மாதவனும் மானிடரும்...

ஆன்மீக ஆனந்தம்...

மாதவனும் மானிடரும்...

மாதவனும் மானிடரும்..

தெய்வத்தை சந்திக்கும் ஆர்வம்
தெய்வ தரிசனத்திற்காக காத்திருத்தல்
தெய்வத்துடனான சந்திப்பு 
இவை 3 ம் உணர்த்துவது எங்கும் எல்லாவற்றிலும்/என்றும் நின்று
 அருளும் உலகையாளும்
 பரம்பொருள் ஒன்றுண்டு , 
உள்ளத்து உணர்வு நிலையில் உள்ளவனை உள்  மனதில் தியானிக்க, *சென்றால் குடையாய்
இருந்தால் சிங்காதனமாய்
நின்றால் மரவடியாய்
நீள் கடலுள்அணையாய் 
இருப்பவனை அடையலாம்* 
என மாதவனை உணர்த்தும்
பெருமை மிகு *மார்கழி மாதம்*!

மனிதகுலம் தோன்றியது முதல் 
ஆன்மீகம் தழைத்தது. 
வல்வினைகள் தீர்ப்பவனே அந்த வேங்கடம் உறைபவன் .
இதைத்தான் *குலசேகர ஆழ்வார்*
" செடியாய் வல்வினைகள் தீர்ப்பவனே! நின் கோயிலின் வாசல் படியாக கிடந்து உன் பவளவாய் காண்பேனே! "
என்று நெக்குருகி பாடுவார்.

நம் முன்னோர்கள் பக்திநெறி 
மிக்கவர்கள். இறை பணியை தமதாக்கிக் கொண்டவர்கள். மாதவனின் பெருமையை நன்கு உணர்ந்தவர்கள்.
சமய மரபை அறிந்தவர்கள்.
*பூதத்தாழ்வாரும்* இதை முன்னிறுத்தி, முன் செய்த தவத்தின் பயனாகவே இறைவனின் புகழினைப் பாட, கேட்க முடியும் என்று மாதவனை பற்றி 
புகழ் பாடி சொல்லும் பொழுது ,
*யானே தவம் செய்தேன் ;
 ஏழ்பிறப்பும் எப்போதும் யானே தவமுடையேன்; இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன் யான்!* என்று அழகுற இன்தமிழால் பாடுவார்.

*திருமழிசை ஆழ்வாரும்*
 திரு அந்தாதியிலே
*விதையாகி நற்தமிழை வித்திட்டு
 என் உள்ளத்தில் நீ விளைவித்தாய்*  என்று சொல்லும்போது பக்தியின் மொழி தமிழ் என்பதும் ,அவ் விதை விழுந்த இடம் ஆழ்வார் பாசுரம் என்பதும் அறிய வரும்.

ஆழ்வார்கள் தான் பெற்ற இறை அனுபவங்களை செந்தமிழ் சொற்களால் குழைத்து ,அந்த இறை அனுபவத்தை உணர்ச்சி ஆறாகப் பெருக்கி ,
பாசுரங்களாக நமக்கு வடிவமைத்து தந்துள்ளார்கள். *நாலாயிர திவ்ய பிரபந்தம்* அவ்வித ஆழ்வார்களின் இதயத்துடிப்பை பிரதிபலித்துக் காட்டுகின்ற நூலாக திகழ்கிறது.

மாதவன் பற்றிய பாடல்கள் யாவும் சொல்மாலை அமைத்துப் பாடப்பட்டது. ஆண்டாளும் இதையே 
*சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே* என்றுரைத்தார். திருமங்கையாழ்வாரும் *பன்னிய நூல் தமிழ்மாலை* என்று உரைத்திருப்பார். தொண்டரடிப் பொடியாழ்வாரும் இன்தமிழில்
 *செய்ய சுடராழி அடிக்கே சூட்டினேன் தமிழ்மாலை* என்று புகழ் பாடி இருப்பார்.

  மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணர் நமக்குரைத்தார்.
 *மன்னனும் நானே! மக்களும் நானே!
 மரம் செடி கொடிகளும் நானே!
 செய்ய நின் பாவம் நீக்க ஸ்ரீரங்கத்தானாக வும், இலையிலே துளசியாக, பூவிலே பாரிஜாதமாக,  கோள்களில் திங்களும் - 
ஆதித்தியனுமாக , ஆயுதங்களில்
பாஞ்ச சன்னியமும் - சக்கரமுமாக
உள்ளேன்!*  என்றெல்லாம் சொன்ன கிருஷ்ண பரமாத்மா *மாதங்களில் நான் மார்கழி* என்று சொல்லி மார்கழி மாதத்தினுடைய பெருமையை நமக்கு ஐயம் திரிபற உணர்த்தியவர் .

இத்தகு சிறப்புடைய மார்கழி மாதத்திலே இருவரின் பாடல்கள் பிரசித்தம். ஆண்டாளின் திருப்பாவையும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்களும். அனைத்து வைணவத் திருத்தலங்களிலும் , அதிகாலையிலே மார்கழி மாதத்திலே ஒளிபரப்பி திருவிளக்கேற்றிய தெருக்களிலே பஜனைகளில் பாடப்பட்டு ,
பக்தியை மனிதனின் மனதில் பரப்பிவிடும் சிறப்பு மிக்கது.

