தடை கற்களை படிக்கற்களாக மாற்றும் பெண்கள் 054

புதுமைப்பெண் விருது கட்டுரைப்போட்டி

தடை கற்களை படிக்கற்களாக மாற்றும் பெண்கள் 054

தடைக்கற்களை படிக்கற்களாய் மாற்றும் பெண்கள்* !

 *முன்னுரை* 

ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆணுக்கு பெண் சமம் என்பதற்கேற்ப இன்றைய காலகட்டங்களில் பெண்கள் இல்லாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேறி வருகின்றனர்.

காலையில் எழும்பியது முதல்
இரவு படுக்கைக்குச் செல்லும்வரை 
ஒருபெண் கடந்துவர
வேண்டிய போராட்டக் களங்கள்
எத்தனை ?எத்தனை ?

 *போராட்ட வரலாறு!* 
18ம் நூற்றாண்டில் பெண்கள் என்றால் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே சரிவருவார்கள் என்று முடக்கிவைக்கப்பட்டார்கள். இந்த நிலை மெல்ல மாறி, 1850 களில் தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் கால்பதிக்க தொடங்கினர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் பணியில் கால்பதித்தாலும் அவர்களுக்கான ஊதியத்தில் தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டது.
பெண்களின் உரிமைக்காக அவர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து குரல் கொடுத்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த புரட்சிப் பெண் கிளாரா ஜெட்கின். அதற்கு பின் உலகை திரும்பிப்பார்க்க வைத்த புரட்சி என்றால், 1917-ல் ரஷ்யாவில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சி.
ரஷ்ய பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூறும் வகையில் புரட்சி நடந்த பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். க்ரிகோரியன் காலண்டரின்படி அவர்கள் கோரிய கடைசி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8-ம் தேதியாக இருந்தது. அதனை அடுத்து உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். அந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 *பெண்களுக்கு நிகர் பெண்களே.* 

தியாகம், பரிவு, பாசம், அன்பு, பொறுமை காட்டுவதில் பெண்களுக்கு நிகர் பெண்களே. நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உலகளாவிய யதார்த்தம் ஒன்று இருந்தால், இந்த கிரகத்தில் பெண்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள்.

 *அனைத்து துறைகளிலும் பெண்கள்* !

அரசியல், அறிவியல், கல்வி, விஞ்ஞானம், விண்வெளி, விளையாட்டு, நாடாளுமன்றம், சட்டமன்றம், ராணுவம், கடற்படை, விமான படை என பெண்கள் பல்வேறு நிலைகளில் உயர்ந்து காணப்படுகின்றனர். அதில் சாதனை செய்து வெற்றியும் பெற்று வருகின்றனர். ஆண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படும் எல்லை பாதுகாப்பு பணிகளிலும் பெண்கள் மேலோங்கி நிற்கின்றனர்.

 *சாதனைப் பெண்கள்* !

இந்தியப் பெண்களின் தங்கள் உரிமைகளுக்காகக் கடுமையாக உழைத்து விவசாயம் முதல் விண்வெளி வரை வெற்றிகண்டுள்ளனர். " *மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்* ” என்று பாடியுள்ளார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. தைரியத்தையும், நம்பிக்கையையும் ஆயுதமாக கொண்ட பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்க வைக்கும் பல்வேறு செயல்களை புரிந்துள்ளனர். அவர்கள் தொடங்கி வைத்தது தான் இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் கால் பதிக்க உதவி புரிந்துள்ளது.

 *பெண்களின் எழுச்சி...* 

ஆசை மகளாக, அன்பு அன்னையாக, அருமை அத்தையாக, நேச மனைவியாக, பாச பாட்டியாக, செல்ல தங்கையாக, நட்பு தோழியாக, நல்ல தாதியாக, மற்றவர் கனவை வாழ்ந்தது மட்டும் அல்லாமல், தங்கள்  கனவையும் நிறைவேற்ற முடியும் என்று நம்பிக்கை வைத்து சாதனை படைத்துள்ளனர்.

*முடிவுரை* 

எரிமலைக் கவிஞரான சுப்பிரமணியப் பாரதியார் பெண்ணடிமையை நீக்குவதைப் பற்றி பல கவிதைகளில் விளக்கியுள்ளார். புதுமைப்பெண், பெண் விடுதலைக் கும்மி, பெண்மை, பாஞ்சாலி சபதம். எனப் பல தரப்பட்ட கவிதைகளில் பெண்ணைப் பற்றிப் பாடியுள்ளார். " *நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் -ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்களின் குணங்களாம்* " என்றும் பாரதியார் பாடியதைக் குறிப்பிடலாம். ஆணும் பெண்ணும் நிகராக நடத்தப்பட வேண்டும். கற்பு ஆணுக்கும். பெண்ணுக்கும் பொதுவானது. பெண்ணாக விளங்குவது அன்னை பராசக்தி என்றும் கடவுளின் நிலையைக் கொடுத்து பாரதியார் போற்றியுள்ளமை சிறப்பிற்குரியதாகும்.

பிறப்பதும் ஒரு இடம் இறப்பதும் ஒரு இடம் இடைப்பட்ட வாழ்வும் மற்றவருக்காகத் தான் உருகி மறைந்து விடும் எனத் தெரிந்தும் தன்னை சார்ந்தவர்களின் வாழ்வில் ஒலி ஏற்றுகின்ற மெழுவர்த்தி வாழ்க்கை.. பெண்ணுடையது.. *கர்வம் கொள்கிறேன் பெண்ணாய் பிறந்ததற்கு* !


- திருமதி  ச. இராமலக்ஷ்மி

சின்மயா வித்யாலயா ஸ்ரீமதி பி.ஏ.சி ஆர் சேது ராமம்மாள் மழலையர் மற்றும் துவக்கபள்ளி.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம்