உழைப்பே உயர்வு மே தினம்
மே தினம் கவிச்செம்மல் விருது கவிதை போட்டி
தொழிலாளர் திருநாள்...!
உலகெங்கும் கொண்டாடும் ஓங்குயர்ந்த திருநாளாம்...!
உலக மக்களை ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் பெருநாளாம்...!
உழைப்பாளி உழைப்பிற்கு நன்றி கூறும் நன்னாளாம்...!
உழைப்பினது சிறப்பினையே உணர்த்துகின்ற
மேநாளாம்...!
பொதுவுடைமைக் கொள்கைதனைப் போற்றுகின்ற உழைப்பாளி...!
பொதுமக்கள் வாழ்வுயரப் போராடும் பொறுப்பாளி...!
புதுமைகளும் சம உரிமை கிடைக்க வழி செய்திடவே...!
புதியபாதை காட்டிடவே உதித்ததிந்த மேநாளாம்...!
உண்மைசெயல் உழைப்பிற்கு நன்றி கூறும் திருநாளாம்...!
பெண்ணினத்தை மதித்திடவே போற்றுகின்ற திருநாளாம்...!
கண்ணான தொழிலாளர் கண்ணியத்தின் திருநாளாம்...!
விண்மீனாய் மின்னுகின்ற விடிவெள்ளி மேநாளாம்...!
முனைவர்
ம.ப.சாந்தி சங்கரி, ஆதித்யா வித்யாஷ்ரம், புதுச்சேரி.
***********************************************************************************
002. உழைப்பே உயர்வு
விளையாத விதை இல்லை
முடியாதது எதுவும் இல்லை
முன்னேற எதுவும் தடை இல்லை
பரந்த பூமியில் நீ சிறகடித்து பறக்க
உன் லட்சிய பாதை அமைக்க
நம்பிக்கை துணை இருக்க
எழுந்து வரவேண்டும் எல்லை இல்லாத
உன் கனவுக்கு உயிர் தர வேண்டும்
உழைத்து வாழ வேண்டும்
ஊர் வாயை மூட வேண்டும்
பட்ட நிலம் பயிராகும்
பருவத்தில் நீ உழைப்பது
உன்னை அழகாகும்
ஆசையை உரம் ஆக்கும்
ஆழ்மனதில் நீ விதைத்த
உன் லட்சியம் வெளியாகும்
உன் அஸ்திவாரம் இன்னும் பலமாகும்
படித்ததற்கு தகுந்த வேலை இல்லை
என்பது விதியாகும்
கிடைத்த வேலை செய்வது
உழைப்பாகும்
நீயே ஒரு தொழிலை உருவாக்குவது
மிக உயர்வாகும்
போராடுவது வாழ்க்கை ஆகும்
நீ நேர்கொண்ட பார்வையில் நடந்தால்
நன்மையாகும்
நல்லவனாக இருப்பது மிக கடினமாகும்
நீதி,நேர்மையே துணையாகும்
உழைக்கும் கரங்கள் கடவுள் ஆகும்
துப்புரவு தொழில் செய்யும் மனிதர்கள்
கடவுள் ஆகும் அவர்கள் இல்லை
என்றால் வாழ்க்கை நரகம் ஆகும்
கொரோனா காலகட்டத்தில் நாம் பெற்ற
பாடம் அதிகமாகும் அவர்கள் அருமை
புரிந்தது ஆகும்
உழைப்பே உயர்வாகும் செய்யும்
தொழில் தெய்வம் ஆகும்.
-கவிஞர் சேலம் எஸ்.தாரா பி.ஏ.
உழைப்பே உயர்வு
மாதங்கள் பனிரெண்டு
தொழிலாளர் தினம் மே 1 ஒன்று
பல தொழில் இருப்பது உண்டு
விவசாயம் செய்வது உண்டு
எல்லோருக்கும் உணவு கிடைப்பது
உண்டு
ஆடை அணிவது உண்டு அழகான
தையல் கலை ரசிப்பது உண்டு
சித்திரம் பேசுவது உண்டு
ஓவியா கலையும் ஒன்று
உயிர் காப்பது நன்று மருத்துவ
தொழில் ஒன்று
துப்புரவு தொழில் அன்று தூய்மை
பணியாளர்கள் இன்று என அழைப்பது
உண்டு
அறிவை வளர்ப்பது நன்று ஆசிரியர்
பணி என்று
பல தொழில் உண்டு பிடித்து செய்வது
நன்று
வானொலி என்று பல தகவல் தருவது
உண்டு ஆர்.ஜே என்று அவர்களுக்கு
பெயரும் உண்டு
பல குடிசை தொழில் உண்டு
பல பொருட்கள் தயாரிப்பது நன்று
வாழ்க்கையில் இன்று பல
கைத்தொழில் செய்வது உண்டு
உழைப்பே உயர்வாகும் உழைக்கும்
வர்க்கம் பல தொழிலாளர்கள் கைக்கள்
ஆகும் பெண்களின் பெருமை
அதிகமாகும் அவர்களும் இன்று பல
துறையில் சாதிப்பது அருமையாகும்
உழைப்பாளர்களின் உள்ளம் கடவுள்
ஆகும் முன்னேறுவது தொழிலர்களின்
கைக்கள் ஆகும் உழைப்பது
கடமையாகும் உயர்வு தாழ்வு இல்ல
வாழ்க்கை அழகாகும் உழைப்பாளி
தினமே தினமும் ஆகும்.
கவிஞர் சேலம் எஸ்.தாரா பி.ஏ
************************************************
003.உழைப்பே உயர்வு
உழைப்பு நம்மை கை விடாதே
என்றும் தலை தூக்கி நிற்க செய்யுமே
நீங்கள் விதைத்த விதை கை விடாமல்
எல்லோரையும் அறுவடை செய்ய தூண்டுமே
செய்யும் செயலை வெற்றிக்கு அடித்தளமே
உறுதியுடன் வேலையைச் செய்யுங்கள் விடா முயற்சி
ஒவ்வொரு வரையும் சாதிக்க வைக்குமே
எளிதில் கிடைக்கும் வெற்றி நீடிக்காதே
கடின உழைப்பின் மூலம் கிடைக்கும்
வெற்றி நம்மை வாழ்நாள் சாதனையாளர் ஆக்குமே
வியர்வை சிந்தி உழைத்தால் அதற்கான
பயன் கிடைத்த தீருமே உழைப்பாளிக்கு
உழைப்பு இல்லையெனில் ஊதியம் இல்லை
உழைப்பால் உயர்ந்தவர் எத்தனை பேர்
சுமை தூக்கினாலும் சுகமாய் தூக்கு
நீ பிறருக்கு ஏணியாய் இருந்து வழி நடத்திடு
தடைக் கற்கள் வந்தாலும் கூட
அவற்றை படிக்கற்களாய் மாற்ற நம்மால் முடியுமே
செய்யும் செயலை செய்யும் போது அகமும் முகமும் மலர செய்
வெற்றி எளிதாய் கிடைத்திடுமே
உழைக்கும் இடத்தில் சோம்பேறியாக இருக்காதே
உனது மூச்சு நிற்கும் வரை
உழைத்து உனது குடும்பத்தைக் காப்பாற்றிடு
செய்யும் தொழிலே தெய்வம் என மதித்து வாழ்ந்திடு
-ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்.
*************************************************
004 உழைப்பே உயர்வு
உளி கூட தேயும்
உண்மையான உழைப்பால்!
கற்கள் கூட நொறுங்கும் நன்கு
கடமையாற்ற!
புல்லும் மறைந்து நெல் விளையும்
நல் வயலில்!
மூங்கில் கூட
இசை கொடுக்கும்
புல்லாங்குழலால் !
கால் வீங்கி
கை நடுங்கி முதுகெலும்பு தேய்ந்து போக!
நாட்கள் எல்லாம் நீண்ட நேரம் உழைக்கும் நல்லவர்கள்!
வாடிய முகமும் தேடிய உழைப்பும் நாடிய பணியும்
நலம் பெறவே!
பிறர் பொருள் பெற்று வாழ்ந்தவர்களை
விட!
உழைப்பை கொடுத்து உழைத்தவர்களே !
வேர்வை மண்ணில்
வியர்த்து வழிய உழைக்கும்உழைப்பே
உயர்வு தரும்!
-கவிஞர்
இரா. வாசுகி பொன்னரசு
அரசு பள்ளி ஆசிரியர்
கள்ளக்குறிச்சி
**************************************************
005உழைப்பே உயர்வு
( அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
அயர்வு வந்து ஆட்டிவைக்கும்
அதற்கு அடிமை ஆகாதே
மயர்வு சூழ்ந்து மதிமயக்கும்
மனதால் மயங்கி மடியாதே
உயர்வு எல்லாம் உழைப்பாலே
உறுதி கொள்வாய் உளத்தாலே
வியர்வை சிந்தி உழைத்துநிற்க
வெற்றி தொடரும் பின்னாலே !
ஏழ்மை நகைத்து எதிர்நிற்கும்
எதிர்த்து உழைப்பால் நசுக்கிடுவாய்
வாழ்வை தாக்கும் வறுமைதனை
வருந்தி உழைத்தே பொசுக்கிடுவாய்
வீழ்வை வெல்லும் வித்தகத்தை
உழைப்பே சொல்லும் உண்மையாமே
வாழ்வில் உழைப்பால் உயர்ந்தோரை
வணங்கி போற்றி வளம்காண்பாய் !
உழைப்பை நாளும் உறுதியாக்க
உயர்வோ உமக்காம் ஒன்றிடுமே
பிழைப்பு தொழிலோ சிறிதாயின்
பெருமை கூடும் பெரிதாக
விழைந்து ஆற்று எப்பணியும்
வியந்து போற்றும் வியனுலகும்
அழிய விடாதுன் ஆற்றலையே
ஆக்க மாக்க அற்புதமே !
-கவிஞர் சங்கர்,
கடலூர்.
**************************************************
006 உழைப்பே உயர்வு
"உ"லகை மாற்றும் வல்லமை கொண்ட உழைப்போர்!
"உ"ளி கொண்டு தங்களையே செதுக்கிக் கொள்வோர்!
"உ"ற்பத்தியால் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவோர்!
"உ"றக்கம் தொலைத்து வேலையை கண்ணென எண்ணுவோர்!
"உ"ச்சம் தொட வியர்வையை ஆறாக சிந்துவோர்!
"உ"டல் வலிமையால் தேசத்தை செம்மையாக்குவோர்!
"உ"ற்சாகம் குறைவின்றி ஓய்வறியா உன்னதமானோர்!
"உ"ண்மையின் மறுபிம்பமாய் கடமை ஆற்றுவோர்!
"உ"திரம் சிந்தி உன்னதமான பணி செய்வோர்!
"உ"றை அணியா கறை படிந்த கைகளை உடையோர்!
"உ"தாரண மனிதனாய் உழைப்பின் மறுஉருவானோர்!
"உ"யிருள்ள வரை உட்கார்ந்து உண்ண விழையாதோர்!
"உ"ணவை உற்பத்தியால் புவியின் பசியாற்றுவோர்!
"உ"ரமென எதிர்காலத்தை சிரமேற் கொள்வோர்!
"உ"ழைப்பு ஒன்றே மனிதனை மடைமாற்றுமென சிந்தித்தோர்!
"உ"ங்களிடமே உயர்வென்னும் கடவுள் குடிகொள்ளுவார்!