 *ஆண்டாளின்* திருப்பாவை முதல் பாடலில் மார்கழி எனத் தொடங்குவது *மா*  என்ற எழுத்து 
மாணிக்கவாசகரைக் குறிப்பது என்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடலின் முதல் பாடலின் முதல் எழுத்து ஆதியும் அந்தமும் இல்லா என்று தொடங்குவதில் *ஆ* என்ற எழுத்து ஆண்டாளைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும் உரைப்பது ஆண்டவனுடன் ஆன்மீகத்தில் கலந்து, மார்கழி மாதத்தில் மாதவனுடன் ஐக்கியமாகுங்கள் என்பதைக் குறிப்பதாகவே உணர்த்தப்படுகிறது.

*தாய்லாந்து* நாட்டில் இன்றும் கூட மன்னரின் பட்டாபிஷேகம் - திருப்பாவை பாடல் பாடியே நடந்தேறுகிறது. அப்படிப்பட்ட மார்கழி மாதத்தில் மாதவக் கடவுளின் மாண்பு என்ன என்பதை 
அறிந்து கொள்வது நாம் வாங்கி வந்த வரமாக அறியப்படுகிறது. 

*மாதவனின் பெயரைச் சொல்வதே வேதங்களின் சாரம்*  என்று *பூதத்தாழ்வார்*  சொல்கிறார்.
மாயோன் எனப்படும் மாதவன் வழிபாட்டையும், பலராமன் வழிபாட்டையும் *புறநானூறு*
அழகுற தெளிவாக்கும் . 

"கடல் வளர் பிடி வலை புரையும் மேனி அடல் வெந் நெஞ்சில் பிணைக்கொடி யோனாக, மண்ணுறத் 
திருமணிபுரையும் மேனி, விண்ணுயர் புட்கொடி விறல்  வேயோனே!" என்று மாயோனாம் மாதவனை
 அழகுற கூறப்பட்டிருக்கும்.

*ஸ்ரீ சைதன்யர்* பலராமனே
 மாதவனாகக் கருதப்படக் காரணம் 
அவன் மதுவினை விரும்பி அருந்தும்
குணத்தோன் என்று கூறுகிறார்.
திருப்பாவை 17 ஆம் பாடலில்  
"செம்பொற் கழலடிச் செல்வா , 
பலதேவா! உம்பியும் நீயும் 
உறங்கேலோ" என்று 
அவனை எழுப்பும் விதமாக 
அவன் கழல் அணிந்த காலின் 
அழகினை ஆண்டாள் முன்னிறுத்தி அனுபவித்து பாடியிருப்பாள்.

*நற்றிணை* யில் பெருந்தேவனார் 
"மாநிலம் சேவடி 
விசும்பு மெய் ஆக 
திசை கையாக 
பசுங்கதிர் மதியொரு சுடர் கண்ணாக வேத முதல்வன்  - மாயோனை 
மாதவம் செய்து இருப்பவர்களே  வணங்கலாம்*  என்று அழகுற 
வர்ணித்து உரைத்திருப்பார்.

கோவிந்தா நாமம் போல
பெரிய பெயர் *மாதவன்*!
விஷ்ணுபகவான் வைபவலட்சுமியான *மாதவி* யின் கரம் பிடித்தக் காரணத்தால் மாதவன் என அழைக்கப்பட்டதாக 
*ஸ்ரீ சைதன்ய சரிதம்* சொல்கிறது .

இறைவனின் திருவழகு 
வைபவம்  காண பாணர் குலத்தில் 
பிறந்த *பாணாழ்வார்* ஆசைப்படுகிறார் .ஆனால் கோயிலினுள்ளே பாணர்களை விட மறுத்த காலமது. திருக்கோயில் வீதியில் மெய்மறந்து பாடிக் கொண்டிருந்த பாணாழ்வாரின் பாடலிலும், யாழிசையிலும் தெருவீதியில் மக்கள் குழுமமாக நிற்கிறார்கள்.
இறைவனை நன்னீராட்டு செய்ய,
 திருமஞ்சன நீர் எடுத்தபடி அச்சமயம் பட்டாச்சாரியார் வருகிறார் . வழி அடைத்தபடி மக்கள் இருக்க , கோபத்தில் கல்லெடுத்து அவர்கள் மீது வீசி அடிக்கிறார் . வீசிய கல் பாணாழ்வார் நெற்றியில் பட்டு குருதி கொப்பளிக்கிறது . பாணாழ்வார் 
விலகி வழி விட பட்டாச்சாரியார்
இறைவன் சந்நிதி சென்று  
இறைவனை நோக்க,  
இறைவனின் நெற்றியிலிருந்து குருதி கொட்டுதலை கண்டு பதறுகிறார். மன்னிக்க வேண்டி இறைவனை வேண்ட பாணாழ்வாரை அழைத்து வந்து , 
தன் திருவடி காண்பிக்குமாறு 
இறைவன் பணித்தான் . ஆழ்வாரும் வெளியே வந்து,  பாணாழ்வாரை தன் தோளில் தூக்கி, இறைவனின் திரு அழகை காண வைத்த பெருமகிழ்வு நிகழ்வாகி,
என்ன தவம் செய்தனை?
பாணாழ்வாரே - என்ன தவம் செய்தனை?
பட்டாச்சாரியர் தோளில் தூக்க ,
பரமன் அழகு காண என்ன தவம் செய்தனை ? என்று நினைக்க வைக்கும் 
மாதவனின் அருள் கூறும் நிகழ்வானது.

