன?”

அந்த கேள்விகளுக்கு அப்போ பதில் இல்லை. ஆனா கேள்வி மட்டும் இருந்தது. அது அமைதியாக வளர்ந்தது.

காலம் நகர்ந்தது. யாமினி வளர்ந்தாள். கீழப்பூவாணியை விட்டு, மேல்நிலைப் படிப்புக்காக திருநெல்வேலிக்கு சென்ற நாள் — அவளுடைய வாழ்க்கையின் முதல் மாறுபட்ட பருவம். சாரதா மேல்நிலைப் பள்ளியின் சுவர்களில் புத்தகங்கள் அவளுக்கு அறிவை கொடுத்தாலும், விடுதிக்குள் தனியாக அமர்ந்த இரவுகள் அவளுக்கு சிந்தனையை வளர்த்தது.

படிப்பு முடிந்து, பட்டப்படிப்பு தொடர்ந்தாள். அதன் பின் — திருமணம். கோவில்பட்டியில் குடியேறியாள்.

திருமணத்திற்குப் பிறகு அவள் வாழ்க்கை சாதாரணமாய்த் தோன்றினாலும், அவளுடைய உள்ளம் சகஜமாக இல்லை. கணவர், இரண்டு குழந்தைகள், குடும்ப பொறுப்பு — எல்லாம் இருந்தது. ஆனால் அவள் உள்ளத்தில் மட்டும் இன்னும் ஒரு தீ எரிந்தது. எந்த காற்றாலும் அணையாத தீ. அது பிறந்த காலத்தில் கேட்ட அந்த விடையில்லா கேள்விகளின் தீ.

குடும்பத்தை கவனித்தபடியே, அவள் சமூகச் சேவைகளில் ஈடுபட்டாள். சிறு உதவிகள், சிறு தொடர்புகள், சிறு நன்மைகள் — அது அவள் இதயத்தை எப்போதும் நிறைத்தது. ஆன்மீகப் பயணமும் மெதுவாக அவளோடு நடந்துகொண்டே இருந்தது.

ஒரு நாள் – அவள் கலந்து கொண்ட ஆன்மீக கூட்டத்தில், ஒருவரால் ஒரு யோசனை வந்தது.

“நாம ஏதாவது நல்ல பணி செய்யலாமே? அருகில ஒரு கிராமத்துல 300 வருடமா மூடி கிடக்கும் கோயில் இருக்குனு கேட்டேன். சுத்தம் செய்யலாமே? உழவாரப்பணி போகலாமே?”

அந்த ஒரு வரி… யாமினியின் உள்ளத்தில் ஒளிச்சுடராக எரிந்தது.

“நம்ம போவோம்.” அன்று அவள் எடுத்த முடிவு — அவள் வாழ்க்கையை முழுவதும் மாற்றப்போகும் முதல் அடியென்று அவளுக்கே அப்போ தெரியாது.

அந்த ஒரு முடிவு… “நாம் அந்த மூடிய கோயிலை சுத்தம் செய்யப் போகலாம்” என்ற ஒரு எளிய வரியாகத் தோன்றினாலும் — அது யாமினியின் ஆன்மாவை எழுப்பிய முதல் அழைப்பு.

அவள் உள்ளத்தில் ஒரு சொற்கள் இல்லாத சபதம் பிறந்தது.

அந்த நொடியில், அவளது மனதில் தாத்தா அடிக்கடி சொல்வார் ஒரு ஸ்லோகம் ஒலித்தது—

“அனுபூதி ஹி பரம தாயினாம் தர்மமத்ர ஸுகமஸ்ய லக்ஷணம்” — உண்மையான ஆனந்தம், பிறருக்காக செய்யும் தர்மத்தில் தான் உள்ளது.

அந்த சொல், அந்த சபதம், அந்த ஒளி — அடுத்த பயணத்துக்கான வாசலைத் திறந்தது.

அந்த இரவு யாமினி அமைதியாகத் தூங்கினாள்… ஆனால் அவள் வாழ்க்கை அந்த நொடியில் விழித்தெழுந்தது.

“சில கதைகளில், நாயகி பயணத்தை தேர்வு செய்ய மாட்டாள்… பயணமே நாயகியைத் தேடி வருகிறது.”

******************************************************************************************************************

அத்தியாயம் – 2 : பயணத்தின் முதல் பகல்

கதிரவன் இன்னும் முழுதாகக் கண்ணைத் திறக்காத காலைப் பொழுது.

சிறு தூக்க நெகிழ்வுடன் யாமினி விழித்தாள். வீட்டின் சுவர்கள் மீது சற்றே பொற்கொட்டாய் படரும் விடியற்கால ஒளி, புதிய நாளின் முதல் அழைப்பைப் போலத் தோன்றியது.

காலை வேளை என்பது அவளுக்கு ஒரு கடமையல்ல… ஒரு சாத்விக சடங்குபோல்.

குழந்தைகளைக் கிளப்பி, பள்ளிக்குச் தயார்செய்து, பாசத்துடன் காலை உணவு வைக்க, பின்னர் சிரித்த முகத்துடன் கதவு வரை அழைத்து செல்வது — இது யாமினி தினமும் அனுபவிக்கும் சிறிய மகிழ்ச்சி.

“அம்மா, இன்று நீ எங்க போற?” என்று குழந்தைகள் கேட்டபோது

அவள் சிரித்து, கண்களில் ஒளி ஏற்றி,

“நம்ம சாமி கோயிலுக்கு… ஒரு நல்ல பணி செய்யப் போறேன்” என்றாள்.

அந்த சொல்லில் பெண்ணின் பாசமும், பொறுப்பும், ஆன்மீகமும் மூன்றும் கலந்து இருந்தது.

குழந்தைகள் புறப்பட்டதும், அவர் தொழில் செய்யும் இடத்துக்குச் செல்லும் நேரம்.

தொழில் செய்யும் இடத்திற்கு சென்று

கதவுகளைத் திறக்கும் ஒவ்வொரு நாளும்,

‘இது வேலையை விட ஒரு வரம்… யாரையாவது வாழ வைக்கிறது’ என்று அவள் உள்ளத்துக்குள் நன்றியுடன் நினைப்பாள்.

காலை ஊழியர்களிடம் சில அறிவுறுத்தல்கள், கணக்குப் புத்தகத்தைச் சரிபார்த்தல், இன்று என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகள் — இவையனைத்தையும் அமைதியாக முடித்தாள்.

ஆனால்…

இன்றைய நாள் வேறுபட்டது.

உள்ளத்தில் ஓர் எதிர்பார்ப்பு. ஒரு துடிப்பு. ஒரு அர்த்தமுள்ள பயணத்தின் தொடக்கம்.

செண்பகவல்லி அம்மன் கோயில் முன் கூடியோர்

அவள் செய்த அழைப்புக்கிணங்க,

அமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவரும் செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பாக ஒன்று திரண்டிருந்தனர்.

யாமினி வந்ததை கண்டு அவர்களின் முகத்திலும் ஒரே மாதிரியான உற்சாகம்.

இன்றைய பணி —

300 வருடங்களாக மூடியிருந்த அந்தக் கோயிலுக்கு முதல் உழவாரப்பணி.

அதற்காக தேவையான கருவிகளை,

மம்மட்டி, சட்டி, துடைப்பங்கள், கையுறைகள் —

அனைத்தையும் அவள் முன்பே வாங்கி, வேனில் சீராக அடுக்கிவைத்திருந்தாள்.

அனுமதி — மரியாதையுடன்

அந்தக் கோயில் ஒருகாலத்தில் ஒரு ராஜாவின் சொந்த ஆலயம்.

அதனால் அனுமதி அவசியம்.

யாமினி மற்றும் சிலர் முன்னரே சென்று மரியாதையுடன் கேட்டபோது,

அந்த குடும்பம் மகிழ்ச்சியுடன் சொல்லியது:

“உங்கள் பணி நலமானது. தாராளமாக செய்யுங்கள். மதிய உணவு நாங்களே தருகிறோம்.”

அந்த வார்த்தை,

“நல்ல தொடக்கத்திற்கு நல்ல மனிதர்கள் துணை நிற்பார்கள்”

என்ற உண்மையை மீண்டும் உணர்த்தியது.

முதல் அடியின் சடங்கு

வேன் இயக்கப்படுவதற்கு முன்,

அமைப்பின் பொறுப்பாளர் ஜெயசீலன், தேங்காய் எடுத்தார்.

“நல்ல பணி… நல்ல தொடக்கம் வேண்டும்.”

தேங்காய் உடைந்தது.

துண்டுகளாகப் பிளந்த அதன் உள்ளம்

“பாதை தூய்மையானது” என்று ஒரு சின்னம் காட்டியது போல.

வேன் மெதுவாக நகர,

பெண்கள் அனைவரும் அதில்,

ஆண்கள் தனித்தனி கார்களில் பின்தொடர்ந்தனர்.

 

இயற்கையோடும்—யாமினியோடும் நடந்த பாதை

 

பாதை தொடங்கியது.

சாலையின் இருபுறமும் விரிந்த பச்சை வெளிகள்,

தொலைவில் நீளும் நீலமலைகள்,

மலையின் அடிவாரத்தில் ஓடும் பளிச்செனத் தெரியும் சிற்றாறு,

வேனின் திறந்த ஜன்னல்களில் நுழையும் காற்றின் மீன்-வாசனை…

யாமினி அந்த ஒவ்வொரு காட்சியையும் உள்ளத்தில் சேமித்தாள்.

அது வெறும் பயணம் இல்லை—

அவள் ஆன்மாவை விழிக்கச் செய்யும் சாட்சிப் பயணம்.

வேனில் பெண்கள் பக்திப் பாடல்கள் பாடினர்.

அந்த இசை, பாதையின் இயற்கையுடன் கலந்து ஒரு புதிய உலகத்தை உருவாக்கியது.

ஒரு நிமிடம், யாமினி ஜன்னலை நோக்கி பார்த்தபடி மனதில் மெதுவாக நினைத்தாள்

“இயற்கை சுத்தம் செய்து கொண்டே இருக்கிறது…

மனிதன் மட்டும் தான் சுத்தம் செய்ய மறக்கிறான்.”

 

கோயில் வாசல் — முதல் பார்வை

அரை மணி நேர பயணத்தின் பின்,

வேன் அந்தப் பழமையான கோயிலின் வாசலில் நின்றது.

வாசல் பழையது.

காலத்தின் காயங்கள் அதில் தெளிவாகக்கூடத் தெரிந்தது.

ஆனால்…

அந்த சிதைந்த வாசலின் பின்னால்,

புதுப்பிக்க காத்திருக்கும் வரலாறும்,

விழிக்க காத்திருக்கும் தெய்வமும்,

மீண்டும் உயிர் பெறப்போகும் ஆன்மீகமும் இருந்தது.

யாமினி வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டாள்…

அவள் உள்ளத்தில் ஒரு காற்றாய் எழும் வரி:

“இது உழைப்பல்ல…

இது ஒரு எழுச்சி.”

“தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ” “தர்மத்தை காக்கும் மனிதனை, தர்மமே காக்கும்.”

நாமெடுக்கும் ஒவ்வொரு செயலும் பிறருக்குப் பயன், சமூக நன்மை, உள்ளத்தின் நேர்மை — இவை நிறைந்தால் அது தர்மம்.