- தமிழச்சி மா.சித்ரா
தருமபுரி.
**********************************************
007 உழைப்பே உயர்வு
உழைப்பே உயர்வு
தருமே நமக்கு //
உண்டாகும் மகிழ்ச்சி
உள்ளத்தில் தானே //
தெரியாது களைப்பு
உழைக்கும் போது//
சந்தனமாய் மணக்கும்
வியர்வைத் துளியும் //
விவசயின் உழைப்பில்
செழிக்குமே
நெற்பயிர் //
கட்டிடங்கள்
மிளிரும்
உழைப்பாளர்
கைவண்ணத்தில் //
கரையுமே செல்வம்
உழைக்காமல்
உண்டால் //
தூற்றுவார் அயலார்
நம்மைப் பார்த்து //
பிறரின் உழைப்பில்
வாழ்ந்தால் சிறுமை //
முதுமை வரும்வரை
உழைப்போம் நாமே //
-ப. குமரகுரு.
************************************************
008 வியர்வை துளிகள்:
நாம் உழைக்கின்றோம் என்பதற்கான குறியீடு வியர்வை/
உழைப்பால் ஊற்றெடுக்கும் உப்பு நீர் வியர்வை/
என்றும் விலை போகாத முத்துக்கள் உழைப்பவன் நெற்றியில் இருக்கும் வியர்வை/2
வியர்வை வரும் வழிகள் ஏராளம்/
சிலர் ஓடி வியர்வை வரவைப்பர்/
சிலர் ஆடி வியர்வை வரவைப்பர்/
சிலர் பேசிய வியர்வை வரவைப்பர் /
பலர் உழைத்து வியர்வை வரவைப்பர்/
வியர்வை சிந்தாத மனிதனும்
மை சிந்தாத எழுதுகோலும் எதையும் சாதிக்க முடியாது/ 2
தந்தையின் வியர்வைத்துளிகளோ குடும்பத்திற்கு அரணாக/
தாயின் வியர்வைத் துளிகளோ, குடும்பத்தை அரவணைக்க/
இப்படி இல்லறத்தில் இனிதே இனிக்கும் வியர்வை துளிகள்/
அல்லும் பகலும் அயராது போராடி குருதி வியர்வை சிந்தி கிடைத்தது சுதந்திரம்/
இப்படிப் பலர் ஏற்க சிந்தி கிடைத்ததே நம் சுதந்திரம்/
வியர்வைத் துளியும் /கண்ணீர் துளியும்/ உப்பாக இருக்கலாம்/
ஆனால் இவைதான் உன் வாழ்க்கை மற்றும் சக்தி/
இன்றைய வியர்வைத் துளி நாளைய வெற்றி துளி/
உடலை வருத்தி உழைப்பினை உரமாக்கி உலகத்தை இயக்க வைக்கும் உன்னத மனிதன் உழைப்பாளி/
இவர்களின் வேர்வையால் தான் உலகமே விரைந்து செயல்படுகிறது/
உழைப்பை நீ கைவிட்டால்/
உயர்வு உன்னைக் கைவிடும் /
உழைப்பிற்குக் கால நேரம் இல்லை/ உழைக்கத் துவங்கி விட்டால் ஓய்வெடுக்கக் கூட உனக்கு நேரம் இல்லை/
நாளைய தலைமுறையின் மனதில் உழைப்பை விதையாக விதைப்போம் திறம்படச் சாதனைகள் பல புரிவோம் எண்ணங்கள் வியக்க
விரைந்து செயல் புரிந்திடு
மண்ணில் சிந்தும்
வியர்வை துளிகள் நாளை
மாலைகளும் மகுடங்களாக மாறும்
கைப்பேசியில் பொழுதை தொலைத்தது
போதும் இனியாவது கடுமையாக உழை
வியர்வை துளிகள் விதைகளாக.....
-இர.உஷாநந்தினி சதீஷ்குமார்
கோவை..
**************************************************
009 உழைப்பே உயர்வு
உழைப்பின் அருமையை உலகம் அறிந்திட
உழைப்பாளி நாமென்று பெருமை கொள்வோம்
உழைக்கும் வர்க்கம் உழைக்காமல் போனால்
உற்பத்தி எதுவும் கிடைப்பது அரிது
வியர்வை சிந்தி நிலத்தில் இறங்கி
விவசாயி மட்டும் உழைக்காமல் போனால்
உணவை மறந்து பற்றாக்குறை ஏற்பட்டு
பசியால் தானே வாட
முடியும்
ஓடியாடி உழைத்தால் மட்டுமே மனிதன்
ஓய்வு காலத்தில் நிம்மதி காணலாம்
உழைக்க மறந்து உறங்கிக் கிடந்தால்
உலகின் நோய்கள் உன்னுள் அடக்கம்
ஆண்டு முழுவதும் ஓயாத உழைப்பு
அதனால் ஏற்படும் உடலில் களைப்பு
உழைப்பாளிக்கு வேண்டும் ஒருநாள் ஓய்வு
அதற்காகத்தானே உழைப்பாளி தினமே
உழைப்பாளிக்கு வேண்டும் என்றும் முக்கியத்துவம்
ஊதியம் கிடைக்க வேண்டுமே அதற்கேற்ப
உழைப்பால் பெறலாம் நிலையான செல்வம்
உண்மையான இன்பம் அதற்கே உண்டு
உழைப்பின் அருமை தெரிந்தவர் ஓய்வதில்லை
உலகம் என்றும் அவனது காலடியில்
உடலும் மனமும் உதவி புரிந்தால்
அதனால் கிடைக்கும் உழைப்பே உயர்வு.
-சு . நடராஜன்,
வேல் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்,
93, நெடுஞ்செழியன் வீதி ,
சிவகிரி -638109,
ஈரோடு மாவட்டம்.
**************************************************
010 உழைப்பாளர் தினம்
உழைப்பே உயர்வென்றே எண்ணியே
நித்தமும்
உழைக்கின்றோர்
உயிலென
எழுதியே உழைப்பை வைத்திருக்க
உழைக்க உழைக்க
உயர்வது கிடைக்கவே
ஓயாமல் உழைத்திடுவோர்
வறுமையை விரட்டிட போராட
என்றென்றுமே
ஐம்புலனடக்கியே
அனைத்தையும்
சர்வாங்கமாக
ஒப்படைப்போரே
விண்ணிலிருந்து
மழையை வரவழைத்தே
விவசாயத்தைப் பார்த்தே விளைச்சலைக் கொடுத்தே
முன்னேற்றமதைக் காணவே
முத்தாய்ப்பான உழைப்பைத்
தந்திடுவோரே
உழைப்பாளர் தினமென்ற ஒன்றைக் கொண்டாட
உன்னதமானவர்களே உழைப்பாளர்களே
உயர்வைப் பெற்றே
உழைத்தே சிறப்பரே
உழைக்கும் கரங்களே
என்றுமே வாழ்வை வளமாக்குமே
தினமும. பெற்றதைக் கொடைக்கும்
வள்ளலாக வாரி வழங்கிடுவோரே
உரைக்கும் உன்னதம் உணர்ந்தவரே மே தினத்திலே
-முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை.
**************************************************
011 ஓய்வறியா சூரியன்கள்..
சூரியன் உதிக்காத நாளுண்டு
உழைப்பாளி உழைக்காத நாளேது?..
வியர்வையின் வாசமதில்
உழைப்பின் ரகசியம் உரைத்தவன் உழைப்பாளி...
கரடுமுரடான வாழ்வின்
கடினங்கள் தாண்டுபவன் உழைப்பாளி...
முயற்சி என்னும் வார்த்தையின்
முக்கியத்துவம் அறிந்தவன் உழைப்பாளி
செய்யும் தொழிலே தெய்வமென
வணங்குபவன் உழைப்பாளி..
படைத்தவனுக்கே பசியென்றாலும்
படையல் வைத்து பசியாற்றுபவனே உழைப்பாளி
நம் தேவைகளனைத்தும் தீர்த்துக்கொள்ள
தன் வியர்வை அனைத்தும் தீர்ப்பவனே உழைப்பாளி..
உழைக்கும் மனிதனின் உடலை
பிணி நெருங்குவதில்லை
உழைக்கும் மனிதனின் மனதை
மன உளைச்சல் நெருங்குவதில்லை..
நாம் வெளிச்சத்தில் வாழ்ந்திடவே
ஓய்வறியா சூரியன்களாய் உழைப்பவர்கள் உழைப்பாளிகள்..
உழைப்பாளர்களின் மகத்துத்தை
பறை சாற்றும் தினமான
உழைப்பாளர் தினமதில்
உழைப்பாளர்களின் தியாகமதை
கொண்டாடி மகிழ்வோம்..
-செல்வன் கோ. ஶ்ரீஅஹிலேஷ்
கும்பகோணம்
*************************************************
012.வியர்வைச் சிறகுகள்...
வியர்வைச் சிறகுகள் உதிர்த்துவிடு
உழைப்பை உதிரமாய் வடித்துவிடு
நம்பிக்கையோடு
உழைப்பையும் சேர்த்துக்கொள்ள
உலகு உன் வசமாகும் பார்..
பாலையும் பசுமையாய் ஆகிடவே
பசுமைப்புரட்சியை கொண்டாடு
உலகில் வயல்கள் பெருகும்படி
உழைப்பால் உயர்ந்திடு
முதுமையில்லா ஒன்று உழைப்பென்றே
உயர்த்தி சொல்லிடு...
உடலினை இயந்திரமாக்கி...
உழைப்பினை உரமாக்கி...
உலகத்தை இயங்க வைத்திடு..
உழைப்பின் மீது மோகம் கொண்டே
தோல்வியையும் வெற்றியென மாற்றியே மகிழ்ந்திரு...
இளமையில் உழைப்பினை பழக்கு
அது முதுமைக்கும் ஏற்றிடும் விளக்கு...
எப்போதும் உழைத்திரு
எந்நாளும் மகிழ்ந்திரு...
-செல்வன் கோ.ஶ்ரீஆதேஷ்
கும்பகோணம்.
**************************************************
013.உயிர்நாடி சுமக்கும் உழைக்கும் கரங்கள்..
ஓய்வறியா உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
அனுதினமும் உழைப்பாளர் தினமே...
வியர்வைத் துளிகளை உரமென இட்டு
நெல்மணிகளை அறுவடை செய்யும்
விவசாயிகளே நம் குலதெய்வம்
தளராது தறிக்குழியில் அமர்ந்து
தன்மானம் காத்திட உழைத்திடும்
நெசவாளர்களே நம் காவல் தெய்வம்..
சாக்கடையின் கழிவுகள் அகற்றி
நம்மை மணக்க செய்யும் தொழிலாளர்களும்
விஷேச தின விடுமுறையின்றி
தன் சுகங்களை தியாகம் செய்து
அல்லும் பகலும் உழைக்கும்...
மருத்துவ துறை தொழிலாளர்களும்
போக்குவரத்து துறை தொழிலாளர்களும்
காவல்துறை தொழிலாளர்களும்
நம்மை காக்கும் தெய்வங்களே...
இப்படி சோர்வின்றி
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
ஓய்வென்பதுதான் ஏது?
அவர்களுக்கு சிறப்பு தினம்
என்பதும் தான் ஏது?...
உழைப்பவர்களால்தான் இவ்வுலகம்
சுழல்கிறது..