*ஜெயதேவர்* எனும் சமஸ்கிருத புலவர் பத்தாம் நூற்றாண்டில் மாதவனை  வணங்கிய வழக்கம் நடைமுறையில் இருந்ததாக கூறியுள்ளார் .
 மூன்று விதமாக மாதவனை 
அக்காலத்தே வணங்கினார்கள் என்றும்,
 நில மாதவன் 
ராதா மாதவன் 
துர்கா மாதவன் என்ற 3 வடிவத்தில் பத்தாம் நூற்றாண்டில்
 பக்தியில் திளைத்த சன்னியாசிகளும், புலவர்களும் ஜெயதேவர் தத்துவத்தை பின்பற்றியதாக கூறப்படுகிறது.

*மாதவனை வழிபடும் தத்துவங்கள்* 

1) *தாஸ்யபாவம்*   -  ஆஞ்சநேயன் 
ராமனை எஜமானாகவும், தன்னை அடிமையாகவும் கருதி வழிபட்டது .
2) *சாக்கியபாவம் *   - அர்ஜுனன் இறைவனை நண்பனாக கருதி 
வழிபட்ட பலனாக, கீதை கேட்கும் பாக்கியமும் , கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனமும் கிடைக்கப்பெற்றது.
3) *வாத்ஸல்யபாவம்*   - யசோதை தன் குழந்தையாக பெற்று, பாலூட்டி ,
சீராட்டி வளர்க்க ,கிருஷ்ணனின் வாயில் ஏழுலகும் கண்ட பாக்கியம் பெற்றது .
4) *மாதுர்யபாவம்*   - ஆண்டாள், மீரா, ராதை இம்மூவரும் இறைவனைத் தன் கணவனாகவே நினைந்து வழிபட்டது.
5) *சாந்தபாவம்*   - கோபிகைகள் கண்ணனைத் தன் ஒரு பகுதியாகவே எண்ணி வழிபட்டது.
இவ்விதமான அன்பின் வழி பக்தி ஒழுகலை தான் *ராதா -  மாதவன்* வழிபாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் அனுபவித்தனர்.

 *ஆதிசங்கரர்* மாதவா என்றால் "மகாலட்சுமி தாயாரின் தவம்" என்று விஷ்ணு சகஸ்ரநாமத்தில் கூறப்பட்டுள்ளது என்று சொல்கிறார் இப்படி சொல்வதன் மூலம் கடவுளான மாதவன் என்பவர் 
*அறிவுக் கடவுள்* என்றறியப்படுகிறார்.

பிறப்பின் ரகசியத்தை உணர்த்துபவர் மாதவன் என்று அறியப்படுகிறது .
*எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்க உள்ளதோ  அதுவும் நன்றாகவே நடக்கும் . எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவருடையது ஆகிறது * என்று கூறப்படுவது நம்மை நமக்கே உணர்த்தப்படுகிற தத்துவமாகிறது.

பணப் பெருமை காட்டும் பணக்காரனை
சந்தித்த துறவி, அவனிடம் ஒரு ஊசி கொடுத்து அதை மேல் உலகத்துக்கு வரும்போது எடுத்து வர சொல்கிறார். பணக்காரனோ அது எப்படி என்னால் எடுத்து வர முடியும் என்று கேட்கும்போது "ஒரு ஊசியை எடுத்து வர முடியாத
 உன்னால்  பெருமை,கௌரவம் ,
பணத்தை மட்டுமா இறுதி வரை உன்னோடு எடுத்து வர முடியும்?
இவ்வுலகில் கொடுக்கப்பட்ட எல்லாம்    அனுபவிப்பதெல்லாம் இங்கிருந்தே கொடுக்கப்பட்டது" என்ற அரிய தத்துவத்தை எடுத்து உணர்த்துகின்றார்.
 நம் பகுத்தறிவில் இவ்வுண்மை புகுத்த,
வாழ்வின் நியதியை எடுத்துரைக்க, கருவறை முதல் கல்லறை வரையில் நாம் பயணிக்கும் இடைப்பட்ட வாழ்வே வாழ்க்கை என்பதை பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கும் கடவுளே மாதவன் 
என்று *ஆதிசங்கரர்* கூறுகிறார்.  

