தியாக சீலி குயிலி...! 013

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

தியாக சீலி குயிலி...! 013

தியாக சீலி குயிலி 
குறிப்புச்சட்டகம்: 
முன்னுரை 
மெய்க்காப்பாளரான குயிலி
ஒற்றர் குயிலி 
தற்கொலைப்படையான குயிலி 
வீரத்தாய் குயிலி 
முடிவுரை 
முன்னுரை: 
        நம் விடுதலைப் போராட்டத்தில் பல தலைவர்களைப் பற்றி படித்திருப்போம், தெரிந்திருப்போம். பல பெண் போராட்ட தலைவர்களையும் அறிந்து இருப்போம். பலரும் அறிந்த மிக முக்கியமான வீரமங்கைகள் ஜான்சிராணி மற்றும் வேலு நாச்சியார். நம்மில் பலரும் அறியாத ஓர் தியாக சீலி , சிறந்த போராட்ட வீரர், மனிதருள் மாணிக்கம் அது யார் என்றால் "வீரமங்கை  குயிலி " .  இவர் காளையார் கோவிலை ஆட்சி புரிந்த வீரமங்கை வேலு நாச்சியார் பெண்கள்  படையின் தளபதி  ஆவார். இவரின் தியாக செயல் சொல்லி முடியாத ஓர் உன்னதமான செயல். இந்த வீரமங்கை குயிலியைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மெய்க்காப்பாளரான குயிலி: 
     வீரமங்கை குயிலி தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். ஆனால் வீரத்திலோ ஆயிரம் யானைகளுக்குச் சமம். தனது சிறு வயதில் இருந்தே மிகவும் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருந்தார். இவரின் பல வியப்புமிகு குணங்களை கண்டறிந்த வீரமங்கை வேலு நாச்சியார் குயிலியை  தனது படையின் மெய்க்காப்பாளராக சேர்த்துக் கொண்டார்.இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதற்கு வீரமங்கை வேலு நாச்சியார் சாதி பார்க்காதவர்கள் தான் என்  படையில் இருக்க வேண்டும் என குயிலியை நியமித்தார். முற்காலத்திலேயே சாதியை எதிர்த்து சமத்துவம் பாராட்டிய வீரமங்கைகள் இவர்கள்.

ஒற்றர் குயிலி: 
      ஆங்கிலத்தளபதி பாஞ்சோர் காளையார் கோவில் முதல் சிவகங்கை அரண்மனை வரை தனது படையினை நிறுத்தி வைத்தது இருந்தார். ஆயுத  கிடங்கில் பல  துப்பாக்கிகளும், வெடி மருந்துகளும்  குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கே போர்க்களத்தில் இருந்த வேலு நாச்சியாரிடம் மூதாட்டி ஒருவர் நாளை விஜயதசமி  திருவிழா, அன்று காளையார் கோயிலில் பெண்கள் மட்டும் தான் வழிபாடு செய்வர், ஏன் அந்த சந்தர்ப்பத்தை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது என்று கேட்டார். அற்புதமான நல்ல யோசனை ஆனால் நீங்கள் யார் என்று வேலு நாச்சியார் கேட்க, பதில் ஏதும் கூறாமல் அம்மமூதாட்டி நகர சின்னமருது தனது வாள் முனையில் அம்மூதாட்டியை தடுத்தார். அப்போது தான் தெரிந்தது அது குயிலி என்று. தங்களது அனுமதி இன்றி வேவு பார்க்க வந்தேன் என்று கூறி வேலு நாச்சியாரை மகிழச் செய்தார். ராணியின் திட்டங்களுக்கு முன்னதாகவே தன்னை ஆயத்தம் செய்து கொண்டவர் இந்த குயிலி.

தற்கொலைப்படையான குயிலி: 
     குயிலியின் ஆலோசனைப்படி வேலு நாச்சியாரின் படை காளையார் கோவிலுக்குச் சென்று தங்களது உக்கிர தாக்குதலை நடத்தினர். ஆனால் ஆங்கிலேயரின் ஆயுதங்களை தாண்டி இவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அப்போது தன் உடல் முழுவதும் எறிநெய்யை  பூசிக் கொண்டுஒரு உருவம் ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கில் குதித்தது உடனே ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியது. கூடவே சேர்ந்து அந்த உருவமும் எறிந்தது. அந்த எறிந்த உருவம் தான் குயிலி. இந்நிகழ்வால் ஆங்கிலேயரின் படை வேலு நாச்சியாரிடம் தோற்றது. தனது அரசி வேலு நாச்சியாருக்காக தன்னையே மனித வெடிகுண்டாக மாற்றிய தியாக சீலி தான் குயிலி.

வீரத்தாய் குயிலி: 
    வேலு நாச்சியாரின் படைத் தளபதியான குயிலி மற்றோர், சிலம்பம், குதிரையேற்றம், வில்வித்தை என அனைத்து கலைகளிலும் மிகவும் சிறந்தவர்.ஆண்களே கண்டு வியக்கும்  அளவில் போர்களத்தில் யுத்தம் செய்பவர். சீறிப்பாயும் சிங்கம் என எதிரிகளை தாக்கும் திறமை கொண்டவர். போர்களத்தில் மட்டுமின்றி இயல்புநிலையிலும் கூட சமயோஜித யுக்திகளை கையாலும் சிறப்பு கொண்டவர்.

முடிவுரை :
      நாம் எத்தனையோ வீர மங்கைகளைப் பற்றி படித்திருப்போம் ஆனால் தனது நாட்டிற்காக  தலைவிக்காக தன்னையே மனித வெடிகுண்டாக மாற்றிக் கொண்ட தியாக ஒளி விளக்கை எங்கும் கண்டு இருக்க மாட்டோம்.  இப்படிப்பட்ட தியாக சீலியான குயிலி ஓர் பெண் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. பெண்ணாய் பிறந்த நாம் ஒவ்வொருவரும் இந்த  குயிலியைப் போன்று வீரமங்கையாய் தியாக தீபமாய் துணிந்து செயல்படுவோம். பெண்ணியம் காப்போம்! தேசத்தை போற்றுவோம்!


- அ. சியாமளா செல்வின்,

அன்பின் நகரம்,