பிள்ளைகள் சொல்வதையும் கேட்கலாமே..! 031

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

பிள்ளைகள் சொல்வதையும் கேட்கலாமே..! 031

பிள்ளைகள் சொல்வதையும் கேட்கலாமே!!

        "அனு, நாளைக்கு பரீட்சைக்கு படிக்காம வெளியே வந்து உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்கே?"

       "இல்லைம்மா. உள்ளே அந்த அங்கிள் இருக்காரு. எனக்கு அங்கே இருக்க பிடிக்கல. அதனால தான் இங்கே வந்துட்டேன்."

        "அனு, அவங்க நம்ம அப்பாவோட தூரத்து சொந்தக்காரங்க. நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளி கிட்ட நாம நல்லபடியா நடந்துக்கணும். இப்படி எல்லாம் பேசக் கூடாதும்மா. அதை கேட்டால் அவங்க மனசு சங்கடப்படும்."

          "அது இல்லைம்மா. அந்த அங்கிள் என்னை தொட்டு கொஞ்சுறது எனக்கு பிடிக்கல."

          "அனு, இத்தனை நாளா உன் தாத்தா, பாட்டி தவிர வேற சொந்தக்காரங்க யாரும் நம்ம வீட்டுக்கு இப்படி வந்து தங்கியதில்லை. அதனால் தான் உனக்கு அப்படி தோணுது. முதலில் நீ அவரை அங்கிள்ன்னு கூப்பிடுறதை நிறுத்து. அவர் உன் அப்பாவோட பெரியம்மா பையன். உனக்கு சித்தப்பா முறை வேணும்."

            "அம்மா சித்தப்பாவா இருந்தாலும் இப்படி தொடுறது எல்லாம் எனக்கு பிடிக்கல."

          "அனு, உன் சித்தப்பா ஊரில் வளர்ந்தவர். அங்கே எல்லாம் சின்னப் பிள்ளைகளை பாசமா தொட்டு தான் கொஞ்சுவாங்க. நீ இங்கே நகரத்தில் வளர்ந்தவனால உனக்கு அது தப்பா தோணுது. இனி இதைப் பற்றி பேச வேண்டாம். நேரமாச்சு. உள்ளே போய் படி."

        "அனு அறையினுள் படித்துக் கொண்டிருக்கும் போது அவள் சித்தப்பா அவள் அருகே வந்து "அனு குட்டி, படிச்சுட்டு இருக்கியா? இந்தாம்மா. உனக்கு பிடிச்ச சாக்லேட்" என்று கூறி அவள் கன்னத்தில் முத்தம் பதித்து கொடுத்தான்.

      அதை சற்றும் எதிர்பாராத அனு, அவன் கொடுத்த சாக்லேட்டை தூக்கி வீசி எறிந்தாள்.

      அதை பார்த்த கோகிலா அனுவிடம், "அனு என்ன பண்ணுற? நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லியிருக்கேன்ல. வீட்டுக்கு வந்த விருந்தினர் கிட்ட இப்படி தான் மரியாதை இல்லாமல் நடந்துப்பியா? அவர் கிட்ட மன்னிப்பு கேளு."

       அம்மா சொன்னதால் "சாரி என்று பெயருக்கு சொல்லி விட்டு படிக்க சென்றாள்.

        "தம்பி, அனு சின்ன பொண்ணு. ஏதோ தெரியாம பண்ணிட்டா. அவள் என்னைத் தவிர யாரையும் தொடவோ, முத்தமிடவோ அனுமதிக்க மாட்டாள். நீங்கள் பாசத்தோடு செய்தது அவளுக்கு புரியல. அவ சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்."

          "அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணி. எனக்கு அனு குட்டியை பார்த்ததும் ஊரில் என் அண்ணன் பொண்ணு வள்ளி ஞாபகம் வந்துட்டு. அதனால் தான் அவளை கொஞ்சுவது போல் இவளைக் கொஞ்சினேன். அனு குட்டிக்கு பிடிக்காட்டி இனி அவளை கொஞ்ச மாட்டேன்" என்று கூறி விட்டு அவன் அறைக்கு சென்றான்.

            பின் இரவு படுக்கப் போகும் போது அனு தூங்கிய பின் கோகிலா அவள் கணவரிடம், "என்னங்க, உங்க தம்பி இங்கே வந்தது நம்ம அனுவுக்கு பிடிக்கல. அவ எப்போ பார்த்தாலும் அவரு கிட்ட மூஞ்சை காட்டுறா. இன்னைக்கு கூட அவரு ஆசையா சாக்லேட் கொடுத்தாரு. அதை அவள் தூக்கி எறிஞ்சுட்டா. அவள் பண்ணது தப்புன்னு அவளை மன்னிப்பு கேட்க சொன்னேன். அவளும் சாரி கேட்டாள். ஆனாலும் உங்க தம்பி முகம் வாடிப் போய் விட்டது. எனக்கே கஷ்டமா போச்சு."

