மாண்புமிகு மகடூஉ 055

புதுமைப் பெண் விருது கட்டுரைப்போட்டி

மாண்புமிகு மகடூஉ 055

"மாண்புமிகு மகடூஉ"

 

*முன்னுரை

பெண்கள் நாட்டின் கண்கள் என்று பெருமைப்படுத்தப்பட்ட போதும் ஆதி காலத்தில் இருந்தே பெண்களின்  கண்கள் சடங்குகளாலும் சம்பிரதாயங்களாலும் கட்டப்பட்டு வந்தது என்று சொன்னால் மிகையாகாது .மதக் கோட்பாடுகளும் இனக் கோட்பாடுகளும் பெண்களை படுத்திய பாட்டை வரலாறு சொல்லும் .உலக வரலாற்றை உற்றுப் பார்க்கும்போது உலகில் சரி பாதி பெண்கள் என்றபோதும் அவர்கள் அடைந்த பாதிப்புகளையும்
அதிலிருந்து மேலெழ அவர்கள் எடுத்த போராட்டங்களையும் நினைவு கூறுதல் என்பது நமது பெருங்கடமை.

சீர்திருத்த வாதிகள்*
திணிக்கப்பட்ட விதிமுறைகளை எல்லாம் நீதியென நினைத்து தலைவணங்கி தாழ்ந்த நிலையில் தவித்த மங்கையர்களின் உயிரை திருப்பிக் கொடுத்த முதன்மை  மனிதர் இராஜாராம் மோகன் ராய் நினைவுகூரப்படவேண்டியவர்.
பண்பாடு என்ற பெயரில் நாகரிகமற்ற முறையில் நடந்த உடன்கட்டை எனும் நரபலியை தவிர்க்க தடுக்க பாடுபட்ட உத்தமர் .கல்வி மறுக்கப்பட்டு கூடிக் குலவி கலவி செய்து பிள்ளை வரும் இயந்திரமே என்று தந்திரமாய் திணித்த தத்துவங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி கல்வி மட்டுமே ஆகச் சிறந்த ஆயுதம் என்று அரும்பாடு பட்டு பெண்களுக்கு கல்வி கொடுப்பதில் பெரும் அரும்பணியாற்றிய ஜோதிராவ் புலே சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு இன்றைய மகளிர் தினத்தில் மனதார வாழ்த்துகள்.
 கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் அந்நிலத்தில் புல் விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை என்று பெண் கல்வியே பெண்களை சமுதாயத்தின் மேலே எழுப்பும் என்று ஆணித்தரமாக பாடல் பாடிய பாரதிதாசன் .அவரது வரிகளின் நீட்சியே இன்று நமது தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் கல்வி பயிலும் பெண்களுக்கு உதவி தொகை என்று பல்வேறு திட்டங்களாகப் பரிணமிக்கிறது.

சிசு வதை

பசு வதை பொறுத்துக்கொள்ளாத நாம்தான் ஒருகாலத்தில் சிசுவதைக்கு செவிகொடுக்காமல் இருந்தோம் என்றால் நம்பவா முடிகிறது? கள்ளிப்பால் சுற்றுவதா அல்லது காற்றாடி அருகில் போட்டு உயிர் போக்குவதா? என்ற நிலைப்பாடு பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவி கிடந்த காலத்தில் கல்வி அவசியம் பெண் பிள்ளைகளுக்கு சமுதாயத்தில் சரி பாதியாக இருக்கிற பெண்களுக்கு கல்வி கொடுத்தால்தான் பெண் சிசுக்கொலை ஒழியும் சமுதாயம் சீர் வரும் என்று நினைத்து கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகம் கொடுங்கள் என்று சொன்ன தந்தை பெரியாரின் பேச்சு  பெண்ணினத்தின் மூச்சு  .
பெண்களுக்காக பல்வேறு சட்டங்கள் வகுத்து பெண்களின் மீதான உழைப்பு சுரண்டலை அறவே தவிர்க்கும் வண்ணம் பல்வேறு சட்டங்கள் வகுத்த டாக்டர் அம்பேத்கர் பெண்களின் மதிப்பை சமுதாயத்தில் உயர்த்தி காட்டியவர் பெரும்பாலான பெண் விஞ்ஞானிகள் அயல்நாட்டு பெண்மணிகளாக இருப்பார்கள் அதற்கான காரணம் இங்கே பெண்களின் அறிவு என்பது அடுப்படி வரைதான் என்று எல்லைகளாக வகுக்கப்பட்டதுதான். இதற்கெல்லாம் கல்வி மட்டுமே மாற்று ஏற்பாடாக இருக்க முடியும் என்பதை பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகள் நமக்கு எடுத்துரைத்து வழிகாட்டியவர்கள்  