அவர்கள் ஓர்நொடி
ஓய்வெடுக்க தொடங்கினால்
அது உலகத்தின் அஸ்தமனம் ஆகாதா?
தன்னம்பிக்கை இழக்காமல்
சுயம் இழக்காமல் செய்யும்
எத்தொழிலும் சிறந்ததே..
உழைக்கும் கரங்களில் தான்
உயிர்நாடி சுமக்கிறது இப்பூவுலகம்..
ஆம்.... ஓய்வறியா உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
அனுதினமும் உழைப்பாளர் தினமே...
-கவிஞர் சசிகலா திருமால்
கும்பகோணம்.
**************************************************
014 உழைப்பே உயர்வு
மேஒன்று தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்//
உழைப்பின்பெருமையை உலகறிய செய்த நாள் //
"உழைப்பே உயர்வு" "உழைப்பே செல்வம்" "உழைப்பின்றிஉலகுஇல்லை" என்பதே நியதி//
கைத்தொழில்ஒன்றைக் கற்றுக்கொள்"கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் "//
"எத்தொழில்எதுவும் தெரியாமல் இருந்திடல்சரியாமோ என்ற பாரதியின்"
வரிகளை நனவாக்கிய தினம்//
அதிகாலை முதல் அந்தி சாயும் வரை களைப்புடன் //
வேலை செய்வதை எதிர்த்து எட்டு மணி நேரம் மட்டுமே உழைப்போம் என உறுதிமொழி எடுத்த தினம்//
தொழிலாளர்கள் தங்கள்உரிமைகளுக்காக குரல் எழுப்பிய தினம் //
"செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமது செல்வம்" என்பதை
நிலை நிறுத்திய தினம் //
உலகை மாற்றும் வல்லமை கொண்டோர் //
உளிகொண்டு தங்களை செதுக்கி கொள்வோர் //
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவோர்//
உறக்கம் தொலைத்து வியர்வை சிந்துவோர்//
உற்சாகம்குறையாமல் அனுதினமும் உழைப்போர் //
உதிரம் சிந்தி உன்னதமான பணி செய்வோர்//
கனவு லட்சியம் நிறைவேற அயராது உழைப்போர் அனைவரும்//
உழைப்பின் மறு உருவமாய் திகழும்
மனிதர்கள் //
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
உழைப்பு ஒன்றே
மனிதனை முன்னேற்றும்//
உழைக்கும் வர்க்கத்தை வணங்கி வரவேற்போம் !
- தலைமை ஆசிரியர், ந.மலர்க்கொடி கருப்பூர் பொய்யூர்.
**************************************************
015.உழைப்பே உயர்வு
நெசவாளி , தொழிலாளி, விவசாயி
இவர்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
விவசாயி வெய்யிலில் உழைக்கிறார்
அவர்களின் உழைப்பை போற்ற தயங்குகிறோம்
காலுக்கு செருப்பும் மேலுக்கு உடுப்பும் இல்லாமல் உழைக்கிறார்கள்
பணக்கார வர்க்கம் பணத்தை மட்டுமே எண்ணுகிறது
இந்தியாவில் உழைப்பாளிகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்
அனைவரும் சமம் என்ற நிலை வரவேண்டும்
உழைப்பாளிகள் தெய்வங்கள்
உழைத்தால் உலகம் உன் காலடியில்
உயர்வாய் வாழ்ந்து சொர்க்கம் காணலாம்.
-கவிஞர் லலிதா ஷ்யாம்
மதுரை.
**************************************************
016.உழைப்பே உயர்வு:
ராமேஸ்வரம் பிறந்து
பேப்பர் போட்டு படித்து பின் பேப்பரில் போட்டு நாம் படித்த நம் கலாமின் உழைப்பு,
வலக்கையை விபத்தில் இழந்தும் இடக்கையினால் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற கார்லேயின் உழைப்பு,
உலக உருண்டையென அதற்கிருந்தும் கடலை உருண்டையை உருட்டிசெல்லும் கட்டெரும்பின் உழைப்பு,
வீழ்ந்த தரையில் புதைந்தே கிடக்காமல் மண்ணைக் கிழித்து விண்ணை அளக்கும் விதையின் உழைப்பு,
நடனமாடி நயம்புரிந்து தேனிருக்கும் திசையறிந்து ஒன்றுகூடி புறப்பட்டு தேனை அடைகாக்கும் தேனீக்களின் உழைப்பு,
அந்தரத்தில் தொங்கி ஆங்கோர் அலங்கார நடனமாடி, சிற்பங்கள் செதுக்கி சிற்றுண்டி உண்ணும் சிலந்தியின் உழைப்பு,
உடைந்த பாதி வளவி போன்று உடம்புகொண்ட எங்கூர் கிழவியொன்று உழைத்து நிதமு தின்று உறக்கச் சொல்லுது "உழைப்பே உயர்வு"என்று.
-கவி. க. கோவிந்தசாமி.
புதுக்கோட்டை.
*************************************************
017.உழைப்பே உயர்வு..!
பா வகை: *நிலைமண்டில ஆசிரியப்பா*
( _தேமா+புளிமா+கருவிளம்+கூவிளம்_ )
அள்ளி அணைக்கும் அவசர வேலையில்
துள்ளி திரிவோம் துணிச்சலின் கூர்மையில்
நள்ளி நகைப்பில் நறுமனம் வீசிடும்
பள்ளி படிப்பின் பதுமையின் காதலே..!
வேண்டும் உழைப்பு வெறுமையில் தோல்வியே
கண்ணும் கலங்கும் களைப்பினில் வேலையை
விண்ணின் வெயிலும் வியர்வையைக் கொட்டிடும்
எண்ண வியப்பில் எதார்த்தமும் மூழ்குதே..!
கல்வி பருவம் கடமையாய் வேலையும்
நல்கும் தொழிலில் நலமுடன் சேவையும்
இல்லம் வறுமை இனிமையாய் சொர்ப்பணம்
புல்லின் நுனியில் புதுமையும் காணவே..!
செய்யும் முயற்சி செழுமையும் தந்திட
பெய்யும் மழையில் பெருமையில் பூக்களும்
பொய்யா நெசவில் பொழிவுடன் என்தொழில்
செய்தேன் உழைப்பில் செகத்துடன் வாழ்விலே..!
-ஈ.தவணிதன்,
பல்லடம்.
**************************************************
018.உழைக்கும் மனிதர் வாழியவே
உழைக்கும் கரங்கள் வலுசேர்க்கும் நாளாம்
உழைப்பாளி சொந்தங்கள்
உறுதியேற்கும் மேதினம்
நாடு முன்னேற உழைத்த
பங்குதாரர்கள்
வீடு சென்றும்
வேலையை விடுவதில்லையே
வியர்வை முகத்தை
விடியலாய் தந்தவர்கள்
காய்த்த கரங்கள்
இரும்புக்கு ஒப்பாகும்
திரண்ட தோள்கள்
தேரை வடம்பிடிக்குமே
கந்தை ஆடையில்
உற்பத்தி பெருக்குவார்களே
கூழானாலும் கூடியே
குடித்து மகிழ்வார்களே
தண்ணீர் தாகத்தையும்
பசியையும் மறக்கடிக்குமே
உடலுறுதி மனஉறுதி
இரண்டும் இவர்வசமே
விலைவாசி உயர்ந்தாலும்
தினக்கூலி உயர்வதில்லையே
வருமான தேடலில்
விடுமுறை எடுத்ததில்லையே
தொழிலாளி பட்டத்தை
முதுகில் சுமந்தவர்களே
முதலாளி நன்றாய்
வாழ்ந்திட பணிபுரிந்தவர்களே
பாட்டாளி வர்க்கம்
பாதை கரடுமுரடானது
பாதங்கள் நடக்கட்டும்
பயணங்கள் தொடரட்டும்...
-படைப்பாக்கம்
கவிஞர்.ச.குமார்
சிவகங்கை
**************************************************
019.உழைப்பே உயர்வு
உழுது உழைத்து உவப்புடனே
ஊரை வாழ வைப்போம்.
பழுதிலாத பாதை வகுத்து
பாமரரையும் பணிந்து போற்றுவோம்...பிறரை
தொழுது வாழும் சோம்பராயிராது
துடிப்புடனே பிறர் துயர் துடைப்போம்
கழனி கரை காத்திடுவோம்
கானுயிரை பேணிடு வோம்
உழைப்பாளிகளாக ஒன்றிணைவோம்
ஊர்வம்பை அகற்றிடுவோம்
கழைக்கூத்தாடி போல் சமநிலையை
கருத்தில் கொண்டு செயல்படுவோம்
தொழிற்சாலைகளில் எம் கைகள்
தோட்டம் துரவுகளில் எம் கைகள்
பொழில் பூங்காவில் எம் கைகள் ...எங்கும்
பொலிக உழைக்கும் எம் கைகள்.
....கவிஞர். மு. கிருஷ்ணன்
நெல்லை மாவட்டம்
******************************************************************************************
020.உழைப்பே உயர்வு
அயராமல் உழை
ஆலம் போல் ஓங்கி வளர்வாய்!
ஓயாமல் உழை
இடர்களைக் கடந்து இலக்கை அடைவாய்!
தயங்காது உழை
துன்பம் நீங்கி இன்பத்துளிகளைப் பருகுவாய்!
கடினமாய் உழை
கனவுகள் ஓர் நாள் நிஜமாகும்!
இஷ்டப்பட்டு உழை
பட்டை தீட்டிய வைரமாய் ஒளிர்வாய்!
நம்பிக்கையோடு உழை
கருங்கற்களில் செதுக்கிய சிலையாய் மிளிர்வாய்!
களைப்பின்றி உழை
நதி போல் கடலை சேர்வாய்!
சுறுசுறுப்பாய் உழை
வான வெளியும் உன் வசமாகும்!
துணிந்து உழை
இலட்சியங்கள் அத்தனையும் ஒருநாள் நிறைவேறும்!
தொய்வின்றி உழை
சிறகு விரித்துப் பறவையாய் பறப்பாய்!
துடிப்போடு உழை
பாலையிலும் சோலை போல் செழிப்பாய்!
தளராது உழை
வலிகள் கடந்து இன்பம் காண்பாய்!
நம்பிக்கையோடு உழை
மகிழ்ச்சி வானில் நட்சத்திரமாய்ப் பிரகாசிப்பாய்!
-எழுத்தாளர் அஞ்யுகா ஸ்ரீ
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
021.உழைப்பே உயர்வு.
உழைப்பவர்களே உழைப்பாளிகள்...!
உழைப்பாளிகளே உன்னதமானவர்கள்....!
உழைத்து வாழ வேண்டும் பிறர்....
உழைப்பில் வாழக் கூடாது.....!
உன்னதத்தின் உச்சகட்டம்...!
உழைப்பவனைக் காணின் உயர்த்திப் போற்று....!
உதாசினப் படுத்தாதே....!
உழைப்பே ஒவ்வொருவரின் பிழைப்பு....!
உழைப்பில்லையேல் ஊதியம் இல்லை....!
உழைப்பு இல்லையேல்
உணவு இல்லை....!
உணவு இல்லையேல்
உயிர்கள் இல்லை....!
உயிர்கள் இல்லையேல் உறவுகள் இல்லை.....!
உறவுகள் இல்லையேல் உலகே இல்லை...!
உலகில் உழைப்பே உயர்வானது....!