தர்மம் நிறைந்த செயலில் ஈடுபட்டால், அந்த செயல் நம்மை நிலையற்ற மனிதர்களிலிருந்து நிலையான அர்த்தமுள்ள மனிதர்களாக மாற்றும்.

நாம் செய்யும் நன்மை ஒருநாள் நமக்கே நிழலாகி நின்று காப்பாற்றும் என்பதே இந்தச் சொற்றொடர் சொல்லும் உண்மை.

*************************************************************************************************************************

அத்தியாயம் 3

“கோயில் வாசலில் உள்ளம் விழிக்கும் தருணம்”

“தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ” —

தர்மத்தை காக்கும் மனுஷனை, தர்மமே காத்து நிற்கும்…

அந்த ஸ்லோகத்தின் அர்த்தம் இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

வேனிலிருந்து இறங்கிய யாமினி, 300 ஆண்டுகள் பழமையான அந்தக் கோயிலை முதன்முறையாக நேரில் நோக்கினாள்.

வாசலில் கால் வைக்கும் முன் ஒரு நொடிக்கு அவள் நின்றாள்.

ஏன் என்று அவளுக்கே புரியவில்லை;

ஆனால் உள்ளுக்குள் ஒரு விசித்திரமான பரவசம்,

ஒரு காரணமில்லாத சந்தோஷம்,

நெஞ்சை மெதுவாக நிரப்பியது.

தாயிடம் திரும்பிய குழந்தை போல,

தமிழ் மண் மணத்தில் நனைந்த ஆன்மா போல,

அதே பரிச்சயமான உணர்வு…

 

முன்பு அவள் எண்ணற்ற கோயில்களில் சென்றிருப்பாள்.

அனுப்பப்பட்ட பணிகளில் பல ஆலயங்கள் அவள் பாதங்களைத் தொட்டிருக்கும்.

ஆனால்—

இன்று ஏதோ மாறுபட்டது.

இதயத்தில் எழுந்த அந்த திடீர் இணைப்பு அவளால் விளக்கம் அளிக்க முடியவில்லை.

சிவனின் முன் அவள் முன்பு நிற்காதவளல்ல;

ஆனால் இவ்வளவு ஆழமாக உணர்ந்ததே இல்லை.

அந்த மீண்டும் சந்தித்த காதல் போல,

நீண்ட நாட்கள் பிரிந்த பின் மீண்டும் இணைந்த ஆன்மாவைப் போல,

அந்த தருணம் அவளுள் ஏதோ திறந்தது.

 

கோயில் வாசல் பழுதடைந்து இருந்தது.

உள்ளே செல்லும் படிகள் பிளந்து,

வாசல் மரம் காலத்தின் மேல் சுமையைச் சுமந்து சாய்ந்திருந்தது.

ஆனால்—

அந்த இடத்தின் உயிர் மட்டும் சிதரவில்லை.

அந்த இடத்தில் ஒரு அமர்ந்த சக்தி இன்னும் சுவாசித்துக்கொண்டே இருந்தது.

அதை யாமினி உணர்ந்தாள்.

 

அவளுடன் அமைப்பின் பொறுப்பாளர்கள் நுழைவாயிலில் நின்றனர்.

உள்ளே பார்த்த கணத்தில்,

உதிர்ந்த செங்கற்கள், உடைந்த சிலை மேடைகள்,

சிவனும் நந்தியும் தவிர எதுவுமின்றி வெறிச்சோடிக் கிடக்கும் அந்த இடம்,

இவர்களுக்கு ‘சிதைவாக’ தோன்றியிருக்கலாம்.

ஆனால் யாமினிக்குப் மட்டும் அது—

ஒரு “அழைக்கப்படும் ஆலயம்” போல தோன்றியது.

 

“இது சாதாரண உழவாரப்பணி இல்லை…”

என்று அவள் உள்ளத்துக்குள் சொன்னாள்.

“இது தர்மத்தை உயிர்ப்பிக்கும் சேவை.”

 

அந்த தருணத்தில்,

தர்ம ஸ்லோகம் மீண்டும் அவளது மனத்தில் எழுந்தது:

 

“தர்மமே நம்மை காப்பாற்றும்.”

யாமினி மெதுவாக முதல் அடியை உள்ளே வைத்தாள்.

நுழைவாயிலின் குளிர் தரை அவளது பாதத்தைத் தொட்ட கணத்தில்,

அவளது உள்ளம் விழித்தது.

அவள் கண்ணை மூடி ஒரு நொடிக்கு சுவாசித்தாள்—

ஆழமாக… நிதானமாக… பக்தியுடன்.

அது சொன்னது:

“உடலை சுத்தப்படுத்துவது சேவை அல்ல, உள்ளத்தைக் சுத்தப்படுத்துவதே உண்மையான தர்மம்.”

“இங்கு நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியும், ஒரு ஆலயத்தைக் காப்பதற்கல்ல… ஒரு ஆன்மாவை எழுப்புவதற்கே.”

 

“யதோகாச்ச்சிந்மனஸ்துஷ்டி, அதேவ லப்யதே சுகம்।”

உள்ளம் திருப்தி அடைந்தால், அதுவே பரம ஆனந்தம்.

மனிதன் தேடும் அமைதி பொருளில் இல்லை,

அது உள்ளம் சுத்தமடையும் தருணத்தில் பிறக்கிறது.

அந்த சுத்தத்தின் முதல் படி—

இன்று அவர்கள் எட்டிய இந்த தர்மப் பயணம் தான்.

வாசல் கடந்துவிட்டார்கள்.

ஆனால் உண்மையான பயணம்—

இப்போதுதான் ஆரம்பம்…

***************************************************************************************************

அத்தியாயம் 4 – மூடிய கோயிலில் முதல் ஒளி

 

காலையின் முதல் ஒளி மண்ணை வருடியபோது,

அந்த மூடியிருந்த 300 ஆண்டு பழமையான கோயிலின் வாசலில்

யாமினியும் அமைப்பின் பொறுப்பாளர்களும் காலடி வைத்தார்கள்.

பனித்துளிகளால் ஈரமான தரை,

அழுக்கில் மறைந்த கல் வாசல்,

அந்த அமைதியான சூழல் —

இவை அனைத்தும் ஒரு பழைய ரகசியத்தைச் சொல்ல முயன்றது போலிருந்தது.

 

யாமினி முன்னே நடந்து சென்று,

சிறிது கதவு மட்டும் திறந்திருந்த அந்த வாசல் வழியாக உள்ளே நுழைந்தாள்.

வாசல் திறந்திருந்தாலும்,

உள்ளே இருந்த நிசப்தம் காற்றே இல்லாத அமைதியைப் போல இருந்தது.

அந்த நிமிடத்தில் அவளது மனம்

ஒரு பழைய உறவின் வாசனையை உணர்ந்தது —

பிறந்த ஊரின் தாய் மண்ணைத் தொட்டது போல ஒரு மென்மையான அதிர்ச்சி.

 

அமைப்பின் பொறுப்பாளர்கள் பணியில் இறங்கினர்.

சிலர் தூசியை துடைத்தனர்,

சிலர் உடைந்த கற்களை அகற்றினர்,

சிலர் மண்ணில் புதைந்த விளக்குத் தட்டுகளை எடுத்து சுத்தம் செய்தனர்.

ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒரே எண்ணம் —

“இந்த கோயில் மீண்டும் உயிர் பெற வேண்டும்.”

 

சிவன் சிலையின் மீது படிந்திருந்த மண்,

பூஜையில்லா வருடங்களின் அடையாளமாக இருந்தது.

யாமினி மெதுவாக தன் விரலால் அந்த மண்ணை துடைத்தாள்.

அந்த நிமிடத்தில் அவளுக்கு உடலில் ஒரு மின்னல் ஓடியது போல உணர்ந்தாள்.

“இத்தனை வருடங்களாக யாரும் வரவில்லை,

ஆனால் இவர் இங்கிருந்தே நம்மை காத்திருக்கிறாரோ?” என்ற எண்ணம்

அவளது கண்களில் கண்ணீரை வரவைத்தது.

 

கோயிலைச் சுற்றி பணிகள் வேகமாக நடந்தன.

மண்ணில் புதைந்திருந்த நந்தி சிலைக்கு புதிய பீடம் அமைக்கப்பட்டது.

அமைப்பின் ஒருவரான ரமேஷ் தண்ணீரை ஊற்றி

பீடத்தை சுத்தம் செய்தபோது

அந்த கல் ஒளி மிளிர்ந்தது —

நீண்ட உறக்கத்திலிருந்து எழுந்தது போல.

 

பக்கத்தில் நின்ற சங்கரன் மெதுவாகச் சொன்னார்,

“இடம் மண்ணில் புதையலாம்… ஆனா இதுல இருக்கும் சக்தி புதையாது.”

அந்த ஒரு வாக்கியம் அங்கிருந்த அனைவரையும் நிமிட நேரம் நிறுத்திவிட்டது.

 

அந்த நேரத்தில், கோயிலைச் சுற்றியுள்ள ராஜா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.

அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்டனர்.

அந்த நேரத்தில்தான்,

அமைப்பின் தலைவர் வந்து அனைவரையும் பார்த்து,

“நல்லபடியா செய்ங்க… எல்லாருக்கும் என் ஆசீர்வாதம்,”

என்று சொல்லி சிரித்தபடி மீண்டும் புறப்பட்டுச் சென்றார்.

 

உணவுக்குப் பிறகு சிறிது ஓய்வு எடுத்தனர்.

பின்னர் அனைவரும் மீண்டும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் பூஜை ஏற்பாடு செய்து,

சிவனுக்கு அலங்காரம் செய்து,

விளக்கேற்றி ஆரத்தி காட்டினார்கள்.

 

அந்த ஒளியில் மிளிர்ந்த சிவன் முகம் —

அவர்களின் உள்ளத்துக்குள் ஒரு அமைதியையும்

ஒரு தெய்வீக நம்பிக்கையையும் விதைத்தது.

 

யாமினி அந்த ஒளியை நோக்கி நின்றாள்.

அந்த நிமிடத்தில் அவளுக்கு ஒரு உறுதி பிறந்தது —

“இந்த கோயில் இனி இருளில் மூழ்காது.”

 

அந்த தருணத்தில், சிறிய விளக்கொளி

அந்த மூடிய கோயிலின் இதயத்தை ஒளிரச்செய்தது.

அந்த ஒளி தான் —

அந்த மூடிய கோயிலின் முதல் ஒளி.

 

“தீபம் ஜ்யோதிர் நராயணஃ”

— ஒளியே நாராயணன்; அது தெய்வத்தின் உருவம்.

 

அந்த சிறிய விளக்கு ஒரு கோயிலை ஒளிரச்செய்தது மட்டும் அல்ல,

அது மனுஷனின் உள்ளத்தையும் ஒளிரச்செய்தது.

தூசியில் மறைந்த தெய்வம் எழுந்தது;

அதோடு, மனிதனின் நம்பிக்கையும் மீண்டும் பிறந்தது.

