தமிழர்களின் பெருமை..! 023

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழர்களின் பெருமை..! 023

தமிழர்களின் பெருமைகள்

 முன்னுரை
தமிழன் தனது பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதிலும், நாகரிகங்களை கடைப்பிடிப்பதிலும் தமிழனை மிஞ்சிட எவரும் இல்லை. பாரம்பரியத்தை போற்றினாலும் தேசிய கடமைகளிலிருந்து தவறுவதில்லை. வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தம் உரிமைகளையும், கடமைகளையும் செய்ய தவற மாட்டான். வெளிநாட்டவராய் வாழ்ந்தாலும் தமிழர் பண்புகளும், நற்குணங்களும் என்றென்றுமே அவனை விட்டு நீங்காது. தமிழன் தன் பெருமையை கூறுவதைக் காட்டிலும் தனது நாட்டின் பெருமையையும், அதனுடன் சேர்த்து தனது தமிழ் மொழியின் பெருமையையும் சேர்த்து சொல்லி பேரின்பம் கொள்வான். தமிழரின் பெருமைகளை பின்வருமாறு காண்போம்.
 தமிழர்களின் குணநலன்கள்
எறும்பை போன்ற சுறுசுறுப்பான துள்ளிய செயல் வேகம், காரியத்தை கட்சிதமாக செய்து அசத்தும் தந்திரம் நிறைந்தவன். சிறு நூல் கிடைத்தாலும் அதை பிடித்துக்கொண்டு முன்னேறும் மனத்துணிச்சல் நிறைந்தவன். கலைகளைப் போற்றி பாராட்டுவதிலும் சிறந்தவன். தனது பாரம்பரிய கலைகளை அனைவருக்கும் கற்பித்தும், கலைகளை அழியாமல் போற்றி காப்பதிலும் சிறந்தவன். ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்பன போன்ற வரிகள் உழவனை குறிப்பதாகும். தமிழை போற்றி பேணுவதை போன்று தனது தொழிலையும் போற்றி பேணுபவன் தமிழன் என்பதை இவை எடுத்துக்காட்டுகிறது. உழவிலும், தொழிலிலும் தமிழன் முன்னே நிற்கிறான்
 தமிழன்என்றுசொல்லடா
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா..’ என்கின்ற வாக்கியத்திற்கு இணங்க தமிழன் எந்த இடத்திற்கு சென்றாலும் அவன் மதிப்பை தானே தேடிக்கொள்வான். தமிழ் ஊடகங்கள் வழியிலே தகவல்கள் பரிமாற்றம் ஏற்படுகின்றது. அதனால் தமிழர்களும், பல்வேறு மொழி பேசுபவர்களும் பயனடைகின்றனர்.பண்டைக்காலத்தில் கல்வெட்டு, ஓலைச்சுவடி ஆகியவற்றால் தகவல்களை பதித்து வைத்தார்கள்.தமிழின் பெருமையை அறியவே பல்வேறு நாட்டவரும் தமிழை விரும்பி கற்கின்றனர். ஊடகங்கள் தகவல்களை சேமித்து வழங்க பயன்படுத்தப்படும் கருவிகளாக உதவுகின்றன.
 உலகின் முதல் மொழி
தமிழ் மொழியானது உலகின் முதன்மொழி என்று ஆராய்ச்சியாளர்கள் பலர் நிரூபித்துள்ளனர். ஆதிமனிதன் பேசிய மொழியும் தமிழே. இப்போது வழக்கில் இருக்கும் பல மொழியின் ஆதிமூலமும் தமிழ்மொழியே. ஜப்பானிய மொழி, சீன மொழி, லத்தீன் போன்ற மொழிகளிலும் தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளன. ஆனால் தமிழ் மொழியோ எந்த ஒரு மொழியின் கலப்பினையும் பெறாமல் தனித்து இயங்கக்கூடியது.சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் பழந்தமிழர்களே ஆதிமனித இனம் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலக மக்களின் “டி.என்.ஏ” அதாவது மரபணுக்கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 25 சதவீதம் தமிழர்களுடையது. அவை ஆதிகால மனிதனின் மரபணுக்களோடு ஒப்பிடப்பட்டது. ஆதிமனிதனின் மரபணுக்களும், தமிழர்களின் மரபணுக்களும் அதிகளவில் ஒத்துப்போனது தெரியவந்துள்ளது.