-ப. லாவண்யா,விக்கிரவாண்டி.
###################################
022.உழைப்பே உயர்வு.
உலகில் உயிர்களாக பிறந்த அனைவரும்!
ஒருங்கே ஓங்கி ஒலிக்கும் ஓங்காரம்,
உழைப்பே உயர்வு என்னும் மந்திரம்!
வாழ்வில் முன்னேற வேண்டாம் தந்திரம்!
உழைப்பு மட்டுமே பழுதாக எந்திரம்!
சிந்தும் வியர்வையே மண்ணிற்கு உரம்!
விதையின் உழைப்பே முளைக்கும் மரம்!
இரும்பைவிட வலிமையானது உழைப்பாளி கரம்!
உழைப்புக்கு என்றுமே உலகில் முதல்தரம்!
உழைத்தால் உயரும் நம் பொருளாதாரம்!
உயர்ந்தால் உவகை கொள்வாளே தாரம்!
குழந்தைகளும் செய்வார்கள் குதூகலத்தில் ஆரவாரம்!
வாழ்வைவாழ உழைப்பே நம் வரம்!
உணவைத் தருவதோ விவசாயிகளின் கரம்!
உடையைத் தருவதோ நெசவாளியின் கரம்!
உழைப்பவரை நோக்கி வணங்கட்டும் சிரம்!
உழைப்பு மட்டுமே உலகில் நிரந்தரம்!
உழைப்பு மட்டுமே
உயர்வைத் தரும்..!!
-சு.உஷா, திருவண்ணாமலை.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
023.உழைப்பே உயர்வு
உடலில் பலமும்
உள்ளத்தில் உறுதியும்
மடைபோல இருத்தி
மகிமை கொள்வோம்
உழைப்பே உயர்வு
உலகில் வாழ்வதற்கே
களைப்பே இல்லாது
காலத்தை கடப்பதற்கே
முயற்சி என்றும்
முன்னேற்றம் அளிக்கும்
அயற்சி இல்லாத
ஆற்றலோடு வெல்வோம்
பத்துவிரல் சக்தி
பலதும் செய்திட
அத்துமீறி அவனியில்
அனைத்தும் சாதிக்கலாம்
தன்னம்பிக்கை தளராது
வேராக ஓடும்
அவநம்பிக்கை கலைந்து
ஆற்றலோடு எழுவோம்
ஊக்கமும் உள்ளமும்
உரமாய் இருக்க
ஆக்கம் கொண்டு
அடைவது இலக்கு
தளராத மனதே
தனித்துவம் ஆனது
வியர்வை நிலத்தில் சிந்தி
விதையாய் முளைத்து
விருட்சமாய் எழுவோம்
வாழ்க்கையின் நெறியும் வளமும்
வசந்தமும் வரமும் உழைப்பே ஆகும்
கவித்தாரகை
கிருஷ் அபி இலங்கை
***********************************************
024. உழைப்பை உயர்வு
பல மைல்கள் பறந்து,
பல்லாயிரம் பூக்களை முகர்ந்து;
விடாமுயற்சியுடன் தேனை சேமித்து,
ஆரோக்கியத்தை நல்கும் தேனீக்களை;
கண்டு வியந்தேன்?
உந்தன் இரகசியம் என்னவென்றேன்.......
பட்டுப்பூச்சியை கேட்டு பார் என்றது!
உமிழ்நீரையே கவசமாக்கி,
பட்டுஇழையை உருவாக்கும்;
பட்டுப்பூச்சியை கண்டு ஆச்சரியமுற்றேன்!
அருகில் சென்று உந்தன் ,
மகிமை என்னவென்றேன்......
இது என்ன பிரமாதம்,
நெசவாளியை கேள் என்றது;
பட்டுஇழையை நெய்து,
அழகிய வேலைப்பாடுகளால்;
காண்போரும் வியக்கும் பட்டுச்சேலை யாக ,
உருவாக்கிய நெசவாளியிடம்;
இரகசியம் என்னவென்றேன்.....
புன்னகையுடன் இது ஒரு மந்திரம்!
ஒருவருள் மட்டும் அடக்கமில்லை:
யோசித்து பாருங்கள் புரியும் என்றார்!
" உழைப்பே உயர்வு"
உன்னத மந்திரத்தை அறிந்தேன்!
தெளிவு பெற்றேன்......
ப. மாலினி பாஸ்கர்.
*************************************************
025.
உள்ளத்து உணர்வுகளை ரணமாக்கி உற்சாகமாய்
உழைத்து நம்பிக்கையில் பூக்கும் வியர்வையை
முத்துக்களே உழைப்பாளிகளின் உயர்ந்த சொத்துக்கள்....
வானுயர்ந்த கட்டிடத்தை கட்டிய பொறியாளரும்
வண்ணமிகு ஆடையை நெய்திட்ட நெசவாளரும்
நெருப்பினிலே புடம் போட்டு பொன்னை உருக்கி
அழகாய் ஆபரணம் செய்திட்ட பொற்கொல்லரும்
இடர்பாடில்லா சாலையை உருவாக்கிய சாலை
பணியாளரும்
ஆசிரியப் பணியே அறப்பணி அதற்கே
உன்னை அர்ப்பணி என்று அர்ப்பணித்து
அறிவுக்கண் திறக்க செய்யும் ஆசிரிய பிரமாக்களுக்கும்
மனிதகுலம் குலம் காத்திடும் மருத்துவரும்
செவிலியர், சுமைதூக்கும் தொழிலாளர் தூய்மைப் பணியாளர்கள்
பாதுகாப்பாய் நம்மை பணிமனைக்கு அழைத்துச் செல்லும் ஓட்டுநருக்கும்
நீதியை நிலை நாட்டும் காவலர்களுக்கும்
ஊருக்கே சோறு போடும் விவசாயிகளுக்கும்
அரும் பணிகள் ஆயிரம் செய்பவர்களுக்கும்
வாழ்வாதாரத்திற்கு வழிதேடும் அனைவரும்
இறைவன் படைப்பில் இனிமையானவர்களே..
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்
-முனைவர் ப.விக்னேஸ்வரி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
026. உழைப்பே உயர்வு
உழைப்பில்லாது உயர்ந்துவிடலாமென்ற
எண்ணம் வெறும் கானல் நீர்த்தோற்றமே !
உழைத்து உழைத்து காப்பு காய்த்த ....
உழைப்பாளிகளின் கரங்கள் உணர்த்தும்
மனமும் உடலும் பட்ட துன்பம் தனை !
சாதித்தவரின் சரித்திரங்களை புரட்டினால்
ஆங்கே கடினஉழைப்பே காட்சிப்படுத்தப்பட்டு
பெரும்புகழ் பெற காரணமாயிருந்திருக்கும் !
உழைப்பென்ற விதை விதைக்கப்பட்டாலொழிய
வெற்றிக்கனியை புசித்திட இயலாது !
உழைப்பிற்கு மட்டுமே நம் வாழ்வை
மாற்றிபோடும் மகத்துவம் இருக்கிறது !
உழைப்பை மூலதனமாய் கொண்டு
முன்னேறும் உழைப்பாளிகளின் தியாகம்
வரிகளால் விவரிக்க இயலா வலிகள் அது !
உழைப்பில்லா பிறப்பு இறப்புக்கு சமம்
இதனை நினைவில் கொண்டு வாழ்வில்உயர
ஒவ்வொருவரும் அயராது உழைத்திடுவோம் !
உழைப்பில்லா வெற்றி வெறுங்கனவே .....
ஆதலால் உழைத்திடும் சரித்திரம் படைத்திடும் !
எங்கள் உழைப்பாளிகளை போற்றிப்புனையவே....
இவ்வரிகளை சமர்ப்பிக்கிறேன் நான் !
- மதிப்புறு முனைவர்.நா.பாரதி ( கள்ளக்குறிச்சி )
##################################
027.உழைப்பே உயர்வு
அரியாசனத்தில் அரசனாய் அமரச் செய்ய//
அலையோடு போராடும் உழைப்பாளி வர்கம்//
அடை மழையிலும் அடங்காது உழைப்பு//
அல்லி வீசும் வாசனை உழைப்பு//
வியர்வை ஆராய் ஓடுவதையும் மறந்து//
விரக்தியின்றி விலை மதிப்பற்றதை பெற//
விடியல் வந்து இருலை அகற்ற//
விமர்சனங்களும் விக்கித்து போய் பார்த்திட//
புதிய விடயங்களை தேடி உழைத்து//
புரியாத விடயங்களை அறிந்திட உழைத்து//
புதுமை கண்டிட உயர்த்திடும் உழைப்பு//
புதிய மனினாய் மாற்றிடும் உழைப்பு//
வயது எல்லை இல்லை உழைப்புக்கு//
வயதாகினாலும் மதித்திட வைக்கும் உழைப்பு//
வருமையிலும் வருத்திடாமல் வைக்கும் உழைப்பு//
வளம் வரும் பொக்கிஷம் உழைப்பு//
உயர்வை தந்திடும் தந்திரம் உழைப்பு//
உலகை ஆளவைக்கும் மந்திரம் உழைப்பு//
உவகை கொண்டிட வைக்கும் உழைப்பு//
உயிருக்கும் மதிப்பு உழைப்பால் வந்தது//
-ஜஸூரா ஜலீல். மலேசியா.
**************************************************
028.உழைப்பே உயர்வு....
குருதி கொப்பளிக்க கடும் வெயிலிலே/
குன்றா விளக்காக மின்னிடுவான் உழைப்பிலே/
கண்ணும் கருத்துமாய் குடும்ப உறவுகளை/
திண்ணமாய் காத்திட நாளும் உழைத்தே/
எறும்பினைப் போலே சுறுசுறுப்பின் பெட்டகமாய்/
ஏற்றும் காண மெய்வருத்தி நாளுமே/
சீற்றமடக்கி உன்னத வியர்வைத் துளியினை/
சிந்தியே உழைக்கும் உன்னதம் ஓங்குகவே/
சுமைகளை எல்லாம் சுகமாய் தாங்கும்/
சூட்சுமம் கற்றுணர்ந்த மகத்துவம் பாராயோ/
வெற்றிபல கண்டிட மண்டிடா மனிதனாய்/
பற்றிடுவர் தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தை/
மண்ணிலே விதைகளை விதைத்து மகசூல்காத்து/
மாந்தர்க்கிங்கு தந்திடும் விவசாயி வாழனுமே/
சோதனைகளை சாதனையாக்கிட என்றுமே இடைவிடாது/
சோர்வில்லாமல் உழைக்கும் உழைப்பாளிகளைப் போற்றிடுவோமே/
-கவிஞர் முனைவர் செ.ஆயிஷா
பல்லடம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
029.
உழைக்கும் வர்க்கமே..
உழைக்கும் வர்க்கமே..
ஓய்வின்றி செய்யும் கடமையே..
காலை முதல் இரவு வரை
கால்கடுக்க பணி செய்ய
நெற்றி வியர்வை சொட்டச்சொட்ட..
நாளைய வாழ்வுக்காக..
ஒவ்வொரு நாளும் உழைக்கும் வர்க்கமே..
அழுக்கு சட்டையோடு மூட்டை சுமக்க
அடிமாடு போல் உழைத்து நிற்க..
கூலி வேலைக்காக கூவி விற்க..
நீங்கள் இல்லாமல் உலகம் சிறக்குமா?