 

*****************************************************************

அத்தியாயம் 5 – தூசியில் மறைந்த தெய்வத்தின் தடங்கள்

மாலையின் வெளிச்சம் மங்கத் தொடங்கிய நேரம். சூரியன் தன் கடைசி கதிர்களை அந்த பழமையான கோயிலின் கல் சுவர்களில் விட்டுச் சென்றிருந்தான். அந்த ஒளி — தூசியில் மூழ்கிய சிலைகளின் மேல் விழுந்தபோது, ஒரு பழைய நினைவுப் படம் போல் கோயிலே உயிர் பெற்றது.

யாமினி நிமிர்ந்து பார்த்தாள். காலத்தின் கொடுமையால் பிளந்த கல் தரையில், அவள் காலடி ஒலி தெளிவாக எதிரொலித்தது. அவளோடு சென்ற பொறுப்பாளர்கள் சிலர் உடனே வேலையைப் பிரித்துக்கொண்டனர். ஒருவர் தூசி துடைத்தார், இன்னொருவர் உடைந்த கல்லை அகற்றினார், மற்றவர் மண்ணில் புதைந்து போன விளக்குத்தட்டுகளை எடுத்துச் சுத்தம் செய்தார். ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஒரு நம்பிக்கை — “இந்த இடம் மீண்டும் ஒளி காணும்” என்ற நம்பிக்கையோடு இயங்கினர்.

கோயிலின் உள் பகுதி முழுவதும் தூசியில் மூழ்கியிருந்தது. சிவன் சிலையின் மீது எத்தனை வருடங்களோ மண் படிந்து இருந்தது; ஆனால் அதில் ஒரு மாயம் இருந்தது — அந்த மண்ணுக்குள் கூட கருணை கலந்த கண்கள் போலிருந்தது. யாமினி தன் விரலால் மெதுவாக அந்த சிலையின் முகத்தைத் தொட்டாள். அந்த நிமிடத்தில் ஒரு மின்னல் போல மனதுக்குள் ஓர் அதிர்ச்சி — அது பயமா, பரவசமா என்று சொல்ல முடியவில்லை.

“இத்தனை நாள் யாரும் வரவில்லை என்றாலும், இவர் நம்மை காத்திருந்தாரோ?” அவள் மனதில் தோன்றிய அந்த சிந்தனைக்கே கண்களில் கண்ணீர் மிதந்தது.

பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் வேறொரு பக்கத்தில் பணி புரிந்தனர். சிலர் வெளிப்புறம் சுத்தம் செய்தனர், சிலர் உடைந்த விளக்குத் தட்டுகளைத் திருத்தினர், சிலர் நந்தி சிலைக்கு புதிய பீடம் அமைத்தனர். அவர்களில் ஒருவரான ரமேஷ், தன் தோளில் இருந்த தண்ணீர் குடுவையை எடுத்துப் பீடத்தின் மீது ஊற்றினார். அந்த தண்ணீர் வழியும் கல் சுரங்கத்தில் ஒளி மிளிர்ந்தது — மிக நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த கல் உயிர் பெற்றது போலிருந்தது.

பக்கத்தில் நின்றிருந்த பொறுப்பாளர் ஜெயசீலன் சொன்னார், “இந்த இடம் மண்ணில் புதையலாம், ஆனா இதுல இருக்கு சக்தி புதையாது.”

அந்த ஒரு வரி அங்கிருந்த அனைவரையும் நிறுத்திவிட்டது. யாமினி அமைதியாக அந்த கோயிலைச் சுற்றி நின்றாள். மண்ணின் வாசம், புனிதத்தின் ஒளி, மனதில் ஏதோ சொல்ல முடியாத உணர்ச்சி — அவை அனைத்தும் ஒரு கலந்த நிம்மதியாக அவள் உள்ளத்தில் பெருகின.

சிவன் சிலையின் முன் அனைவரும் சேர்ந்தனர். அந்த அமைப்பின் ஐயர் வந்து பூஜை செய்தார். அவர்கள் அலங்காரம் செய்து, விளக்கேற்றி, ஆரத்தி காட்டினார்கள். அந்த ஒளியில் மினுங்கிய சிவன் முகம் — அவர்களுக்குள் ஒரு அற்புத அமைதியையும் நம்பிக்கையையும் பரவச் செய்தது.

பூஜை முடிந்ததும் யாமினி தன் கைகளைக் கூப்பி நின்றாள். அந்த தருணம் அவளுக்குள் ஒரு வாக்குறுதியாக மாறியது — “இந்த கோயில் மீண்டும் ஒளி காணும்; இந்த மண்ணில் மறைந்த தெய்வம் மீண்டும் உயிர் பெறும்.”

அவள் மெதுவாக கண்களை மூடி, அந்த ஒளியில் மனதை மூழ்கச் செய்தாள். சிவனின் சன்னதியில் எங்கோ ஒரு துளி நீர் விழுந்தது போல ஒரு ஒலி கேட்டது — அது யாமினியின் கண்ணீர் தான்.

அந்த மாலை ஒளி தணிந்து இருள் படரத் தொடங்கியது. அவர்கள் செய்ய வேண்டிய பணி முடிந்தது. அனைவரும் நிம்மதியாக கோயிலின் வாசல் நோக்கி நடந்தனர். யாமினி கடைசியாக ஒரு தடவை திரும்பிப் பார்த்தாள் — அந்த சிலையின் மேல் விளக்கொளி இன்னும் திகட்டாமல் எரிந்துகொண்டிருந்தது.

அந்த ஒளி தான் இன்று முதல் — அந்த மூடிய கோயிலில் பிறந்த முதல் ஒளி.

ஸ்லோகம்: “தீபம் ஜ்யோதிர் நராயணஃ” — ஒளியே நாராயணன்; அது தெய்வத்தின் உருவம்.

அந்த மங்கலான இருளில் எரிந்த சிறிய விளக்கு, ஒரு கோயிலின் உயிராக மாறியது. அது ஒளி மட்டுமல்ல; அது ஒரு தொடக்கம் — மனிதனின் முயற்சியும், தெய்வத்தின் அருளும் ஒன்று சேர்ந்த தருணம்.

*********************************************************************************************************************************

அத்தியாயம் – 6 : கனவில் மீண்டும் கண்ட கோயில்

அந்த நாள் மாலையின்ஒளியில் மறைந்த கோயிலை உயிர்ப்பித்த பணி முடிந்திருந்தது.

அனைவரும் அந்த பழைய தெய்வத்தின் முன் நிம்மதியாக தலை வணங்கி, தங்கள் மனத்தில் ஒரு புதுப் பிரகாசத்துடன் திரும்பி வந்தனர்.

நானும் என் குழுவுடன் சேர்ந்து செண்பகவல்லி அம்மன் கோயில் அருகே எங்கள் வண்டி ஏறிய இடத்துக்கே வந்தோம்.

அங்கே தேவையான பொருட்களை இறக்கி, ஒவ்வொருவரும் தங்கள் வீடு, தங்கள் வழி என்று பிரிந்தனர்.

 

நான் வழக்கம்போல அலுவலகத்துக்குச் சென்று சிறிது வேலை முடித்து வைத்தேன்.

அங்கிருந்து என் குழந்தையை அழைத்து வீட்டுக்கு வந்தேன்.

அந்த இரவு — என் பிள்ளையோடும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டு, வழக்கமான அமைதியுடன் படுக்கைக்குச் சென்றேன்.

 

தூங்குவதற்கு முன்னாடி, எனக்கு ஒரு பழக்கம் உண்டு —

நாள் முழுவதும் நடந்ததை என் டைரியில் எழுதுவது.

அந்த நாளின் அனுபவம் விசேஷமானது.

கோயிலுக்குச் சென்று கண்ட அந்த மண்ணின் வாசம், சிலையின் அமைதியான முகம், ஒளியின் மின்னல் —

அவை அனைத்தும் இன்னும் என் மனதில் புது போல் இருந்தன.

அந்த உணர்ச்சியோடு நான் எழுதிய ஒவ்வொரு வரியிலும்

ஒரு விளக்கின் வெப்பம் போல மகிழ்ச்சி ஓடியது.

அதை எழுதி முடித்து, ஒரு ஆழ்ந்த நிம்மதியுடன் நான் கண்களை மூடியேன்.

 

அந்த இரவில் வந்த கனவு —

அது சாதாரண கனவு இல்லை.

நான் இதுவரை காணாத, ஆனால் எங்கோ முன்பு வாழ்ந்தது போலத் தோன்றும் ஒரு கனவு.

அந்த கோயிலில் மீண்டும் நின்றேன் போலிருந்தது.

அதே கல் சுவர்கள், அதே தூசியின் வாசம், அதே சிலையின் கருணை.

ஆனால் இந்த முறை, அந்த கோயிலுக்குள் நான் ஒருத்தி இல்லை —

எங்கோ ஒரு பழைய நினைவு என்னைத் தேடி வந்தது போல.

யாரோ என் பெயரை மெதுவாக அழைத்தது போன்ற ஒரு ஓசை;

நான் திரும்பிப் பார்க்கும் போது, ஒளி மட்டும்.

அந்த ஒளிக்குள் நின்ற ஒரு உருவம் —

நான் அடையாளம் காண முடியாதது, ஆனாலும் மனதில் ஒரு ஆழ்ந்த பரிச்சயம்.

அது பயமா, பரவசமா என்றே சொல்ல முடியாத ஒரு அதிர்வை உண்டாக்கியது.

 

அந்த கனவில் இருந்து விழித்ததும், என் இதயம் வேகமாகத் துடித்தது.

அது சாதாரண கனவல்ல என்று எனக்கே தோன்றியது.

அடுத்த நாள் காலை, என் அமைப்பின் பொறுப்பாளர் ஜெயசீலன் அவரிடம் சொன்னேன்.

அவர் அமைதியாகக் கேட்டு, மெதுவாக சிரித்தார்.

“நீங்க அந்த கோயிலுக்குப் போய் வந்ததால்தான் அந்த ஆற்றல் உங்க கனவில் வெளிப்பட்டிருக்கும், மேடம்,”

அவர் சொன்ன அந்த வார்த்தையில் நிம்மதி இருந்தாலும்,

என் மனதில் இன்னும் ஒரு புதிர் பதுங்கியிருந்தது.

 

அடுத்த வாரம் பிரதோஷம் வரவிருந்தது.

அந்த நாள் நெருங்கும்போது, என் உள்ளத்தில் ஒரு குரல் —

“மீண்டும் அந்த கோயிலுக்கு போவேண்டுமா?” என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் அந்த கோயில் ஊருக்கு வெகு தூரம்,

அங்குப் பொதுமக்கள் அரிதாகவே செல்வார்கள்.

அங்கு தங்கியிருப்பது ஒரே ஒரு பாட்டி மட்டும்தான் என்று தெரியும்.

“தனியாக போவது தேவையில்லாத சிக்கலை வரவைக்குமோ?” என்ற தயக்கமும்,

“ஆனால் அந்த இடம் எனக்குள் ஏதோ அழைக்கிறது…” என்ற அழைப்பும்

இரண்டும் என் மனத்துக்குள் மோதின.

அந்த இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

கோயிலின் அந்த சிலை என் கண்முன் வந்து நின்றது —

மண்ணில் மூழ்கிய முகம் அல்ல, ஒளியில் மிளிரும் முகம்.

எனக்குள் ஒரு ஆழ்ந்த நம்பிக்கை எழுந்தது —

இது ஒரு சாதாரண கனவல்ல;

அது அந்த தெய்வத்தின் அழைப்பு.

