மகத்துவம் தரும் மார்கழி..!

மார்கழி மாத சிறப்புகள்

மகத்துவம் தரும் மார்கழி..!

மகத்துவம் நிறைந்த
மார்கழி மாதம் !

"மாதாவை வணங்காத சேயும்
மார்கழியில் இறைவனை 
வணங்காத ஜீவனும் வீண்!"...
என சொல்லும் படியான
புகழ் பெற்ற மாதம்!

"மாதங்களில் நான் மார்கழி!"
என்றே பகவான் ஸ்ரீகிருஷ்ணர்
தன்னுரையில் பகன்ற மாதம்!

29 நாட்கள் கொண்டு,
30 ஆம் நாளில்...
பழையன கழிந்து/புதியது வரவாகி,
பன்னிரு மாதங்களில்
ஒன்பதாம் இடமாகி,
மாரிக்காலம் முடிந்து வர
மார்கழி என பெயரிலான மாதம்!

சந்திரன் உலவும் மிருகசிருஷ
நட்சத்திரத்தில் தோன்றி,
ஆரோக்கியம்/ஐஸ்வர்யம்/ஆசி தரும்
மார்க்கசிர என அழைக்கப்பெற்று,
நாளடைவில் மார்கழியான மாதம்!

தேவலோக விடியற்காலை நேரமாக
சைவர்கள் நினைப்பில்...
தேவர்களின் உஷத்காலமான
மார்கழி மாதம்!
வைணவர்கள் மனதில் இறைவனை
அரியாசனமிட்டு அமர வைக்கும்
பீடு மாதம் மறுவி 
பீடை மாதமான மார்கழி மாதம்!

திறக்கப்படாத கோயில்கள் கூட
இறை தரிசனம் பெற திறக்கப்பட்டு,
2000 வருடங்களுக்கு பழமை வாய்ந்த,
திருப்பாவை/திருவெம்பாவை/திருப்
பள்ளியெழுச்சியை/ தினமும்
ஓதும் படி செய்யும் மார்கழி மாதம்!

அதிகாலை பனியின் ஊசி குத்தல் 
பொருட்படுத்தாது,
பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி,
வீதிதோறும் பஜனை பாடல்கள் பாடி
ஆன்மீக பக்தர்கள் பவனி வரும் மாதம்!

நல்ல அறநெறி பின்பற்ற வைக்கும்,
வீடுதோறும் தெய்வீக மணம் கமழும்,
விடாது பின்பற்றும் கர்ம வினை தீர 
தெய்வ வழிபாட்டுக்கு உகந்த,
பக்தி மயமான மாதம்!

விதை விதைத்தல்/புதுமனை புகுதல்
வாகன பதிவு/நிச்சயதார்த்தம்/
அலுவலகத் திறப்பு/காது குத்தல்/
திருமணம்/சொத்து வாங்கி பதிவு...
போன்ற காரியங்கள் செய்யலாகாது
என ஆண்டாண்டு காலமாக 
சொல்லி /இறைவனுக்கான
மாதமென உணர்த்திய மாதம்!

மார்க்கண்டேயன் சிவனை வணங்கி,
மரணத்தை வென்று,
எமனிடமிருந்து மீண்டு,
நித்ய வாழ்வு கண்ட மாதம்!

பெரியாழ்வார்/பட்டர்பிரான்,
பூமிப்பிராட்டியின் அவதாரமான,
7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த,
பன்னிரு ஆழ்வார்களில் 8 வதான
ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவன 
துளசிசெடியினில் கண்டெடுத்து
வளர்த்த கோதை நாமம் கொடுத்து
வளர்த்த ஆண்டாள்/நோன்பிருந்து
அரங்கனையே மணவாளனாக 
மனதில் நினைத்து/அரங்கன்
பெரியாழ்வாருக்கு கனவில் கட்டளையிட
ஸ்ரீரங்கம் கருவறையில்/மணப்பெண்
கோலத்தில்/அரங்கனுடன் இரண்டறக்
கலந்து /ஐக்கியமான மாதம் !