பணியில் என்ன பாகுபாடு..
படித்தவன் நான்கு சுவருக்குள் வேலை செய்கிறான்..
படிக்காதவன் உடல் உழைப்பை வெட்ட வெளியில்
முதலீடு செய்கிறான்..
உழைப்பால் அனைவரும் சமமே..
உங்களை வணங்கும் இந்த உலகமே..
உழைப்பாளியை போற்றுவோம்!
வியர்வை துளி சிந்திட உழைக்கும் உழைப்பை மதிப்போம்!
இரா.காயத்ரி.
***********************************************
030.
உழைப்பே உயர்வு.
உழைக்கும் வர்க்கமே
உயர்ந்த வர்க்கம்.....
உழைப்பவர்கள் உயர்ந்தவர்!
அரும்பாடு பட்டு உழைத்து
முன்னேறி வருவது....
நம் மானிடத் தமிழர்களின்
உழைப்பை உயர்த்தி காட்டும்
வீரமிகு பண்பாகும்!
விளைநிலம் விளைச்சல் பெருகி
பசுமையாய் காட்சியளிப்பது....
விவசாய பெருமக்களின்
ஒவ்வொருவரின் வியர்வைத் துளி
உழைப்பை உயர்த்தி காட்டும் !
தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க
தொழிலாளர்களின் கடின உழைப்பே....
உண்மையான காரணியாகும்!
உழைப்பவர்கள் கைபட்டால்
பட்டமரம் கூட தளிர்க்கும்!
தமிழர் திருநாளாம்....
தைப்பொங்கல்
உழைக்கும் பெருமக்களின்
கடின உழைப்பின் பிரதிபலிப்பே....
தமிழர்கள் அனைவரின் பண்டிகையாய்
இவ்வுலகெங்கும் கொண்டாடப்படுகிறது!
நம் தொழில்கள் அனைத்திலும்
நல் தொழிலாளர்கள் தினத்தில்....
போற்றுவோம் பறைசாற்றுவோம்.... பெருமைப்படுத்துவோம்
எந்நாளும்.
-கவிஞர் கே. நஜீமா ஜமான்
நாகூர்
நாகை மாவட்டம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
031.
உழைப்பே உயர்வு
உன் உழைப்பிற்கு நீ
உண்மையாய் இரு....
அது உலகிற்கு
உன்னை
அடையாளமாய்
மாற்றும்...
உன் உழைப்பிற்கு நீ
மரியாதை கொடு....
அது
உலகிற்கு உன்னை
மதிப்புள்ளவனாய்
காட்டும்..
உன் உழைப்பிற்கு
அங்கீகாரம் கொடு...
அது
உலகிற்கு உன்
திறமையை
அறிமுகப்படுத்தும்...
உன் உழைப்பிற்கு நீ
உயிர் கொடு....
அது உன்
தலைமுறைகளை
தலை நிமிர
வைக்கும் ...
இந்த உலகிற்கு.....
உழைப்பே உயர்வு....
அதுவே
நம் வாழ்வின் எதிர்
காலத்தை வசந்த
காலமாய் மாற்றும்
கலியுகத்தின்
கடவுள்....
உருவமில்லா
கடவுள்...
நம் உயிர் காக்கும்
கடவுள் உழைப்பு
மட்டுமே....
- ஹர்ஷிதா. து
திருச்சி மாவட்டம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
032
தொழிலாளி
வருடங்கள் கடந்து
வளம் சொல்லிடும்,
வரங்கள் கொண்ட
மைந்தர் அவர்...
நம்பிக்கை மனம் கொண்டு-தன் எஜமான் மனம் வென்றவரும் அவர்...
நிலையான நீதிக்கும் யதார்த்தமான உலகிற்கும்,
நேர்மை சொல்லிடும் இயக்குநரும் அவர்...
எத்தனை தியாகங்கள்,
எத்தனை துன்பங்கள்,
எத்தனை கஷ்டங்கள்,
எத்தனை பிரிவுகள் என்று தொடராய் தன்னை மறந்து-தன் தொழில் ஜயம் வெல்ல போராடும் மனிதரும் அவர்...
தொழிலாளி.
-முஹம்மத் ஷரீப் முஹம்மத் சஜ்ஜாத்(கபூரி),இளம்கலை பட்டதாரி மாணவன், இலங்கை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
033.
உழைப்பே உயர்வு
"வ"ருத்தி உடல் வருத்தி உழைத்திட
வேண்டு மே//
"வா"ழ்க்கை நம் வாழ்க்கை என்றும்
சிறந்திடு மே//
"வி"வசாயிகளின் உழைப்பே உன்னதமாய் மாறிடு மே//
"வீ"ரனுக்கும் பல வெற்றியைத்
தந்திடு மே
வர"வு"களை அதிகரித்து வாழ்வை வளப்படுத்திடு மே//
எவ்"வூ"ரின் மக்களையும் உழைப்பே முன்னேற்றிடு மே//
"வெ"ற்றிக்கனியைப் பறித்து முத்திரை பதிக்கச்
செய்திடு மே//
"வே"லையை விரும்பி செய்தால் வேண்டும் வரங்கள் தந்திடு மே//
"வை"யகத்தில் வாழ்வாங்கு வாழ வழிவகுத்திடு மே//
ஒவ்"வொ"ருவருக்கும் ஒற்றுமை உணர்வை ஊட்டிடு மே//
வேலை தேடு"வோ"ரையும் சொந்தக் காலில் நிற்க
ஊக்கப்படுத்திடு மே//
மற்றவர் பொருளைக் கைப்பற்ற "வௌ"வல்(கவர்தல்)
எண்ணம் இருந்தாலும் அதை//
அடியோடு அகற்றி உழைப்பே நம்மை உயர்த்திடு மே//
உழைப்பே என்றும் உயர்வைத் தந்திடு மே//
அதை நாம் மதித்தால் நற்பெயரைப் பெற்றும் தந்திடு மே//
நன்றி!
அ.பாண்டிமுனியம்மாள்,
இடைநிலை ஆசிரியை,
மதுரை.
*************************************************************************************************
034.
உழைப்பே உயர்வு
உழைத்தலை களைத்தலின்றி செய்..
உனக்கான நற்பாதை உருவாகிவிடும்..
உழைத்தலை
உயிர் மூச்சாகக் கொள்..
உனக்கான உலகம் விரிந்திடும்..
உழைத்தலில் பெறுவதை மட்டுமே உயர்வாக கொள்...
உன் நேர்மை வலுப்பெறும் ..
உழைத்து உண்பதில் மட்டுமே கர்வம் கொள்..
உடலில் உரம் ஏறிடும்..
சோம்பல் வந்து நம்மை வட்டமிட்டாலும்..
சோர்ந்து போகாது அதற்கு கட்டம் கட்டி விடு..
உனைக் கண்டு அஞ்சு நடுங்கி விழும் அச்சோம்பல் ..
தடைகள் பல உண்டு..
அனைத்தும் தகர்த்தெடு உழைப்பின் துணை கொண்டு ...
குண்டூசி தயாரிப்பு முதல்
அணுகுண்டு தயாரிப்பு வரை
அனைத்தும் உழைப்பே..
கொண்டை ஊசி தயாரித்தல் முதல்.. கொரோனா ஊசி வரை தயாரித்தல் வரை.. அனைத்தும் உழைப்பே..
உழைப்பே வீரம்... உழைப்பே தவம்... உழைப்பே வரம்...
உழைத்தலே அறம்..
.இந்திய பொருளாதாரம் இளைஞர் கையில் என்பதை தவறாக புரிந்து கொண்டார்களோ இளைஞர்கள் ?
அத்தனை பேரின் உழைக்கும் கரங்களையும்
கட்டி அணைத்துக் கொண்டிருக்கிறது
அந்த அலைபேசி...
இயந்திரங்கள் உழைத்துக் கொண்டிருக்க..
இயங்காமல் நாம் இருப்பது இந்தியாவிற்கு செய்கிற துரோகம் என்பதை உணர வேண்டிய தருணம் ..
மாற்றிக் கொள்ள மனம் வராவிட்டாலும் நிகழ்ந்தே ஆக வேண்டிய மாற்றம்..
நம் தேசத்து இளைஞர்களின் மன மாற்றம்...
ஒவ்வொருவரின் உழைப்பின் சக்தியை ஒன்று திரட்டினால் உலகம் தாங்காது என்பதை உணர வைப்போமா???
உழைப்பை மதிப்போம் உழைப்பாளர்களைப் போற்றுவோம்..
*என்றும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி...
கவிஞர் ஆ. சுதா , அம்பாசமுத்திரம் .
*********************************************************************************
035.மே தினம்
மே தினமே
மே தினமே
தினம் மே தினமே
உழைப்பாளர்
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கிடும்
ஒவ்வொரு தினமும்
மே தினமே
மே தினமே
சுரண்டும் கூட்டம்
ஒளிந்திடும் தினம்
ஒவ்வொரு தினமும்
மே தினமே
மே தினமே
பூமி செய்யவும்
சாமி செய்யவும்
உழைப்பாளர் தேவை
அவருக்கு
வாழ்நாள் முழுவதும் செய்திடுவேன் சேவை...
-வே. சாந்தி
சொக்கலால் சரஸ்வதி சத்திரிய வித்யா சாலா ஆரம்பப்பள்ளி,
முக்கூடல்.
திருநெல்வேலி மாவட்டம்.
*********************************************************************************************
036.உழைப்பே உயர்வு
கல்லில் காணும் கடவுளோ
சிற்பியின் உழைப்பில்
உணவில் வாழும் உயிரோ
விவசாயின் வியர்வையில்
தேகம் காக்கும் ஆடையோ
நெசவாளியின் நெசவில்
விண்ணை அளக்கும் அறிவியலோ
அறிஞரின் ஆக்கத்தில்
அறிவின் முகவரி கல்வியோ
ஆசானின் கற்பித்தலில்
இயந்திர உலகின் எந்திரமோ
தொழிலாளர்களின் தொண்டில்
சுத்தமும்,சுகாதாரமும்
தூய்மை பணியாளர்களின் பணியில்
மக்களைக் காக்கும் அரணோ
முப்படையின் தியாகத்தில்
மனிதம் வளர்க்கும் மகத்துவமோ
மருத்துவர்களின் மாண்பில்
தொழில்கள் மாறலாம்
வியர்வை ஒன்றுதான் !
உலகம் செழிப்புற மிளிர்ந்திட
உழைப்பே ! உழைப்பே !
உழைப்போம் உயர்வோம் !
உழைக்கும் தோழர்களுக்கு உயர்வான வணக்கங்களும், வாழ்த்துக்களும்.
உழைப்பாளி ,
எ. விக்னேஸ்வரி எம்ஏ பிஎட்
ஆசிரியை.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆவாரம்பாளையம் கோவை -6.
**************************************************************************************************
037.உழைப்பே உயர்வு!