 

“யது மனஸ்தது ஜகத் —

மனமே உலகம், மனமே வழி.”

மனதில் தோன்றும் உணர்வு வெறும் எண்ணமல்ல;

அது ஒரு அழைப்பு — ஒரு நம் பாதையை காட்டும் தெய்வத்தின் சைகை.

யாமினியின் கனவு ஒரு தெய்வத்தின் வழிநடத்தல்;

அது அவளுக்குள் இருக்கும் நம்பிக்கையை உயிர்ப்பித்த ஒளி.

அவளது அடுத்த பயணம் — அதே ஒளியைத் தேடும் ஆன்மிகப் பயணத்தின் தொடக்கம்.

***********************************************************

அத்தியாயம் – 7 : அழைத்தவன் அருகில்

பிரதோஷ் நாள் வந்தது.

அந்த காலை வழக்கம்போல் சூரிய ஒளி வீடின் வாசலில் விழுந்தது;

ஆனால் என் மனம் இன்னும் வேறு ஒரு ஒளியைத் தேடிக் கொண்டிருந்தது.

அந்த கனவில் பார்த்த பெருகருணீஸ்வரர் கோயில் —

அது என் நினைவில் நிமிடம்தோறும் மிளிர்ந்தது.

“இன்று பிரதோஷம்,” என மனதில் ஒரு குரல்.

அந்த குரல், என் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்தது போல.

என்னால் அமைதியாக உட்கார முடியவில்லை.

 

எங்களது அமைப்பில் உள்ள அந்த அக்காவை நான் அழைத்தேன்.

“நாம் இருவரும் இன்று அந்த கோயிலுக்கு சென்று வரலாமா?” என்று கேட்டேன்.

அந்த சிவனின் கோயிலின் பெயர் — பெருகருணீஸ்வரர்.

அன்றே உழவாரப்பணிக்கு நான் சென்றிருந்த பொழுது ,

சற்று ஓய்வெடுக்கலாம் என்று உணவு உண்டு ஓய்வெடுத்தேன். ஆனால் தெரியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கி விட்டேன். தூங்கியபோது உடல் சோர்ந்து, காய்ச்சல் வந்தது.

அதை கேட்ட அந்த அக்கா, “இப்ப இந்த உடம்போட கோயிலுக்கு போய்ட்டு வந்தா என்ன ஆகுமோ?” என்று அஞ்சிவிட்டார்கள்.

அதனால், “இன்று போகவேண்டாம்” என்று கூறி விட்டார்கள்.

 

நான் அவரை வற்புறுத்த விரும்பவில்லை.

எப்போதும் போல என் அன்றாட பணிகளைச் செய்து கொண்டிருந்தேன்.

ஆனால் மனம் அமைதியாக இருக்கவில்லை.

ஏதோ ஒரு குரல் உள்ளிருந்து எழுந்தது —

“அங்கு போகணும்... கண்டிப்பா போகணும்…”

 

என்னுள் தொடர் கேள்விகள் எழுந்தன —

“போகலாமா? வேண்டாமா? ஏன் இந்த உணர்ச்சி?”

நேரம் கடத்தினாலும் மனம் சாந்தமில்லை.

இறுதியில் ஒரு முடிவு —

“போகணும்… எப்படியாவது போயிடணும்…”

அந்த முடிவை எடுத்தவுடன் உள்ளே ஒரு தெளிவு வந்தது. என்ன நடந்தாலும் சரி என்று நினைத்து, அந்த அக்காவிடம் மீண்டும் அழைத்தேன்.

“அக்கா, இந்த ஒரு முறை மட்டும் என்னோட சேர்ந்து வாருங்கள்.

நான் வாகனத்துல அழைத்துச் செல்லேன்.”

 

அவர்கள் சிறிது தயங்கினார்கள்.

பின்னர், என் உறுதியான குரலைக் கேட்டபின் சம்மதித்தார்கள்.

மாலை 5:30 மணியளவில், கோவில்பட்டியிலிருந்து நாம் கிளம்பினோம்.

பெருகருணீஸ்வரர் கோயிலுக்கு செல்லும் வழியில்,

“அபிஷேகப் பொருட்கள் எடுக்கணும்” என்ற எண்ணம் வந்தது.

அதற்காக மஞ்சள், சந்தனம், பால், தேன் போன்ற சில அபிஷேகப் பொருட்கள் வாங்கிக் கொண்டேன்.

வீட்டில் வைத்திருந்த சக்கரை பொங்கலும் புளியோதரையும் எடுத்துக் கொண்டு,

அதைப் பிரசாதமாக அர்ப்பணிக்க முடிவு செய்தேன்.

அந்த அக்காவை தெருவோரத்தில் அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

வழியிலே அவர் கேட்டார்:

“ஏன் திடீரென்று இப்படி போகணும் என்று தோன்றியது?

மறுபடியும் நீங்க போகணும்னு நினைக்கிறீங்க ஏன்?”

நான் புன்னகையுடன் சொன்னேன்:

“எனக்கே தெரியல அக்கா…

ஆனா மனசு ஓய்வா இல்ல… ஏதோ அந்த இடத்துக்கு என்னை அழைக்கிறது போல இருக்கு.”

அவர் சிரித்து, “சரி, ஒரு முறை சென்று வரலாம்” என்றார்.

கோயிலுக்கு செல்ல செல்ல சுற்றிலும் அடர்ந்த பசுமை, மரங்களின் காற்றுச் சலசலப்பு,

காட்டில் பறவைகளின் சத்தம் — எல்லாம் ஒரு புதுமையான பயத்தையும், ஆனந்தத்தையும் ஒருசேர தரியது.

ஆனால் உள்ளே ஒரு நம்பிக்கை:

“அங்குள்ள சிவன் நம்மை காப்பாற்றுவார்…”

 

கோயிலை அடைந்தோம்.

அந்த நேரம் இரவாகிவிட்டது.

உள்ளே ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது.

அது நந்தியின் முன்னால் ஒளிர்ந்து, அந்த இருளில் தெய்வீகமான ஒளியாய் தெரிந்தது.

 

உள்ளே சென்றவுடன் என்னுள் சொல்ல முடியாத ஒரு உணர்வு —

பயம், அதே சமயம் மகிழ்ச்சி, ஒரு அமைதி.

மனசு சொன்னது — “இன்று ஒரு விஷயம் செய்யணும்…”

 

அந்த அக்கா பக்கம் பார்த்து, “அக்கா, நாம் அபிஷேகம் செய்யலாமா?” என்று கேட்டேன்.

அவர் உடனே, “நீயே பண்ணு, எனக்கு பயமா இருக்கு” என்றார்.

 

நான் தைரியமாக, “சரி, நான் பண்ண்றேன்” என்று சொல்லி,

முதலில் நந்திக்கு அபிஷேகம் செய்தேன்.

சிவனை தொடவில்லை —

ஏனெனில் என் மனசு சொன்னது:

“முதலில் நந்தியை வழிபடு… அதுவே வழி திறக்கும்.”

 

அங்கிருந்த பாட்டி சிறிதளவு தண்ணீரை வைத்திருந்தார்.

அது போதவில்லை; அருகிலிருந்த தொட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தோம்.

அந்த நீரால் மஞ்சள், சந்தனம் கலந்து ஒவ்வொரு அபிஷேகமும் செய்தேன்.

நந்தியின் மீது நீர் விழும் ஒலியில் ஒரு தெய்வீக ராகம்.

அந்த நொடியிலே எனது இதயம் முழுவதும் ஓர் அமைதி.

 

பின்னர், நாம் கொண்டு வந்த புளியோதரையும் சக்கரை பொங்கலும் சிவனுக்காக அர்ப்பணித்தோம்.

சிறிது நேரம் மௌனமாக நின்று, அந்த ஒளியை நிழல் போல பாரேந்தேன்.

அந்த வெளிச்சத்தில் என் மனம் உருகியது.

அது ஒரு பிரார்த்தனை அல்ல… அது ஒரு பரவசம்.

 

பின்பு நாம் இருவரும் பிரசாதம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்.

வழியிலே அந்த அக்கா மெதுவாக கேட்டார்:

“ஏன் இந்த மாற்றம் திடீரென்று உங்க உள்ளே?”

 

நான் சிரித்து சொன்னேன்:

“எனக்கும் தெரியல அக்கா… ஆனா இன்று போகவில்லைன்னா என் மனம் உடைந்திருக்கும் போல இருந்தது.”

 

அவர் என் கையை பிடித்து,

“பரவாயில்லை, ஒரு நல்லதுக்காகத்தான் உன்னை அங்க அழைத்திருப்பார் சிவன்…” என்றார்.

 

அந்த வார்த்தை என் மனசுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.

கோவில்பட்டியை அடையும் வரை இருவரும் அமைதியாகவே இருந்தோம் —

ஆனால் அந்த அமைதி ஒரு பிரார்தனையின் சத்தம் போலவே இருந்தது.

 

அந்த இரவு நான் கண்களை மூடினபோது,

என் மனதில் ஒரு நந்தி உருவம் மட்டும் —

அவனது மீது விழுந்த நீர், அவனது புனித நிம்மதி,

அந்த நிமிடம் என்றென்றும் என் இதயத்தில் பதிந்தது.

 

பிஸ்மில்லாஹ் அர்ரஹ்மான் அர்ரஹீம் —

அருளும் கருணையும் ஆனவனின் பெயரால் ஆரம்பம்.

 

ஒவ்வொரு பணி, ஒவ்வொரு பயணம், ஒவ்வொரு ஆன்மீக விழிப்பும்

அருளின் ஒளியில் தான் தொடங்குகிறது.

பயமும், சந்தேகமும் மாறி,

நம்பிக்கையும் ஒளியும் நம் உள்ளத்தில் எழும் தருணம் —

அதுவே பிஸ்மில்லாஹ் என்பதின் உண்மையான அர்த்தம்.

யாமினி, அவளின் தெய்வீகப் பயணத்தின் மைய புள்ளி —

இனி அவள் வாழ்க்கை ஒரு புதிய ஒளிக்குள் நுழைகிறது.

***************************************************

அத்தியாயம் —8 : “ஆன்மாவின் வழி”

மறுநாள் காலை எதையோ மனம் சொல்லாமல் சொல்லிக்கொண்டது —

“நேற்றிரவு கண்ட கனவு ஏதோ ஒரு அறிகுறி போல இருக்கிறது... அதை யாரோ ஒருவரிடம் கேட்கணும்...”

எனக்குத் திடீரென நினைவு வந்தது — ஜெயசீலன் அவர்கள்.

அவர் எங்கள் அமைப்பின் பொறுப்பாளர் மட்டுமல்ல;

கோவில்பட்டியில் புகழ்பெற்ற அகஸ்தியர் நாடி ஜோதிட நிலையத்தின் உரிமையாளர்.

சிதம்பரம் அவரின் பிறப்பிடம்;

ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக அவர் கோவில்பட்டியில் தங்கியிருந்து,

அகஸ்தியர் வழி ஜோதிடத்தை மக்களுக்கு நம்பிக்கையோடு வழங்கி வந்தார்.

 

அந்த நினைவோடு நான் முடிவு செய்தேன் —

“இன்று அவரை சந்திக்கணும்.