*ஒரிசா மாநிலத்தில் மாதவ வழிபாடு*

பிரயாகை ஆற்றின் கரையோரம் வாழும் மக்கள் மாதவனுக்கு அதிக கோயில்களை கட்டி வழிபட்டதாக கல்வெட்டு செய்திகளாக ஒரிசா மாநிலத்தில் மாத வழிபாடு நிகழ்வாக எடுத்துரைக்கிறது.

*மாதவனின் அழகு*
வட்ட நடுவே வளர்கின்ற மாணிக்கமே! மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தே! என்று *பெரியாழ்வார்* தன் திருவாய்மொழியாக சொல்வதோடு,
*கமலத்தில் அடி கோச்சிய ஆபரணங்களை மார்பினில், கழுத்தில் தாங்குபவனே!
 உன் வாயிலே துளசி வாசம்!
கண்களிலே அருள் நேசம்!
என் பேறு நின்னழகு பருகுவதே!*
என்றும் அழகுற இன் தமிழில் சொல்வார்.

மாதவனின் அழகைப் பருகும்போது 
பூஜை செய்யும் விதி முறைகளும் 
*ஆலய விதி*  என
 பிரம்மன் நாரதருக்கு எடுத்துரைப்பது மூலம்  நமக்குத் தெரியவருகிறது. தூமலரரெனும் வாசமலர் எடுத்துக் கொண்டு கோயிலுக்கு
 செல்ல வேண்டுமென்றும் 
கோயில் தளத்தில் பேசாமல், காலை நீட்டாமல் இருக்க வேண்டும் என்றும் 
வேறு நிகழ்வுக்கென வாங்கி வைத்திருக்கும் பொருட்களை 
பூஜைக்கென எடுத்துச் செல்லக்கூடாது என்றும் தீபமில்லா ஆலயத்தில் நுழையக்கூடாது என்றும் விதிகளை இறை பக்தர்களுக்கு அறிய வைக்கிறது.

*மாதவனும் விளக்கு வழிபாடும்*
 மாதவனை *மண்* அகல் விளக்கு
 ஏற்றி வழிபட குடியுயரும்,  *பித்தளை* விளக்கு ஏற்றி வழிபட குடும்பம் விளங்கும், *செம்பு* விளக்கேற்றி வழிபட மன அமைதி கிட்டும், *பொன்* விளக்கினால் ஏற்ற ஆயுள் கூடும், *வெண்கல* 
விளக்கு ஏற்றி வழிபட வியாதி நீக்கும் 
என்ற அழகான உண்மைகள் விளக்கப்படுகிறது.

மாதவனை வழிபட தாமரைப் பூவும் 
அல்லி மலரும்,  பிச்சி பூவும் உகந்தது என்று தெளிவுற கூறப்படுகிறது .
*திருமங்கையாழ்வாரும்* 
 மாதவனை பற்றிக் கூறும்போது 
தன் துணையாய் நடப்பவனை,
 தன்னை மதித்து நாள் கடத்துபவனை மாதவன் உயர்வர உயர்நலம் கூட்டுவான் என்று தெளிவுபடக் கூறுகிறார் .

*மாதவனின் மேன்மை*
1) கள்ளம் தவிர்ந்து இறைவனோடு
கலந்தவருக்கும்/ தவம் இருந்து வரம்
வேண்டுவோருக்கும் மட்டுமே 
முற்பிறவி புண்ணியம் செய்த பலனாக மாதவனின் அருள் கிட்டும்!
2) மாதவன் எனும் பெயர் 
கிருஷ்ணனின் முதல் பெயராக கருதப்படுகிறது. 
3)சமஸ்கிருதத்தில் *விரித்தி* என்றும்
வாரிசு/வம்சவிருத்தி தருபவன் 
என்றும் பொருள்படுகிறது .
4) *தேன்* என்று பொருள்படும்
 மது என்ற சொல்லிலிருந்து வந்ததே மாதவன் எனும் திருநாமம் . எனவே
தான் கிருஷ்ணனை அனைத்து ஜீவராசிகளையும் கவர்ந்தவர் என்று மனமகிழ்வோடு கூறுவர் .
5) மகாவிஷ்ணுவையே கவர்ந்தது
வேணு மதுரி
 ரூப மதுரி
 லீலா மதுரி
ராச  மதுரி... எனும் நான்கு மதுரங்களையும் உடைய மாதவன் 
என்று *புராணங்கள்* புகழ்கிறது . 
6)அலகாபாத்தில் உள்ள
 *பிரயாகையில்*  வெளிப்பட்டவர்
 என்றும் மாதவன் கருதப்படுகிறார். 

*மாதவன் அவதரித்த கதை*
பிரம்மா பூமியில் நடத்திய
முதல் யாகத்தைப் பாதுகாக்க 
பகவான் விஷ்ணு தன் அருளால்
பன்னிரு மூல வடிவங்களான 
*துவதேஷ் மாதவர்களை*
 உருவாக்கி/பணி செய்யப் பணித்தார்.
*12 துவதேஷ் மாதவர்கள்*
1)திரிவேணி மாதவன் 
2)சங்க மாதவன் 
3)சங்கஸ்தர் மாதவன் 
4)வேணி மாதவன் 
5)ஆசி மாதவன் 
6)ஆனந்த மாதவன் 
7)மனோகர மாதவன் 
8)பிந்து மாதவன் 
9)பாதம் மாதவன் 
10)கதா மாதவன் 
11)ஆடி மாதவன் 
12)சக்ர மாதவன்  

இவ்விதமாக பிரம்மன் யாகத்தைக் காத்தது 12 ரூபமான மாதவக் கடவுளே!

