கருணை உள்ளம் ...! 029

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

கருணை உள்ளம் ...! 029

கருணை உள்ளம்

     சாலையோரம் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அந்த மனிதரின் அருகாமையில் சென்று நின்றது இன்பராஜின் இருசக்கர வாகனம். வேகமாக தன் மகன் கார்த்திக்கோடு அருகில் சென்று நின்றவர், " இந்தாங்க கொஞ்சம் சீக்கிரமாக"...அறுந்துபோன செருப்பை நீட்ட ஆவலோடு வாங்கினான்.

"இதோ ரெண்டே நிமிஷத்தில சார் !"

தனது கையை சீண்டிய மகனிடம், "என்னடா?" அப்பா அவசர தொனியில் கேட்க கையால் ஓரிடத்தை சுட்டிக்காட்ட அங்கே ஐந்து வயது சிறுவன் ஒருவன் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவனோடு விளையாடிக்கொண்டிருந்தான்.

"என்ன அதற்கு ?" ரெண்டு பசங்க...பார்த்து சொல்லியவாறு செருப்பு தைப்பவரிடம் "என்னங்க செருப்பிலே ஊசி போகிற மாதிரி தெரியலையே. சீக்கிரம், இவன பள்ளியிலே விட்டுட்டு நான் அலுவலகம் போகணும்.

சார் ! நேத்து போட்ட சரக்கு சரியில்ல, ராத்திரி சாப்பிட வேற இல்ல அதான் ஒரு மயக்கமா இருக்கு.

"மயக்கமா ?"...

இது அப்பப்ப வர்ற மயக்கந்தான் சார்...சொல்லியவன் செருப்பில் இப்பொழுது சரியாக ஊசியை செலுத்தி தைக்கலானான்.

அங்கே இரண்டு பேரு...மெல்ல கேட்கலானான் கார்த்திக்.

ம்...நான் பெத்ததுங்கதான் ஒன்னு லூசு, ஒன்னு அறந்தவாலு.

"இரண்டு பேரையும் எதற்கு கயிற்றாலே கட்டியிருக்கீங்க ?"...

என்ன தம்பி செய்யறது கயிறு போட்டுக் கட்டலேன்னா எதிரே ரோட்டுப்பக்கம் போயிடுங்க. அப்புறம் எந்த வண்டிக்கார பையலுவோ அடிச்சுப்போட்டு போய்க்கிட்டே இருப்பானுங்க.அதனால ஒரு பாதுகாப்புக்காகத்தான். ஏற்கனவே ஒரு புள்ளைய கண்டுக்காம விட்டதால சாக்கடையில  விழுந்து செத்துப்போச்சு...

" என்ன ஒரு புள்ள சாக்கடையிலே விழுந்து இறந்துட்டுதா !"...அதிச்சியுடன் கேட்டபடி அந்த இரு சிறுவர்களையும் ஏறிட்டார் இன்பராஜ்.   அந்த சிறிய மரத்திலிருந்து இரண்டு கயிறுகள் இரு சிறுவர்களின் இடுப்பில்  கட்டப்பட்டிருந்ததைப் பார்த்தார்.

ஆமாம் சார். எனக்கு ஏழு புள்ளைங்க அதிலே ஆசையாய் ஒரு பொண்ணு...

" ஏழா !"..

" என்ன சார், எதை சொன்னாலும் ஆச்சரியமா கேட்கறீங்க"...

அப்புறம். இந்த காலத்திலே ஏழு புள்ளைங்கன்னு சொல்றே. அரசு வேலையில இருக்கிற என்னாலேயே இரண்டு புள்ளைங்க வளர்க்க படாதபாடு படுகிறேன்...

இப்ப பிரச்சனை இல்ல சார். ஏழுல இப்ப மூணுதான் மிச்சம்.

" என்ன சொல்றே ?"..

ம். ஒன்று சாக்கடையிலே விழுந்து , ரெண்டு நோய்வாய்ப்பட்டு, இன்னொன்று ..இன்னொன்று..

"இன்னொன்று ?" மீண்டும் ஆவல் மிகுந்த கேள்வி இன்பராஜிடமிருந்து...

ஆசையாய் ஒரு பொண்ணுன்னு சொன்னேனே அது தாராவுந்து போயிடுச்சு...

"தாராவுந்துன்னா?"..

"காணாம போயிடுச்சுன்னு அர்த்தம் சார்".

"அட கடவுளே ! என்னப்பா இப்படி சொல்றே?" போலிஸ்ல...

ஆறு மாசமா ஆறேழு முறை போயிட்டு வந்திட்டேன் பலனில்லை. பிறகு இந்த ஆறு மாசமா அங்கு நான் போகல போலிஸிடமிருந்து எந்த தகவலும் இல்ல.

கதை சொல்ற மாதிரி சாதாரணமா சொல்லிட்டே. உங்கள மாதிரி ஆளுங்க...

என்ன சார் செய்யறது. ஆசையில பெத்துட்டேன். இதுங்கள வளர்க்க வசதியோ வருவாயோ இல்ல .சரி போனது போகட்டுமுன்னு மனச தேத்திக்கிட்டோம் நானும் என் பொஞ்சாதியும்...