என்ன காரணத்தினாலே எனக்கு அந்த கோயில் இவ்வளவு ஈர்ப்பு தந்தது,

அதை அவரிடம் கேட்டு அறியணும்.”

 

காலை வழக்கம்போல் அலுவலகத்திற்கு சென்றேன்.

எனது வேலைகளை முடித்தபின், மனசு அமைதியடையவில்லை.

எதோ ஒரு குரல் மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தது —

“அகஸ்தியரிடம் செல்…”

அந்த குரலை மதித்து, மதிய நேரத்தில் ஜெயசீலன் அவர்களின் அலுவலகத்துக்குச் சென்றேன்.

அவர் ஒருவருக்கு நாடி வாசித்து கொண்டிருந்தார்.

நான் அமைதியாக நுழைந்தேன்.

எப்போதும் போல், நேராக அவரது பூஜை அறைக்கு சென்றேன்.

அந்த அறைக்குள் நுழைந்தவுடனே என் மூச்சே மெல்ல மாறியது.

அங்கிருந்த சாந்தமும் சக்தியும் கலந்த காற்று,

ஒரு நொடியில் என் மன அழுத்தங்களை பறித்து எடுத்து சென்றது.

அறை முழுவதும் தெய்வீக ஒளியில் மிதந்தது.

அகஸ்தியர், விநாயகர், துர்கை, சுப்பிரமணியர் போன்ற பல தெய்வங்களின் புகைப்படங்கள் சுவரில் ஒழுங்காக நிரம்பி இருந்தன.

அவற்றின் நடுவே அகஸ்தியர் அருள்முகம் நின்று இருப்பது போல் ஒரு புனிதப் புகைப்படம்.

அதன் கீழே மரத்தில் பொறிக்கப்பட்ட இரண்டு பாதங்கள்.

அவற்றின் மேல் மலர் தாழ்கள், சந்தனம், குங்குமம் — எல்லாம் புதிதாக இருந்தது.

அந்த இடத்தில் உட்கார்ந்தேன்.

கண்களை மூடினேன்.

தியானம் தொடங்கியபோது என் மனம் அசாதாரணமான அமைதியை உணர்ந்தது.

எனக்குள்ளே ஒருவித சக்தி எழுவது போல், நான் இருந்த இடமே சுவாசிக்க ஆரம்பித்தது.

எப்போதெல்லாம் ஜெயசீலன் அவர்களை சந்திப்பேனோ,

அந்த தியானம் தவிர்க்க முடியாத வழக்கம்.

அந்த சில நிமிடங்களில் நான் வாழ்வின் அனைத்தையும் மறந்து விடுவேன்.

சில நேரம் கழித்து அவர் வெளியே வந்தார்.

அவரது முகத்தில் வழக்கமான அமைதியான புன்னகை.

“வாங்க மேடம்,” என்றார்.

நான் கோயிலில் நடந்த அனுபவத்தையும், நந்திக்கு அபிஷேகம் செய்த போது ஏற்பட்ட உணர்ச்சியையும்,

நேற்று இரவில் வந்த கனவையும்,

அதை எழுதியபோது நான் உணர்ந்த ஆனந்தத்தையும் எல்லாம் கூறினேன்.

அவர் அமைதியாக கேட்டார்.

பின்பு மெதுவாக சிரித்தார்.

“இது சாதாரண விஷயம் இல்ல மேடம்,” என்றார்.

“ஒரு பெண் என்பவள் தனியாக ஒரு கோயிலுக்குச் சென்று நந்திக்கே அபிஷேகம் செய்வது —

அது ஒரு அரிதான பாக்கியம்.

அது ஒரு அழைப்பு.

கடவுள் தான் உங்களை அங்க அழைத்திருக்கிறார்.

அந்த அழைப்பை மறக்கக் கூடாது.

மனுஷன் தன் விதியையும் தன் ஆன்மாவின் நோக்கத்தையும் அடையும்போது,

அவன் ஈர்ப்பு என்ற வார்த்தையைக் கொண்டு விளக்குகிறான்;

ஆனால் உண்மையில் அது தெய்வீக திட்டம்.

அது உங்களுக்கானது.

நீங்கள் அந்த வழியில் செல்ல தயாராக இருங்கள்.

அகஸ்தியரின் குரல் உங்களை வழிநடத்தும்.”

அந்த வார்த்தைகள் என் மனதின் ஆழத்திலே ஓலித்தன.

நான் சில நொடிகள் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவரது குரலில் எதோ நம்பிக்கையும், எதோ மறைந்த உண்மையும் இருந்தது.

“இன்னைக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மேடம்,” என்று அவர் மெதுவாகச் சொன்னார்,

“நாளைக்கு காலை வந்து போங்க, நாம அதை விரிவாகப் பார்ப்போம்.”

 

“சரி,” என்று சொல்லி எழுந்தேன்.

வெளியே வந்தபோது சூரியன் மாலைக்குத் தள்ளிவிட்டிருந்தான்.

என் மனம் முழுவதும் ஒரு ஒளி.

 

அது அகஸ்தியரின் ஒளியா,

அல்லது விதியின் அறிகுறியா என எனக்கே தெரியவில்லை.

அலுவலகத்திற்குத் திரும்பி வந்தேன்,

ஆனால் மனம் முழுவதும் அந்த பூஜை அறையின் நறுமணத்தில்,

அகஸ்தியரின் கண்களின் அமைதியில்,

மறுபடியும் ஒரு நாள் அங்கே போக வேண்டும் என்ற ஆவலில் மூழ்கியது.

 

அந்த நாளின் நினைவு

அந்த இரவு நான் எழுதின டைரி பக்கங்களில் ஒரு வரி மட்டும் —

“இன்று என் ஆன்மா பேசத் தொடங்கியது.

“யதா த்வம் ததா தேவம், யதா தேவம் ததா த்வம்।”

(நீ கடவுளை நினைக்கும் அளவுக்கே கடவுள் உன்னை நினைப்பார்.)

நாம் எவ்வளவு ஆழமாக தெய்வத்தை உணருகிறோமோ,

அவ்வளவு ஆழமாக அந்த தெய்வீக சக்தியும் நம்மைத் தொடுகிறது.

கடவுள் எப்போதும் வெளியில் இல்லை —

அவரை உணரும் அந்த நிமிடமே நம்முள் இருக்கும் அவரின் ஆவியான ஒளி வெளிப்படும் நேரம்.

*****************************************************************************************************************

அத்தியாயம் 9 : மௌனத்தின் மர்மம்

இது ஒரு சாதாரண நாள் அல்ல.

ஆனா அந்த நாளின் ஆரம்பத்திலிருந்தே எனக்குள்ளே ஏதோ ஒரு குழப்பம்.

எப்போதும் போல அலுவலகத்துக்கு கிளம்பினேன், ஆனால் மனசு அங்கேயே இல்லை.

பேனா கைல இருந்தது, ஆனா எழுத்து வரல.

என் மனம் வேறெங்கோ — அந்த பெருகருணீஸ்வரர் கோயிலின் வாசலில் நின்றது போல இருந்தது.

“எதுக்கு இப்படி இருக்கேன்?” என்று நானே என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

என் உள்ளே ஏதோ ஒரு அலை கிளம்பிக்கொண்டே இருந்தது —

ஒரு பயம், ஒரு சந்தேகம், ஒரு தேடல்.

முழு நாளும் அந்த குழப்பத்தோடே சென்றது.

எதிலும் கவனம் இல்லாமல், கையிலிருந்த டைரியைத் திறந்து சிறிது எழுதியேன்.

பின்னர் சோர்வோடு கண்களை மூடியேன்.

 

அந்த இரவில் வந்த கனவு…

அது ஒரு கனவா, இல்ல ஒரு எச்சரிக்கையா — எனக்கு இன்னும் புரியவில்லை.

அந்த கோயில் மீண்டும் என் கண்களில் தோன்றியது.

இருட்டு… ஆனால் அந்த இருட்டில் ஒரு ஒளி.

அந்த ஒளி நந்தியின் அருகே நின்றது.

அங்கே ஒரு பெண் படுத்திருந்தாள் —

அவள் நிர்வாணமாக இருந்தாள்.

ஆனால் அதில் ஒரு அசிங்கம் இல்லை…

அது ஒரு தத்துவம் போல, ஒரு உண்மையை வெளிப்படுத்தும் உருவம் போல இருந்தது.

அவளின் முகம் அமைதியாக இருந்தது, ஆனால் கண்கள் திறந்திருந்தது.

அந்த பார்வை நேராக என்னைக் கடந்து என் உள்ளத்தை கிழித்தது போல.

 

அந்த கணம் நான் உணர்ந்தது —

“இது ஒரு காட்சி இல்ல… இது ஒரு குறியீடு.”

 

என்னால் கண்ணைத் திறக்க முடியவில்லை.

அந்த காட்சி என் நரம்புகளிலே நுழைந்து விட்டது போல.

காலை விழித்தபோது என் இதயம் துடித்தது.

வியர்வையால் ஆடை நனைந்தது.

ஆனா கனவின் ஒவ்வொரு விபரமும் இன்னும் தெளிவாக இருந்தது.

“ஏன் இந்த கனவு வந்தது?”

“அந்த கோயிலும்… அந்த பெண்ணும்… என்ன பொருள் இதுக்கு?”

என்று எனக்குள்ளே நூறு கேள்விகள் எழுந்தன.

அந்த நேரத்துல எனக்கு நினைவுக்கு வந்தது —

அந்த உழவாரப்பணி நடந்த நாளில்,

ஒருத்தி சொன்னாங்க,

“இங்க முன்னாடி ஒரு ஆண் வந்து தூக்கில் போய் இறந்துட்டாராம்…”

அந்த வார்த்தை அப்போ கேட்டப்போ சாதாரணமா இருந்தது.

ஆனா இப்போ அது ஒரு கத்தி மாதிரி என் மனசுல குத்திக்கொண்டது.

“ஆண் கோயிலுக்குள்ள தூக்கி போட்டுக்கணும்னா எப்படி சாத்தியம்?”

அந்த கோயில் பெரியது, பரந்தது.

அங்க மேலே ஏறி, பக்கத்து சுவற்றுக்கு அருகே போய் தூக்கு போட முடியுமா?

அது சாத்தியமா?

அங்க காலையிலும் மாலையிலும் மக்கள் வருகை இருக்கும்,

பூஜையும் நடக்குது.

அப்போ எப்படி நடந்தது?

என்னுள் இன்னும் பல கேள்விகள் நுழைந்தன.

அந்த பெண்ணின் கனவு காட்சி,

அந்த ஆண் தூக்கி இறந்த சம்பவம் —

இரண்டுக்கும் ஏதோ ஒரு தெரியாத இணைப்பு இருந்தது.

அந்த நாள் முழுக்க நான் அமைதியா இருந்தேன்.

ஆனா அந்த மௌனத்துக்குள்ளே பயங்கரமான சத்தம் இருந்தது.

அந்த கனவு ஒரு துவக்கம் மாதிரி இருந்தது —

ஒரு மறைந்த மர்மத்தின் கதவுகள் திறக்க ஆரம்பித்தது.

என் இதயம் சொன்னது —

“அங்க இன்னும் ஏதோ உண்டு… உண்மை மறைந்திருக்கு…”

அந்த இரவு மீண்டும் நான் டைரியைத் திறந்தேன்.