குருசேத்திரப் போர் முடிகிறது.
 விழா ஏற்பாடு நடக்கிறது .
அர்ஜுனனின் தேர் பாகனாக 
கிருஷ்ணன் தேரில் அமர்ந்து 
இருக்கிறார் .மற்ற தேர்பாகன்கள்
கீழே இறங்கி தன் தலைவனுக்கு மரியாதை தருகிறார்கள் .ஆனால் கடமையைச் செய் 
பலனை எதிர்பாராதே என்று 
சொன்ன கிருஷ்ணன் தேரினை 
விட்டு இறங்கவில்லை.
 மாறாக நீ முதலில் இறங்கு என்று 
அர்ஜுனனிடம் சொல்கிறார் .
அர்ஜுனன் அனுமனின் 
தேர் கொடியோடு தேரினை விட்டு இறங்குகிறார் .அதற்குப் பிறகு கிருஷ்ணன் இறங்குகிற
அச்சமயம் தேரானது எரிகிறது.
திகைத்த அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ணர்  "உன்னை அழிவிலிருந்து காக்கவே  முதலில் 
இறங்க வைத்து ,பிறகு நான் இறங்கினேன்" என்று கூறுகிறார்.

*பரிபாடலில்*  இந்நிகழ்வை கடுவன் இளவெயினனார் அழகாகக் கூறுவார். "தீயினுள் தெறல் நீ !பூவினுள் நாற்றம் நீ! கல்லினுள் மணியும் நீ !சொல்லினுள் வாய்மை நீ !அரங்கத்தினுள் மரமும் வேதத்துள் மறை நீ !பூதத்து உறையும் நீ! ஒளியும் நீ !திங்களுள் ஒளியும் நீ! அனைத்தும் நீயே! எங்களை காப்பவன்  நீயே!" என நமக்கு உணர்த்துவார்.

" தேடினேன் தேவதேவா!
தாமரைப் பாதமே !
வாடினேன் வாசுதேவா !
வந்தது நேரமே!
 ஞான வாசல் தேடினேன்!
7 வாசல் ஓடினேன்! மாயனே! நேயனே! அழைக்கிறான் மாதவன் 
ஆநிரை கேசவன்! மணிமுடியும் மயிலிறகும் /எழில் முகமும் 
மாதவா! கேசவா! ஸ்ரீதரா!ஓடிவா!"
 என்ற  திரைப்பாடல் நமக்கு மாதவனின்
பெருமை உணர்த்தும்.

சுவாமி *அசோக்ஜி மகராஜ்*
மாதவன் என்ற பெயருக்கு அழகான பொருளைத் தருவார் .
                      *மா*
மா என்றால் ஒளி என்று அர்த்தம்.
சொற்களின் மூலாதாரமே மாதவன்.
தவம் இருந்தால் மட்டுமே 
நோயற்ற வாழ்வு 
குறைவற்ற செல்வம் 
பாச உடன்பிறப்பு 
அன்பகலாத மனைவி /கணவன்
கருணை மயமான பெற்றோர் 
குழந்தை செல்வம் 
என்பதான அத்தனையும் கிடைப்பது மட்டும் இல்லை இவை எல்லாம் 
நிறைந்த ஒளிமயமான வாழ்வு கிட்டும் என்று அழகுற மாதவன் 
அருளாக கூறப்படுகிறது.

மாதவ கடவுள் 
எல்லாம் வல்ல இறைவன் .
மாதவன் அளவில்லா மகிழ்ச்சி சந்தோஷம் தரும் கருதப்படுகிறார்.
 இதைத்தான் *ஆண்டாள்*
தன்னுடைய நான்காவது 
திருப்பாவை பாடலில் 
"ஆழிமழைக் கண்ணா! என்றழைத்து இறுதி வரியாக 
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ!"
 என்று இறைவனை வணங்க மகிழ்ச்சி என்ற சந்தோஷம் கிடைக்கும் என்றும்,
 
18ஆவது திருப்பாவையில் 
"உந்து மதகளிற்றன் !
என்று தொடங்கி, நப்பின்னை தேவியை "செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ எம்பாவாய்! என்று மகிழ்ச்சி தரும் கடவுளாக 
இறைவனைப் பற்றிய பாடலாக வெளிப்படுத்தியிருப்பாள்.

                        *த*
மாதவன் பெயரில் உள்ள
*த* என்பதற்கான பொருள்
பணம் /பொருள்  உள்ள 
லக்ஷ்மி மாதாவை மார்பில் உறைய, 
வாரி வாரி செல்வம் தருபவன் மாதவன் என்று பொருள்படும்!
மூன்றாவது திருப்பாவை பாடலில் 
"ஓங்கி உலகளந்த* என்று தொடங்கி இறுதி வரியாக "நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்!" என்று இறுதிவரை செல்வத்தை நமக்கு 
தருபவன் மாதவன் என ஆண்டாள்
சுட்டிக் காட்டி இருப்பாள்.