இலக்கினைச் சேர்க்க இருகரம் நீட்டும்!//
பலமுடன் வாழ்ந்திடப் பண்பினைக் கூட்டும்!//
கனவுகள் மெய்ப்படக் கரங்களைக் கோர்க்கும்!//
மனதையும் துவளா மாண்பினிற் சேர்க்கும்!//
உண்கையில் நிறைவை உதிரத்திற் சேர்க்கும்!//
உண்மையில் உலகிலே உயர்வினிற் சேர்க்கும்!//
ஓரறி வுயிர்க்கும் உழைப்பே வழியாம்!//
பாரதும் பேசிடப் பாட்டாளியே மொழியாம்!//
உலகினைச் செதுக்கிடும் உழைப்பவர் வியர்வை!//
கலங்காதவர் மனமும் காணாது அயர்வை!//
எல்லாச் சிறப்பும் ஏற்றமும் அறிவும்,//
கல்லான் எனினும் கணவா னாகிலும்,//
தன்னிலை உயர்த்த தளரா துழைப்பர்!//
முன்னிலை கண்டே முனைப்புடன் தழைப்பர்!//
உழைப்பைத் தொழிலால் ஒதுக்குதல் பாவம்!//
உழைத்தே உலகினை உயர்த்திட வேண்டும்!//
உழைக்கா மனிதன் உண்மையில் யாரெனில்,//
பிழையாய் உலகினிற் பிறந்தே வாழ்பவன்!/
உழைப்பவர் வாழ்வும் ஓங்கிடும் சிகரமாய்!//
உழைத்தவர் புகழும் உயர்ந்திடும் இமயமாய்!//
உழைப்பவன் வெற்றியிலே உண்மையில் அயர்வில்லை!//
உழைக்காத வாழ்வினிலே ஒருபோதும் உயர்வில்லை!//
- கு.ஹிதாயத்.
கோவை.
####################################################################
038.
உழைப்பே உயர்வு
உழைக்கும் கரங்கள்
நீண்டால் எட்டாத உயரமும்
எட்டி விட உழைப்பைப் பழகு...
பிரபஞ்சம் முழுவதும் கொட்டிக் கிடக்கும் இயற்கையின் வழியே உயர்வை நோக்கி உழைப்பைப் பழகு..
வானில் மிதக்கும் நிலாவினை எட்டிப் பறிக்கும் திண்மையான
மனத்தோடு போராடி வென்றால்
நிலவும் கையிலே சேர உழைப்பைப் பழகு..
பார்த்தனின் நாணில்
ஏறும் அம்பின் குறியாக
இலக்கை அடைய
முயற்சியுடன் இலட்சியத்தை
நோக்கி உழைப்பைப் பழகு..
கனவுகளுக்கு உயிர் கொடுத்தால் வெற்றிக் கனி
உன்னை வந்தடைய உழைப்பைப் பழகு..
எந்த வேலையும் உயர்வில்லை தாழ்வில்லை நெஞ்சுரம் தாங்கி உன்னை நிலை நிறுத்த உழைப்பைப் பழகு..
ஏர் பூட்டி நாற்று நட்டால் பஞ்சமின்றி உயிர் வாழ உழைப்பைப் பழகு..
நோயும் நொடியும் மெய்யில் சேராமல் இருக்க உழைப்பைப் பழகு...
எங்கும் காணும் ஊழலை விலக்கி ஏமாற்றத்தைத் தவிர்த்து உழைப்பைப் பழகு..
உழைத்தால் உயர்ந்தோர் கோடி உழைப்பால் மேலும் உயர்விற்குப் பலகோடி...
உழைப்பைப் பழகு...
சசிகலா எத்திராஜ் ,கரூர்
************************************************************************************************************************************************
039.
உழைப்பே உயர்வு
மனிதன் வாழ்க்கையில்
மகிழ்ச்சியை தந்திடும்
மகிழ்ச்சி நிறைந்தயிடத்தில் துன்பங்களை நீக்கிடும்
தெரியாத தகவலை
கற்று கொடுத்து
வாழ்வில் முன்னேர
வழிகளைக் காட்டிடும்
மண்ணில் விழுந்த
வியர்வைத் துள்ளிகள்
விவசாய் வாழ்க்கையில்
உணவைத் தந்திடும்
விழிகளை இழுக்கும்
சிலைகளின் வடிவங்கள்
சிற்பியின் உழைப்பால்
மனிதனை கவர்ந்திடும்
விரல்களின் விளையாட்தில்
வரைந்த ஓவியங்கள்
ஓவியரின் திறமையால்
மனதை இழுத்திடும்
தந்தையின் வியர்வையால்
குடும்பத்தின் வளர்ச்சி
கல்வி துணையோடு
குழந்தைகளை வளர்த்திடும்
கைதொழில் செய்தே
வாழ்க்கையில் தொடங்கிட
அனுபங்கள் உதவியோடு
வெற்றிபாதை திறந்திடும்
உடலின் வேகத்தை
குறைத்து விடாமல்
பலத்தை கொடுத்து
ஆரோக்கிமாக வைத்திடும்.
இரா.மோகனதாஸ் சிவலிங்கம்
********************************************************
040.
உழைப்பின் உயர்வு
நைந்த வாகனங்களின் சக்கரங்களை
குச்சிக் கைகளால் வேகமாய்
மாற்றி மாற்றி
புது வாகனமாக செய்தான் மிக்க காதலுடன் !
இந்தத் தொழிலுக்குதான் என்று
அவன் தள்ளப்பட்டபோது
அவனிடம் வேதனை இல்லை
மாறாய் ஏற்றுக் கொண்டான்!
பள்ளிகூட கல்வி கனமாக
இருக்கிறது என்றவன் கனரக
இயந்திரங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டான்!
நிறைய சிரித்தான் !
காத்திரு என்பதையும் அழகாய் சொன்னான்!
நடைபாதையில் குடிசைதான் அவன் வீடு!
பூட்டத் தேவையற்ற வீடு!
உழைப்பின் உயர்வு என்று நான் சொன்னால்
அவனுக்குப் புரியாது!
ஆசையாய் எனக்கும் ஓர்
தொழிற்சாலை வேண்டுமென்றான்!
அவன் கண்களில் ஆகாயம் தெரிந்தது!
யாரோ ஏதோ கேட்க,
பரவாயில்லை பயணிப்பேன் என்றான்!
அழுக்கு மேனியும் நைந்த ஆடையும்
ஓடி ஓடி உழைக்கும் சிறுவனின்
இந்த நம்பிக்கை ஒட்டுமா என்னுள்...?
தெரியவில்லை!
முனைவர் இரா சீதா, புனித பிலோமினாள் கல்லூரி, மைசூரு.
*********************************************************************************************
041.
வேர்வை தினம் ...
உழைக்கும் தோழா உன்னுடைய நாள் //
உன்னை கொண்டாடும் வேர்வை திருநாள் //
உன் உடம்பில் ஓடும் இரத்தங்களும்//
ஒவ்வொரு இடத்திலும் கோர்க்கின்ற எலும்புகளும் //
உன் மண்டைக்குள் இருக்கின்ற மூளையும்//
செயலுக்காக வெளிப்படுத்துகின்ற உன் சிந்தனைகளும் //
நாட்டிற்கு தேவையான பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது //
முதுகை வளைத்து சுமக்கின்ற மூட்டைகளும் //
இயந்திரம் சுற்றுவது மட்டுமல்ல உடலுமே//
உணவு அளிக்கும் விவசாய தோழரே //
எண்ணற்ற பொருட்களை உருவாக்கும் பொறியாளர்களே//
கட்டிடத்தை உருவாக்கும் கட்டிட தொழிலாளர்களே//
இரத்தத்தை வேர்வையாக சிந்தும் உழைப்பாளர்களே//
அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் //
பொ.ச.மகாலட்சுமி
கோவை.
************************************************************************************
042. உழைப்பே உயர்வு
விதை விதைத்தால் தான் முளைக்கும்!
விடாமல் உழைத்தால் தான் உயர முடியும்!
கடிகாரம் எவ்வாறு ஓடிக் கொண்டே இருக்கிறதோ
அதைப் போல நீயும் உன் இலக்கை நோக்கி ஓடிக் கொண்ட இரு
பாதைகள் சற்று கரடுமுரடாக இருந்தாலும் நிச்சயம்
ஓர் நாள் உயரம் செல்வாய்!
கனவுகள் மெய்ப்பட
கடினமாக உழைத்தால்
கனவுகள் கற்பனையாகமல் நிஐமாக கண் முன்னே நிற்கும்!!
பறவைகள் எவ்வாறு சொந்த முயற்சியில் பறக்கிறதோ,
அது போல இலட்சியத்திற்காக உழைத்த ஒருவரும்
கீழ் இறங்கியதாய் சரித்திரம் இல்லை!!
சிந்தும் வியர்வை சிகரம் தொடும்!
சொந்த உழைப்பே உன்னை உயர்த்தும்!
ச. மதுமிதா,
இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு,
தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
********************************************************************************
043.
உழைப்பே உயர்வு..!
அடுப்பங்கரை வியர்வை
அம்மாவுக்குச் சொந்தம்
அந்திப்பகல் வியர்வை
அப்பாவுக்குச் சொந்தம்
அரவணைப்பின் வியர்வை
அண்ணனுக்குச் சொந்தம்
அன்பின் வியர்வை
அக்காவுக்குச் சொந்தம்
வியர்வைப் பேசும்
உழைப்பின் சொந்தங்களை
பிழைப்பை நிர்ணயிக்கும்
உழைப்பின் உன்னதத்தில்
கொண்டாடுவோம் அனுதினமே
உண்மைச் செருக்கோடே..!
-கவிஞர்.வினோ..
திருச்செங்கோடு
************************************************************************************
044.
மேதின உழைப்பாளி :
*********
மனதால் கூட வறியவனை வருத்தாது வாழ்பவன்//
பிறருக்கு உதவிசெய்ய மணம் வருந்த உழைப்பவன்//
கைமாறு கருதாது கலங்கரையாய் திகழ்பவர்//
காலங்கள் உள்ளவரை கடமையாய் திகழ்பவன்//
உழைப்பிற்கு எடுத்துக்காட்டாய் தேனிக்களாய் திகழ்பவன்//
ஓய்வில்லா உழைப்பிற்கு எறும்புகலாய்ஊர்பவன்//
காடுகளை மேடுபள்ளம் பாராமல் உழைப்பவன்//
உடல் உழைப்பாளர் ரத்தம்சிந்தும் உழைப்பாளி அவனே//
காண்போம் காசுக்கு கழணியில் உழுபவன் அவன்//
காலத்தால் அழியாத கண்டெடுத்தப் பொக்கிசமாய்//
அல்ல அல்லக் குறையாத அட்சயபாத்திரமாய்//
உண்ணத் உழைப்பாளி உள்ளத்தில் நிலைத்திருப்பான்//
நாடு வளம்பெற காலமெல்லாம் உழைத்துழைத்து//
பாமர மக்களும் பண்பாளனாய் சிறந்து வாழ்ந்து//
நாட்டின் முதுகெலும்பாய் பாரே சிறந்தோங்க//
மேதின நண்ணாளில் மெய்யுனர்வால் வாழ்த்தகிறேன்//
புலவர்.சோனா.மதியழகன்
குறிச்சி.நாகப்பட்டினம்.மாவட்டம்.
*************************************************************************************
045.
கவிதையின் தலைப்பு...
"உழைப்பே உயர்வு"
...............................
விடியலில்
விழித்து
விம்மிய மனதோடு
விளக்கினைத் துலக்கினேன்....
விழிநிறைய கனவெனுக்கு
விரும்பிய வாழ்வுக்காய்
விழிநீர் கசிந்துருக
விடியாதபகலில் கிளம்பினேன்....
