சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம் கந்த சஷ்டி திருவிழா

சூரசம்ஹாரம்

குறுகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள்வாய் என்று பாடலானது *கந்தபுராணமும் சூரபத்மனின் சம்ஹாரமும்*

ஸ்கந்த புராணம் எனப்படும் கந்த புராணம்  புராணங்களில் பதிமூன்றாவது புராணம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வடமொழி, தென்மொழியில் வல்லவரான கச்சியப்ப சிவாச்சாரியாரால்  எழுதப்பட்ட புராணம்.
இலங்கையில் அதிகம்  பேர் பயிலும் புராணம்.

சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகி நூறாயிரம் சுலோகங்களால் ஆனதும்,
சனற்குமார சங்கிதை,சூத சங்கிதை,பிரம சங்கிதை,விஷ்ணு:சங்கிதை,  சங்கர சங்கிதை, ஆர சங்கிதை எனும் 
 ஆறு சங்கிதைகளுடன்,
உற்பத்தி காண்டம்,அசுர காண்டம், மகேந்திர காண்டம் ,யுத்த காண்டம்,/ தட்ச காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டு 135 படலங்களுடன்  10345 பாடல்களைக் கொண்டு, முருகப் பெருமானின் வரலாற்றை முழுமையாக முறையாக ,கூறுவதான புராணம்.

 பிராணநாயகம், முதல்வன் புராணம் என்று அழைக்கப்படும் கந்தபுராணம்  , ஆன்மாக்களுக்கு பற்றுக்கோடாகிய முருகப்ப்பெருமானை பற்றி கூறி, ஞான வாசனை வீசும்,, 181000 சுலோகங்கள் கொண்ட புராணம்.

சிவாக்கினியில் தோன்றியதால் *ஆறுமுகம் சிவமே* 
*சிவமே ஆறுமுகம்*
 என பெயர் பெறும்  ஆறுமுகன்
 ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம்,புகழ் என்ற ஆறுமுகத்தை உடையவனாகிறான்.

 பிரணவ சொரூபமான முருகனிடம் காக்கும் கடவுளான முகுந்தன்,
 அழிக்கும் கடவுளான ருத்திரன் ,
படைக்கும் கடவுளான கமளோற்பவன் அடக்கம்.

*சிவாச்சாரியார்*  திட்டப்படி 
அசுரனின் மகள் *மாயா*
அசுரர்களின் தந்தையான ,
பிரம்மனின் மகனான
*காஷ்யபரை* மயக்கி, அசுரர்கள் பலரை உருவாக்குவதே உள்நோக்கமானது.
 அவ்விதமே மாயை காடஷ்யபரை மயக்க, அவரும் இளைஞனாக வடிவெடுத்து ,
முதல் ஜாமத்தில் இருவருக்கும்  பத்மாசுரன் எனும் *சூரபத்மன்* மகனாக
30 ஆயிரம் அசுரர்களுடன் பிறந்தான் .

இரண்டாம் ஜாமத்தில் இருவரும் 
சிங்கங்களாகக்கூடி களிக்க
 ஆயிரம் முகங்கள்,
இரண்டாயிரம் கைகள் உடைய *சிங்கமுகன்*
40ஆயிரம் அசுரர்களுடன் 
மகனாகப் பிறந்தான் .

மூன்றாம் ஜாமத்தில் யானையாக 
கூடிக் களிக்க, யானைமுகம் கொண்ட *தாரகாசூரனும்* நாற்பதாயிரம் யானை முக அசுரர்களும் பிறந்தார்கள்.

நான்காம் ஜாமத்தில் ஆடுகளாக கூடிக் களித்து, ஆட்டின் முகம் உள்ள 
*அஜாமுகி* யும் 30 ஆயிரம் 
அசுரர்களும் பிறந்தனர் . இவ்விதமாக பிறந்த இரண்டு லட்சம் அசுரர்களிடம் காஷ்யபர் "சிவனை வணங்கி தர்மத்தின் வயப்பட்டு தர்ம காரியம்"  செய்யுமாறு பணிக்க தியானத்தில் அமர,
மாயாவும் "இந்த  ஜகத்தினை ஆள, தேவலோகம் கைப்பற்ற, வடத்வீபகம் 
சென்று யாகம் துவங்கவும்" என்று பணிக்கிறாள்.