இருபத்தி ஐந்தாவது பாசுரத்தில் 
"ஒருத்தி மகனாய்"  என்று தொடங்கி இறுதியாக "நெருப்பன்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்! பறை தருதியாகில் 
திருத்தக்க செல்வமும் /சேவகமும் 
யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ எம்பாவாய்! என்று செல்வத்தை நமக்கு வாரி வழங்கி மகிழ்ச்சி கிடைக்க செய்பவன் மாதவன் என்று உணர்த்தி இருப்பாள்.

தன்னுடைய இளம் பிராய நண்பனான
*குசேலனுக்கு* ஒரு பிடி அவல் 
எடுத்து /உண்டு /செல்வந்தனாக்கியது
மாதவ அருளையே காட்டுகிறது.
உன்னோடு ஐவரானோம் என
குகனை மகிழ்வித்து, 
திரௌபதியின் மானம் காத்து 
அவள் வருத்தம் தீர வைத்து 
இறைவனின் புகழை நமக்கு
அதிகமாக வெளிப்படுத்துகிறது.

மாதவன் என்றால் உதவுபவன் 
என்றும் பொருள்படும் .அழைத்ததும் ஆபத்பாந்தவனாய் /அனாதைகளின் 
ரட்சகனாக உதவுபவன்.
ஒரு வாலிபன் துறவியிடம் 
சென்று வாழ வழி கேட்க
 அவனை ஜமீன்தாரிடம் அழைத்துச் 
சென்று/ ஒரு கட்டாந்தரை நிலத்தை வாங்கி தர /அவனும் அதை செம்மைப்படுத்தி /பக்கத்து நிலத்துகாரரிடம்  உழவு மாட்டை 
கடன் வாங்கி/ அந்த இடத்தை விளைநிலமாக்கி/ பணக்காரனாக/ ஒருநாள் அவ்வழியே அந்தத் துறவி 
வருகை தர /அவர் காலில் விழுந்து 
ஆசி வாங்க/ துறவியும் அவனுக்கு 
கடவுள் அருளால் தான்  அத்தனையும்  கிடைத்தது என்று அவனுக்கு 
விளக்கம் கூறி புரிதல் தருவார்.

                           *வ*
மாதவன் பெயரிலுள்ள
 *வ* என்பதற்கான அர்த்தம்
 வரம் தருபவர் அல்லது
 அருள்பாலிப்பவர் ஆகும்.
பகவத் கீதையில் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் 18ஆம் அத்தியாயத்தில் "அதிர்ஷ்டம் தருபவன் மாதவன்!"
 என்று கூறியிருப்பார் .

இமாச்சலப் பிரதேசத்தில் மண்டியிட்ட நிலையில் மாதவன் சிலை உண்டு. "அடியாருக்கு அடி பணிபவன் 
கீழிறங்கி உதவுபவன்" என்ற
உணர்வு தனை தெளிவாக 
 சிலையானது நமக்கு உணர்த்துகிறது.

இதைத்தான் *கண்ணதாசனும்*
"உடலினை வருத்தி 
மூச்சினை அடக்கும் தவத்தால் பலனில்லை !உயிர்களை வதைத்து ஹோமங்கள் நடத்தும் யாகங்கள் தேவையில்லை! மாதவா! மதுசூதனா! என்ற மனதில் துயரில்லை! "
என்று அழகுற நமக்கு பாடல் மூலம் உணர்த்தி இருப்பார்.

இன்னும் ஒரு பாடலாக 
"ஊரிலே காணியில்லை!
 உறவு மற்றொருவர் இல்லை!
 பாரில் நின் பாத மூலம் பற்றினேன் 
பரம மூர்த்தி!"
 என்று அவன் பாதம் பற்றிட நமக்கு கிடைக்கும் அருளாக உணர்த்துகிறது.

*மாதவனுக்கான படையல்*
அப்பம் கலந்த சிற்றுண்டி 
அக்காரம் பாலில் கலந்து 
கொப்பட  நாம் சுட்டு வைக்க 
தின்னல் உறுதியேல் நம்பி !"

*நாச்சியார் திருவாய்மொழி*
கற்பூரம் நாறுமோ?
 கமலப்பூ நாறுமோ?
 திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
 மருப்பொசித்த *மாதவன்*  தன் வாய்ச்சுவையும் நாற்றமும் 
விருப்புற்று கேட்கிறேன் 
சொல் ஆழி வெண் சங்கே!"

*கீதை உபதேசம்* சரம ஸ்லோகம் பதினெட்டாம் அத்தியாயத்தில் 
"நீ என்னை பற்று! உனக்கு மோட்சம் தருகிறேன்!"என்று சொல்லப்பட்டுள்ளது.