ஒரே ஒரு வரி மட்டும் எழுதியேன் —

“இன்று முதல் அந்த மௌனத்தின் பின்னாலிருக்கும் மர்மத்தை நான் தேடப் போகிறேன்.”

அந்த வரியை எழுதி விட்டு விளக்கை அணைத்தேன்.

வெளியில் காற்று வீசியது.

அது ஒரு சாதாரண காற்று இல்லை —

அது யாரோ என்னோட பக்கம் வந்து, மெதுவா சொல்லியது போல இருந்தது —

“உண்மைக்கு நீ தயாரா?”

மனசு மௌனமாவது மர்மத்தின் வாயிலாகும்;

மௌனம் உண்மையாய் மாறும் போது —

கடவுள் பேச ஆரம்பிப்பார்.

மனிதன் பேசாமல் இருந்தாலும், அவன் உள்ளம் நிறைந்திருக்கும் —

சந்தேகம், ஆசை, துக்கம், பயம், நினைவுகள்…

அந்த எல்லா சத்தங்களும் மங்கும் நேரம் தான் “மௌனம்.”

ஆனால் அந்த மௌனம் வெறும் அமைதி அல்ல;

அது உண்மையை வெளிப்படுத்தும் கதவு.

அந்த கதவை திறந்தால்தான், நம்முள் மறைந்திருக்கும்

தெய்வீக குரலைக் கேட்க முடியும்.

***************************************************************************

அத்தியாயம் 10 — பிரதோஷத்தின் நாளில்

நாட்கள் மெதுவாக நகர்ந்தன.

தேடலும் வேலைப் பாட்டும் கலந்ததில், ஜெயசீலன் அவர்களின் அலுவலகத்திற்கே பல நாட்களாக போகவில்லை.

ஆனால் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு சுழல் எப்போதும் நடக்கிறது — அது என்னை மீண்டும் அந்தக் கோயிலின் நோக்கில் இழுத்து கொண்டே இருந்தது.

அடுத்த பிரதோஷம் நெருங்கியது.

அந்த நாளை நினைத்தாலே என் மனதில் கலந்த உணர்வு — பயமா? ஆர்வமா? தெளிவில்லை.

மீண்டும் அந்தக் கோயிலுக்குச் செல்லலாமென்று எண்ணம் அடிக்கடி வந்தது; கனவில் கண்டதை கடவுள் ஏதாவது அடையாளமாகக் காட்டுவாரோ என்ற நம்பிக்கையும் இருந்தது.

நான் முடிவு செய்தேன் — “இந்த பிரதோஷத்துக்கு நான் கோயிலுக்குப் போவேன்.”

அதற்காக அமைப்பில் உள்ள அக்காவை அழைத்தேன். அவள் முதலில் தயங்கினாள் .

“அங்கே ஏதாவது பிரச்சனை இருக்குமோ? ஊர் மக்கள் அங்கே போவதில்லை. நீங்கள் ஏன் மீண்டும் செல்ல நினைக்கிறாய்?” என்று

கேட்டதும்.

நான் அமைதியாகச் சொல்லினேன்,

“அக்கா, அங்கே ஒரு பாட்டி இருக்கிறார். அவர்கள் தான் தினமும் விளக்கு ஏற்றுகிறார்கள். நாம பயப்பட வேண்டியதில்லை.

அக்கா சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்; பிறகு மெதுவாக உடன்பட்டார்:

“சரி. இந்த முறை சீக்கிரம் போயிட்டு விடலாம். நாலு மணிக்கு கிளம்பி, ஆறு மணிக்குள் திரும்புவோம்,” என்று கூறினார்.

அன்று நான் வழக்கம்போல் சுண்டலும் புளியோதரையும் பிரசாதமாகச் செய்து வைத்தேன். அபிஷேகப்பொருட்களாக பால், தேன், சந்தனம், தண்ணீர் அனைத்தையும் எடுத்துக் கொண்டேன்.

மனதில் ஒரு அமைதியான எதிர்பார்ப்பு கொண்டு அக்காவும் நானும் கோயிலுக்குச் சென்றோம்.

அங்கு வந்தபோது, முன் வாசல் முழுக்க இலைகள், தூசி — அன்றி கவனிக்கப்படாத ஒரு உலர்ந்த அமைதி எங்களை நெருங்கியது.

பாட்டி அன்புடன் எங்களை வரவேற்று, “நான் காலையிலேயே நந்திக்கும் சிவனுக்கும் அகல் விளக்கு ஏற்றி வைத்து இருக்கிறேன்,”

என்று அந்த பாட்டி கூறினார்.

அக்கா உடனே சொன்னார், “முதலில் கோயிலை சுத்தம் பண்ணலாம்; பிறகு அபிஷேகம் செய்யலாம் என்றார்.

மூவர்தான் நாங்கள்; இலைகளை சரி செய்தோம், தண்ணீர் தெளித்தோம், உள்ளே இருந்த பகுதிகளை சுத்தம் செய்தோம்.

அபிஷேகப் பொருட்களை ஒழுங்கு செய்து, முதலில் பிள்ளையாருக்கு வணங்கினேன் — தூபம் ஏற்றி, மனமெல்லாம் நிம்மதியோடு, “நான் அறிந்ததை வைத்து செய்கிறேன்; ஏதாவது தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள்,” என்று சொன்னேன்.

பிறகு கோயிலை சுற்றி நந்தியின் முன் நின்று, மனதில் நிறைந்த அமைதியோடு எப்படி தெரிந்தவென்று நான்

நந்தியின் மீது பால், தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தேன். அக்கா எல்லாவற்றையும் கவனித்தார்; பாட்டியும் அருகிலே இருந்தார்.

அபிஷேகம் முடிந்தபின் சிவனருகில் நான் சென்றேன். அந்த நொடியில் உடல் முழுக்க ஒரு நடுக்கம்; மனம்—‘இது கனவா, நிஜமா?’ என்று துடித்தது. முதல் முறையாக அந்த சிவனை நேரடியாக தொட்டு அபிஷேகம் செய்யும் அதிசயம் எனக்கே கிடைத்தது. பால் வழிந்து என் கண்களில் நீரும் கலந்தது. சிவனை அலங்கரிக்கும் தருணம் ஒரு ஆழமான அமைதி, ஒரு வார்த்தையின்றி மகிழ்ச்சி — அதை விவரிக்க வார்த்தைகள் போதாது.

அந்தக் காரியத்திலிருந்து என் உள்ளம் ஒரு உண்மையை முழுமையாக உணர்ந்தது — “அவனது அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது.”

அவரை அழகாக அலங்கரித்து, நந்திக்கும் சிவனுக்கும் தேங்காய் உடைத்து, சில நிமிடங்கள் அமைதியோடு தியானித்தேன். என் உள்ளம் மெதுவாக அவரிடம் பேசத் துவங்கியது:

“ஏன் இப்படி கனவுகளால் எனை அழைக்கிறாய்?

ஏன் மீண்டும் மீண்டும் இங்கே வர சொல்லுகிறாய்?

இதற்கான அர்த்தம் என்ன, சாமி? நீயே சொல்ல வேண்டும்.”

கண்களை மூடி தியானித்தபோது, கோயிலின் அமைதியில் நந்தியும் சிவனும் மட்டும் இருந்தனர்;.ஆனால் அந்த நொடியிலேயே என் உள்ளத்தில் நெருங்கிய உணர்வு ஒருவர் இருக்கிறார் என்று தெளிவாக தோன்றியது — தேடலில் விடை கிடைத்தது.

அவனைத் தேடி வந்தேன்,

ஆனால் எனையே கண்டேன்.

அவன் சிலை அல்ல,

என் உள்ளத்திலே எழுந்த ஒளி தான்.

அவன் மௌனத்தில் அருள் பேச,

என் கண்ணீரில் பக்தி மலர்ந்தது.

“அவனைத் தேடி வந்தேன், ஆனால் எனையே கண்டேன்.”

வெளியினிலிருந்து கடவுளைக் காண்பதே இலக்கம் இருந்தாலும், உண்மையில் அந்த தேடல் நம்மை நம்மே தேடி கொண்டு வந்தது. நம்முள் தான் கடவுளின் பிரதிபலிப்பு கிடைக்கும்.

“அவன் சிலை அல்ல, என் உள்ளத்திலே எழுந்த ஒளி தான்.”

கடவுள் ஒரு பாறை உருவம் அல்ல; அவர் நம்முள் ஒளியாக ஒளிர்கிறார் — அதுதான் உண்மையான தெய்வீகமே.

 

“அவன் மௌனத்தில் அருள் பேச, என் கண்ணீரில் பக்தி மலர்ந்தது.”

கடவுள் வார்த்தைகளில் பேசாமல், மௌனத்தின் வழியே அருள் தருகிறார். அந்த மௌனம் பக்தியின் மனதில் பதில் ஊற்றியது; அதனால் நெஞ்சில் உண்மையான பக்தி மலர்ந்தது.

********************************************************************

அத்தியாயம் 11 : திரும்பும் வழியின் மௌனம்

அபிஷேகம் முடிந்தது.

சிவனின் திருமேனி முழுவதும் இன்னும் நீர் துளிகள் ஒளிந்து மிளிர்ந்தன.

அந்த ஒளி… அந்த மணம்… அந்த அமைதி — எல்லாம் ஒன்றாக கலந்து என்னுள் ஓடிக்கொண்டிருந்தது.

கோயிலுக்குள்ளே ஒருவித அமைதி.

பாட்டி மெல்ல வெளியே சென்றுவிட்டார், அக்கா சாமான்களை சேர்த்துக் கொண்டிருந்தார்.

ஆனா என் கால்கள் அங்கிருந்து நகரவே இல்ல.

சிவனை முன் வைத்து நான் மண்ணில் உட்கார்ந்தேன்.

அந்த நந்தி வழியாக அவரை பார்த்தபோது, அந்த கண்கள் நேரா என் உள்ளத்தைத் தொட்டது.

எதற்காக நான் இவ்வளவு முறை இந்த கோயிலுக்கு வந்தேன்?

என்ன காரணம் இந்த திடீர்னு வந்த கனவுகளுக்கும், இந்த மர்மமா இழுக்கும் சக்திக்கும்?

என்னுடைய ஆவலா இது, இல்ல அவனோட அழைப்பா?

அந்த கேள்விகள் ஒவ்வொன்றும் என் உள்ளத்தில் முளைத்துக்கொண்டே இருந்தது. எனது

பட்டுப் புடவை நனைந்திருந்தது,

ஒரு வித தெய்வீக சுவாசம் எனக்குள் ஊதிக்கொண்டே இருந்தது.

அந்த நிமிடத்தில் ஒரு விசித்திரமான அமைதி என்னுள் வந்து குடிகொண்டது.

அது சாதாரண அமைதி இல்ல.

அது ஒரு சக்தி.

அவனோட அருகில் இருந்ததால் கிடைக்கும் ஒரு அலைபோல்.

எனக்கு தோணுது — நான் நம்முடைய வழக்கமான மனித சிந்தனையிலிருந்து விலகி வேறொரு உலகத்துக்கு சென்று விட்டேன் போல.

என் கண்கள் சிவனில் இருந்தன, ஆனா என் மனம் என்னிடம் பேச ஆரம்பிச்சது —

“நீ வந்ததெல்லாம் வீண் இல்லை.