சூரபத்மனும் சகல வரங்களையும்
 பெற்று இந்திராதி தேவர்களைக் கொடுமைப்படுத்திட,தேவராஜன்
பிரம்மனிடம் சென்று உதவி கேட்க பிரம்மனும் சிவனார் மட்டுமே உதவி செய்ய முடியும் என்று சொல்ல 
 மேருமலை சென்று சிவனை நோக்கி தவம் செய்ய , சிவனும் அவரின் குறை கேட்டு ,"விரைவில் குமரன் தோன்றி, அரக்கர்களை அழித்து, தேவர்களை காப்பாற்றுவான்!" என்று அருள் 
வாக்கு தருகிறார் .

*சூரனும் பதுமனும்* 
எனும் இருவரின் 
ஒன்றிணைந்த உருவமே சூரபத்மன்!
இதை *திருமுருகாற்றுப்படை*
" இரு பேர் உருவின் 
ஒரு பேர் யாக்கை!" என்று சொல்கிறது!

*கந்தபுராணம்* கூற்றாக,
சூரபத்மன் சிவனிடம் 
"1008 அண்டங்களை ஆளும் வரத்தையும், சிவனின் வழி வந்தவர்களைத்
 தவிர வேறு யாரும் தன்னை அழிக்க கூடாது" என்ற வரத்தையும் பெற்றவன்.
 
*சூரபத்மன் எனும் ஆணவம்* ,
*சிங்கமுகன் எனும் கண்மம்* ,
*தாரகாசுரன் எனும் மாயை*  
ஆகிய மும்மலங்களால் ஏற்படக்கூடிய தீமைகளை ஒழிக்க வேண்ட.டியே,
*ஞானம்* எனும் முருகப்பெருமான் தோன்றி 6 நாட்கள் தொடர் போரிட்ட நிகழ்வே  சூரசம்ஹாரம் என்று *கந்தபுராணம்*  செய்தியாக 
நமக்கு பதிவிடுகிறது.

*சூரபத்மன்* 
*நான்*  என்ற அகங்காரமும் 
*எனது*  என்னும் மமகாரமும் 
ஒருசேர அமையப் பெற்றவன்.
சர்வ லோகங்களையும் ஆளும் சர்வ வல்லமை பெற சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்றவன்.
 சிவனை நோக்கி கடும் தவமிருந்து 
1008 அண்டங.ங்களை ஆளவும்,
108 யுகங்கள் உயிர் வாழவும் 
வரம் பெற்றவன்.
 சிவசக்தி அன்றி வேறு சக்தியால் 
தன்னை அழிக்க முடியாது 
என்ற வரத்தை சிவனிடம் இருந்தே அவர் அருளாகப் பெற்றவன் .
இந்திரன் மகனான *சயந்தனை*  சிறையிலிட்டு ,சித்திரவதை செய்து, அதர்ம வழியில் ஆட்சி செய்தவன் .
எந்த பெண்ணிலிருந்து பிறந்தவர் மூலமும் அழிவு நேரிடாமல் 
தங்களின் சக்தியால் மட்டுமே 
அழிவு நேரிட வேண்டும் என்றும் வரம் பெற்றவன் .

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய அக்னியின்
 சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் ,அதோமுகம் என்ற ஆறு நெருப்புப்பொறிகளிலிருந்து
 உருவான முருகன்,
 சரவணப் பொய்கையில் இருந்த 
தாமரை மலர்களில் குழந்தைகளாக மாறி கார்த்திகைப் பெண்களிடம் கந்தனாக வளர்ந்து, சூரனை சம்ஹாரம் செய்யவும்,சூரனுடன் பிறந்த இரு தம்பியரையும் சம்ஹாரம் செய்ய எடுத்த அவதாரமே முருகனின் அவதாரமென 
*கந்தபுராணம்*  பதிவிடுகிறது.