"மூன்று பேர் சொன்னீங்க. இன்னொரு பையன் படிக்கறானா ?"...இது கார்த்திக்கின் கேள்வி.

" படிப்பா சரியா போச்சு.அந்த பையல ஒரு மெக்கானிக் கடையிலே சேர்த்துட்டேன். வேலையை கத்துக்கிட்டா பொழைச்சுக்குவான்னு"...கார்த்திக்கின் முகம் சற்று வாடிய மலர்போல் ஆனது.

தைத்த செருப்பை இன்பராஜிடம் எடுத்து நீட்டியபடி, " இப்ப நீங்க கொடுக்கப்போற பணத்தை வச்சுதான் எங்க எல்லோருக்கும் கால சாப்பாடே. கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க சார்... வறுமையின் உச்சம் அவர் வார்த்தையில் மட்டுமல்ல முகத்திலேயும் பிரகாசமாக தெரிந்தது.

 ஒருவாரம் கடந்தது.

அலறிய அலைபேசியை அலுவலக வேலையை பார்த்தபடியே அழுத்தினார் இன்பராஜ்.

" ஹலோ யார் சார்?"..

இந்த எண்ணிலிருந்து கார்த்திக் என்கிற ஒரு சிறுவன் பேசினான்.

"சொல்லுங்க என்னுடைய மகன்தான். நீங்க யாருங்கம்மா?"...

"ஓ...அப்படிங்களா ! என் பெயர் கிருபா. கருணை உள்ளம் என்கிற பெயரில் அனாதை மற்றும் ஏழைகள் நலனுக்கான அமைப்பை தோற்றி நடத்தி வருகிறேன். நான்கு நாட்களுக்கு முன்பு உங்க அன்பு மகன் எங்க அமைப்பிடம் தொடர்பு கொண்டு பேசினார். அனாதை சிறுவர்கள் மூவருக்கும் கல்வி கற்க ஏற்பாடு செய்து தர வேண்டினார். அவர் கூறியபடியே அந்த மூவரையும் இன்று நாங்கள் எங்கள் இல்லத்தில் சேர்த்துக்கொண்டோம்.அதில் ஒரு குழந்தை மூளை வளர்ச்சியற்றதும் கூட.. இதை உங்கள் மகனிடம் மறக்காமல் சொல்லிவிடுங்கள் சார்.

சட்டென செருப்பு தைத்த சம்பவம் இன்பராஜ் நினைவுக்கு வந்தது. பிறகு " சரிங்கம்மா சொல்லிவிடுகிறேன். உங்கள் அமைப்பிற்கும் உங்கள் சேவை உள்ளத்திற்கும் நன்றிங்கம்மா"..

பரவாயில்லீங்க சார். ஒரு கருணை உள்ள தங்க மகனை பெற்றதற்கு உங்களுக்கும் உங்க மனைவிற்கும் எனது சார்பாகவும் எங்களது அமைப்பு சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி சார்..

" சரிங்க மேடம்"..

 மாலையில் வழக்கம்போல் பள்ளியிலிருந்து மகன் கார்த்திக்கை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு செல்லலானார்...

"கார்த்திக் !"

" என்னப்பா !"

எங்களுக்கே தெரியாம ஒரு திருட்டு வேலையை கச்சிதமா சிறப்பா செய்திட்டியே..

 "அப்பா !"...கார்த்திக்கின் இதய துடிப்பு பன்மடங்காக பயத்தில் துடிக்கலானது.

எங்களுக்கே தெரியாம.. முகத்தில் ஒரு பூரிப்பும் பெருமிதமும் வந்தவாறு வாகனத்தை செலுத்திக்கொண்டிருக்க...

பாவம். படிப்பு பணத்தாலே பாழாகக்கூடாதுன்னு அதை செய்திட்டேன்...சொல்லியவன் அமைதி காக்க...

தப்பில்லேடா பெருமையா இருக்கு. செருப்பு தைக்கிற அந்த மனுஷனோட மூணு பசங்களுக்கும் நல்ல ஒரு விடிவு காலத்தை ஏற்படுத்திக் கொடுத்திட்டே.. நீ செய்த அந்த காரியத்தால உன்னை மட்டுமல்ல என்னையும் உங்க அம்மாவையும் சேர்த்து வாழ்த்தினாங்க...

தந்தை கூறிய வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தவன்.சற்று தப்பி பிழைத்தவனாய் தனக்குதானே உணர்ந்து சுதாகரித்துக்கொண்டான். ஆயினும், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சக தோழன் பள்ளியில் செலுத்த வேண்டிய பணம் ரூபாய் 15,800 ஐ அம்மாவின் அலமாரியிலிருந்து திருடி வந்து அவனுக்கு கொடுத்த நினைவுகளும் கண்முன்னே ஓடிவந்து கர்ஜித்தபடி சென்றது.

- து.ரா.சங்கர்,
 கடலூர்.