பெண்ணின் மகிமை 037

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்ணின் மகிமை 037

பெண்ணின் மகிமை 
முன்னுரை
பெண் என்பவள் வியப்பிற்கு உரியவள்.விண்ணுலகின் கவிதை மலர்கள் விண்மீன்கள் என்றால் மண்ணுலகின் கவிதை மலர்கள் பெண்கள். பெண் பெரும் அறிவினைப் பொறுத்தே மண்ணுலகின் அறிவும் அமைகின்றது. தாய்மையின் தனித்துவத்தால் மனித குலத்தின் வாழ்விற்கும், அந்த வாழ்வினை தகுதி உள்ளதாக மாற்றி அமைத்ததற்கும் பெண் என்னும் பெரும்பேறே காரணம். அத்தகைய பெருமைமிகு பெண்ணின் பெருங்குணங்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பெண்மை 
"மாதவராய் பிறந்திட நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்” என்கிறார் ஒளவையார். அந்தவகையில் ஒரு பெண்ணானவள் அளவு கடந்து நேசிக்கப்பட வேண்டியவள். குடும்பம் தழைக்க அன்பில் உரமிடுபவள் பெண். நடு நாயகமாக, உச்சி திலகமாக, இன்சொல் அரசியாக , மலர்ந்த முகமாக, புன்சிரிப்பின் பெட்டகமாக, சுதந்திர சிந்தனை படைப்பாளியாக, உரிமையை காப்பவளாக,வழிகாட்டும் கருவியாக, வலம் வருபவள் பெண். போற்றுதலுக்குரிய பெருமையோடு நம் அனைவரும் பின்பற்ற வேண்டிய சிறந்த பண்புக்கு உரியவள்.

தாய்மை குணம் 
இந்த உலகத்தில் வந்து பிறக்கின்ற ஒவ்வொரு மனித உயிர்களும் பெண் என்ற தியாகத்தினால் தான் உருவாகின்றது. இல்லாவிட்டால் இந்த உலகில் உயிர்களே இருக்காது.மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள், பறவைகள் என்று அனைத்து ஜீவராசிகளுக்கும் பெண் என்கின்ற அந்த வடிவம் தாயாக அனைவரையும் இங்கே பிரசவித்து வாழும் வரை காத்து நிற்கின்றது.இந்த உலகத்தில் தாய் இன்றியமையாத ஒரு இடத்தை ஒவ்வொரு உயிர்களின் வாழ்விலும் கொண்டிருக்கின்றாள் என்றால் அது மறுப்பதற்கில்லை. இயற்கையே பெண்களுக்கு தன்னிகரில்லா ஆற்றலை அள்ளித் தந்து அவர்கள் யாதுமாகி நிற்கச் செய்துள்ளது.இயல்பாகவே எதையும் பொறுத்து கொள்ளும் குணம் உடையவர்கள் என்பதனால் மிகச்சிறந்த தியாக எண்ணம் உடையவர்களாக அனைவராலும் வியந்து பார்க்கப்படுகின்றனர்.

அன்பின் அடையாளம் 
பெண்கள் என்றாலே அன்பு நிறைந்தவர்கள் தங்கள் அன்பினால் தம்மோடு வாழ்கின்றவர்களை அரவணைத்து வாழ்வின் இன்னல்களை களைந்து அனைவரையும் நல்வழியில் இட்டு செல்கின்றனர்.தாயாகவும் சகோதரிகளாகவும் உடனிருந்து வாழ்வின் பிரச்சனைகள் அனைத்தையும் கடக்க உறுதுணையாக இருப்பார்கள்.பெண் இல்லா ஊரில் பிறந்தவர்கள் அன்பின் இலக்கணம் அறியாதவர்கள். 
பெண்ணின் மனவலிமை 
தனது லட்சியத்தில் எந்த வித சலிப்பும் தொய்வும் இன்றி முன்னேற துடிப்பவள் பெண். நெருக்கடி காலத்திலும் தனது குடும்பத்தை திறம்பட நிர்வகிக்கும் பெண்களின் நிர்வாக திறமையே நாட்டையும் அவர்களை நிர்வாகிக்க வைக்கிறது. சகிப்புத்தன்மை, அரவணைப்பு, பொறுமை, மனவலிமை எல்லாம் மங்கைக்கே உரிய மகத்தான பண்புகள். ஆணும் பெண்ணும் சமமாய் உழைத்து சமான வருமானம் ஈட்டும் நாடுகளில் இன்று உழைப்பாளர் தொகை உயர்ந்துள்ளதாம். இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும் முன்னேறுகிறதாம். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்த பெண்கள் வந்தோம். எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பதில்லையே என்று பாரதியின் வாக்குக்கு ஏற்ப பூத்து குலுங்கும் நறுமண மலர்களாய் பெண்கள் தங்கள் பட்டறிவினால் ஒளி வீசி வருகின்றனர்.
பெண்களை இறைவன் உடலளவில் மென்மையாக படைத்திருந்தாலும் மனதளவில் பெண்கள் மிகவும் வலிமையானவர்கள். எத்தனை துன்பங்களையும் சகித்து கொண்டு தன்னம்பிக்கையோடு போராட கூடியவர்கள்.தனது துன்பங்களை பொருட்படுத்தாது நாள் முழுவதும் தன் குடும்பத்துக்காக உழைக்கின்ற பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். 
முடிவுரை
புதுமைப்பெண்களாக, புரட்சி பெண்களாக, துப்பாக்கி ஏந்தி போரிடும் வீராங்கனைகளாக, அறிவூட்டும் ஆசானாக, ஒப்பற்ற இல்லத்தலைவியாக, விண்வெளி ஆராய்ச்சியாளராக, தகவல் தொடர்பு வல்லுனர்களாக என அனைத்துத்துறைகளிலும் பெண்கள் இன்று சிறந்து விளங்குகிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க பெண்கள் போற்ற பட வேண்டியவர்கள் மட்டும் அல்ல நம்மால் பின்பற்றபடவேண்டியவர்கள். எனவே அவர்களின் மகிமை உணர்ந்து சம உரிமை தருவோம். பெண்மையை போற்றுவோம்.

-சு.சுஷ்மிதா
சாமியாபுரம் கூட்ரோடு,(கிராமம்),
பட்டுக்கோணாம்பட்டி (அஞ்சல்),
பாப்பிரெட்டிப்பட்டி (வட்டம்),
தருமபுரி (மாவட்டம்)
அஞ்சல் எண்: 636905