ஸ்ரீராமனின் தூதன்/சிவனின் அம்சம்
மூல நட்சத்திரத்து பிறப்பானவன்/துளசி,
வடைமாலை/வெற்றிலை மாலை/வெண்ணெய் சாத்துபடி/செந்தூரபிரியன்/
வாயு புத்திரன்/திருப்பதியின் ஏழுமலையில் ஒன்றான 
அஞ்சனாத்திரி மலையில் அவதரித்த/
வணங்குவோருக்கு சத்ருபயம்/கடன்
தொல்லை நீக்கி/புத்தி சாதூர்யம் தரும்
அனுமன் ஜனனமான மாதம்!

பாலும்/ தெளிதேனும்/ பாகும்/ பருப்பும்
படைத்து/சங்கத்தமிழ் மூன்றும்
பிரதிபலனாக கேட்டு/எடுத்த காரியம்
வெற்றி பெற /மூல நாயகனாக
வணங்கப் பெறும் விநாயகனை,
ஆண்கள் வலக்கையிலும்/பெண்கள்
இடக்கையிலும் காப்பு கட்டி
சங்கட சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கும் மாதம்!

காவடி பிரியன்/அறுபடை வீட்டரசன்
பார்வதி மைந்தன்/ கார்த்திகை
பெண்கள் வளர்க்க கார்த்திகேயன்/
வள்ளி-தெய்வானையுடன் 
காட்சி தருபவன்/குன்றிருக்கும்
இடமெல்லாம் குமரனிருப்பான்
என சிறப்பு பெற்ற
திருத்தணி முருகனுக்கு
படி உற்சவம் நடக்கும் மாதம்!

முக்கண்ணன்/திருநீலகண்டன்/
ஜோதி மயமானவன்/அடி முடி தேட
அறியப் படாதவன்/திரிசூலன்
என புகழ் பெறும் சிவபெருமானை,
நடராஜராக பிட்டு வைத்து தரிசித்து/
தம்பதி சமேதரராய் /ஆருத்ரா தரிசனம்
செய்து/திருவாதிரை திருவிழா
கொண்டாடும் மகிழ்வான மாதம்!

குருஷேத்திரப் போர் தொடர்ந்து
18 நாட்கள் நிகழ்ந்த மாதம்!
அந்நிகழ்வினிலே அர்ச்சுனனுக்கு
ஸ்ரீகிருஷ்ணன் பகவத் கீதை
18 அத்தியாயங்களாக அருளிய மாதம்!

மந்தார மலையை மத்தாக்கி/ திருமால்
ஆமையாக மலையினை தாங்க/வாசுகி
பாம்பினை கயிறாக்கி/தேவர்கள்
ஒரு புறம் & அசுரர்கள் மறுபுறமென
பாற்கடலைக் கடைந்திட/அமுதமும்,
ஆலகால விஷமும் வெளி வந்த மாதம்!

நம்பிய தேவர்களைக் காக்க
சிவன் முன் வந்து/ஆலகால விஷம்
எடுத்து பருகிட/உமை தேவி தன் பர்த்தா
காக்க/கழுத்தைப் பிடிக்க/திருநீலகண்டன் என பெயர் கொண்ட மாதம்!

மகாலட்சுமி பாற்கடலிலிருந்து
கற்பக விருட்சம்/காமதேனுவினை
தொடர்ந்து/ வெளிப்பட்டு/பகவான்
விஷ்ணுவை மணாளனாக வரித்த மாதம்!

ஆதித்யன்/உலக இயக்கதாரியாம்
சூரியன் தனுர் ராசியில்/யோக
நிலையில் ஈடுபட/தனுர் மாதம்
என பெயரான மாதம்!

இந்திரனின் கோபம் ஆயர்பாடியில்
தெரிக்க/தொடர் மழையில் ஆயர்கள்
பரிதவிக்க/பகவான் கிருஷ்ணன்
கோவர்த்தனகிரியை குடையாகப்
பிடித்து/ஆயர் குல மக்களை,
ஆநிரைகளோடு ரட்சித்த மாதம்!

"காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை
ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை!"
இத்தகு சிறப்புடைய நன்னாளிலே
பரமபதம் விளையாடி/பகவானின்
சொர்க்க வாசல் கண்டு/வைகுண்ட
ஏகாதசியில் திருமாலை 
தரிசித்து தண்யனாகும் மாதம்!

பூத்துக் குலுங்கும் மலர்கள்,
சத்து நிறைந்த கனிகள்/பச்சைக் 
காய்கறிகள் அதிகமாக விளைந்து,
விவசாயியை மகிழ்வித்து,
இயற்கை அன்னை மகிழும் மாதம்!

திறக்கப் படாத கோயில்கள் திறந்து,
ஒரு அடி முன் வைத்து இறைவனை
நோக்கி வைக்க/பத்தடி முன் வந்து
நம்மை ஆண்டவன் ஆட்படுத்த/
சரணாகதியென புகலிடமாகும் மாதம்!

கேசி எனும் அரக்கனை அழித்தவன்/அழகான கேசம் உடையவன்/அறிவு
தருபவன் என பொருள்படும்...
கேசவன் எனும் திருமாலின் நாமத்தை
நாவினால் உச்சரிக்கும் நன்மாதம்!

வறுமையில் உழன்ற குசேலன்,
தோழன் கிருஷ்ணனிடம் சென்று,
முடித்து வைத்த பிடி அவலினை,
ஆசையுடன் தின்ன தந்து/செல்வத்துக்கு
அதிபதியாகி/இறையருள் பெற்ற மாதம்!

திருமாலின் பத்து அவதாரங்களில்,
வாமன அவதாரத்திற்கு அடுத்ததான
6 வது அவதாரமாம் பரசுராமன்,
ஜமதக்னி- ரேணுகா தேவி மகனாக
பூமியிலே ஜனனமான மாதம்!

தொண்டரடி பொடியாழ்வார்/ரமண
மகரிஷி/பாம்பன் சுவாமிகள்/அன்னை
சாரதா தேவி/விவேகானந்தர்/
சாக்கிய நாயன்மார்/சடையப்ப நாயன்மார்/இயற்கை நாயன்மார்/
வாயிலார் நாயன்மார்....போன்ற
பெருமகான்கள் இப் புண்ணிய
பூமியில் அவதரித்த மாதம்!

பால்/நெய் பருகாமல்,
பூ/மை உபயோகிக்காமல்,
பெரியோர்கள் தடுத்த காரியங்களை
செய்ய நினையாமல்,
தானம்/இரக்கம் முடியுமளவு செய்து,
கன்னிப் பெண்கள் 
நல்ல மணாளனைப் பெற,
பாவை நோன்பினை நோற்கும் மாதம்!

தெருவிலே /அதிகாலையிலே/
வீட்டின் தலைவிகள்...
விஷ்ணுவின் அம்சமாம் பசுஞ்சாணி
தெளித்து/பிரம்மன் சொரூபமாம் 
ஜீவராசிக்கு உணவாக வெள்ளைக்
கோலமிட்டு/சிவன் விஸ்தரிக்கும் செம்மண் இட்டு/மும்மூர்த்திகளை
வீட்டிற்குள் வர வைக்கும் மாதம்!

கோலத்தின் நடுவே
பூசணிப்பூ வைத்து/அந்த வீட்டில்
வயதுப்பெண் இருப்பதை உணர்த்தி/
பிறக்கவுள்ள தை மாதத்தில் வரன்
தேடி வரச் செய்யும் உபாய மாதம்!

பீஷ்மர் அம்பு படுக்கையில்
முக்தி அடைந்த மாதம்!
நோய் தீர்க்கும் தத்தாத்ரேயர்
பிறப்பு கண்ட மாதம்!

மார்கழி 27ஆம் நாளிலே,
கூடாரவல்லி திருநாளிலே,
ஸ்ரீவில்லிப்புத்தூரில்,
திருக்கோயில் பணியாளர்களுக்கு
சிறப்பு சன்மானம் அளிக்கும் மாதம்!