சிவபெருமான் முருகனிடம்,
சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை அழித்து, தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து, தர்மத்தை நிலைநாட்ட புறப்படுமாறு அன்புக் கட்டளையிடுகிறார்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது, அதிலிருந்து வரும் வெப்பம் தாங்காது, பார்வதிதேவி ஓட ,அவள் பாத சிலம்பு களிலிருந்து நவரத்தினங்கள் சிதறி விழ, அவை நவசக்திகளாக,
 அந்த நவசக்திகளின் வயிற்றிலிருந்து 
  தோன்றிய நவவீரர்களான
வீரபாகுதேவர், வீரகேசரி ,வீர மகேந்திரர், வீர மகேஸ்வரர்,வீரபத்திரர் வீர தீரர், வீரமார்த்தாண்டர்,வீராந்தகர், வீராக்கதர்
போன்றவர்களுடனான லட்சத்து ஒன்பதுமர்  படைவீரர்களுடன் 
சூரசம்ஹாரப் போருக்கு முருகப்பெருமான்  புறப்படுகிறார்.  

சிவபெருமானும் தன் அம்சமாகிய பதினொரு *உருத்திரர்களை*யும், பாசுபதாஸ்திரத்தையும் பெற்று, அம்மையப்பன் ஆசியுடன் ,
திருச்செந்தூர் வந்து ,சனகர் ,சனாதனர், சனந்தனர் ,சனத்குமாரர் போன்ற பராசர முனிவர் புதல்வர்கள் வரவேற்க,
 சூரனிடம் சிறை வைத்த தேவர்களை விடுவிக்கச் சொல்லி தூது அனுப்ப ,அது நடவாத காரியம் என்ற ஆணவமுழக்கத்துடன், தூது முறிவு பட, தூது சென்ற வீரவாகுதேவரை சிறைப் பிடிக்க அவுணப்படை* முற்பட,
 போரில் அசுரர் படை தலைவர்களான *சகத்திரவாகு/வச்சிரபாகு*
 எனும் சூரபத்மனின் மகன்கள் கொல்லப்படுகிறார்கள்.

தூது சென்ற செய்தி முறிந்ததை 
அறிந்த முருகன் தேரைக் கொண்டு வரச்சொல்லி கட்டளையிட்டு கிளம்ப,
பிரம்மன் ,திருமால் மற்றும் தேவர்கள் 
தத்தம் வாகனத்தில் ஏறிப் புறப்பட,
நினைத்த மாத்திரம் எல்லாப் புவனங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்ற 108 படைத்தலைவர்களோடு,
2000 பூதப் படைகள் புறப்பட ,
வானவர் பூச்சொரிய ,
பேரிகை ,காளம் ,கரடிகை வாத்தியம் முழங்க, புழுதியானது சூரிய சந்திரனின் ஒலிகளை மறைக்க ,கடலிலே பூதப் படைகள் இறங்கிட ,கடல் நீரும் சேறாகிட, முருகன் தங்கிடவென வசிப்பிடம்  ஏமகூடத்தில்(கதிர்காமத்தில்)   தேவதச்சன்  அமைக்க ,
முருகனின் தேர் கீழே இறங்கியது .

படைகளுடன் தங்கி சூரபத்மனை 
வதம் செய்த தலம் திருச்செந்தூர்.
 ஐப்பசி வளர்பிறை சஷ்டியில் வெற்றிகொண்ட தினமே 
கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது .

இந்நிகழ்வு பற்றி *மகாபாரதத்தில்*
முனிவர்கள் உலக நன்மைக்காக 
ஒரு புத்திரனை வேண்டி யாகம் ஆறு நாட்கள் நடத்த, அந்த யாக குண்டத்தில் இருந்து தினம் ஒரு வித்து வீதமாக, ஆறு வித்துக்கள் வெளிவர ,அவர்களை ஒன்றாக்கிடவே கிடைத்தவர் முருகப்பெருமான் எனக் கூறப்படுகிறது.

கச்சியப்ப சிவாச்சாரியார் *கந்தபுராணத்தில்*  
தேவர்கள் அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையில் இருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச் செய்து, நோன்பிருந்த முருகனும் அருள் செய்ததை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து 
கந்தசஷ்டிவிரதம்  கொண்டாடப்படுகிறது .