போராட்ட காலம்

மார்புச் சேலைக்கு ஒரு போராட்டம்  மலைவாழையாம் கல்வி பெற ஒரு போராட்டம் அலுவலகம் செல்ல ஒரு போராட்டம் ஆற்றல்கள் பெற ஒரு போராட்டம் சரிக்குநிகர் சமமாக உரிமைகள் பெற ஒரு போராட்டம் இப்படி பல்வேறு போராட்டங்கள் .இந்த போராட்டங்கள் எல்லாம் உரிமைகள் பெற்று கொண்டாடும் வகையில் இன்று உலகமே மார்ச் 8 மகளிர் தினமாக கொண்டாடுகிறது .
வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என்ற சங்ககால பாடலின் வாழைப்பழ ஊசி வரிகளை தகர்க்க இன்னும் 'அயலி"
தமிழ்செல்விகள் தேவைப்பட்டபடி தான் .பெண்களின் அத்தனை உரிமைகளுக்கும் உரிமை கிடைப்பதில் பின்னால் ஆண்கள் இருந்தபடியே இருக்கிறார்கள் என்பது பேருண்மை . ஆண்களை பெண்களுக்கு பலமாக இருக்க செய்த சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் தந்தை பெரியார் பெண்களை உயர்த்திப் பிடித்து புனிதம் ஏற்றி புதைப்பதை காட்டிலும் சமமாக பாதித்து சம உரிமை கொடுத்து சக மனுஷியாய் பார்த்தல் ஒன்றே  சரியான நேர்கொண்ட பார்வை 
 இரண்டு கைகள் இணைந்து செயல்படும்போதுதான் கரவொலி எழுப்ப முடியும் ஆண் தன்மை பெண் தன்மை என்றெல்லாம் வகை பிரிக்காமல் இருபாலரும் மனுஷத்தன்மையுடன் தனது சொந்த வாழ்விலும் சமுதாயத்திலும் நடந்து கொள்ளும்போதுதான் சமுதாயம் ஆகச்சிறந்த சமுதாயமாக மலரும் .

பெண்ணின முன்னோடிகள்

தமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அவர்கள் அயல் நாட்டில் இருந்து வந்து இன்று வேலூர் சிஎம்சி மருத்துவமனை வருவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஐடா ஸ்கட்டர்
 பேரன்பு வடிவம் அன்னை தெரசா இவர்களை எல்லாம் நாம் மறக்க இயலாது. அதேபோல மரங்களை பாதுகாக்கும் மேத்தா பட்கர்
இன்னும் வரலாற்றில் நிறைய பேர் ஜான்சிராணி இலட்சுமிபாய் தன்னுயிர் கொடுத்த  குயிலி அறிவியல் துறையில் கல்பனா சாவ்லா இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம் .

மகடூஉ

"மகடூஉ " பெண்ணைக் குறிக்கும் ஓர் அருமையான சொல்‌.சமீபத்தில் 2022 செப்டம்பர் 17 அன்று சென்னையில் தந்தை பெரியார் பிறந்தநாள் அன்று செப்டம்பர் 17 "மகடூஉ" என்ற நூல்  வளரி எழுத்துக்கூடம் வெளியிட்டது. 100 பெண் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய நூல்.
கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி அவர்கள் ஆற்றல் மிகு சொற்களுடன் அணிந்துரை வடித்திருப்பார். அத்தகைய முத்தான வரிகள் பொன் மலர்களாக பளிச்சிடும் வரிகள் வளரி எழுத்துக்கூட வெளியிடான "மகடூஉ"என்ற நூல்  திருமிகு.அருணா சுந்தரராசன் அவர்களால்
தொகுக்கப்பட்டு விமரிசையாக வெளியிடப்பட்டது . 
ஏட்டையும் பெண்கள் தொடுவது பாவம் என்ற நிலையிலிருந்து ஏடுகளைப் படைக்க வைத்த கால மாற்றத்திற்காக உழைத்த சமூக சீர்திருத்தவாதிகள் அத்தனை பெரியார்களுக்கும் மகளிர் தினத்தன்று செங்காந்தள் நன்றிகள் சொல்வது சாலப்பொருந்தும்.
நமக்கு நாம் புத்துணர்வுடன் செயல்பட இவ்விதமான சத்துணவு செயல்பாடுகள் தேவை என்பது ஓர் உண்மை .வாழ்வின் தொடர் செயல்பாடுகளும் கடமைகளுக்கும் ,கட்டுப்பாடுகளுக்கும்  இடையில் மிக நேர்த்தியாக அவ்வப்பொழுது இவ்விதமான கண்ணியமான சில செயல்பாடுகளை நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது நாம் நமக்கே கைதட்டிக் கொள்ள வேண்டும் என்பது  ஓர்  ஆகச் சிறந்த வாழ்வியல் உண்மை.