"வேதம் ஓதும் வேதியர்க்கோர் மழை
நெறி சார் நீதி மன்னனுக்கோர் மழை
கற்புடை பெண்டிருக்கோர் மழை"...
என்றே மாதம் மும்மாரி மழை பெற
 இறைவனை வேண்டும் மாதம்!

திருப்பதியில் சுப்ரபாதத்திற்கு பதிலாக
திருப்பாவையினை பாடவென
ஒதுக்கி வைத்து/அதை பின்பற்றி
அதிகாலையிலே திருப்பள்ளி
எழுச்சியென இறைவனின் முன்
வைணவ அடிகளார் பாடிடும் மாதம்!

தாய்லாந்து நாட்டினில்
மன்னர் பட்டாபிஷேகத்தில்
"பாதகங்கள் தீர்க்கும்/பரமனடி காட்டும்
வேதமனைத்திற்கும் வித்தாகும்
கோதை தமிழ் ஐயைந்து ஐந்தும்
அறியாத மானிடரை இவ்வையகம்
சுமப்பது வம்பு"...என புகழப்படும்
திருப்பாவையுடன்/மாணிக்க வாசகரின்
திருவெம்பாவையும் படித்த பிறகே
மன்னனுக்கு கிரீடம் அணிவிப்பது
இன்று வரை வழக்கமான மாதம்!

ஆண்டாள் பயபக்தியுடன் ஒழுகிய,
காத்யாயினி தேவதைக்கு,
கிழக்கு நோக்கி அமர்ந்து,
சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெற ,
"காத்யாயினி மகாமாய மகா யோகின்
யதீஸ்வரி! நந்தகோப சீதம் தேவி 
பதிம்மே குருவே நமஹ!" ...எனும்
சுலோகம் கூறி வழிபடும் மாதம்!

வில்லியெனும் வேடுவர் தலைவர்
அவனுக்கு மல்லி/கண்டன் எனும்
வீரம் செறிந்த இரு மகன்கள்!
மல்லியை  புலி அடித்துக் கொல்ல,
கண்டன் வேட்டைக்கு செல்கிறான்!
காட்டில் புதருக்கு அடியில்/புற்றடியில்
திருமால் சிலையுடன் புதையலும்
கிடைத்த புண்ணியமடைகிறான்!
அப்புதையல் உதவியுடன்
திருமாலை பிரதட்சணம் செய்து
புற்று அடியில் கிடைத்ததால்,
தந்தை பெயர் சேர்த்து
பெருமை மிகு ஸ்ரீவில்லிபுத்தூர்
என பெயர் வைத்து வழிபட/
ஆழ்வார்கள் வணங்கிய/ஆண்டாள்
பிறந்த ஊரானது மார்கழி மாதத்தில்!

பெரியாழ்வார்/பட்டர்பிரான்,
ஸ்ரீரங்கனுக்கு மாலை தொடுக்கும்
பணி செய்திடும் நாளிலே,
துளசி செடியருகில்/பெண்
குழந்தையாக /பூமாதேவியின்
அம்சமான /கோதை நாச்சியார்
கிடைத்து/மகிழ்வுற்ற மாதம்!

கோதை வளர்ந்து/பருவமெய்தி,
ரங்கனை மணவாளனாக வரித்து,
அவனுக்கு தந்தை தொடுத்த
மாலையை தான் அணிந்து அழகு
பார்த்து அனுபவிக்க/சூடிக் கொடுத்த
சுடர்க்கொடியாகி/தந்தை கனவில்
கடவுள் கூற/மணப்பெண்ணாகி/
தன்னுடைய 15 ஆவது வயதினில்/
ஸ்ரீரங்கம் சென்று/கருவறை உள்ளே
ரங்கனோடு ஐக்கியமாகி/ ஆண்டவனை
மனதால் ஆண்டவள் என்பதால்
ஆண்டாள் எனும் பெயருமான மாதம்!