          "என்ன சொல்லுற கோகிலா, நம்ம அனு அப்படி எல்லாம் பண்ண மாட்டாளே. நம்ம வீட்டுக்கு நம் நண்பர்கள், அவர்களின் பிள்ளைகள் எத்தனை பேரு வந்து இருக்காங்க? எல்லாரிடமும் அனு நல்லா தானே பழகுவா."

        "ஆமாங்க. அது தான் எனக்கும் புரியல. அவங்க எல்லாம் வீட்டுக்கு வந்துட்டு உடனே கிளம்பிடுவாங்க. ஆனால் சொந்தக்காரங்கன்னு யாருமே இப்படி கொஞ்ச நாட்கள் தங்கியது இல்லைல. அதனால தான் அனு இப்படி நடந்துக்கறா போல."

          "சரி கோகிலா, விடு அனு சின்னப் பொண்ணு தானே. சரியாயிடுவா. கேசவனுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்துள்ளேன். இன்னும் இரண்டு நாளில் கிடைச்சுடும். அதுக்கு அப்புறம் அவன் அலுவலகம் பக்கத்தில் அறை எடுத்து தங்கிக் கொள்வான்."
  
         "அவரு இங்கே இருக்கிறது எனக்கு உதவியா தான் இருக்கு. ஆனால் அனுவுக்கு பிடிக்கலையே. நம்ம பொண்ணை இன்னும் சொந்தக்காரங்க கூட நல்ல பழக விடணும். அப்போ தான் அவ போக்கில் மாற்றம் ஏற்படும்."

         "சரி பார்க்கலாம். இப்போ நீ தூங்கு" என்று கூறி விட்டு இருவரும் தூங்கி விட்டனர்.

        மறுநாள் காலையில் கோகிலா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று அவள் வீட்டில் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அதைக் கேட்டு பதறிய கோகிலா விஷயத்தை தன் கணவர் கோகுலிடம் கூற இருவரும் அவள் அம்மா வீட்டுக்கு செல்ல முடிவு எடுத்தனர். ஆனால் அனுவுக்கு பரீட்சை இருப்பதால் அவளை கேசவன் பொறுப்பில் விட்டு விட்டு கிளம்பலாம் என்று முடிவு எடுத்தனர்.

      அதைக் கேட்ட அனுவோ, "அம்மா நான் உங்க கூடவே வந்துறேன். என்னால இங்கே தனியா இருக்க முடியாது" என்று அழுதாள்.

         "அனு, அம்மா சொன்னா கேட்கணும். அங்கே பாட்டிக்கு உடம்பு சரியில்லை. உன்னையும் கூட்டிட்டு போனால் பாட்டியை பார்த்துக்க அம்மாக்கு சிரமமா இருக்கும். நீ பள்ளிக்கு போய்ட்டு வந்ததும் அப்பா வீட்டுக்கு வந்துடுவாரு. அம்மா அங்கே இருக்கும் சூழ்நிலையை பார்த்துட்டு இரண்டு நாளில் கிளம்பி வந்துடுவேன்."

             "கேசவ் தம்பி, அனுக்கு எல்லாம் தயார் பண்ணிட்டேன். இன்னும் அரைமணி நேரத்தில் பள்ளி வேன் வந்துடும். அவளை வேனில் மட்டும் ஏற்றி விட்டுடுங்க" என்று அவனிடம் கூறி விட்டு அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றனர்.

      அவர்கள் போகும் போது அனுவின் முகம் வாடிப் போயிருந்தது. அவளை பார்க்கவே பாவமாக இருந்தது. ஆனாலும் அவளுக்கு பரீட்சை என்பதால் மனமில்லாமல் கோகிலா அவளை விட்டுச் சென்றாள்.

          வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் அவர்கள் போனதும், "என்னங்க என்னோட அலைபேசியை வீட்டிலே வைச்சுட்டேன். கொஞ்சம் வண்டியை திருப்புங்க. எடுத்துடு போலாம். ஒருவேளை அம்மா வீட்டில் இருந்து யாராவது கால் பண்ணா தெரியாமல் போயிடும்."

        "இதை எல்லாம் முன்னாடியே பார்க்க மாட்டாயா? இப்போ தேவையில்லாத அலைச்சல் பாரு. சரி வா" என்று இருவரும் வீட்டுக்கு திரும்பினார்கள்.