 கட்டிடக்கலை
தமிழன் கை வைத்த இடமெல்லாம் பொன் என்பதுபோல அவர்கள் கட்டிய கட்டிடங்களும் வரலாற்றில் பேசப்படுகிறது. ஒரே கல்லில் செய்யப்பட்ட தஞ்சை பெரிய கோவிலும், அதன் ராஜகோபுரத்தையும் எடுத்துக் காட்டாக கூறலாம். மொகஞ்சதாரோ போன்ற பல வரலாற்று நாகரிகம் பொருந்திய கட்டிடங்களுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் பழந்தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
 தமிழ் மொழி
மொழிகளே கலாசாரத்தின் உயிர்நாடியாகத் திகழ்கின்றன’ என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கைய நாயுடு சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஓர் இனத்தின் அடையாளமாகவும் பண்பாட்டின் சின்னமாகவும் மொழி விளங்குகிறது என்பதை இது உணர்த்துகிறது. தமிழ் உலகளாவிய மொழிகளில் ஒன்றாக, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாகத் திகழ்கிறது. உலகின் முதல் மொழி, மிகப் பழைமையான உயர்தனிச் செம்மொழி தமிழ் என்பதை நெடுங்காலமாகவே மொழியியல் வல்லுனர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மேலைநாட்டு அறிஞர்கள் ஆதாரங்களுடன் கண்டறிந்து நிலைநாட்டியுள்ளனர். தமிழ் மொழி, சமஸ்கிருதத்திற்கு மட்டுமல்லாது இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாக முதல் மொழியாகத் திகழ்ந்ததற்கான வாய்ப்புள்ளதாக ஃப்ளோரா புல்மன் (Flora Pulman) என்னும் அறிஞர் தெரிவிக்கிறார். கலாச்சார தொட்டில் 
உலகக் கலாசாரங்களின் தொட்டில், உலக நாகரிகங்களின் ஊற்று என்றெல்லாம் தமிழ் மொழி சிறப்பிக்கப்படுகிறது. தமிழ் மொழி பண்டைக் காலத்தில் இந்தியா முழுமையும் பேசப்பட்டது என்கிறது என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா. இது உலக அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட செய்தி. மணவாள மாமுனிவர் (1370 - 1443) காலத்திலிருந்தே தமிழ் ஆழ்வார்களின் பாடல்கள் இந்தியா முழுவதும் வைணவத்தைப் பரவச் செய்திருக்கின்றன. ‘தமிழ் உலகின் முதல் மொழி’ என்று காலின் மாஸிகா (Colin Masica) என்ற தெற்காசிய மொழிகள் ஆய்வறிஞர் உறுதிப்படுத்தியுள்ளதை வேர்ச்சொல் ஆய்வறிஞர் கு.அரசேந்திரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
செம்மொழி 
தமிழ், சீனம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், சமஸ்கிருதம் ஆகிய ஆறு மொழிகள் உயர்தனிச் செம்மொழிகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றுள்ளும் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இன்னும் உயிர்ப்போடு இருப்பவை தமிழ், சீனம் என்ற இரண்டு மொழிகள் மட்டுமே. அதிலும், செம்மொழிக்குரிய பதினொரு தகுதிகளும் தமிழ் மொழி ஒன்றுக்குத்தான் உள்ளது என்று சீன முன்னாள் பிரதமர் லீ குவான் யூ (Lee Kuan Yew) கூறியுள்ளார். 