நீ பார்க்க வந்தது வெளியில் இல்ல.

அது உனக்குள்ளே இருக்கிறது.”

அந்த குரல் மெதுவா, ஆனா மிக தெளிவா கேட்டது போல இருந்தது.

என் மனம் உறைந்தது.

கண்களில் நீர் சொட்டியது — அது துக்கமா, சந்தோஷமா எனக்கே தெரியல.

அக்கா மெதுவா வந்து,

“போகலாமா?” என்று கேட்டார்.

நான் மெதுவாக தலை ஆட்டினேன்.

எனது கைகள் இன்னும் சிவனின் பாதம் தொட்டு இருந்தன.

ஒரு சில நொடிகள் அப்படியே இருந்தேன், பின்னர் எழுந்தேன்.

வெளியே வந்தபோது அந்த மாலை காற்று என்னை சுற்றியது.

அது தெய்வீக வாசனைபோல, சாம்பிராணி நறுமணத்தோடு கலந்தது.

வெளியே வண்டி நின்றது.

பாட்டி கதவுக்கருகில் நின்று —

“அவனுக்கு நீ ஒரு வழி ஆனேடா… அவர் உன்னை அனுப்ப மாட்டார்,” என்று மெல்ல சொன்னார்.

அந்த வார்த்தை என் மனதில் ஆழமாகப் பதிந்தது.

வண்டியில் ஏறினேன்.

அக்கா பக்கத்துல உட்கார்ந்திருந்தார்.

வண்டி நகர ஆரம்பித்தது.

கோயிலின் அந்த மலைப்பாதை மெதுவாக பின் சென்று கொண்டிருந்தது.

சூரியன் சாய்ந்திருந்தான், மஞ்சள் ஒளி மரங்களின் வழியே நுழைந்து வண்டிக்குள்ளே விழுந்தது.

அந்த ஒளி — சிவனின் கண்களிலிருந்து வந்த ஒளி போல இருந்தது.

என் மனசுக்குள்ள ஒரு புதுமையான அமைதி… ஒரு குளிர்ச்சி… ஒரு சக்தி.

வண்டி போகிற ஒவ்வொரு கிலோமீட்டருக்கும், என் உடல் தூரம் போயிட்டாலும், என் ஆவி இன்னும் அந்த கோயிலிலேயே நின்றது போல.

கண்கள் மூடினேன்.

சிவனின் உருவம் மீண்டும் என் முன் வந்தது.

அவர் மௌனமாக இருந்தார் — ஆனா அந்த மௌனத்திலே ஆயிரம் வார்த்தைகள்.

அந்த மௌனத்திலே பதில்.

அந்த மௌனத்திலே அருள்.

அக்கா மெதுவா கேட்டார் —

“என்ன சும்மா போயிட்டீங்க?”

நான் சிரிச்சேன்.

“நான் போகல… நான் இன்னும் அங்கதான் இருக்கேன்,” என்று சொல்லி கண்களை மூடியேன்.

வண்டி மெல்ல ஊர் நுழைந்தது.

அந்த வழியிலே எல்லாமே பழைய மாதிரி இருந்தது — ஆனா நான் மாறி விட்டேன்.

அந்த அபிஷேக நீர் என் உடலை நனைத்தது போல, அந்த அனுபவம் என் உள்ளத்தை முழுமையாக்கி விட்டது.

அந்த மௌனத்தின் மர்மம் இன்னும் பேசிக்கொண்டிருந்தது.

அந்த இரவு வீட்டில் டைரியைத் திறந்தேன்.

ஒரு வரி மட்டும் எழுதினேன் —

“சிவன் மௌனமாயிருந்தார்.

ஆனா அந்த மௌனமே எனக்கு விடை.”

 

விளக்கை அணைத்தபோது என் இதயம் சொன்னது —

“இது முடிவு அல்ல… தொடக்கம்.”

 

“அவன் ஒளியாய் இருந்தான்;

நான் இருளாய் அவனுக்குள் நுழைந்தேன்.

அவன் பேசவில்லை,

ஆனால் என் உள்ளத்தின் எல்லா கேள்விகளும் மௌனத்தில் கரைந்தன.”

 

கடவுள் எப்போதும் ஒளியாக நம்முள் இருக்கிறார்;

நாம் நம்முடைய இருளை உணர்ந்து அவரை அடைந்தால்,

அவர் பேசாமலேயே நமக்கு எல்லா பதிலும் தந்து விடுகிறார்.

அவன் மௌனமே அருளின் மொழி;

அதில் நம்முடைய கேள்விகளும் கரைந்து அமைதியாகி விடுகின்றன.

************************************************************************************

அத்தியாயம் 12 : நந்தியின் காது உடைந்த இரவு

அந்த இரவு... சிவனின் நாமம் சொல்லிக்கொண்டே தூங்கினேன்.

மனசு அமைதியாய் இருந்தது — ஆனா அந்த அமைதிக்குள் ஒரு கனமான ஒலி...

அது கனவா? சின்னமா? சொல்ல முடியாதது.

என் கண்கள் திறக்காமல் ஒரு கோயிலுக்குள் நுழைந்தது போல உணர்ந்தேன்.

பழமையான சிவன் கோயில்.

மழை நனைந்த காற்று, ஈரமாய் நறுமணம்விட்ட பூமி,

சன்னதியில் மங்கல ஒளி.

அங்கிருந்தது நந்தி.

அவன் மௌனத்தில் கரைந்தவன் — ஆனால் அன்றைய இரவில்,

அவன் மௌனம் கூட ஒரு குரலாய் தோன்றியது.

நந்தியின் ஒரு காது உடைந்திருந்தது.

அந்த உடைதல் ஒரு புண்ணிய குரல் போல என் இதயத்தில் அதிர்ந்தது.

அதே நேரத்தில், மண்டபத்தின் இருண்ட பக்கம்…

ஒரு பெண் தரையில் விழுந்து கிடந்தாள்.

அவள் உடல் காயத்தால் நிறைந்தது,

அவளது குரல் மெல்லிய துடிப்பாய் காற்றில் கலந்தது.

அவளை நோக்கி ஒருவன் — கையில் இரும்புக் கம்பி.

அது மின்னலில் ஒளிர்ந்தது.

அவன் அதை தூக்கி அடிக்க முயன்ற நொடியே,

மின்னல் பிளந்து சன்னதியை ஒளிர்த்தது.

அந்த ஒளியில் நான் கண்டேன் — நந்தியின் காது சிதறி விழுந்தது.

அந்த ஒலி — ஒரு மௌன தெய்வத்தின் எச்சரிக்கை போல.

அந்த பெண்ணை காப்பாற்ற ஒரு ஆண் பாய்ந்து வந்தான்!

அவன் “அவளை விடு!” என்று அலறினான்.

ஆனால் நாலு பேர் அவனை பிடித்தார்கள்.

அவர்களின் கைகள் அவனைச் சுற்றி, அவன் முயற்சி காற்றில் கரைந்தது.

அவன் குரல் மட்டும் ஒலித்தது — “அவள் சாமியோட வழி... அவளை காயப்படுத்தாதீங்க…”

அந்த நொடியே எல்லாம் இருளில் கரைந்தது.

நந்தியின் காது உடைதல் ஒலி மட்டும் மீதமிருந்தது.

அடுத்த நாள் காலையில், அந்த கனவை முழுமையாக நினைவில் வைத்துக்கொண்டு,

ஜெயசீலன் சாரிடம் சொல்லினேன்.

நான் கனவில் கண்டதை அவர் கேட்டுவிட்டு,

“சில கனவுகள் எச்சரிக்கையா வரும்.

சில கனவுகள் அருளின் அடையாளமா வரும்,” என்றார்.

பின்பு அவரிடம் கேட்டேன் —

நான் சிவனுக்கு அபிஷேகம் செய்வது தவறா?

அதனால்தான் இதே போன்ற கனவு வந்திருக்கின்றதா? என்று.

அவர் சொன்னார்,

“சிவன் மட்டும் நாம் எதை மனதார அவருக்கு அளிக்கின்றோமோ,

அதை பரிபூரணமாக ஏற்றுக்கொள்ளும் தெய்வம்தான் அவர்.”

பின்பு இதற்கு சம்பந்தமான ஒரு கதையையும் என்னிடம் கூறினார்.

 

கண்ணப்ப நாயனார் கதை

கண்ணப்ப நாயனார் ஒரு வேட்டைக்காரராகப் பிறந்தார்.

அவர் இயற்கையில் வளர்ந்து, இறைவனைப் பற்றிய எந்த கல்வியுமில்லாமல் இருந்தாலும்,

அவரது மனம் தூய பக்தியால் நிறைந்திருந்தது.

ஒரு நாள் வேட்டையாடிச் சென்றபோது,

அவர் ஒரு சிவலிங்கத்தை கண்டார்.

அந்த வடிவத்தைப் பார்த்ததும் அவருக்குள் பெரும் பக்தி எழுந்தது.

அதற்கு எந்த முறையும் தெரியாமல்,

தனது அன்பு வழியில் இறைவனை வழிபட்டார் —

வேட்டையாடிய மாமிசத்தை நைவெத்தியாய் வைத்து,

குளிர்ந்த நீர் இல்லை என்பதால்,

வாயில் எடுத்த நீரால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தார்.

இந்த எளிமையான ஆனால் உண்மையான பக்தி சிவபெருமானை மகிழ்ச்சியாக்கியது.

ஒரு நாள் சிவலிங்கத்தின் கண்களில் இரத்தம் வந்தது.

கண்ணப்ப தனது கண் ஒன்றை தானே எடுத்து அந்த இடத்தில் வைத்து,

சிவனின் வலியை ஆற்றினார்.

பின்னர் மற்றொரு கண்ணையும் அர்ப்பணிக்க முனைந்தபோது,

சிவபெருமான் வெளிப்பட்டு,

அவரை “என் உண்மையான பக்தன்” என்று அருளினார்.

 

அவர் 63 நாயன்மார்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.

கதையின் பொருள்:

உண்மையான பக்திக்கு விதிமுறை தேவையில்லை;

மனத்தின் சுத்தமும் அன்பும் போதுமானது.

பின்பு தான் மனம் சாந்தி அடைந்தது.

பின்பு அவருடைய அலுவலகத்தில் பூஜை அறைக்கு சென்று

அகஸ்தியரை வணங்கி விட்டு,

நெற்றியில் விபூதியும் குங்குமமும் வைத்துவிட்டு,

பின்பு எனது வீட்டுக்கு சென்றேன்.

அருள் வழி வடிவம் அல்ல, மனம் தான்;

கண்ணைத் தந்த கண்ணப்பனின் வழி அதுவே.

மௌன நந்தி சாட்சியாய் நின்றான் —

பக்தியின் உண்மை மனத்தில் பிறக்கிறது.

 

சிவபெருமானை அடைவதற்கு சடங்கு, பொருள், முறைமைகள் வேண்டாம்.

பக்தியின் அளவு குரலில் இல்லை — மனத்தின் சுத்தத்தில் தான் இருக்கிறது.

கண்ணப்ப நாயனார் கல்வி அறியாதவர்;

ஆனால் அவர் இதயம் தெய்வீகமானது.

அவர் கொடுத்த மாமிசம், உண்மையில் அன்பின் மாமிசம்.