 ஒளிமயமான வாழ்வு தேடித் தருபவன் தான் மாதவன் என்று உணர்த்த *பூதத்தாழ்வார்*  அழகாக
" அன்பே தகளியாக
 ஆர்வமே நெய்யாக 
இன்புருகு சிந்தை இடுதிரியாக
 நன்கு உருகி ஞானச்சுடர் 
விளக்கு ஏற்றினேன்"  என்று 
நமக்கு உணர்த்துவார்.

*பேயாழ்வாரும்*
"திருக்கண்டேன்! 
 பொன்மேனி கண்டேன்!
 திகழும் அருக்கண் அணி 
நிறமும் கண்டேன்!
பொன்னாழி கண்டேன்!
 புரி சங்கம் கைக்கண்டேன் 
என்றும் அத்தனாகி /அன்னையாகி ஆளும் எம்பிரான் பல் பிறப்பொழித்து நம்மை ஆட்கொள்வான்!"
 என்று அழகுற கூறியிருப்பார்.

கர்வம் ஒழித்து/ நம்மை ஆண்டு கொள்பவனே மாதவ கடவுள்!

கருடனுக்கு கர்வம் தலைக்கேறுகிறது. இறைவனை சுமக்கிறோம் என்ற நிலையிலே கர்வம் தலை விரித்தாட,
*சுமுகன்*  என்ற பாம்பை அழிக்க 
கருடன் நினைக்கிறான் .அதற்கு ஆதிசேஷனும் உதவ நினைக்கிறது. 
சுமுகன் பாம்பு இறைவனை
 சரணடைய/ தன்னை ஆதிசேஷனோடு நகர்த்தி விடுமாறு கருடனிடம் சொல்ல கருடனால் அச்செயலை ஆற்ற முடியாததை கண்டு/ ஆதிசேஷனுக்கும் கர்வம் அடங்கியது. கருடனின் கர்வமும் 
மறைந்தது. சுமுகனை ஆண்டு கொண்ட இறைவனின் அருள் புரிய வருகிறது.

*மாதவன் அருள்*
மாலை நேரத்திலே 
விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்கவோ, படிக்கவோ செய்திட 
மாதவனின் அருள் கிட்டும் 
என்பது புராண நூல்களின் வழியாக மானுடனுக்குத் தெரிய வருகிறது.

மார்கழி இருட்டிலே 
ஒளி தரும் விதத்தில் 
மாதவன் இருக்கிறான் என்பதை 
அழகாக 26ஆம் பாடலிலே ஆண்டாள்
" மாலே!மணிவண்ணா!" என்று தொடங்கும் பாடலில் 
"சால பறையே !பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே! கொடியே! விதானமே ஆலின் இலையாய் !அருளேலோ எம்பாவாய்!" என்று அழகுற அவன் அருளை கேட்டிருப்பாள்.

*ஆலின் இலையாய்*
மார்க்கண்டேய மகரிஷி விரதம் இருப்பவர் .அந்த மகரிஷியின் புதல்வி தான் பூமாதேவி.மார்க்கண்டேய மகரிஷி இறைவனிடம்  "நீ படைக்கிறாய்! காக்கிறாய் !  அழிப்பது மட்டும் எப்படி?" என்று கேட்க "கண்ணை மூடு!" என்று இறைவன் சொல்கிறார். உடனே மகரிஷியும் கண்ணை மூடிக் கொள்ள, சற்று நேரம் கழித்து "கண்ணைத் திற!" என்று சொல்கிறார். அவரும் அவ்விதமே திறக்கிறார் .எதிரில் இருந்த 
மரம் முறிந்து /கடல் பொங்க/
 பாறை உடைய/கடல்
அலை மேல் ஒரு குழந்தை 
ஆல் இலை மேல் படுத்தபடி இருக்க
" நீ யார் ? யாருடைய குழந்தை ?"
என்று கேட்க /கட்டைவிரலை சூப்பியபடி "இன்னுமா புரியவில்லை
 என் மார்பினை பார் ! மகாலட்சுமி
குடி கொண்டிருக்கிறாள். "
"இல்லை .எனக்கு புரியவில்லை. 
எதுவும் தெரியவில்லை." 
என பதில் வர, குழந்தையோ 
வாய் திறந்து காற்றை இழுக்கிறது. மகரிஷி குழந்தையின் வாய் உள்ளே போக /வயிற்றிலே மகரிஷி 
அமர்ந்திருந்த ஆலமரத்தடியில்
தவமிருக்கும்  நிலையில் தெரிய, இறைவன் *ஆல் இன் ஆல்*  என்று உணர்கிறார் . ஆலின் இலையாய் உண்மை அறிய வைத்தலை 
நமக்கு இறைவன் தன்மை உணர்த்துகிறது. இந்த தத்துவம்
 உலகு பெரியது /வயிறு சிறியது .
என் வயிற்றில் அடக்கி /எண்  ஜாண் வயிற்றுக்கு ஓடி ஓடி உழைக்கிறோம்
 என்ற தத்துவத்தை உணர்த்துவது தான் ஆலிலை மாதவன்.