தமிழ் மொழிக்கு இருக்கக் கூடிய இலக்கிய, இலக்கண வளம் உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை என்று அறிஞர் பெருமக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழ்ச் செவ்விலக்கியங்கள், தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் ஆகியன தமிழரின் தொன்மை, பழம்பெருமை, மற்றும் பண்பாட்டினைப் பறைசாற்றுகின்றன. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியம் உலகில் உள்ள இலக்கண நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குகிறது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூலான அகத்தியம் தமிழின் தொன்மைக்குச் சான்றாகத் திகழ்கிறது. 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட உலகப் பொதுமறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. திருக்குறள் நாற்பது நபர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிஞர்கள் அதனைப் போற்றி வணங்குகின்றனர். அயல்நாட்டில் ஆட்சிமொழி அந்தஸ்தும் தகுதியும் என்ற சிறப்புப் பெற்ற இந்திய மொழி தமிழ் மொழி மட்டுமே. 

உயிர்ப்புடன் வாழும் மொழிகளுக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுள் தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம்தான் முதலானதாகும். செட்டம்பர், 15, 1981 - ஆம் ஆண்டுத் தொடங்கபட்ட இப்பல்கலைக் கழகத்தை முன்மாதிரியாகக் கொண்டுதான் பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்குப் பல்கலைக் கழகம் (1985), கன்னடப் பல்கலைக் கழகம் (1991), துஞ்சத் எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக் கழகம் (2012) ஆகிய மொழிகளுக்கான பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன எனத் தமிழ்ப் பல்கலைக் கழகச் சிறப்புச் செய்தி மலர் (அக்டோபர், 2018 - செப்டம்பர், 2019) தெரிவிக்கின்றது.

நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பிய சர்வேயர் விண்கலத்தில் தமிழில் பேசப்பட்ட ‘ஆடியோ’ ஒலிப் பதிவு ஒன்றையும் சேர்த்து அனுப்பியுள்ளது. தமிழ் மிகத் தொன்மையான மொழி என்பதால் வேற்றுலக வாசிகளுக்கு ஒருவேளை அது தெரிந்திருக்கலாம் என்று கருதி நாசா விஞ்ஞானிகள் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. அவ்வளவு பெருமை வாய்ந்தது தமிழ்மொழி.
 சித்த மருத்துவம் 
தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு கண்டுள்ளனர் சித்தர்கள் என்னும் தமிழர்கள். இத்தகைய அரிய சித்த மருத்துவ முறைகளை அவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழில் எழுதி வைத்துள்ளனர்.
 ரூபாய் நோட்டு 

இந்தியாவில் முதன்முதலாய் (10 ஏப்பிரல், 1912) அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டில் ‘பத்து ரூபாய்கள்’ என்று தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. மொரிஷியஸ் நாட்டு ரூபாய் நோட்டிலும் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. இந்திய மொழிகளிலேயே முதன்முதலாக (அக்டோபர் 20, 1578) அச்சுக் கண்டது தமிழ் மொழிதான். அச்சில் வெளிவந்த முதல் தமிழ் நூல் ‘தம்பிரான் வணக்கம்’ என்பதாகும். 

first printed book in tamilஇணையத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மை இடம் பெறுவதாகக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கணினித் துறையில் ஆங்கிலத்திற்கு அடுத்ததாகத் தமிழே அதிகப் பயன்பாட்டில் உள்ளது.
 தமிழின் பெருமைகள் 
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், கனடா உட்பட உலகின் பல நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவும் அலுவல் மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலுள்ள ஜாவா தீவில் உள்ள உயர்ந்த மலைகளுள் இரண்டு மலைகள் தமிழ்ப் பெயர்களைக் கொண்டுள்ளன. நியூசிலாந்து நாட்டுத் தலைநகர் வெலிங்டன் அருங்காட்சியகத்திலுள்ள அதிசய ‘மணி’ யில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

கடிகாரங்களில் புதுமையைப் புகுத்தும் புகழ்மிக்க டைட்டன் நிறுவனம் தமிழின் பெருமையைப் பறைசாற்றும் தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட கைக் கடிகாரங்களைச் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந் நிறுவனம் சமீபத்தில் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ்’ என்று பதிவிட்டுள்ளது.