விடலைப் பருவமதில்
வியர்வையில் நனைய
விரல்களில் வலியோடு
விருப்பமின்றி உழன்றேன்....
விதியெனும் தடையை
விரட்டியடிக்கும் பேராசையெனக்கு
விரும்பியவர்களின் வலிகளிலும்
விடாது முயலுகிறேன்....
விடியல் தூரமில்லை
விழியின் கனவும்அகலமில்லை
வினவும் பலரின் கேள்விக்கு
விடையும் நானேன் பலநேரம்...
விதைத்த என் வியர்வையெல்லாம்
விந்தையின் பலனாக
விசும்பானேன் என்னுழைப்பால்....
விட்டில்பூச்சியாய்
விபரம் தெரியாமல்
விழித்துப் போன எனக்கு புது
விடியலாய் உழைப்பெனும் பேராயுதம்...
விண்ணேறும் என்கனவுகள்
விண்மணி பூக்களாக
விண்டலம் தனில் உயர
விதலையின்றி உழைக்கிறேன்....
வினோ ராஜ்.லா
கன்னியாகுமரி மாவட்டம்.
***********************************************************************
046.உழைப்பே உயர்வு
**** ****
விவசாயமே நாட்டின் முதுகெலும்பு என்பர்/
விவசாயம் செய்யும் விவசாயிகளை மதிப்பதில்லை/
வியர்வை சிந்தி உழைப்பவன் கடனாளி/
வியர்வையே பார்க்க தவன் முதலாளி/
உழைத்து உழைத்து இரத்தத்தை வியர்வையாக்கி/ உண்மையாக உழைப்பவன் உழைப்பாளி/
உண்மையான உழைப்பு உயர்வு தரும்/
போலியாண உழைப்பு தோல்வி தரும்/
உழைப்பை ஏமாற்றுபவன் ஒருபோதும் /வாழ்வில் வெற்றி பெற மாட்டான்/
எந்த தொழில் செய்தாலூம் செய்யும் தொழிலே தெய்வம் என வாழ்ந்திடு/
உழைப்பாளி இல்லாத நாடே நாடில்லை/
உழைப்பாளிக்கு நோய்நொடி வராது/
உழைக்க மறுத்தவன் நோயாளி ஆகிறான்/
ப.பஞ்சாபகேசன் முதுகலை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி பொன்பரப்பி அரியலூர் மாவட்டம்.
******************************************************************************************
047.
உழைப்பே உயர்வு
உழைத்திடு உழைத்திடு வியர்வை சிந்திட உழைத்திடு...
வாழ்வில் உயர்ந்திட உழைத்திடு...
விரும்பியதை அடைந்திட உழைத்திடு...
வானுயர்ந்து புகழடைந்திட உழைத்திடு...
பகுத்தறிவு மேம்பட உழைத்திடு...
பசியால் வாடுவோர்க்கு உணவளித்திட உழைத்திடு...
இல்லாதவர்க்குக் கொடுத்திட உழைத்திடு...
மனதினை மகிழ்ச்சியாக்கிட உழைத்திடு...
உடலினைப் பலமாக்கிட உழைத்திடு...
பணத்தினை மையப்படுத்தாமல் உழைத்திடு...
உலகமே வியக்குமளவிற்கு உழைத்திடு...
உழைப்பே உயர்வு என்று உழைத்திடு...
ஓவியாமாணிக்கம்
ஈரோடு மாவட்டம்.
******************************************************************************************
048.
உழைப்பே உயர்வு
கரங்கள் இரண்டும்
காதலினால் இணைந்திடப்
பிறந்ததே காவியம்
பொய்க்காது இவ்வுலகில்
கால்கள் உரமேற
களிப்புற்ற அவனியோ
கொண்டாடப் பிறந்ததே
உழைப்பாளர் தினமொன்று
உழைப்பின் உன்னதமோ
இலக்கினால் தெளிவடைய
காய்த்திட்ட உள்ளங்கை
கவலையற்று சிரிக்கிறதே
வேதனைகள் அழிந்திட்டு
சாதனைகள் உயர்வடைய
ஆனந்தப் புன்னகையால்
அவனியும் ஒளிர்கிறதே
நானென்று உரைதிட்ட
நாக்குகளும் தெளிவடைந்து
நாமென்ற வார்த்தையினால்
நலமோடு வாழ்கிறதே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
வித்தைகள் புரிகின்ற
உழவனெனும் தெய்வத்தால்
உண்டியும் நிறைகிறதே
வாரீரோ மானிடரே
வல்லவரைப் போற்றிடவே
இன்பமுடன் கொண்டாடுவோம்
இனிமைகள் நிறைந்திடவே
உள்ளத்தில் இருத்தியே
உவகையுடன் பாடுவோம்
அழகானப் பண்ணிசைத்து
அமைதியாய் ஆடுவோம்
புவனா பிரகாஷ்
******************************************************************************************
049.
உழைப்பே உயர்வு
உழைக்கும் மனமே உலகை ஜெயிக்கும்
ஊக்கம் நிறைந்த உழைப்பாளி
ஊசி முனையில் கூட முன்னேறுவான்
பிறர் சிந்தனையானாலும்
உழைப்பு இருந்தால் தான் உயர்வு
உழைப்பின் விதையை விதை
உயர்வில் விருச்சம் வளரும்
உச்சம் தொட்டவனின் உழைப்பு
மிளிரும் ஜோதியாய் பிறர் வாழ்வில்
கிடைத்ததில் உழைப்பவனின் உழைப்பு
கூர் வாளாய் மின்னும்
உழைப்பின் உன்னதத்தை
உணர்ந்தவனின்
வெற்றி சிகரம் தொடும்
சோதனையின் உச்சம் தொட்டும்
சாதனைகளாக மாற்றிய
மந்திர சொல்
"உழைப்பே உயர்வு"
பிரபா செந்தில்குமார் பல்லடம்
*****************************************
050.மே தினம்.
உழைப்பாளர் தினம்.
உழைக்கும் கரங்கள் உருவாக்கும் கரங்கள்//
தினம் தினமும் வரும் போகும்//
எல்லா தினமும் சிறப்பு அல்ல//
சில நமக்கானவை பல பெயருக்கானவை ஒரு சில முன்னோர் நினைவேந்தல்.
உழைப்பவன் கரம் ஓய்வெடுத்தால் உலகம் இயங்காது.
கூலிக்கு வேலை ஏளனப் பேச்சு.
அசையாப் பொருளுக்கு கொடுக்கும் முக்கியம்
ஓசையின்றி உழைக்கும் தொழிலாளிக்கு உண்டா?
உரம் போட்டதால் மட்டுமே பயிர்
விளையாது. உழவனின் வேர்வை உரமானதே உண்மை.
காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கும்.
தொழிலாளி தொய்வின்றி உழைப்பதால் மட்டுமே சாத்தியம்.
பணியாளர்கள் இடம் பாரா முகம் வேண்டாம்.
உணர்வுகளை மதிப்போம் உழைப்புக்கு வணங்குவோம்.
ஒரு நாள் விடுமுறை அவனுக்கு நிறைவு அல்ல.
மனித தெய்வமாய் பார்ப்போம்.
-ல. மதுமதி லட்சுமணன் உசிலம்பட்டி
****************************************************************************
051.
உழைப்பே உயர்வு
உழைப்பால் உயர்ந்தவன் மனிதன்
மனிதனால் உயரப்பட்டது விஞ்ஞானம்
விஞ்ஞானத்தால் உயர்ந்துள்ளது தொழில் வளர்ச்சி
தொழில் வளர்ச்சியால் உயரம் நிறுவனங்கள்
நிறுவனங்களால் உருவாக்கப்படும் வாய்ப்பு
வாய்ப்புகளால் உண்டாகும் முன்னேற்றம்
முன்னேற்றங்களால் உயரப்படும் நாகரிகம்
நாகரிங்களால் உயர்ந்து எழுந்துள்ளது மக்களின் வளர்ச்சி
க. ஷைலஜா கணேசன் கோவில்பட்டி
தூத்துக்குடி மாவட்டம்
***************************************************************************
052
உழைப்பாளி
வியர்வை சிந்த மனிதன் உழைக்கிறான் //
உழைத்து களைத்த போதும் மகிழ்கிறான் //
தன்னிறைவுக்காகவும் தரணிக்காகும் மனிதன் உழைக்கிறான் //
தனக்கென்றம் தலைமுறைக்கென்றும் மனிதன் உழைக்கிறான்//
ஏர் பிடிக்கும் உழவனும் உழைப்பாளி //
இயந்திரம் செயல்படுத்துபவரும் இங்கே உழைப்பாளி
வணிக செய்பவரும் இங்கே உழைப்பாளி //
வாகனம் ஓட்டிகளும் இங்கே உழைப்பாளி //
தனது முன்னேற்றத்துக்காக பாடுபடுபவனும் உழைப்பாளி //
தனது உழைப்பினால்
மற்றவரை முன்னேற்றுபவரும் உழைப்பாளி //
தன் வளர்ச்சிக்காகவும் பிறர் வளர்ச்சிக்காகவும் //
பாடுபடுபவரும் போராடுபவரும் இங்கே உழைப்பாளி //
ஒருசாண் வயிற்றுக்கு உழைப்பவரும் உழைப்பாளி //
உழைக்கத் தெரிந்த மனிதன் உயர்வடைகிறான் //
வாழ்வில் மேலும் வெற்றி பெறுகிறான்//
இயன்றளவு நாம் அனைவரும் உழைத்திடுவோம் //
இந்தியாவை வளமான நாடு ஆகிடுவோம் //
கவிஞர் அ. கனகவள்ளி காரைக்கால்
****************************************************************************
053.
உலகை உயர்தும் உழைப்பு
உழைக்கும் வர்க்கம் உருவாக்கும் வளர்ச்சி
உலகம் முழுதும் நிறைவாய் எழுச்சி
சிலை வைத்தால் சாலைப் போதாது!
சிங்காரத் தமிழில் செதுக்கி வைக்கிறேன்!
தொழிலாளி வியர்வை தரையில் விழுத்தால்
தெளிவான வளர்ச்சி தேசம் அடையும்!
முதலாளி உயர்வை முதுகில் சுமந்து
மரணம் வரையில் முடியாத பயணம்!
விதிவழி உழைப்பு வயிற்றுக்கு போதலை
கதியென கற்பூரமாய் கரையும் தேகம்!
உழைப்பும் அறிவும் ஒன்றாக வேண்டும்
ஓரத்தில் நிற்பதை ஒதுக்க வேண்டும்!!
மதிக்கொண்டு உழைத்தார் மாளிகை கண்டார்
மாடாக உழைத்தார் மண்வீட்டில் நின்றார்!!
உற்பத்தி பெருக உலகெங்கும் தொழிற்சாலை
உருவாக்கம் செய்தவன்
உறங்குவது வெறும்சாலை!
உழைப்பை மதிப்போம்! உயர்வும் தருவோம்
பிழைக்க வைத்து
பெருமைகள் சேர்ப்போம்!!
