எட்டயபுரத்துப் பாட்டு கவிஞன்

பாரதியார் பிறந்தநாள் கவிதை

எட்டயபுரத்துப் பாட்டு கவிஞன்

எட்டயபுரத்துப் பாட்டுக்கவி..!

எட்டயபுரத்தில் ஏழைக்
   குழந்தையாய்ப் பிறந்து
எட்டு வயதிலே
   கவியெழுதும் திறனடைந்து
எட்டப்ப நாயக்கரிடம்
   பாரதிபட்டம் பெற்று
எட்டுத்திக்கும் தமிழின்
   புகழைப் பரப்பியவன்...!

பாடலின் இலக்கணக்
   கட்டுகளைத் தகர்த்துப் 
பாட்டுக்கொரு புலவனாய்ப்
   பலகவிகள் படைத்துப்
பன்மொழிப் புலமைமிகு
   பாவலனாய்ப் புகழ்பெற்று
தன்மொழியினை உயிரினும்
   மேலாய்ப் போற்றியவன்...!

முண்டாசு தலைப்பாகையில்
   வறுமையை மறைத்து
முறுக்கு மீசையதில்
   வீரத்தை நிறைத்து
மூக்கின்மேல் கோபத்தை
   அதிகமாய்க் கொண்டு
மூச்சுக் காற்றினிலே
   வெள்ளையனை எதிர்த்தவன்...!

சொந்தபூமியில் துன்புறும்
   மக்களைக் கண்டு
சூடேறிய இரத்தம்
   தேகமெங்கும் சீறிப்பாய்ந்து
சுடும் வெயிலிலும்
   புரட்சிக்குரல் கொடுத்து
சுந்தரத்தமிழில் சுதந்திர
   வேட்கையைப் போதித்தவன்...!

வீட்டிற்குள் அடங்கியிருந்த
   பெண்களைப் பார்த்துப்
பாட்டினில் உரிமைமிகு
   வரிகளைப் பதித்து
மூடநம்பிக்கைகளை முத்தமிழ்ப்
   பேச்சால் உடைத்தெறிந்து
மனைவியின் தோளில்
   கரம்போட்டு வலம்வந்தவன்...!

தீண்டாமையை ஒழித்திட
   தீக்கவிதை படைத்த
பெண்மையைப் போற்றிட
   உயிர்க்கவிதை வடித்த
மண்ணின் மைந்தர்களை
 ‌‌ மதித்த மகாகவியை 
மண்டியிட்டு வணங்குவோம்... 
   மனதாரப் போற்றுவோம்...!

                               - பாக்யபாரதி,,,