லண்டனிலுள்ள உலகப் புகழ்பெற்ற பி.பி.சி. செய்தி நிறுவனம் (British Broadcasting Corporation-BBC) சமூக ஊடகங்களில் ‘பி.பி.சி. தமிழ் முகநூல்’ (Facebook), ‘பி.பி.சி. தமிழ் சுட்டுரை’ (Twitter), ‘பி.பி.சி. தமிழ் படவரி’ (Instagram), ‘பி.பி.சி. வலையொளி’ (YouTube) எனத் தமிழை அறிமுகம் செய்து பெருமை சேர்த்துள்ளது. 

யுனெஸ்கோ நிறுவனத்தின் சார்பில் ‘கூரியர்’ மாத இதழ் உலகின் பல முன்னணி மொழிகளில் வெளிவந்தது போலத் தமிழிலும் வெளிவந்த நிகழ்வு ஐக்கிய நாடுகள் அவையில் தமிழுக்கிருந்த அங்கீகாரத்தை அறியச் செய்கிறது. ஏராளமான தமிழ் நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இத்தகைய செல்வாக்குகளினால் உலக அளவில் தமிழுக்குத் தனி இடம் உண்டு என்பது தெளிவாகிறது.
 அகழ்வாராய்ச்சிகள் 
கீழடி – பள்ளிச்சந்தை திடல் தொல்பொருட்கள் அகழாய்வில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. இரண்டாம் கட்ட ஆய்வில் கிடைத்துள்ள உடைந்த பானைகள் மற்றும் மண்பாண்டச் சில்லுகளில் கிடைத்துள்ள தமிழ் எழுத்துப் பொறிப்புகளில் காணப்படும் ‘ஆதன்’, ‘குவிரன்’, ‘வேந்தன்’, ‘சேந்தன்’, ‘சாத்தன்’, ‘மடைசி’, ‘முயன்’, ‘இயனன்’ போன்ற தமிழ்ப் பெயர்கள் இதனை உறுதிப் படுத்துகின்றன. 

கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை சுமார் அறுபதாயிரம் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளதாகத் தமிழ் எழுத்தாளரும் மக்களவை உறுப்பினருமான சு. வெங்கடேசன் பதிவு செய்துள்ளார். இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் இத்தனை எண்ணிக்கையிலான கல்வெட்டுகள் இருப்பதாகத் தகவல்கள் இல்லை. கீழை நாடுகளில் கூடத் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைக்கின்றன என்று கி. வா. ஜகந்நாதன் குறிபிடுகின்றார். 

பாரிஸ் மாநகரிலுள்ள பிப்லியோதெக் நாகியநேல் என்னும் தேசிய நூலகம் உலகத்திலுள்ள பெரிய நூலகங்களுள் ஒன்றாகும். இங்குப் பல அரிய தமிழ்ச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழ் ஏட்டுச் சுவடிகளும், பழங்காலத்தில் அச்சேறிய தமிழ் நூல்களும் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்களும் இந் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப் பெற்றுள்ளன. லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்திலுள்ள நூல் நிலையதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளும் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் புத்தகங்களும் இருக்கின்றன. டென்மார்க்கில் கோபன் ஹேகனில் உள்ள ஸ்காண்டி நேவியன் ஆசிய ஆராய்ச்சி சாலை (Scandinavian Institute of Asian Studies) என்ற நிறுவனத்தில் தமிழைப் பற்றி ஆராய்ச்சி நடைபெறுகிறது. ஜப்பானில் டோக்கியோ நகரில் கிழக்காசியப் பண்பாட்டு ஆராய்ச்சி நிலையத்தில் (Centre of East Asian Cultural Studies) திராவிட மொழிகளையும் தமிழ் மொழியையும் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கி.வா.ஜகந்நாதன் ‘கடல் கடந்த தமிழ்’ என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் 
உலக மானுடத்தை இணைக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் கணியன் பூங்குன்றனாரின் மகத்தான வாசகத்தை மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் எடுத்துரைத்துத் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இதே வாசகம் ஐ.நா மன்றத்தின் வாசலிலும் எழுதி வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்றும்போது இதே வாசகத்தைச் சுட்டிக் காட்டிப் பேசியுள்ளார். முன்னாள் மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜே. பி. நட்டா அவர்கள் தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனத் தமிழில் கூறிப் பேசியதோடு, ‘தமிழ்ப் பாரம்பரியம் இல்லாமல் இந்தியப் பாரம்பரியம் இல்லை’ என்றும் தெரிவித்திருக்கிறார். 