          அவர்கள் வீட்டு வாசலில் பள்ளி வேன் வந்து ஹாரன் அடிக்க அனு வெளியே வரவில்லை. இவர்கள் வீட்டு வாயில் அருகே வரவும் வேன் கிளம்பி விட்டது. ஆனால் அனுவின் ஷூ வெளியே இருந்தது.

     அதை பார்த்த கோகிலா, "என்னங்க அனு ஷூ வெளியே இருக்கு. அவள் வேனில் ஏறின. மாதிரி தெரியலையே. இன்னைக்கு அவளுக்கு முக்கியமான பரீட்சையாச்சே. அவ ஏன் பள்ளிக்கு போகல?"

         "ஒரு வேளை கேசவன் வண்டியில் கூட்டிட்டு போறேன்னு சொன்னானா? வா, உள்ளே போய் பார்ப்போம்" என்று கூறி விட்டு இருவரும் உள்ளே சென்றனர்.

       உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு இருந்தது. ஆனால் சத்தம் எதுவும் கேட்கவில்லை. அதனால் இருவரும் என்னவோ ஏதோவென்று பின்பக்கம் வழியாக உள்ளே சென்றனர். அங்கு அனுவின் அறையில் அனு கேசவனிடம் கெஞ்சும் சத்தம் கேட்டது.

         "அங்கிள் எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு. என்னை விட்டுருங்க. நான் கிளம்பணும்."

           "அனு குட்டி, நீ ஒரு அஞ்சு நிமிடம் அங்கிள் சொன்னதைக் கேட்டால் அங்கிளே உன்னைக் கொண்டு ஸ்கூலில் விட்டுறேன்."

          "அங்கிள் நீங்கள் சொல்வதையெல்லாம் செய்ய முடியாது. எங்க மிஸ் "அம்மாவைத் தவிர வேற யாரும் உங்களைத் தொடவோ, முத்தமிடவோ அனுமதிக்கக் கூடாது. அது தப்பு" என்று சொல்லியிருக்காங்க.

          "அதெல்லாம் இல்லை செல்லம். நான் உன் சித்தப்பா தானே. நான் உன்னை தொடலாம், தொட்டு கொஞ்சலாம், முத்தமிடலாம்."

          "அங்கிள் நீங்கள் பண்ணுறது தப்பு. நீங்க என் கிட்ட வந்தால் நான் சத்தமாக கத்துவேன்."

           "ஏதோ சின்னப் பிள்ளைன்னு பார்த்தால் ஓவரா பேசுற. சத்தம் போட்டு கத்தினால் கத்தியால் குத்தி விடுவேன்" என்று அவளை மிரட்டினான்.

     நிலைமையின் தீவிரம் உணர்ந்து கோகுல் போலீசுக்கு கால் பண்ணினான். கோகிலா அறைக்கதவை வேகமாக தட்டினாள்.

      அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டதும் கேசவன் யாரோ உள்ளே வந்து விட்டார்கள் என்று பயந்தான். அதனால் அமைதியாக நின்று கொண்டு, அனுவின் வாயையும் பொத்தினான்.

       கோகுல் போலிசுக்கு தகவல் கொடுத்து விட்டு, அறைக்கதவை வேகமாய் தள்ளினான். அவன் தள்ளிய வேகத்தில் கதவு திறந்தது. அறையின் வெளியே கோகுலும், கோகிலாவும் நிற்க அதை எதிர்பாராத கேசவன் பயத்தில் உறைந்து போனான்.

     அம்மா, அப்பாவை பார்த்த அனுவோ அவன் கையை கடித்து விட்டு, அவனிடம் இருந்து தப்பி அம்மா கிட்ட ஓடிப் போனாள்.

       "அம்மா, இந்த அங்கிள் என்னை உள்ளே பூட்டி வைச்சிட்டு என்னஎன்னமோ செய்யுறாரு. நான் கத்தினால் கத்தியை காட்டி மிரட்டுறாரு. இவர் பேட் அங்கிள் மா."

         "ஆமாம் அனும்மா. இவர் பேட் அங்கிள் தான். நான் தான் நீ அப்பவே அவரைப் பற்றி சொன்ன போது நம்பவில்லை."

         "டேய் துரோகி, உன் பிள்ளை மாதிரி இருக்குற சின்னப் பிள்ளையிடம் உன்னால் எப்படி இவ்வளவு கேவலமாக நடக்க முடியுது. உன்னை என் தம்பின்னு தானே வீட்டில் விட்டேன்."

         "அண்ணா, என்னை மன்னிச்சுருங்க. நான் ஏதோ புத்தி கெட்டுப் போய் பண்ணிட்டேன். இனி இந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டேன்."

          "ஏன்டா, நாங்கள் ஊருக்கு போனதை பயன்படுத்தி என் பொண்ணு கிட்ட தப்பா நடக்க பார்த்துருக்க. எவ்வளவு அழகா பிளான் போட்டு செய்துட்டு இப்போ புத்தி கெட்டுப் போய் பண்ணதா பொய் சொல்லுறீயா?"

          அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே போலீஸ் உள்ளே வந்தனர். "சார் இவன் தான் நான் சொன்ன அயோக்கியன். நாங்கள் மட்டும் இங்கே வரவில்லை என்றால் என் பொண்ணை சீரழிச்சிருப்பான். இவனை சொந்தக்காரன் நம்பி விட்டது தப்பா போச்சு. இவனை கைது செய்து தூக்கில் போடுங்க. அப்படியாவது இவனை மாதிரி ஆளுங்க திருந்தட்டும்."

         "சரி சார்,  இனி நாங்க இவனை  பார்த்துக்கிறோம். நீங்க உங்க பொண்ணை பத்திரமா பார்த்துக்கோங்க. உங்க பொண்ணை மருத்துவரிடம் கூட்டிட்டு போய் கவுன்சிலிங் கொடுங்க."

       பின் இருவரும் அனுவை அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் சென்றார்கள்.

        அவளை பரிசோதித்த மருத்துவர், "கோகிலா உங்க பொண்ணு அந்த கயவனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளாள். அவளுக்கு என்ன வருத்தம் என்றால், அவனைப் பற்றி உங்களிடம் சொல்லியும் நீங்கள் நம்பாமல் இருந்தது தான்.

       நம்மில் பல பேரும் இப்படித் தான். குழந்தைகள் நம்மிடம் ஏதாவது சொல்ல வரும் போது அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நாம் அவர்கள் சொல்ல வருவதை கேட்க மாட்டிக்கிறோம். என்ன தான் நெருங்கிய உறவுகளாக இருந்தாலும், அவர்கள் தொடுதல் உங்கள் குழந்தைக்கு தவறாகப் பட்டால் அதை காது கொடுத்து கேளுங்கள். அவர்கள் எங்கே தொட்டார்கள்? என்று கேளுங்கள். அதை விட்டுட்டு தொட்டது மாமா தானே, சித்தப்பா தானே. அதை பெரிதுப் படுத்தாதே என்று உங்கள் குழந்தையிடம் கூறாதீர்கள். உங்கள் முன் நல்லவர் போல் உங்கள் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு, நீங்கள் இல்லாத போது வேறு இடத்தில் தொடலாம். அதனால் குழந்தைகள் சொல்லும் போதே அது என்னவென்று தீர விசாரித்தால் இது போன்ற பிரச்சனைகளில் உங்கள் குழந்தை சிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இத்தனைக்கும் அவளுக்கு குட் டச், பேட் டச் பற்றி நன்கு தெரிந்துள்ளது. அவள் ஆசிரியர் அதைப் பற்றி வகுப்பில் சொல்லிக் கொடுத்துள்ளார். அதனால் அவன் முதன்முறை தொடும் போதே குழந்தை சரியாக புரிந்து கொண்டு, உங்களிடம் சொன்னாள். நீங்கள் தான் அவள் சொல்லுவதை கேட்கவில்லை."

         "ஆமாம் டாக்டர். தப்பு என் மேல் தான். நான் தான் என் குழந்தை சொல்லுவதை சரியாக கேட்காமல் அவளை திட்டி அனுப்பி விட்டேன்."

         "அனு குட்டி, என்னை மன்னிச்சுடும்மா.. இனிமேல் அம்மா நீ சொல்லுறதை கேட்பேன். சரியா?"

         "ம்ம் சரிம்மா. இனி நம்ம வீட்டுக்கு அந்த அங்கிள் வர மாட்டாருல."

        "வர மாட்டாரு செல்லம். அப்பா அவனை போலீஸ் கிட்ட பிடிச்சி கொடுத்துட்டேன்."

         "அப்படின்னா நாம  வீட்டுக்கு போகலாம். அப்பா என்னை பள்ளியில் விட்டுருங்க."

         "அனு குட்டி, இன்று உனக்கு பள்ளியில் விடுமுறை சொல்லியாச்சு. உன் ஆசிரியர் சரின்னு சொல்லிட்டாங்க  அதனால் நாம இப்போ ஜாலியா வெளியே போவோம்."

       "ஹைய், வெளியே ஊர் சுற்றப் போறோமா? ஜாலி, ஜாலி" என்று துள்ளிக் குதித்து விட்டு குழந்தை ஓடினாள்.

 -செண்பக மீனாட்சி,