வரலாற்றை கயிறு போல...!

புதுக்கவிதை

வரலாற்றை கயிறு போல...!

வரலாற்றை கயிறு போல்...
திரித்து வைத்துக் கொண்டார்கள்
மகா புத்திசாலிகள்

அறிவியல் என்பது அவர்களுக்கு
ஒரு காட்டுப் பூச்சி தான்
கலப்பை ஆதரிக்கும் எதுவும்
மெய்யானதாக இருக்க முடியாது

பெரும் கடவுள் வராக உருக் கொண்டு
கடலிலிருந்து தன் கொம்புகளால் முட்டி
எடுத்து வந்த பூமி
இன்னும் அப்படியே தான் இருக்கிறது
அவர்களது பிரதேசத்தில்

அருளியவரை விடவும் புனிதமானவை
வேதங்கள்
மாற்றம் என்பது அறியாமையின்
குழந்தை

படைத்த பிரம்மனை
தலைகீழாக நிறுத்தி வைத்தால்
உச்சியில் உதித்தவனுக்கு
கோபம் வராதா?

தேன் கூட்டுகள் அத்தனை
அடுக்குகள் இருக்கும் போது
இந்த பூமியில் இருக்க கூடாதா

சிரசிலிருந்து உதித்தவன்
கடவுளில் முத்தத்தை
முதலில் பெற்றான்
பாதத்திலிருந்து உதித்தவன்
கடவுளின் முத்தத்தை எதிர்பார்த்திருக்க
கடைசியில் கால் தூசின் முத்தம் தான்
வாய்த்தது

பிறகெப்படி  சமத்துவம் மலரும்
பிறகெப்படி அவர் தந்தையாக
இருக்க முடியுமென்றான் மெதுவாக

மலம் அள்ளும் கரண்டி பிடித்த கரங்களில்
ஒரு புதிய கொடி
மண்வெட்டி பிடித்து காய்த்த கரங்களில்
இன்னொரு கொடி

கற்பனையில் கூட உழைக்க நினைக்காதவன்
புலம்புகிறான்

" இந்த அற்ப பதர்களுக்கு இது ஏன் புரியவில்லை
சாதி என்பது சாமானியனால் உருவாக்கப்பட்டதா
அழிப்பதற்கு

வர்ணம் என்பது அணியும் உடையா
களைவதற்கு
தோலை உரிக்க முடியுமா ?"

"பூமியுள்ளவரை நீ போராடிக் கொண்டேயிரு

ஒவ்வொரு சாதியாக
 நீ ஒழித்துக் கொண்டேயிரு

புற்றீசல் போல நாங்கள்
புதிது புதிதாக உருவாக்கி கொண்டேயிருப்போம்

ஏனென்றால் கடவுளின் பரிபூரண ஆசி
எப்போதும் எங்களுக்கு உண்டு"

தங்கேஸ்