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சீனா, ஜப்பான், ருஷ்யா, போலந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழைப் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களும் தமிழ் மொழியைப் பயில்பவர்களும் இருப்பதாக ச. வே. சுப்பிரமணியன் ‘ அயல் நாடுகளில் தமிழ் வளர்ச்சி’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
 தமிழ் மொழியின்தொ ன்மைகள் 

‘தமிழ் மொழியின் தொன்மை, தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை உலகிலுள்ள அனைவரும் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை ஒன்றைத் தொடங்க இருக்கிறோம்’ என்று அப்பல்கலைக்கழக முதல்வர் டில்லீஸ் டி ஆண்டோனியோ (Antonio D Tillis) சமீபத்தில் அறிவித்துள்ளார். தமிழ் மொழியை சர்வதேச அரங்கிலும் ஒலிக்கச் செய்ய ஏதுவாக அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைக்கத் தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள செய்தி நாமெல்லாம் அறிந்ததே. 

இந்தியாவின் பல்வேறு மாநில நகரங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ்த் துறைகள் ஏற்படுத்தப்பட்டுத் தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் தற்சமயம் கேரளப் பல்கலைக் கழகம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம், திராவிடப் பல்கலைக் கழகம், புதுவைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த் துறைகள் இயங்கி வருகின்றன. தென்னிந்தியாவுக்கு வெளியே கௌஹாத்தி பல்கலைக் கழகம், விஸ்வ பாரதி பல்கலைக் கழகம், பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், லக்நோவ் பல்கலைக் கழகம், அலிகர் முஸ்லீம் பல்கலைக் கழகம், தில்லிப் பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் முதலியவற்றில் தமிழ்த் துறைகள் செயல்படுகின்றன. மைசூர்ப் பல்கலைக் கழகம், பங்களூர்ப் பல்கலைக் கழகம், கல்கத்தாப் பல்கலைக் கழகம், அலகாபாத் பல்கலைக் கழகம், ஆக்ராப் பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக் கழகம், பாட்டியாலாப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் ஏற்கனவே இயங்கிவந்த தமிழ்த் துறைகள் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.

 ‘தமிழ் நாட்டுக்கு வெளியே இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலக நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் மொழிப் பயிற்சி வழங்குவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் வளர் மையங்களை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத்’ தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். 

‘வாரணாசியில் உள்ள காசி ஹிந்து பல்கலைக் கழகத்தில் அயல் மொழியினருக்கு எளிதாகவும் விரைவாகவும் தமிழ் கற்பிக்கும் வகையில் மொழி ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்’ எனத் தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் திரு மகேசன் காசிராஜன் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.இவை அனைத்தும் தமிழ் மொழிக்குக் கிடைத்த ஆகச் சிறந்த அங்கீகாரங்களாகும்.

‘தமிழ் தெரியாமல் இருப்பது பெரிய இடையூறு’ என்பதை இன்னமும் நான் உணர்ந்து வருகிறேன் என்று தமிழ் மொழியின் இன்றியமையாமையைத் தேசப்பிதா காந்தியடிகள் சத்திய சோதனையில் பதிவு செய்துள்ளார்.

‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணேம்’

என்ற மகாகவி பாரதியாரின் வரிகள் இங்கு மெய்யாகின்றன. 

இவை தமிழின் தொன்மையை உணர்த்துகின்றன. இப்படி எங்கும் எதிலும் தமிழ் முதன்மை இடம் பெற்றுத் திகழ்வது தமிழர்க்கெல்லாம் பெருமை சேர்ப்பதாகும். தமிழர் வாழவேண்டுமெனின் தமிழ் வாழ வேண்டும்.

‘தமிழ் நாட்டில் பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்கள் தமிழர்’ என வரையறுக்கிறார் வித்வான் பெ. கோவிந்தனார். அலுவல் நிமித்தம், கல்வி, வணிகம், உழைப்பு முதலான பல்வேறு காரணங்களால் தமிழர்கள் உலகின் பல பகுதிகளில் குடியேறிப் பரவி வாழ்ந்து வருகின்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர் வாழ்கின்றனர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மிகுதியும் வணிகத்தின் நிமித்தம் கடல் கடந்து வெவ்வேறு தேசங்களுக்குச் சென்றுள்ளதாக்கத் தெரிகிறது. அதற்கான தடங்களும் தடயங்களும் ஏராளமாக உள்ளன.

தமிழினத் தோற்றம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறி வருகின்றனர். உண்மையில் இருபதாயிரம் ஆண்டுகள் பழமையான, உலகின் முதல் இனம் நம் தமிழினம். 

தமிழின் பிறப்பிடமும் தமிழனின் பிறப்பிடமும் ‘நாவலந் தீவு’ எனப்படும் ‘குமரிக் கண்டம்’ எனக் கருதப்படுகிறது. ஏறத்தாழ ஏழாயிரம் கிலோ மீட்டர் வரை நீண்டு விரிந்து பரந்திருந்த இக்கண்டம் பல வரலாற்று அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மற்றும் சிறு சிறு தீவுகளை உள்ளடக்கிய 49 நாடுகளைக் கொண்ட ஒரு பிரமாண்டமான கண்டமாகத் திகழ்ந்திருக்கிறது. அந்தக் கண்டத்திலேதான் ஆதிமனிதன் தோன்றினான் என்றும் அந்த மாபெரும் நிலப் பரப்புதான் மனித நாகரீகம் தோன்றிய தொட்டில் என்றும் தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். பஃறுளி, குமரி ஆகிய இரண்டு ஆறுகள் இக் கண்டத்தில் இருந்திருக்கின்றன. குமரிக்கோடு, மணிமலை என்ற இரண்டு மாபெரும் மலைகள் இருந்துள்ளன. 
முடிவுரை
இத்தகைய பெருமைகள் வாய்ந்த நாட்டில் வாழ்ந்தவன் தமிழன். தமிழனின் நாகரிகமும் வரலாறும்தான் உலகிலேயே தொன்மையானது. ‘தமிழர் நாகரிகம் என்பது இந்திய நாகரிகம்தான் என்பதை வருங்காலம் பேசப் போகிறது’ என்று தமிழகத் தொல்லியல் துறை அமைச்சர் திரு மா.பா.பாண்டியராஜன் அவர்கள் கூறியிருப்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது. தமிழனின் பெருமையை உரக்கச் சொல்லிப் பெருமை கொள்ளும் தருணமிது. தமிழர்கள் நம்பிக்கையாளர்கள், உழைப்பதற்குத் தயங்காதவர்கள், கலையுள்ளம் வாய்ந்தவர்கள், கனிவுமனம் கொண்டவர்கள்’ என்பதை நான் நேரிடையாக அறிந்திருக்கிறேன் என்று தமிழக முன்னாள் முதல்வர் திரு எம். ஜி. இராமச்சந்திரன் ‘அலை கடலுக்கு அப்பால்’ என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

 தமிழன் என்ற சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

சி. தேவி பிரியா,
PhD scholar ,