தன்னம்பிக்கை சிகரங்கள்.

16 வயதில் தன்னுயிரை நீத்த
தில்லையாடி வள்ளியம்மை காந்தியடிகளால் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு பெண்.
இசைத்துறையில் கொடிகட்டிப் பறந்து ,ஐநா சபையில் பாடிய எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் சமூகப் பணியில் போர்க்களத்தில் காயம்பட்டவர்களுக்காக இரவு பகல் பாராது சேவையை செய்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல்  இவர்களையும் இன்னும் பலரையும் நம்மால் மறக்கவே இயலாது சுதந்திர போராட்ட காலத்தில் சிறையிலேயே பிள்ளை பெற்ற கடலூர் அஞ்சலை அம்மாள் இன்னும் சுபாஷ் சந்திரபோஸ் படையில் இருந்த கேப்டன் லெட்சுமி அம்மாள் வரலாற்றை நோக்கி பார்க்கும் பொழுது நிறைய பெண்மணிகளின் தீரச்செயல்களும் வீரச்செயல்களும் நமக்குப் புரியும்
பெண் கல்வி தொடர் பணிகளுக்காக மிகச் சிறிய வயதிலேயே நோபல் பரிசு பெற்ற மலாலா
அஹிம்சை வழியில் போராடி இப்போதும் வீட்டுச்சிறையில் இருக்கும்  மியான்மர் நாட்டு ஆங் சாங் சுகி
விண்வெளிக்கு முதலில் சென்ற பெண்மணி வாலன்டீனா தெரஷ்கோவா.....
நம் தாய்திருநாட்டில் அக்னி 3,அக்னி_5 ஆகிய ஏவுகணைத் திட்டங்களுக்கு தலைமை வகித்த ஏவுகணைப்பெண் டெஸ்லி தாமஸ்
2013 _ல் எவரெஸ்ட்டில் கால்வைத்த உலகின் முதல் மாற்றுத்திறனாளி பெண் அருணிமா சின்ஹா, இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவ்வித பட்டியல்களில் வாசிப்பு அடுத்த தலைமுறை குழந்தைகளை யோசிக்க வைத்து தன்னம்பிக்கையுடன் எதையும் எதிர்கொள்ள வைக்கும்.

முடிவுரை

"ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று "என்ற பழமொழியை சற்றே மாற்றி இருபாலரும் நமது ஆசைக்கும் ஆஸ்திக்கும் உரியவர்களே என்று சமமாக வளர்க்கும் பக்குவம் பெரியோர்களுக்கு வாய்க்க வேண்டும் .உண்மையில் சமம் என்பது சரி பாதி என்று பொருள்கொள்வது மட்டுமல்ல ஒவ்வொரு செயல்பாடுகளிலும் அந்த செயலின் தன்மைக்கேற்ப செய்பவர்களின் பால்தன்மைகேற்ப விட்டுக் கொடுத்தல் ஏற்றுக்கொள்ளுதல் என்ற பெருந்தன்மைகளும் அடங்கும் .நமது பாரதத்தின் முதல் பிரதமர் நேரு அவர்கள் தனது மகள் இந்திராவை வளர்த்தெடுத்த வழியில் ஆற்றலுடன் வளர்க்கும்போது, இரு பாலரும்  தமக்குள் சமமாக பாவித்து வாழும்போதுதான் , அடுத்த படிநிலைக்குச் சென்று ,இயற்கையை நேசித்து தன்னைச் சுற்றியுள்ள சூழலில் ஏற்படும் மாற்றங்களை உற்று நோக்கி, பாதுகாத்து  ஆரோக்கியமான பூமியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும் என்பது எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை.


- மா.சுதா   ஆசிரியை
E/2  _ I.H.F.D  நகர்
சத்திரம் கருப்பூர்_612501
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்