*தாரகாசுர வதம்*
வெற்றி சங்கு முழங்க,
மலர்மாரி பொழிய,
 தேவசேனாதிபதி படைகள் புடைசூழ, *தாரகாசுரனை*  கிரவுஞ்ச மலையில் சம்ஹாரம் செய்து ,அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்கரமாகிய செம்பொன் பதக்கத்தை  முருகப்பெருமான் பெற்றார்.

*சிங்கமுகாசுர வதம்*
தாய் கொடுத்த வேல் கொண்டு 
சம்ஹாரம் செய்கிறார்.
சூரபத்மனின் மகன் பானுகோபனுடன்
போரிட்டு படுதோல்வி அடையச் செய்து, அவன் புறமுதுகிட்டு ஓடி,
போரின்  மூன்றாம் நாள் முருகனால் கொல்லப்படுகிறான் .

போரின் நான்காம் நாள் சூரபத்மன் தலைமை அமைச்சர் தர்மகோபன் 
மற்றும் 3 ஆயிரம் சூரபத்மனின் அசுரப் படைகள் கொல்லப்படுகிறார்கள்.  
 
*சூரபத்மன் வதம்*
முருகனுக்கும் சூரபத்மனுக்கும் இடையில் மாய போராக நிகழ்கிறது .முருகனின் வேலில் இருந்து தப்பிக்க 
மிருகங்கள், பறவைகள் ,மரங்கள் என உருவம் மாற்றி மாயத்தால் தப்பித்து ஓடுகிறான்.
*மரப்பாடு*  என்ற மாந்தோப்பில் மாமரமாக மறைந்திருந்த சூரபத்மனை தன் அன்னை கொடுத்த வேலெடுத்து,
 இரு கூறாக பிளக்கிறார்.
அந்த வேல் பிறகு கங்கை சென்று,
 நீரில் மூழ்கி, தோஷம் நீங்கி, மீண்டும் இறைவனின் கையில் வந்து சேர்வதாக நமக்கு *கந்தபுராணம்*  செய்தியாக தெளிவுபட கூறுகிறது. 

நரகாசுரன் அழிவு *தீபாவளி* ஆனது. சூரசம்ஹாரம் *கந்தசஷ்டி*  விழாவானது.
தட்சன் தன் மகள் உமையின் கணவனாம் சிவனை யாகத்திற்கு அழைக்காமல் மரியாதை கெடுக்க, தட்சனின் யாகசாலையை காளியாகி பார்வதியும்,வீரபத்திரனாகி சிவனும் அழித்தனர்.இத்தகு
 தட்சனின் மறுஜென்மமே சூரபத்மன். இறக்கும் தருவாயில் முன் ஜென்ம நினைவு அவனுக்கு வர ,எதிரே நிற்பது தன் பேரன் என்று உணர்ந்து ,"உன்னை என் முதுகில் சுமக்க ஆசைப்படுகிறேன். நான் உன் மடியில் இருந்தால் என்னை ஆணவம் மீண்டும் ஆட் கொள்ளாது"  என்ற கோரிக்கையை தட்சனான சூரபத்மன் முருகப்பெருமானிடம் 
முன் வைக்கிறான். இதன்படியே சூரனின் ஒரு பகுதி உடலை மயிலாக மாற்றி,
 அதன் முதுகில் அமர்ந்து கொள்கிறார்.  இன்னொரு பகுதியை சேவலாக்கி, தன் கொடியில் அமர்த்தி,  முருகப்பெருமான் தன் கைப்பிடியில் வைத்துக்கொள்கிறார் .

*குறுந்தொகையில் *
"சேவல் அங்கொடியோய்"
 என்று வரியோடு 
*நற்றிணையில்*
" நெடுவேல் (173)"
 வரியாகிய பதிவு உணர்த்தும்.