அவர் கண்களை எடுத்துத் தந்த பக்தி,

உலகின் எல்லா சாஸ்திரங்களையும் மீறியது.

********************************************************************

அத்தியாயம் 13 : இரும்புக் கம்பியின் இரவு

அன்றைய நாள் முடிந்தது. ஜெயசீலன் அவர்களோடு நடந்த பேச்சு மனசுக்கு கொஞ்சம் அமைதி தந்தது.

அவர்களின் வார்த்தைகள் —

“சில கனவுகள் எச்சரிக்கையா வரும், சில கனவுகள் அருளின் அடையாளமா வரும்” — இன்னும் காதில் ஒலிச்சுக்கிட்டே இருந்தது.

நான் வீட்டுக்கு வந்து வழக்கம்போல எல்லா வேலைகளையும் முடிச்சுட்டேன்.

வீட்டில் எல்லோரும் தூங்கி விட்டார்கள்.

அந்த இரவு ஒரு எண்ணம் மட்டும் மனசுல —

“அடுத்த பிரதோஷத்துக்கு ஜெயசீலன் அவர்களோடு கோயிலுக்குப் செல்லலாம்.

இந்த கனவுகளுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா, இல்லையா தெரியட்டும்…”

அப்படி நினைச்சுக்கிட்டு தூங்கிய நொடியே, அதே கனவு மீண்டும் வந்தது.

முன்னாடி பார்த்த அந்த கோயில்தான்.

ஆனா இப்போ அது இன்னும் இருண்டு இருந்தது.

நந்தி முன்னே இருந்தான், ஆனா சுற்றிலும் ஒரு நீல ஒளி மங்கலமா பறந்தது.

மூச்சே சிரமமா போச்சு. அந்த ஒளிக்குள்ள ஒரு குரல் மாதிரி —

இரும்பு உரசுற சத்தம்…!

அந்த சத்தத்தோடே நந்தியின் காது கண்ணுக்குத் தெளிவா தெரிந்தது.

அது உடைஞ்ச இடத்துல ஒரு காயம் மாதிரி, நீல இரத்தம் வழிந்தது போலத் தெரிந்தது.

என் இதயம் துடிச்சது. அந்த இரும்புக் கம்பி மீண்டும் அந்த காட்சியிலே தெரிஞ்சது.

அந்த கம்பி யாரோ ஒருவனோட கையில. அவன் நிழல் நந்தியின் பக்கம் நகருது.

அவன் கம்பியை தூக்கி அடிக்க முயன்ற நொடியே — மின்னல் வெடிச்சது!

கோயிலோட மணி தானா ஒலிச்சது.

மழை துளிகள் சன்னதிக்குள் விழுந்தது.

அந்த ஒளியில் நந்தியின் காது மீண்டும் சிதறி விழுந்தது.

 

“ஏன் இதே காட்சி மீண்டும்? ஏன் நந்தியின் காது?” — மனசு பயத்தோட துடிச்சது.

அந்த சமயத்துல ஒரு குரல் கேட்டது —

“யாமினி…”

அந்த குரலோட நான் திடீர்னு கண் திறந்தேன்.

முழுக்க வியர்வையோட நனைந்திருந்தேன்.

மூச்சு திணறி, சில நிமிஷம் அமைதியா உட்கார்ந்தேன்.

அந்த கனவு ஒரு சாதாரண கனவு இல்லன்னு உணர்ந்தேன்.

காலை எழுந்தவுடன் ஜெயசீலன் அவர்களோடு போனில் பேசினேன்.

அவர்கள் கவனமா கேட்டுக்கிட்டே இருந்தார்கள்.

பின்னர் மெதுவா சொன்னார்கள் —

“நீங்க பயப்படாதீங்க. இது தீர்க்கமான கனவாக இருக்கலாம்.

அடுத்த பிரதோஷம் வரை காத்திருங்க. சிவபெருமான் உங்களுக்கு பதில் தருவார்.

இரவு தூங்குவதற்கு முன்னால் ஒவ்வொருதடவையும் விபூதி பூசி தூங்குங்க,

மனசு சஞ்சலப்படாமல் இருக்கும்.”

ஜெயசீலன் அவர்கள் அந்த மாதிரி நிம்மதியா சொல்லியதால மனசு கொஞ்சம் சாந்தமா ஆனது.

ஆனா உள்ளே அந்த பயம், அந்த நந்தியின் காது நினைவு — இரண்டும் மறையல.

எதோ நடக்கப்போகுது போல அந்த உணர்ச்சி இன்னும் உள்ளே சுற்றிக் கொண்டே இருந்தது.

அந்த இரவு சிவபெருமானிடம் ஒரு வேண்டுதல் வைத்தேன்.

“என்னுடைய கனவுகளுக்கு அர்த்தம் தெரியணும், சிவா.

இது பயமா இல்ல, புரியாமையா எனக்கு தெரியலை.

நீங்கள்தான் எனக்கு ஒரு வழியை காட்டணும்…”

அந்த வேண்டுதல் ஒரு புது பயணத்துக்கு தொடக்கம் ஆனது…

“நந்தி சன்னதி அருகே நின்ற மனம் நிம்மதியடையும்;

சிவனின் அருளை உணர்ந்தவனுக்கு இருள் எட்டாது.”

நந்தியின் அருகில் நிற்கும் மனம் எப்போதும் உறுதியுடன் இருக்கும்;

சிவனின் அருளை உணர்ந்தவனிடம் எந்த இருளும் நிலைக்க முடியாது.

****************************************************************

அத்தியாயம் 14 : தீர்மானத்தின் நாள்

நாங்கள் எதிர்பார்த்த பிரதோஷ நாள் இறுதியாக வந்தது. அந்த நாள் காலைதான் மனசுக்குள்ளே ஒரு விதமான அமைதி இருந்தது — அது ஒரு சாதாரண நாள் இல்லை, ஏதோ பதில் கிடைக்கப்போகும் நாள் போல இருந்தது.

ஜெயசீலன் அவர்கள் பெருங்கருணீஸ்வரர் அவர்களுக்கு தேவையான அபிஷேகப் பொருட்களின் பட்டியலை நிதானமாகச் சொன்னார்கள். நான் அவற்றை அனைத்தையும் கவனமாக வாங்கிக்கொண்டேன் — பால், சந்தனம், பழங்கள், பூக்கள், தீபத்திற்கான எண்ணெய், நெய், பிரசாதத்திற்கான பொருட்கள் என எல்லாவற்றையும் முறையாகச் சேர்த்தேன்.

பின்னர் பிரசாதத்தையும் தயாரித்து முடித்து, அவர்களின் அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கிருந்த பூஜை அறை எப்போதும் போல் ஒரு ஆன்மீக ஒளியால் நிரம்பியிருந்தது. அந்த இடத்தில் பொருட்களை வைத்தவுடன் இருவரும் சில நொடிகள் அமைதியாக நின்றோம். ஜெயசீலன் அவர்கள் நிமிர்ந்து பார்த்து மெதுவாகச் சொன்னார்கள்

“இன்று அனைத்தும் ஒரு வழிகாட்டுதலாக இருக்கும் நாள். இதுவரை காணாததை நாம் காணப்போகிறோம்.”

அந்த வார்த்தைகள் ஒரு தீர்மானத்தின் ஒலி போல இருந்தது. அவருடன் சேர்ந்து நானும் கைகளை இணைத்து பிரார்த்தனை செய்தேன்.

“பெருங்கருணீஸ்வரா, இன்றைய பயணத்துக்கு நீங்களே வழிகாட்டணும்,” என்று மனதுக்குள் மௌனமாகச் சொன்னேன்.

அதற்குப் பிறகு, நாங்கள் கோயிலுக்குப் போக முடிவு செய்தோம் — மூச்சு நிமிர்ந்த ஒவ்வொரு நொடியும் ஒரு புதிய பரவசத்தைத் தந்தது.

அன்றைய மதியம் மூன்று மணிக்கு நாங்கள் கிளம்பினோம். வெயில் மெதுவாகக் குறைந்திருந்தாலும், காற்றில் ஒரு பரவசம் இருந்தது. அது ஒரு அழைப்போ, அல்லது ஒரு எச்சரிக்கையோ எனத் தெரியவில்லை — ஆனால் அந்த நாளின் பயணம் மனசுக்குள்ளே ஒரு மாறுதலை ஏற்படுத்தப்போகுது என்பது நிச்சயம்.

ஜெயசீலன் அவர்கள் டூவீலரில் முன்பாகச் சென்றார்கள். நான் என் வண்டியில் அவர்களை பின் தொடர்ந்தேன்.

பாதை நெருங்க நெருங்க காற்று இன்னும் கனத்தது. மக்களே இல்லாத வெறிச்சோலை, ஆனாலும் ஒவ்வொரு மூலையிலும் யாரோ நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் போல ஒரு உணர்வு. எங்களது அமைப்பில் உள்ள அக்கா, ஜெபமாலையை இறுக்கப் பிடித்து மெதுவாக, “ஓம் நமசிவாயா…” என்று சொல்லத் தொடங்கினார்கள்.

மாலை நேரம். மூன்று மணிக்கு கிளம்பிய நாங்கள், நான்கு மணிக்கு கோயில் அருகே வந்தோம். தொலைவில் மணி ஒலி கேட்டது — அதே சத்தம், நான் கனவில் கேட்டது போல. நான் வண்டியை மெதுவாக நிறுத்தினேன். ஜெயசீலன் அவர்கள் சன்னதி வாசலுக்கு அருகே நின்றிருந்தார்கள்.

அந்த நொடியே காற்று சற்றுக் கனமானது. மணல் பறந்து முகத்தில் பட்டது. கோயிலின் மணி ஒரு முறை அடிக்கப்பட்டது — அந்த ஒலி நம்ம மூவருக்கும் ஒரே நேரத்தில் நின்றுவிட்ட மாதிரி உணர்ந்தோம்.

வெளிச்சமும் இருளும் கலந்து, காற்றும் மணிசத்தமும் சேர்ந்து ஒரு தெய்வீக அமைதியை அளித்தது. நாங்கள் அந்த வாசலின் முன் நின்றோம் — உலகம் அங்கே நின்றது போல.

“ஓம் நமசிவாய நமோ நம" பிரபஞ்சம் முழுவதும் ஒளிர்கின்ற பரம்பொருளே, எங்கள் மனதை சுத்தமாக்கி வழி காட்டுவாயாக.”

இந்த ஸ்லோகம் சிவபெருமானின் “ஓம் நமசிவாய” மந்திரத்தின் விரிவாக்கமாகும். இதன் பொருள் — “நமஸ்காரம் சிவனுக்கு; அனைத்திலும் நிறைந்த பரம்பொருளுக்கு.” இந்த மந்திரம் ஜெபிக்கப்படும் போது மனம் புனிதமாகிறது, பயம் கரைகிறது, மனிதனுக்குள் இருக்கும் குழப்பம் தீர்ந்து ஆன்மீக ஒளி தோன்றுகிறது.

அந்த மாலை நேர கோயில் வாசலில் எழுந்த மணிசத்தம், அந்த மந்திரத்தின் உயிரோட்டமே போல் இருந்தது — அந்த நொடியே அமைதி தெய்வமாக நின்றது.

***********************************************************************

தொடரும் ...