உலகம் அழியும் காலம் / பிரளய 
பெருங்கடலில் இவ்வுலகம் 
அழியாதபடி ,வயிற்றில் கொண்டு
 காத்து /ஆலிலை மேல் யோக நிலையிலேயே துயில் கொண்டு 
மாதவன் அருள்வான் என்பதை 
ஆலிலையாய்  என்ற தத்துவம் உணர்த்துகிறது .

*நாச்சியார் திருமொழியில்* 
*மாதவனை வணங்கும் முறை*
மணலில் வட்ட வட்டமாக 
கோடு வரைந்து/ எண்ணிப் பார்ப்பது/ ஒற்றையாக எண்ணிக்கை முடிந்தால் எண்ணிய எண்ணம் கைகூடாது 
என்றும்/ இரட்டைப்படையில்  எண்ணிக்கை முடிந்தால் எண்ணிய  எண்ணம் கைகூடும் என்றும் 
*கூடலிழைத்தல்*  என்ற பெயரிலே மாதவனை நினைத்து  பிரார்த்தனை செய்யும் முறையாக நாச்சியார் திருமொழி கூறுகிறது .

மயிலை மாதவ தாசன் 1943 ல்
நாலாயிர திவ்ய பிரபந்தம்
 பதிப்பித்து வெளியிட்டார் .

*மாதவனின் ஆபரணங்கள்*
வருணன் - முத்தாரம்/y g  பவழ வடமாக ,
லக்ஷ்மி -  துளசிமாலை /கற்பகத்தரு/ திருவொற்றியூர் மாலையாக,
 குபேரன் - பஞ்சாயுதமாக 
தேவர் - வலம்புரிச் சங்காக,
 இந்திரன்  - கால் சதங்கையாக
சிவன் - பொன் மணியாக 
பிரம்மன் - மாணிக்கத் தொட்டிலாக மாதவனின் ஆபரணங்களாக நிறைந்திருப்பார்கள்.

*மாதவனும் ஆய்ச்சியரும்*
வலக்கை, இடக்கை 
அறியாத குலமாகி ,
உடம்பு காட்டி தலையையும் 
தலைகாட்டி உடம்பையும் 
குளிக்கும் குலம் சார்ந்த ஆய்ச்சியர்கள் மாதவனை நன்கு அறிந்து
 மனதில் இருத்தியதால் 
மனமெனும் அரியாசனம் அமர்ந்து அருள்வான் என்று நம்பும் 
குலமாக இருந்தார்கள் .

*மாதவன்*
ஒன்றே ஆகின் ஒன்றேயாம் 
பலவென்று உரைக்கின் பலவேயாம் அன்றேயெனின் அன்றேயாம் 
ஆம் என்று உரைக்கின் ஆமேயாம்
 இன்றே எண்ணின் இன்றேயாம்
உளதென உரைக்கின் உளதேயாம்
 நன்றே நம்பி குடி வாழ்வோம் நமக்கென்ன குறையம்மா?

இதனைத்தான் ஆண்டாளும்
"உன் தன்னோடு உறவேல்
நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது .
அன்பினால் உன் தன்னை 
சிறு பேரினால் அழைத்தாலும்
சீறி அருளாமல் இருக்காதே!"
என்று உரைத்து இருப்பாள்.

 கிருஷ்ணாவதாரம் முடியும் நேரத்தில் கிருஷ்ணனின் தேரோட்டியான 
உத்தவர் கிருஷ்ணரிடம் "கிருஷ்ணா !
உன் லீலை புரியவில்லை .தருமனை  சூடாமல் நீ தடுத்திருக்கலாமே?" என்று கேட்க ,கிருஷ்ணர் ," துரியோதனனுக்கு சூதாடத் தெரியாதா?  இருப்பினும் சகுனியை தானே ஆட வைத்தான். தருமனும் என்னை அழைத்திருந்தால்
 நான் அங்கு ஏதும் நிகழாமல் தடுத்து இருப்பேன் .ஆனால் என்னை வரவேண்டாம் என்று அல்லவா 
கூறினான். அனைத்தும் அருகிலிருந்து பார்க்கிறேன் என்பதை உணராமல் எனக்கு அவன் கட்டளையிட
 என்னால் எதுவும் செய்ய 
இயலவில்லை"  என பதிலுரைக்கிறார்.

*இறை கவசம்*
கண்களை கண்ணன் காக்க 
காதுகளை கார்முகிலன் காக்க கழுத்தினை தாமோதரன் காக்க 
வாயை வாமனன் காக்க
கைகளை வேங்கடவன் காக்க 
விழிகளை விமலன் காக்க 
முதுகெலும்பை முகுந்தன் காக்க 
முன் நெற்றியை மோகனன் காக்க 
நாவினை மதுரபுரியான் காக்க கணுக்கால்/முழங்கால் ஸ்ரீஹரி காக்க நரம்பினை பெருமான் காக்க 
விடியலை விஷ்ணுவே காக்க 
விடிகாலைப் பொழுதினை 
விக்ரமன் காக்க
மரண பயத்தை
மாதவன் நீக்க...

 

- தமிழ் செல்வி,

வாலாஜாபேட்டை,