- வி. கணேஷ் பாபு, ஆரணி
****************************************************************************
054.உழைப்பே உயர்வு
நல்லாசிரியர்களின் உழைப்பால் நமது பொக்கிஷமான//
வல்லரசு நாடாகக்கூடிய மாணவர்களை பெறுகிறோம்//
நற்கவிஞர்களின் உழைப்பால் சமுதாய சிந்தனையுடைய/
அழகான ஆரோக்கியமான சமுதாயத்தை பெறுகிறோம்//
கட்டட கலைஞர்களின் அபரிமிதமான உழைப்பால்//
உயர்ந்த நவீன கட்டிடங்களை பெறுகிறோம்//
மருத்துவத்தில் சிறந்து விளங்கி நமக்கு//
கொரோனாவில் உதவிய மருத்துவர்களை பெற்றோம்//
தன்னார்வலர்களின் உதவியால் பல மனிதர்கள்//
நல்ல நிலையில் உயர பெறுகிறோம்//
நாட்டை மணக்க வைக்கும் நம்//
குப்பைகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்களும்//
உயர்வின் உயர்வை சொல்லித் தந்தவர்கள்//
விஞ்ஞானத்திலும் மெய்ஞானத்திலும் சிறக்கும் மனிதர்கள்//
இவர்களை பார்த்து மனிதர்களான நாமும்//
மாமனிதர்களாக விரைவில் மாற முயல்வோமாக. . . //
இசைப்பேரரசி
லதா சங்கரன்
சென்னை
************************************************************************************************************
055.
உழைப்பே உயர்வு
நாட்டுக்காகவும் வீட்டிற்காகவும்
உழைத்து உழைத்து
களைத்து போன நேர்மையுள்ள உழைப்பாளிகளுக்கு
பெருமை என்னும் மகுடம் சூட்டும்
விதமாக அமைந்ததே உழைப்பாளர் தினம்
பூமி இயங்குவது உழைப்பால் தான்
அன்று முதல் இன்று வரை
உழைப்பில்லாமல் ஒரு பொருளும் நம்மை
எட்டியதாக துளிக்கூட சாத்தியம் இல்லை
உழைப்பின் அருமை அதனால் பயனடைவோரின்
முகத்தில் புலப்படும் போது உழைப்பாளியோ
மார் தட்டி பெருமிதத்தோடு சொல்வார்
இது என் உழைப்பு என்று
அவ்வாறு கூறுவதற்கு மனதில் சஞ்சலமில்லாமல்
அவர் அத்தொழிலை புரிந்திருக்க வேண்டும்
மனிதன் ஒருவனே சக மனிதனுக்காக
தன் உடல்தேய உழைக்கும் ஜீவனாம்
உழைப்பால் உயர்வோம் உலகத்தை வெல்வோம்.
-பா.கீர்த்தனா, திருப்பூர்.
***********************************************************
056.உழைப்பே உயர்வு
மாதங்களில் நான் மே
மலர்களிலே நான் பருத்தி காலங்களில்
நான் கோடை காலம் கலைகளிலே நான் போராட்டம்
தேனீக்கள் போல் உழைக்கும் உழைப்பாளி வான் நீர் போல்
வழங்கும் சிறப்பே நீ
போராடி வாங்கிய
எட்டு மணி நேர பணி தொடருமோ இனி
நுகர வேண்டும் உழைப்பின் கனி
12 மணி நேர வியர்வை தந்து விடாதோ
அயர்வை வங்கியில் வாங்க முடியாத உழைப்பு
தங்கத்திற்கும் மேலான உழைப்பு
உழைப்பே மூலதனம் உண்மைச் சொற்களின் உன்னதம்
உரைத்த காரல் மார்க்ஸ் உலகின் ஒளி என்றென்றும்.
உழைக்கும் வர்க்கம் இருக்கும் நாடு சொர்க்கம்
உழைப்பின் மதிப்பை உணர்ந்த மனிதர்கள்
சக மனிதர்களை
சமமாக மதிப்பர்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது ஏர்பிடித்து விளைவித்தால் மட்டுமே பசி ஆறும்
என்ற நுட்பம்
எல்லா காலத்திலும் பொருந்தும்.
ஆண்டு முழுவதும் உழைக்கும் மனிதர்களை அடையாளப்படுத்தும்
மே 1
வணக்கங்கள் சொல்லுவோம் வாழ்த்துக்கள் சொல்லுவோம்
மே தின வாழ்த்துக்கள்.
-M .சுதா ஆசிரியை ,
சத்திரம் கருப்பூர்,கும்பகோணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
057.
"மே தினம் "
உழைப்பவர் வாழ்க்கை உயர ஊன்றுகோல்!! உழைப்பவர்கள் கூடி பெற்ற உறுதிப் பத்திர செங்கோல்!!
உழைப்பவர் வியர்வையை! தான்' காலநேரம் இன்றி! உழைப்பாளர் களின் உதிரத்தின் கண்ணீர்களையும் இரக்கம் இன்றி!!
முதலாளிகள்' எனும் முதலைகளை!எதிர்க்க பாட்டாளிகள் எனும் பாமர கூட்டங்களை!! ஒன்றிணைத்து!! சிகாகோவில் 1886 இல் 2 லட்சம் தொழிலாளர்களை!! ஒற்றுமைப்படுத்தி,,! உலகளாவிய புரட்சிகளை!! ஏற்படுத்தியவர்களை!
நினைவு கூறும் நன்னாள் !மே தினம்'!! -கனவுகள்
நினைவுகளாய் மலர்ந்த பொன்நாள்'மே தினம்! முழுநேர உழைப்பை' மும்மடங்கை "ஒரு மடங்காக்கிய, மே தினம்!!
சாதி'மதம்'மொழிகடந்து முக்கிய அம்சங்களை'!! முழு சுதந்திரம் பெற்றுத்தந்த மே தினம்!!
மூலதனம் தந்த முன்னோடி !கார்ல் மார்க்ஸ் !!மூடனாய் முடங்காதே!! "விதைத்தவன் உறங்கலாம்" விதை உறங்குவதில்லை" நாட்டின் பொருளாதார நெருக்கடிகளிலும்'! உம் வாசகம்!!
நாட்டின் முதலாளி, தொழிலாளிகளின் நெருக்கடியிலும், உம் வாசகம் !!
மனிதனின் மானம் காக்கும் நெசவாளியே! மனிதனின் உயிர் வளர்க்கும் விவசாய தொழிலாளியே!! மனிதனை பாதுகாக்கும் மருத்துவரும்! செவிலியரும் 'துப்புரவு பணியாளரும்!! மனிதர்கள் வாழும் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரரும்! பயணங்கள் சிறக்க ஓட்டுனரும்!
செய்தி பரிமாற தகவல் தொடர்பாளரும்!! பாத்திரங்கள் வடிக்கும் குயவரும்!! தச்சரும், கொல்லரும் !பத்திரமாய் 'எந்திரமாய்! உழைத்து தேயாது! பாடம் புகட்டும் ஆசிரியரும் ,பாட்டாளி மக்களும் !பாதுகாப்பாய்இன்று இருக்க !!
அன்று உயிர் நீத்த,! சிக்காகோவில் போராட்டக்காரர்கள் ஆர்பர்ட் பாப்சே! சார்ஜ்ஏஞ்சல்ஸ்! போன்ற உயிர்நீத்த நால்வர்கள்!!
உலகம் சமநிலைபெற !
உயர்வுதாழ்வில்லா நிலைபெற!
மேடுபள்ளம்இல்லா சமூகம்காண!
மேன்மைகண்ட மேதினமே!
தென்னிந்தியாவில்
தமிழகத்தில்முதல் மேதினம்கொண்டாடிய!
கொண்டாட முதன்மையாய்பாடுபட்ட!
சிங்காரவேலரையும்
இந்தியாவில் எட்டுமணி நேரவேலையை!
ஓய்வூதியத்தை சட்டமாக்கிய!
டாக்டர் அம்பேத்காரரையும்'
போற்றி மகிழ்ந்து !
உலக நாடுகளை அனுசரித்த! உழைப்பாளிகளின் விடிவெள்ளிகளை உளமாற நேசித்து! பூஜித்து !
உழைப்பை மூலதனமாக்கி!
வியர்வைதுளிகளை உரமாக்கி!
உலகமே,, உன்னால்இயங்குமென
ஓயாது உழைக்கும்!உழைப்பாளிகளே!
ஊதியம்கொடுப்பவன்
ஆண்டவன்இல்லை! உழைப்பவரெல்லாம் அடிமையும் இல்லை! வா! வா !என் தோழர்களே!எனஉழைப்பாளர் தினம் கொண்டாடும்!! அனைவருக்கும்!
தடாகத்துமீனாய்! தரணிக்குநீ!நல்மீனாய்! தரணிபயணிக்க அச்சாணிசாய்!
இருக்கும்!! உழைப்பாளர்கள் அனைவருக்கும்!உழைப்பாளர்தின வாழ்த்துக்கள்!!
-கவிதைமாணிக்கம்
சங்கரன்கோவில் தாலுகா
தென்காசிமாவட்டம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
058
கவிதைப் போட்டி...
*உழைப்பே உயர்வு*
மே
ஆட்டின்
ஒலியா
கேட்டனர் .. சிலர்
மே
உழைப்பவரின்
கூட்டொலி
உரைத்தனர்.. பலர்
உடல்
எந்திரமும்
வியர்வையோடு
போராடும்..
உழைப்பு
மந்திரத்தால்
உலகமே
நடைபோடும்..
மேகம்
போன்றே
மேதினியில்
உழைக்கிறான்..
மே
தினத்தில்
மேன்மையாய்
சிறக்கிறான் ..
உலக
வரைபடம்
உழைப்பாளரின்
நரம்புகள் ..
உழைக்கும்
வர்க்கத்தின்
உணர்வுகளை
உணருங்கள் ..
வெள்ளை
அணுக்கள்
சிவப்பு
அணுக்கள்
உடலுக்குள்
நித்தமும்
நாழிகைப்
போராட்டம் ...
உழைக்கும்
வர்க்கம்
சுரண்டும்
வர்க்கம்
படைப்பினில்
இறைவன்
செய்திட்ட
மாறாட்டம் ...
எட்டு
மணியை
ஏய்த்திட
நினைப்போர்
எட்டும்
உலகில்
தானே
வீழ்வர் .!
ஈறாறினை
இன்னலாய்
செயலாக்க
நினைத்தால்
ஈழத்து
உரமாய்ப்
பகையினை
விதைப்பர் .!
மே
ஒன்றில்
உழைப்பவனை
அடக்காதீர் ..
எப்போது 'மே'
உழைப்பவனை
நினையாமல்
இருக்காதீர் ..
வர்க்கமும்
கணமும்
கணிதத்தின்
உள்ளாகும் ..
இங்கு
கணமாகிறது
உழைக்கும்
வர்க்கம்.
தன்வினை
பிறவினை
தமிழின்
வாக்கியமாகும்
உழைப்பு
தன்வினை !
கூலி
பிறவினையாய் ..
பிழைப்பு
நடத்திட
உழைப்புச்
சுரண்டலாகிறது ..
மதிக்கும்
உழைப்பில்
அகிலமே
உயர்வாகிறது ..
உணர்ந்தால்
மே
தினம்
எந்நாளாகும் ..
உரிமையில்
மே
தினம்
நம்நாளாகும் ..
உழைப்பு
உயர்ந்திடில்
வலியும்
வழியாகும்..
உழைப்பை
நசித்திடில்
நாளெல்லாம்
பழியாகும் ..
-முனைவர் இராமகுமார்,
உதவிப் பேராசிரியர்
விவேகானந்தா கல்லூரி
அகஸ்தீஸ்வரம்
கன்னியாகுமரி மாவட்டம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Comments (0)