பத்து கட்டளைகளால்/பவித்ரமான
நெறி வாழ்வு மக்கள் வாழ/
சிலுவையில்அறையப்பட்ட/பாவ
விமோசனர்/பரமபிதா/இயேசு
கிறிஸ்து பிறந்த மாதம்!

இலக்கிய செழுமை மிகு/பக்தி ரசம்
நிறைந்த/தத்துவ பாடல்களான
30 பாசுரங்கள் அடங்கிய/சங்கத்தமிழ்
மாலையான/திருப்பாவை சிறப்பு
உலகறிய வைத்திட/1970 ல் துவங்கி/
1982 ல் பதிவான /ஆண்டாள் புகழ் 
பாடுவதை நோக்கமெனக் கொண்ட/
கோதை மண்டலி அமைப்பு
செயலாற்றத் துவங்கிய மாதம்!

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் 
அணிந்த மலர்மாலை/திருப்பதியில்
கருடசேவை தருணத்திலே/
திருமால் அணிந்து வீதிவுலா வர
கொண்டு வரப்படும் மாதம்!
ஆண்டாளின் திருக்கல்யாண உற்சவத்திற்கு/ பெருமாள் அணிந்த
மலர்மாலை திருப்பதியிலிருந்து
கொண்டு வரப்பட்டு/ஆண்டாளுக்கு
அணிவித்து /அழகு பார்க்கும் 
பவித்ரமான மாதமிதுவே!

கேரள நம்பூதிரி அலங்கார
சிகை முடிப்பே ஆண்டாளின் 
கொண்டையான மாதமிது!

தினம்/தினம் புதிதாக,
4 - 5 மணி நேரமெடுத்து/மாதுளம்பூ
உதவியால் வாய்&அலகு செய்து/
மூங்கில் குச்சி/வாழை பட்டை நார்/
நந்தியாவட்டை இலையுடன் உடல் 
செய்து/பச்சைக் கிளியாக்கி/
ஆண்டாளின் திருக்கையில்
கொடுத்து/அழகு பார்க்கும் மாதமிது!

"நாறு நறும் பொருள் /மாவிரும் சோலை
நம்பிக்கு/100 தடா நிறைந்த 
அக்கார அடிசில் திருவுடையோனுக்கு
சொன்னேன்!" ...என மார்கழி 27 ல்
கூடாரவல்லி தினம் கொண்டாடும் மாதம்!

திருமாலிருஞ்சோலை அழகருக்கு
100 அண்டா அக்கார அடிசலுடன்
வெண்ணெயுடன் சமர்ப்பித்து/
ஆண்டாளை பணிய/வாய் நிறைய
"வாரும் அண்ணா!"என அழைப்பினை
ராமானுஜர் பெற்ற மாதம்!

தம்பதி ஒற்றுமை/இல்லற நல்லறம்,
பாவங்கள் நீங்க/பிறப்பில்லா வாழ்வு/
அத்தனையும் பெற சிவாலயப் 
பிரதட்சணம் மார்கழி அஷ்டமியில்
செய்திட/ஈஸ்வரனிடம் உமாதேவி
ஸ்கந்த புராணத்தில் சொன்ன
புண்ணிய மிகு மாதம்!

மார்கழி அமாவாசையில்
முன்னோர்களை வழிபட்டு,
தர்ப்பணம் தர/அவர்கள் ஆசி
பரிபூரணமாக கிடைக்கும் மாதம்!

.ராமதேவ சித்தர் இரட்டை லிங்கம்
பிரதிஷ்டை செய்து/மார்கழி பவுர்ணமியில் வணங்கிட/
108 வது திருப்பதியாம் வைகுண்டம் 
கிடைக்கும் பலன் கூறும் மாதம்!

இத்தகு மகத்துவம் நிறைந்த
மார்கழியில்/மகிழ்ச்சி கிடைத்திட
மாதவனை வணங்கியே அவன்
 திருவருள் பெற்று இன்புறுவோம்!

-முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன்,
M.Sc.,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil.,Ph.D.,
முதுகலை ஆசிரியை,
அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513.