சூரசம்ஹாரம் நமக்கு உணர்த்துவது... கிரவுஞ்சகிரியை பிளந்து ,தாரகாசுரனை அழித்து ,தர்மகோபன், பானுகோபன், சிங்கமுகன் என்ற சூரபத்மன் உறவுகளை எல்லாம் வதம் செய்து,
* சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்!*  என்ற மாமரம் பிளந்த நிகழ்வு வழக்குச் சொல்லாக வெற்றிவேலன் புகழ் பாடும்  கந்தபுராணத்தின் பதிவாக நமக்கு முன் வைக்கப்படுகிறது.
*குறுந்தொகை*
கிரவுஞ்ச மலை பிளந்ததை
"நெஞ்சு பக எறிந்த 
அஞ்சுடல் நெடுவேல்!" ...என்றும்,
*கலித்தொகை*
"ஒன்னாதார் கடந்து அடூ உம் 
உரவு நீர்மா கொன்ற !"
என்றும் புலப்படுத்தும். 

கடலாய் மாறி மாறி சூரனுடன் போர் செய்தபோது யுக்திகள் உதவாமல் போக, சூரன் கடலுக்கடியில் மாமரமாக ஒளிந்து மாயை காட்ட,  சுப்பிரமணியன் சம்ஹரித்த நிகவ்வானது...
* திருச்செந்தூரின் கடலோரத்தில்* *செந்தில்நாதன் அரசாங்கம்*
*தேடித்தேடி வருவோர்க்கெல்லாம்* *தினமும் கூடும் தெய்வாம்சம்*
*அசுரரை வென்ற இடம்*  
*அது தேவரைக் காத்த இடம்*
* ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித்*  *திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம்* ... என்று அழகுற பாடலாக 
நமக்கு கூறப்பட்டிருக்கும்.

இத்தகைய சம்ஹார நிகழ்வு முடிந்ததும்
முருகனைக் குளிர்விக்க *சாயா*  விரதமாக கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தில் கந்தசஷ்டி விரதத்தை பற்றி குறிப்பிடுவது ...இந்த நாளில் விரதம் இருந்து ,தேவர்கள் முருகனின் வெற்றிக்காக வேண்டியதால் அந்த நாட்கள் கந்தசஷ்டி விரதம் ஆனது அவன் எடுத்த இந்த அவதாரமும் அரக்கர்களை அழிக்க வேண்டி எடுத்ததென்று  அழகுற கூறி ,தீமைகளை அழித்த திருவிழாவான  இவ்விழாவை நேரில் காண்பதோ, சொல்வதைக்  கேட்பதோ எதிரிகள் பயமே இருக்காது -முருகன் அருளும் கிடைக்கும்" என்று ஞான நூல்கள் நமக்கு 
செய்தியாக முன் வைக்கிறது.
இதையே 
*நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள்வாய்!
 என்று வரி கொடுத்து 
"சிக்கலில் வேல் வாங்கி 
செந்தூரில் சம்ஹாரம் வழக்கு எடுத்து எங்கும் கேட்கும் குரலான முருகப்பெருமான்!"
 என்று சொல்லப்படும் .

சூரபத்மனைக் கொன்று,
முருகப்பெருமானின் கையில் திரும்பி வந்த வேலானது கடற்கரையோரத்தில் பூமியில் குத்த , உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளிவர, *நாழிக்கிணறு*  நீராகிறது. நீரையும் மணலையும் சேர்த்து லிங்கம் செய்து ,சிவபூஜையை முருகன் செய்விக்க விண்ணும் மண்ணும் குளிர்ந்து,  தேவர்கள் முனிவர்கள் மலர்மாரி பொழிந்த நிகழ்வு நமக்கு பதிவாகிறது.

இத்தகு முருகப்பெருமானை 
*பரிபாடல் (19)*
"கடம்பர் செல்வன் மால்மருகன்"என்றும்   *புறநானூறில் (16)*
"நெடு வேல் முருகன்" என்றும்,
*பரிபாடலில்*
"மூவிரு கயந்தலை
முந்நான்கு முழவுத் தோளான்!"
 என்ற பாடலும் நமக்கு உணர்த்தும் .

சுப்பிரமணியனின் ஆணைப்படி 
சூரனின் மொத்த உற்றார் உறவும்  
அழிய ,வருண பகவானும் மொத்த ஊரையும் தூங்கும் குழந்தைகள் உள்பட கடலுக்கடியில் மூழ்கடித்து போரை முடிக்க, சூரனை அழித்த மனக்கேதம் தீர, சுப்பிரமணியன் ஜப மாலையோடு சிவபூஜை செய்து கந்தசஷ்டி விரதத்தை தொடங்குவதற்கு 
*அருணகிரிநாதர்*  அழகான  பாடலாக, அந்தணர் மறை வேள்வி காவற்கார.....எதிரான செஞ்சமரை மாயு மாயக்கார துங்கரண  சூர சூறைக் கார செந்தினகர் வாழுமாண்மைக்கார பெருமானே!"...என்று பாடியிருப்பார்.

*கந்தபுராணம்* இச்செயலையே,
"மூன்று மலங்கள் அளித்தமை 
ஞானம் எனும் வேல் கொண்ட வேந்தனால் மட்டுமே முடியும்!"
 என்ற வரிகளாக்கித் தருகிறது  .

*மாமரப் போர்*  நிகழ்வைக் கந்தபுராணம்
 "தீயவை புரிந்தாரேனும் 
குமரவேல் திருமுன் உற்றாள் 
தூயவராகி மேலை 
தொல்கதிஅடைவர்"..
 என்று கூறியிருக்கும் .

 கந்தபுராணத்தில் 
காப்பு கட்டி பக்தர்கள் இந்த கந்த சஷ்டி விரதத்தை 6 மாதமாக செய்வித்து மகிழ்வார்கள் என்பதை நமக்கு தலபுராணமாக கூறுகிறது. 
சூரசம்ஹாரம் முடிந்ததும் வள்ளி, தெய்வானை இல்லாமல் ஜெயந்திநாதர் வதம் செய்ததை நிவர்த்தி செய்ய, வள்ளி-தெய்வானையுடன் திரும்பி வருகை தந்து சுவாமியின் எதிரே ஒரு *கண்ணாடி*  வைத்து ,ஜெயந்தி நாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் திருச்செந்தூரில் நிகழ, முருகப்பெருமானே இந்த நிகழ்வை கண்டு மகிழ்வதாக நமக்கு கந்தபுராணம் பதிவு கூறும் .

முருகன் சிவனின் அம்சமான அவதாரம். எனவே தான் கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாளிலே மாலையில் , சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவனாகவும், அதிகாலையிலே வெண்ணிற உடையை எட்டாம் நாளிலே சார்த்தி  பிரம்மாவாகவும், மதியத்தில் பச்சை நிறம் சாத்தி விஷ்ணுவாகவும் முருகனை  அலங்கரித்து மகிழ்வார்கள் திருச்செந்தூரில் உள்ள ஞான பக்தர்கள்.

சூரசம்ஹாரத்தை 
*குறுந்தொகை( 88 )*ல்
"மன்ற மராஅத்த போதிர்க் கடவுள்!"
*அகநானூறு*
"சூர் மருங்கறுத்த சுடரிலை நெடுவேல்"
  எனும் வரிகள் உணர்த்தும். 

"மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்" என்று கூறப்படுகின்ற சிறப்பு வாய்ந்த *திருச்செந்தூரை* *புறநானூறு (55)*
" வெண் தலைப் புணரி 
அலைக்கும் செந்தில்"
என்று புகழ்ந்து கூறியிருக்கும்.

*கந்தபுராணம்* உரைப்பது
சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை அழிப்பதற்காக எடுத்த அவதாரமே என்பதை அழகான பாடலாக
 " தேவர் படைத்தலைமை* *பொறுப்பெடுத்து*  
*தோளின் தினவெடுத்து* 
*சூரன் உடல் கிழித்து*  
*கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு*  *கடல் கொஞ்சம் செந்தூர்*
*எனும் படை வீடு !* 
வரிகள் நமக்கு தெளிவுற உணர்த்தும்.  

*கந்தபுராணம் படிப்போம்!*
*சூரசம்ஹாரம் அறிவோம்!*
*கந்தன் அருள் பெறுவோம்!*

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை.